Advertisement

6
“என்ன மாப்பிள்ளை சந்தோசம் தானே” சொன்னது குமரன்.
“அய்யோ என்ன மாமா நீங்க, என்னைப்போய் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டுகிட்டு. எப்பவும் போல பேர் சொல்லியே கூப்பிடுங்க…”
“இனி நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை பேர் சொல்லி கூப்பிட்டா என் பொண்டாட்டி என்னைத் திட்டுவா” என்றார் அவர்.
“அத்தை முன்னாடி வேணா அப்படி கூப்பிடுங்க. நான் எப்பவும் உங்களுக்கு வேலு தான் மாமா…” என்றான் அவன்.
“இவன் என்னடா இப்படி பொசக்கெட்டத்தனமா இருக்கான். கொஞ்சம் கூட மாப்பிள்ளைன்னு கெத்து இல்லாம அவர்கிட்டவே இப்படி வழியறான்…” என்று கனகுவின் மகன் ரத்தினவேல் தன் தம்பியிடம் சொல்ல அவரும் அதை ஆமோதித்தார்.
“ஆனாலும் அண்ணா அவனுக்கு வாழ்வு தான் பாருங்களேன். நாமும் தான் கல்யாணம் பண்ணோம். இந்தளவுக்கு சொத்து எல்லாம் இல்லையே…”
“டேய் நீ வேற அந்தாளு எல்லா சொத்தையும் இவனுக்கா எழுதி வைக்கப் போறான். அதான் அந்த வீட்டுக்கு வாரிசுன்னு ஒருத்தன் இருக்கானே சங்கரன். அவனுக்கு தானே எல்லாம்…”
“பாதி சொத்துக்கு அந்த பொண்ணும் தானே வாரிசு. நமக்கு இந்த ஐடியா முதல்லயே வராம போய்டுச்சுண்ணே. வேலு எல்லாம் விவரமாத்தான் பண்ணியிருக்கான்…”
அண்ணனும் தம்பியும் இப்படி மாறி மாறி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
வேலு விரும்பிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்துவிட்டது. குமரன் அன்று இனிமே இப்படி வீட்டிற்கு வராதே என்று சொன்ன போது அவனுக்கு கஷ்டமாகவே இருந்தது.
அன்று அவர் சொல்லியது இனி நீ என் மருமகனாக உரிமையாக என் வீட்டுக்குள் வா என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார் என்பது இக்கணம் தான் முழுதாய் அவன் உணர்ந்தான்.
மனம் நிறைந்த வாழ்க்கை அருகில் சொர்ணமாய் ஜொலிக்கும் அவன் மனைவியை பார்த்தான். அப்படியொரு பூரிப்பு அவனிடத்தில்.
மாலை மறைவில் அவள் கையை பிடித்து தன்னருகில் வைத்துக்கொள்ள அதில் அவள் முகம் நாணிப் போனது.
இதோ அவர்கள் திருமணம் முடிந்து வருடம் ஒன்றாகப் போகிறது. அவள் பிள்ளை உண்டாகவில்லை என்று இதுவரை ஜாடைமாடையாக பேசிக் கொண்டிருந்த வீட்டினர் இப்போது நேரடியாகவே சொல்ல ஆரம்பித்தனர்.
அவள் திருமணம் முடிந்து வந்த புதிதில் வேலுவின் அன்னை நோயின் காரணமாய் இறந்து போனார். அதிலிருந்தே அவளுக்கு தலைவலி ஆரம்பமானது.
அவள் வீட்டிற்கு வந்த நேரம் சரியில்லை என்று பேசினர். கனகுவும் கதிரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றாலும் அவர்கள் வீடு அருகருகே இருக்க இவர்கள் அங்கு வருவதும் போவதுமாய் இருப்பர்.
அதன் பொருட்டே இப்படியான பேச்சுக்களை அவள் கேட்க நேர்ந்தது. வேலு இருக்கும் போது அவளை எதுவும் பேசுவதில்லை.
வேலுவுக்கு தன் மனைவியை எது சொன்னாலும் பிடிக்காது. அவன் இன்னமும் குமரனிடத்தில் மட்டுமே வேலை செய்கிறான்.
கதிர் கூட சொல்லிவிட்டார் அவன் இன்னமும் குமரனிடத்தில் வேலை செய்வது சரியல்ல என்று. வேலு அதை கேட்டால் தானே.
“வேலு…”
“சொல்லுங்க பெரியப்பா…”
“அப்பா சொல்றது எதுவும் நீ கேட்கறதில்லையாமே??”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை பெரியப்பா…”
“அப்புறம் ஏன் நீ இன்னமும் குமரன்கிட்ட வேலை பார்க்குறே…”
“நானும் உங்கப்பனும் இப்போ பத்து பேரை வைச்சு வேலை வாங்குறோம். உங்க அண்ணனுங்க நம்ம கடையில தான் வேலை பார்க்காங்க… நீ மட்டும் ஏன்யா சொன்ன பேச்சை கேக்க மாட்டேங்க”
“எனக்கு நம்ம கடையில வேலை பார்க்கப் பிடிக்கலை பெரியப்பா…”
“ஏன்??”
“அது பாவப்பட்ட சொத்து…” என்று சொல்ல உள்ளே திக்கென்றிருந்தது கனகுவிற்கு, கதிருக்கும் தான்.
“என்ன சொல்றே??” என்றார் அவர் முறைப்பாய்.
“அந்த கதை எல்லாம் எதுக்கு பெரியப்பா. என்னை என் போக்குல விட்டிருங்க அதான் உங்களுக்கு நல்லது…”
“அதெல்லாம் விட முடியாது… நீ என்ன தான் சொல்ல வர்றே??”
“நீங்களும் எங்கப்பாவும் சேர்ந்து தான் குமரன் மாமாவோட மச்சான் கடையில இருந்த நகை எல்லாம் திருடுனீங்க. அது தெரிஞ்சு அவர் கேள்வி கேட்டப்போ அவரை நீங்க அடிச்சிருக்கீங்க…”
“அந்த அவமானம் தாங்காம தான் அவர் நெஞ்சு வலி வந்து இறந்து போனார்… அப்புறமாச்சும் விட்டீங்களா குமரன் மாமாக்கு தெரியாம கொஞ்சம் கொஞ்சமா நகை திருடி நீங்க ரெண்டு பேரும் தனியாவே கடை வைச்சுட்டீங்க…”
“இப்போ வரைக்கும் கூட அவர் தங்கம் வாங்குற இடத்துல அவர் பேரை சொல்லி நீங்க வாங்குறது எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா” என்று அனைத்தும் நேரில் பார்த்தது போல் வேலு புட்டு புட்டு வைக்க அண்ணன் தம்பி இருவருமே வாயை மூடிக்கொண்டனர்.
கதிர் பொறுக்க முடியாமல் “வேலு…” என்றிட “தெரியும்ப்பா உங்க கதை எல்லாம் எப்பவோ எனக்கு தெரியும். நானே நேர்ல பார்த்தேன் நீங்க குமரன் மாமாவோட மச்சானை அடிச்சதை…”
“உங்களை எல்லாம் என் உறவுன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு எனக்கு…” என்று அருவருத்தான் வேலு.
“வேலு…” என்று சத்தம் போட்டார் கதிர்.
“சும்மா நிறுத்துங்கப்பா…” என்றவன் “நான் குமரன் மாமாகிட்ட தான் வேலை பார்ப்பேன். நீங்க என்ன சொன்னாலும் சரி…” என்று முடித்துவிட்டான் அவன்.
அதன்பின் யாருமே அவனை கேள்வி கேட்பதில்லை. வருடம் மூன்று ஓடிவிட்டது. வேலுவும் தேவியும் போகாத கோவிலில்லை, வேண்டாத தெய்வமில்லை. இன்னமும் அவர்களுக்கு குழந்தை பேரு கிடைக்கவில்லை.
நண்பர் ஒருவர் வேலுவிடம் குருவாயூர் சென்று வேண்டி வருமாறு சொல்ல மறு மாதமே தேவி கருவுற்றாள். 
வேலுவிற்கும் தேவிக்கும் அவ்வளவு சந்தோசம். குமரனுக்கும் அவன் மனைவிக்கும் இப்போது தான் மகிழ்ச்சியே. 
வெளியே பார்ப்பவர்கள் எல்லாம் மகளிடம் இருந்து நல்ல சேதி இல்லையா என்று கேட்பதை வழக்கமாக்கி இருக்க இதோ அவர்களுக்கு சொல்ல செய்தி கிடைத்துவிட்டதே.
தேவிக்கு இப்போது மூன்று மாதம், வேலுவை கையிலே பிடிக்க முடியவில்லை. கதிருக்குமே தன் முதல் பேரக்குழந்தை வரப்போகிறது என்றதும் அளவில்லாத சந்தோசமே.
அவர் இப்போது கொஞ்சம் அடங்கி ஒடிங்கிவிட்டார். அவ்வப்போது அவருக்கு வரும் உடல் உபாதைகளால் அவர் அதிகம் எதிலும் தலையிடுவதில்லை.
யாருக்காக அவர் சொத்து சேர்க்க வேண்டும் என்று எண்ணினாரோ அப்பிள்ளையே அதையெல்லாம் வேண்டாம் எனும்போது தான் வேறு ஓடியாடி என்ன சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் அவர் கடையின் பொறுப்பை தன் அண்ணன் கனகுவின் கையிலேயே விட்டுவிட்டார்.
————————–
காஞ்சனமாலா அவனை முதன் முதலில் பார்த்த நிகழ்வுகளை அசைப்போட்டாள்.
காஞ்சனமாலா உறவினர் ஒருவரின் சிபாரிசின் பேரில் விகே தங்கமாளிகையில் வேலைக்கு சேர்க்கப்பட்டாள். கனகுவின் தூரத்து உறவினர் ஒருவர் சொன்னதாலேயே அவளை சேர்த்துக் கொண்டார் அவர்.
அவள் முதலில் நாகர்கோவிலில் தான் இருந்தாள். கார்த்திக் அவளிடம் ஏதோ வம்பு வளர்த்திருக்க பிரச்சினை ரத்தினவேலுவின் காதிற்கு செல்ல அவர் தான் மகனை கண்டித்து அவளை தக்கலைக்கு செல்லுமாறு பணித்தார்.
தன் இரு மகன்களின் லட்சணம் தெரிந்தவர் தான் ரத்தினவேல். அதனாலேயே அங்கு பெண்களை அதிகம் பணிபுரிய அனுமதித்ததில்லை. அந்த கிளைகளில் பெரும்பாலும் வயதான பெண்களே தான் பணிக்கு இருந்தனர்.
தக்கலைக்கு வந்திருந்தாள் அவள். ரத்தினவேல் விஸ்வாவிடம் சொல்லிவிடுவதாக சொல்லியிருந்தார். கடைக்கு சென்று முதலில் டேவிட்டை சந்தித்து பின் விஸ்வாவை பார்க்குமாறு பணித்திருந்தார்.
இதோ கடையின் முன் நின்றிருந்தாள் அவள். காலையில் எழுந்து விரைவாகவே அங்கு வந்திருக்க, கடை பரபரப்பாக காணப்பட்டது.
கடையை அலங்கரிப்பது வாசலில் பெரிதாய் கோலம் போட்டு வண்ணம் தீட்டுவது ஒருபுறம் என்றிருந்தது.
“இன்னைக்கு என்ன விசேஷமா இருக்கும், பிள்ளையார் சதுர்த்தி கூட நேத்தே முடிஞ்சிடுச்சே…” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அவள்.
“கஸ்டமர்ஸ் காலையிலவே அலோவ் பண்ண மாட்டோம். நீங்க அப்புறமா வாங்க…” என்று வாயிலில் இருந்த பெண்மணி சொல்ல “மேடம் நான் கஸ்டமர் இல்லை வேலைக்கு வந்திருக்கேன்…”
“வேலைக்கா… இங்க யாரையும் இப்போ நாங்க எடுக்கலையே??”
“எனக்கு டேவிட் சாரை பார்க்கணும். ரத்தினவேல் சார் தான் என்னை இங்க அனுப்பி வைச்சாரு…”
“ஒரு நிமிஷம் இருங்க. நான் டேவிட் சார் கிட்ட பேசிட்டு சொல்றேன்…” என்ற அப்பெண்மணி உள்ளே சென்று சிறிது நேரத்தில் வெளியில் வந்தார்.
“சார் உங்களை உள்ள வரச்சொன்னாரு… நீங்க போங்க… நேரா போனா வலது பக்கம் திரும்பும் அப்படியே போங்க ரெண்டாவது ரூம்…”
“தேங்க்ஸ்…” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.
கதவை நாசூக்காய் தட்டிவிட்டு அவள் “உள்ள வரலாமா…” என்று கேட்க “வாங்க…” என்ற குரல் கேட்டு உள்ளே நுழைந்தாள் அவள்.
“நீங்க தான் மிஸ். காஞ்சனமாலா ரைட்…”
“எஸ் சார்…”
“அந்த பிரான்ச்ல என்ன பிரச்சனை??”
“சார் வந்து…”
“கார்த்திக்கா…” என்று கேள்வியும் பதிலும் அவனே சொல்லிக் கொண்டான்.
“இட்ஸ் ஓகே… அதெல்லாம் விட்டுத்தள்ளுங்க… அங்க என்ன வேலை பார்த்தீங்களோ அதே வேலை தான் இங்கயும்…”
“இன்னும் கொஞ்ச நேரத்துல பாஸ் வந்திடுவார். இன்னைக்கு அவருக்கு பிறந்தநாள் தவிர இன்னைக்கு இங்க விஸ்வகர்மா பூஜை செய்வாங்க… நான் அங்க இருக்க லேடிஸ்கிட்ட சொல்லிடறேன்…”
“நீங்களும் அவங்களோட ஜாயின் பண்ணிக்கோங்க… வரவேற்புல நின்னு வர்றவங்களை முகம் மலர வரவேற்கணும்”
“இங்க இருக்க இருபது பேருக்கும் நீங்க தான் காபி, டீ சர்வ் பண்ணணும்… சம்டைம்ஸ் நம்ம கஸ்டமர்ஸ்க்கும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும்…”
“சார் அங்க நான் இதெல்லாம்…”
“இதெல்லாம் தான் நீங்க அங்கயும் பார்த்திருக்கணும், ஆனா கார்த்திக் சார் உங்களை இதெல்லாம் பார்க்க விட்டிருக்க மாட்டார்…” என்றான் ஒரு மாதிரிக்குரலில்.
“சரி வாங்க, உங்களை எல்லார்க்கும் அறிமுகம் செஞ்சு வைச்சிடறேன்…” என்று அவன் பாட்டிற்கு எல்லாம் பேசி முடித்து அவளை அழைத்து மற்றவர்களுக்கு அறிமுகமும் செய்து வைத்திருந்தான்.
புதிதாய் வந்தவர்களை மற்றவர்கள் எப்படி பார்ப்பார்களோ அதற்கு கொஞ்சமும் சளைக்காமலே அங்கும் நடந்தது.
ஆளாளுக்கு நீ இந்த வேலை செய், அந்த வேலை செய் என்று அவள் தலையில் தங்கள் வேலையையும் சேர்த்துக்கட்ட, அவள் அதற்கு பணிந்து அவள் வேலையை தொடங்கியிருந்தாள்.
வாயிலில் கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து கம்பீரமாய் இறங்கி வந்துக் கொண்டிருந்தான் விஸ்வகர்மா.
கருநீல வண்ணத்தில் முழுக்கை சட்டையுடுத்தி அதை கால்வாசி மடித்துவிட்டிருந்தான். வெண்பட்டு வேட்டி கட்டி வலது கையில் தங்கக்காப்பு அணிந்திருக்க கையை லேசாய் உயர்த்தி அதை லாவகமாய் உள்ளே தள்ளியவாறே நுழைந்தான் அங்கு.
இவள் அங்கிருந்த சிலைக்கு மாலையணிவித்து கொண்டிருந்தவள் அங்கே இவள் செய்வதைக் கண்டு முறைத்தவாறே நின்றிருந்தவனை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தாள்.
டேவிட்டும் அப்போது தான் அங்கு வந்தான். “வாங்க சார், ஹாப்பி பர்த்டே சார்…” என்று வாழ்த்து சொல்ல இவளும் கையில் மீதமிருந்த பூக்களில் ரோஜாவை எடுத்து அவன் முன் நீட்டி “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்…” என்று நீட்ட கோபமாயிருந்தவன் அக்குரலில் அப்படியே நின்றுவிட்டான்.
லேசாய் தலையை குலுக்கி அங்கிருந்தோருக்கு ஒரு தலையசைப்பை பதிலாய் கொடுத்து உள்ளே சென்றுவிட்டான்.
சிறிது நேரத்தில் அவளை அழைப்பதாக சொல்லவும் வேகமாய் உள்ளே சென்றாள்.
“யார் நீ??”
“புதுசா வேலைக்கு…”
“அப்படி யாருங்க இங்க தேவையில்லை, நீ கிளம்பலாம்…” என்று அவன் முகத்திலடித்தது போல் சொல்ல அவள் முகம் கூம்பிவிட்டது.
“இல்லை நீங்க ர…”
அவன் கையுயர்த்தி அவளை தடுத்தவன் “எனக்கு எதுவும் தெரிய தேவையில்லை, கிளம்பு…”
டேவிட் அப்போது அங்கு வேகமாய் உள்ளே நுழைந்தான்.
“விஸ்வா அவங்களை ரத்தினம் சார் தான் இங்க அனுப்பியிருக்கார். நேத்து ஈவினிங் தான் சொன்னார். உன்கிட்ட சொல்லிடறேன்னு சொன்னாரே, மறந்திருப்பாரோ…” என்று அவன் சொல்ல “எந்த பிரான்ச்”
“நாகர்கோவில்…” என்ற பதிலில் “என்ன பிரச்சனை??”
“தெரியலை…” என்று தெரிந்தும் தெரியாது என்றே சொன்னான் அவன்.
“சரி நான் பார்த்துக்கறேன்…”
“அப்போ இவங்க இங்கவே இருக்கட்டுமா…”
“இருக்கட்டும், என்ன வேலை கொடுத்து இருக்கே டேவிட்…”
“அங்க பார்த்த வேலை தான் வரவேற்ப்பு கவனிக்கணும், கஸ்டமர்ஸ்க்கு ஹாட் ஆர் கோல்ட் சர்வ் பண்ணுறது, நம்ம ஸ்டாப்ஸ்க்கும் சர்வ் பண்ணனும் சொன்னேன்…”
“ஹ்ம்ம் ஓகே…”
“ஆனா ஸ்டாப்ஸ்க்கு எல்லாம் வேண்டாம். அவங்களை ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ரெஸ்ட் ரூம்ல வந்து குடிச்சுக்க சொல்லுங்க…”
“அப்புறம் யூ, பேரு என்ன??”
அங்கிருந்தவளைப் பற்றித்தான் பேச்சு ஓடியது, ஆனால் அவளைவிட்டு அவர்களே பேசிக் கொண்டிருந்தார்கள் அவ்வளவு நேரமும். அப்பாடா இப்போதாவது என்னை யோசித்தார்களே என்று எண்ணியவள் “காஞ்சனா…”
“ஒகே காஞ்சனா இப்போ நீங்க கிளம்பலாம், போய் உங்க வேலையை பாருங்க… அப்புறம் இந்த பூ போடுற வேலை எல்லாம் நான் வர்றதுக்கு முன்னாடியே முடிஞ்சிருக்கணும். அதை பத்தி உங்ககிட்ட யாரும் சொல்லலையா…”
“இல்லை சார் சொல்லலை. இனிமே இப்படி நடக்காது…” என்றாள் அவள்.
“நல்லது. நான் வரும் போது இனி பூப்போடுற வேலை எல்லாம் எப்போதும் வேணாம். எனக்கு உள்ள நுழையும் போதே மனசுக்கு தெய்வீகமா இருக்கணும்ன்னு நினைப்பேன் நான்…”
“நம்ம கடைக்கு வர்ற கஸ்டமர்ஸ்க்கும் அது போன்ற மனநிலை வரணும். இங்க எல்லா மதத்துக்காரங்களும் வருவாங்க தான். மலர் அப்படிங்கறது எல்லாருக்கும் பொது தானே….”
“அதோட மணம் நமக்கு நல்லதொரு எண்ணத்தை கொடுக்கும். அதுக்காக தான் சொல்றேன். ஓகேவா…” என்று நீளமாய் விளக்கினான்.
“புரியுது சார்… தேங்க்ஸ்…” என்று அவள் இருகரம் கூப்பும் போது தான் அவள் கரத்தை பார்த்தான். பார்த்தவனுக்கு லேசான அதிர்ச்சி தான், அதை சமாளித்து தான் நின்றிருந்தான் அவன்.
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன,
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே,
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே…

Advertisement