Advertisement

“ஆமா நீ பேசுறதை கேட்டேன். உன் குரலை கேட்கணும்ன்னு நான் தான் மைக்லாம்  செட் பண்ணேன். அது விஜய்க்கு கூட தெரியாது, தெரிஞ்சா என்னை கொன்னிடுவான்” என்றான்.
“அடப்பாவி…”
“அப்பாவி விஸ்வாவை இப்படி அடப்பாவி விஸ்வாவா மாத்தின பெருமை உன்னைத்தான் சேரும்” என்று அவன் சொல்ல அவன் தோளில் ஒரு அடி வைத்தாள்.
“காஞ்ச்சு நமக்கும் இன்னைக்கு தான் ஹனிமூன் தெரியுமா??” என்றான் விஸ்வகர்மா.
“என்னது??” என்றாள் அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து.
“எஸ் நீ ஹனி…” என்று அவளை சுட்டிக்காட்டியவன் “அதோ மூன்” என்று பால்கனி வழியாக தெரிந்த நிலாவைக்காட்டி பின் “ஹனிமூன்” என்றான்.
“உங்களுக்கு மட்டும் சொன்ன மாதிரி தெரியுதே…”
“உனக்கும் தான் சொன்னேன். நான் உனக்கு ஹனி இல்லையா” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை அவளை தங்கள் அறைக்கு தூக்கி சென்றான்.
திவார் தீவு – கோவா
இரண்டு படுக்கையறைகள் கொண்ட அந்த அழகிய குடிலில் தங்கியிருந்தனர் விஜய், சங்கவி ஜோடியும், நம் விஸ்வா, காஞ்சனா ஜோடியும்.
விஸ்வா சொன்னது போலவே விஜய்க்கு ட்ரீட் வைத்துவிட்டான். அதை இருவருக்குமான ஹனிமூன் டிரிப்பாகவும் மாற்றிவிட்டிருந்தான்.
விஜய் சங்கவியின் அறையில்
———————————————————-
“விஜய்”
“அர்ஜென்ட்டா கிஸ் வேணும் அதானே கேட்கப் போறே”
“நான் கேக்கறதுக்குள்ள நீயா சொன்னா எப்படி??”
“நான் சொல்றது என்ன இதை படிக்கற அத்தனை பேருமே சரியா சொல்லிருவாங்க. நீ என்கிட்ட அத்தனை தடவை இதை கேட்டுட்ட” என்றான் அவன்.
“நான் ஒண்ணும் அர்ஜென்ட் கிஸ் கேட்க கூப்பிடலை”
“ஷப்பா நான் தப்பிச்சேன்”
“நான் அர்ஜென்ட் கிஸ் கொடுக்கத்தான் கூப்பிட்டேன்”

“அடியேய் இது எந்த ஊர் நியாயம்டி, எப்போமே கேட்ப இப்போ என்ன கொடுக்…” என்று அவன் முடிக்கும் முன்னேயே அவனை தன் புறம் இழுத்திருந்தாள் சங்கவி. அவள் எப்போதுமே அதிரடி தான்.
விஜயும் அவளுடன் ஒன்றிட அறைக்கதவு தட்டப்பட்டது. விஜய் விலகிட முனைய சங்கவி அவனை இன்னமும் அழுத்தமாய் பற்றிக் கொண்டிருந்தாள்.
அவளை தன்னில் இருந்து பிரித்தவன் “கதவு தட்டுறாங்க யாருன்னு பார்ப்போம்…”
“நான் எவ்வளோ பிசியான வேலையில இருக்கேன், என்னை ஏன் மேன் டிஸ்டர்ப் பண்ணுறே?? பாரு இதுக்கெல்லாம் சேர்ந்து வைச்சு உனக்கு நைட் பழிவாங்குறனா இல்லையான்னு பாரு…” என்று முறைத்தாள் அவனை.
“நைட் இல்லையின்னா என்ன பகல்ல பார்த்துக்கலாம்” என்று அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு அறைக்கதவை திறந்தான் விஜய். அங்கு விஸ்வாவும் காஞ்சனாவும் நின்றிருந்தனர்.
“நீ தானாடா??”
“கரடின்னு சொல்ல வர்றியா” என்றான் விஸ்வா.
“உன்னைப்போய் அப்படிச் சொல்வேனா… உள்ள வா…”
“நீங்க கண்டினியூ பண்ணுங்க. நாங்க அப்படியே சும்மா வெளிய சுத்தப் போறோம். நீ வெளிய வந்திட்டு தேடக் கூடாதுல அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தோம்…”
‘நல்லா சொல்லிட்டு போன போ… இனி உள்ள போனா எனக்கு கண்டிப்பா அடிவிழுகும் என்ன செய்யலாம்’ என்று தீவிரமாய் சிந்தித்தான் விஜய்.
“என்னடா யோசிக்கறே??”
“அடிவாங்கலாமா இல்லை கால்ல விழுகலாமான்னு தான் யோசிக்கறேன்” என்று மனதில் நினைத்தை வெளியில் சொல்லிவிட சங்கவி அவன் முன்னே வந்து நின்றாள் முறைத்தவாறே.
“நான் உன்னை எப்போ அடிச்சேன், எதுக்கு இப்படி என் மானத்தை வாங்கறே?? உன்னை என்னைக்காச்சும் கால்ல விழுக சொன்னேனா நானு…”
“டேய் நீ வெளிய போறதுன்னா அப்படியே கிளம்பி போறது தானேடா. என்னை ஏன்டா மாட்டி விடுற” என்றான் விஜய் விஸ்வாவை பார்த்து.
“சும்மா தான்டா மச்சான் வந்த இடத்துல ஒரு எண்டர்டெயின்மென்ட் வேணாமா, நீங்க பிசியா இருப்பீங்க. நாங்க எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலா பை…” என்று அவனை வெறுப்பேற்றிவிட்டு விஸ்வா காஞ்சனாவுடன் அங்கிருந்து சென்றான்.
“பாவம் அவரை ஏன் கலாட்டா பண்றீங்க??”
“அதெல்லாம் நல்லா சமாளிச்சுக்குவான் விடு”
“நாம இப்போ எங்க போறோம்…”
“கணேசன் கோவில்க்கு போயிட்டு அப்படியே ஒரு வாக் ரிவர் சைடு ஓகேவா…” என்று கேட்க அவள் “ஹ்ம்ம்…” என்றிருந்தாள்.
இருவருமாய் கணேசன் கோவிலுக்கு சென்று மனமார பிரார்த்தனை செய்து வெளியில் வந்தனர். பேசிக்கொண்டே இருவரும் நடந்தனர். “ரம்யாக்கா நேத்து போன் பண்ணாங்க…”

“ஹ்ம்ம்…”
“என்னன்னு கேட்க மாட்டீங்களா??”
“என்ன??”
“ஒரே அழுகை”
“எதுக்குன்னு இப்போ நான் கேட்கணும் அதானே… சரி எதுக்கு??”
“உங்க அண்ணனுங்க பண்ணி வைச்ச வேலை தான்…”
“இப்போ அழுது என்ன செய்ய முடியும். கேட்க வேண்டிய நேரத்துல கேட்டிருக்கணும். ஒருத்தருக்காச்சும் மரியாதை, பயம்ன்னு இருந்திருக்கணும், யாருக்கும் அடங்காம இருந்தா இதான் நிலை அவங்களுக்கு…”
“கடை போயிடுச்சாம்”
“போகட்டும்”
“கொடுத்திடுங்க விஷ்வா நமக்கு யாரோட கண்ணீர்லயும் வாழ வேண்டாம்…” என்றவளை ஏறிட்டான் அவன்.
“என்ன விஷ்வா அப்படி பார்க்கறீங்க??”
“சொல்றது நீ தானான்னு பார்க்கறேன். நம்ப முடியலை”
“விஷ்வா நான் பண்ணதும் இதும் ஒண்ணில்லை”

“இங்க பாரு காஞ்ச்சு நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன். உன்னோட எதையும் நீ ஒப்பிட்டு பார்க்காதன்னு, திரும்பவும் அதே செய்யாத”
“நான் அந்த ஆங்கிள்ள யோசிக்கலை விஷ்வா. என்னை முழுசா சொல்லவிடுங்க அப்போ தானே என்ன சொல்ல வர்றேன்னு தெரியும்”
“சொல்லு”
“நான் பழிவாங்கணும்ன்னு நினைச்சது அவங்களுக்கு செய்த தப்பு புரியணும், உங்களுக்கு நீங்க யாருன்னு தெரியணும்ன்னு மட்டும் தான் நினைச்சேன்… அதுல நீங்களும் நானும் தான் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்போம்”
“உங்களையும் அத்தையையும் நான் ரொம்பவே காயப்படுத்திட்டேன் எனக்கு தெரியும், அதுக்காக நான் ரொம்பவே பீல் பண்ணியிருகேக்ன் விஷ்வா”
“உன்னை நான் சந்தேகப்படலை காஞ்ச்சு, நீ எனக்கு உன் அன்பை விளக்கவேண்டிய அவசியமில்லை” என்றான் விஸ்வா.
“சாரி விஷ்வா…” என்றவள் தொடர்ந்தாள் “இந்த குடும்பமே ஒரே மாதிரி தான் இருக்கும்ன்னு நினைச்சேன் அப்போ. ரம்யாக்கா, சௌம்யாக்காலாம் பாவம் விஷ்வா. அவங்களாம் ரொம்ப நல்ல மாதிரி. அவங்க வளர்ந்த விதம் அப்படி விஷ்வா நாம அவங்களை மட்டும் குறை சொல்லி என்ன செய்ய?? அவங்க அழும் போது மனசுக்கேட்கலை விஷ்வா”
“இப்போ நான் என்ன பண்ணணும்ன்னு நீ நினைக்கறே??”
“அவங்களை கண்டிச்சு விட்டிருங்களேன்”
“அப்போ அவங்க மாறாவே மாட்டாங்க பரவாயில்லையா உனக்கு…”
“அதை இனி அவங்க ரெண்டு பேரும் பார்த்துக்குவாங்க. நான் அதுக்கு பொறுப்பு”
“இங்க பாரு காஞ்ச்சு உனக்காக மட்டும் தான் இதை செய்ய நான் ஒத்துக்கறேன், ஆனா உடனே அதை செய்ய மாட்டேன். எனக்கு ஒரு உறுதி வேணும் அவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து”
“என்ன உறுதி??”
“கார்த்திக் அண்ணா, சரவணன் அண்ணா ரெண்டு பேரும் எந்த தவறான வழியிலயும் போகாம இருக்க அவங்க உறுதி பண்ணணும். என்னை நம்ப வைக்கணும், குறைஞ்சது ஒரு வருஷமாச்சும் அவங்க இப்படியே இருக்கணும்”
“அப்புறம் நானே எல்லாத்தையும் அவங்ககிட்ட கொடுக்கறது பத்தி முடிவு பண்ணுறேன். எப்போ மாறிட்டாங்கன்னு எனக்கு உறுதி ஆகுதோ அப்போ கொடுக்கறேன்னு சொன்னேன். இப்போ சொல்றேன் ஒரு வருஷத்துல கொடுக்கறேன் ஆனா எனக்கு நம்பிக்கை வரணும்” என்றான் விஸ்வா.
“நமக்கெதுக்கு விஷ்வா அவங்க எப்படியோ போகட்டுமே. அவங்ககிட்ட அந்த சொத்தை கொடுத்திடலாமே”
“ஏற்கனவே போன உயிர்கள் எல்லாம் போதும், நாளைக்கு அந்த சொத்து இவங்களையும் காவு வாங்கிடக் கூடாதுன்னு தான் நான் சொல்றேன். அவங்களை நம்பி குடும்பம் இருக்கு, நாளைக்கு பிள்ளைக்குட்டின்னு பிறக்கும், அவங்க செழிச்சு வரலைன்னாலும் இருக்கறதை காப்பாத்தி வைக்கணும்ல” என்றான் நீண்ட விளக்கமாய்.
“இன்னொரு விஷயம்”
“என்ன??”
“சொத்துல ஒரு பங்கு உன் தம்பிக்கு மாத்திடுவேன். அதுக்கு நீ ஒத்துக்கணும்”
“என்ன பேசறீங்க நீங்க… நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல அவன் இதெல்லாம் விரும்ப மாட்டான்னு. ரேகாவுக்கு கொடுத்த பங்கையே அவன் வேண்டாம்ன்னு சொல்லிட்டான் தெரியும் தானே உங்களுக்கு”
“அது வேற?? இப்போ நான் சொல்றது வேற, உண்மையாவே இந்த சொத்து முழுசுமே அமுதனுக்கு மட்டும் தான் சொந்தம்”
“இல்லை விஷ்வா நீங்க…”
“பொறு, நான் முடிச்சிடறேன். ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ அது என் பேருல மாறி இப்போ பொது சொத்து மாதிரி ஆகிடுச்சு. இத்தனை பேரு அதுக்கு உரிமை கொண்டுற நிலையில இருக்கு இப்போ”
“நான் ஒண்ணும் முழு சொத்தையும் அவனை எடுத்துக்க சொல்லலை. ஒரு பகுதியாச்சும் அவனை வாங்கிக்கச் சொல்லு. நீ பேசினா தான் உன் தம்பி சரின்னு சொல்லுவான். நம்ம தாத்தாவோட ஆன்மா அப்போ தான் நிம்மதியாகும்”
“மாமாவும் நம்ம புள்ளைங்களுக்கு எதையுமே செய்யலையேன்னு எவ்வளவு வருத்தப்பட்டிருப்பாங்க. அவங்களுக்கு நியாயம் செய்ததா இருக்கட்டுமே”
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்”
“நீங்க சொல்றதும் சரி தான் விஷ்வா… நான் அமுதன்கிட்ட பேசறேன், நீங்களும் பேசுங்க அப்போ தான் அவன் சரின்னு சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனா அவன் மறுத்திட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை”
“சரி பார்த்துக்கலாம் விடு… நானும் பேசறேன்…” என்றான்.
சில நொடிகள் அப்பேச்சின் தாக்கம் இருவருக்குள்ளும் இருக்க அமைதியே அங்கு ஆட்சி செய்தது. பின்பு விஸ்வாவே அம்மௌனத்தை உடைத்தான். “நம்ம வேலையை பார்க்கலாமா”
“என்ன வேலைங்க??”
“நாம வந்த வேலையை தான்… எதுக்கு வந்தோம்ன்னு ஞாபகம் இருக்குல்ல ஹனிமூன் கொண்டாட வந்திருக்கோம் நாம” என்றான் அவன்.
அவன் பேச்சில் அவளும் இயல்புக்கு திரும்பி “அய்ய ஹனிமூன் கொண்டாடுற மூஞ்சியை பாரு. இப்படி தான் போன வாரமும் சொன்னீங்க. நீ ஹனி மேல மூன் எனக்கு இன்னைக்கு ஹனிமூன்னு சொல்லி கொண்டாடுனீங்களே அதை எந்த கணக்குல சேர்க்கறதாம்…”
“எனக்கு தினம் தினம் ஹனிமூன் தான் அதுக்கு இப்போ என்னாங்குற. எனக்கு லைட்டா குளிருது, உன்னை போர்த்திக்கலாம்ன்னு நினைக்கிறேன்” என்றவன் அவள் தோளில் கைப்போட்டு தன் புறம் இழுத்தான். “விஷ்வா வெளிய இருக்கோம்” என்றாள் அவள்.
“சரி வா ரூமுக்கு போய்டுவோம்” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தான்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று அன்று எடுத்துக்காட்டாய் விஸ்வாவின் ஜாதகத்தை கணித்தவர் சொன்னதை கனகவேல் நன்றாகவே உணர்ந்தார். அவர்கள் செய்த பாவத்தின் பலனை ஒவ்வொரு நொடியும் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் அவர்களின் வாரிசுகளின் மூலம்.
எந்த தொழிலும் ஒரு நேர்த்தியை கடைப்பிடிக்கும் விஸ்வா நகை தொழிலில் இருந்து முழுவதுவாய் விடுப்பட்டு, சங்கவியுடன் மட்டுமல்லாது தனியேயும் இன்டீரியர் டிசைனிங் செய்வதில் தன் திறமையை நிருபித்து மென் மேலும் வளர்ந்துக் கொண்டிருந்தான். 
எப்போதாவது காஞ்சனாவிற்கு நகை மாதிரிகள் வடிவமைப்பதில் உதவியும் செய்வான். அவர்கள் என்றும் இதே வளத்துடன் நலமாய் வாழட்டும் என்று கூறி நாமும் விடைபெறுவோம் அவர்களிடமிருந்து.

Advertisement