Advertisement

42
“தாத்தா”
“என்ன கார்த்தி??” என்றார் தெய்வானை பாட்டி
“ஏன் பாட்டி தாத்தா பேச மாட்டாங்களா??”
“தாத்தாக்கு இப்போ தானே கட்டு பிரிச்சிருக்கு, டாக்டர் ரொம்ப சிரமப்பட்டுக்க வேணாம்ன்னு சொன்னாங்க. அதான் நான் கேட்கறேன்ல என்னன்னு சொல்லுங்க” என்றார் அங்கு வந்து நின்ற கார்த்தியையும் சரவணனையும் பார்த்து.
“சொத்து விஷயமா தான் பாட்டி” என்றான் சரவணன்.
“அதுக்கென்ன இப்போ??”
“அதை பிரிச்சுக்கொடுத்திட்டா நாங்க எங்க பொழைப்பை பார்த்துக்குவோம்ல” என்று சொல்ல பாட்டியோ “ஏன் நீங்க சேர்ந்து பார்த்தா ஆகாதா??”
“சேர்ந்து பார்க்கறதுல ஒருத்தரோட திறமை அடிபட்டு போகுதுல. எனக்குன்னு தனியா இருந்தா அதை எப்படி பொறுப்பா பார்த்துக்கணும்ன்னு நானும் நினைப்பேன்ல. எத்தனை நாளைக்கு உங்க கையைவே எதிர்பார்த்திட்டு இருக்கறது”
“எங்க கையை எதிர்பார்க்கற மாதிரியா உங்களை வைச்சிருக்கோம். அதான் நீங்க வேலை பார்க்கறதுக்கு உரிய சம்பளத்தை எடுத்திட்டு தானே இருக்கீங்க. வீட்டு செலவுக்குன்னு நீங்க எதுவும் கொடுக்கறதில்லை”
“தாத்தா தான் பொதுவா செலவு பண்ணிட்டு இருந்தாங்க. விஸ்வா இருந்தவரைக்கும் அவன் சார்பா அவன் மாசம் ஒரு அமௌன்ட் வீட்டு செலவுக்குன்னு கொடுத்திட்டு இருந்தான்”
“வீட்டில என்ன இல்லைன்னு அவன்கிட்ட சொன்னாலும் முதல்ல வாங்கிட்டு வந்து போட்டிருவான். நீங்க ரெண்டு பேருமே வீட்டுக்குன்னு ஒத்த பைசா செலவு பண்ணதில்லை”
“ஏன் உங்க பொண்டாட்டிக்கு கூட ஒண்ணும் வாங்கிக் கொடுத்து பார்த்ததில்லை. நீங்க வாங்குற சம்பளத்தை எல்லாம் நீங்க என்ன தான் செய்யறீங்க” என்று பாட்டி பாயிண்ட் பாயிண்ட்டாக கேள்வி கேட்டார்.
“வெளிய போற ஆம்பிளைகளுக்கு ஆயிரம் செலவு இருக்கும். அதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. நீங்க முடிவா என்ன தான் சொல்றீங்க சொத்தை எழுதி வைப்பீங்களா இல்லையா” என்றான் கார்த்திக்.
கனகவேல் ஏதோ சொல்ல வர தெய்வானை பாட்டி அவரை ஒரு பார்வை பார்த்து “இப்போதைக்கு எழுதி வைக்கிற ஐடியா இல்லை” என்றார் திட்டவட்டமாய்.
“இதுவரைக்கும் நீங்க நினைச்சதை நடத்தி நம்ம குடும்பம் இப்போ இருக்கற நிலையே போதும். இனியாச்சும் நான் சொல்றதை கேளுங்க…” என்று கனகவேலை பார்த்து சொன்னார் தெய்வானை.
அவர் மனைவியை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தார். “பொம்பளைங்க எதிர்த்து பேசக்கூடாது அதானே. அப்படி எங்களை வைச்சு நீங்க என்ன சாதிச்சீங்க. ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்ததுலே இருந்தே ஊமையாகிட்டா” என்று ரத்தினவேலின் மனைவியை சுட்டிச் சொன்னார்.
“பத்தாதுக்கு பேத்திகளையும் பேரனுங்களுக்கே கட்டிக்கொடுத்து அதுகளும் பேசுறதில்லை. இன்னைக்கு இப்படியொரு நிலை வந்துச்சுன்னா அது எல்லாத்துக்கும் காரணம் நீங்க மட்டுமில்லை. உங்களை எதிர்த்து பேசிடாத நாங்களும் தான் காரணம்” என்று ஒத்துக்கொண்டார் தெய்வானை பாட்டி.
“பாட்டி என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க?? தேவையில்லாத பேச்செல்லாம் வேண்டாம். நீங்க சொத்து எழுதி வைக்கலைன்னா நாங்க இன்னையில இருந்து கடைக்கு போக மாட்டோம்” என்று அறிவித்தான் சரவணன். கார்த்திக்கும் அதை ஆமோதித்தான். 
கனகவேலே மெல்லிய குரலில் “உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டைன்னு சொல்லுவாங்க, நீங்க என்னடா கடைக்கு போக மாட்டேன்னு சொல்றீங்க”
“நாங்க கேட்டதை செஞ்சுக் கொடுங்க சந்தோசமா கடையை பார்க்க போறோம். இல்லன்னா எங்களை ஆளைவிடுங்க, வேற கடையில போய் வேலை பார்க்கறோம்” என்றான் கார்த்தி.
“இப்போ சந்தோசமா உங்களுக்கு. என் புள்ளைங்களை நடுத்தெருவுல விடணும்ன்னு எத்தனை நாளா ஆசை உங்களுக்கு. எங்களை நட்டாத்துல விட்ட மாதிரி அவங்களையும் விட பிளான் பண்ணிட்டீங்களா” என்று வந்தார் ரத்தினவேல்.
“உங்களை இப்போ எங்களுக்கு பஞ்சாயத்து பண்ணச்சொல்லி கூப்பிட்டோமா நீங்க எதுக்கு நடுவுல வர்றீங்க. பேசாம ஓரமா போய் உட்காருங்க, இல்லை போலீஸ்க்கு தான் போகவேண்டி வரும் பார்த்துக்கோங்க…” என்று மிரட்டினான் சரவணன்.
“உங்களுக்காக தானேடா பேசினேன்”
“நீங்க ஒண்ணும் பண்ண வேணாம், நீங்க எங்களையும் லாரி ஏத்தி கொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்…” என்று அவன் சொல்ல கூனிக்குறுகிப் போனார் ரத்தினவேல்.
கனகவேலுக்கு இதற்கு மேல் எதையும் பிடித்து வைக்கும் எண்ணமில்லை. ஆனாலும் தனக்கும் தன் மனைவிக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் அவர் சொத்தை எழுத்தித்தர முடிவெடுத்துவிட்டார். “சரி நீங்க கேட்டதை செஞ்சிடறேன். நாளைக்கே வக்கீலை வரச்சொல்றேன்” என்றார் கனகவேல்.
“எப்படி பிரிக்க போறீங்க??” என்றான் கார்த்திக்.
“அதைப்பத்தி உனக்கென்ன??”
“அது எங்களுக்கு தெரியணுமா இல்லையா??”
“என்ன தாத்தா சொத்து எழுதி தர்றேன்னு பேசிட்டு இருக்கீங்க. உங்க பேரனுங்களுக்கு மட்டும் எழுதிட்டு என்னை விட்டிடலாம்ன்னு நினைக்காதீங்க. நானும் இந்த வீட்டு பொண்ணு தான் எனக்கும் ஒரு பங்கு வரணும்…” என்று அன்று காலையில் தான் அங்கு வந்து இறங்கியிருந்த ராதிகா சொன்னாள்.
அவள் அங்கயற்கண்ணியின் மறுவாரிசாக இருந்தாள். அவள் பேச்சை கேட்டதுமே அங்கயற்கண்ணி தன் பங்குக்கு “ஆமாப்பா எல்லாருக்கும் சரியா பிரிக்கணும். என்னோட பங்கு தனியா வரணும்” என்றாள்.
கனகவேலுக்கு அவர்களின் பேச்சு ஆத்திரத்தையே வரவழைத்தது. “உனக்கு எதுக்கு அங்கயற்கண்ணி கொடுக்கணும். நீ உன் பசங்களுக்கு தானே கொடுக்கப் போறே. அதை உன் மருமகனுகளுக்கு சேர்த்து எழுதி வைச்சிடறேன், நீ பேசாம இரு…” என்றார் கனகவேல்.
“மருமகனுங்களுக்கும் மகள்களுக்கும் எப்போ கொடுக்கணும்ன்னு எங்களுக்கு தெரியும். நீங்க எனக்கும் ஒரு பங்கு கொடுத்து தான் ஆகணும்” என்று நின்றார் அங்கயற்கண்ணி.
ஆனால் அங்கயற்கண்ணியின் கணவரோ மனைவியை கண்டித்து சொத்தில் தங்களுக்கு பங்கு வேண்டாம் என்று சொன்னவர் தன் மனைவியுடன் அவரின் சொந்த ஊரான தோவாளைக்கு நாளையே ஒரேடியாக குடிபெயர போவதாக சொல்லிவிட்டார்.
“தாத்தா சொத்து உங்க எல்லா பேரப்பிள்ளைகளுக்கும் போய் சேரணும்” என்றான் கார்த்திக் அழுத்தி.
“நீ யாரைச் சொல்றே??” என்று இடையில் வந்தார் கனகவேல்
“விஸ்வா, ரேகாக்கும் பங்கு கொடுக்கணும்” என்றான் சரவணன்.
“அவங்களாம் எதுக்கு??” என்றார் பெரியவர்.
“உண்மை தான் அவங்க ரெண்டு பேருமே நீங்க கொடுக்கறதை வாங்கிக்க மாட்டாங்க. முக்கியமா விஸ்வா வாங்கிக்கவே மாட்டான்” என்றான் கார்த்திக்.
“அவனுக்கென்ன அவன் நல்லா தான் இருக்கான். ஒண்ணுமே இல்லாம தான் இங்க இருந்து போனான். வீடு வாங்கிட்டான் என்ன வேலை பார்க்கறான்னு தெரியலை, ஆனா சிறப்பாவே இருக்கான்…” என்றான் சரவணனும்.
அண்ணன், தம்பி இருவரும் விஸ்வாவின் மனநிலையை கணிக்கவும் அவனை நோட்டமிடவுமே அங்கு சென்றிருந்தனர். சொத்து பற்றிய அவன் எண்ணத்தையும் அறியவேண்டி தான் சென்றிருந்தனர்.
அவனை நேரில் பார்த்த பின்னே உள்ளே லேசாய் ஒரு பொறாமை தீ வந்து போனதென்னவோ உண்மை தான். ஒன்றுமே இல்லாமல் போனாலும் அவன் நன்றாகத் தானே இருக்கிறான் என்று எண்ணினார்கள். அவர்கள் கண்டுவந்ததை தான் அந்நேரம் சொல்லியிருந்தான் அவன். 
“என்ன பண்ணணும்ன்னு எனக்கு தெரியும் நீங்க ஆளாளுக்கு எதுவும் பேசத் தேவையில்லை” என்று முடித்துவிட்டார் கனகவேல். சொன்னது போலவே மறுநாளே அனைவருக்கும் சொத்தை பிரித்து அளித்தார். அதில் தனக்கும் தன் மனைவிக்கும் கூட ஒரு பங்கை ஒதுக்கி வைத்தார்.
அவருக்கு தன் பேரன்களை நன்றாய் தெரிந்திருந்தது. இது தங்கள் கையில் இருந்தால் தான் சற்றேனும் அவர்கள் தங்களை மதித்திருப்பர் என்று. ரத்தினவேலுக்கும், செந்திலுக்கும் கூட தனித்தனியே வீட்டை ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.
தான் கடையில் ஒரு ஊழியனாய் மட்டுமே வேலை பார்ப்பதாக சொல்லிவிட்டு சொத்தையும் மறுத்து செந்தில்வேல் சகுந்தலாவுடன் தனியே சென்றுவிட்டார் அவ்வீட்டில் இருக்க பிரியமில்லாமல். விஷயம் தெரிந்து விஸ்வா அவர்களை தங்களுடன் வந்து இருக்குமாறு அழைக்க இருவருமே மறுத்துவிட்டனர். தங்களால் முடியாத பட்சத்தில் வந்து இருப்பதாக கூறிவிட்டனர்.
மொத்தத்தில் விஸ்வாவை தவிர மற்ற அனைவருக்கும் அவர் சொத்தை பிரித்திருந்தார். ரேகாவை வரச்சொல்லியிருக்க அவள் அந்த சொத்தை வேண்டாம் என்று மறுத்திருந்தாள்.
கார்த்திக்கும் சரவணனும் “ரேகா இது உனக்கு சேர வேண்டியதுன்னு நினைக்க வேண்டாம். அமுதன் தான் உண்மையாவே இதுக்கு சொந்தக்காரன். நீ இதை மறுக்காதா…” என்றனர்.
“இதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னதே அவர் தான். நானாச்சும் இருந்திட்டு போகட்டுமேன்னு தான் சொன்னேன் அவர் இந்த பாவம் நமக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்டார்” என்றாள்.
அவள் சென்றப்பின்னே சரவணனும் கார்த்திக்கும் அதை தங்களுக்கு தருமாறு சொல்ல கனகவேல் நிஜமாகவே வெறுத்து தான் போனார். இந்தளவிற்கு தங்கள் பேரன்கள் இருப்பார்கள் என்று அவர் எண்ணியிருக்கவில்லை.
ராதிகாவிற்கு அவள் கணவன் மாதவன் பார்த்துக் கொண்டிருந்த திருவனந்தபுரத்தில் இருந்த கடையை அவர்களின் பெயரிலேயே மாற்றி எழுதிவிட்டார்.
சொத்து எல்லாருக்கும் பிரித்து கொடுத்த மறுநாளே வீட்டிற்கு ஆள் வந்து நின்றது. “சரவணன், கார்த்திக் எங்கே??” என்று.
“நீங்க யாரு??”
“நீங்க யாரு முதல்ல அதை சொல்லுங்க??” என்றான் வந்திருந்தவன்.
“நீ யாருன்னு கேட்டா என்னையே யாருன்னு கேட்கறே??”
“ஹலோ அந்த ரெண்டு பிராடுகளுக்கு நீங்க என்ன வேணும்ன்னு சொல்லுங்க” என்றான் வந்தவன்.
“என்னது பிராடா என் புள்ளைங்களை பார்த்தா பிராடுன்னு சொல்றே??” என்று பாய்ந்தார் ரத்தினவேல்.
“எதுக்கு எகிறிட்டு இருக்க நீ?? கொஞ்சம் அடங்கு, உன் அருமை புள்ளைங்க என்னையவே ஏமாத்தலாம்ன்னு பார்க்கறானுங்களா விட்டிருவேனா அவனுங்களை”
“யோவ் யாருய்யா நீ முதல்ல அதைச் சொல்லு??” என்றார் ரத்தினவேல். கனகவேலும் அப்போது தான் மெதுவாய் அங்கு வந்தார், உடன் தெய்வானை பாட்டியும்.
“உன் புள்ளைங்களை நம்பி பணம் கொடுத்தவன். அவனுங்க லாட்டரி டிக்கெட்டா வாங்கி வாங்கி கிழிக்கறதுக்கு நோட்டு நோட்டா நான் அள்ளிக் கொடுத்திருக்கேன்”

“எதை நம்பி நீ அவனுங்களுக்கு காசு கொடுத்தே??” என்றார் கனகவேல்.
“எல்லாம் அந்த கடையை நம்பி இந்த சொத்தை நம்பி” என்று வீட்டை சுட்டிக்காட்டினான் வந்தவன்.
“என்னது கடையா??” என்று அதிர்ந்தனர் அப்பாவும் மகனும்.
கனகவேல் ரத்தினவேலை பார்க்க அவரோ விழித்தார் ஒன்றும் புரியாமல்.
“சொத்தெல்லாம் எங்க பேருக்கு வந்திடும் வந்ததும் காசு திருப்பிக் கொடுக்கறேன்னு சொன்னானுங்க. அதான் சொத்தெல்லாம் கொடுத்திட்டீங்களே இன்னும் என்னைக் கண்டு அவனுங்க ஓடி ஒளியறானுங்க” என்றான் அவன்.
“நேத்து தான் சொத்து எல்லாம் எழுதினோம், அதுக்குள்ளே உனக்கு எப்படி தெரியும்??” என்றார் ரத்தினவேல்.
“அதெல்லாம் எங்களுக்கு எல்லா இடத்துலயும் ஆளிருக்கு, எல்லா இடத்துலயும் கண்ணுமிருக்கு. தெரிய வேண்டிய விஷயம் உடனுக்குடனே தெரிஞ்சிடும்” என்றவன் சட்டமாய் நடுவீட்டில் அமர்ந்துக்கொண்டான்.
தெய்வானை பாட்டி கனகவேலை ஏறிட்டார். அந்த பார்வை இதெல்லாம் உங்களுக்கு பத்தாது இன்னும் இருக்கு என்பது போல் இருந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்… அங்கு அறுவடை நடந்துக் கொண்டிருந்தது, தெய்வம் நின்றுக் கொல்லும் என்று நம்பிச் செல்வோம்.
——————–
ஒரு மாதத்திற்கு பின் திருப்பதியில் விஜய், சங்கவியின் திருமணம் நடைபெற விஸ்வாவும் காஞ்சனாவும் அவர்களின் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.
அங்கிருந்து அப்படியே மும்பைக்கும் சென்று அவர்களின் திருமண வரவேற்பையும் முடித்துவிட்டு அங்கு முன்பு அவள் தங்கியிருந்த வீட்டில் தங்கியிருந்தனர். அங்கு சென்ற பின் தான் விஸ்வா அவளிடம் அவன் அந்த வீட்டை லோனில் வாங்கியிருப்பது பற்றி சொன்னான்.
அன்று விஜய்க்கும் சங்கவியும் அவன் இருந்த பிளாட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் காஞ்சனாவும் விஸ்வாவும் அவர்கள் அறைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
சங்கவி அறைக்குள் நுழைந்ததும் விஜய் அவளை தாவி வந்து அணைக்க அவளோ தள்ளிச் சென்றாள். விஜய் கடுப்பாய் அவளை பார்த்தான்.
“விஜய்” என்றழைத்தாள் அவள் அப்போது.
“என்னடி??” என்றான் அவன் அதே கடுப்போடு.
“அர்ஜென்ட்டா ஒரு கிஸ் வேணும்”
“அடிங்க உன்னையெல்லாம் என்ன செய்யறது?? இப்போ முழுசா நானே உனக்கு சொந்தமாகிட்டேன், ஒரு கிஸ் என்ன ஓராயிரம் கிஸ் கூட கொடுப்பேன், இனி எவன் என்னை கேட்பான்” என்றவன் அவளை இழுத்து அணைத்தவன் அவள் கேட்டதை திகட்ட திகட்ட கொடுத்தான்.
“விஷ்வா நான் இங்க தங்கியிருந்தப்போ நீங்க என்ன நினைச்சீங்க??” என்றாள் காஞ்சனா விஸ்வாவை பார்த்து. 
“நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்சே” என்று அவன் பாட்டு படிக்க காஞ்சனா முறைத்தாள்.
“அது தானே உண்மை, பக்கத்துல நீ இருக்கே அப்படிங்கறதே அவ்வளவு தித்திப்பா இருந்துச்சு எனக்கு. இதுல எனக்கு உங்களை மட்டும் தான் பிடிக்கும் விஷ்வான்னு ஒரு நாள் சொன்னியே அதுவும் வேற என் காதுல விழுந்துச்சு”
“என்னது நான் சொன்னது கேட்டுச்சா, நீங்க எதிர்க்க இருந்த ரூம்ல தானே இருந்தீங்க…

Advertisement