Advertisement

41
அவர்கள் சென்ற பின்னே விஸ்வாவை தேடி வந்தாள் காஞ்சனா. அவன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் நிலவை பார்த்தபடி. 
“என்ன இங்க வந்து உட்கார்ந்துட்டீங்க”
“நீயும் வந்து உட்காரு…”

அவள் அவனருகில் அமரவும் “என்ன கேட்கணும்??”
“என்ன சொல்றீங்க??”
“என்கிட்ட ஏதோ கேட்கணும்ன்னு தானே வந்தே??”
“ஹ்ம்ம் ஆமா…”
“சொல்லு என்னன்னு??”
அவனிடம் கார்த்திக், சரவணன் வந்ததை பற்றியும் அவர்கள் பேசியதை பற்றியும் அவள் கேட்க விஸ்வாவோ “அவங்க வருவாங்கன்னு எனக்கு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் வந்தது அதிர்ச்சி தான்”
“உங்களுக்கு எப்படி தெரியும் அவங்க வருவாங்கன்னு. இல்லை நானே இன்னைக்கு உங்க அண்ணனுங்க ரம்யாக்கா, சௌம்யாக்கா கூட வருவாங்கன்னு எதிர்ப்பார்க்கலை. அதைவிட பெரிய ஷாக் கிட்டத்தட்ட அவங்க மன்னிப்பு கேட்டது” என்றுவிட்டு நிறுத்தினாள்.
“இல்லை காஞ்ச்சு அவங்க இப்படியில்லை சின்ன வயசுல. எனக்கு ஞாபகமிருக்கு, அவங்களோட நான் சேர்ந்து விளையாடினது எல்லாம்”
“பெரிசா எந்த வேறுபாடும் அப்போலாம்  எங்களுக்குள்ள வந்தது இல்லை. சரியா சொல்லணும்ன்னா நான் வெளியூர் போய் படிக்க ஆரம்பிச்சப்போ தான் அவங்ககிட்ட விலகல் ரொம்ப அதிகமாச்சு”
“இப்போக்கூட இவங்க என்கிட்ட பேச வந்தது எனக்கு ஆச்சர்யமில்லை”
“ஹ்ம்ம்…”
“மாறிட்டாங்கன்னு நினைக்கறீங்களா”
“இல்லை”
“ஆஹான்”
“ஒருத்தன் வாழ்க்கையில ஒரு முறை ஏமாந்து இருக்கலாம், எப்பவும் ஏமாளியா தான் இருக்கக்கூடாது” என்றான் புதிராய்.
“எனக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை??”
“அவங்க எப்படி ஓடி வந்தாங்கன்னு நீ நினைக்கறே??”
“கொஞ்சம் உங்க மேல பாசம் இருந்திருக்கலாம் நீங்க சொன்ன மாதிரி, அடுத்து சொத்துக்காகவும் இருக்கலாம். அதைவிட முக்கியமானது என்னன்னா இவன் ஒண்ணுமே இல்லாம ஊரைவிட்டு போனானே, இப்போ வீடெல்லாம் வாங்கி நல்லா இருக்கானே எப்படி அதெல்லாம் வந்துச்சுன்னு நோட்டம் விடக் கூட வந்திருக்கலாம்…”
“யூவர் மை பெர்பெக்ட் வைப் டார்லிங்”
“எதுக்கு இந்த புகழாரம்??”
“பின்னே எங்க அண்ணனுங்களை பத்தி புட்டு புட்டு வைக்கறியே…”

“நீங்க பேசுறது பார்த்தா நான் சொன்னதை தவிர வேற காரணமும் இருக்கும் போல இருக்கே?? என்னன்னு சொல்லுங்க??”
“ஹ்ம்ம் இருக்கு… அவங்ககிட்ட நிறைய வீக்னஸ் இருக்கு, உனக்கு தெரிஞ்சிருக்கலாம்…”

“ஹ்ம்ம் தெரியும்”
“அதை நான் பயன்படுத்திக்கிட்டேன்”
“அப்படின்னா??”
“உன் பாஷையில சொல்லட்டுமா”
அவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தாள். “அவங்களை ஒரு விதத்துல பழிவாங்கின மாதிரி தான்”
“வாட்??” என்று அதிர்ந்தாள்.
விஸ்வாவிற்கு சுட்டுப்போட்டாலும் மற்றவர்களுக்கு தீங்கு நினைக்க வராது என்பதை அவனோடு பழகியிருந்த இத்தனை நாட்களில் அறிந்திருந்தாள். இப்போது அவன் சொல்லும் சேதி அவளுக்கு புதிதாகவே இருந்தது.
“விஷ்வா ப்ளீஸ் பூடகமா பேசாம நேரா சொல்லுங்க என்ன நடந்திச்சுன்னு, இல்லை நடக்கப் போகுதுன்னு…”
“என் அண்ணனுங்களுக்கு ஒரேடியா எல்லாம் என் மேல பாசம் கிடையாது. அதாவது எனக்கு ஒண்ணுன்னா அவங்க துடிக்கறது இப்படி பாசம் எல்லாம் அவங்களுக்கு கிடையாது”
“அதுக்காக எதுவுமே இல்லைன்னும் சொல்ல முடியாது. நான் அவங்க கூடவே வளர்ந்தவன் இல்லையா அது எப்பவும் அவங்க மனசுல உண்டு. அவங்களுக்கு சொத்து வேணும் அதையும் அவங்களால விட்டுத்தர முடியாது”
“அவங்க சொத்தை பத்தி பேசினது எல்லாம் என்னோட மைன்ட்ல நான் என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுக்கத்தான்…”
“அதுக்காக எனக்கு எதுவுமே கொடுக்கக் கூடாதுன்னு அவங்க நினைக்கலை. அவங்களோட பங்கு அவங்களுக்கு வேணும் அதுவும் இப்போவே…”
“எதுக்கு இப்போவே வேணும்??”
“அங்க தான் நான் அவங்களுக்கு செக் வைச்சேன்”
“என்ன செக்??”
“செக் மோசடி தான்”
“என்னது??”
“ஹ்ம்ம் அவங்க ரெண்டு பேருமே வார வாரம் தவறாம கேரளாக்கு போயிட்டு வர்றாங்க… அங்க அவங்க பண்ணற தப்புல ஒண்ணு லாட்டரி வாங்குறது, கார்த்திக் அண்ணாகிட்ட இருந்த அந்த பழக்கம் சரவணன் அண்ணாக்கும் ஒட்டிக்கிச்சு”
“ரெண்டாவது தப்பு…” என்றுவிட்டு அவன் நிறுத்திவிட்டான்.
“இல்லீகல் தொடர்பா??” என்றாள் அனுமானமாய். அவன் “ஹ்ம்ம்” என்று சொல்ல “தப்பில்லையா??” என்றாள்.
“அவங்க தப்பே பண்ணாதவங்களா என்ன?? நீ எதுக்கு அதிர்ச்சி ஆகறே??”
“இருந்தாலும்…”
“என்ன இருந்தாலும்??”
“ரம்யாக்காவும், சௌம்யாக்காவும் பாவம்ல…”
“என்ன பாவம்??”
“என்ன இப்படி பேசறீங்க நீங்க?? ஆம்பிளைங்க எந்த தப்பு வேணா பண்ணலாம் தப்பில்லைன்னு சொல்றீங்களா”
“உங்க அண்ணனுங்க பண்ணுறது இவங்களுக்கு தெரியாதுல, அவங்க ரெண்டு பேரும் பொண்டாட்டியை ஏமாத்துறது சரின்னு சொல்றீங்களா??” என்று மூச்சு வாங்க அவள் பேச விஸ்வகர்மாவின் பார்வை அவளை துளைத்தது.
“அப்போ ஏமாத்துறது தப்பு அப்படித்தானே!!”
“விஷ்வா!!”
“நான் நீ என்னை ஏமாத்தினது பத்தி சொல்லலை…” என்று சொல்ல சட்டென்று எழுந்த காஞ்சனா அங்கிருந்து செல்லப் பார்க்க அவள் கையை எட்டி பிடித்து தடுத்தான் விஸ்வா.
“விடுங்க விஷ்வா நான் போகணும்” என்று சொல்லும் போது அவள் குரல் கரகரத்தது.
“காஞ்ச்சு”
“விடுங்க நான் பண்ணது சரின்னு நான் சொல்லலை, ஆனா இப்படி நீங்க குத்தி காட்டுறது மனசு வலிக்குது விஷ்வா”
“காஞ்ச்சு”
“வேணாம் விஷ்வா என்னை விட்டிருங்க. நான் எங்கயாச்சும் போய்டறேன். எனக்கு காலத்துக்கும் இந்த மாதிரி பேச்சு கேட்க வேண்டாம் என்னால இதை தாங்க முடியும்ன்னு தோணலை…” என்றவள் அப்படியே மடங்கி அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து அழுதாள்.
“உனக்கு என்னைவிட்டு எங்க போகணும்ன்னு சொல்லு”
“எங்கயோ போறேன்” என்றாள் அழுகையினூடே
“அப்போ போ இன்னும் ஏன் இங்க இருக்கே??” என்றான் கோபமாய்.
“விஷ்வா…” என்றவாறே நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்ணில் கண்ணீரையும் மீறி எதுவோ இருந்தது.
“நான் போய்டட்டுமா விஷ்வா”
“உன்னை நான் போகச் சொல்லலை”
“இப்போ சொன்னீங்களே இன்னும் ஏன் இங்க இருக்கேன்னு”
“போறேன்னு சொன்னது நீ…”
ஒரு கையால் இரு கண்ணில் வழிந்த நீரை துடைத்தாள். “நான் போகணுமா உங்களைவிட்டு நான் போகணுமா…”
“போறேன்னு சொன்னல்ல போ…”
“போக முடியாது போடா, நான் போறேன்னு சொன்னா போன்னு சொல்வீங்களா…”
“நான் போனதும் அந்த ஷிவானியோட அக்காவை கல்யாணம் பண்ணுறதா பிளானா உங்களுக்கு, சொல்லுங்க விஷ்வா அந்த நினைப்புல தான் சுத்திட்டு இருக்கீங்களா…” என்று அவன் பனியனை ஒரு கையால் கொத்தாய் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள்.
“காஞ்ச்சு…”
“என்ன??”
“ஐ லவ் யூ…” என்று அவன் சொல்லவும் பற்றியிருந்த அவன் பனியனை விடுவித்து அவன் விழிகளை ஏறிட்டாள்.
“உன்னை குத்திக்காட்ட அதைச் சொல்லலை, புரிஞ்சுக்கோ. நான் நானா உன்கிட்ட தான் இருக்கேன், கோபம் வந்தா அதை உன்கிட்ட காட்டியிருக்கேன். ஒரு வார்த்தை சொன்னா அதை எதுக்காக சொல்றேன்னு புரிஞ்சுக்காம நீயா உன்னைத்தான் நான் சொல்ல வர்றேன்னு நினைக்காதே…”
“நீ அப்படி நினைக்கவும் தான் நானும் அந்த வார்த்தையை சொன்னேன். நமக்குள்ள இன்னைக்கு இல்ல என்னைக்கு வேணும்னாலும் பேச்சு வாக்குல ஒரு வார்த்தை முன்னபின்ன வரலாம்”
“அதுக்கெல்லாம் நீ ஒரே அர்த்தம் எடுத்துகிட்டா நமக்குள்ள பிரச்சனை தான் வளரும். நம்ம கல்யாணத்தை பத்தியோ நீ என்னை ஏமாத்தினது பத்தியோ நான் எப்பவும் வருத்தப்பட மாட்டேன்…”
“அதெல்லாம் நல்லதுக்குன்னு தான் நினைப்பேன். சிலரோட உண்மை முகங்கள் தெரிய நீ செஞ்ச யுக்தின்னு தான் எடுத்துக்குவேன் புரியுதா…”
“ஒரு வேளை உன் பக்கத்துலேயே இருந்திருந்தா எப்படி நினைச்சிருப்பனோன்னு எனக்கு தெரியாது. ஆனா நமக்குள்ளான அந்த பிரிவு நல்லது எது கெட்டது எது சரி எது தப்பு எதுன்னு என்னை யோசிக்க வைச்சது”
“சோ இனிமே நான் சொல்றதுக்கெல்லாம் நீயா ஒரு அர்த்தம் எடுத்துக்காத, அப்படி உனக்கு நான் பேசினது புரியலன்னா என்ன சொல்றீங்கன்னு கேளு நான் பதில் சொல்றேன்… சரியா…” என்று அவன் நீண்ட விளக்கம் கொடுக்க “சாரி விஷ்வா…” என்று அவன் மார்பின் மீது சாய்ந்துக் கொண்டாள்.
“ஓகே விடு…”
“இல்லை நீங்க ரம்யாக்கா, சௌம்யாக்கா பத்தி ஏதோ சொல்லிட்டு இருந்தீங்க??”
“ஹ்ம்ம் ஆமா…”
“இல்லை அவங்க பாவம்ன்னு…”
“இல்லைன்னு சொன்னேன்ல…”
“ஏன்??”
“பின்ன வெளிய போற புருஷன் என்ன பண்றான் ஏது பண்றான்னு கூட தெரியாம ஒரு பொண்டாட்டி எப்படி இருக்கலாம் காஞ்ச்சு”
“ரம்யாக்கும் சௌம்யாக்கும் இவங்க பண்ணுற தப்பெல்லாம் தெரியாம இருக்கும்ன்னு நினைக்கறியா நீ??”
“தெரியாம இருந்திருக்கலாமே. தெரிஞ்சிருந்தா அவங்க இப்படி சும்மா இருப்பாங்களா. நீங்க ஷிவானியோட அக்காவை கட்டிப் போறேன்னு என் முன்னாடியே சொன்னப்போ எனக்கு எவ்வளவு கோபம் வந்துச்சுன்னு நீங்க பார்த்தீங்கள்ள. அப்படித்தானே அவங்களுக்கும் ஒரு வழி ஆக்கி இருப்பாங்க அவங்களை ஹஸ்பன்ட்சை”
“நீ இவ்வளவு பின்னாடி யோசிப்பியான்னு நினைச்சா எனக்கு ஆச்சரியமா தான் இருக்கு காஞ்ச்சு… எனக்கு அவங்க பொண்ணுங்க விஷயம் அப்போ தெரியாது. ஆனா லாட்டரி விஷயம் அப்போ தெரியும்”
“நானே அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு சொல்லியிருக்கேன். உங்க புருஷங்களை என்ன ஏதுன்னு கேளுங்கன்னு”
“அப்போவே அவங்க சட்டையை பிடிச்சிருந்தா இந்தளவுக்கு வந்திருக்காதுல”
காஞ்சனாவுக்கு அவன் சொல்வது புரிந்தது. “அதுக்காக அவங்களை தப்பு சொல்வீங்களா”
“நான் அவங்களை தப்பு சொல்லலை காஞ்ச்சு. அவங்க இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்ன்னு சொல்றேன்”
“இப்போ என்ன நிலைமையில இருக்குன்னு தெரியுமா உனக்கு. அவங்களுக்கு காசு வேணுங்கறதுக்காக நிறைய கடன் வாங்கி இருக்காங்க, பத்திரத்துல எல்லாம் இஷ்டத்துக்கு கையெழுத்து போட்டிருக்காங்க…”
“பணம் கொடுத்தது நானே தான்…”
“என்ன??”
“ஆமா நானே தான், ஆனா நான்னு அவங்களுக்கு தெரியாது. விஜயை முன்னிறுத்தி செஞ்சது தான். எனக்கு இவ்வளவு பணம் ஏதுன்னு உனக்கு தோணலாம்”
“முதல்ல அதை நீ தெரிஞ்சுக்கணும். நான் கடையில வேலை பார்த்தப்போவே நாங்க வேலை பார்க்கறதுக்குன்னு எங்களுக்காங்க சம்பளத்தை நாங்க எடுத்துப்போம்”
“வீட்டு செலவை தாத்தா பண்ணுவார். நான் வீட்டுக்கு எதுவும் தேவையின்னு சொன்னா அதை வாங்கிக் கொடுப்பேன். மத்தப்படி என்னோட சம்பளப்பணம் என் பேங்க்ல தான் இருந்துச்சு”
“அதை விஜயோட கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில கொஞ்சம் இன்வெஸ்ட் பண்ணி வைச்சிருந்தேன். அப்புறம் இந்த ஒரு வருஷமா மும்பைல நான் வேலை பார்த்தது எல்லாம் முடிஞ்ச வரை இன்வெஸ்ட் பண்ணி அதை பெருக்கி தான் வச்சிருந்தேன்”
“எனக்கு எப்படி சம்பளமோ அப்படித்தான் அண்ணனுங்களுக்கும் அதெல்லாம் ஒரு தரம் கூட அவங்க வீட்டுக்காக செலவு பண்ணது கிடையாது. ஏன் ரம்யா, சௌம்யாக்கே எதுவும் வாங்கி கொடுத்ததில்லைன்னு கூட சொல்லுவேன்”
“அவங்களை சிக்க வைக்கத்தான் நான் அப்படி செஞ்சேன். எல்லாமே விஜய் பேர்ல தான்செஞ்சோம், நேரடியா நான் இதுல இறங்கலை. என் அண்ணனுங்க சொல்லி திருந்துறவனுங்க இல்லை. பட்டு திருந்துறவனுங்க அதுக்கு தான் அப்படி செஞ்சேன்”
“இவனுங்க ரெண்டு பேரும் தாத்தாவை சும்மா விடமாட்டானுங்க. சொத்தை அவங்க பேர்ல எழுதி வைக்குற வரைக்கும் நச்சரிப்பானுங்க…”
“கண்டிப்பா அவரும் இவங்க பேர்ல எல்லாம் மாத்துவாரு. ஏற்கனவே என் அண்ணனுங்க கையெழுத்து போட்டு கொடுத்த பத்திரத்தை வைச்சு சொத்தெல்லாம் மாத்தி எழுதப் போறேன்”
காஞ்சனா அவனையே பார்த்தாள். “நீ என்ன நினைக்கறேன்னு எனக்கு புரியுது. எனக்கு லீகலாவே வரவேண்டிய சொத்து தானே அது, அதை எதுக்கு இப்படி மாத்தணும்ன்னு தானே யோசிக்கறே??”
அவள் ஆமென்று தலையசைத்தாள். “உண்மையாவே அந்த சொத்து உன் தம்பிக்கு தான் போகணும்”
“அவன் அதுக்கெல்லாம் ஆசைப்பட மாட்டான்”
“இப்பவும் சொல்றேன் எனக்கும் அந்த சொத்து வேணாம். என்னால உழைச்சு நம்ம குடும்பத்தை காப்பாத்த முடியும், நமக்கு தேவையானதை செஞ்சுக்க முடியும்”
“அந்த பாவப்பட்ட சொத்து எனக்கு எப்பவும் வேணாம். நம்ம குடும்பத்துல நிறைய உயிரை அது பலி வாங்கி இருக்கு. உனக்கு அந்த சொத்து வேணுமா காஞ்ச்சு??

“நான் எப்பவும் காசு பணத்துக்கு ஆசைப்பட்டதில்லை விஷ்வா. எனக்கும் அந்த சொத்தை பத்திய கணிப்பு அது தான், நிறைய உயிரை அது வாங்கிடுச்சுன்னு தான் நானும் எப்பவும் நினைப்பேன்”
“அது உங்களுக்கு உரிமைப்பட்டதுன்னு தான் அதை உங்களுக்கு வாங்கி கொடுக்கணும்ன்னு நினைச்சேன்…”
“நமக்கது வேணாம். உன் தம்பிக்கு சேரணும் அது. அவன்கிட்ட பேசிட்டு அதை என்ன செய்யன்னு இறுதி முடிவு எடுத்துக்கலாம் அப்போ”
“என் அண்ணனுங்களுக்கு காசு பணத்தோட அருமை தெரியணும், தவிர சொத்து சொத்துன்னு அலைஞ்சவங்களுக்கு பாடம் கத்துக்கொடுக்க வேணாமா”
“நேரிடையா தான் எதையும் சொல்லணும்ன்னு இல்லை. எதுவும் இல்லாம போறப்போ அவங்களுக்கு புரியும், அதையெல்லாம் அவங்க உணராம இந்த மண்ணைவிட்டு போய்டக் கூடாது அது தான் என்னோட வேண்டுதல்” என்றவனை மலைத்து போய் பார்த்திருந்தாள் காஞ்சனா.
அவனின் வலி அவளுக்கு புரிந்தது தான், ஆனால் இப்படியொரு பழிவாங்கல் அவளே எதிர்பாராதது. “அப்போ அவங்களை அப்படியே நடுத்தெருவுல விட்டிறதா”
“இல்லை அவங்களுக்கு உறவுகளோட அருமையும் பணத்தோட அருமையும் புரியணும். அப்போ அது அவங்களை தானா போய் சேரும்”
“யாருக்கு பணத்தோட அருமை புரியணும்ன்னு சொல்றீங்க, தாத்தாவுக்கா”
“அவருக்கு புரிஞ்சதுனால தான் அடுத்தவன் சொத்தையும் அபகரிக்க பார்த்தார். அவருக்கு புரிய வேண்டியது அவர் இதுவரை செஞ்சதெல்லாம் சரியா தப்பான்னு தான்…”
“தாத்தா மட்டும் தானா, உங்க பெரியப்பாவும், அவரோட தம்பியும் கூடத்தானே உடந்தை”
“செந்திலப்பா கூட இருந்தார் தான் ஆனா ஒரேதா குற்றம் சொல்ற அளவுக்கு இல்லை. அவருக்கு உறவுகளுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்ன்னு புரிஞ்சிருக்கு காஞ்ச்சு…”
“பெரியப்பா தாத்தாவை விடவும் ரொம்ப மோசமானவர்” என்று சொல்லும் போது கண்களை மூடிக்கொண்டான் அவன்.
தன்னை இப்படியொரு சூழ்நிலையில் நிற்க வைத்ததில் பெரும்பங்கு அவரது தானே. அவரை எக்காலத்திலும் அவனால் மன்னிக்கவே முடியாது.
“இப்போ அண்ணனுங்ககிட்ட ஒரு மாற்றம் இருக்குன்னா அதுக்கு காரணம் அவங்க பொண்டாட்டிங்க தான். ரம்யாவும் சௌம்யாவும் அதை இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாம். அவங்க மாறுறது இனி அவங்களோட பொறுப்பு” என்று கூறி முடித்தான் விஸ்வா.
“சாரி விஷ்வா”
“நீ எதுக்கு சாரி கேட்கறே இப்போ??”
“உங்களை நானும் கஷ்டப்படுத்திட்டேன்ல. எல்லார்க்கும் தண்டனை இருக்கு எனக்கு என்ன தண்டனை”
“உனக்கு பெரிசா பிளான் பண்ணியிருக்கேன் காஞ்ச்சு. காலம் முழுக்க நீ என்னோடவே இருக்கணும், அப்பப்போ நாம சண்டை போடணும், அந்த சண்டை நீ கொடுக்கற இனிப்பான முத்தத்துல முடியணும்” என்று அவன் அடுக்கிகொண்டே செல்ல “போதும் போதும் எப்போ பார்த்தாலும் அதை சொல்லியே என் வாயை மூடறீங்க”
“நானா வாயை மூடினேன். என் வாயை மூடினதே நீ தானேம்மா” என்று அவன் சொல்ல அவள் முகத்தை மூடிக்கொண்டாள்.
“விஷ்வா ப்ளீஸ் போதும், அதே சொல்லாதீங்க. ஏதோ தெரியாம செஞ்சிட்டேன்”
“ம்ஹும் தெரிஞ்சே தான் செஞ்சே, நான் மித்ரன் இல்லை விஷ்வான்னு தெரிஞ்சே தானே செஞ்சே”
“அச்சோ விஷ்வா போதும்” என்றவளின் முகம் நாணத்தை பூசிக்கொண்டது.
“சரி நிறுத்திக்கறேன், ஆனா இப்போ நீ… எனக்கு… மறுபடியும்”
“நான் கீழே போறேன்” என்று சொன்னவள் எழாமலே அமர்ந்திருந்தாள்.
அதற்கு மேல் அவளை சோதிக்காமல் “சரி போகலாம் வா” என்றவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

Advertisement