Advertisement

40
காற்று கூட இருவருக்கும் இடையில் புக முயலவில்லை. சட்டென்று நிலவை மேகம் மறைத்தது. ஆழ்ந்த இருள் பரவத் தொடங்கியதை கூட இருவரும் உணரவில்லை.
எங்கோ தொலைவில் மண்வாசம் வீசியது. சில நொடிகளில் மழைத்துளி இவர்கள் மேலும் தெறித்திருக்க இருவரும் விலகினர்.
“மழை வரும் போல வா கீழே போகலாம்”
“இல்லை மழை பெய்யாது இங்கவே இருக்கலாம்…”
“இங்க பாரு சாரல் அடிக்கிது”
“மேல பாருங்க மேகம் விலகுது, காத்தும் வீசுது… காத்தடிச்சா மழை இருக்காதுங்க…”
“பிடிவாதம் பிடிப்பியே…”
“சரி என்னைப்பத்தி நான் சொன்னேன். உங்க கதை என்னன்னு சொல்லுங்க…” என்றவள் அங்கேயே கீழே அமர்ந்துக் கொள்ள விஸ்வாவும் அவளருகே அமர்ந்துக் கொண்டான் அவள் கையை எடுத்து தன் கைக்குள் பினைத்தவாறே.

அதில் அவள் சற்று நெளிந்துக் கொண்டிருக்க “என்ன சொல்லணும்??” என்றான் விஸ்வா புன்னகையை மென்றவனாய்.
“முதல்ல இதை சொல்லுங்க. அத்தை சொன்னாங்க வேலு மாமாவோட பேரு தான் உங்க சர்டிபிகேட்ஸ்ல எல்லாம் இருந்துச்சுன்னு, நீங்க அதெல்லாம் முன்னாடியே பார்த்ததில்லையா”
“பார்த்திருக்கேன்”
“அப்போ உங்களுக்கு டவுட் எதுவும் வரலையா??”
“வரலை”
“எப்படி?? எனக்கு புரியலை??”
“அப்பாவோட பேருக்கு நேரா எஸ் வேலுன்னு இருந்துச்சு” என்றுவிட்டு அவன் நிறுத்த அவளுக்கு கொஞ்சம் புரிந்தது.
“அப்போ மாமாவோட பேரு…” என்று அவள் இழுக்க “சக்திவேல்” என்று முடித்தான் அவன்.
“அங்கவே நான் ஏமாற்றப்பட்டு இருக்கேன்ல. அந்த வயசுல எனக்கு அது புரியலை, வளர்ந்த பிறகும் அது செந்தில்வேல்ன்னு தான் நினைச்சேன். இதெல்லாம் இப்போ நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள்” என்றான் அவன்.
“சரி அதை விடுங்க” என்றவள் “மித்ரன் யாருன்னு சொல்லுங்க??” என்றிருந்தாள்.
“மித்ரன் யாரு??” என்றான் அவனும் அசராமல்.
“வேணாம்”
“என்ன வேணாம்??”
“ப்ளீஸ் விஷ்வா சொல்லுங்க”
“எதைப்பத்தி காஞ்ச்சு சொல்லணும்??”
“நீங்க இவ்வளோ நாள் எங்க இருந்தீங்கன்னு சொல்லுங்க?? மித்ரன்னு சொல்லி ஏன் என்கிட்ட விளையாடுனீங்க??”
“நானா நான் எப்போ உன்கிட்ட விளையாடினேன்?? உன்னை பார்க்கணும்ன்னு தோணினதுமே நான் வந்து நின்னுட்டேன்ல”
“அப்போ அது நீங்க இல்லைன்னு சொல்றீங்க அப்படித்தானே??”
“உன் முன்னாடி நான் நிக்கறேன் இது தான் நிஜம், இது தான் நான்…”
“விஷ்வா ப்ளீஸ்”
அவன் உதட்டை பிதுக்கினான். அவள் சட்டென்று அவன் முகத்தை தன் புறம் இழுத்து அவன் இதழில் மீண்டும் இதழ் பதித்தாள். சில நொடிகளில் அவளாய் விலகியவள் “நோ அது நிச்சயம் நீங்க தான்… நீங்க பொய் சொல்றீங்க விஷ்வா என்கிட்ட” என்று சொல்ல அவன் வாய்விட்டு சிரித்தான்.
“எங்கே இன்னொரு தரம் முத்தம் கொடு?? இது நல்லாயிருக்கே, இதுக்காகவே சரின்னு சொல்லலாம் போல” என்றான் அவன் விளையாட்டாய்.
“விஷ்வா…” என்று அவனை முறைத்தவள் “போங்க நீங்க வேணுமின்னே பண்றீங்க…” என்றவள் எழப்போக அவள் இடையை பற்றி இழுத்து தன் மடி மேல் சாய்த்துக் கொண்டான்.
அவள் எதுவுமே பேசவில்லை. “காஞ்ச்சு என்னை பாரேன்”
“பாக்க மாட்டேன்”
“சரி ஒத்துக்கறேன் அது நான் தான்…”
அவன் சொன்னதுமே வேகமாய் அவனை விலக்கி அவனிலிருந்து விலகி அவனை பார்த்தாள் கூர்மையாய்.
“எதுக்கு இதெல்லாம்?? ஏன் அப்படி சொன்னீங்க??”
“எப்படி??”
“மறுபடியும் முதல்ல இருந்தா??”
“சரி என்னன்னு நீ தெளிவா கேளு, நானும் தெளிவா உனக்கு பதில் சொல்றேன்”
“என்னை தெரியாத மாதிரி ஏன் நடிச்சீங்க நீங்க??”
“சும்மா உன்னை விஸ்வாவா இல்லாம வேற ஒரு ஆளா தள்ளி நின்னு சைட் அடிக்கணும்ன்னு நினைச்சேன்”
“ஆஹான் எனக்கு ஏற்கனவே காது குத்திட்டாங்க”
“எங்கே பார்க்கலாம்??”
“ஹ்ம்ம்…” என்று முறைத்தாள்.
“சரி சீரியசாவே என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்”
“அதை தானே கேட்டுட்டு இருக்கேன், ஏன் அப்படி பண்ணீங்கன்னு சொல்லுங்க??”
“என்னை நீ எவ்வளோ ஹர்ட் பண்ணியிருப்ப, ஒரு நாலு நாள் உனக்கு கஷ்டமா இருந்துச்சா காஞ்ச்சு”
“நாலு நாள் தான் நான் கஷ்டப்பட்டேன்னு நீங்க நினைக்கறீங்களா விஷ்வா??” என்றவளின் குரலில் வேதனையை இருந்ததை விஸ்வாவும் உணர்ந்தான்.
“அந்த நாலு நாளும் நான் ஏன் உண்மை சொல்லலைன்னு தானே உனக்கு வருத்தம்”
“ஆமா”
“அப்போ அந்த நாலு நாள் தானே நீ கஷ்டப்பட்டே??”
“ஏன் விஷ்வா உங்களை கஷ்டப்படுத்தும் போதெல்லாம் நானென்ன சந்தோசமாவா இருந்தேன். எனக்கது வேதனையில்லையா?? வலியில்லையா?? விரும்பினவரை காயப்படுத்தறோம்ன்னு நான் நினைச்சதில்லையா??”
“காஞ்ச்சு உன் பக்கமே பேசறியே என்னை யோசிச்சியா?? எனக்கு எந்த உண்மையுமே தெரியாது, நீ யாருங்கறது உட்பட எனக்கு எதுவும் தெரியாது. ஆனா உனக்கு எல்லாம் தெரியும், என்னோட கவலையும் உன்னோட கவலையும் எப்படி ஒண்ணாக முடியும் சொல்லு”
“அப்போ எனக்கு வருத்தமே இல்லைன்னு சொல்றீங்க அப்படித்தானே” என்று முறுக்கிக் கொண்டாள்.
“நான் அப்படி சொல்லலை. நாம இப்போ மும்பைல நடந்ததை பத்தி மட்டும் தான் பேசறோம். அதுக்கான விளக்கத்தை நான் சொல்லணுமா?? வேணாமா??”
“சொல்லுங்க”
“நீ அங்க இருந்த நாட்கள்ல நான் விஷ்வா இல்லைன்னு சொன்னதுக்கே உனக்கு இவ்வளவு கோபம் வருது. ரெண்டு வருஷமா நீ யாரு?? எதுக்கு வந்தே?? எதுக்கு என்னை ஏமாத்தினே?? எதுவுமே தெரியாம எனக்கு எவ்வளவு பைத்தியம் பிடிச்சிருக்கும்ன்னு யோசிச்சியா நீ??”
காஞ்சனாவிடமிருந்து பதிலே இல்லை. முகம் வாடிப் போனது அவளுக்கு. அவன் சொல்வதும் நிஜம் தானே, அவனுக்கு எப்படி இருந்திருக்கும், தானும் ஒன்றும் சுகமாய் இருந்திருக்கவில்லை தான். 
“என் பொண்டாட்டியை பக்கத்துல வைச்சுட்டு யாரோ போல பார்க்கறது எனக்கும் ஒண்ணும் ஈசியா இருக்கலை. என்னால ஒரு நாலு நாள் சமாளிக்க முடியலைங்கறதை ஏத்துக்கவே முடியலை”
“ஒரு வருஷம் பார்க்காம இருந்த எனக்கு, நீ அங்க இருந்தா நாட்கள் சொர்க்கமா இருந்தாலும் உன் பக்கத்துலவே இருக்க முடியாதது நரகம் தான்” 
“எல்லாரையும் பார்க்கறதுக்கு முன்னாடி உன்னை பார்க்கணும்ன்னு தான் அங்க வரவைச்சேன். யாரோ மாதிரி வேணுமின்னே தான் நடிச்சேன், ரெண்டு வருஷத்துக்கு ஈடா அந்த நாட்களை எனக்கான நாளா ஆக்கிகிட்டேன்”
அவள் முகம் எந்த பாவமும் காட்டவில்லை. வருத்தப்படுகிறாள் என்று அவனுக்கு புரிந்தது, தான் பழிவாங்கியதாகத் தான் அவளுக்கு தோன்றும். “காஞ்ச்சு” என்றான் தலைதாழ்ந்திருந்த அவள் முகம் நிமிர்த்தி.
“உன்கிட்ட யாரோ போல நடந்துக்கிட்டேன்னு கோபமா??”
“உங்க மேல கோவப்பட எனக்கென்ன தகுதி இருக்கு” என்றாள் உணர்வுகள் தொலைத்த முகத்துடன்.
“எங்க என் கண்ணைப் பார்த்து சொல்லு”. கலங்கிய விழிகளுடன் அவன் கண்களை நோக்கினாள். 
“எதுக்கு அழறே??”
“அப்போ நான் என்ன செய்யணும்ன்னு எதிர்பார்க்கறீங்க??”
“சொல்லவா??”
அவள் அமைதியாய் இருந்தாள். “சரி நானே சொல்றேன், அன்னைக்கு மாதிரி, கொஞ்சம் முன்னாடி கொடுத்த மாதிரி கொடு…”
“நான் அந்த மனநிலையில இல்லை…”
“சரி விடு… ஓகே நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். உன்னை பழிவாங்கினதா நினைக்காத, அப்படி செய்யணும்ன்னா அதை நான் எப்பவோ செஞ்சிருக்கலாம்”
“என்னவோ உங்க எல்லாரையும் விட்டு கொஞ்ச நாள் போகணும்ன்னு தோணிச்சு. ஏன்னா என்னோட ஏமாற்றம் அப்படி, உங்களை எல்லாம் பார்த்தா அது எனக்கு நினைவு வந்திட்டே இருக்கும்ன்னு தான் யாரையும் பார்க்கவே வேணாம்ன்னு போனேன்”
“இன்னும் ஆறேழு மாசம் கழிச்சு தான் ஊருக்கு வரணும்ன்னு நினைச்சேன். எல்லாத்தையும் நீ தான் கெடுத்துவிட்டுட்ட!! ப்பா!! என் உயிரையே மொத்தமா உன்னோட எடுத்திட்டு போய்ட்ட அந்த முத்தத்தால. சத்தியமா நீ அன்னைக்கு அப்படி செய்வேன்னு நான் நினைக்கவே இல்லை…”
“முதல் நாள் எனக்கு பிடிச்ச கலர்ல சாரி கட்டிட்டு நெத்தியில குங்குமம் வைச்சு எப்படி இருந்துச்சு தெரியுமா. என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை. வேணுமின்னே உன்னை இரிட்டேட் பண்ணேன்”
“அது உன்னை வெறுப்பேத்த இல்லை, என்னை கண்ட்ரோல் பண்ணிக்கத்தான். ஆனாலும் ரொம்ப பிடிவாதமா அப்படி இருந்தேன். என்னோட பிடிவாதத்தை நீ சில நொடியில உடைச்சிட்டே நீ”
“நீ ஊருக்கு கிளம்பின அந்த கடைசி நாள் என்னை எவ்வளவு மிஸ் பண்றே, நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன்னு என்னை உணர வைச்ச அழகான தருணம் என்னை இம்சை பண்ணிட்டே இருந்துச்சு”
“உடனே கிட்டத்தட்ட உன் பின்னாடியே நான் கிளம்பி வந்திட்டேன்னு தான் சொல்லணும்” என்று அவன் சொல்ல அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அவனிடமிருந்து விலகி “அப்போ உங்க பேரை ஏன் மாத்துனீங்க??”
“அது பெரிய பாட்ஷா பாய் கதை”
“என்ன கதை??”
“அங்க போய் எல்லாரும் விஸ்வா கூப்பிட்டா எனக்கு இங்க ஞாபகமே வரும்ன்னு நான் தான் பேரை மாத்திக்கிட்டேன். ஆனா எப்போ மாத்தினேன்னு நீ இப்போ கேட்கணும்”
“எப்போ மாத்துனீங்க??”
“எனக்கு விஜய் விஜய்ன்னு ஒரு பிரண்டு, பாம்பேல அவன் பெரிய டான்…” என்று அவன் கதை சொல்வது போல ஆரம்பிக்க இவள் முறைத்தாள்.
“சரி சரி அவன் டான் இல்லை போதுமா… அவன் பேரு விஜய் மித்ரன். எப்படி பாட்ஷா படத்துல ரஜினி சார் அவரோட பிரண்ட் பேரை தன்னோட பேரோட சேர்த்து வைச்சுகிட்டாரோ அதே மாதிரி நானும் அவன் பேரை என் பேரோட சேர்த்து வைச்சுக்கிட்டேன்”
“எதுக்காம்??”
“எல்லாம் ஒரு பிரியம் தான்…”
“ஆஹான் அப்புறம்”
“அப்புறம் இல்லைம்மா அந்த பேரென்னன்னு தான் நீ இப்போ கேட்டிருக்கணும்”
“அதான் எனக்கு தெரியுமே…”
“முழுபேரு தெரியாதுல. மித்ரன் விஷ்வாமித்ரன் அப்படின்னு நானே பேரு வைச்சுக்கிட்டேன்”
“இவரு பெரிய விஷ்வாமித்திர முனிவரு பேரு வைச்சுக்கிட்டாராம் பேரு… இதெல்லாம் ஒரு பிளாஷ்பேக்கா??”
“ஆமா முனிவரா இருந்த என்னை இந்த மேனகை வந்து மயக்கினதுல அவ ஊருக்கு கிளம்பின உடனே அவ பின்னாடியே நானும் கிளம்பிட்டனே அவ அழகுல மயங்கி. என்னோட தவத்தை கலைச்சுட்டு வந்து என்னை பார்க்க ஏர்போர்ட் கூட வராம இருந்துகிட்டாங்க இந்த மேனகை”
“அது நீங்க எனக்கு போன் பண்ணி வரச் சொன்னீங்களா என்ன??”
“ஓ உங்களுக்கு வெத்தலை பாக்கு வைக்கணுமா??”
“எனக்கு தான் நீங்க முதல்ல போன் பண்ணி சொல்லி இருக்கணும்”
“உண்மை தான் உனக்கு தான் சொல்லியிருக்கணும், நீ என்ன மனநிலையில இருக்கேன்னு எனக்கு தெரியாது. மும்பையில என்னை பார்த்துட்டு உன்னோட ரியாக்சன் எப்படி இருந்ததுன்னு உன் பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்…”
“ஏர்போர்ட்ல எதுவும் ரசாபாசம் ஆகிடக்கூடாதுன்னு தான் உனக்கு கூப்பிடலை…”
“நம்புற மாதிரி வேற காரணம் சொல்லுங்க” என்றாள்.
“நான் சொன்னது உண்மை தான், ஆனா அது மட்டுமே காரணமில்லை. உன்னை தனியா இங்க விட்டு போயிருக்கேன். நீ உங்க வீட்டில இருக்கேன்னு தெரியும்”
“நானா வந்து அழைச்சிட்டு போனா தானே நல்லாயிருக்கும். சோ அதுக்காக தான் அப்படி செஞ்சேன். உனக்கு நான் போன் பண்ணாததுக்கு காரணம் முதல்ல சொன்னது தான்…”
“உன்னோட மனநிலை புரியாம உன்னை கோபப்படுத்த விரும்பலை. மும்பைல நான் மித்ரன்னு திரும்ப திரும்ப சொன்னாலும் நீ ஒரு முறை கூட அதை நம்பலைன்னு எனக்கு நல்லாவே தெரியும்”
“இதுக்கெல்லாம் ஒரு விளக்கமும் உனக்கு சொல்லாம உன்னை ஏர்போர்ட் வரச்சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பே சொல்லு”
“தெரியலை. ஆனா நிச்சயமா நல்லவிதமா பண்ணியிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்” என்றாள் மனதை ஒளியாமல்.
“எனக்கும் அது தான் யோசனை, நீ அதை சாதாரணமாவும் எடுத்துக்கலாம், இல்லை பெரிசா ரியாக்ட் பண்ணவும் செய்யலாம். அதான் வேற எந்த ரீசனும் இல்லை”
“ஆனா நான் உன்னைத் தேடி வீட்டுக்கு வந்த பிறகு நீ ஏன் என்னைப் பார்க்க வரலை??”
“எப்படி வர்றதாம்??”
“இதென்ன கேள்வி??”
“மத்த எல்லாரையும் பொறுத்தவரை அவங்க உங்களை ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு தான் பார்க்கறாங்க. நான் உங்களை மும்பையிலவே பார்த்திட்டேன். என்னோட உணர்வுகளை நான் அன்னைக்கே வெளிப்படுத்திட்டேன்”
“எனக்கும் என் மனசுக்கும் உறுதியா தெரியும் நான் மும்பையில பார்த்தது நீங்க தான்னு. இங்க நான் உங்களை பார்த்து எந்த ரியாக்ட்டும் பண்ணலைன்னு எல்லாரும் நினைப்பாங்க”
“உங்களை பார்த்ததை ஏன் சொல்லலைன்னு கேட்பாங்க. எனக்கு அதுக்கெல்லாம் பதில் சொல்ல பிடிக்கலை. அதெல்லாம் அவாய்ட் பண்ணத்தான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன்”
“இப்போ மட்டும் அவங்களுக்கு தெரியலைன்னு நினைக்கறியா??”
“இருக்கலாம் யாரும் என்னை எதுவும் கேட்கலை இதுவரை. இது நம்மோட பெர்சனல்ன்னு அவங்க விட்டிருப்பாங்க” என்றாள்.
“ஆனாலும் இந்த பாட்ஷா பாய் கதை ரொம்ப ஓவர் உங்களுக்கு…”
“ஹா ஹா அது சும்மா சொன்னேன். விஸ்வாங்கற பேரோடவே இருக்க வேணாம்ன்னு நினைச்சேன். புது அடையாளம் வேணும்ன்னு தான் மித்ரன்னு வைச்சுக்கிட்டேன்”
“நீங்க விஜய்க்கு எவ்வளவு நாளா பிரண்டு??”
“நான் டிசைனிங் படிக்க வரும் போதுல இருந்தே நாங்க பிரண்ட்ஸ் தான்”
“அப்போ அவங்க வீட்டில இருக்கவங்களுக்கு தெரியாதா??”

Advertisement