Advertisement

4
“ஐ லவ் யூ காஞ்ச்சு” என்ற அவனின் குரல் இன்னமும் அவளுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
‘இவன் இன்னும் என்னை மறக்கலையா’ என்று தான் தோன்றியது அவளுக்கு.
‘போன்ல இவ்வளவு திமிரா பேசறான்னா என்னவோ இருக்கே… ஏதோ தப்பா இருக்கே, என்னவா இருக்கும்” என்று காஞ்சனா யோசனையில் இருக்க அங்கு அமுதன் வந்து சேர்ந்தான்.
“மாலு நீ அனுப்பின டிசைன்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு. நெறைய ஆர்டர்ஸ் வந்திருக்கு, என்னைக்கு சேல்ஸ்ன்னு அனவுன்ஸ் பண்ணணும்ல”
“வெயிட் பண்ணு சொல்றேன்”
“என்ன இருந்தாலும் அத்தான் வரையறதுக்கான மவுசே தனி தான்…”
“மரியாதையா எழுந்து ஓடிரு இங்க இருந்து. யாருடா உனக்கு அத்தான்…”
“விஸ்வா அத்தான்…”
“மண்டையை பிளந்திருவேன்”
“உனக்கு அத்தான்னு சொல்றது பிடிக்கலைன்னா மாமான்னு வேணா கூப்பிடவா” என்று சொல்லி காஞ்சனமாலாவை இன்னமும் வெறுப்பேற்றினான் அவளின் உடன்பிறப்பான அமுதன்.
“அமுதா போதும் இதுக்கு மேல எது பேசினாலும் ஆட்டுக்கல்லை தூக்கி உன் மேல போட்டிருவேன்” என்று கத்தினாள் அவள்.
“ஓகே பேசலை. ஆனா எதுக்கு இதெல்லாம், நம்ம வேலையை நாம பார்ப்போமே. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை” என்றான் விளையாட்டை விட்டு வெகு சீரியசான குரலில்.
“உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது அமுதா…”
“இப்படி சொல்லி சொல்லியே தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்க… போதும் மாலு இதோட நிறுத்திக்குவோம்… உனக்கு ஒரு நல்லது பண்ணிப்பார்க்கணும்ன்னு பாட்டி ரொம்ப கவலைப்படுறாங்க”
“எனக்கு நீ பண்ணுறது எல்லாம் பார்த்து பயமா இருக்கு. இதெல்லாம் எங்க கொண்டு போய் விடுமோன்னு…” என்று அவளின் தம்பியாய் அக்காவிற்காய் பரிதவித்தான் அவன்.
அவனின் பாசம் புரிந்தாலும் அவளால் இதில் இருந்து வெளியே வர முடியாது. அதை அவள் விரும்பவும் இல்லை. 
ஆழம் தெரிந்தே தான் உள்ளே காலை விட்டிருக்கிறாள் ஒன்று அவர்களை உள்ளே தள்ளி இவள் மேலேறி வரவேண்டும் இல்லை புதைக்குழிக்குள் சிக்க வேண்டும். இரண்டில் ஒன்று தான் நடக்கும்.
“மாலு என்ன பேசாம இருக்கே??”
“ஒண்ணுமில்லை…”
“நான் ஒண்ணு சொல்லவா…” என்று அவளைப்பார்த்தான்.
‘சொல்லு’ என்பதாய் அவளும் பார்க்க “உனக்கு மாமாவை பிடிச்சிருந்தா…” என்று அவன் முடிக்குமுன்னே கையில் இருந்த நோட்டை அவன் மேலே தூக்கியெறிந்தாள்.
“ஸ்ஸ்…” என்றிருந்தான் அவன். அவள் வீசிய நோட்டு அவன் நெற்றியில் இடித்து லேசாய் புடைக்க ஆரம்பித்திருந்தது.
“பேசாம எழுந்து போயிரு” என்று கத்தினாள் அவள்.
அவன் எழுந்து வெளியே செல்லப் போனவன் பின் திரும்பி “அவர் வேணாம்ன்னா விடு. உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கறோம். இந்த வருஷம் கண்டிப்பா உனக்கு கல்யாணம் பண்றோம்”
“எனக்கு வெறி ஏத்தாத அமுதா…” என்று இன்னும் எகிறினாள் அவள்.
“அதே தான் நானும் உனக்கு சொல்றேன். எனக்கு கோவம் வரவைக்காதே. அக்காவாச்சேன்னு தான் நானும் அமைதியா இருக்கேன்”
“உனக்கு ஒரு நல்லது கெட்டதுன்னா நான் தானே பார்க்கணும்”
“நான் யாரையும் நம்பி இல்லை…” என்றாள் வெடுக்கென்று. 
“ஓ!! உனக்கு யாரும் வேணாமா அப்போ… சரி இதையும் கேட்டுக்கோ உனக்கு பழிவாங்குறது தான் வெறின்னா இனிமே நான் உன்கூட கூட்டு சேர மாட்டேன். என்னை விட்டிரு, எனக்கு எந்த பாவமும் வேணாம்”
“அவங்கவங்க செஞ்ச பாவத்துக்கு அவங்களுக்கு தானா தண்டனை கிடைக்கும். நாம யாரு தண்டனை கொடுக்க, நாம ஒண்ணும் கடவுள் இல்லை…”
“அமுதா இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும் மரியாதை கெட்டிரும்…” என்றவள் வீடே அதிர “பாட்டி” என்று கத்தினாள்.
ஏற்கனவே சத்தம் கேட்டு அவர் உள்ளறையில் இருந்து அங்கு தான் வந்துக் கொண்டிருந்தார். அக்காவும் தம்பியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தை கேட்டவர் இடையில் வராமல் அங்கேயே நின்று கேட்டுக் கொண்டிருந்தவர் இப்போது இருவருக்கும் இடையில் வந்து நின்றிருந்தார்.
“பாட்டி இவன் ரொம்ப பேசறான்…”
“கேட்டுட்டு தான் இருந்தேன். தம்பி தப்பா ஒண்ணும் சொல்லலையே…” என்றார் அவர் அமைதியாக.
“பாட்டி நீங்க கூட இப்படி பேசலாமா… உங்களுக்கு தெரியும்ல என்ன நடந்துச்சுன்னு”
“அதனால தான் நானும் சொல்றேன். இதெல்லாம் வேண்டாம்டா தங்கம் உனக்கு…” என்று சொல்லும் போது அவர் கண்கள் கலங்கியது.
“தம்பி உன் நல்லதுக்கு தானே பேசறான்” என்றவர் “ஏன்யா இங்க வாய்யா…” என்று அமுதனை அழைத்தார்.
அவன் நெற்றியை பிடித்துக் கொண்டே வர “என்னாச்சுய்யா” என்று அவர் பதறியதில் காஞ்சனா வேகமாய் தம்பியை நெருங்கினாள்.
“அய்யோ அமுதா சாரிடா சாரிடா… ப்ளீஸ் சாரிடா அமுதா”
“உன் சாரி ஒண்ணும் எனக்கு வேணாம்”
“வேற என்ன பண்ணணும் நானு சொல்லுடா…” என்றாள் கலங்கிய விழிகளுடன்.
“இந்த வருஷம் உனக்கு கல்யாணம் பண்ணணும்ன்னு நானும் பாட்டியும் நினைச்சிருக்கோம்… அதுக்கு நீ ஒத்துக்கணும்…”
“ஒத்துக்கலைன்னா??”
“எங்களை விட்டிரு, நான் பாட்டியை கூட்டிட்டு எங்கயாச்சும் போய்டறேன்…”
“அமுதா!!” என்றாள் அதிர்ச்சியாய்.
“பாட்டி…” என்று அவரிடம் திரும்ப “எனக்கும் அமுதன் சொல்றது தான் சரின்னு படுது தங்கம் நீ சரின்னு சொல்லேன். எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கலாம்டா…”
கண்ணை மூடி நிதானித்தாள் அவள். ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவள் தலையை உலுக்கிக்கொண்டு கண்ணை திறந்தவள் “சரி…”
“தேங்க்ஸ் மாலு. பாட்டி நாம மாலுக்கு உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடலாம்…” என்றான் அமுதன் குதூகல குரலில்.
“அமுதா கல்யாணத்துல எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு” என்று நிறுத்தினாள் அவள்.
‘அதானே பார்த்தேன் உடனே சரின்னு சொல்லிட்டாளேன்னு சந்தோசப்பட்டேன். இந்தா என்னவோ ஆப்பு ரெடியா வைச்சிருக்கா போலவே’ என்று எண்ணிக்கொண்டு தன் தமக்கையை பார்த்தான்.
“நான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். வேற யாரையும் பண்ணிக்க மாட்டேன். அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலைன்னா அதுக்கு மேல என் கல்யாணத்தை பத்தி யாருமே பேசக்கூடாது”
“எனக்கு கல்யாணம் நடக்கணும்ன்னு நீங்க நினைச்சீங்கன்னா அவரை சம்மதிக்க வைங்க…” என்று எங்கோ பார்த்து சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அவள் அப்புறம் சென்றதும் பாட்டியின் தோள் மீது வசதியாய் கை வைத்துக் கொண்ட அமுதன் “பார்த்தியா பாட்டி உன் பேத்தியை அத்தான் மேல எம்புட்டு ஆசைன்னு”
“அவளுக்கு ஆசை இருக்கோ இல்லையோ. அவ ரொம்ப விவரமா தான் இதை சொல்லிட்டு போயிருக்கா”
“என்ன சொல்றீங்க பாட்டி??”
“விஸ்வா இவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான்னு நினைக்கறியா நீ??”
“ஏன் பாட்டி நீங்களே நம்பிக்கை இல்லாம பேசறீங்க??”
“எனக்கும் ஆசையா தான் இருக்கு, இவங்க கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு. ஆனா இவபண்ணதை எல்லாம் மீறி அவன் கல்யாணம் பண்ணிப்பானான்னு யோசிச்சு பாருய்யா…” என்றார் பெருங்கவலையுடன்.
எதையோ யோசித்தவன் “எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கும் பாட்டி. அவர் நிச்சயம் மாலுவை கல்யாணம் பண்ணிக்குவார்…”
“அந்த கடவுள் தான் அதுக்கு அருள் புரியணும்” என்று வேண்டிக் கொண்டவர் தன் பேரனின் நெற்றியில் புடைத்திருந்த இடத்தை பார்த்து அதற்கு மருந்திட்டு சென்றார்.
———————–
கன்னியாகுமரி மாவட்டத்தின் செய்தித்தாளில் விகே தங்க மாளிகையின் புது விளம்பரம் வந்திருந்தது. அதுவும் முதல் பக்கத்திலேயே.
ஒரு பக்கம் முழுதும் புது டிசைன்கள் விளம்பரமும் உள்ளே அவன் அந்த மீனவரின் மகளுக்காய் செய்திருந்த டிசைன் நகை வடிவம் பெற்று அவர் மகளின் கையில் அதை விஸ்வா கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வந்திருந்தது.
மற்ற செய்தித்தாளிலும் அவர்களின் விளம்பரம் இடம்பெற்றிருந்தது. விஸ்வா அதை போட்டோ எடுத்து காஞ்சனாவிற்கு அனுப்பி வைத்து சில நிமிடங்களுக்கு பின் அவளுக்கு அழைப்பும் விடுத்தான்.
எடுக்கும் போதே “என்ன??” என்று கேட்டு வள்ளென்று தான் விழுந்தாள் அவள்.
விளம்பரத்தை பார்த்திருப்பாள் போலும் என்று மகிழ்ந்தவன் குரலில் அப்பட்டமாய் மகிழ்ச்சி தெரிந்தது.
“என்ன மேடம் போட்டோஸ் பார்த்திட்டீங்க போல”
“உனக்கு இப்போ என்ன வேணும்??”
“உன்னோட நிம்மதி…”
“அது எப்பவும் என்கிட்ட இருந்ததில்லை” என்றாள் புரியாத குரலில்.
அவள் குரலில் ஏதோ பேதமிருந்ததாய் தோன்றியது அவனுக்கு. ‘ஏன் இப்படி பேசறா’ என்றும் உள்ளிருந்த அவன் காதல் மனது துடிக்கத்தான் செய்தது அவளிற்காய்.
நடந்ததெல்லாம் ஒரு நொடியில் கண்முன் வந்து போக ‘ஒரு துரோகிக்கு நாம் ஏன் பரிதாபப்பட வேண்டும்’ என்று எண்ணி அவளை மேலும் வெறுப்பேற்றி பேசினான்.
“என்ன மேடம் நீங்க கூட ரொம்ப பீலிங்க்ஸா எல்லாம் பேசறீங்க??”
“நீ எதுக்கு இப்போ எனக்கு போன் பண்ணே?? நீ ஜெயிச்சுட்டேன்னு சொல்லவா, சொல்லிட்டல்ல போனை வை…” என்றாள் அவள் திமிராய்.
“ஹலோ… ஹலோ… என்ன ரொம்ப ஓவரா பண்ணுறே… ஆமாடி நான் ஜெயிச்சுட்டேன் உன்னை நான் ஜெயிச்சுட்டேன், அதுல எனக்கு அளவில்லாத சந்தோசம் தான் போதுமா”
“ரொம்பவும் மகிழ்ந்து அப்படியே மேல பறக்காத, சீக்கிரமே கீழ விழுந்திடுவே…” என்றாள் எக்காளமாய்.
“ஒரு முறை விழுந்து எழுந்தவனுக்கு மறுபடியும் விழுந்தா எப்படி எழணும்ன்னு தெரியும்…” என்றான் அவனும் விடாமல்.
“ஆணவம்”
“எனக்கது இல்லை…”
“ரொம்ப சந்தோசம், நான் போனை வைக்கறேன்…”
“உனக்கு போன் பண்ணது நானு, நீ வைச்சுட்டா நான் விட்டிருவேனா… உன்கிட்ட பேசத்தானே போன் பண்ணேன்…”
“என்னோட வெற்றி உனக்கு ரொம்ப வருத்தம் போல…”
“நிச்சயமா வருத்தமில்லை. சந்தோசம் தான்” என்றவள் அதை நக்கலாய் சொல்லியிருப்பாள் என்று பார்த்தால் அவள் சொல்லிய விதம் அதை மனதார சொல்லியது போலவே அவனுக்கு தோன்றியது.
அவன் இப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவள் குரலில் மீண்டுமொரு பேதம் “அடுத்த அடி வாங்க ரெடியா இரு…” என்று.
‘இவளாச்சும் நல்லதா நினைக்கிறதாச்சும்’ என்று எண்ண “அதுக்கு முன்னாடி உனக்கொரு பரிசு தர்றேன்னு சொன்னேன்ல, அது இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு வந்து சேரும்” என்று அவன் இங்கு சொல்லிக் கொண்டிருந்த வினாடி அவளைத் தேடி ஒருவர் வந்திருப்பதாய் அவள் பாட்டி வந்து சொன்னார்.
“இதோ வந்திருச்சு போய் வாங்கிக்கோ உன் பரிசை, நான் போனை வைக்குறேன்” என்றான் அவன்.
“விஷ்வா ஒரு நிமிசம்…”
“என்ன??”
“நான் உனக்கொரு பரிசு தர்றேன்னு சொன்னேன்ல அது என்னன்னு கேட்காம நீ போறேங்கறே…”
“லைன்லவே இரு நீ அனுப்பின பரிசு என்னன்னு பார்த்திட்டு அப்புறம் உன் பரிசைப்பத்தி நான் சொல்றேன்…” என்றவள் அவள் வீட்டின் வரவேற்பறை செல்ல அங்கு நின்றிருந்த ஒருவர் இவளிடம் ஒரு சிறு அட்டைப்பெட்டியை நீட்டினார்.
“கையெழுத்து போடணுமா??” என்று இவள் கேட்க “தேவையில்லை மேடம், சார் சொல்லி தான் நான் வந்தேன். உங்க பொருளை உங்ககிட்ட சேர்த்திட்டேன். நீங்க சார்கிட்ட நன்றி சொல்லிடுங்க” என்று சொல்லி அவர் சென்றுவிட்டார்.
“என்ன காஞ்ச்சு பிரிச்சுட்டியா??”
“இதோ பார்த்திட்டு இருக்கேன்…” என்றவள் அதை பிரிக்க உள்ளிருந்ததை கண்டு கொஞ்சம் அதிர்ச்சி தான் அவளுக்கு. ‘எப்படி இதை கண்டுக்கொண்டான் என்று’
“உன் மௌனமே சொல்லுது, நீ பாக்சை பிரிச்சுட்டேன்னு… அது என்னன்னு தெரியுதா”
“நான் அனுப்பினது தானே எனக்கெப்படி தெரியாம இருக்கும்” என்றாள் அவளும் விடாமல்.
“நீ தான் செஞ்சேன்னு ஒத்துக்கறே அப்படித்தானே…”
“இதுக்கு முன்னாடி உன்னோட டிசைன்ஸ் உனக்கே தெரியாம பேடன்ட் வாங்கி அந்த டிசைன்ஸ் வித்தவளுக்கு தெரியாதா இது என்னன்னு…” என்று அவன் தோல்வியை குத்திக்காட்ட அவன் வெகுண்டெழுந்தான்.
“உன்னை நேர்ல பார்த்தேன் அன்னைக்கு நீ செத்தடி. உன்னை சும்மாவிட்டது என்னோட தப்பு தான். எவ்வளவு அகங்காரம் உனக்கு. என்கிட்டயே என்ன தைரியமா பேசறே” என்று பல்லைக்கடித்தான்.
“நீ முட்டாளா இருந்தா அதுக்கு நான் என்ன செய்ய முடியும் விஷ்வா. நான் உண்மையை ஒத்துக்க எப்பவும் தயங்கினதே இல்லை…”
“எங்க அதை வந்து நீ போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லு…”
“நான் சொல்ல ரெடி, நீ ஏமாந்த கதையை அங்க ஒப்புக்க நீ ரெடியா…” என்று திருப்ப அவனுக்கு மேலும் அவமானமாகிப் போனது.
“ஏன்டி என் வாழ்க்கையில வந்தே?? ஏன் இப்படி என் நிம்மதியை குலைக்குறே?? நான் உனக்கு என்னடி பாவம் செஞ்சேன், என்னைப் போட்டு இப்படி வதைக்கிறே??” என்று கத்தினான் மறுமுனையில்.
“வினை விதைத்தவன் வினையறுப்பான்…” முணுமுணுத்தாள்.
“யாரைச் சொல்றே??”
“ஒண்ணுமில்லை…”
“இல்லை நீ என்னவோ சொன்னே??”
“அதை விடு… நான் உனக்கு பரிசு தரேன்னு சொன்னேன்ல இப்போ அந்த விஷயத்துக்கு வருவோம்…” என்றவள் சற்று இடைவெளிவிட்டாள்.
“உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா??”
“என்ன??” என்றான் அவன் சிடுசிடுப்பாய்.
“உன்னோட அப்பா பேரு செந்தில்வேல் இல்லை…”
“ஏய்!!” என்று அவன் கத்த இவள் போனை வைத்துவிட்டாள்.
அப்போது அங்கு வந்த அமுதன் “என்ன மாலு புது டிசைனா, நீயே வாங்கிட்டு வந்திட்டியா” என்று அவள் கையில் இருந்த செயினை வாங்கினான்.
“அழகா இருக்கு நான் போட்டுக்கட்டுமா…” என்று கேட்க அவனை முறைத்தாள் அவள்.
“கொடுக்க முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லு, அதுக்கு எதுக்கு முறைக்கிறே…” என்று நகர்ந்துவிட்டான் அவன்.
அவள் கையில் இருந்த அந்த செயினையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது அவனுக்காய் அவள் பிரத்யேகமாய் தயார் செய்தது.
பின்னே கழுத்தை ஒட்டி போடும் அந்த செயினில் டாலர் ஒன்றையும் வைத்து அதில் சிறு கேமரா ஒன்றையும் வைத்திருந்தாளே.
அவனுடன் பழகிய காலத்தில் அவனுக்கு டாலர் வைத்த செயின் போடப்பிடிக்காது என்று அவன் சொல்லியதால் அந்த செயினை மட்டும் அவனுக்கு அணிவித்திருந்தாள். 
பின்னொரு நாளில் அந்த சாமி டாலரை அவன் அன்னை கைப்படவே அந்த செயினில் சேர்த்த பெருமை அவளையே சேரும்.
அவன் எப்போதும் போர்டில் தான் படம் வரைவான் என்றறிந்தவள் செய்த வேலை தான் அது. அவன் கழுத்தில் இருக்கும் டாலர் எதிரில் இருக்கும் எதையும் படம் பிடிக்கும் வல்லது ஆயிற்றே.
அதைக்கொண்டு தான் அவன் வரைந்த டிசைன்ஸ் இப்போது அவளிடம் இருக்கிறது.
“புத்திசாலி தான் கண்டுப்பிடித்து விட்டானே” என்று அவனுக்கு சபாஷ் போட்டுக் கொண்டவள் டாலரை திறக்க அதில் இருந்த மினி சைஸ் கேமரா எடுக்கப்பட்டிருந்தது அங்கு.
பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

Advertisement