Advertisement

39
“உன்னை நான் பேச வேணாம்ன்னு சொன்னேன், ஒரு மனுஷன் உடம்பு சரியில்லாம வந்திருக்காரே, அவரை பார்ப்போமான்னு இருக்கா உனக்கு. உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போறே” என்றார் தெய்வானை.
“ஏன்மா நீங்கலாம் எப்போ பேச ஆரம்பிச்சீங்க. அப்பாக்கு இப்படி ஆனதும் உங்களுக்கு வாய் வருதோ” என்று அவர் பேச செந்தில்வேல் சாப்பிடுவதை விட்டு எழுந்திருந்தார் இன்று ஒரு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் தான் அவருக்கு.
அப்போது அங்கே வந்த கார்த்திக் “சித்தப்பா நீங்க போய் சாப்பிட்டு கடைக்கு கிளம்புங்க. இன்னைக்கு நாங்க கடைக்கு வரமாட்டோம். இங்க கொஞ்ச வேலையிருக்கு” என்றான்.
வெகு நாட்களுக்கு பின்னே சித்தப்பா என்று அழைக்கிறார்களே என்று அவரும் ஆச்சரியமாய் தான் பார்த்தார். பின் ஒன்றும் சொல்லாமல் அவர் இருக்கையில் அமர்ந்தார்.
கனகவேல் சைகை காண்பிக்க தெய்வானை பாட்டி அவர் அருகே சென்றார். அவருக்கு தலையில் அடிப்பட்டிருந்தால் கட்டு போடப்பட்டிருந்தது. வாயை அவரால் அசைக்கக் கூட  முடியவில்லை. உணவே தெய்வானை பாட்டி தான் ஊட்டுவார். கொஞ்ச நாட்கள் பேசாமல் இருக்கச் சொல்லியிருந்தார் மருத்துவர்.
“டேய் கார்த்தி நேத்து இவன் எங்க போயிட்டு வந்தான் தெரியுமாடா??” என்று தன் மகனிடம் குற்றப்பத்திரிகை வாசிக்க தயாரானார் ரத்தினவேல்.
“எல்லாம் தெரியும், அதுக்கு இப்போ என்ன பண்ணனுங்கறீங்க??” என்ற அவனின் அலட்சிய பதிலில் முகத்தை சுருக்கியவர் சரவணனை பார்த்து “இவனுக்கு என்னாச்சு??” என்றார்.
“உங்களுக்கு என்னாச்சு முதல்ல??” என்றான் அவன்.
ரத்தினவேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னடா நடக்குது என்று தன் பிள்ளைகளை பார்த்தார்.
“சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும் இப்போ??”
“என்னங்கடா மாத்தி மாத்தி பேசறீங்க??”
“நாங்க ஒரு மாதிரியும் பேசலை, நாங்க எப்பவும் போலத்தான் இருக்கோம்”
“டேய் உங்களுக்காக தானேடா நான் பேசினேன்”
“அது எதுக்குங்கறேன்?? எங்களுக்காக பேச எங்களுக்கே தெரியும், நீங்க ஒண்ணும் பேச தேவையில்லை”
“இந்த வயசுல உங்களுக்கு எதுக்கு சொத்து ஆசை எல்லாம், எங்களுக்கு என்ன வேணும்ன்னு நாங்க பார்த்துக்கறோம்”
“வயசாகிடுச்சுல பேசாம ஒதுங்கி வீட்டுல இருக்கறதுக்கு என்ன” என்று சரவணன் பேசப்பேச வாயடைத்து போனார் ரத்தினவேல்.
“சரவணா நீ சொல்றது எல்லாம் இவங்களுக்கு புரியாதுடா, கூட பிறந்தவரோட சொத்துக்கு ஆசைப்பட்டவங்க தானே இவங்க எல்லாம்…” என்று கார்த்திக் பேச “உங்களுக்கு எப்போடா ஞானோதயம் வந்துச்சு” என்றார் ரத்தினவேல்.
கனகவேலுவுக்குமே பேரன்களின் பேச்சு புதிராய் தானிருந்தது. இவனுங்க என்ன இன்னைக்கு இவ்வளவு நல்ல மாதிரி எல்லாம் பேசறானுங்க என்ற பார்வை தான் பார்த்தார் அவர்களை.
“உங்க பிள்ளைங்க நாங்க எங்களுக்கு எப்படி அதெல்லாம் வரும். ஏதோ நம்ம சொத்துன்னு அதுல நமக்கு இவ்வளவு வருமா அவ்வளவு வருமா அதை எப்படி செலவு பண்ணலாம் என்ன பண்ணலாம்ன்னு நினைக்கிற சராசரி ஆளுங்க தான் நாங்களும்…”
“ஆனா அடுத்தவங்க சொத்தை நம்ம சொத்தாக்கி அதை உரியவனுக்கு கூட சேர விடாம பண்ணுற அளவுக்கு எல்லாம் நாங்க கெட்டவங்க இல்லை”
“எப்படி உங்களுக்கு மனசு வந்தது, அவனும் இந்த வீட்டில தானே வளர்ந்தான். நீங்க தானே வளர்த்தீங்க, அப்போ நீங்க அப்போல இருந்தே பாகுபாடு பார்த்து தான் வளர்த்திருக்கீங்க”
“நாங்க தான் நீங்க எப்பவும் அவனை உயர்த்தி பேசறீங்கன்னு அவன் மேல பொறாமை பட்டிட்டோம் போல. எங்களைவிட மோசமான நிலைமை அவனது தான். குகன் மாதிரி தானே அவனும் இந்த வீட்டு பையன்”
“உங்க கூட பிறந்த தம்பியோட பேரன் தானே தாத்தா, ஏன்பா உங்க சித்தப்பா பையனோட பிள்ளை தானே அவனும். உங்களுக்கு தான் உங்க தம்பியை பத்தியே கவலையில்லையே”
“நீங்க எங்க?? உங்க சித்தப்பா பிள்ளைக்கு எல்லாம் கவலைப்பட போறீங்க…” என்றான் கார்த்திக்கும் நக்கலான குரலில்.
“உங்க பேச்செல்லாம் வேற மாதிரி இருக்கே?? யார் சொல்லிக் கொடுத்து பேசறீங்க??” என்ற ரத்தினவேல் சகுந்தலாவை பார்த்தார்.
“என்னை எதுக்கு பார்க்கறீங்க நீங்க?? நான் சொல்லிக் கொடுத்து தான் உங்க பிள்ளைங்க பேசணும்ன்னு இல்லை. அவங்க உங்க பிள்ளைங்க உங்களை மாதிரி தான் அவங்களும் பேசுவாங்க…” என்றார் சகுந்தலா ரத்தினவேலை பார்த்து.
தெய்வானை பாட்டி இடைப்புகுந்து “சகுந்தலா நீ அவன்கிட்ட எல்லாம் பேச வேண்டாம்மா, நீயும் செந்திலும் கிளம்புங்க அவங்க என்னவோ பேசிட்டு போகட்டும்” என்று சொல்ல அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் செல்லவும் சரவணன் “சித்தியை எதுக்கு நீங்க பார்த்தீங்க. அவங்க எதுக்கு எங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும், அவங்க சொன்ன மாதிரி நாங்க தான் உங்க பசங்களாச்சே… எங்களுக்கு பேசவா சொல்லிக் கொடுக்கணும்… எங்களுக்கு கண்ணில்லையா நடக்கறதை நாங்களும் பார்க்கறோம் தானே…”
“அடுத்தவங்க குடியை கெடுத்து சொத்து சொத்துன்னு அலையப் போய் தான் எங்களுக்கு வாரிசுங்களே  உருவாகாம போய்டுச்சு போல… நீங்க பண்ண பாவத்தை எங்க மேல இறக்கி வைச்சிட்டீங்க”
“டேய் அதுக்கு காரணம் நீங்க கட்டின பொண்ணுங்க தான். அத்தை பொண்ணுங்களை கட்டப்போய் தான் வாரிசு உருவாகாம போச்சோ என்னவோ இதுக்கு என்னை ஏன்டா பழியாக்குறீங்க” என்று அவர் சொன்னது தான் தாமதம் அங்கயற்கண்ணி பாய்ந்து முன்னே வந்தார்.
“என்னே சொன்னே?? சொல்லு என் பொண்ணுங்களை என்ன சொன்னே?? அவங்க மலடா??”
“நான் எப்போ அப்படிச் சொன்னேன்??”
“அப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?? என் புள்ளைங்களை கட்டிக்க எவ்வளவோ பேரு வந்திருப்பாங்க, நான் எதுக்கு இங்க கட்டிக் கொடுத்தேன். என் அண்ணன் பசங்களாச்சேன்னு தானே கட்டிக் கொடுத்தேன்”
“ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருப்பாங்கன்னு தானே நினைச்சேன். நீயே இப்படி பேசறே??” 
“என்ன எல்லாம் ஒட்டுமொத்தமா நான் தான் தப்புன்னு சொல்ல வர்றீங்களா. திடீர்ன்னு நீங்க எல்லாம் நல்லவங்களா மாறிட்டீங்க அப்படித்தானே…”
“டேய் சரவணா இவர்கிட்ட பேசறது வேஸ்ட் விடு… தாத்தா சரியாகட்டும் அப்புறம் இந்த சொத்தை அவர் என்ன பண்ணப் போறார்ன்னு கேட்டுப்போம்… இவர் இனி வீட்டிலவே இருக்கட்டும், கடை பக்கம் எல்லாம் வந்தா விரட்டிவிட்டிரு” என்றான் கார்த்திக் தன் தம்பியிடம்.
“என்னடா பேசறீங்க?? நீங்க யாரும் எனக்கு வேண்டாம்டா எங்கப்பாகிட்ட சொத்து எப்படி வாங்கணும்ன்னு எனக்கு தெரியும். நீங்க உங்க வேலையை பார்த்திட்டு போங்கடா” என்றார் அப்போதும் ஆங்காரம் தீராமல்.
“சீய் வாயை மூடு. நீயெல்லாம் எப்படித்தான் என் வயித்துல வந்து பிறந்தியோ. உங்கப்பாவுக்கு சொத்து ஆசை உண்டு தான், அடுத்தவன் சொத்தை கூட பிடுங்கி சொத்து சேர்க்கிற அளவுக்கு கூட ஆசை உண்டு தான்”
“ஆனா அடுத்தவன் உயிரை எடுத்து அதை செஞ்சதில்லை” என்று அவர் சொல்லி முடிக்கவும் அப்படியொரு நிசப்தம் அங்கே. ரத்தினவேல் அப்படியே சிலையாய் நின்றுவிட்டார் தன் அன்னையின் பேச்சில்.
“பாட்டி” என்று கார்த்திக் சொல்ல “யாரும் பேசாதீங்கடா. இருக்க ஆத்திரத்துக்கு எல்லார்க்கும் மொத்தமாய் சாப்பாட்டுல விஷம் கலந்து வைச்சாலும் வச்சிருவேன்” என்றார் அவர் கண்ணில் கனல் வீச.
“உன்னை பெத்தவடா நானு. எனக்கு தெரியாதது எதுவுமில்லை, நீ செஞ்சது கொஞ்சம் லேட்டா தான் எனக்கு தெரிஞ்சது, முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு உயிர் போறதை தடுத்திருப்பேன்”
“சகுந்தலாவையும் இந்த வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டேன். ஆனா நீ அவங்களை விட்டு வைச்சிருக்க மாட்டே, ஏன்னா உனக்கு தான் பணம் கண்ணை மறைச்சுதே அப்போ…”
“நீ தான் வேலுவை கொன்னேன்னு உன் வாயாலேயே உன் பிரண்டு ஒருத்தன்கிட்ட சொல்லிட்டு இருந்ததை நானே கேட்டேன்”
“அன்னைக்கு நான் மனசளவுல செத்துட்டேன். நடைப்பிணமா தான் வாழ்ந்திட்டு இருக்கேன் இப்போ வரைக்கும். நீ செஞ்ச பாவத்தை உன் பிள்ளைங்க தான் அனுபவிப்பாங்க. அதை பார்க்கறது தான் இனி உனக்கு தண்டனையா இருக்கப் போகுது பாரு” என்று அவர் சொல்ல சொல்ல ரத்தினவேல் திகைத்திருந்தார்.
கனகவேலுக்கு இத்தகவல் புதிது, மகனை நிமிர்ந்து பார்த்தார் அவர். வீட்டில் உள்ள மற்ற அனைவரின் பார்வையும் ரத்தினவேலின் மீது தான். எல்லோரின் பார்வையை விட சமையலறையின் வாயிலில் நின்று தெய்வானை சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அவரின் மனைவி செண்பகவள்ளியின் பார்வை அவரை கொன்று கூறு போட்டிருந்தது.
சத்தியமாய் ரத்தினவேல் தன் மகன்கள் இப்படி தன்னை அவமானப்படுத்துவார்கள் என்று நினைத்து பார்த்திருக்கவில்லை. 
உடன் தன் தாயும் தன்னைப் பற்றிய ரகசியத்தை இப்படி அத்தனை பேரின் முன்னும் போட்டுடைப்பார் என்றும் அவர் நினைத்திருக்கவில்லை.
கனகவேலுக்கும் தன் மகனையே இப்படி பாடாய் படுத்துகிறார்கள் நாளைக்கு தனக்கும் இதே நிலை என்று நன்றாகவே புரிந்தது. தன் மகன் செய்த செயல் அவரையுமே நிலைகுலையத்தான் செய்தது.
“சகுந்தலாவுக்கும் செந்திலுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா” என்று ரத்தினவேலின் முன்னே நின்று அவர் கேட்க பேயறைந்தது போலானது அவர் முகம்.
விஸ்வாவுக்கு மட்டும் இவர்களுக்கு தெரிந்தது பற்றி அறிந்தான் என்றால் நிச்சயம் தன்னை கொன்று புதைப்பான் அல்லது போலீசில் புகார் செய்து உள்ளே அனுப்பிவிடுவான் என்ற பயம் வந்தது அவருக்கு.
இனி அவர் தன் வீட்டினரின் குற்றம் சாட்டும் பார்வையாலேயே ஒவ்வொரு நொடியும் மரண வேதனையை அனுப்பவிப்பார்.
இப்படி அடித்து பிடித்து சொத்து சேர்த்ததெல்லாம் யாருக்காக இவர்களுக்காகத் தானே. நாளைக்கு இவங்க நல்லா இருக்கணும்ன்னு தானே. இவனுங்களை நம்பினா நம்பளை நட்டாத்துல விட்டிருவானுங்க என்ற எண்ணம் தான் கனகவேலுக்கு.
நாம இருக்க வரை நமக்கு பாதுக்காப்பு இந்த சொத்து தான். இதை எக்காரணம் கொண்டும் இவனுங்க பேருல எழுதி மட்டும் வைச்சிடக்கூடாது இது தான் கனகவேலின் எண்ணமாக இருந்தது அந்நிலையிலும்.
———————
“விஜய்…”
“என்ன சங்கவி??”
“எனக்கு இப்போ நம்மளோட அர்ஜென்ட் கிஸ் கொடேன்…” என்றாள். அவர்கள் இருவரும் லிப்ட்டில் பயணித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது.
“வர வர உனக்கு அறிவே இல்லாம போச்சு. எங்க வைச்சு என்ன கேட்கறே நீ??”
“இங்க தான் இப்போ யாருமே இல்லையே??”
“அங்க சிசிடிவி கேமரா இருக்கறது உன் கண்ணுக்கு தெரியலையா??”
“அதான் உன் பிரச்சனையா இரு அதுக்கு ஒரு வழி பண்ணுறேன். நேத்து ஒரு படம் பார்த்தேன் அதுல சிசிடிவி கேமரா மேல ஸ்ப்ரே அடிச்சாங்க, அது மாதிரி செஞ்சிடுவோம்” என்றவள் தன் கைப்பையில் இருந்து ஸ்ப்ரேவை வெளியில் எடுத்தாள்.
“லூசாடி நீ, என்னை படுத்துறியே??”
“டேய் இந்த பில்டிங்க்கு நீயும் நானும் தானே ஓனர்ஸ். அப்புறம் ஏன்யா பயப்படுற??”
“அதுக்காக என்ன வேணா செய்வியாடி?? உன்னைய லவ் பண்ணிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே முடியலைடா சாமி…”
“டிவில கண்டதும் பார்க்க வேண்டியது அதை பார்த்து எக்ஸ்பரிமென்ட் செய்யறேன்னு என் உயிரை வாங்குறது…”
“டிசைன் டிசைனா முத்தம் கொடுக்கற சீன்லாம் உன்னை யாரு நெட்ல பார்க்க சொன்னா?? அதை பார்த்திட்டு வந்து நானும் அதே மாதிரி முத்தம் கொடுக்கணும்ன்னு என்னை படுத்தறே…” என்று முறைத்தான் விஜய்.
அவன் இறங்க வேண்டிய தளம் வந்ததும் அவசரமாய் இறங்கியவன் அப்பாடா தப்பித்தோம் என்று ஆசுவாசமாய் மூச்சுவிட அருகில் சங்கவியும் நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தான்.
“நீ எதுக்கு இங்க இறங்கினே??”
“நான் கேட்டது இன்னும் கிடைக்கலை…”
“வந்து தொலை…” என்று அவளை இழுத்துக் கொண்டு அவனறைக்கு சென்றவன் அவள் கேட்டதை கொடுத்திருக்க “இது நேத்து கொடுத்த மாதிரி இல்லை, ப்ச் இட்ஸ் ஓகே நல்லா தான் இருக்கு…” என்று அவள் நகர “கொழுப்பு கொழுப்பு உனக்கு அம்புட்டும் கொழுப்பு” என்றான் இவன்.
“விஜய்” என்று கதவருகில் நின்று கூப்பிட இவன் நிமிர்ந்து பார்த்தான்.
“நாளைக்கு இன்னும் பெட்டரா கொடு, இல்லன்னா நானே வேற சீன் பார்த்திட்டு வந்து கிஸ் பண்ணிருவேன்…” என்று சொல்லி ஓடிவிட்டாள்.
விஜய் அவளின் குறும்பில் சிரித்துக் கொண்டிருந்தான். தினமும் அவனிடம் முத்தம் வேண்டும் என்று சொல்லி கேட்டு வாங்கி கொண்டு தான் செல்வாள் அவள்.
இதில் சும்மா இல்லாமல் டிவியில் பார்த்தேன் இப்படி கொடுத்தார்கள், அப்படி கொடுத்தார்கள் என்று இவளாகவே அடித்துவிடுவாள்.

Advertisement