Advertisement

‘அதைத்தானே நானும் சொன்னேன்…’ என்று யோசித்துக் கொண்டே அவனை பார்க்க அவன் பார்வையில் குறும்பு மின்னியது.
‘இப்போ எதுக்கு இவரு இப்படி பார்க்கிறாரு, கள்ளப்பார்வையாவுல இருக்கு’ என்று தான் தோன்றியது அவளுக்கு.
“எப்படின்னு கேட்கணும் நீ இப்போ??”
“எப்படி??”
“இதழில் கதை எழுது பாட்டு கேட்கணும் அதுக்கு முன்னாடி”
“என்னது??”
“ஆமா கேட்கணும்”
“கேட்டா??”
“நீ நினைச்சது நடக்கும்”
“இவன் என்ன சொல்றான் எனக்கு ஒண்ணுமே புரியலையே” என்று வாய்விட்டு இவள் சொல்லியிருக்க அவன் வாய்விட்டு சிரித்தான். அதன் பின் இவளுக்கு சத்தமாக சொல்லிவிட்டோம் என்று உரைத்தது.
“என்ன புரியலைன்னு சொல்லு மக்கு. நான் சொல்லித்தர்றேன்”
“நீங்க சொல்றதே எனக்கு புரியலை. பாட்டு கேட்டா எப்படி வீட்டுக்கு ஆளுங்க வருவாங்க…”
“முதல்ல பாட்டு கேட்போம்” என்றவன் போனை ஆன் செய்து அந்த பாட்டை போட்டுவிட்டான்.
இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது 
இன்பங்கள் அழைக்குது ஆ… ஆ…
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ…ஆ…
மனதில் சுகம் மலரும் மாலையிது
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
முழுப்பாடலையும் அவள் கேட்பதற்கு முன்பே அவளை அணைத்து அவளிதழில் கவிதை எழுத ஆரம்பித்திருந்தான் விஸ்வகர்மா.
“நான் முதல்லயே சொன்ன மாதிரி அவங்கவங்க வீட்டில தான் அவங்க இருப்பாங்க. நமக்கே நமக்குன்னு சொந்தம் வேணும்ன்னா அதை நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் உருவாக்கணும்… நமக்கான உறவை உருவாக்க நான் ரெடி” என்றிருந்தான் அவள் இதழ் கவிதை முடித்து.
காஞ்சனாவிற்கு வார்த்தைகளே வரவில்லை அவன் சொல்லியதில். தேகமெங்கும் ஒரு அதிர்வலை ஓடியது, தான் கேட்டதற்கு இப்படியொரு அர்த்தத்தை அவன் கற்ப்பிப்பான் என்றெங்கே அவள் கண்டாள்.
விஸ்வா அவளையே பார்த்திருக்க தன் பதிலுக்காய் காத்திருக்கிறான் என்பது புரிய, அவள் முகம் சிவந்தது. பின்னால் பாடலின் வரிகள் வேறு அதற்கு தோதாய் இருக்க விஸ்வா பேசும் அவசியமே அங்கிருக்கவில்லை.
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
என்று பாடல் ஓட காஞ்சனா அவன் மார்பில் முகம் புதைத்து அவள் சம்மதம் தெரிவித்திருந்தாள். புது மனை மட்டும் அன்று அவர்கள் புகுந்திருக்கவில்லை, தன் மனையாளின் மனதிலும் நீங்காது குடிபுகுந்திருந்தான் விஸ்வா.
இருவருக்கும் மனதினில் ஆயிரம் குழப்பங்கள், கேள்விகள் இருந்தாலும் அந்நேரம் அனைத்தும் மறந்து அவ்விருவரும் தங்கள் இல்லறத்தை தொடங்கியிருந்தனர், விஸ்வா தொடக்கியிருந்தான்.
காலையில் கண் விழித்தவன் திரும்பி தன் மனைவியை தேட அருகில் அவளில்லை. சட்டென்று மனம் துணுக்குற்றது அவனுக்கு. அவளுக்கு பிடிக்காது எதையும் செய்திடவில்லையே என்று உள்ளே ஓடியது அவனுக்கு. அவளைத் தேடி சென்றவன் அவள் சமையலறையில் நின்றிப்பதை பார்க்கவும் தான் நிம்மதியானது அவனுக்கு.
அவள் பின்னே வந்து அவளை கட்டிக்கொண்டவன் “இங்க என்ன பண்றே??” என்றான் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து.
திடிரென்ற அவன் அணைப்பை அவள் எதிர்பாராது போனாலும் அணைத்தவன் அவளவன் என்பதை உணர்ந்ததும் கை தானாய் வேலை செய்தது.
“டிபன் பண்ண வேண்டாமா” என்றாள் அவன் கேள்விக்கு பதிலாய்.
“இவ்வளவு சீக்கிரம் நீ எழுந்திருக்க வேணாம்”
“மணி எட்டாகுது…”
“அதனாலென்ன??”
“இன்னைக்கு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வர்றாங்க…” என்றாள்.
“அடிப்பாவி நேத்து தானே நமக்கு பர்ஸ்ட் நைட் முடிஞ்சது, அதுக்குள்ள நம்ம வீட்டுக்கு கெஸ்டா… சூப்பர் பாஸ்ட் தான் போ…”
அவள் இவன் புறம் திரும்பி இவன் தோளில் ஒரு அடிப்போட்டு “நான் ஒண்ணும் அதை சொல்லலை, அதுக்கெல்லாம் நாளாகும். ஒரே நாள்லையா நடக்கும்…”
“அதே தான் நானும் சொல்றேன், அதுக்கு நாம ரொம்ப உழைக்கணும், ஏற்கனவே நான் ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணிட்டேன், வா வா…” என்றவன் இருக்கையால் அவள் இடையை வளைத்து தன்னை நோக்கி இழுத்தான்.
“விஷ்வா ப்ளீஸ்…” என்று சொல்லும் போது அவள் குரல் உள்ளே சென்றுவிட்டது.
“அய்யோ காஞ்ச்சு திரும்பவும் சொல்லேன்…”
“என்ன சொல்லணும்??”
“விஷ்வா ப்ளீஸ்ன்னு…”
“அச்சோ விஷ்வா ப்ளீஸ் போதும் விளையாட்டு. இன்னைக்கு ரம்யாக்காவும் சௌம்யாக்காவும் வர்றேன்னு சொன்னாங்க”
“கொஞ்சம் முன்னாடி போன் பண்ணாங்க… அவங்களுக்காக தான் சமைச்சுட்டு இருக்கேன்…”
“அப்போ நீ எனக்காக சமைக்கலை” என்று அவன் முகம் சுருக்க “உங்களுக்கு தான் நான் இருக்கேன்ல” என்று சொல்லிவிட்டு இவள் நாக்கை கடிக்க “இதழில் கதை எழுதும் நேரமிது” என்று முதல் நாள் பாடத்தை பாடலாய் படித்தவன் மீண்டும் ஒரு கவிதை படைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ரம்யாவும் சௌம்யாவும் மதிய உணவுக்கு வருவதாகத் தான் சொல்லியிருந்தனர். காஞ்சனாவும் விஸ்வாவும் காலை உணவை முடித்திருந்தனர்.
“வேற ஸ்பெஷலா எதுவும் வாங்கிட்டு வரணுமா?? கடைக்கு போயிட்டு வரவா??” என்றான் விஸ்வா.
“இல்லை வேணாம் எல்லாம் வெஜ் தான், நான்வெஜ் இன்னொரு நாளைக்கு செஞ்சிக்கலாம்…”
“சரி நீ பார்த்துக்கோ, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் அந்த ஆபீஸ் ரூம்ல இருக்கேன்” என்றுவிட்டு லேப்டாப் சகிதம் அங்கே தஞ்சமடைந்தான் அவன்.
——————-
“அப்பா…”
கனகவேல் நிமிர்ந்து தன் மூத்த மகனை பார்த்தார் என்னவென்பது போல். அவர் உடல்நிலை தற்போது சீராகி வீட்டுக்கும் வந்திருந்தார். ரத்தினவேல் தான் அவரை அழைத்தது.
மகனின் குரல் கேட்டு உள்ளேயிருந்து தெய்வானை வந்திருந்தார் “ரத்தினம்” என்ற கண்டிப்பான குரலில்.
“என்னம்மா??”
“நீ என்ன பேசப்போறே இப்போ??”
“எல்லாம் என் கூட பிறந்திருக்கானே அவனைப் பத்தி தான். அவனை எல்லாம் எப்படிம்மா பெத்தீங்க நீங்க…”
“இங்க இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு, எல்லாத்துக்கும் காரணம் அந்த விஸ்வா. அவன் வீட்டுக்கு போயிட்டு உறவு கொண்டாடிட்டு வந்திருக்காங்க, இதெல்லாம் நீங்க என்னன்னு கேட்க மாட்டீங்களா”
“எதுக்கு கேட்கணும்??”
“என்னம்மா பேச்சு இது??”
“அவன் புள்ளை வீட்டுக்கு அவன் போயிருக்கான் அதை எதுக்கு நான் கேட்கணும்??” என்றார் அவர் தெளிவாய்.
கனகவேல் அங்கு நடக்கும் பேச்சு வார்த்தையை கண்காணிக்க மட்டுமே செய்தார். தன் மனைவியும் இவ்வளவு பேசுவார் என்பதை அன்று தான் கண்டிருந்தார் அவர்.
“உங்க எல்லாருக்கும் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. அவன் நம்மளை ஏமாத்தி இருக்கான்…”
“அவன் என்ன ஏமாத்தினான்??” என்று மகனின் முகத்திற்கு நேரேயே கேட்டார் தெய்வானை.
“அம்மா அவன் அந்த கடையை அவங்களோடதுன்னு…” என்று அவர் ஆரம்பிக்க “ஆமா அவங்களோடது தான். அதை நீ இல்லைன்னு சொல்லிடு பார்ப்போம். அவன் உங்களை ஏமாத்தினான்னு எப்படி உன்னால நாக்கூசாம சொல்ல முடியுது”
“அந்த கடையை அவங்களா தான் எழுதி வைச்சாங்க…” என்று ஆரம்பித்தார் அவர்.
“உண்மையை சொல்லு அவங்களா எழுதி வைச்சாங்களா இல்லை எழுதி வைச்சாக வேண்டிய நிர்பந்தத்தை யாரும் அவங்களுக்கு கொடுத்தாங்களா” என்றுவிட்டு அவர் தன் கணவரை பார்க்க அவரோ வேறு புறம் பார்த்தார்.
“எது எப்படியோ அவங்க தானே நம்ம குடும்பத்துக்கு சொத்து மாத்தி எழுதிட்டாங்கல்ல அப்புறமென்ன” என்ற ரத்தினவேல் தப்பித்தவறி கூட அது விஸ்வாவிற்கு கொடுத்தது என்று தன் வாயால் சொல்லியிருக்கவில்லை.
“நீ இதுக்கு மேல பேசினே நான் மகன்னு கூட பார்க்க மாட்டேன், கொன்னு போட்டிருவேன்… ஏமாத்துறது பத்தி பேச உங்க ஒருத்தருக்காச்சும் யோக்கியதை இருக்கா??”
“நீ பண்ண பாவம் தான் உன் புள்ளைங்க ரூபத்துல உனக்கு வந்து சேர்ந்திருக்கு…”
“உங்கப்பா பண்ண பாவம் அவருக்கு வந்து சேர்ந்திருக்கு. நீ இப்படியே செஞ்சிட்டு இருந்தா அவரோட நிலைமை தான் நாளைக்கு உனக்கும்” என்றவர் தன் கணவரை ஒரு பார்வை பார்த்தார்.
அதில் அப்படியே சுக்குநூறாய் போயிருந்தார் கனகவேல். கீழே விழுந்திருந்ததில் அவர் ஒரு பக்கமாய் விழுந்திருக்க ஒரு கை கட்டு போடப்பட்டிருந்தது. சாப்பிடக் கூட அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் நிலை தான் அவருக்கு. 
செந்தில்வேலும் சகுந்தலாவும் அப்போது சரியாய் உள்ளே நுழைய ரத்தினம் இருவரையும் முறைத்தார். அதை பொருட்படுத்தாத செந்தில்வேல் “அம்மா நான் கடைக்கு போகணும், சாப்பாடு வைங்க…” என்று அமர்ந்தார்.
“எப்படிடா உன்னால சாப்பிட முடியுது??” என்று கேவலமாய் தம்பியை பார்த்தார் ரத்தினவேல்.
“இந்த கையால தான் சாப்பிடுவேன்…” என்று செந்தில்வேல் கையை உயர்த்தி காண்பிக்க கனகவேலுக்கு தன் வினை தன்னை நோக்கி திரும்புவது நன்றாகவே புரிந்தது.
கர்மத்தின் பலனை அந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பீர்கள் என்று சொன்னது அவர் காதில் ஒலிப்பது போன்ற பிரமை அவருக்கு.
“உன்னை போல நானும் இருந்த வரைக்கும் ஒரு வாய் சாப்பாடு கூட எனக்கு சரியா இறங்கலை, இப்போ உனக்கு இருக்கே அதே மாதிரி”
“என்னைக்கு என் நான் ஆசையை ஒழிச்சேனோ அப்போவே மனசுல அமைதி வந்திடுச்சு. என்னால நிம்மதியா சாப்பிட முடியுது இப்போ” என்றார் அவர் பதிலாய்.
“நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசறே??”
“ரத்தினம்” என்று தெய்வானை கத்தினார் இப்போது.
——————–
“என்னங்க மணி ஒண்ணாக போகுது இன்னும் இவங்களை காணோமே?? என்று அவன் அறை வாயிலில் வந்து நின்றாள் காஞ்சனா.
“எனக்கெப்படி தெரியும் அவங்க உன்கிட்ட தானே சொன்னாங்க, போன் பண்ணிப்பாரு…” என்று சொல்லிக்கொண்டே அவன் வெளியில் வந்தான்.
“பண்ணேன் ரிங் போயிட்டே இருக்கு, யாரும் எடுக்கலை… வழி தெரியாம போய்ட போறாங்களோன்னு இருக்கு, நீங்க போய் பாருங்களேன்”
“ஹேய் எங்க போய் பார்க்க சொல்றே என்னை??”
“வாசல்ல போய் நின்னு பாருங்களேன்”
“ரொம்ப தான் மிரட்டறே நீ??”
“இதுவரைக்கும் நான் மிரட்டினதே இல்லையா உங்களை??”
“எங்கே இப்போ மிரட்டு??” என்றவன் அவளை தன் புறம் இழுத்து அவள் கண்ணோடு கண் கலக்கவிட்டு கேட்க இவள் பே என்று தான் விழித்தாள். “என்ன பேச்சை காணோம்??”
“இங்க ஆளவே காணோம் வீட்டில, யாருங்க வீட்டில?? நாங்க இப்போ உள்ள வரலாமா??” என்று ரம்யாவின் குரல் கேட்க விஸ்வா காஞ்சனாவை விடுவித்தான்.
காஞ்சனா வேகமாய் வாயிலுக்கு செல்ல அங்கு ரம்யா, சௌம்யா இருவரும் தங்கள் கணவர்களுடன் உள்ளே நுழைந்தனர்…

Advertisement