Advertisement

38
அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளை விஸ்வாவும் காஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கருகில் செந்தில்வேலும் சகுந்தலாவும் அமர்ந்திருந்தனர்.
நால்வர் கழுத்திலும் மாலைகள் ஆம் விஸ்வாவின் வீடு கிரகப்பிரவேசம் நடந்துக் கொண்டிருந்தது. செந்தில்வேலுவுக்கு அங்கு நடப்பதை நம்பவே முடியவில்லை.
தனக்கு விஸ்வா மரியாதை செய்வதாக உணர்ந்தான் அந்நிகழ்வில், கூடவே பெருமிதமும் வந்து ஒட்டிக்கொண்டது. விஸ்வா வீடு பால் காய்ச்சுவதற்கு மற்றவர்களையும் கூட அழைத்திருந்தான் தான்.
அவர்கள் யாரும் வந்திருக்கவில்லை. ராதிகா கூட தன் தந்தையிடம் வர முடியாது என்று மறுத்துவிட்டிருந்தாள். ரேகா, அமுதன், பாட்டி மற்றும் அவன் நண்பன் டேவிட்  வந்திருந்தார்கள்.
டேவிட்டை விஸ்வாவே நேரில் சென்று அழைத்திருந்தான். விஸ்வா மும்பையில் இருந்த போதே டேவிட்டை தொடர்பு கொண்டு தான் விபரங்கள் அறிந்திருந்தான் அப்போது.
இவன் வீட்டை விட்டு சென்றதும் அவன் வீட்டினர் டேவிட் விஸ்வாவின் நண்பன் என்பதால் அவனை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்.
டேவிட் இல்லாது போனதால் கடையில் நிறைய குளறுபடிகள் நடக்க அயர்ந்து போன கனகவேல் அவனை நேரில் சென்று பார்த்து மன்னிப்பு கேட்டு கடைக்கு வரச்சொல்ல அவன் முடியாது என்றிருந்தான்.
பின் அந்த விபரத்தை அவன் விஸ்வாவிடம் உரைத்திருக்க அவன் தான் மீண்டும் கடைக்கு செல்லச் சொல்லியிருந்தான். அவன் மூலம் தான் விஸ்வாவிற்கு அவன் இல்லாதிருந்த போது கன்னியாகுமரியில் நடந்திருந்த அத்தனையும் தெரிய வந்திருந்தது.
விஸ்வா காஞ்சனாவை தனியே விட்டுச் சென்ற சில நாட்களில் அவள் டேவிட்டை தான் நேரில் வந்து பார்த்திருந்தாள். விஸ்வா எப்படியும் அவனிடம் பேசியிருப்பான் என்ற அனுமானம் அவளுக்கு அப்போது.
ஆனால் டேவிட் விடாக்கண்டனாய் தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்திருந்தான் அப்போது. இதோ தன் நண்பனின் வீட்டு கிரகப்பிரவேசம் என்று முதல் ஆளாய் வந்திருந்தான் அவன்.
“இதை போடுங்க” என்று அய்யர் கொடுத்ததை வாங்க காஞ்சனா தன் வலக்கையை நீட்டி பின்னிழுக்க அதை கவனித்திருந்த விஸ்வா அவளை தூக்கி தன் இடது தொடையின் மீது வைத்துக் கொண்டான்.
அவள் இறங்கப் போக “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்ல” என்று அவரை பார்த்துக் கேட்க “தாராளமா செய்யலாம்…” என்று அவர் சொல்லிட அவளை இருபுறமும் அணைவாய் பிடித்துக் கொண்டான்.
அவன் இடக்கரம் அவள் இடக்கரத்தை பற்றியிருக்க அவன் வலக்கரம் அவளின் வலக்கரத்தை பிடித்திருக்க அவர் கொடுத்ததை இருவருமாய் வாங்கி ஹோமத்தில் போட்டனர்.
அதை பார்த்த அமுதனின் மனம் நிறைந்து போனது, அவன் கண் கலங்கி கண்ணீர் ஒரு புறம் வழிந்ததை துடைத்துக் கொண்டான்.
காஞ்சனாவும் விஸ்வாவும் இப்போது அருகருகே அமர்ந்திருக்க சற்று முன் அவன் செய்த செயலில் உள்ளம் நெகிழ அமர்ந்திருந்தவளுக்கு இமைகள் நனைந்திருந்தது.
மாலையும் கழுத்துமாய் அவனருகில் திருமணத்தன்று அமர்ந்திருந்த போது கூட உணராத நெருக்கம் இன்று உண்டானது அவளுக்கு. மனதளவில் அப்படியொரு நெருக்கத்தையும் அவளால் உணர முடிந்தது.
என் உறவானவன் இவன், எனக்கானவன் இவன் என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது அவளுக்கு. மகிழ்வான அந்த தருணத்தை அமுதன் தன் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.
ஒரு வாரமாய் அவளுக்கிருந்த மன உளைச்சல் எல்லாம் அன்று காணாமலே போயிருந்தது. குளச்சலுக்கு வந்து சேர்ந்த மறுநாள் விஸ்வா வீடு வேலையாக வெளியே சென்றுவிட்டான். 
வீட்டில் இருந்து அங்கு பெயின்ட் அடிப்பவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். காஞ்சனா இவர்கள் குளச்சலுக்கு வந்த அன்று அவனிடம் பேச முயன்றது தான் இவன் கொடுத்த பதிலில் அவளாக இவனிடம் பேசவே முயலவில்லை.
இவன் பேசினால் பதில் பேசினாள், மொத்தத்தில் என்னவென்றால் என்ன என்று தானிருந்தாள். முதல் நாள் இரவு அவன் தூங்கிய பின்னே அவன் கழுத்தை ஆராய்ந்தாள்.
அவள் கொடுத்த செயினை அவன் போட்டிருக்கிறானா என்று இவள் பார்க்க அவன் என்ன தேடுறே என்றதும் தூக்கிவாரிப் போட “ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டாள்.
அவளையும் அந்த வீட்டிற்கு கூட்டி சென்றிருந்தான் முதல் நாள், அவளுக்கு பெயின்ட் வாடை ஒத்துக்கொள்ளாமல் போக அவளை அறையிலேயே விட்டு வந்திருந்தான்.
இரண்டே நாளில் முடிக்க வேண்டும் என்று இவன் சொல்லியிருக்க அவர்கள் ஒன்றரை நாளிலேயே முடித்திருந்தனர் பெயின்ட் வேலையை.
வீட்டுக்கு தேவையானதை வாங்க இவன் நினைத்திருக்க காஞ்சனாவிற்காய் கொடுத்திருந்ததை எல்லாம் கொண்டு வந்து இறங்கியிருந்தான் அமுதன். அந்த வீட்டில் இருந்து அந்த பொருட்களை எல்லாம் காஞ்சனா எப்போதோ எடுத்து வந்து தற்போது அவள் இருந்த வீட்டில் வைத்திருந்தாள்.
அதைத்தான் அமுதன் கொண்டு வந்திருந்தான், மேலும் இல்லாத சில பொருட்களையும் வாங்கி வந்து கொடுத்திருக்க விஸ்வாவிற்கு வேறு வேலை இல்லாது போனது.
முதலில் அதெல்லாம் வேண்டாம் என்று தான் விஸ்வா மறுத்திருந்தான், அதெல்லாம் காஞ்சனாவினுடையது என்று சொன்ன பின்னே தான் விஸ்வா மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.
வீட்டினருக்கு துணி எடுப்பது போன்ற செலவை மட்டும் தான் அவன் செய்திருந்தான். இதோ நல்லபடியாய் ஹோமம் முடிந்தது.
காஞ்சனா பாலைக் காய்ச்சி அனைவருக்கும் கொடுக்க அப்படியொரு நிறைவு அனைவர் மனதிலுமே. விஸ்வா அவளுக்காய் எடுத்திருந்த கரும்பச்சை நிறத்தில் ரோஸ் நிற பார்டர் வைத்திருந்த சேலையில் அம்சமாய் தானிருந்தாள் அவள்.
அவளுக்கு இன்னும் அழகாய் வேறு சேலை எடுக்கலாம் என்று சகுந்தலா சொன்ன போது மறுத்து இதை வாங்கியது அவன் தானே. அதைத்தான் ரசித்து பார்த்திருந்தான். அவ்வளவு நேரமும் ஹோமம் மற்ற வேலைகள் என்று இருந்ததில் அவளை சரியாய் பார்த்திருக்கவில்லை. அதனால் இப்போது அவன் கண்கள் அவளையே வட்டமிட்டது.
மதிய உணவுக்கு பின்னே ரேகாவிற்கு ஐந்துக்கு அழைப்பது பற்றி பேசிவிட்டு மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.
அதுவரை ஆட்கள் நிறைந்து கலகலவென்றிருந்த வீடு அமைதியாகிவிட காஞ்சனாவிற்கு என்னவோ போலானது.
காஞ்சனாவை இருக்கச் சொல்லிவிட்டு விஸ்வா அவர்களை வழியனுப்ப வெளிவாயிலுக்கே சென்றிருந்தான்.  
ஹாலில் இருந்த சோபாவில் இவள் அமர்ந்திருக்க கைபேசி ஒலியெழுப்பியது. “இவரு கூப்பிடுறாரு எதுக்கு?? வாசல்ல நின்னுட்டு கால் பண்றாரு” என்று சத்தமாய் முணுமுணுத்துக்கொண்டே போனை அட்டென்ட் செய்து காதில் வைத்திருந்தாள்.
“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடறேன், பக்கத்துல தான் ஒரு மணி நேரத்தில வந்திடுவேன் ஒரு அவசர வேலை” என்றான்.
“ஹ்ம்ம்…” என்று இவள் சொல்ல “சரி பை” என்றுவிட்டு அவன் போனை வைத்துவிட்டான்.
ஏற்கனவே வீடு வெறிச்சோடி இருப்பது காணசகியாமல் இருக்க இப்போது விஸ்வாவும் வெளியே சென்றிருக்கிறான். தனியே என்னவோ போலிருந்தது அவளுக்கு.
வெளிக்கதவை வெறுமே சாத்திவிட்டு அங்கிருந்து எழுந்து மாடிக்கு சென்றவள் அங்கிருந்த கதவை திறந்துவிட்டு சுவரின் மீது சாய்ந்துக் கொண்டு கடலை பார்த்திருந்தாள்.
பச்சையும் சற்று தூரத்தே வானின் நிறத்தையும் கொண்டு வெண் நுரை பொங்க பொங்க கரையை தொட்டுச் செல்லும் அலையை காண காண சலிக்கவில்லை அவளுக்கு. எவ்வளவு நேரம் நின்றிருந்தாலோ அறியாள்.
“இங்க என்ன பண்றே??” என்ற பழக்கமான குரலுக்கு கூட திரும்பவில்லை.
“ரொம்ப போர் அடிச்சது, அதான் இங்க வந்து நின்னுட்டு இருக்கேன்…”
“உனக்கும் இந்த கடல் பிரண்டாகிடுச்சா??” என்றவாறே அவள் இடையில் கைப்போட்டு நின்றான்.
சட்டென்று திரும்பியவள் “அப்போ உங்களுக்குமா??” என்று சொல்லும் போது வெகு நெருக்கம் அவர்களுக்கிடையில்.
“எனக்கு சின்ன வயசுல இருந்தே பரிட்சயம் தான்…”
“ஹ்ம்ம்…”
“போய் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்ல”
“வேணாம்…”
“ஏன்??”
“என்னமோ சட்டுன்னு வீடே காலியாகிடுச்சு, எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. ஒரு ரெண்டு மூணு நாள் இங்க தங்கிட்டு போயிருக்கலாம்” என்றாள் ஆற்றாமையுடன்.
“எல்லாருக்கும் வேலையில்லையா… அவங்கங்க வீடு தான் அவங்களுக்கு சொர்க்கம்… நீயும் நானும் சேர்ந்தது தான் நம்ம குடும்பம். இது தான் நிஜம் இதுக்கு நாம பழக்கிக்கணும்”
“ரெண்டு நாள்ல என்னாகிடப் போகுது, நேத்தே எல்லாரும் வந்திருந்தாங்க, வீடே அப்படி ஒரு சந்தோசமா இருந்துச்சு பார்க்க” என்றாள்.
“உனக்கென்ன வீடு நிறைய ஆளுங்க வேணும் அவ்வளவு தானே…”
“ஹ்ம்ம் ஆமா…”
“ரெடி பண்ணிருவோம் விடு…”
“எப்படி??”
“இப்போவே சொல்லணுமா??”
“சொன்னா என்ன?? எல்லாரையும் ஒரு நாள் வரச்சொல்லி இருக்கீங்களா என்ன??” என்றாள்.
“சஸ்பென்ஸ் ஓகே வா…”
“ப்ளீஸ்…”
“இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்கே!!”
‘நான் இதையா கேட்டேன்’ என்று எண்ணிய போதும் அவன் சொன்னதை கேட்டு அவள் முகம் நாணத்தான் செய்தது.
“அந்த சஸ்பென்ஸ்??” என்று ஆரம்பித்தாள்.
“இருட்டப் போகுது நாம ரூமுக்கு போகலாம்…” என்று அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். “நைட்க்கு என்ன இருக்கு சாப்பிட??” என்றான்.
“மதியம் சாப்பாடே இருக்கே, அதெல்லாம் வேணாம்னா உங்களுக்கு வேற ஏதாச்சும் செய்யவா??”
“எனக்கு சாப்பிடுற ஐடியாவே இல்லை, வயிறு புல்லா இருக்கு… நீ வேணா சாப்பிட்டு வா, நேரமா தூங்கலாம் இன்னைக்கு…”

“எனக்கும் அப்படி தான் இருக்கு, நல்லா இருக்குன்னு சிறுபருப்பு பாயாசத்தை மூணு தடவை ஊத்தி குடிச்சேன்…”
“சரி அப்போ அதெல்லாம் எடுத்து வைச்சுட்டு வா, நான் வெளிகேட்டு எல்லாம் பூட்டிட்டு வர்றேன்…” என்று நகர்ந்தான் அவன்.
அவன் படுக்கறைக்கு வந்து படுத்தவன் போனில் எதையோ தேடினான். அதை தயாராய் எடுத்து வைத்துவிட்டு காஞ்சனாவிற்காக காத்திருந்தான்.
பத்து நிமிடம் கழித்து தான் அவள் அறைக்கு வந்தாள், உடுத்தியிருந்த புடவையை இன்னும் அவள் மாற்றிருக்கவில்லை.
“வா வா இங்க வந்து உட்காரு…”

“டிரஸ் மாத்திட்டு வரட்டுமா”
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் நீ முதல்ல இங்க வா” என்று அவளை பிடித்து இழுக்க அவன் புறம் வந்து விழுந்தாள். தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவள் அமர இவன் நெருங்கி அமர்ந்திருந்தான்.
அவஸ்தையான உணர்வு தோன்றிய போதும் உள்ளே இதமாகவே இருந்தது அவளுக்கு. “கொஞ்ச நேரம் முன்னாடி நாம பேசிட்டு இருந்தோம்ல”
“எல்லாரையும் நம்ம வீட்டுக்கு கூப்பிடுறது பத்தி”
“அதில்லை நம்ம வீட்டுக்கு எப்படி ஆளுங்க வருவாங்கன்னு பேசிட்டு இருந்தோம்ல”

Advertisement