Advertisement

37
விஸ்வா உள்ளே வந்ததும் தெய்வானை பாட்டி தான் முதலில் அவனை பார்த்தது அவர் வேகமாய் அவனருகே வந்து அவன் கைப்பிடிக்க ரத்தினவேல் தன் அன்னையை முறைத்தார். அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவில்லை.
“நல்லாயிருக்கியாய்யா…” என்று அவனிடம் நலம் விசாரித்தார். அவன் தலையாட்டவும் தான் அவர் நிம்மதியுற்றார்.
அதற்குள் ரத்தினவேல் இவனை பார்த்து வாய்க்கு வந்ததை சொல்ல செந்தில்வேல் அவரை பிடித்து தள்ள என்று சூழ்நிலை களேபரமாக மாறியது நொடியில்.
செந்தில்வேல் இப்படி செய்வார் என்று எதிர்பாராத ரத்தினவேல் தடுமாறி சுவற்றை பிடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.
“என்ன கேட்க யாருமில்லைன்னு நினைச்சியா?? கூட பிறந்த அண்ணனையே அடிப்பியாடா நீ” என்று எகிறிக்கொண்டு வந்தார் அவர்.
“என் பையனை ராசி கெட்டவன்னு நீ எப்படி சொல்லுவே?? அவன் ராசி நல்ல ராசின்னு தானே இவ்வளவு நாளும் அவனை தலையில தூக்கி வைச்சு ஆடுனீங்க… இப்போ அவனால எதுவும் ஆகலைன்னதும் கண்டப்படி பேசுவியோ… மரியாதை கெட்டு போயிரும் பார்த்துக்க…” என்றார் செந்தில்வேலும் பதிலுக்கு.
“பைத்தியமா உனக்கு, இவன் என்ன நீ பெத்த பையனா இப்படி எகிறிட்டு வர்றே… நீயெல்லாம் என் தம்பியாடா…” என்றார் ரத்தினவேல்
“அவன் என் பையன் தான்…”
“இப்படி ஊருக்குள்ள சொல்லிட்டு திரியாத காறித்துப்புவாங்க…”
“நீங்க பண்ணுறதுக்கு எல்லாம் என்ன மாலை போட்டு மரியாதை செய்வாங்களா, உன் புள்ளைங்க கதை எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, ஊரே நாறுது அந்த கதையெல்லாம் கேட்டு…”
“டேய் அவங்க நான் பெத்த புள்ளைங்கடா உன்னை மாதிரி எவனோ பெத்த புள்ளையை ஒண்ணும் நான் எம் புள்ளைங்கன்னு சொல்லலை…”
“இங்க பாரு மறுபடியும் சொல்றேன் விஸ்வாவை யாரோன்னு சொல்லாத, அவன் என் பிள்ளை தான். குகன் எப்படியோ அப்படி தான் நான் அவனையும் நினைச்சேன், நினைக்கறேன், நினைப்பேன் எப்பவும்…”
“உங்களால தான் அவன் மேல இருக்க பாசத்தை வெளிய காமிக்க முடியாம இருந்தேன்…”
“அப்போ எங்ககிட்ட நீ நடிச்சிருக்கேன்னு சொல்லு…”
“ஆமா நடிச்சேன், நீங்கலாம் நடிச்சு தானே குமரன் மாமா சொத்தை புடுங்குனீங்க. நீங்க நடிச்சா சரி நான் நடிச்சா தப்பா… என் பிள்ளையை யாரோ யாரோன்னு சொல்றியே, அவன் சொத்தை மட்டும் நீ அனுபவிக்கற அது மட்டும் எந்த விதத்துல நியாயம்… அவன் ஒரு கேஸ் போட்டா என்னாகும் தெரியுமா??” என்று செந்தில்வேல் பேச சகுந்தலாவே அவர் பேச்சில் அசையாமல் நின்றுவிட்டார்.
“டேய் வேணாம் நீ பண்றது சரியில்லை இவனோட சேர்ந்திட்டு எங்களை பகைச்சுக்காத…”
“எனக்கு யாரோடவும் எந்த கூட்டும் வேண்டாம். நான் நானா இனிமேலாச்சும் இருக்கணும்ன்னு நினைக்கிறேன். நீங்க சொல்றதெல்லாம் கேட்டு கேட்டு நான் முட்டாளா இருந்தது போதும்”
“என்னடா முட்டாள் ஆனே… ஒண்ணுமே தெரியாத உன்னையெல்லாம் கடையில உட்கார வைச்சது உள்ளே இருக்கறவரோட தப்பு… எல்லாமே எப்பவும் போல என் கையிலவே இருக்கும்ன்னு நினைச்சேன், எல்லாமே கையைவிட்டு போகுது” என்றார் அவர் எரிச்சலாய்.
“யாருக்கு ஒண்ணும் தெரியாது எனக்கா… எனக்கு தெரிஞ்சது எல்லாம் நான் வாய்விட்டு சொல்லவா, சொல்லுடா நான் சொல்லவா” என்று இவர் கத்த “அப்பா” என்றழைத்தான் விஸ்வா.
அப்படியே அசையாது நின்றுவிட்டார் செந்தில்வேல். “வேண்டாம் எதுவும் பேசாதீங்க, எனக்கு சொத்து வேணும்ன்னு நான் நினைச்சதில்லை எப்பவும்…”
“அப்போ எதுக்கு நீ இப்போ திரும்பி வந்தியாம்…” என்றார் ரத்தினவேல்.
“உன்னை மாதிரி சொத்து எழுதி வாங்க வாசல்லவே வந்து பழியா கிடக்கறவன் அவன்னு நினைச்சியா…” என்றார் தெய்வானை பாட்டி.
“அம்மா…” என்றார் ரத்தினவேல் அதிர்ச்சியாய்.
“என்னை நீ அப்படி கூப்பிடாத, உங்கப்பா சொத்து சொத்துன்னு அலைஞ்சு எந்த நிலைமையில வந்து படுத்திருக்கார் பார்த்தியா… நாளைக்கு உனக்கும் இதே நிலைமை தான் தெரிஞ்சுக்கோ…”
“உனக்கு அவங்களை பத்தி பேச எந்த தகுதியும் இல்லை. இதுக்கு மேல நீ பேசினே, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என்றார் கோபமாக.
இவர்கள் கொஞ்சம் சத்தமாய் பேசியிருக்க ட்யூட்டி நர்ஸ் வந்து சத்தம் போட்டார்.
சகுந்தலா தான் தெய்வானை பாட்டியையும் செந்தில்வேலையும் சமாதானம் செய்யும்படி ஆனது. அவருக்கு செந்தில்வேல் பேசியதில் அவ்வளவு மகிழ்ச்சி. 
காஞ்சனா நடப்பது நாடகம் என்ற ரீதியில் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். விஸ்வாக்கு செந்தில்வேலின் பேச்சு பொய்யில்லை என்பது புரிந்தது.
“பாட்டி தாத்தா எப்படியிருக்காங்க??”
“ஏதோ இருக்கார், நெஞ்சு வலின்னு சொன்னாங்க, தலையில வேற அடிப்பட்டிருக்கு. செய்த பாவம் சும்மாவிடாது அனுப்பவிக்கறோம்” என்றார் வேதனையான குரலில் கண்ணீருடன்.
“பாட்டி ப்ளீஸ் அப்படிலாம் பேசாதீங்க… போனதை பத்தி யாரும் பேச வேண்டாம்… அப்பா நீங்களும் தான்…” என்றான் செந்தில்வேலிடமும்.
“நல்லா நடிக்கறான் நாளைக்கு முதுகுல குத்துவான்” என்றார் ரத்தினவேல் ஆங்காரமாய்.
“எனக்கு உங்ககிட்ட பேச வேணாம், பேசவும் பிடிக்கலை… ஆனா இதை நீங்க தெரிஞ்சுக்கோங்க, தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் தனியா வர்றீங்களா…” என்று அவரை அழைத்தான்.
“நீ கூப்பிட்டு நான் வரணுமா… போடா” என்றார்.
“இங்க எல்லார் முன்னாடியும் உங்க வண்டவாளத்தை பத்தி நான் பேசணும்னு நீங்க நினைச்சா அதையும் செய்ய நான் ரெடி… அந்த லாரியை பத்தி பேசணும்” என்று அவன் அழுத்தமாய் சொல்ல ரத்தினவேலின் முகம் வெளிறியது.
“என்ன லாரி??” என்று சகுந்தலா கேட்க அவர் முகம் வெளிறியது.
“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை, எனக்கு யார்கிட்டயும் பேசவும் வேணாம். நான் கிளம்பறேன், நீங்க இவங்களோட சேர்ந்து நல்லா கூத்தடிங்க…” என்று தன் அன்னையிடம் எரிந்துவிழுந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரத்தினவேல்.
இவன் பின்னாலேயே சென்றவன் “நில்லுங்க ரத்தினவேல்” என்றான்.

“யாரைடா பேர் சொல்லி கூப்பிடுற??”
“உன்னைத்தான்டா பெரியப்பா” என்றான் இவன்.
“டேய்”
“எங்கப்பாவை திட்டம் போட்டு கொன்னவன் நீ, உனக்கெல்லாம் என்னடா மரியாதை”
“நா… நான் எதுவும் செய்யலை…”
“இங்க பாரு நான் வீட்டை விட்டு போனதுமே என்ன நடந்துச்சுன்னு முழுசா விசாரிச்சுட்டேன். ஒருத்தன் அத்தனை வருஷமா முட்டாளா இருந்தா அப்படியே கடைசி வரை இருப்பான்னு நினைச்சீங்களா”
“நான் எந்தளவுக்கு ஏமாந்திருக்கேன்னு தெரிஞ்சுக்க தான் ஆளைவிட்டு விசாரிச்சேன். சொத்துக்காக எங்கப்பாவை கொல்லுற அளவுக்கு இறங்கி இருக்கீங்கன்னா நீங்க எந்தளவுக்கு மோசம்ன்னு அப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன்”
“இந்த விஷயத்தை நீங்க தாத்தாவுக்கும் தெரியாம எங்கப்பாவுக்கும் அதாவது உங்க தம்பி செந்தில்வேலுவுக்கும் கூட தெரியாம தான் செஞ்சிருக்கீங்க. என்னையும் அடுத்து எப்படி கொல்லலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கீங்க…”
“அதுக்குள்ள பாட்டி உங்க தம்பிக்கு எங்கம்மாவை கல்யாணம் பண்ணி வைக்கறது பத்தி பேச, இதுவும் நல்ல ஐடியான்னு நீங்க பேசாம இருந்திருக்கீங்க சரி தானே…” என்றான் அவன் நேரில் பார்த்தது போல்.
“போதும் நான் உங்க யார் கூடவும் சண்டை போட வரலை. என் மேல உண்மையா பாசம் வைச்சவங்களுக்காக தான் திரும்பி வந்தேன்…”
“நீங்க தேவையில்லாதது எல்லாம் பேசினா நான் எந்தளவுக்கும் இறங்குவேன்னு உங்களை எச்சரிக்கறேன்”
“எங்கப்பாவை கொன்ன உன்னை கொல்லணும்ன்னு எனக்கு ஆத்திரம் எரிமலையா பொங்கிட்டு இருக்கு. உன்னை கொன்னுட்டு என்னோட வாழ்க்கையை நான் நரகமாக்கிக்க விரும்பலை”
“பாட்டியோட முகத்துக்காகவும் யாருக்கும் தீங்கே நினைக்காத பெரியம்மாவுக்காகவும் தான் உங்களை அப்படியே விடறேன்…”
“ஆதாரம் இல்லைன்னு எல்லாம் நினைக்காதீங்க… நீங்க செட் பண்ண ஆள் துரதிர்ஷ்டவசமா இன்னும் உயிரோட தான் இருக்கார்… அவர் பேசின வாக்குமூலமே என்கிட்ட இருக்கு…”
“இனி மரியாதையா நடந்துக்குவீங்கன்னு நினைக்கிறேன். போயிட்டு வரட்டுமாடா” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் விஸ்வா.
உள்ளே சென்று கனகவேலை பார்த்துவிட்டு பாட்டிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினான்.
“விஸ்வா” என்றழைத்தார் செந்தில்வேல்.
“சொல்லுங்கப்பா” என்று இவன் சொல்ல அவருக்கு உள்ளே சொல்ல முடியா உணர்வு. அவன் கையை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டார், கலங்கிய அவர் விழிகளின் வழி வந்த கண்ணீர் அவன் கையை ஈரமாக்கியது.
“என்னை நீ மன்னிச்சிட்டியாப்பா??”
“நீங்க எந்த தப்பும் பண்ணலைப்பா…”
“இல்லை நான் இவங்களோட சேர்ந்து வயசு காலத்துல ரொம்ப தப்பு பண்ணியிருக்கேன். வேலு, அப்பாவையும் சித்தப்பாவையும் தைரியமா எதிர்த்தான். எனக்கெல்லாம் அந்த தைரியமே இல்லை”
“நான் நிறைய தப்பு பண்ணிட்டேன், ஆனா உன்னை என் பிள்ளை இல்லைன்னு நான் எப்பவும் நினைச்சதில்லை விஸ்வா. வேலு போனப்போ உன்னையும் குகனையும் ரெண்டு தோள்லயும் நான் தான் தூக்கி வைச்சிருந்தேன்”
“எனக்கு குகன் மாதிரி தான் நீயும். உங்கம்மா எப்படி உங்க ரெண்டு பேருகிட்டயும் எந்த வேற்றுமையும் காட்டலையோ நானும் அப்படித்தான் விஸ்வா…” என்றார் தன்னிலை உணர்த்தி.
“அப்பா விடுங்க நான் இதெல்லாம் உங்ககிட்ட கேட்கலை…”
“உங்கம்மாக்கு என் மேல கோபம் நான் உன்கிட்ட பாரபட்சம் காட்டினேனோன்னு நான் அப்படியில்லை விஸ்வா” என்றவர் அழுவதை சகுந்தலாவினாலேயே பார்க்க முடியவில்லை.
“நான் உங்களை நம்பறேன் விடுங்க…” என்றவர் தன் கணவரை சமாதானம் செய்தார்.
“ஷப்பா ஓவர் நடிப்புடா சாமி” என்று முணுமுணுத்தாள் காஞ்சனா.
“உன் நடிப்பை விடவா” என்றான் வெடுக்கென்று. அவன் பேச்சில் அடிப்பட்டவள் மேற்கொண்டு ஒன்றுமே பேசவில்லை முகம் இறுகிப் போனது அவளுக்கு.
அவர்களிடம் மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள் இவர்கள் இருவரும். காரில் அவன் முன்னே டிரைவரின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இடையில் அவன் யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டிருந்தான். பின் போனை வைத்துவிட்டு இவளை திரும்பி பார்த்தான். மாலை கவிழ்ந்து இரவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
“இங்க எந்த ஹோட்டல்ல சாப்பாடு நல்லாயிருக்கும்” என்றான் டிரைவரிடம்.
“ஏன் சார் சாப்பாடு வாங்கணுமா?? இல்லை சாப்பிடணுமா??”
“பார்சல் வாங்கணும்…”
“நம்ம குளச்சல் போயி வாங்கிக்கலாம் சார் அங்கவே நல்லா ஹோட்டல் இருக்கு” என்று அவன் சொல்ல “சரி அப்போ அங்கவே போய் பார்த்துக்கலாம்” என்றுவிட்டான் இவன்.
இதோ அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டலும் வந்துவிட்டது. வரும் வழியில் இரவு உணவை வாங்கிக்கொண்டு வந்திருந்தனர்.
அவர்களின் அறை சாவியை வாங்கிக் கொண்டு தங்கள் உடைமைகளுடன் முதல் மாடிக்கு சென்றனர். விஸ்வா அறைக்கதவை திறக்க உள்ளே சென்றனர்.
அறையில் இருந்த சன்னலின் திரைசீலையை திறந்துவிட்டான். அங்கிருந்த கப்போர்ட்டில் அவர்களின் பையை எடுத்து வைத்தான். அவன் பையை எடுத்து வேறு உடை ஒன்றை எடுத்தவன் குளியலறைக்கு சென்றுவிட்டான்.
காஞ்சனா அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இவரு மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்காரு… திடுதிப்புன்னு வந்தாரு, என்னை வான்னு சொன்னாரு, நானும் நாய் குட்டி மாதிரியே கிளம்பி வந்துட்டேன். எதுவுமே பேசாம இருக்காரு’ என்று எண்ணம் தான் ஓடியது அவளுக்கு.
வரட்டும் எதுவா இருந்தாலும் அவரே பேசட்டும் என்று அப்படியே அமர்ந்திருந்தாள் கட்டிலில். வேறு உடைமாற்றி வெளியில் வந்தவன் டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாய் மாற்றிக் கொண்டிருந்தான்.
காஞ்சனா பல்லைக் கடித்தாள் அவன் செயலில், பின்னே ஒன்றுமே பேசாமல் அவன் இப்படி செய்தால் அவள் என்ன செய்வாள். கட்டிலின் மேலே நன்றாய் ஏறி அமர்ந்தவள் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளே அறியாமல் உறக்கம் அவளை தழுவ கண்ணயர்ந்தாள். “காஞ்சனா” என்று எங்கோ யாரோ கூப்பிடும் குரல் கேட்டது அவளுக்கு.
கண்ணை திறவாமலே படுத்திருந்தாள். “காஞ்சனா” என்று அழுத்தமாய் இப்போது ஒலிக்க அது விஸ்வாவின் குரல் என்றுணர்ந்து சட்டென்று இவள் எழுந்து அமர அவன் தள்ளிப்போனான் என்னவோ ஏதோவென்று.
“என்னாச்சு எதுக்கு இப்படி அடிச்சு பிடிச்சு எந்திருக்கிற??”
“ஒண்ணுமில்லை”
“சாப்பிட வேண்டாமா அதுக்கு தான் எழுப்பினேன்”
‘இதுக்குன்னு தெரிஞ்சிருந்தா நான் எழுந்திருக்கவே மாட்டேன்’ என்று தான் எண்ணினாள்.
“போய் முகத்தை கழுவிட்டு வந்து சாப்பிடு” என்றுவிட்டு அவன் தனக்கானதை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.
இருவரும் சாப்பிட்டு முடிக்க அவன் போனை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் “டென் மினிட்ஸ் வாக் போயிட்டு வர்றேன், நீ லாக் பண்ணிக்கோ… நான் வந்து கதவை தட்டுறேன்” என்று சொல்ல இவள் அவனை முறைத்தாள்.
“எதுக்கு முறைக்கிறே??”
“வாக்கிங் போற நேரமா இது. அதுவும் என்னை ஹோட்டல்ல தனியாவிட்டு போவீங்களா??” என்றாள் சத்தமாய்.
“எதுக்கு இப்போ கத்துறே?? வேணும்ன்னா நீயும் கூடவா சேர்ந்தே வாக்கிங் போவோம்…” என்றான் அவன் கூலாய்.
‘இவர் என்ன செய்ய காத்திருக்காருன்னு புரியலையே. இவர் பேசினா நல்லாயிருக்கும் போலவும் இருக்கு பேசாம இருந்தாலும் நல்லதுன்னு தோணுது. கடவுளே என்னை ஏன் படுத்தறே?? பேசாம நானே பேசிடவா’ என்று இவள் தனக்குள்ளே வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தாள்.
“என்ன நீ வர்றியா இல்லையா??”
“வர்றேன்…” என்று முணுமுணுத்தாள் அவள்.
இருவரும் கீழே இறங்கி செல்ல “அப்படியே பீச் சைடு வாக் போலாம்” என்றான் இவன்.
அது அவளுக்கு மும்பையை ஞாபகம் செய்தது. எதுவுமே பேசவில்லை அன்றைய நாளை மனதிற்குள் ஓட்டிக் கொண்டிருந்தாள். லேசாய் குளிர்க்காற்று வீச அணிந்திருந்த சேலையின் முந்தியை எடுத்து இறுக்கிக் கொண்டாள்.
“லேடீஸ்க்கு இது ஒரு வசதில” என்றவனை இவள் புரியாமல் அவன் புறம் திரும்பி பார்த்தாள். “உனக்கு குளிருது உன் சேலையை எடுத்து போர்த்திகிட்ட” என்றுவிட்டு நிறுத்தினான்.
“அப்புறம்…”
“நாங்க என்ன செய்யறது??”
“புடவையை கட்டிக்கறது” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.
“அதைவிட புடவை கட்டினவங்களை கட்டிகிட்டா குளிராதுல” என்று விஸ்வா சொல்ல இவளுக்கு இவளுக்கு அவன் பேச்சில் வியர்க்க ஆரம்பித்தது. விஸ்வா இப்படியெல்லாம் பேசி அவள் கேட்டதேயில்லையே. காஞ்சனா பதில் சொல்லாமல் நடையை மெதுவாக்கினாள்.
“இவ்வளவு ஸ்லோவா நடந்தா நாளைக்கு தான் ரூமுக்கு போக முடியும்”
“சீக்கிரம் அங்க போய் என்ன செய்ய??” என்று வாய் சும்மாயில்லாமல் கேட்டுவிட்டது அவளுக்கு.
“என்ன வேணா பண்ணலாம்…”
“அப்படின்னா??”
“குளிராம இருக்க என்ன வேணா பண்ணலாம்…” என்று சொல்லிவிட்டு அவன் இவளை பார்க்க இவள் அவனுக்கு முன்னே வேகமாய் எட்டி நடையை போட்டாள்.
‘இவருக்கு என்ன தான் ஆச்சோ தெரியலையே, எதுக்கு இப்படியெல்லாம் பேசறாரு…’ என்று நினைத்தவாறே வேக நடையுடன் இவள் செல்ல அவனும் எட்டி நடைப்போட்டு இவள் கையை பிடித்தான்.
“நில்லு எதுக்கு இப்போ ஓடறே?? யாரும் உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க…”
அறைக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள். விஸ்வா விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்து விட்டான். இவளுக்கு தான் உறக்கம் வருவேனா என்றிருந்தது. அறைக்கு வந்ததில் இருந்தே படபடப்பாய் இருந்தது. விஸ்வா என்ன மனநிலையில் இருக்கிறான் என்று அவளால் சற்றும் கணிக்க முடியவில்லை.
‘இவரு என்மேல கோபமாவே இருந்திருக்கலாம் போல, அப்படின்னா நானும் பதிலுக்கு பதில் பேசியிருப்பேன். இப்போ அவரோட பார்வைக்கும் பேச்சுக்கும் கூட சம்மந்தமே இல்லை, என்ன ரியாக்சன்டா அது’ என்ற சிந்தனை தான் அவளுக்கு.
“தூங்காம என்ன பண்றே??” என்ற குரல் வெகு சமீபத்தில் கேட்கவும் தூக்கிவாரி போட “இல்லை வந்து…”
“தூங்கு பேசாம…”
அவளுக்கு அவன் ஒன்றுமே நடவாதது போல இருப்பது தலைவலியை கொடுத்தது, உறக்கம் வேறு தொலைந்திருந்தது. சொல்லியேவிட்டாள் அவனிடம் “எனக்கு உங்ககிட்ட பேசணும்” என்று.
“அப்புறம் பேசிக்கலாம்…”
“எப்போ??”
“எனக்கு எப்ப தோணுதோ அப்போ…”
“அதென்ன உங்களுக்கு தோணும் போது பேசறது” என்று அமர்ந்திருந்தாள் அவள்.
“இப்போவே பேசணுமா” என்று உடன் எழுந்து அமர்ந்தான் விஸ்வா.
“எனக்கு தூக்கம் வரலை…”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்??”
“ஊர்ல இருந்து வந்ததுல இருந்து என்கிட்ட நீங்க எதுவுமே பேசலை??”
“பேசிட்டு தானே இருக்கேன்…”
“நான் இதை சொல்லலை…”
“வேற என்ன சொல்றே??”
“என்ன பிரச்சனை உங்களுக்கு??”
“அதே தான் நான் கேட்கறேன் என்ன பிரச்சனை உனக்கு??”
அவன் பதில் பேசாமல் கேள்விகளையே பதிலாய் வைக்க இவள் தான் அயர்ந்து போனாள். கடுப்பில் அவனை பார்த்து “போய்யா…” என்றுவிட்டாள்.
இரவு அவன் தூங்கிய பின்னே அவன் கழுத்தை ஆராய்ந்தாள் அந்த செயினை அவன் போட்டிருக்கிறானா என்று. “என்ன தேடுறே??” என்று அவன் விழி விரித்து கேட்கவும் திருதிருவென்று விழித்தாள்.

Advertisement