Advertisement

அந்த குரலில் அமைதியானவளின் அழுகை சற்று மட்டுப்பட்டது. அமுதன் பாட்டியை உள்ளிருந்து அழைத்துக் கொண்டு வந்தான்.
அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை அமுதன் தான் எடுத்து சொன்னான். விஸ்வா அவரிடம் மன்னிப்பு கேட்டான், அன்றொரு நாள் அவரிடம் கடுமையாக பேசியதற்கு.
“விஸ்வா பாட்டிக்கு அதெல்லாம் இப்போ புரியறது இல்லை. அவங்களா திடீர்ன்னு நல்லா பேசுவாங்க, திடீர்ன்னு எல்லாம் மறந்திடுவாங்க. பாதி ஞாபகம் இருக்கறதில்லை இப்போ…”
“டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனீங்களாம்மா??”
“எல்லாம் காட்டியாச்சு விஸ்வா. வயசானா சிலருக்கு வர்றது தான்னு சொல்லிட்டாங்க…”
“ரேகா அக்கா எங்கே??” என்றான் அமுதன்.
அவர்கள் வந்ததிலிருந்து காஞ்சனாவை கண்ணிலே காணவில்லை. அவள் அறையைவிட்டு வெளியே வந்திருக்கவில்லை.
அமுதனுக்கு தமக்கையின் மீது கோபமாக வந்தது. ஒரு வருடம் கழித்து வந்த விஸ்வாவை பார்க்கவும் வரவில்லை.
சகுந்தலா அத்தை சொன்னது போல இருந்தாலும், இதோ மாமாவே நேரில் வந்துவிட்டார் இப்போதும் வரவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று தான் எண்ணினான்.
“அண்ணி உள்ள அவங்க ரூம்ல இருக்காங்க…”. சகுந்தலாவுக்குமே அவளின் இந்த செயலில் பிடித்தமில்லை என்பது அவரின் முக பாவத்திலேயே தெரிந்தது.
“நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என்று அமுதன் எழ “விடு அமுதன்” என்றான் விஸ்வா.
“இல்லை மாமா அக்கா…”
“நானே போய் பார்த்துக்கறேன்” என்றான்.
மற்றவர்கள் ஹான் என்று தான் பார்த்தார்கள் அவனை. “எந்த ரூம்??”
“அந்த லாஸ்ட் ரூம் போனா ஸ்டெப்ஸ் போகும் மாமா, மாடியில இருக்கு அவளோட ரூம்”
விஸ்வா அதை காதில் வாங்கியவாறே எழுந்து மேலே சென்றான். மச்சுப்படிகளில் அவனின் காலடியோசையை அவளின் செவிகள் உணர்ந்தாலும் அவள் அறையைவிட்டு எழுந்து வரவேயில்லை.
அங்கிருந்த சன்னலின் அருகே சென்று நின்றுக்கொண்டாள். பதட்டமாக இருந்தது அவளுக்கு. ‘உள்ள வந்து நான் விஸ்வான்னு சொல்வானா இல்லை இல்லைன்னு சொல்வானா’ என்ற எண்ணம் ஓடியது.
அறைக்கதவு திறந்து பின் மூடப்படும் அரவத்தை உணர்ந்த போது கண்களை இறுக மூடிக்கொண்டாள் சன்னல் கம்பிகளையும் இறுக்கி பிடித்தவாறே. “கிளம்பு…” என்ற அவனின் குரல் தான் அவளருகே கேட்டது.
‘அவ்வளவு தானா எதுவும் பேசமாட்டானா என்கிட்ட, கிளம்புன்னா நான் எங்க கிளம்பணும்?? ஏன் கிளம்பணும்??’ என்ற கேள்விகள் எழ கண்ணை மெதுவாய் திறந்தாள்.
“உன்கிட்ட தான் சொன்னேன் கிளம்பு என்னோட”
அவளுக்கு கோபம் வந்தது அதே வேகத்தில் திரும்பியவள் “எங்கே??” என்றாள்.
அப்போதும் எங்கே என்ற அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் “என்னோட வான்னு சொல்றேன், வருவியா?? மாட்டியா??” என்றான்.
எப்படி வரமாட்டேன் என்று சொல்வாள், ஆனாலும் அவள் அப்படியே நின்றாள்.
“உனக்கு நான் சொல்றது காதுல விழுந்துச்சா இல்லையா… உனக்கு தேவையான டிரஸ் எடுத்திட்டு என்னோட கிளம்பு, நம்ம பிரச்சனை எல்லாம் பேசித்தீர்க்க நிறைய நேரமிருக்கு. இங்க இருந்திட்டு எல்லாருக்கும் படம் போட்டுக்காட்ட வேண்டியதில்லை புரியுதா” என்றான்.
“நான் தான் அப்போ ஷோ காட்டிட்டு இருக்கேனா” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
“இல்லையா பின்னே, என் மேல கோபம் இருந்தா அதை என்கிட்ட நீ நேர்ல காட்டணும். அதைவிட்டு என்னை பார்க்க கூட வராம இருந்தா எப்படி?? நீயே சொல்லு??”
“குளச்சலுக்கு வரலை ஓகே, இங்க வீட்டுக்கு வந்த பிறகும் கூட நீ வந்து பார்க்கலையே… எப்பவும் போல நானே தான் உன் பின்னாடி வந்திட்டு இருக்கேன்” என்றான் அவன்.
“நான்…” என்று அவள் ஆரம்பிக்க “என்னோட வர்றதுக்கு உனக்கு இஷ்டமிருந்தா இப்போவே கிளம்பு, இல்லைன்னா இங்கவே இரு…” என்றவன் அங்கிருந்த மேஜையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
காஞ்சனா இரு கைகளையும் மூடி மூடி திறந்தாள். இருந்த இடத்தை விட்டு இம்மி கூட நகரவேயில்லை. 
“ஓகே நான் கிளம்பறேன்” என்று அவன் எழவும் தான் “நீங்க கீழே இருங்க நான் அஞ்சு நிமிசத்துல வர்றேன்” என்று அவள் சொல்ல இவன் தலையாட்டிவிட்டு அங்கிருந்து சிரிப்புடன் வெளியேறினான்.
‘என்னை என்ன பாடு படுத்தியிருப்ப, கொஞ்சம் ஆட்டம் காட்டினா அம்மணிக்கு தாங்க முடியலையோ’ என்று எண்ணிக்கொண்டே கீழே இறங்கி செல்ல அங்கிருந்தவர்கள் என்னாகுமோ என்று அவன் வரவையே பார்த்திருக்க இவன் சாதாரணமாக வந்து ரேகாவின் அருகில் அமர்ந்தான்.
“அப்புறம் ரேகா இது எத்தனாவது மாசம்??”
“அஞ்சு மாசம் அண்ணா…”
“அம்மா ராதிகா அக்காக்கு அஞ்சாம் மாசம் அஞ்சுக்கு ஏதோ சாப்பாடெல்லாம் செஞ்சு போட்டீங்களே, இவளுக்கு செஞ்சாச்சா??” என்று அவன் கேட்க சகுந்தலாவின் கண்கள் கலங்கியது.
“அதெல்லாம் செய்யற மாதிரியா இருக்கு இப்போ நிலைமை… என்னை சீக்கிரமே உன்னோட கூட்டிட்டு போய்டு விஸ்வா, எனக்கு அங்க இருக்கவே முடியலை” என்றார் அவர்.
“அம்மா ப்ளீஸ்…” என்றவன் “ரேகாக்கு என்ன செய்யணுமோ அதை நம்ம வீட்டில வைச்சு செஞ்சிடலாம்மா” என்றான் அவன்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கையில் பையுடன் காஞ்சனா இறங்கி வர அனைவரின் கண்களும் அவள் மீதே இருந்தது.
“அக்கா எங்கக்கா கிளம்பிட்டே??” என்று எழுந்திருந்தான் அமுதன்.
“இனிமே அவ இங்க என்ன பண்ணப்போறா அமுதன். அவளை நான் கூட்டிட்டு போறேன்” என்று விஸ்வா சொல்ல அமுதன் விழித்தான் அவனின் பதிலில்.
“எங்கே மாமா போகப் போறீங்க?? அந்த வீடு பெயின்ட் எல்லாம் அடிக்கணும்ன்னு சொன்னீங்க??”
“ஆமா அடிக்கணும்…”
“அது வரைக்கும் இங்க இருக்கலாமே மாமா…”
“அது சரியா வராது அமுதன். நான் அங்கவே ஒரு ஹோட்டல்ல ரூம் போட சொல்லிட்டேன், அங்க தான் கிளம்பறோம். வீடு ஒரு ரெண்டு நாள்ல ரெடி ஆகிடும், அப்புறம் நல்ல நாள் பார்த்து குடி போய்ட வேண்டியது தான்”
“அக்கா நீ மாமாக்கிட்ட சொல்லக் கூடாதா??”
“நான் இங்கவே இருக்கணும்ன்னா சொல்லு இருந்துக்கறேன். அதுக்கு அப்புறம் அவர் வந்து என்னை கூட்டிட்டு போக மாட்டார் நீ என்ன சொல்றே அமுதா” என்றாள் அவள் விஸ்வாவின் மீதான கடுப்பை இவன் மீது காட்டி.
அமுதனுக்கோ ‘நீ முதல்ல கிளம்பு’ என்ற எண்ணம் தான் எழுந்தது அவளின் பேச்சில்.
“என்ன அமுதா பதிலே பேச மாட்டேங்குற?? என்னை வைச்சு உன்னால சோறு போட முடியாதா??” என்று வேறு கேட்கவும் செய்தாள் அவனிடம்.
“இப்போ நான் என்ன சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கறே??” என்றான் அமுதன்.
“நீ எதுவும் சொல்லத் தேவையில்லை” என்றவள் அத்துடன் வாயை மூடிக் கொண்டாள்.
“சரிம்மா நாங்க கிளம்பறோம்” என்று இவன் எழ “மாமா வண்டி சொல்லவா”
“நான் பார்த்துக்கறேன் அமுதன். இது எனக்கு தெரிஞ்ச ஊரு தானே” என்றவன் யாருக்கோ அழைத்து எங்கிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தான்.
“வா…” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவள் உடைமைகளை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான், அவனுடையதையும் எடுத்துக்கொள்ள அமுதன் உதவினான்.
“அம்மா உங்களை வீட்டுல விட்டுட்டு போகணுமா??”
“இல்லை விஸ்வா நான் ஆஸ்பிட்டல் போய் பார்த்திட்டு அப்புறம் வீட்டுக்கு போறேன்…”
“என்னாச்சும்மா ஆஸ்பிட்டல்ல யாரு??” என்று கேட்க சகுந்தலா நடந்ததை சுருக்கமாய் சொன்னார்.
“அம்மா கிளம்புங்க நான் உங்களை ஆஸ்பிட்டல்ல விட்டுட்டு நானும் அவரை வந்து பார்க்கறேன்” என்று இவன் சொல்ல காஞ்சனா இவனை முறைத்திருந்தாள்.
அவன் அதை உணர்ந்தாலும் திரும்பிக் கூட பார்க்கவில்லை அவளை. வண்டி வந்ததும் இவர்கள் அமர அது மருத்துவமனை நோக்கிச் சென்றது. இவர்கள் இறங்கி அவர் அறையை நோக்கிச் செல்ல அங்கு தெய்வானை பாட்டியும் ரத்தினவேலும் தானிருந்தனர்.
இவனை பார்த்ததும் கோபத்துடன் எழுந்து வந்த ரத்தினவேல் “வந்திட்டியா நீ திரும்ப வந்திட்டியாடா எங்களோட நிம்மதியை மொத்தமா எடுத்திட்டு போனியே, இப்போ திரும்ப வந்திட்டியா”
“எதுக்கு வந்தே இப்போ?? நீ வந்ததும் வராததும் எங்கப்பாவை படுக்கையில விழ வைச்சுட்டு தான் வந்திருக்க… நீ சரியான ராசி கெட்ட பயடா” என்று அவர் கத்திக்கொண்டே முன்னே வந்து இவன் சட்டையை பிடிக்க வர செந்தில்வேல் எங்கிருந்தோ வேகமாய் வந்தவர் ரத்தினவேலுவை பிடித்து தள்ளினார்.

Advertisement