Advertisement

36
“அக்கா??”
“நான் வரலைன்னா வரலை தான்” என்றாள் அழுத்தமாய்.
“என்ன காரணம்??”
“அதை உன்கிட்ட சொல்லணும்ன்னு இல்லை”
“அப்போ யார்கிட்ட சொல்றதா உத்தேசம்??”
அவள் பதிலே பேசவில்லை. சகுந்தலாவின் பார்வை யோசனையுடன் காஞ்சனாவின் மீது படிந்தது. அவரின் பார்வையை உணர்ந்தும் அமைதியாயிருந்தாள்.
“விடு அமுதா நாம போயிட்டு வருவோம். அம்மாவும் ரேகாவும் எங்கே??”
“ரேகாவும் பாட்டியும் தூங்கிட்டு இருக்காங்க. மாமா போன் பண்ணவும் நான் உங்களுக்கு கூப்பிட்டேன்…”
“அத்தை நாம கிளம்பலாமா??”
“ஹ்ம்ம் கிளம்பலாம் அமுதா…”
“அக்கா மறுபடியும் கேட்கறேன், நீ என்ன சொல்றே??”
“நான் வரமாட்டேன்” என்றாள் இன்னும் உறுதியாக.
அமுதன் சகுந்தலாவை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அமுதனை பொறுத்தவரை விஸ்வா அவனிடம் பேசியதே அவனுக்கு போதுமானதாக இருந்தது, அவன் வேறெதையும் யோசிக்கவில்லை.
முக்கியமாக காஞ்சனா ஏன் இப்படி நடந்துக் கொள்கிறாள் என்று அவன் புரிந்துக்கொள்ள கூட முயற்சி செய்யவில்லை.
வண்டியில் ஏறியதும் சகுந்தலாவிடமே கேட்டான். “அத்தை நீங்க ஏன் அப்படி சொன்னீங்க??”
“என்ன கேட்கறே அமுதா??”
“அக்கா ஏன் வரலைன்னு நீங்க அவளை ஒரு வார்த்தை கூட கேட்கலையே?? நம்ம போகலாம்ன்னு சொல்லிட்டீங்க, அக்கா வரவேணாமா அத்தை”
“அவ என்ன நினைக்கிறான்னு கொஞ்சம் புரியுது அமுதா அதான் நான் எதுவும் கேட்கலை…”
“என்ன சொல்றீங்க அத்தை??”
“விஸ்வா அவளுக்கு ஏன் போன் பண்ணலை??”
“புரியலை அத்தை??”
“விஸ்வா காஞ்சனாக்கு போன் பண்ணாம உனக்கு ஏன் பண்ணான்… அவன் எனக்கும் கூட பண்ணலை தான், ஆனா நான் அங்க இருக்கறதால பண்ணியிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்… அவன் காஞ்சனாக்கு ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் தானே”
“மாமா கோவமா இருந்திருக்கலாம், இல்லை அக்கா மாமாவோட நம்பர்ன்னு தெரியாம போன எடுக்காம இருந்திருக்கலாம்…”
“விஸ்வா அவளுக்கு போன் பண்ண மாதிரி தெரியலை…”
“விஸ்வாக்கு கோவம்ன்னா அது உன் மேலயும் தானே இருக்கு, அப்புறம் உனக்கு மட்டும் ஏன் போன் பண்ணான்??”
“அது… அது எனக்கு தெரியலையே அத்தை…”
“பார்ப்போம் இதை விஸ்வாகிட்ட கேட்டா தான் பதில் தெரியும், இல்லைன்னா உங்கக்கா தான் பதில் சொல்லணும்…”
“அத்தை அது வெண்ணெய்யில இருந்து பால் எடுக்கற வேலை நடக்கவே நடக்காது…” என்றான் அவர்கள் இருவரையும் கொஞ்சமே புரிந்தவனாய்.
சகுந்தலா அவன் பதிலை கேட்டு சிரித்தார். “ஆனா அத்தை அக்காக்கு மாமா வர்றது முன்னாடியே தெரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன். அவ முகத்துல ஒரு ஆச்சரியம், தவிப்பு, தேடல்ன்னு எந்த பாவமுமே இல்லை…” என்றான் யோசனையுடன்.
இதை சகுந்தலா கவனித்திருக்கவில்லை, அமுதன் சொல்லவும் அப்படியும் இருக்குமோ என்று தான் நினைத்தார்.
“அக்கா மும்பை போயிட்டு வந்ததுல இருந்து பெரிய மாற்றம், ரெண்டே நாள்ல மாமாவும் வீட்டுக்கு வர்றார்ன்னா அக்கா மும்பைக்கு மாமாவை பார்க்கத் தான் போயிருப்பாளோ??” என்றான் இவன் தன் கணிப்பாய்.
“அவளுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நமக்கும் தெரிஞ்சிருக்கும் அமுதா… இதுல என்ன நடந்துச்சுன்னு நாம போட்டு குழப்பிக்க வேணாம்…”
“சம்மந்தப்பட்ட ரெண்டு பேருமே அவங்க பிரச்சனையை பேசி தீர்த்துக்கட்டும்… என்னை பொறுத்தவரை என் மகன் எனக்கு திருப்பி கிடைச்சிட்டான் எனக்கு அது தான் இப்போதைக்கு பெரிய சந்தோசமே” என்றார். அமுதனும் அதை ஆமோதித்தான். 
ஒரு மணி நேரத்திற்கு பின் அவ்விடம் வந்தது. “குளச்சல்லயா இருக்கான்” என்றார் சகுந்தலா.
“அப்படித்தான் சொன்னாங்க அத்தை…”
“இங்க அவனுக்கு யாரையும் தெரியாதே…”
“போய் பார்ப்போம் அத்தை, அட்ரஸ் இது தான் கொடுத்தாங்க…” என்றவன் வந்திருந்த காரை காத்திருக்க சொல்லிவிட்டு அந்த வீட்டின் கேட்டின் முன் வந்து நின்றான்.
அப்போது இவர்களுக்கு பின்னே வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து நிதானமாய் இறங்கினான் விஸ்வா.
வண்டியின் சத்தம் கேட்டு சகுந்தலா திரும்பியிருக்க தன் மகனை கண்டதும் ஓடிவந்து ஆரத்தழுவினார் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அமுதன் விரைந்து அங்கே வந்தான். “நான் பே பண்றேன் மாமா நீங்க உள்ள போங்க…” என்றுவிட்டு அவன் செட்டில் செய்துவிட்டு விஸ்வாவின் உடைமைகளை தன் கையில் எடுத்துக் கொண்டான்.
விஸ்வாவும் வெகு நாளைக்கு பின்னான அன்னையுடனான சந்திப்பில் நெகிழ்ந்து தான் போயிருந்தான். அவர் கைகளை அணைத்து பிடித்துக்கொண்டான்.
ஒன்றுமே பேசவில்லை அவர் கைகளில் முகம் புதைத்தான். அமுதன் உள்ளே வந்தான் இன்னும் வீடு திறந்திருக்கவில்லை.
“மாமா உள்ளே போகலாமா??”
“இங்கவே உட்கார்ந்து பேசுவோமே அமுதா” என்றவன் அங்கிருந்த திண்ணையின் மீது அமர்ந்துக்கொண்டு அவர்களையும் அமரச்சொன்னான்.
“என்னாச்சு மாமா இது யார் வீடு அவங்க இங்க இல்லையா??”
“இனிமே நாங்க இருக்க போற வீடு” என்று அவன் சொல்லவும் சகுந்தலாவும் அமுதனும் அவனை ஆச்சரியமாய் பார்த்தனர்.
“சொந்த வீடு தான்… அந்த கதை எல்லாம் அப்புறம் பேசலாம்”
“அப்போ உள்ளே போகலாமே??”
“புது வீடு நல்ல நாள் பார்த்து போகலாம்ன்னு இருந்திருப்பான்” என்று சகுந்தலா சொல்ல விஸ்வா அதை ஆமோதித்தான்.
“அப்போ நீங்க நேரா வீட்டுக்கே வந்திருக்கலாமே??”
“வர்றேன் அமுதன், அங்க வராம எங்க போக போறேன்…”
“ரேகா எப்படியிருக்கா?? அவளுக்கு நான் வந்த…”
“தூங்கிட்டு இருந்தா மாமா, நான் டிஸ்டர்ப் பண்ணலை…”
விஸ்வா மேற்கொண்டு யாரை பற்றியும் விசாரிக்கவில்லை. “அம்மா ஒரு நிமிஷம்” என்றவன் தன் அன்னையை தனியே கூட்டிக் கொண்டு போய் ஏதோ ரகசியம் பேசி பின் திரும்பி வந்தான்.
“மாமா நீங்க ஊருக்கு போகும் போது நான் இங்க இல்லை. இங்க… வந்து நீங்க என்னை மன்னிக்கணும் மாமா நான் பொய் சொன்னதுக்கு…” என்று மன்னிப்பு கோரினான் அமுதன்.
“எனக்கு புரிஞ்சுது அமுதன் அதை நீயா செய்யலைன்னு. ஏன்மா நான் சொன்னது சரி தானே…”
“ஹ்ம்ம் உண்மை தான் விஸ்வா, நான் தான் அவங்களை அப்படி சொல்லச் சொன்னேன். அது நீ காஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்கணுமேன்னு தான் சொன்னேன்”
“வேற யாரையும் உனக்கு நம்ம வீட்டில கட்டி வைச்சிருக்க மாட்டாங்க. பேச்சுவார்த்தை கூட நடக்க விட்டிருக்க மாட்டாங்க, அதனால தான் நான் இப்படி செய்ய சொன்னேன்”
“நடந்ததுல என்னோட பங்கு தான் அதிகம், காஞ்சனாக்கு கூட என்ன நடந்ததுன்னு தெரியாது” என்றார் அவர்.
“விடுங்கம்மா நான் யாரையும் குறை சொல்ற மாதிரி இல்லை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன்”
“உங்களுக்கு வீட்டைக் காட்ட தான் நேரா இங்க வரச்சொன்னேன், மத்தப்படி வேற எந்த காரணமும் இல்லை… நாம இப்போ கிளம்பலாம்”
“அப்போ இங்க…”
“ஆளுங்களுக்கு சொல்லியிருக்கேன்… ஒரு ரெண்டு மூணு நாள் இங்க வந்து தினமும் அதை மேற்பார்வை பார்க்கணும்”
“சரி புறப்படுவோம், ரேகாவை பார்க்கணும்…”
தவறிக்கூட அவன் காஞ்சனாவை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கவில்லை. விஸ்வா தன் தமக்கையை பற்றி கேட்பான் என்று அவ்வப்போது அவனை பின்னால் திரும்பி திரும்பி பார்த்து வந்தான் அமுதன்.
ஏமாற்றமே மிஞ்சியது அவனுக்கு. ஒரு பெருமூச்சுடன் அமைதியாகிப் போனான்.
வீட்டிற்கு வருவதற்கு முன்னேயே காஞ்சனாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டான். ரேகாவிடமும் சொல்லி தயாராய் இருக்கச் சொன்னான்.
இதோ அவன் வீட்டின் வாசலில் வந்து இறங்கிவிட்டான். நிமிர்ந்து அந்த வீட்டை ஆராய்ச்சி செய்தான். “நான் வளர்ந்த வீடு” என்றார் சகுந்தலா.
“அதான்மா பார்த்தேன்…”
“பாட்டி எப்படிம்மா இருக்காங்க??”
“உடம்புக்கு முடியலை அவங்களுக்கு. காஞ்சனா மும்பைக்கு வந்திருக்கும் போது பின்னாடி பாசி இருக்கறது பார்க்காம காலு வைச்சுட்டாங்க. லேசான அடி தான். வயசாகுதுல, இப்போலாம் காது சரியா கேட்கலை… நடக்கவும் சிரமப்படுறாங்க”
அவன் உள்ளே வர ரேகா வேகமாய் வந்து அவனை அணைத்துக் கொண்டாள். “அண்ணா சாரிண்ணா என்னை மன்னிச்சிருண்ணா…” என்றவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.
“ரேகா எதுக்கு இப்போ நீ அழறே?? எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை”
“எல்லார் மாதிரியும் நானும் உன்னை கஷ்டப்படுத்திட்டேன்ல அண்ணா… நான் ஆரம்பத்துல உன்னை எவ்வளோ மதிக்காம நடந்திருக்கேன்…” என்று அவள் அழ இவன் சமாதானம் செய்தான்.
“அதெல்லாம் எதுக்கு நினைக்கறே, எல்லார் மாதிரியும் நீ நடிக்காம உன் மனசுல என்ன தோணிச்சோ அப்படி நடந்துக்கிட்டே, அதுவே எனக்கு சந்தோசம் தான்…”
அவள் சமாதானம் ஆகாமல் இன்னமும் அழுதுக் கொண்டிருக்க அவன் தன் அன்னையை பார்த்தான். “ரேகா…” என்றார் அவர் அழுத்தமாய்.

Advertisement