Advertisement

“பிளைட்க்கு நேரமாச்சு சீக்கிரம் கிளம்பேன்டா…”
“இதோ ரெடி ஆகிட்டேன்…”
“சங்கவி எங்கே??”
“அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்காம், முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட் வர்றேன்னு சொல்லிட்டா”
“ஓகேடா… பாவம் நான் அவளை தான் ட்ரபிள்ல விட்டு போறேன், ஐ பீல் கில்ட்டி”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அவளும் தனியா இதெல்லாம் பழகணும் தானே விடு… அதான் நீ எப்பவும் ஆன்லைன் சப்போர்ட் கொடுக்கப் போறியே இன்னும் என்ன வேணும் சொல்லு…”
“எதுவா இருந்தாலும் நீயும் ஒரு பார்வை அவளை பார்த்துக்கோ, சின்ன பொண்ணு சில விஷயங்களை சமாளிக்கத் தெரியாது அவளுக்கு…”
“யப்பா சாமி நான் பார்த்துக்கறேன் நீ வா…” என்றுவிட்டு அவனின் உடமைகளை அவனும் ஒரு கையில் எடுத்துக் கொண்டான்.
இதோ ஏர்போர்ட் வந்து சேர்ந்துவிட்டனர். சங்கவியும் வந்துவிட்டாள்.
“வந்து சேர்ந்து இருக்குங்க பாரு எனக்குன்னு…” என்று பொரிந்தாள் சங்கவி.
“நான் என்ன பண்ணேன்??” என்றான் விஜய்.
“நீ ஒரு அமுக்குணி, இவன் உனக்கு மேல பெரிய அமுக்குணி…” என்று இருவரையும் சுட்டிக்காட்டி சொன்னாள்.
“உன்னால எனக்கு கிடைச்ச பேரை பாருடா, நீ நல்லா வருவ…”
“நேத்து கூட இவன் என்கிட்ட சொல்லலை ஊருக்கு போறதுபத்தி என்னவொரு திண்ணக்கம் இருக்கணும் இவனுக்கு…” என்றவளுக்கு மனதே ஆறவில்லை இன்னும்.
“நல்லபடியா பொண்டாட்டியோட வாழப் போறியேன்னு தான் ஒண்ணும் சொல்லாம இருக்கேன், இல்லைன்னா…”
“இல்லைன்னா??” என்றான் விஸ்வா.
“சாபம் விட்டிருவேன்…”
“என்னன்னு??”
“நீ நானூறு குழந்தை பெத்துக்கணும்ன்னு…” என்று அவள் சொன்னதை கேட்டு நண்பர்கள் இருவரும் சிரித்தனர்.
“இது நல்ல சாபமா இருக்கே?? ஆனா நானூறு எல்லாம் தாங்காதும்மா…”
“போடா நல்லா திட்டணும்ன்னு வருது எனக்கு”
அவளுக்கு இன்னமும் ஆற்றாமை இப்படி சொல்லாமல் கொள்ளாமல் பெட்டியை கட்டிவிட்டு பிறகு சொல்கிறானே என்று.
“கூல் கவி, நீ கிட் இல்லை…”
“அது எனக்கும் தெரியும்…”
“தென் என்னோட நிலைமை உனக்கு புரியாது…”
“சொன்னா தானே புரியறதுக்கு, அதான் சொல்லாம வைச்சுட்டு இருக்கீங்களே…” என்று காய்ந்தாள்.
“ஓகே பேபி சாரி… நான் இப்போ ஊருக்கு போயே ஆகணும், காஞ்சனா வரலைன்னாலும் நான் ஊருக்கு கிளம்பியிருப்பேன்… அவளை பார்க்கணும்ன்னு ஒரு ஆசை வரவைச்சேன்…”
“எனக்கு புரியுது…”
“என்ன புரியுது??”
“நீ காஞ்சனாவை மிஸ் பண்றேன்னு” என்று சொல்லிவிட்டு இவள் கண்ணடிக்க விஸ்வாவின் முகம் பிளஷாகியது.
“டேய் இவன் வெட்கப்படுறான்டா…” என்றாள் சங்கவி விடாமல்.
“ஹேய் போதும்… நான் போயிட்டு வர்றேன் சரியா, எதுவா இருந்தாலும் போன் பண்ணு, நான் எப்பவும் அவைலபிலா தான் இருப்பேன்… விஜய் பார்த்துக்கோ அவளை, கால் மீ…”
“சீக்கிரம் கல்யாணம் வைங்க குடும்பத்தோட வர்றேன்…” என்றுவிட்டு பிளைட் ஏறச் சென்றான் அவன்.
“ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்” என்று அவனை நிறுத்தினாள் அவள்.
“என்ன??”
“அன்னைக்கு ஒண்ணு சொன்னியே”
“என்னது??”
“எனக்கு தேங்க்ஸ் சொன்னல்ல அது எதுக்குன்னு அப்புறம் சொல்றேன்னு சொன்னல்ல எதுக்குன்னு இப்போ சொல்லிட்டு போ” என்றாள்.
“இப்போவே சொல்லணுமா??”
“ஆமா இல்லையின்னா எனக்கு மண்டை வெடிச்சிடுமே??”
“டேய் சொல்லாதடா எப்படி வெடிக்குதுன்னு நானும் பார்க்கறேன்” என்றான் விஜய்.
“நீ சும்மா இரு விஜய்”
“சரி சரி சொல்றேன்” என்று இறங்கி வந்தான் விஸ்வா.
“உனக்கு தேங்க்ஸ் சொன்னதுக்கு காரணம் உன்கிட்ட இருந்து நான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன் அதுக்காக தான் சொன்னேன்”
“சும்மா காமெடி பண்ணாதீங்க”
“இதுல என்ன காமெடி இருக்கு, நான் நிஜமா தான் சொல்றேன். நீ எதைப்பத்தியும் யோசிக்காம நீ நீயா இருந்தே?? உனக்கு பிடிச்சதை செஞ்ச, நீ நினைச்சதை பேசினே…”
“அவங்க தப்பா நினைப்பாங்க இவங்க இப்படி நினைப்பாங்கன்னு எல்லாம் நீ எப்பவும் கவலைப்பட்டதே இல்லை. அதெல்லாம் எனக்கு உன்கிட்ட பிடிச்ச விஷயங்கள்”
“அது மாதிரி நல்ல பழக்கம் எல்லாம் உன்கிட்ட இருந்து தான் நான் கத்துக்கிட்டேன். எல்லாத்தையும் விட ரொம்பவும் ஒரு நல்ல பழக்கம் அது கூட உன்கிட்ட கத்துக்கிட்டது தான்…”
என்ன அது என்பது போல் அவனை பார்த்தாள். “நடுரோடுன்னு கூட பார்க்காம வண்டியை நிறுத்திட்டு போய் வடாபாவ், பானிபூரி, தஹி பூரின்னு இஷ்டத்துக்கு சுவாஹா பண்ணுவியே”
“இப்போ நீ காமெடிக்கு தானே சொல்றே??”
“இதுவும் நிஜம் தான், வாழ்க்கையை எந்த சுவாரசியமும் இல்லாம பிளைனா வாழ்ந்துட்டு இருந்தேன். என் வாழ்க்கையில் அடுத்தது என்னன்னு யோசிக்க கூட முடியாத அளவுக்கு முதல்ல சுவாரசியத்தை கொண்டு வந்தது காஞ்ச்சு”
“அவங்களை நீ காஞ்ச்சுன்னு தான் கூப்பிடுவியா”
“ஹ்ம்ம் ஆமா… ரெண்டாவதா என் வாழ்க்கையை அனுபவிச்சு வாழக் கத்துக்கொடுத்தது நீ தான்…” என்று அவன் சொல்ல இவளுக்கு மலை போல உயர்ந்த ஒரு உணர்வு ஏற்பட தலையில் நங்கென்று கொட்டினான் விஜய்.
“அவனுக்கு பிளைட்டுக்கு டைம் ஆச்சு. இப்போ வந்து அவனை கேள்வி கேட்டுட்டு இருக்கே… அப்புறம் ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிக்காத அவன் சொன்னதை எல்லாம் கேட்டு”
“உன்னை அவன் தீனிப்பண்டாரம்ன்னு சொல்றான் நீ என்னமோ ஆஸ்கார் அவார்ட் வாங்குன ரேஞ்சுக்கு பீல் கொடுக்கறே” என்று சொல்லி அவள் நினைப்பில் மண் அள்ளிப்போட்டான் விஜய்.
“சரிடா விஸ்வா பார்த்து போ, ரீச் ஆனதும் போன் பண்ணு… பை டேக் கேர்” என்று விஜய் அவனை அணைத்து வழியனுப்பி வைத்தான்.
சங்கவியும் விஜயும் அவனை அதிகமாக மிஸ் செய்தார்கள், அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்த பிறகே அங்கிருந்து கிளம்பினர்.
——————
சகுந்தலாவின் கைபேசி ஒலிக்க எடுத்து காதில் வைத்தார் அவர்.
“சொல்லு அமுதா…”
“அத்தை எங்க இருக்கீங்க??”
“ஆஸ்பிட்டல்ல…” 
“என்னாச்சு அத்தை??” என்றவனின் குரலில் இப்போது பதட்டம்.
“பெரியவருக்கு தான்…”
கொஞ்சம் ஆசுவாசம் ஆனவன் “என்னாச்சு அவருக்கு??”
“ஹார்ட் அட்டாக், கூடவே அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்திருக்கார். பின்னாடி மண்டையில நல்ல அடி அவருக்கு… கட்டு போட்டிருக்காங்க…”
“இப்போ எப்படி இருக்கார்??”
“ஹ்ம்ம் நல்லா தான் இருக்கார் கல்லுகுண்டாட்டம்…”
“அத்தை என்ன இப்படி சொல்றீங்க??”
“அவர்க்கு ஒண்ணும் ஆகாது அமுதா, நல்லவங்க தான் சீக்கிரமே போய் சேர்ந்திடுவாங்க…” என்றவரின் குரலில் ஆற்றாமை அப்பட்டமாய்.
“ஆமா நீ எதுக்கு கால் பண்ணே அமுதா??”
“உங்களை வீட்டுக்கு வரச்சொல்லலாம்ன்னு தான்…”
“என்னாச்சு அமுதா, ரேகாக்கு எதுவும்??”
“ஒண்ணுமில்லை அத்தை, அவ நல்லா தான் இருக்கா. நீங்க முடிஞ்சா இன்னைக்கு வாங்க, இல்லைன்னா நாளைக்கு வாங்க… ஒரு விஷயம் பேசணும் அவ்வளவு தான்” என்றான் அவன்.
அவன் குரலுக்கும் சொல்லிய விஷயத்துக்கும் சம்மந்தமேயில்லை என்று உணர்ந்தார் சகுந்தலா.
“நிஜமாவே ஒண்ணும் இல்லை தானே…”
“இல்லை அத்தை… நீங்க அவரை பாருங்க…” என்றுவிட்டு போனை வைத்தான். பின் காஞ்சனாவிற்கு அழைத்தான். அவள் சுசீந்திரம் சென்றிருந்தாள். காலையிலேயே கிளம்பிவிட்டிருந்தாள் இன்னமும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. போன் அடித்தால் எடுக்கவுமில்லை, அரைமணி நேரத்திற்கு பின் அவளே அழைத்தாள் “சொல்லு அமுதா”
“எங்கக்கா இருக்க??”
“கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு தானே வந்தேன்…”

“அங்க இருந்து கிளம்பிட்டியா??”
“இப்போ தான் கோவில்ல இருந்து வெளிய வந்தேன், இனி பஸ் பிடிச்சு வரணும்…”
“ஒரு டாக்சி பிடிச்சு சீக்கிரம் வா…”
“என்னாச்சுடா”
“வீட்டுக்கு வா…” என்றுவிட்டு எதுவும் சொல்லாமல் அவன் போனை வைத்துவிட்டான்.
சிறிது நேரத்தில் அவளே மீண்டும் அழைத்தாள் தம்பிக்கு. “அமுதா கிளம்பிட்டேன்டா கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்… என்ன விஷயம்ன்னு சொல்லேன்டா…” என்றாள் அவள்.
“நீ வீட்டுக்கு வா…” என்றுவிட்டு வைத்துவிட்டான்.
அவள் வரவும் சகுந்தலா வரவும் சரியாக இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே கண்களால் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.
இருவரும் ஒரே சேர “அமுதா” என்றழைத்தனர்.
“இரண்டு பேருமே வந்துட்டீங்களா??”
“என்ன அமுதா?? என்ன விஷயம்??”
“மா… மாமா போன் பண்ணார்…”
“யாரைச் சொல்றே??” என்றார் சகுந்தலா. காஞ்சனா அவன் அடுத்து என்ன சொல்வான் என்று அவனையே பார்த்திருந்தாள் அவன் சொன்ன மாமா யாராயிருக்கும் என்று அவளுக்கு புரிந்து போனது.
“விஸ்வா மாமா தான் அத்தை…”
அவர் வேகமாய் வந்து அமுதனின் கையை பிடித்துக்கொண்டார். “எப்போ போன் பண்ணான் அமுதா?? என்ன சொன்னான்?? நல்லாயிருக்கானா அவன்?? என்னை கேட்டானா?? எங்க இருக்கானாம்??” என்று கேள்விகளாய் அடுக்கினார் அவர்.
“அத்தை உங்க எல்லா கேள்விக்கும் பதிலை அவரே நேர்ல சொல்வாரு…”
“அமுதா…”
“இங்க தான் இருக்கார்…”
“கன்னியாகுமரிக்கு வந்திட்டானா??”
“ஹ்ம்ம்… அப்போ என்னை ஏன் பார்க்க வரலை??”
“உங்களை பார்க்க எந்த வீட்டுக்கு வரணும்??” என்றான் அவன் கேள்வியாய்.
“அப்போ இங்க வரலாமில்லை…”
“வரலாம் தான் இதுவும் அவர் வீடில்லையே…”
“எனக்கு புரியலை அமுதா…”
“அவர் வீட்டுக்கு நம்மை வரச்சொல்லி இருக்கார்…” என்று அவன் இடத்தை சொல்ல சகுந்தலா உடனே கிளம்ப வேண்டும் என்று நின்றார்.
காஞ்சனா எதுவும் சொல்லாமல் சிலையாகவே நின்றாள். “அக்கா கிளம்பு…”
“நான் வரலை…” என்றாள் அவள்.

Advertisement