Advertisement

“அந்த டீல் ஓகே ஆகிடுச்சு அமுதா”
“அதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா என்ன… அதெல்லாம் நீ சொல்லாமலே எனக்கு தெரியும். நீ போய் ஒரு வேலை நடக்காம இருக்குமா…” என்றவன் “அவ்வளவு தான் நடந்திச்சா…” என்றான் எதையோ தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.
“வேறே என்ன இருக்கு, அக்ரிமெண்ட் சென்ட் பண்றேன்னு சொல்லியிருக்காங்க…” என்று முடித்தாள்.
இவனோ அவள் இன்னும் எதாவது சொல்வாளோ என்று நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“சார் நான் சொன்ன கடை வந்திடுச்சு” என்று டிரைவர் வண்டியை ஓரங்கட்டினார். 
“நீ இருக்கா நான் வாங்கிட்டு வர்றேன், என்ன வாங்கட்டும்??” என்றான் அமுதன்.
“நானே வர்றேன் அமுதா” என்றவள் கீழே இறங்கியிருந்தாள். சுடச்சுட ஆவி பறக்க இட்லியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் தோசை ஊற்றிக் கொண்டிருந்தனர்.
“ரெண்டு இட்லி, ஒரு தோசை சொல்லுடா” என்றாள்.
அவன் இவளை வித்தியாசமாய் பார்த்தான், ஒன்றும் சொல்லவில்லை. “என்னடா அப்படி பார்க்கறே??”
“ஏதோ பெரிய வித்தியாசம் தெரியுதுக்கா உன்கிட்ட” என்று சொல்லியே விட்டான் அமுதன்.
“டிரைவர்க்கு என்ன வேணும்ன்னு கேட்டு வாங்கிக் கொடு, நீயும் போய் சாப்பிடு, எனக்கு இன்னும் ரெண்டு ரெண்டு தோசை சொல்லிரு செம பசி எனக்கு” என்றாள்.
புருவத்தை லேசாய் உயர்த்தினான் அவன். “எனக்கு வேணாம், ரேகா எனக்காக செஞ்சு வைச்சிருப்பா, நான் வீட்டில போய் சாப்பிட்டுக்கறேன்”
“பாருப்பா குடும்பஸ்தர் பேசுறதை. நல்லது அப்படியே செய்…” என்றுவிட்டு அவள் உண்ணுவதில் கவனமானாள்.
விஸ்வாவை பார்த்ததினால் மனதில் ஒரு குதூகலம் பிறந்திருந்தது. சீக்கிரமே அவன் இங்கு வந்துவிடுவான் என்று தோன்றியது அவளுக்கு. ஒரு வழியாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 
ரேகா, பாட்டி இருவரும் அவளுக்காய் காத்திருக்க அவர்களிடம் பேசிவிட்டு இவள் தன்னறைக்கு சென்று படுக்கையில் விழுந்தாள் விஸ்வாவை எண்ணிக் கொண்டே பயணம் செய்த களைப்பில்.
‘இந்நேரம் அந்த செயினை பார்த்திருப்பாரு. எப்படி இருக்கும் அவரோட ரியாக்சன்’ என்று தான் அவள் மனதிற்குள் எண்ணம் ஓடியது.
முதல் நாள் காலையில் நடந்தெல்லாம் கண் முன்னே வந்து போனது. ‘பயங்கரமா ஷாக் ஆகியிருப்பாரு. இதுக்கு அப்புறமாச்சும் என்னை புரிஞ்சா சரி… கடவுளே அவர் சீக்கிரம் இங்க வந்திடணும்…’ என்று வேண்டிக் கொண்டாள்.
——————–
“விஸ்வா”
“சொல்லு விஜய்…”
“நான் இன்னைக்கு நேரா அந்தேரி போய்டுவேன், ஒரு சைட் கன்ஸ்ட்ரக்ஷன் பாதியில நிக்குது. நான் நேரா போனா தான் வேலைக்கு ஆகும்”
“சங்கவி உன்னை இன்னைக்கு பிக்கப் பண்ணிக்குவாடா… ஈவ்னிங் உன்னை பார்க்கறேன், நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு விஜய் கிளம்ப “டேய் ஒரு நிமிஷம் நில்லுடா…” என்று விஸ்வா சொல்ல விஜய் பாதியில் நின்றான்.
“என்னடா??”
“நான்” என்று ஆரம்பித்தவன் “இல்லை வேணாம் நீ ஏதோ அவசர வேலையா போறே… நீ வேலையை முடிச்சிட்டு வா… நாம ஈவினிங் பேசலாம், சரியா” என்று சொல்ல விஜய் இவனை முறைத்தான்.
“கிளம்பிட்டு இருந்தவனை கூப்பிட்டு ஒண்ணுமே சொல்லாம இருந்தா என்னடா அர்த்தம்” என்று கடுப்பானான் அவன்.
“காலையிலேயே உன்னை கடுப்பேத்த வேணாம்ன்னு தான்டா, நீ போயிட்டு வா… வேலை முடிச்சிட்டு கூப்பிடு” என்றான் விஸ்வா.
“சரி எனக்கு டைம் ஆகுது, இல்லைன்னா இன்னைக்கு உன்னை ஒரு வழியாக்கியிருப்பேன். பை…” என்றுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான்.
சிறிது நேரத்தில் அந்த குடியிருப்பின் கீழே நின்றுக்கொண்டு சங்கவி இவனுக்கு போன் செய்ய வீட்டை பூட்டிவிட்டு இவன் இறங்கினான்.
இவன் ஏறிய பின்னே “கிளம்பலாமா??” என்று கேட்க இவன் தலையாட்டினான்.
வண்டியை கிளப்பியவள் “இப்படி வாயை மூடிட்டே இருந்தா என்ன தான் அர்த்தமோ” என்றாள்.
சங்கவி என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாதவனாய் அவளை திரும்பி பார்த்தான்.
“சரியான அமுக்குணி” என்றாள் தொடர்ந்து.
‘ஓ!! இவளுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு போல அதனால தான் இப்படி பேசிட்டு இருக்கா போல’ என்று எண்ணியதும் லேசாய் சிரிப்பு வந்தது அவனுக்கு.
“எதுக்கு சிரிக்கறே??”
“உனக்கு இப்போ என்ன வேணும்??”
“பிராடு!!”
இவன் சத்தம் போட்டு சிரித்தான்.
“இங்க பாரு என்னை கடுப்பேத்தாத சொல்லிட்டேன்”
“சரி என்ன பண்ணணும் நானு…”
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நீ ஏன் என்கிட்ட சொல்லலை?? எனக்கு எவ்வளவு எம்பரசிங்கா இருக்கு தெரியுமா??”
“எதுக்கு எம்பரசிங் உனக்கு??”
“பின்னே லூசு மாதிரி ஒரு ஆறு மாசம் பின்னாடி லவ்வு லவ்வுன்னு சுத்தினனே…”
“அது லவ்வே இல்லை…”
“அது இப்போ எனக்கு புரியுது, இருந்தாலும்…”
“அதெல்லாம் விடு… அதைபத்தி எதுக்கு நினைக்கிறே… எனக்கு அப்போவே தெரியும் உனக்கு என் மேல இருக்கறது லவ்வில்லைன்னு… அது வேறு ஈர்ப்பு மட்டும் தான்…”
“கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லியிருக்கலாம்ல…”
“விஜய் தவிர நான் யார்கிட்டயும் எதையும் ஷேர் பண்ணதில்லை. உன்கிட்ட சொன்னா நீ நம்பியிருப்பியா, நான் என்னமோ பொய் சொல்றேன்னு தோணியிருக்கும் உனக்கு…”
“ஒரு விஷயம் வேணாம்ன்னு வரும் போது அது வேணும்ன்னு மனசு அடம் பிடிக்கும், நீ அந்த மாதிரி ஒரு கேட்டகரி தான்…”
“உனக்கு சொல்லி புரியாது, உன்னை நீயா தான் உணரணும். உன் வயசு அப்படி காலேஜ் முடிச்சு நேரா முதலாளி ஆகிட்ட”
“இப்போ தான் உனக்கு பக்குவம் வர ஆரம்பிச்சிருக்கு. இனி ஒவ்வொண்ணா நீயே ஹாண்டில் பண்ணிப்பேன்னு எனக்கு தோணுது… பார்த்துப்ப தானே”
“கண்டிப்பா என்னால முடியும்… அப்புறம் ஏதோ சொன்னியே உன் வயசு அப்படின்னு, இனிமே அப்படிச் சொல்லாத, நான் ஒண்ணும் சின்ன பாப்பா இல்லை. பெரிய பொண்ணு தான் என்ன பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு எனக்கும் தெரியும்”
“நீ சொல்றது நான் அக்செப்ட் பண்ணிக்கறேன், நான் கொஞ்சம் பிடிவாதக்காரி தான். ஆனா கெட்ட பொண்ணெல்லாம் இல்லை, முதல்லவே உன்னோட கல்யாண மேட்டர் தெரிஞ்சிருந்தா கொஞ்சம் தள்ளி கூட நான் இருந்திருக்க வாய்ப்பிருக்கு…” என்றாள் இன்னமும் வருத்தம் மறையாத குரலில்.
“சரி சாரி உன்கிட்ட சொல்லாம விட்டது தப்பு தான்…” என்று இவன் இறங்கி வரவும் “இல்லை இதை கேட்க வேணாம்ன்னு விஜய் சொன்னான்…”
“எனக்கு மனசுல எதையும் வைச்சுக்க தெரியாது. பொய் சொல்லவும் வராது, அது உனக்கே நல்லா தெரியும். உள்ள ஒண்ணு வைச்சுட்டு வெளிய நடிக்கவும் எனக்கு வராது…”
“அதான் இப்போ தோணினதை கேட்டுட்டேன், தப்பா எடுத்துக்காத” என்றாள்.
“உன் பேச்சே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, எவ்வளவு நிதானம் தெரியுது தெரியுமா… உன்னோட இந்த குணம் தப்பில்லை, நீ எப்பவும் இப்படியே இரு… விஜய் வேற என்னெல்லாம் உன்கிட்ட சொன்னான்…”
“என்ன சொன்னான்னு கேளு??”
“அதை தானே கேட்டேன்…”
“அதாவது எதையுமே அவன் என்கிட்ட சொல்லவே இல்லை. இன்னைக்கு நாளைக்குன்னு தள்ளிப் போடுறான்… மே பீ உன்னோட பெர்சனலை எனக்கு சொல்லணும்ன்னு என்ன அவசியம்ன்னு நினைச்சிருப்பான் போல”
விஸ்வாவிற்கு புன்னகை விரிந்தது. நண்பனை குறித்து மனதிற்குள் பெருமிதமாக உணர்ந்தான்.
“அவன் தான் சொல்லலை நீ கூட சொல்ல மாட்டியா??”
“என்ன தெரியணும்??” என்றான்.
“அவங்க…”
“என்னோட வைப்” என்று சொல்லும் போதே உள்ளே ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது அவனுக்கு.
“அது தான் எனக்கு தெரியுமே புதுசா ஏதாச்சும் சொல்லேன், நீங்க லவ் மேரேஜா அரேன்ஞ் மேரேஜான்னு சொல்லுங்க…”
“இந்த கேள்வியை நீ அவகிட்டவே கேளு ஓகேவா…”
“ஏன் நீ சொல்ல மாட்டியா??”
“பதில் சொல்லத் தெரியலைன்னு வைச்சுக்கோ…”
“சரியான தண்ட தீவட்டிங்க நீங்க ரெண்டு பேரும், ஒரு கேள்விக்கு உங்ககிட்ட இருந்து பதில் வாங்க முடியுதா என்னால… நீங்க யாருமே சொல்ல வேணாம், நான் காஞ்சனாகிட்டவே கேட்டுக்கறேன் போங்க…” என்றாள்.
“ஹா ஹா…” என்று வாய்விட்டே சிரித்தான் அவன்.
“எதுக்கு இப்போ மறுபடியும் மறுபடியும் நீ சிரிக்கறே??”
“அவகிட்ட நீ பதில் வாங்கி தான் பாரேன்”
“எதுக்கு இப்படி பில்டப் பண்றே??”
“நீ அவகிட்டவே கேட்டுக்கோ…” என்று அவன் சொல்லவும் ஆபீஸ் வரவும் சரியாக இருந்தது.
வண்டியை பார்க்கிங்கில் விட்டு இருவரும் லிப்ட்டை நோக்கி சென்றனர். “ஆபீஸ் நீ பார்த்துக்கறியா??” என்றான் திடிரென்று.
“ஏன் நம்ம ரெண்டு பேரும் தானே பார்த்திட்டு இருக்கோம் இப்போ என்ன??”
“உன்னால தனியா மேனேஜ் பண்ண முடியுமா??”
“ஊருக்கு போகப் போறியா?? போயிட்டு வா… நான் உன்னைவிட சிறப்பா பார்த்துக்கறேன்…”
“தேங்க்ஸ்…”
“எனக்கு தேங்க்ஸ் சொல்லுவியா… ஆமா இந்த மித்ரன் அப்படிங்கற பேரு உண்மையா இல்லை விஸ்வாவா… முழு பேரு என்ன??”
“விஸ்வா… விஸ்வகர்மா…”
“வாவ் நைஸ் நேம்…”
“சரி ஊருக்கு போகப் போறேன்னு சொன்னியே எப்போ??” என்று அவள் கேட்டு கொண்டிருக்கும் போதே லிப்ட் அவர்கள் தளத்தில் நின்றது இறங்கி அலுவலகத்திற்கு சென்றனர்.
“ஈவ்னிங் பேசறேன் உன்கிட்ட, இப்போ எனக்கு நிறைய வேலையிருக்கு…” என்று அவனறைக்கு சென்றுவிட்டான்.
மறுநாள் மதியம் பிளைட்டில் விஸ்வா திருவனந்தபுரம் கிளம்பியிருந்தான்…

Advertisement