Advertisement

34
உள்ளே சென்று உடைமாற்றி வந்திருந்த விஜய் “என்னடா ரொம்ப காஸ்ட்லியான கிப்ட் போல உனக்கு…” என்றவாறே விஸ்வாவின் அருகில் அமர்ந்தான்.
“இது அவ ஏற்கனவே எனக்கு கொடுத்தது தான். நான் அவளுக்கு டெஸ்ட் வைச்சா பதிலுக்கு அவ எனக்கு ஒரு டெஸ்ட் வைக்குறா” என்றான் விஸ்வா.
“டெஸ்ட்டா?? என்ன டெஸ்ட்??”
“இந்த செயின்ல தான் கேமரா செட் பண்ணி வைச்சிருந்தா, நான் கண்டுப்பிடிச்சு திரும்பி அனுப்பிட்டேன் அவளுக்கே. இப்போ அதையே எனக்கு கொடுத்திருக்கா…”
“இதை போட்டுக்கிட்டா நான் தான் விஸ்வான்னு உறுதி பண்ணிடுவா, போடலைன்னா நான் தான் விஸ்வான்னு தெரிஞ்சதும் ஏன் போடலைன்னு கேப்பா…”
“இதுக்கு பின்னாடி இம்புட்டு பெரிய வில்லங்கம் இருக்காடா… ஆமா இதை நீ எப்படி சமாளிக்கப் போறே??”
“அது எப்படின்னு எனக்கு தெரியும்… அதை செய்யும் போது சொல்றேன்டா…”
“ஷப்பா ரெண்டு பேருமே வெரி டேஞ்சரஸ், போங்கடா நீங்களும் உங்க டெஸ்டும்…” என்றுவிட்டு எழுந்தான் விஜய். சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக “காலையில ஒரு பெரிய சம்பவம் நடந்துச்சாமே… அது என்னடா??” என்று ஒன்றும் தெரியாதவன் போல விஜய் கேட்க சோபாவில் வைத்திருந்த சின்ன குஷனை தூக்கி அவன் மேல் வீசினான் விஸ்வா.
“ஏன் சங்கவி உன்கிட்ட சொல்லலையா, அவ பார்த்திட்டு போனதை தான் நான் பார்த்தேனே…”
“ஏன் மச்சான் அந்த நேரத்துல கூட நீ சுத்தி என்ன நடக்குதுன்னு பார்த்தியா, நீயெல்லாம் மனுஷனே இல்லைடா…”
“அடிவாங்காம போயிருடா மரியாதையா…”
“போறேன்… போறேன்… உன்கிட்ட அடிவாங்குறதுக்கு பதில் என் ஆளுக்கிட்ட போயி கிஸ் வாங்கிக்குவேன்…”
“விஸ்வா இன்னைக்கு நான் இன்னொரு விஷயமும் கவனிச்சேன்”

அவன் கேள்வி கேட்காது கேள்வியாய் பார்த்தான் விஜயை.
“என்னன்னு கேளேன்??”
“கேக்கலைன்னா நீ சொல்லாம விடப்போறியா என்ன??”
“நிச்சயம் விடமாட்டேன்”
“அப்போ நீயே சொல்லிரு…”
“எங்க பாட்டி ஒரு பழமொழி ஒண்ணு சொல்லும்”
“அது…” என்று தீவிரமாய் யோசனை செய்தவன் “ஹ்ம்ம் ஞாபகம் வந்திடுச்சு. அதாவது ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுல போய் ஒளிஞ்சானாம், அந்த கதை தெரியுமா உனக்கு…”
“இதை எதுக்கு இப்போ சொல்றே??”
“ஏர்போர்ட்ல யாரோ எங்கப்பாவோட கார்ல வந்திருந்தாங்க போல. அதான்…”
“உனக்கெப்படி தெரியும்??”
“அப்பா கார் எடுத்திட்டு கிளம்பும் போது தான் பார்த்தேன்”

“அவரே சொல்லிட்டாரா…”
“எதுக்கு இதெல்லாம்??”
“வேறென்ன செய்ய சொல்ற, பார்க்காத வரைக்கும் ஒண்ணும் தோணலை. பார்த்ததும் அவளை விட முடியலை”
“ஒரே நாள்ல எனக்கு பைத்தியமே பிடிக்குது. அவளை எப்போ பார்த்தாலும் எனக்கு இது தான் நடக்குது” என்று விஸ்வா புலம்பினான்.
“அப்போ நீ பேசாம ஊருக்கு போக வேண்டியது தானேடா…”
“ஹ்ம்ம் போகணும்… நானும் அதே யோசனையில தான் இருக்கேன், பார்ப்போம்…”
“எங்கம்மா இருக்க வீட்டில ஏதோ பிரச்சனை போல, இந்த நேரத்துல நான் அங்க போறது சரியா வருமான்னு எனக்கு தெரியலை…”
“அவங்களை பத்தி நீயேன் யோசிக்கற, நீ காஞ்சனா கூட தானே இருக்க போறே, அப்புறமென்ன…”
“அவளே அவங்க அப்பாவோட பூர்வீக வீட்டில இருக்கா, எனக்குன்னு அங்க எதுவும் இல்லை விஜய்”
“இங்க பாரு விஸ்வா உனக்கு இங்க சொந்தமா ஒரு பிளாட் இருக்கு. நீ சம்பாதிக்கற, சங்கமித்ரால நானே எதிபார்க்காத வளர்ச்சியை கொண்டு வந்திருக்கேடா… இன்னும் நீ ஏன் தயங்குறே??”
“கொஞ்ச நாள் போகட்டும்…”
அவனின் தீவிரமான முகபாவம் பார்த்த விஜய் நண்பனை இலகுவாக்கும் பொருட்டு “ஆனா விஸ்வா, உன்னால எனக்கு நெறைய நன்மை நடந்திருக்குடா. இப்படி நடக்கும்ன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் அப்போவே காஞ்சனாவை இங்க வரச்சொல்லி சொல்லியிருப்பேன்…”
“என்ன சொல்றே??”
“அதான்டா காஞ்சனா வந்தா, என் லவ் சக்சஸ்… அடுத்து ஒரு விஷயம் நடந்துச்சா, அதை என் வாயால நான் சொல்ல மாட்டேன். அதை பார்த்திட்டு வந்து என் ஆளு இப்போவே கொடுத்தா தான் ஆச்சுன்னு நின்னுட்டா”
“என்ன சொல்லு உன்னால எனக்கு இப்போ தான்டா லாபம்…” என்று அவன் வெட்கப்படுவது போல செய்ய “வேணாம் நான் கொலைவெறில இருக்கேன் ஓடிரு…”
“இதுக்கு மேல நான் இருக்க மாட்டேன்பா, பை…” என்றுவிட்டு அவனறைக்குள் நுழைந்துவிட்டான்.
விஸ்வாவும் எழுந்து அவனறைக்கு சென்றுவிட்டான். கையில் இருந்த பணத்தையும் செயினையும் மாறி மாறி பார்த்தான்.
‘ரொம்ப தான் தன்மானம்’ என்று நொடித்துக் கொண்டான். விஸ்வா சில மாதங்களுக்கு முன் தான் காஞ்சனா தங்கியிருந்த அந்த சிங்கிள் பிளாட்டை வாங்கியிருந்தான்.
அவளை வரவைக்கும் எண்ணம் வந்ததுமே அங்கு தான் தங்க வைக்க வேண்டும் என்று அனைத்துமே பார்த்து பார்த்து வாங்கி வீட்டை நிறைத்திருந்தான்.
அவள் அது யாருடையது என்று அறியாமல் தான் வந்து தங்கியிருந்தாள். அதனாலேயே அதற்கான பணத்தை அவள் கொடுத்து சென்றிருந்தாள். இப்போது இன்னொரு கரத்தில் இருந்த செயினை பார்த்தான். அதை தற்போது என்ன என்றே அவனுக்கு புரியவில்லை. 
இந்நேரம் பிளைட் ஏறி இருப்பாள், பாதி தூரம் கூட சென்றிருக்கும் என்று அவள் ஞாபகமாகவே இருந்தது அவனுக்கு.
காலையில் அவள் அதை மட்டும் செய்திருக்கவில்லை. அந்நிகழ்வுக்கு பின் யாரோ போன் செய்ய “ஹலோ அமுதா” என்று சொல்லிவாறே காதில் வைத்தாள்.
ரேகாவுக்கு அது ஐந்தாம் மாதம் போல, ஸ்கேன் எடுக்க சென்றதை பற்றி விசாரிக்கிறாள். பின் போனை வைத்துவிட்டு வந்து மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
வராத போனில் அவள் கதை சொல்லுவது கூடவா அவனுக்கு தெரியாது, அதை எண்ணி இப்போது அவன் இதழ் வளைந்தது. ஆனாலும் காலையில் இப்படி ஒரு அதிர்ச்சியை அவள் அளிப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை தான்.
“நீ கொடுத்ததை வட்டியும் முதலுமா சேர்த்து கொடுக்கிறேன் காஞ்ச்சு” என்று சொல்லும் போது அவன் இதழோரம் குறுஞ்சிரிப்பு ஓடியது. கூடவே அம்மா, தங்கை ஞாபகம் வேறு வந்தது.
அவர்களை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் அதிகமாகியது. விரைவில் இங்கிருக்கும் வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
காஞ்சனாவிற்கு நேராய் திருவனந்தபுரம் செல்லும் பிளைட் கிடைக்கவில்லை. இடையில் பெங்களூரு சென்று அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு வேறு பிளைட் பிடிக்க வேண்டும்.
அவள் பெங்களூரு வந்திறங்கினாள். காலை எட்டு மணிக்கு பெங்களூரில் இருந்து பிளைட் அவளுக்கு. ஒருவழியாய் அதில் ஏறி திருவனந்தபுரம் வந்தடைந்திருந்தாள்
திருவனந்தபுரம் செல்லும் பிளைட்டில் ஏறியதும் அவளுக்கு தூக்கம் கண்களை செருகியது. அப்படியே படுத்து உறங்கிவிட்டாள், இரண்டு நாட்களாய் உறக்கம் சரியாய் இல்லை.
தவிர விஸ்வாவை வேறு பார்த்திருக்கிறாளே அது தந்த நிறைவு என்று தான் தூங்கியிருந்தாள். அவளை யாரோ உலுக்கவும் தான் கண் விழித்தாள்.
சீட் பெல்ட் போடச்சொல்லி அவர்கள் அறிவுறுத்த அவர்கள் சொன்னதை செய்தாள். சில மணித்துளிகளில் விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்கியது.
ஏர்போர்டில் இருந்து அவள் வெளியில் வர அமுதன் அவளை நோக்கி வந்தான். மும்பை கிளம்புவதற்கு முன் இருந்த அவள் முகமும் தற்போது அவள் முகமும் ஏதோ அவனுக்கு வித்தியாசமாய் பட்டது.
அவளின் அகத்தின் அழகு முகத்தில் காட்டிக் கொடுத்தது. அதை கண்டும் காணாதது போல இருந்தவன் அவள் உடைமைகளை எடுத்து காரில் வைத்தான்.
“மாலுக்கா சாப்பிட்டியா??”
“இல்லைடா போற வழியில எதாச்சும் வாங்கிக் கொடேன் சாப்பிடணும் ரொம்ப பசிக்குது…”
“ஹ்ம்ம் சரி” என்றவன் கார் டிரைவரிடம் அருகில் இருக்கும் நல்ல ஹோட்டலுக்கு வண்டியை விடச் சொன்னான்.
“எதாச்சும் ரோடு கடையில கூட சாப்பிட்டுக்கலாம்டா”
திரும்பி அவளைப் பார்த்தவன் டிரைவரை பார்க்க “இங்க போற வழியில ஒரு நல்ல ரோடு கடை இருக்கு, ரொம்ப நல்லா இருக்கும் அங்க நான் வண்டியை நிறுத்தறேன்” என்றான் அவன்.
“ஓகேவா மாலுக்கா…”
“ஹ்ம்ம் ஓகே தான்…”
“அப்புறம்”
“நீ தான் சொல்லணும், இங்க என்னாச்சு??”
“நீ தான் சொல்லணும் அங்க என்னாச்சுன்னு, ஏன்னா இங்க என்ன நடந்ததுன்னு நான் எல்லாமே சொல்லிட்டேன் உங்கிட்ட, நீ தான் எதுவுமே சொல்லலை…” அவன் குரலில் குற்றம் சாட்டும் தொனி தெரிந்தது.

Advertisement