Advertisement

33
விஜயின் அலுவலகத்திற்கு வந்திருந்தாள் சங்கவி. அவன் அறைக்குள் நுழைய அவன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.
“விஜய் எனக்கு அர்ஜென்ட்டா கிஸ் வேணும்” என்றாள்.
அவன் இவள் என்ன சொல்கிறாள் என்பதை கவனியாதவன் “உட்காரு எடுத்து தரேன்” என்று லேப்டாப்பில் இருந்து தலையை தூக்காமலே சொன்னான்.
“என்னது எடுத்து தர்றியா எங்க இருந்து எடுத்து தருவ, நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லிட்டு இருக்கே??” என்றாள் அவள்.
“என்ன கேட்டே??” என்றவன் இப்போது நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“எனக்கு கிஸ் வேணும்??”
“என்ன வேலை செஞ்சுட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு வந்து என்ன கேட்டுட்டு இருக்க, இது ஆபீஸ்” என்றான் அவன்.
“அவங்க மட்டும் ஆபீஸ்ல அப்படி செய்யலாமா??”
“யாரு??”
“மித்ரனும், காஞ்சனாவும்…” என்று அவள் சொல்லவும் ‘என்னாது’ என்று அதிர்ந்தான் விஜய்.
“அந்த பொண்ணு கல்யாண ஆனா பொண்ணுன்னு இந்த மித்ரனுக்கு தெரியாதா?? அவ புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகும்”
“புருஷனே அவன் தானே”
“என்னது??” என்று இப்போது அதிர்வது அவளின் முறையானது.
“ஏன் என்கிட்ட சொல்லலை?? இன்னும் என்னெல்லாம் மறைச்சிருக்கே நீ?? சொல்லு இப்போவே…” என்று நின்றாள்.
“இப்போலாம் எதுவும் உன்கிட்ட சொல்ல முடியாது, இன்னொரு நாள் சொல்றேன்” என்றான் அவன்.
“நீ சொல்லைன்னா நான் அவன்கிட்டவே கேட்பேன் இப்போவே”
“லூசு பேசாம கிளம்பு…”
“அப்போ கிஸ் கொடு”
“ஏன்டி இம்சை பண்றே??”
“என்னம்மா கிஸ் பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா அவங்க… உன்கிட்ட நானே லவ் சொல்லி நானே இதெல்லாம் செய்யணும் போல, உனக்கு ஒண்ணுமே தெரியலை…” என்று அவனை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள் அவள்.
அவன் அறைக்கதவு லேசாய் தட்டப்பட்டு பின் உள்ளே நுழைந்தார் அவனின் தந்தை. சங்கவியை பார்த்து புருவம் சுருக்கியவர் “நீ இங்க என்னம்மா பண்றே உன் ஆபீஸ்ல இல்லாம” என்றார்.
“அது வந்து மாமா…” என்று அவள் இழுக்க “ஒரு வேலையா நான் தான்பா வரச் சொன்னேன்…” என்றான் அவன்.
“என்ன வேலை??”
“அந்த ஜுஹு பில்டிங் விஷயமா பேசத்தான்…” என்று கோர்வையாய் அவனே சொன்னான். “நீ போய் மித்ரனை வரச்சொல்லு…” என்று இவளுக்கு கண்ணை காட்டினான்.
“நான் எப்படி அவங்களை டிஸ்டர்ப்…” என்று அவள் ஆரம்பிக்க இவன் பல்லைக் கடித்தான்.
“போ… போய் அவனை வரச் சொல்லு கையோட காஞ்சனாவும் கூட்டிட்டு வரணும்ன்னு சொல்லிடு…” என்று அவளுக்கு சைகை செய்து அனுப்பினான். 
அவள் அவன் தந்தையின் பின்னாலிருந்து இவனை வம்பு செய்துக் கொண்டிருந்தாள் முத்தம் கொடுக்குமாறு.
தந்தையிடம் பேசுவதும் இவளை முறைப்பதும் அவன் பாடு திண்டாட்டமாய் இருந்தது. செல்லும் முன் காற்றில் முத்தத்தை இவள் பறக்கவிட அவன் நிலை சொல்லவும் வேண்டுமா.
விஸ்வா அதிர்ந்து நின்றுவிட்டான். காஞ்சனா இப்படி செய்வாளென்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளாகவே சில நொடிகளில் அவனை விட்டு விலகியவள் எம்பி அவன் கன்னத்தில் மீண்டுமொரு முத்தம் வைத்து அறைக்கதவை திறந்து வெளியேறினாள்.
ஷிவானியிடம் ஆங்கிலத்தில் கீழே அழைத்து செல்லுமாறு கூற அவள் உடன் வந்து அவளை விஜயின் அலுவலகத்தில் விட்டுச் சென்றாள்.
“எங்க அந்த பொண்ணு??” என்று கேட்டுக் கொண்டிருந்தார் விஜயின் தந்தை.
“விஜய்…” என்று இவள் உள்ளே நுழைந்தாள் சரியாய்.
“இதோ வந்திட்டாங்கப்பா…” என்று சொல்லி இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தான்.
ஒரு நொடி அவளை பார்த்து நின்றவர் அடுத்த நொடி சாதாரணமாய் இருந்தார். அவள் காட்டிய மாதிரிகளை வாங்கி பார்த்தார், விஜய் முன்னமே தேர்வு செய்திருந்தது போதாதென்று அவரும் இன்னும் சில மாதிரிகளை தேர்வு செய்தார்.
இறுதியாக டெர்ம்ஸ் பற்றி அவர் பேச ஆரம்பிக்க, அவள் விஜயின் முகத்தை பார்த்தாள்.
‘இந்த பொண்ணு எதுக்கு இப்போ என்னை பார்க்குது’ என்று புரியாமல் விழித்தான் அவன்.
“டெர்ம்ஸ் எல்லாம் இப்போவே பேசிடணுமா சார்??”
“ஆப்கோர்ஸ்மா நீ இங்க இருக்கும் போதே எல்லாம் தெளிவா பேசிட்டா நல்லது தானே”
விஜயின் தந்தையிடம் “இல்ல டெர்ம்ஸ் எல்லாம் நான் ஊருக்கு போயிட்டு மெயில் பண்ணலாமா??” என்று இவள் சொல்ல “எதுக்கு?? இப்போவே சொன்னா என்ன??” என்று அங்கு வந்து நின்றான் மித்ரன்.
விஜய் தான் அவனுக்கு அழைத்திருந்தான். ஒரு வேளை அவள் விஸ்வாவை எதிர்பார்க்கிறாளோ என்று.
“வா மித்ரா வா உட்காரு…” என்றார் விஜயின் தந்தை.
“தேங்க்ஸ் அங்கிள்…” என்று அமர்ந்தவன் “சொல்லுங்க காஞ்சனா டெர்ம்ஸ் பத்தி இப்போவே பேசினா என்ன?? எதுக்கு ஊருக்கு போய் மெயில் அனுப்பணும்??”
அவன் வரவிற்காகவே காத்திருந்தாற் போன்று “இப்போ பேசலாமே…” என்றவள் அவனை பார்த்து குறும்பாய் சிரிக்க அவன் தான் அயர்ந்து போய் நின்றான். விஜய் அங்கு நடப்பதை ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 
முக்கியமாக அவர்கள் இருவரின் முகபாவங்களை இவன் உன்னிப்பாய் பார்த்திருந்தான். ஒரு வழியாய் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. அவளை இருந்து அக்ரீமென்ட்டில் கையொப்பம் இட்டு பின் ஊருக்கு கிளம்பச் சொன்னார்கள்.
அவள் அன்றே கிளம்ப வேண்டும் என்று சொல்ல அக்ரீமென்ட்டை கொரியர் செய்வதாக சொல்லிவிட்டான் விஜய்.
மித்ரன் விஜயின் தந்தையிடம் விடைப்பெற்று சென்றுவிட்டான். விஜய் தான் அவளை கூட்டிச் சென்று வீட்டில் விட்டு வந்தான். 
அவளின் பிளைட் நேரம் எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டவன் அவளை தயாராய் இருக்குமாறு கூறிவிட்டு சென்றான்.
காஞ்சனாவிற்கு மனம் லேசான உணர்வு. எதுவும் எடுத்து வைக்க வேண்டும் என்றில்லை, எல்லாமே தயாராய் தான் இருந்தது. மதிய உணவை இவர்கள் வீட்டிற்கு வரும் போதே விஜய் வாங்கி கொடுத்திருந்தான்.
திடிரென்று ஒரு யோசனை தோன்ற விஜய்க்கு அழைத்து விட்டாள். அவளின் அழைப்பை கண்டு உடனே எடுத்தவன் “சொல்லுங்க” என்றான்.
“எனக்கு ஒரு உதவி”
“என்னன்னு சொல்லுங்க??”
“இங்க நியர் பை மால் எதுவும் இருக்கா, இல்லை ஷாப்பிங் பண்ற மாதிரி இடம் இருந்தாலும் சொல்லுங்க…”
“என்ன வாங்கணும் உங்களுக்கு??”
“அது அங்க போய் தான் முடிவு பண்ணணும், டிரஸ்சஸ் கொஞ்சம் எடுக்கலாம்ன்னு இருக்கேன்” என்றாள்.
“சரி நான் கேப் அரேன்ஜ் பண்றேன்”
“தேங்க்ஸ்” என்றுவிட்டு அவள் வைக்க அவன் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் போன் செய்தான்.
வண்டி தயார் செய்துவிட்டதாக கூறி அவளை தயாராய் இருக்குமாறு சொன்னான்.
“அவங்க நம்பர் கொடுங்க நான் பேசறேன்” என்று இவள் கேட்க “அவங்க நேரா ரூம்க்கு வருவாங்க, வந்து கூப்பிடுவாங்க” என்று சொல்லி வைத்துவிட்டான்.
சில பல நிமிடங்களுக்கு பின் அழைப்பு மணி ஒலிக்க இவள் வெளியில் சென்று பார்த்தால் சங்கவி நின்றிருந்தாள்.
“உள்ள வாங்க…” என்று இவள் அழைக்க “வெளிய போகணும்ன்னு சொன்னீங்களாமே அதான் கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றாள் அவள்.
“இல்லை விஜய் கேப் அரேன்ஜ் பண்றேன்னு சொன்…” என்று அவள் முடிக்கவில்லை சங்கவி கேள்வி கேட்டாள்.
“ஏன் என் கூட வரமாட்டீங்களா??” என்று.
“நான் அதுக்கு சொல்ல வரலை. உங்களுக்கு எவ்வளவு வேலை இருக்கும் உங்களை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணாங்கன்னு தான்…” என்று சங்கடமாய் பேச “அதெல்லாம் பரவாயில்லை நீங்க ரெடியா தானே இருக்கீங்க, கிளம்புவோமா” என்று கேட்க இவள் வீட்டை பூட்டி அவளுடன் சென்றாள்.
ஒரு பெரிய மாலிற்கு அவளை அழைத்துச் சென்ற சங்கவி அவளை பார்க்கவிட்டு தள்ளி நின்றுக் கொண்டாள்.
அவளும் அவளுக்கு தேவைப்படுவதை வாங்க எண்ணி விலை பார்த்துக் கொண்டிருந்தாள். இவளை நோக்கி வந்த காஞ்சனா, “புடவை எடுக்கணும்” என்று சொல்ல “அப்போ மத்த பர்சேஸ் எல்லாம் முடிஞ்சதா??” என்றாள்.
“ஹ்ம்ம் முடிச்சிட்டேன்”
“சரி வாங்க” என்றவள் காஞ்சனா கேட்டது போல் கடைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு சில நிமிடங்கள் செலவு செய்தவள் இவளை பார்த்து கிளம்பலாம் என்று சொல்ல சங்கவி இவளை அதிசயமாய் தான் பார்த்தாள்.
“உலகத்திலேயே இவ்வளவு சீக்கிரமா பர்சேஸ் பண்ண ஒரே லேடி நீங்களா தான் இருப்பீங்க. சூப்பர் பாஸ்ட் போங்க, நானெல்லாம் ஒரு நாளெல்லாம் பார்த்தாலும் சட்டுன்னு வாங்கிட மாட்டேன்…”
“எனக்கு வாங்கலை, எனக்கு வாங்கினாலும் இவ்வளவு நேரம் எல்லாம் எடுக்க மாட்டேன்…” என்றாள் அவள்.
“நேரமாச்சு பிளைட்க்கு இன்னும் இரண்டரை மணி நேரம் தான் இருக்கும், வீட்டுக்கு போக லேட் ஆகுமா” என்றாள்.
“இல்லை நான் சீக்கிரமே கூட்டிட்டு போய்டறேன்” என்றவள் காஞ்சனாவை அழைத்துக்கொண்டு சென்றாள்.
அடுத்த அரைமணியில் அவர்கள் வீட்டிலிருக்க விஜய் வந்திருந்தான். அவள் எதிர்பார்த்தவன் வந்திருக்கவில்லை.
வருத்தம் தான் இருந்தாலும் அதை பெரிதாய் காட்டிக்கொள்ளவில்லை. “கிளம்பலாமா??” என்றான் விஜய்.
“ஹ்ம்ம் நான் போய் என்னோட திங்க்ஸ் எடுத்திட்டு வந்திடறேன்” என்று அவள் அறைக்கு சென்றாள். சில நொடிகளில் அவள் உடைமைகளுடன் வெளியில் வந்தாள்.
“ஒரு டீ சாப்பிட்டு கிளம்பலாமா??”
“இப்போவா??”
“இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வந்தேன்ல ரெப்ரெஷ்க்காக ப்ளீஸ்” என்று சொல்ல “சரி” என்றாள் அவளும்.
“சங்கவி உள்ள கூட்டிட்டு வா…” என்று அவளை பார்த்து சொல்லிவிட்டு இவன் முன்னே சென்று கதவை திறந்தான்.
“மெயிட் டீ போட்டு வைச்சிருப்பாங்களா இல்லை இனிமே தான் போடணுமா??” என்று கேட்டாள் காஞ்சனா.
“இல்லை இனி தான் போடணும், அது ஒரு டூ மினிட்ஸ் தான் நான் போட்டிருவேன்” என்றான் அவன்.
“நான் போடுறேன் நீங்க போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க. சங்கவி எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா??”
“யாரு அவளா?? அவளுக்கு அடுப்பை பத்த வைக்கக்கூட தெரியாது காஞ்சனா” என்றவனை முறைத்தாள் சங்கவி.

Advertisement