Advertisement

32
“ஹாய் என்னடா இங்க நிக்கறே??” என்றவனை பார்வையால் சுட்டெரித்தான் விஜய்.
“ப்பா என்ன அனல்?? என்ன அனல்??” என்று காஞ்சனாவை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல விஜயோ “இப்போ தான் வர்றியா??”
“ஹ்ம்ம் ஆமாடா காஜலை பார்த்திட்டு இப்போ தான் வர்றேன். அவளும் என்னோட ஆபீஸ்க்கு வர்றேன்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன்…”
“ஹாய் விஜய்” என்றாள் அப்பெண் காஜல் தேனொழுக.
“ஹாய் காஜல்”
“விஜய் வண்டி வந்தாச்சா” என்றாள் காஞ்சனா எங்கோ பார்வையை வைத்துக்கொண்டு. அவள் கண்கள் உடைப்பெடுத்துவிடுவேன் என்றிருக்க அவளால் அங்கிருக்கவே முடியவில்லை.
“ஹலோ மிசஸ் காஞ்சனா, மீட் மை கேர்ள் பிரண்ட் காஜல் நேத்து சொன்னேன்ல அவ தான் இவ…” என்று அறிமுகம் செய்ய காஞ்சனாவோ “அவ்வளவு தானா இல்லை இன்னும் மிச்சமிருக்கா??” என்று கோபமாகவே கேட்டாள் அவனைப் பார்த்து
அந்த கோபத்தை ரசித்தவன் அதை மறைத்துக்கொண்டு அவளிடம் “வாட் யூ மீன்??” என்றான்.
“என்னை ரொம்பவே ஹர்ட் பண்ணணும்ன்னு தானே இதெல்லாம் செய்யறீங்க??”
“நான் ஏன் அப்படியெல்லாம் செய்யணும்??” என்றான் கூலாய்.
“ஏன்னா நீங்க தான் விஷ்வா?? என்னை பழிவாங்கணும்ன்னு இப்படியெல்லாம் செய்யறீங்க”
“கொஞ்சம் வாயை மூடறீங்களா எப்போ பார்த்தாலும் விஷ்வா விஷ்வான்னு என்னை வெறுப்பேத்திட்டு இருக்கீங்க. யாருங்க அந்தாளு என்னை ஏன் அவனோட சேர்த்து பேசறீங்க”
“இதுக்கு மேல அவனோட என்னை பேசுனீங்க நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று மிகக்கடுமையாகவே முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல அவள் கன்னத்தில் ஈரத்தின் கோடுகள்.
மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் அவன் உள்ளே சென்றுவிட விஜய் தான் அவளை தவிப்பாய் ஒரு பார்வை பார்த்தான்.
“சாரி காஞ்சனா அவன் எப்பவும் இப்படி தான் கொஞ்சம் கோபக்காரன், மத்தப்படி நல்லவன் தான். நீங்க ஏன் எப்போ பார்த்தாலும் அவனை விஷ்வான்னே சொல்லிட்டு இருக்கீங்க. அதான் அவன் டென்ஷன் ஆகறான். அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்று சொல்ல காஞ்சனா பதிலே பேசவில்லை.
அதற்குள் அங்கு அவன் சொல்லியிருந்த வண்டி வந்துவிட “வண்டி வந்திடுச்சு” என்றான் விஜய்.
“தேங்க்ஸ்” என்றுவிட்டு பின்னிருக்கையில் ஏறி அமர்ந்துக்கொண்டு அவனைப் பார்த்து தலையசைத்தாள்.
அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பணத்தை கொடுக்க அவள் பர்சை திறக்க அவரோ ஆங்கிலத்தில் ஏற்கனவே காசை கொடுத்துவிட்டார்கள் என்று சொன்னார்.
அவரிடம் தலையசைத்து அவள் லிப்ட்டில் நுழைந்து அவள் தங்கிருந்த தளத்திற்கு வந்து சேர்ந்தாள். அறைக்குள் நுழைந்து முதல் நாள் போலவே தலையணையில் தஞ்சம் அடைந்தாள்.
தனக்கு இது தேவை தான் என்று சொல்லி சொல்லி அழுதாள். விஸ்வா அவளை என்ன சொல்லி வெறுப்பேற்றி இருந்தாலும் பேசாமல் இருந்திருப்பாள் போல அவனை ஒரு பெண்ணுடன் பார்க்க பார்க்க அவளுக்கு தாள முடியாமல் போனது.
அழுது அழுது தொண்டை தண்ணீர் வற்றி போனது அவளுக்கு. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்துக் கொண்டாள்.
அங்கு அலுவலகத்தில் விஜய் விஸ்வாவை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தான்.
“உனக்கெல்லாம் அறிவே இல்லைடா”
“அதனால தானே எல்லாரும் என்னை ஈஸியா ஏமாத்திட்டாங்க” என்று அவன் விரக்தியாய் சொல்ல விஜய் சற்று அமைதியானான்.
“சும்மா அதே சொல்லிட்டு இருக்காத. ஆம்பிளைங்க நாம சட்டுன்னு அழுதிட மாட்டோம். ஆனா லேடிஸ் ரொம்ப சென்சிடிவ்டா இது போல விஷயத்துல எல்லாம்”
“ஏன் அவங்க மட்டும் தான் சென்சிடிவ் பொசசிவ்வா இருப்பாங்களா, எனக்கும் அப்படி தான். அவளைவிட எனக்கு தான் அதிகம் வலிக்குது”
“அதுக்காக காஜலை கூட்டிட்டு வந்து அவங்களை வெறுப்பேத்துவியா, ஆர் யூ ஹாப்பி வாட் யூ டிட்”
“நோ”
“அப்புறம் ஏன்??”
“தெரியலை” என்றான் உணர்ச்சி தொலைத்த முகத்துடன்.
அவன் முகத்தை கண்ட விஜயோ நிலைமையின் தீவிரம் உணர்ந்து “விஸ்வா” என்று உலுக்கினான்.
“என்ன??”
“ஏன்டா இப்படியிருக்கே??”
“நானும் சந்தோசமா இல்லைடா. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. என் சந்தோசத்தை நானே தான் உதறிட்டு வந்திருக்கேன்”
“அது உன் பக்கத்துல தானேடா இருக்கு”
“பக்கத்துல இருந்தாலும் மனசளவுல தொலைவா உணர்றேன் விஜய்…”
“நீ பேசிப் பாரேன்டா”
“பேச எதுவுமில்லை. எனக்கு தெரியணும்”
“என்ன தெரியணும்??”
“அவளை நான் மட்டும் தான் விரும்பினேனான்னு தெரியணும்”
“அதுக்கு பதில் தான் உனக்கு தெரியுமே”
“தெரியாது, நான் விரும்பினது மட்டும் தெரிஞ்சு என்ன செய்ய… நான் முட்டாள்ன்னு எல்லாரும் சொன்னாங்க, இவளும் என்னை முட்டாள் ஆக்கித்தானே வைச்சிருந்தா…”
“விஸ்வா ப்ளீஸ் இப்படிலாம் பேசாத”
“பேசக்கூடாதுன்னு நினைச்சாலும் முடியலை”
“மனசெல்லாம் ரணமா கிடக்கு விஜய்”
“விஸ்வா நீ போய் வேலையை பாரு. நாம அப்புறம் பேசுவோம்”
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு “நான் நல்லா தான் இருக்கேன். நீ அவளுக்கு போன் பண்ணி வீட்டுக்கு சேபா போயிட்டாளான்னு கேட்கறியா??”
“முட்டாள்டா நீ!!” என்று நண்பனை திட்டிவிட்டு கைபேசியுடன் நகர்ந்தான் விஜய்.
சில நொடிகளில் திரும்பி வந்தவன் “வீட்டுக்கு போய்ட்டாங்களாம். ஏன் கேப்க்கு பே பண்ணீங்கன்னு சத்தம் போடுறாங்க… வாய்ஸ் என்னமோ மாதிரி இருக்கு”
“நான் கேட்டனா??”
“என்ன சொல்ற??”
“அவ வாய்ஸ் எப்படி இருக்குன்னு நான் கேட்டனா இப்போ??”
“நீ கேட்டு நான் சொல்லலைன்னாலும் உனக்கே தெரிஞ்சிருக்கும். யப்பா சாமி என்னை ஆளை விடுங்கடா” என்றான் விஜய்.
“விஸ்வா”
“என்ன??” என்றவன் நண்பன் சொல்ல வருவது புரிய “சரி ஓகே நான் அவகிட்ட பேசறேன்”
“நிஜமாவா” என்றான் விஜய் சந்தோசமாய்.
“விஸ்வாவா இல்லை மித்ரனா தான் பேசப் போறேன்”
“என்னமோ பண்ணித்தொலை”
“நீ தான் ஹெல்ப் பண்ணணும்”
“மறுபடியும் முதல்ல இருந்தாடா”
“சரி வா நாமளும் வீட்டுக்கு கிளம்பலாம்…”
“ராசா நீ வெளி வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்திட்ட, நான் காலையில இருந்து உன் பஞ்சாயத்து தான் பண்ணிட்டு இருந்தேன். என் வேலையை நான் எப்போ பார்க்கறது”

“ஒரு ஒன் ஹவர் வெயிட் பண்ணு, நான் முடிச்சுட்டு வர்றேன்”
“என்னால முடியாது, நான் வீட்டுக்கு கிளம்பறேன்”
“சரி கிளம்பு, கார் வேணா எடுத்திட்டு போ. நான் சங்கவி கூட வந்திடறேன்”

“தேங்க்ஸ் மச்சி” என்றுவிட்டு விஸ்வா அங்கிருந்து கிளம்பினான்.
காஞ்சனாவை அழவைத்து விட்டு அவனொன்றும் சந்தோசமாயிருக்கவில்லை. காஞ்சனாவை நம்ப வைக்க தான் காஜலை அழைத்து வந்திருந்தான். அதுவும் அவளை லேசாய் சீண்டிப் பார்க்கத் தான்.
அதற்கு அவள் கொடுத்த பதில் முதலில் அவனுக்கு சிரிப்பை தான் வரவழைத்தது. பின்னர் தான் அவள் விடாமல் தான் பழிவாங்க தான் செய்தது என்று பேசவும் அவனுக்கும் கோபம் வந்துவிட்டது.
அவள் கண்ணீர் கண்டு அவன் நெஞ்சம் வருந்திப் போனது. இதோ அவளை பார்க்க வேண்டும் என்று தான் வீட்டிற்கும் கிளம்பிவிட்டான்.
என்னை தான் எப்பவும் அவ பின்னாடி சுத்த வைக்குறா, நான் ஏன் இப்படி இருக்கேன் என்று அவனை அவனே கேட்டுக் கொண்டாலும் அந்த உணர்வு அவனுக்கு சுகமாகவே இருந்தது.
வண்டியை பார்க்கிங்கில் விட்டுவிட்டு இதோ அவர்கள் அறையின் வாயிலுக்கும் வந்துவிட்டான். ஆனால் கால்கள் உள்ளே செல்ல மறுத்து அவள் அறைக்கதவை நோக்கி எட்டி நடைப்போட்டது.
கைகள் மேலே உயர்வதும் பின் இறக்குவதுமாய் சில நொடிகள் இருந்தவன் அழைப்புமணியை அழுத்தியேவிட்டான்.
ஹாலிலேயே அவள் அமர்ந்திருக்க அழைப்புமணியின் ஓசையில் மெதுவாய் எழுந்து வந்து கதவை திறந்தவளின் முன்னே விஸ்வா நிற்க அப்படியே சிலையென நின்றாள்.
விஸ்வாவோ அவளை பார்த்ததும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று லேசாய் தடுமாறி பின் ஒருவழியாய் “சாரி” என்றிருந்தான்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை அவன் எதற்கு மன்னிப்பு கோருகிறான் என்று.
“நான் அவ்வளவு ஹார்ஷா பேசியிருக்க தேவையில்லை. அதான் சாரி” என்றுவிட்டு அடுத்த நொடி நகர்ந்துவிட்டான்.
இன்னும் ஒரு நிமிடம் சேர்ந்தாற்போல் அங்கு நின்றாலும் அவன் மனம் கவர்ந்தவளை கவர்ந்து சென்றிட சொன்னது அவன் நெஞ்சம்.
காஞ்சனாவிற்கு அவன் வருத்தம் தெரிவித்தது தாங்க  முடியாமல் போனது. எல்லாம் என்னால தான் நான் இங்க வந்திருக்கவே கூடாது என்று சொல்லிக் கொண்டாள்.
விஸ்வா அறைக்கு சென்றவன் உடையை கூட மாற்றாமல் பால்கனியில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.
கண்கள் கடலை வெறித்திருக்க உடல் தகித்திருக்க அதை குளிர்விக்க வழி தேடி அலைப்புற்றிருந்தான்.
அன்றைய பொழுது அவர்களுக்கு அப்படியே சென்றது, இரவு உணவு அவளுக்கு விஜயின் வீட்டில் இருந்து சென்றுவிட மறுநாள் காஞ்சனா அவர்களுடன் அலுவலகத்திற்கு வரவில்லை என்று சொல்லிவிட்டிருந்தாள்.
“இப்போ உனக்கு திருப்தியா??”
“ரொம்ப சந்தோசம் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அவளை நான் பாதிக்கறேன் தானே…”
“அவளை நீ பாதிக்கறியோ இல்லையோ, நீ ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கன்னு எனக்கு தோணுது” என்று விஜய் சொல்ல விஸ்வா வாய்விட்டு சிரித்தான்.
“நான் இப்போ என்ன ஜோக் சொல்லிட்டேன்னு நீ சிரிக்கற??”
“உண்மையை நினைச்சேன் சிரிச்சேன்”
“என்ன உண்மை??”
“என்னை பார்த்தா உனக்கு பைத்தியம் மாதிரி தோணுதா விஜய்”
“நோப்”
“அப்புறம் நீ என்ன நினைக்கிறே??”
“உன்னை நீயே வருத்திக்கறன்னு நினைக்கிறேன்”
“ஹ்ம்ம் அப்புறம்”
“வேறேன்னன்னு நீயே சொல்லு, நமக்கு அவ்வளவு எல்லாம் யோசிக்க வராது”
“இது காதல்… என் காதல் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது”
“அடுத்தது என்ன அபிராமி அபிராமி தானே” என்றான் விஜய் அவனை முறைத்தவாறே.
“சீரியசா பேசிட்டு இருக்கும் போது எதுக்குடா காமெடி பண்ணிட்டு இருக்க??” என்றான் தொடர்ந்து.
“நீ ரொம்ப சீரியசா பேசிட்டு இருந்தியா அதான் நான் இப்படி பேசுனேன்”
“விஸ்வா என்னாச்சு உனக்கு??”
“நத்திங்டா எனக்கொண்ணும் இல்லை. அதுவும் இப்போ ரொம்ப சந்தோசமா வேற இருக்கேன், காஞ்ச்சு வேற பக்கத்துல இருக்கா எனக்கென்ன வேணும் சொல்லு”
“அவளோட நீயும் இருக்க வேணாமா??”
“இருக்கணும் வெயிட் பண்ணட்டும் அவ, என்னோட மனசுக்கு இன்னும் தோணலை”
“என்ன தோணனும்??”
“ஊருக்கு போகணும்ன்னு தோணனும்” என்று விஜயிடம் சொன்னான்.
“எங்க இருந்துடா வந்த நீ… உனக்கு பிரண்டா இருக்கறதுக்கு என்னைய வேற எல்லாத்துலயும் கோர்த்து விடுறடா நீ”
“விடு விடு பார்த்துக்கலாம். நாளைக்கு அப்பாவை ஆபீஸ்க்கு வரச்சொல்லிடு…”

“இன்னைக்கே வர சொல்லியிருக்கலாம்”
“அப்போ அவ இன்னைக்கே கிளம்பிருவா”
“நாளைக்கும் அது தான் நடக்கும்”
“எனக்கு இன்னைக்கு ஒரு நாள் இருக்கே??”
“இன்னைக்கு நீ என்னத்தை கிழிக்கப் போறே மறுபடியும் அவளை வெறுப்பேத்துவ அதானே நடக்கும்”

“இல்லை இன்னைக்கு அப்படி செய்ய மாட்டேன்”
“பார்ப்போம்” என்று விஜய் சொல்ல அவர்கள் அலுவலகமும் வந்தது. இருவரும் அவரவர் வேலையை பார்க்கச் சென்றனர்.
காஞ்சனாவிற்கு காலை, மதிய உணவை அவன் வீட்டில் வேலை செய்த லக்ஷ்மியிடமே சொல்லித்தான் வந்திருந்தான் விஜய்.
மாலை வேலை முடிந்து அவர்கள் வந்திருக்க அதுவரையிலும் காஞ்சனா அறையிலேயே அடைந்து கிடந்தாள். விஸ்வா தான் வந்து அவள் அறைக்கதவை தட்டினான்.
முன் தினம் போலவே அவள் நம்ப முடியாமல் அவனை தான் பார்த்தாள். விஸ்வாவிற்கு அவளை அணைத்துக் கொள்ள கைகள் துடித்தாலும் அதை அடக்கிக் கொண்டு “வாக்கிங் போறோம், ஜாயின் பண்ணிக்கறீங்களா??” என்றான்.
காலையில் இருந்து அவனை எப்போதடா பார்ப்போம் என்றிருந்தவள் மறுக்கத் தோன்றாமல் சரியென்றிட “போகலாமா இல்லை…”
“ஒரு அஞ்சு நிமிஷம் வந்திடறேன்” என்றவள் உள்ளே சென்று முகம் கழுவி தன்னை சீர்ப்படுத்திக் கொண்டு வந்து சேர்ந்தாள்.
விஸ்வாவின் பார்வை அவளை அங்குலம் அங்குலமாய் ரசித்துக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் கூட வேண்டுமென்றே கூலிங்கிளாஸ் அணிந்திருந்தான் அவளை பார்க்கக் வென்று.
“அடேய் இன்னும் என்னடா பேசிட்டு இருக்க” என்று விஜய் குரல் கொடுக்க “இதோ வந்திட்டோம்” என்று இவன் முன்னே நடக்க அவன் நடைக்கு ஈடுகொடுத்து அவளும் வேக நடைப்போட்டாள். இரவு உணவை வெளியே முடித்து வீட்டிற்கு வந்தனர்.
விஸ்வா காஞ்சனாவை வெறுப்பேற்றவில்லை. ஆனால் அதிகம் அவளிடம் பேசிடவும் இல்லை. விஜய் தான் எப்போதும் போல் பேசிக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் பார்வையாலேயே ஒருவரை ஒருவர் மற்றவர் அறியாமல் பின் தொடர்ந்தனர்.
மறுநாள் விஸ்வா வெளி வேலையாக முன்னமே கிளம்பி விட்டிருந்தான். விஜய் காஞ்சனாவை அழைத்துக்கொண்டு அலுவலகம் வந்துவிட்டிருந்தான்.
“இப்போ தான் அப்பாகிட்ட பேசினேன்  இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்திடறேன்னு சொன்னார்” என்றான் அவளிடம்.
 
“நீங்க வேணும்ன்னா மேல போய் சங்கவியையும் வி… மித்ரனையும் பார்த்திட்டு வாங்களேன்…”
“இல்லை நான் வெயிட் பண்ணுறேன்” என்று வாய் அவனிடம் சொன்னாலும் விஸ்வாவை காலையில் இருந்து பார்க்காதது அவனை பார்க்க சொல்லி சொல்லியது அவள் உள்ளம்.
“சும்மா போய் கொஞ்ச நேரம் அவங்களை பார்த்து பேசிட்டு வாங்க” என்ற விஜய் உடனே யாருக்கோ அழைத்தான். அவர் வந்து இவன் அறைக்கதவை தட்ட “ஷிவானி இவங்களை மேல உங்க ஆபீஸ்க்கு கூட்டிட்டு போங்க” என்றான் இவன் மராத்தியில்.
‘என்ன பாஷை பேசுறாங்கன்னே புரியலை. மேல கூட்டிட்டு போக சொல்றாங்கன்னு மட்டும் தான் புரியுது. இவ தானே அன்னைக்கு அவரை கட்டிப்பிடிச்சா, இவளோட அக்கா கூடத்தானே அவர் வந்து இறங்குனார்’ என்ற எண்ணம் வந்ததுமே அவளை எதிரியை போல் பார்த்து வைத்தாள் இவள்.
மித்ரனின் அலுவலகத்திற்கு வந்திருக்க சங்கவி தான் ஓடிவந்து இவளை அணைத்துக் கொண்டாள். அவள் தன்னறைக்கு அழைத்து செல்லும் போது விஸ்வாவின் அறையை தாண்டித் தான் சென்றனர்.
சங்கவி முதல் முறை அங்கு வந்த போதே விஸ்வாவின் அறையை அவளுக்கு காட்டியிருந்தாள். காஞ்சனாவின் பேச்சு சங்கவியிடத்தில் இருந்தாலும் பார்வை விஸ்வாவின் அறையில் தான் இருந்தது.
அவன் வேலையை முடித்துவிட்டு அப்போது தான் வந்திருந்தான் அங்கு. சற்று முன்பு தான் விஜய் அவனுக்கு அழைத்து சொல்லியிருந்தான் காஞ்சனா அங்கு வருகிறாள் என்று.
அவளின் பார்வை தன்னை கடந்து செல்வதை அவன் உணர்ந்தாலும் நிமிர்ந்து பார்க்கவேயில்லை அவன். “போடா” என்று சொல்லிக் கொண்டாள் காஞ்சனா.
சங்கவியிடம் பேசிவிட்டு இவர்கள் வர எதிரில் விஸ்வா வந்தான். “மித்ரன் இப்போ தான் இவங்களை உங்க ரூம்க்கு கூட்டிட்டு வரலாம்ன்னு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க…”
“விஜய் போன் பண்ணார். நீங்க இவங்களுக்கு உங்க ரூமை காட்டிட்டு கீழே கூட்டிட்டு வருவீங்களாம்…” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.
வேறு வழியில்லாது அவளை அழைத்துக் கொண்டு அவனறைக்கு சென்றான் அவன். “உட்கார்” என்றான் ஒருமையில். 
அவளை இருக்கையில் அமர சொல்லியிருந்தான் ஆனால் அவள் அமரவேயில்லை. இவனையே தான் பார்த்திருந்தாள். இவனுக்கோ அவளை பார்த்தால் எங்கே தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்றிருந்தது.
கருப்பு நிறத்தில் சேலையும் ஆரஞ்சு நிற பார்டர் வைத்த சேலை அவளுக்கு எடுப்பாய் இருந்தது. அவள் நிறத்தை இன்னமும் அதிகமாய் காட்டியது.
விஸ்வாவால் தன் பார்வையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. குஷி படம் ஞாபகத்தில் வந்து தொலைக்க அவள் இடையின் மீது பார்வை ஓடியது. அவள் புடவையை நன்றாய் இழுத்து மூடியிருக்க அந்தோ பரிதாபம் அவனுக்கு ஏமாற்றமே!!
அவன் இப்படி யோசித்துக் கொண்டே இருக்கையில் அவனருகே வந்திருந்தாள் அவள். ஏற்கனவே அவன் தடுமாற்றத்தில் இருக்க அவளின் நெருக்கம் அவன் சிந்தனையை சிதறடித்தது.
அவனை இன்னும் நெருங்கியவள் “நீங்க மித்ரன்னு சொல்லிக்கிட்டாலும் பரவாயில்லை. நீங்க எனக்கு என்னோட விஸ்வாவா தான் தெரியறீங்க…” என்றவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அவள் இதழ்கள் சற்று எக்கி அவன் கன்னத்தை எச்சில்படுத்தி அவன் இதழில் பதிந்தது. விஸ்வா ஸ்தம்பித்து நின்றுவிட்டான்…

Advertisement