Advertisement

“லஞ்ச்க்கு தான்…”
“லஞ்ச் டைம் ஆச்சா” என்றவள் போனில் நேரத்தை பார்க்க மணி ஒன்றுக்கு மேலாகி இருந்தது.
“வீட்டுக்கு போய் தான் சாப்பிடணுமா??”
“இல்லை இங்க பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு. நம்ம தமிழ்நாட்டு சமையல் தான் கிளம்பலாமா. சங்கவியும் நம்ம கூட ஜாயின் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கா” என்றான்.
“ஹ்ம்ம் கிளம்பலாம்…” என்றாள்.
இவர்கள் பேசிக்கொண்டே வர சங்கவியும் வந்து சேர்ந்தாள். நால்வரும் விஜயின் காரிலேயே ஹோட்டலுக்கு சென்றனர்.
“ஹாய் காஞ்சனா” என்று இப்போது சினேக முகமாகவே அவளை பார்த்தாள் காஞ்சனா. ஹோட்டலுக்கு சென்று நால்வர் அமரும் இருக்கையில் அவர்கள் அமர விஜய் அமர்ந்ததும் அவனுக்கருகில் சென்று அமர்ந்தாள் சங்கவி.
“ஹேய் அங்க போய் உட்காரு” என்றான் விஜய்.
“இங்க தான் உட்காருவேன்” என்றாள் அவள் அடமாய்.
“அவங்க தனியா உட்காருவாங்கல, போ…”
“அவங்க பக்கத்துல தான் மித்ரன் உட்காருவார்ல அப்புறமென்ன தனியா உட்காருவாங்கன்னு சொல்றே”
“உன்னை…”
“அவங்க ஒண்ணும் நம்மளை தப்பா நினைக்க மாட்டாங்க. ஏங்க காஞ்சனா நீங்க எங்களை தப்பா நினைச்சுக்க மாட்டீங்க தானே” என்று வேறு கேட்டு வைக்க காஞ்சனா ஈயென்று இளித்து வைத்தாள்.
காரை பார்க்கிங்கில் விட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தான் விஸ்வா. அருகே வந்தவன் சாவதானமாய் அவளருகில் உட்கார்ந்துக் கொண்டான். அதிலேயே அகமகிழ்ந்து போனாள் காஞ்சனா. 
அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிட விஸ்வாவோ மருந்துக்குகூட அவளின் புறம் திரும்பவேயில்லை.
சங்கவியோ விஜயை ஒரு வழி செய்துக் கொண்டிருந்தாள். அவர்களின் புறம் திரும்ப முடியாமலும் அருகில் இருந்தவனை நிமிர்ந்து பார்க்க முடியாமலும் கஷ்டப்பட்டு உணவை விழுங்கி முடித்தாள் காஞ்சனா.
ஒரு வழியாய் அங்கிருந்து கிளம்பி மீண்டும் அலுவலகம் வந்து சேர்ந்தனர். நாளைக்கு கண்டிப்பா இவங்களோட ஆபீஸ்க்கு வரவே கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள் காஞ்சனா.
ஒரு புறம் விஸ்வாவை பார்க்க வேண்டுமென்ற ஆவல் உந்திய போதும் மறுபுறம் அவனும் அவளை வெறுப்பேற்றி கொண்டிருந்தது வேறு அவளை இன்னும் காயப்படுத்தியது.
விஜய் ஏற்கனவே சங்கவியிடம் சொல்லியிருந்தான் காஞ்சனாவை அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து செல்லுமாறு. விஸ்வா வழியிலேயே வேறு வேலை இருப்பதாகச் சொல்லி இறங்கிக் கொள்ள காஞ்சனாவின் கண்களோ செல்லும் அவன் மீதே தான் இருந்தது. 
‘இவங்க ஏன் மித்ரனை இப்படி பார்க்கறாங்க, ரொம்ப ஏக்கமா பார்க்கற மாதிரி தெரியுதே’ என்று யோசித்தாள் சங்கவி.
‘அவங்க வேற ஏதாச்சும் பார்த்திருப்பாங்க நாம தப்பா நினைக்கக்கூடாது, ஆல்ரெடி மேரேஜ் ஆகிட்டு அவங்களுக்கு’ என்று தன்னையே அவள் சமாதானமும் செய்துக் கொண்டாள்.
“விஜய் எனக்கு கேப் அரேன்ஜ் பண்ணிக் கொடுக்கறீங்களா நான் ரூம்க்கு போறேன், ரொம்ப தலைவலிக்குது” என்றாள் காஞ்சனா.
“என்னது தலைவலியா?? உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமா??” என்றான் விஜய்.
“ஏன் அப்படி கேட்கறீங்க??”
“இல்லை நேத்துக்கூட அதே தானே சொன்னீங்க அதான்…”
“ஹ்ம்ம் ஆமா இங்க வந்ததுல இருந்து அப்படி தான் அடிக்கடி தலைவலி வருது” என்றாள் உள்ளர்த்தத்துடன். அது சங்கவிக்கு வேண்டுமானால் புரியாமல் போகலாம் விஜய்க்கு புரிந்தது.
விஸ்வா கிளம்பியதும் அவன் அலட்சியப்படுத்தியதும் தான் அவளின் தலைவலிக்கு காரணம் என்பதை உணர்ந்தான்.
“காஞ்சனா நீங்க சங்கவியோட ஆபிஸ்க்கு போறீங்களா. உங்களுக்கும் கம்பர்டபிளா இருக்கும்” என்றான் விஜய்.
“ஆமா காஞ்சனா என்னோட வாங்க. மேல தான் இருக்கு எங்க ஆபீஸ், இங்க இருந்து பீச் வியூ பாக்குறது விட என்னோட ஆபீஸ்ல இருந்து பார்க்கறது செமையா இருக்கும்”
“அப்போ நீ வேலை பார்க்கலை, டெய்லி இதான் செய்யறியா??” என்று முறைத்தான் விஜய்.
“இல்லை நான் ரூமுக்கு…” என்று ஆரம்பித்தவளை இடையிட்டாள் சங்கவி.
“காஞ்சனா உங்களை நானே வீட்டில டிராப் பண்ணுறேன், அதுக்கு முன்ன நீங்க என்னோட ஆபீஸ்க்கு வந்து சுத்தி பார்ப்பீங்களாம். நானே என் கையால உங்களுக்கு காபி ஸ்ட்ராங்கா கலந்து தருவேனாம் சரியா” என்று அவள் கேட்க காஞ்சனாவால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.
“ஆமா நீங்க இந்த ஆபீஸ்ல வேலை பார்க்கலையா!!” என்றாள் காஞ்சனா.
“இவன் ஆபீஸ்லயா, இவன் கூட யாராச்சும் வொர்க் பண்ண முடியுமா, சரியான சிடுமூஞ்சி இவன். என்னை பழிவாங்கவே இவனை மாதிரி ஒருத்தனோட என்னை கோர்த்துவிட்டுட்டான்” என்றாள் சங்கவி.
“அவ கிடக்குறா லூசு” என்றவன் “இவங்க இங்க வொர்க் பண்ணலை. சங்கவியும் மித்ரனும் ஒரே ஆபீஸ் தான். இதே பில்டிங்ல வேற ப்ளோர்ல அவங்க ஆபீஸ் இருக்கு”
“ரெண்டு பேரும் சேர்ந்து சங்கமித்ராங்கற பேருல இன்டீரியர் டிசைனிங் பண்ணிக் கொடுத்திட்டு இருக்காங்க….”
“எங்களோட பில்டிங்க்ஸ்க்கும் பண்ணுவாங்க. இது தவிர வெளிய நிறைய ப்ராஜெக்ட் எடுத்து பண்றாங்க… நல்லாவே போயிட்டு இருக்கு” என்றான் உபரித்தகவலாக.
காஞ்சனாவிற்கு இந்த தகவல் புதிது விஸ்வாவும் விஜயுடன் தான் வேலை பார்க்கிறான் என்று அவள் நினைத்திருக்க அவன் என்னடாவென்றால் இன்டீரியர் டிசைனிங்கில் இறங்கிவிட்டானே.
அதுக்கூட அவனுக்கு தெரியுமா என்றிருந்தது அவளுக்கு. நிஜமாகவே அவன் விஸ்வா தானா என்ற குழப்பமும் வந்து சேர்ந்தது.
விஜயோ காலையிலேயே விஸ்வா சொன்னது போல அவளை அவன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது அவனுக்கு.
இவன் தான் அவள் ஏதோ பிசியாக வேலை செய்துக் கொண்டிருக்கிறாள் அப்புறம் பார்க்கலாம் என்றுவிட இப்போது விஸ்வாவோ வெளி வேலையாக சென்றுவிட்டான்.
விஜய் தான் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறானே விஸ்வா ரொம்பவே ஓவராகத்தான் அவளை கடுப்பேத்திக் கொண்டிருப்பதை. அதனால் தான் சங்கவியிடம் அவளை பார்த்துக்கொள்ள சொன்னான்.
“நீங்க மேல அவளோட போயிட்டு வாங்க காஞ்சனா. அங்கயும் உங்களுக்கு ரொம்ப போர்ன்னா சொல்லுங்க நான் வீட்டில டிராப் பண்ணிடறேன்” என்ற விஜயிடம் “ஹ்ம்ம் ஓகே” என்று தலையாட்டி சங்கவியுடன் சென்றாள் காஞ்சனா.
சங்கவி அவள் அலுவலகத்தை சுற்றிக் காண்பித்தாள். சொன்னது போலவே அவளே காபி கலந்து கொடுத்தாள் காஞ்சனாவிற்கு.
“காஞ்சனா இங்க வாங்களேன்” என்றவள் அந்த பிளைன்ட் ஸ்க்ரீனை தள்ளிவிட்டு “இங்க இருந்து பாருங்க சீ வியூ எப்படி இருக்குன்னு”
“எனக்கு காபி குடிக்கும் போது இங்க நின்னுட்டே வேடிக்கை பார்த்திட்டு குடிக்கறது ரொம்ப பிடிக்கும்”
“எனக்கும் தான்…”
“உங்களுக்குமா?? ஆமா நீங்க எந்த ஊர்??”
“கன்னியாகுமரி”
“வாவ், இந்தியாவோட தென்முனை, முக்கடல் சங்கமிக்கற ஊர்ல. சூப்பர் சூப்பர்…”
“அப்போ நீங்களும் டெய்லி என்னை மாதிரியே இப்படி தான் காபி குடிப்பீங்களா”
“காபி மட்டுமில்லை, கடலை பார்த்திட்டே நைட் முழுக்க மொட்டை மாடியில உட்கார்ந்திருக்க கூட எனக்கு பிடிக்கும். என்னைவிட என்னோட ஹஸ்பன்ட்க்கு தான் ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லும் போது முகம் லேசாய் சிவந்தது அவளுக்கு.
“பாருடா உங்க ஹஸ்பன்ட் பத்தி பேசும் போது கன்னமெல்லாம் சிவக்குது. ஆமா அவர் என்ன பண்றார் எங்க இருக்கார்” என்று சங்கவி கேட்கவும் அவளின் முகம் தன் இயல்பை தொலைத்தது.
சட்டென்று மாறிய அவளின் முகத்தை கண்டு சங்கவி தான் விழித்தாள்.
“என்னாச்சு காஞ்சனா??”
“ஒண்ணுமில்லை கிளம்பலாமா??” என்றாள்.
“தலைவலி இன்னும் விடலையா??” என்றாள் சங்கவி அக்கறையாக. “ஹ்ம்ம் ஆமா…” என்றாள் மற்றவள் பதிலாக.
“சரி கிளம்புவோம்…” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள் சங்கவி.
“என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க, இவ பேசி ரொம்ப போரடிச்சுட்டாளா உங்களை??”
“அதெல்லாம் இல்லை எனக்கு தான் தலைவலி இன்னும் விடலை… அதான் கிளம்பலாம்ன்னு…”
“ஓ!!” என்றவன் தலையில் கைவைத்துக் கொண்டு யோசிக்க அவன் கைபேசி அழைத்தது.
“உனக்கு தான் கூப்பிடலாம்ன்னு இருந்தேன்” என்றவன் பேசிக்கொண்டே அங்கிருந்து நழுவி வெளியில் வந்தான்.
“காஞ்சனா ரூமுக்கு போகணும்ன்னு சொல்றாங்க…”

“போக விட்டிறாதடா ஒரு பத்து நிமிஷம் நான் அங்க வந்திடுவேன். அப்புறம் வேணா கூட்டிட்டு போகலாம்”
“ஹ்ம்ம் சரி பார்க்குறேன்” என்றுவிட்டு உள்ளே வந்த விஜய் “சங்கவி உனக்கு வேலை இருந்தா நீ பாரு. நான் இவங்களை ட்ராப் பண்ணிடறேன்” என்றான்.
“இல்லை விஜய் நான் போய்ட்டு வர்றேன்” என்றவளை அவன் முறைக்க இவளோ எதுக்கு முறைக்கிறான் என்று பார்த்தாள்.
“அந்த போகன்வில்லா இன்டீரியர் டிசைன்ஸ் எல்லாம் ரெடி பண்ணியாச்சா. நாளைக்கு மார்னிங் எனக்கு அவங்களோட மீட்டிங் இருக்கு, கிளையன்ட்ஸ் எல்லாம் வருவாங்க, அவங்களுக்கு டிஸ்ப்ளே பண்ணணும்ன்னு நேத்து உன்கிட்ட சொன்னேன்ல” என்றான் அவன் கடுமையாய்.
“அதெல்லாம் ரெடியா தான் இருக்கு…”
“போய் அதை முதல்ல எனக்கு அனுப்பு” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.
அவர்கள் அலுவலகம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்ததால் இடையூறு செய்யாதவள் சங்கவி அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பவும் விஜயை நோக்கி “விஜய் கேப் மட்டும் அரேன்ஜ் பண்ணுங்க, நான் கிளம்பறேன்”
“உங்க வேலையை நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பலை” என்றாள்.
“ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க காஞ்சனா, வண்டிக்கு சொல்லிடறேன்” என்றுவிட்டு அவன் அகன்றான்.
பத்து நிமிடம் கடந்து மேலும் இருபது நிமிடம் ஓடியிருக்க விஜய் உள்ளே வந்தான் “சாரி காஞ்சனா, ஒரு அர்ஜென்ட் போன் கால் இப்போ தான் கேப் சொன்னேன், ஆன் தி வேல இருக்காங்க, நாம கீழ போகலாம் வாங்க” என்று அவளை அழைத்தான்.
இருவருமாக இறங்கி கீழே வந்து காத்திருந்தனர். அப்போது உள்ளே வண்டி ஒன்று வந்து நின்றது அதிலிருந்து முதலில் விஸ்வா இறங்க அவனை ஒட்டியவாறே இறங்கினாள் மற்றொரு பெண். 
விஸ்வா காசைக் கொடுத்துவிட்டு வர அப்பெண் அவன் கைக்கோர்த்துக் கொண்டாள், அதை பார்த்த காஞ்சனாவிற்கு தீயாய் எரிந்தது…

Advertisement