Advertisement

விஸ்வா கன்னியாகுமரியில் இருந்த போது அவ்வப்போது விஜய்க்கு அழைத்து பேசுவான் தான். கடந்த இரண்டு மூன்று வருட நிகழ்வுகள் தான் அவன் நண்பனிடத்தில் பகிராதது.
காஞ்சனா அந்நேரத்தில் அவளைப் பற்றி மட்டுமே யோசிக்க வைத்திருந்தாள் அதன் பலன் அவன் நட்பிடம் கூட எப்போதும் போல் பேச முடியாமல் போனது. 
“அவ என்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி உதவி கேட்டிருந்தா கூட செஞ்சிருப்பேன் போல. இது காதல் சொல்லி அந்த பேருல என்னை ஏமாத்தினதை என்னால ஜீரணிக்க முடியலை” என்று தொடர்ந்தான் விஸ்வா.
“அவளுக்கும் என் மேல அன்பிருக்கான்னு தெரியணும் விஜய். அது தெரியாம நான் அங்க போகறதா இல்லை…”
“அவ பேச்சுல என் மேல இருக்க பிரியத்தை காட்டுறா, அது அவளோட கணவனா மட்டும் இருந்தா போதாதுன்னு நான் விரும்பறேன்”
“நீயா ஒண்ணை முடிவு பண்ணிட்டு நீயா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்ன்னு எஸ்ஜே சூர்யா மாதிரி யோசிச்சா என்னடா செய்ய முடியும்… நீ என்ன எதிர்ப்பார்க்கறேன்னு நீயே அவகிட்ட சொல்லிடு…”
“அதெல்லாம் சொல்லி புரியறது இல்லைடா. அவளுக்கு என்னை புரிஞ்சா அவளே செய்வா… பார்ப்போம்” என்று முடித்துவிட்டான்.
“அவ நாளைக்கு உங்க அம்மாவை கூட்டிட்டு வந்து நின்னா என்ன செய்வ, அவங்ககிட்ட நீ அவங்க பையன் இல்லைன்னு சொல்லுவியா. பொண்டாட்டியை ஏமாத்தலாம் அம்மாவை??”
“ஏமாத்த முடியாது தான்… அவ அவங்களை கூப்பிட மாட்டா, கூப்பிட்டா நான் தோத்துட்டேன்னு அர்த்தம்…”
“ரொம்ப பூலிஷ்ஷா இருக்குடா நீ செய்யறது…”
“இருக்கட்டும் எனக்கு இது என்னோட லைப், ஐ யம் வெரி சீரியஸ் ஆன் திஸ்…”
“எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா… உன்னைய மாதிரி பக்கத்துல பிடிச்ச பொண்ணை வைச்சுட்டு கையை கட்டி வேடிக்கை பார்க்கணும்ன்னு”
“இதுல என்னை ஏன்டா இழுக்கறே??”
“நீ மட்டும் இவ்வளவு நாள் எதுக்கு காத்திருந்தியாம். சங்கவி லவ்வை சொன்னதும் உன் முகத்துல தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிஞ்சதுல”
“இப்போ என்ன உனக்கும் பல்ப் எறியணும், அப்புறம் என்ன அந்த படத்துல அடுத்து மணி அடிக்கும், இது ரெண்டும் நடக்கணுமா உனக்கு…”
“ஹ்ம்ம் அப்படின்னு கூட வைச்சுக்கலாம்…”
“உலகத்திலேயே கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் பொண்டாட்டி லவ் பண்ணுறாளா இல்லையான்னு டெஸ்ட் பண்ண முத புருஷன் நீயா தான்டா இருப்பே”
“எனக்கு தான் எதுக்குமே சந்தர்ப்பம் கிடைக்கலையே, சோ அதுக்கெல்லாம் காரணம் நானில்லை…”
“அவளுக்கு தெரியும் அவளுக்கு நான் எப்பவும் இருப்பேன்னு. எனக்கும் தெரியணும் எனக்காக அவ எப்பவும் இருப்பாளான்னு…”
“பேசாம நீ இந்த ஹஸ்பன்ட்ஸ் கூட்டத்துக்கு தலைவனாகிடேன். நல்லா டெஸ்ட் வைக்குறே” என்றவன் தலையில் கொட்டினான் விஸ்வா.
“பொண்டாட்டிங்க டெஸ்ட் வைச்சா நாமெல்லாம் தாங்க மாட்டோம்டா, பனிஷ்மென்ட் கொடுத்தாலும் தாங்க முடியாது. பின்னாடி நீ பீல் பண்ணுற மாதிரி ஆகிடப் போகுது பார்த்துக்க” என்று விளையாட்டாய் எச்சரிக்கை செய்தான் விஜய்.
“என்ன பனிஷ்மென்ட் கொடுப்பா??”
“முக்கியமான நேரத்துல உன்னை வெளிய அனுப்பிடுவாங்க பார்த்துக்கோ, வெர்ஜின் பசங்க சாபம் உன்னை வந்து பிடிச்சுக்கும் பார்த்துக்க” என்று விஸ்வாவை பயமுறுத்தினான் விஜய்.
அப்படியெல்லாம் நடந்திருமோ என்று ஒரு கணம் நினைத்தாலும் பின் பயபுள்ள என்னை வெறுப்பேத்த சொல்லுது அதெல்லாம் நடக்காது என்று தன்னையே அவன் சமாதானம் செய்துக் கொண்டான்.
எதையோ தீவிரமாய் யோசித்த விஸ்வா “மச்சான் எனக்கொரு ஹெல்ப்டா” என்றான் விஜயிடம்.
“என்னடா??”
“அப்பா நாளைக்கு வர்றேன்னு உன்கிட்ட சொல்லிட்டாரா??”
“இன்னும் சொல்லலை, போன் பண்ணா வந்திடுவார். ஏன் கேட்குறே??”
“அப்பா வர்றதை ஒரு ரெண்டு நாளைக்கு ஒத்திப் போட முடியுமான்னு பாரு…” என்றான் தீவிரமாய்.
“என்ன விளையாடுறியா?? உன் முன்னாடி தானே கேட்டேன் காஞ்சனாகிட்ட அவங்க நாளைக்கு ரிட்டர்ன் டிக்கெட் போட்டிருக்காங்களாம்டா”
“சோ வாட், அதை கேன்சல் பண்ணிட்டு ரெண்டு நாள் கழிச்சு போகச் சொல்லு…”
“இதெல்லாம் நியாயமே இல்லை. அவங்க கிளம்பி போய்டுவாங்க பாரேன்…” என்றான் விஜய்.
“நான் அவளோட விஷ்வான்னு அவ நினைச்சா போக மாட்டா, இருப்பா…” என்றான் விஸ்வா.
“உங்க போதைக்கு என்னைய ஊறுகாய் ஆக்குறீங்க. நடத்துங்கடா நடத்துங்க…”
“நான் கேட்டதை செய்வ தானே…”
“செய்யறேன் வேற வழி” என்றுவிட்டு அவனறைக்கு சென்றுவிட்டான் விஜய்.
அவள் அறைக்கு வந்த காஞ்சனா கட்டிலில் விழுந்து மீண்டும் தலையணையை நனைத்தது தான் மிச்சம்.
அவளால் விஸ்வா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் மறக்க முடியவில்லை. விடைபெறும் போது அவனுக்கு பதில் கொடுக்கவென்று பேசிய போதும் அவனை தன் வாயாலேயே மித்ரன் என்று சொல்ல வைத்துவிட்டானே என்ற கோபமும் வந்தது அவளுக்கு.
எப்படியோ உறங்கி போயிருக்க முதல் நாள் போலவே மறுநாளும் இருந்தது. காலையில் எழுந்து அவள் குளித்து முடித்திருக்க முன்தினம் போலவே லக்ஷ்மி பிளாஸ்க் மற்றும் ஹாட்பாக்ஸ் சகிதம் வந்துவிட்டார்.
அவள் சாப்பிட்டு தயாராகி நிற்க விஜய் அவளுக்கு அழைப்பு விடுத்தான். “சொல்லுங்க விஜய்”
“வெளிய தான் இருக்கேன், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவன் சொல்ல இவளுக்கோ அவன் மித்ரன் தான் விஸ்வா என்று சொல்ல வந்திருப்பானோ என்ற பரபரப்பு உண்டானது.
“இதோ வர்றேன்” என்றுவிட்டு போனை வைத்தவள் கதவை திறக்க அங்கு விஜய் மற்றும் மித்ரனாய் நிற்கும் விஸ்வாவும் இருந்தனர்.
இருவரையும் ஒரு புருவசுளிப்புடன் பார்த்தவள் “உள்ள வாங்க” என்றாள்.
அங்கிருந்த சோபாவில் அவர்கள் அமர எதிரில் இவள் அமர்ந்துக் கொண்டாள்.
“மிசஸ் காஞ்சனா ஒரு ஹெல்ப்”
“என்ன??”
“உங்க ரிட்டர்ன் ஜர்னிய ஒரு ரெண்டு நாள் ஒத்தி வைக்க முடியுமா??”
“ஏன்?? என்னாச்சு??”
“குற்றம் நடந்தது என்னன்னு எல்லா பின்னணியும் உங்ககிட்ட சொன்னா தான் சரின்னு சொல்வீங்களா… முடியும்ன்னா முடியும் சொல்லுங்க இல்லன்னா கிளம்பி போங்களேன்…” என்றான் விஸ்வா அலட்சிய பாவமாய்.
விஜயோ நண்பனை திரும்பி பார்த்து “வி…” என்று ஆரம்பித்து அவனின் முறைப்பில் “விடு மித்ரா நீ சும்மா கண்டதும் பேசி அவங்களை குழப்பாதே”
“நாம இன்னும் என்ன விஷயம்ன்னு சொல்லாமலே இருந்தா அவங்களுக்கு குழப்பம் வரத்தானே செய்யும்” என்றவன் அவளை திரும்பி பார்த்து “அப்பா சடனா ஊருக்கு போய்ட்டாங்க மிசஸ் காஞ்சனா”
“ரெண்டு நாள்ல திரும்பி வந்திடுவாங்க. நீங்க இருந்து எல்லாம் முடிச்சிட்டு கிளம்பலாமேன்னு தான் கேட்டேன்”
“உங்கப்பாவை பார்க்க நான் அவசியம் இங்க இருக்கணுமா??” என்றாள் அவள்.
“மேடம் பெரிய பிசன்ஸ் வுமன்டா அவங்களை எதுக்கு நீ பிடிச்சி வைக்குறே… கிளம்பட்டும் விடு… எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆகுது, நீ வெட்டியா பேசிட்டு இருக்காதே, வா கிளம்பலாம்…”
காஞ்சனாவுக்கும் கோபம் வந்தது இப்போது. “அவர் தனியா ஆபீஸ் போக மாட்டாரா. அவ்வளவு பெரிய பணக்காரர்ன்னு உங்க பிரண்டை சொன்னீங்க, ஒரு கார் கூட இல்லையா அவர்கிட்ட” என்றாள் அவன் வாயாலேயே விஸ்வா என்று ஒத்துக்கொள்ள வைக்கும் நோக்குடன்.
அவன் காஞ்சனாவின் கணவன் ஆகிற்றே. அவ்வளவு எளிதில் அவன் வாயால் சொல்லிவிடுவானா என்ன “ஓகே டியூட் யூ கேரி ஆன், ஐ வில் டேக் மை கார் அண்ட் கோ… பை பை சீ யூ…” என்று அவன் கண்ணடித்து சிரிக்க விஜய் அரண்டான்.
விஜயின் கார் கீயை தான் அவன் கையில் எடுத்திருந்தான். அதைத்தான் அவனிடம் காட்டி கிளம்புகிறேன் என்று சொல்லியிருந்தான்.
“இல்லைங்க காஞ்சனா நாங்க அனாவசியமா ஆளுக்கொரு கார் எல்லாம் யூஸ் பண்ணுறது இல்லை. ஒரே ஆபீஸ்க்கு போறோம், யாராச்சும் ஆளுக்கொரு கார்ல போவாங்களா சொல்லுங்க” என்றான் அவன்.
“சரி நீங்க சொல்லுங்க உங்க முடிவு என்னன்னு”

“எதைப்பத்தி??”
“சுரைக்காய்ல அவன் போடாம விட்ட உப்பைப் பத்தி கேட்கறான், நீங்க போட்டீங்களா இல்லையான்னு கேட்குறான் சொல்லிடுங்க” என்று வாசலில் நின்று நக்கலாய் சொன்னான் விஸ்வா.
“டேய் வாயை மூடிட்டு இரேன்டா” என்றான் விஜய்.
“உங்கப்பாவை நான் கண்டிப்பா பார்க்கணுமா. விஜய் ப்ளீஸ் பதிலை நீங்க மட்டும் சொல்லுங்க, அவரை என்கிட்ட பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க” என்றாள்.
“டேய் நான் எப்போடா அவங்ககிட்ட பேசினேன். அவங்க தான் என்னை கட்டிப்பிடிக்கலாம் வந்தாங்க…” என்று வாசலில் நின்றுக்கொண்டே அவன் சொல்ல காஞ்சனாவிற்கு அவமானமாய் போனது.
அதுவும் விஜய் முன்னிலையிலேயே அவன் அப்படி பேசி வைக்க அவளுக்கு தர்ம சங்கடமாகியது. ‘இவன் விஷ்வா தான் என் விஷ்வா தான்’ என்று மனம் அடித்துச் சொன்னது.
இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறதே அவன் வாயாலேயே அவனை விஸ்வா என்று சொல்ல வைத்து தன்னுடன் கூட்டிச் சென்றால் என்ன என்று மனம் தன் போக்கில் கணக்கு போட்டது.
“மித்ரா கொஞ்சம் பேசாம இரு” என்ற விஜய் “அப்பாவை பார்த்தா தான் வேலை கம்ப்ளீட் ஆகும்”
“ஓகே நான் இருக்கேன்…”
“உங்களுக்கு போரடிச்சா எங்களோட ஆபீஸ் வாங்களேன்”
“அங்க வந்து நான் என்ன செய்ய?? நான் இங்கவே இருக்கேன், எனக்கு தனியா இருந்து பழக்கம் தான்…” என்று விஸ்வாவை பார்த்துக் கொண்டே சொன்னாள் அவள்.
‘நீ நானான்னு பார்த்திடுவோம்’ என்று அவள் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தான் விஸ்வா.

Advertisement