Advertisement

30
காஞ்சனா அவன் மீதிருந்த பார்வையை விலகுவதாக இல்லை. இவன் சும்மாயில்லாமல் “எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க?? நான் ஒண்ணும் உங்க புருஷனில்லை” முகத்திலடித்தது போல.
அதில் அவள் மனம் காயப்பட்டு போக முகம் சுணங்கியது அவளுக்கு. அவன் புறம் திரும்பவே கூடாது என்று எண்ணி தரையை பார்த்து அமர்ந்திருந்தாள்.
நல்ல வேலையாக விஜய் அங்கில்லை. அவன் உணவை எடுத்து வரச் சொல்கிறேன் என்று உள்ளே சென்றவன் அப்போது தான் வெளியில் வந்தான்.
“லக்ஷ்மி அக்கா இப்போ எடுத்திட்டு வந்திடுவாங்க…” என்று அவன் சொல்லி முடிக்குமுன்னே  வந்திருந்தார் அவர்.
மூவருக்கும் அவர் பரிமாற விஜய் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தான். இவள் வெறுமே தலையாட்டிக் கொண்டிருந்தாள். 
அவளுக்கு உணவை விழுங்கக் கூட முடியவில்லை. அவன் பேசியதே தொண்டையில் நெருஞ்சி முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்தது.
மூன்று இட்லிக்கு மேல் அவள் சாப்பிடவில்லை எழுந்துவிட்டிருந்தாள். மித்ரனோ இன்னும் சாப்பாட்டில் இருந்து எழுந்திருக்கவில்லை. ஐந்து இட்லி விழுங்கியிருந்தவன் அடுத்து அவர் சுட்டு வைத்திருந்த பூரியை எடுத்துக் கொண்டிருந்தான்.
இவள் சாப்பிட்டு முடித்து அங்கே உட்கார சங்கடப்பட்டாள். உடனே வீட்டிற்கு செல்வதாக கூறினால் தவறாக எண்ணி விடுவார்களோ என்று நினைத்து “நான் இங்க இருந்து வேடிக்கை பார்க்கட்டுமா” என்றாள் விஜயிடம்.
“தாராளமா பாருங்க… இவன் கூட வீட்டுக்கு வந்தா எப்பவும் அங்க தான் குடியிருப்பான்…” என்று மித்ரனை கைக்காட்டி சொல்ல அவன் இவனை லேசாய் முறைத்து பின் தன் வேலையை தொடர்ந்தான்.
“ஆமா இங்க இருந்து பார்த்தா தான் பிளாட்ல இருக்க பொண்ணுங்க எல்லாம் நல்லா தெரிவாங்க… அதான் எப்பவும் அங்கவே இருப்பேன்…” என்று சொல்லி அவளை இன்னமும் வெறுப்பேற்றினான் மித்ரன்.
அவள் போதும் போதும் என்ற அளவிற்கு நொந்திருந்தாள் அவன் பேச்சில். எப்போதடா அறைக்கு செல்வோம் என்று அவளை நினைக்க வைத்திருந்தான் மித்ரன்.
‘இவன் விஷ்வா இல்லை, என் விஷ்வாக்கு யாரையும் காயப்படுத்த தெரியாது…’ என்று எண்ணிக் கொண்டவளுக்கு அவன் வீட்டிற்கு சென்ற முதல் நாள் அன்றைய நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.
அவ்வளவு அடித்துவிட்டு சென்றவன் சில மணி நேரங்களிலேயே அவள் காயப்பட்டிருக்கிறாள் அதுவும் தன்னால் என்று உணர்ந்து காயத்துக்கு மருந்தும் போட்டு மன்னிப்பும் கேட்டவன் அவன்.
அவனெங்கே இவனெங்கே என்று தான் எண்ணத் தோன்றியது அவளுக்கு. அதுவும் அன்று தவறு முழுதும் அவள் பேரிலேயே இருந்தும் கூட தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தவன் அவன்.
இவனென்றால் ஒவ்வொன்றுக்கும் தன்னை ஏதாவதொன்று சொல்லி காயம் செய்கிறான். பின் எதுவுமே நடவாதது போல இருக்கிறான்.
இவன் நிச்சயம் விஷ்வா தான், ஆனா ஏன் இப்படி ஆகிட்டாரு. நான் தான் அவரை இப்படியாக்கிட்டேனா, நான் அவரை ஒவ்வொரு நாளும் புது புது பிரச்சனையை இழுத்து வைச்சு கஷ்டப்படுத்தினேனே அதுக்கெல்லாம் தண்டனையா இது என்று அவள் மனம் அழுதது.
“என்னங்க ரொம்ப நேரமா கடலையே வெறிச்சு பார்த்திட்டு இருக்கீங்க. இந்தாங்க இந்த சாலட் சாப்பிடுங்க, வித் ஐஸ்கிரீம்” என்று அவள் கையில் கொடுத்தான் விஜய்.
“நான் ஐஸ் சாப்பிடுற மூட்ல இல்லை, ரொம்ப தலைவலிக்குது வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றாள் அவனிடம்.
“டாக்டர்கிட்ட போகணுமா??”
“இல்லை அதெல்லாம் வேணாம், தூங்கி எழுந்தா சரியா போய்டும்” என்றாள்.
“ஓகே ரெஸ்ட் எடுங்க, நாளைக்கு பார்க்கலாம்…” என்றான் அவன்.
“தேங்க்ஸ்…” என்றுவிட்டு அவள் வாயில் வரை வந்தவள் உள்ளே எட்டிப்பார்த்தாள் மித்ரனை.
‘நீங்க மட்டும் தான் என்னை வெறுப்பேத்துவீங்களா’ என்று நினைத்தவாறே “போயிட்டு வர்றேன் மித்ரன்” என்றாள் மித்ரனில் அழுத்தம் கொடுத்து.
அவள் அப்படி சொல்வாள் என்று எதிர்பாராதிருந்தவனுக்கு சட்டென்று புரையேறிவிட்டது. அவன் ஒன்றும் சொல்லாமல் அவளை தான் பார்த்திருந்தான்.
அவள் வெளியேறி சென்றுவிட்டாள். விஜய் உள்ளே வந்தவன் “ஏன்டா இப்படி படுத்தறே??” என்று அவன் முன் தொப்பென்று அமர்ந்தான்.
“இப்போ நான் படுத்தற மாதிரி தான் தெரியும். ஆனா நான் எவ்வளவு பட்டிருக்கேன்னு யாராலையும் உணர முடியாது” என்றான் வெகு சீரியசான குரலில்.
சாப்பிட்டு முடித்திருந்தவன் எழுந்து கை கழுவ சென்றிருந்தான். பின் அவள் நின்றிருந்த பால்கனி வந்து அவள் நின்ற அதே இடத்தில் அவளை போல நின்றுக் கொண்டான்.
“இதெல்லாம் தேவையா விஸ்வா”
“எனக்கும் தெரியலை” என்றான்.
“உன்னையும் கஷ்டப்படுத்தி அந்த பொண்ணையும் கஷ்டப்படுத்தி என்ன பண்ண நினைக்கிறே??”
“எனக்கு மட்டும் அவளை காயப்படுத்தணும்ன்னு ஆசையா என்ன. அவளுக்கு வலிச்சா அது எனக்கும் தான் வலிக்கும். வேணும்ன்னு நான் செய்யலை, என்னோட வலி சில சமயத்துல அவளை அப்படி பேச வைச்சுடுது…”
“என்னோட கோபத்தை நான் அவகிட்ட காட்டாம வேற யார்கிட்டடா காட்ட முடியும்” என்றான் அவன்.
“நீ சொன்னன்னு தான் அவளை இங்க வரவைச்சோம். அதுக்கு தோதா அப்பாவும் மால்ல கடையை வைக்க போறது பத்தி சொன்னதால நம்மாள ஈசியா வரவைக்க முடிஞ்சது”
“இனி மேற்கொண்டு நீ என்ன செய்யப் போறே?? என்ன வேணா செய்டா, அது உன் பாடு ஆனா பேசி கஷ்டப்படுத்தாதடா”
“என்னால அதை ஒத்துக்க முடியலை. அவ புருஷன் நீ ஆனா நான் அவனில்லைன்னு நீ சொல்ற, அது எவ்வளவு கஷ்டமாயிருக்கும் ஒரு பொண்ணுக்கு. கொஞ்சம் யோசிச்சு பாரு சங்கவிக்கு என்னை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்”
“ஆனா உன்னை பார்த்ததுல இருந்து அவளுக்கு ஒரு கிரஷ் தனக்கு என்ன பிடிக்கும் அப்படிங்கறதை மறந்து உன் பின்னாடி சுத்துனா. எனக்கு உண்மை தெரிஞ்சாலும் புரிஞ்சாலும் எவ்வளவு கஷ்டமாயிருக்கும் தெரியுமா” என்றான்.
“டேய் சாரிடா”
“உன்னை எனக்கு தெரியும்டா, ஆனாலும் அப்போ என்னோட மனநிலையை சொல்றேன். அது மாதிரி தானேடா அந்த பொண்ணுக்கும் இருக்கும். நீ தான் அவளோட கணவன்னு அவளுக்கு நல்லா தெரியுது…”
“என்கிட்ட எப்படியெல்லாம் கேள்வி கேட்குறா தெரியுமா. கண்டிப்பா இன்னும் ரெண்டு முறை ஏதாச்சும் கேள்வி கேட்டா நானே உளறிடுவேன் போல…”
“இதுல நீ என் பேரை வைச்சுட்டு சுத்துற” என்றான் விஜய் என்ற விஜயமித்ரன்.
“எனக்கு என் பேரை கொஞ்ச நாள் கேட்காம இருந்தா போதும்ன்னு இருந்தது அதான் உன் பேரை வைச்சுட்டு சுத்தினேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு என் பேரு அது தான்” என்றான் அவன் விடாது.
“என்னமோ பண்ணித்தொலை ஆனா பாவம்டா அந்த பொண்ணு… என்ன கஷ்டப்பட்டுச்சோ ஏதோ ஆற்றாமை பழி வாங்குறேன்னு இறங்கிடுச்சு… இப்போ என்ன உன்னோட சொத்தை எடுத்துக்கிச்சா அந்த பொண்ணு. உன்னை கல்யாணம் பண்ணது தவிர வேற என்ன செஞ்சுது…”
“காஞ்சனா செஞ்ச முறை தப்பா இருக்கலாம். ஆனா எல்லாருக்கும் சில விஷயங்கள் தெரியணும்ன்னு தானே பண்ணது. இல்லன்னா நீயும் இத்தனை வருஷம் இருந்த மாதிரி இன்னும் அவங்களுக்காக மாடா உழைச்சு கொட்டிட்டு தானே இருந்திருப்ப”
“உன்னை இங்க படிக்க வந்தப்போல இருந்தே  எனக்கு தெரியும்டா, நீ எவ்வளவு சின்சியர்ன்னு. படிப்பை தவிர உனக்கு வேற எதுலயும் கவனமிருக்காது”
“நான் ஜாலியா ஊர் சுத்துவேன், நீ படிக்கற வேலையை மட்டும் தான் செய்வ. நாம வேற வேற படிப்பு படிக்க வந்தாலும் உன்னோட சின்சியாரிட்டி பார்த்து தான் உனக்கு நான் ப்ரென்ட் ஆனேன்…”
“நீ என்ன வாக்குமூலம் கொடுக்கறியா??” என்றான் விஸ்வா திடிரென்று.
“என்னடா சொல்றே??”

“பின்னே இப்போ எதுக்கு இந்த கதை எல்லாம் இப்போ சொல்லிட்டு இருக்க…”
“போடாங்க” என்று அவனை திட்டினான் விஜய்.
“விஜய் ப்ளீஸ் இந்த விஷயத்தை விட்டிடு. அவ பண்ணது சரி தப்புன்னு நான் பேசவே வரலை. ஆனா ஒண்ணு நிஜம் அவளை பார்த்துல இருந்து தான் ஒவ்வொரு பிரச்சனையும் நான் சந்திக்கவே ஆரம்பிச்சேன்…”
“அதெல்லாம் எனக்கு பெரிய விஷயமேயில்லை. வாழ்க்கைங்கறது ரெண்டு விஷயம் தான் முடிவு பண்ணுது, ஒண்ணு நம்ம பார்க்கற வேலை, இன்னொன்னு நமக்கு அமையற குடும்பம்”
“என்னை எல்லாரும் ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சப்போ கஷ்டமா தான் இருந்துச்சு. என் தங்கச்சில இருந்து எல்லாருமே ஏதோவொரு விதத்துல என்னை ஏமாத்தி இருக்காங்க…”
“மே பீ அவங்க நல்லதே நினைச்சு செஞ்சிருக்கலாம், அந்த சூழ்நிலையில என்னால அதை ஏத்துக்கவே முடியலை. நினைக்க நினைக்க பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு விஜய்…”
“அந்த நிலைமையில கூட நான் என் வாழ்க்கை போச்சுன்னு நினைக்கவே இல்லை. எனக்கு கைத்தொழில் இருக்கு அதை வைச்சு பிழைச்சுக்க முடியும்ன்னு தோணிச்சு…”
“வீட்டிலையும் யாரையும் பார்க்க பிடிக்கலை. எங்க போகணும்ன்னு கூட அந்த நேரம் எனக்கு தெரியலை. கிடைச்ச ட்ரைனை பிடிச்சு சென்னை போய் இறங்கினேன்”
“அங்க தான் அமுதனும் ரேகாவும் இருக்காங்க. அந்த ஞாபகம் வந்ததும் அங்க இருக்கவும் பிடிக்கலை. ஸ்டேஷன்ல ஒரு பைத்தியக்காரன் மாதிரி உட்கார்ந்திட்டு இருந்தேன் தெரியுமா விஜய்” என்று அவன் சொன்ன போது அவனின் வலி என்னவென்று புரிந்தது விஜய்க்கு.
“ஸ்டேஷன்ல ஒரு அனவுன்ஸ்மென்ட் போச்சு, மும்பை ட்ரைன் பத்தி. அப்போ தான் உன்னோட ஞாபகம் வந்திச்சு. நேரா ஏர்போர்ட் வந்திட்டு அங்க இருந்து மும்பை பிளைட் புடிச்சு இங்க வந்திட்டேன்… இதெல்லாம் நான் உனக்கு முன்னாடியே சொன்னது தான்…”
“இங்க வந்த பிறகு எனக்குன்னு நீ உருவாக்கி கொடுத்த வேலை இருந்தாலும் எதையோ இழந்த ஒரு உணர்வு எனக்குள்ள. அது அவளால தான், அவளோட கணவனா அவ என்னை ஏத்துகிட்டான்னு எனக்கு தெரியும்…”
“ஆனா அதை மீறி அவ மனசுல நான் இருக்கேனான்னு எனக்கு தெரியணும். இப்போ வந்து இப்படி சொல்றனேன்னு நினைக்காத. நான் இதுலயாச்சும் ஏமாந்து போகலைன்னு எனக்கு தெரியணும்”
“அங்கவே கேட்டிருக்கலாம் ஆனா அப்போ அவ பதில் சொல்லியிருந்தா நான் நம்புவேனான்னு எனக்கே சந்தேகம் தான்”
“என்னோட மனசும் ஆறணும் தான் வெயிட் பண்ணேன். எல்லாத்தையும் மறக்கவோ, மன்னிக்கவோ முடிஞ்ச என்னால அவ விசயத்துல மட்டும் சாதாரணமா விட முடியலைடா”
“நான் பழிவாங்கினதா நீ நினைக்கறதா இருந்தாலும் நினைச்சுக்கோ. அதுல என்ன தப்பிருக்கு விஜய். நான் எவ்வளவு வலியை அனுபவிச்சிருப்பேன், ஒரு நாலு நாள் அவ கஷ்டப்படுறதுல என்ன தப்பு சொல்லு விஜய்…” என்று அவன் கேட்க விஜயால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.
மும்பை வந்த அன்று அவன் சொல்லியது எல்லாம் கேட்டிருந்தான் தான். அவனை பார்க்கவே முடியவில்லை ஒரு விரக்தியான மனநிலையில் இருந்தான் அன்று.
அவனை ஒருவாறு தேற்றி தான் புதிதாய் தொடங்கும் அலுவலகம் பற்றி சொல்லி அதில் அவனை முதலாளி போல் அமர்த்தினான் விஜய்.
விஜய்க்கு விஸ்வாவை ரொம்பவே பிடிக்கும். தமிழன் என்று பிடித்துப்போய் தான் பேசவே ஆரம்பித்தான். நாளைடைவில் அவன் குணம் பிடித்து இருவரும் உற்ற நண்பர்களாவே ஆகிப்போயினர்.

Advertisement