Advertisement

3
காலையில் வந்திருந்த செய்தித்தாளை பார்த்துவிட்டு வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்களுக்குள் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவரும் தனித்தனியாய் இருந்த போதும் அனைவருக்கும் ஒன்றாய் ஒரே வீட்டில் தான் சமையல். பெரிய வீட்டில் அனைவருமே சமைக்கக் கூடுவர், உணவருந்துவதும் அங்கே தான். விஸ்வாவும் காலை உணவு உண்ண அங்கே வந்தான்.
விஸ்வா முதல் நாள் தாமதமாய் வீட்டிற்கு வந்ததால் அவன் எழுவதற்கும் நேரமாகியிருந்தது. அவன் எழுந்து குளித்து அறையைவிட்டு வருவதற்குள் ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து முடிந்திருந்தது போலும்.
வந்தவனின் கண்கள் அந்த அறையில் சுழல ‘எதுக்கு எல்லாரும் இங்க இருக்காங்க’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு அங்கிருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்தான்.
அவன் தங்கை ரேகாவும் அதே சோபாவில் தான் மற்றொரு மூலையில் அமர்ந்திருந்தாள் இவனை முறைத்தவாறே.
‘இவளுக்கு என்ன தான் பிரச்சனையோ என்னைய முறைக்கிற வேலையை மட்டும் கரெக்ட்டா செய்யறா…’ என்று எண்ணிக்கொண்டே டேபிளில் இருந்த செய்தித்தாளை எடுத்து புரட்டினான்.
முதல் பக்கத்தில் அவன் வரைந்த புது டிசைன்கள் நகைகளாய் மாறி புகைப்படமாய் கேஎம் நகை மாளிகையின் பெயரை தாங்கி வந்திருந்ததை ஒரு புருவ சுளிப்புடன் கண்டவன் விரித்திருந்த செய்தித்தாளை ஒரு புறமாய் கையில் சேர்த்து பிடித்தவாறே அங்கிருந்தோரை பார்வையால் அளந்தான்.
‘இவங்க எல்லாம் இவ்வளவு நேரமா இதைப்பத்தி தான் பேசியிருக்கணும்’ என்று உடனே புரிந்துவிட அவன் அதை கண்டுக்கொள்ளாமல் மீண்டும் செய்தித்தாளை புரட்டுவதிலேயே கவனமானான்.
கார்த்திக் இவன் பார்வையை கண்டிருக்க மற்றவர்களிடம் “அவன் வேணும்ன்னே பண்றான், பார்த்திட்டு பார்க்காதது போல. நீங்க கேட்கறீங்களா இல்லை நான் கேட்கவா??” என்று பொரிந்தவனை அவன் தந்தை ரத்தினவேல் தான் அடக்கினார்.
“தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது. எதுனாலும் அப்பா பேசுவாங்க…” என்று ரத்தினவேல் தன் தந்தையை சுட்டிக்காட்டினார்.
“அம்மா காபி…” என்று சோபாவில் நன்றாய் சாய்ந்து அமர்ந்தவாறே குரல் கொடுத்தான் விஸ்வா.
“இதோ எடுத்திட்டு வர்றேன் விச்சு” என்று உள்ளிருந்து அவன் அன்னையின் குரல் கேட்டது.
“என்ன எல்லாம் பேசாம இருக்கீங்க… நீங்க கேட்கிற மாதிரியே தெரியலை” என்று சரவணன் அடக்க முடியாமல் சத்தமாய் பேசிவிட அவர்களை நிமிர்ந்து பார்த்தான் இவன்.
“நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்கு தெரியும்”
“தெரிஞ்சுட்டு சும்மா இருந்தா ஆச்சா??” என்றான் கார்த்தி கொதிப்புடன்.
“இப்போ நீங்க எல்லாரும் அனாவசியமாய் ஏன் குதிக்கறீங்கன்னு எனக்கு புரியலை. இதுல உண்மையாவே கவலைப்பட வேண்டியவன் நான் தானே… உங்களுக்கு என்ன போச்சு??” என்றான் வெகு நிதானித்த குரலில்.
“எங்களுக்கு என்ன போச்சா, உன்னை நம்பி புது டிசைன் செய்ய சொல்லி நேத்து தான் நம்ம பட்டறையில் போட்டோ கொடுத்திட்டு வந்தேன். இப்போ இப்படி சொன்னா என்னாகும்… நம்ம தொழில் படுத்திரும் அவ்வளவு தான்…” என்று கோபமாய்.
“ஏன் விச்சு அவன் கோபத்துலயும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்யுது. நம்ம தம்பி கஷ்டப்பட்டு வரைஞ்சது இப்படி வெளிய போச்சுன்னு இவ்வளவு நேரமும் வருத்தத்தோடவும் கோபத்தோடவும் பேசிட்டு இருந்தான். உனக்கு கோவம் வரலையா??” என்று தன் மூத்த பேரன்களை சப்போர்ட் செய்வது போல் விஸ்வாவிடம் நடந்ததை நாசூக்காய் தெரிந்து கொள்ள முயன்றார் கனகவேல்.
“என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது தாத்தா… நான் வேற யாருக்கும் இதை கொடுக்கலை…”
“நீ கொடுத்திருக்க மாட்டேன்னு எங்களுக்கு தெரியும் விச்சு. நீ எல்லாமே பாதுக்காப்பா வைக்கற ஆளு, அதுவும் நமக்கு ஏற்கனவே ஒரு கசப்பான அனுபவம் இருக்கு. சரி நீ இப்போ சொல்லு என்ன நடந்திருக்கும்ன்னு நீ நினைக்கிறே” கேட்டது அவன் தந்தை செந்தில்வேல்.
விஸ்வா யாருக்கும் பதில் சொல்லாமல் இப்போது எழுந்து நின்றிருந்தான். “எல்லாரும் இங்க வாங்க…” என்று உரக்க குரல் கொடுக்க அவன் பேச்சில் உள்ளே இருந்தவர்களும் எட்டிப்பார்த்தனர்.
“நீங்க எல்லாரும் ஏன் உள்ள தனித்தனியா குசுகுசுன்னு பேசிட்டு. எல்லாருமே இங்க வந்து நில்லுங்க, மொத்தமா பதில் சொல்லிடறேன்” என்று சொல்ல அனைவருமே அங்கு கூடினர்.
‘ஒண்ணு இவங்க எல்லாரும் சேர்ந்து இவனுக்கு பில்டப் கொடுக்கறாங்க. இல்லையா இவனே பில்டப் கொடுத்துக்கறான் என்று எண்ணியது அவனருமை தங்கை ரேகாவே.
“உங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி எப்படி வெளிய போச்சுன்னு தெரியணும் அதானே…”
“அதுக்கு முதல்ல எனக்கொரு பதில் சொல்லுங்க” என்று அவர்களை பார்த்தான்.
“இந்த டிசைன்ஸ் எல்லாம் என்னைக் கேட்காம எதுக்கு பட்டறைக்கு அனுப்புனீங்க. யார் செஞ்ச வேலை இது??” என்றான் கார்த்திக்கையும் சரவணனையும் பார்த்தப்படி.
இருவருமே பல்லைக் கடித்தனர். ‘நாங்க இவனுக்கு அண்ணனா இல்லை இவன் எங்களுக்கு அண்ணனா, நிக்க வைச்சு கேள்வி கேட்கறான்…’ என்று பொருமினர்.
“சொல்லுங்க யார் செஞ்ச வேலை??”
“கார்த்தியும் சரவணனும் பேசிட்டு இருந்தாங்க. நகை எல்லாம் செய்ய ஆரம்பிச்சிடலாமேன்னு. வீட்டில ஓகே சொன்னதும் ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க…”
“நான் தான் வீட்டில கேட்டா வேணாம்ன்னா சொல்லிடுவாங்க. செய்ய வேண்டியது தானேன்னு சொன்னேன்…” என்று வாய் திறந்தார் சகுந்தலா.
அவர் பேசுவது சப்பைக்கட்டு என்று அப்பட்டமாகவே தெரிந்தது. விஸ்வா தன் அம்மாவை வெளிப்படையாக முறைத்தான்.
“நான் தான் அனுப்பினேன். அதுல என்ன தப்பு?? அதெல்லாம் நீ வரைஞ்சு ஒரு வாரமாகுது. அடுத்து கல்யாண மாசம் தான் எல்லாரும் நகை வாங்க வருவாங்க… புது டிசைன்ஸ் எல்லாம் இருந்தா நல்ல வியாபாரம் ஆகுமின்னு தான் அப்படி செஞ்சேன்…” என்றான் கார்த்திக்.
“ஓகே…”
“நாங்க காரணம் சொல்லியாச்சு இப்போ நீ தான் சொல்லணும். இதெல்லாம் எப்படி வெளிய போச்சு??” என்றான் கார்த்திக்.
“நான் கொடுக்கலை…”
“அதைத்தான் அப்போ பிடிச்சு சொல்லிட்டு இருக்கியே”
“அப்போ… அப்போ… அந்த டேவிட் தான் இதெல்லாம் செஞ்சிருக்கணும். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணியிருக்கான். எனக்கு அவன் மேல தான் சந்தேகமே” என்று ஆரம்பித்தான் சரவணன்.
“டேவிட் அப்படி செஞ்சிருக்க மாட்டான்” என்றான் விஸ்வா உறுதியாய்.
“உன் பிரண்டுன்னு சப்போர்ட் பண்ணுறியா?? அவனை தவிர வேற யாரும் இதை செஞ்சிருக்க வாய்ப்பில்லை. அன்னைக்கு உன்னோட அவனும் தானே இருந்தான். தவிர நான் டிசைன்ஸ் கேட்டப்போ எனக்கு போட்டோஸ் உடனே அனுப்பினதும் அவன் தான்” என்றான் அவன்.
“எனக்கும் அப்படி தான் தோணுது சரவணா. அவனை முதல்ல வேலையை விட்டு தூக்கணும், ஆரம்பத்திலே இருந்து அவனோட நடவடிக்கை எதுவும் சரியில்லை” என்று இவர்கள் இருவருமே ஆளாளுக்கு துள்ளிக் கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் வாயில் பூட்டு போட்டது போல் இறுக்கி மூடியிருந்தனர்.
“டேவிட்டை சந்தேகப்படுறதும் என்னை சந்தேகப்படுறதும் ஒண்ணு. இதை டேவிட் செய்யலை…”
“நான் தான் அப்போவே சொன்னேன்ல வேணாம் வேணாம்ன்னு யாருமே கேட்கலை. இப்போ மறுபடியும் எங்க வந்து நின்னிருக்குன்னு பாருங்க” என்று கத்தினான் விஸ்வா.
அவனின் இந்த கோபம் பெரியவர்களை கலவரப்படுத்த கனகவேல் “எல்லாரும் கொஞ்சம் பேசாம இருங்க. கார்த்தி, சரவணா நீங்க ரெண்டு பேரும் எதுவும் பேசக்கூடாது…”
“அவனுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு. தவிர இந்த வீட்டில தான் நாங்களும் இருக்கோம். பெரியவங்க நாங்க பேசிக்கறோம், நீங்க இனி எதுவும் பேசவே கூடாது”
“வந்திட்டார் பெரியவங்க பேசணும், பெருமாள் பேசணும்ன்னு சொல்லிட்டு. என்னைவிட சின்னவன் எல்லா பெரியவங்களையும் எதுத்து பேசுவானாம். அவன் பேசலாமாம், ஆனா நாம பேசக் கூடாதாம்” என்று கார்த்திக்கின் காதைக் கடித்தான் சரவணன்.
“போதும் சரவணா இப்போ எதுவும் பேச வேணாம். ஆனா அந்த டேவிட் மேல ஒரு கண்ணை வை. நம்மாளு ஒருத்தன் தக்கலைல இருக்கான் தானே” என்று தன் தம்பியை கேட்டான் அவன்.
“ஹ்ம்ம் இருக்கான்… நான் பார்த்துக்கறேன்” என்று முடித்தான் அவனும் கிசுகிசுப்பாகவே.
“நீ என்ன பண்ணலாம்ன்னு நினைக்கிறே விச்சு…”
“எதைபத்தி தாத்தா??”
“இதெல்லாம் இனி திரும்ப நடக்கக் கூடாது” என்றார் அவர் திட்டவட்டமாய்.
“நீங்க எல்லாரும் டென்ஷன் ஆகற அளவுக்கு எதுவும் நடக்கலை… புரிஞ்சுக்கோங்க, சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்… இந்த பிரச்சனையை என்கிட்ட விடுங்க, நான் பார்த்துக்கறேன்…”
“இந்த வருஷம் நம்மோட புது டிசைன்ஸ் கண்டிப்பா வெளிய வரும் நீங்க எல்லாரும் பார்க்கத் தான் போறீங்க”
“அப்புறம் இன்னொரு விஷயம் என்னைக் கேட்காம இனிமே நகையை செய்யச்சொல்லி யாரும் சொல்ல வேண்டாம்” என்றான் குறிப்பாய் தன் அண்ணன்களை பார்த்து.
“அவங்க இனி அப்படி செய்ய மாட்டாங்க. ஆனா விச்சு நீ எங்ககிட்ட என்ன பண்ணப்போறேன்னு சொல்லலாம்ல” என்றார் கனகவேல் மனத்தாங்கலாய்.
“வேலை நல்லபடியா முடியட்டும் தாத்தா நானே சொல்றேன்” என்று முடித்துவிட்டான் அவன்.
இதோ தக்கலைக்கும் வந்து சேர்ந்துவிட்டான். நண்பன் வருவதை பார்த்து வாயிலுக்கே ஓடிவந்துவிட்டான்  டேவிட்.
“என்ன டேவிட்?? எனி பிராப்ளம்??”
“என்னடா தெரியாத மாதிரி கேட்கறே?? சத்தியமா என்ன நடந்துச்சுன்னு எனக்கும் தெரியலைடா விஸ்வா. என் மூலமா அது வெளிய போகலைடா…” என்றான் அவன்.
“இதெல்லாம் இங்க வைச்சே பேசணுமா…” என்று கடிந்தவன் அவனறைக்கு சென்றுவிட பின்னேயே ஓடினான் டேவிட்.
“உட்காரு டேவிட்”
“விஸ்வா நீ என்னை தப்பா நினைக்கலைல. நான் இல்லைடா…” என்றவனின் முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது அவனுக்கு.
“நீ இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். யார்ன்னும் தெரியும்…”
“என்னடா சொல்றே??”
“ஆமா தெரியும்…”
“யார்??”
“காஞ்சனமாலா…” என்று அழுத்தந்திருத்தமாய் உரைத்தான் அவன்.
“வாட்??” என்று அதிர்ந்தான் மற்றவன்.
“அவங்க தான் இப்போ இங்க இல்லையேடா…”
“அவ தான்…”
“இல்லை அது…”
“நீ கிளம்பு, எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு…” என்று நண்பனை அவன் விரட்ட டேவிட் வெளியேறிவிட்டான்.
போனை கையில் எடுத்தவன் அந்த எண்ணை அழுத்தினான். எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டு இனிமையான பெண் குரல் ஒலித்தது “ஹலோ” என்று.
“என்ன மறந்திட்டீங்களா??”
“உன்னையெல்லாம் நான் ஏன் நினைக்கணும்” என்றது எதிர்முனை அலட்சியமாய்.
“ஓ!! பாருடா என்னை நினைக்கலையாம், ஆனா என்னோட டிசைன்ஸ் எல்லாம் இவங்க சுட்டுட்டு போவாங்களாம்… இதென்னடா புது டிசைனா இருக்கு” என்றான் விஸ்வா.
“என்ன வேணும் உனக்கு. காலையிலேயே போன் பண்ணி என்னென்னவோ பினாத்துற” என்றாள் மரியாதை துளியும் அற்ற குரலில்.
“காஞ்சனா…” என்று கத்தினான் இவனும் பதிலுக்கு.
“ஏய் என் பேரை நீ சொல்லாத??”
“சொல்றதுக்கு தான்டி உனக்கு பேரே வைச்சிருக்காங்க…” என்றான் இவன்.
“வேஸ்ட் ஆப் டைம்…” என்றவள் போனை கட் செய்யப் போக அதை உணர்ந்திருந்தவன் போல “உனக்கு பாடம் சொல்லிக்கொடுக்கலாம்ன்னு இருக்கேன்”
“எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க நீ யாருடா??”
“உன் புருஷன்…”
“விஷ்வா…” என்று அதட்டினாள் அவள்.
அதை உணராதவன் “ஒரு பேச்சுக்கு தான் அப்படி சொன்னேன். அப்படி சொன்னா உனக்கு எப்படி இருக்கு?? அப்படித்தான்டி இருந்துச்சு நீ பண்ணிட்டு போன காரியத்தால எனக்கும்” என்று பதிலுக்கு எகிறினான் இவன்.
“இப்போ எதுக்கு போன் பண்ணே??” என்றாள் எரிச்சலாய்.
“நீ செஞ்சதுக்கு வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுக்க போறேன்னு உனக்கு சொல்ல தான் போன் பண்ணேன்…”

“அது உன்னால முடியாது…”
“முடியும், அதையும் நீ பார்க்க தான் போறே”
“இதுவரைக்கும் வெற்றி தோல்வி அப்படின்னு எதையும் நான் நினைச்சு பார்த்ததில்லை என் வாழ்க்கையில. முதல் முறையா எனக்கு உன்னால ஒரு தோல்வி. அதுக்கு உனக்கு பெரிய நன்றி”
“ஏன் தெரியுமா நன்றி சொன்னேன். எனக்கு இப்போ வெற்றி எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க ஆசை வந்திடுச்சு. அதை எப்பவும் தக்க வைச்சுக்கணும்ன்னு நீ என்னை நினைக்க வைச்சுட்ட”
“இரண்டு வருஷமா என்னை வரைய வைக்க நீ செஞ்ச எல்லா முயற்சியும் தெரியாதவன் இல்லை நான்…”
“உனக்கு மட்டும் தான் என்னை வேவு பார்க்க தெரியும்ன்னு நினைக்காதே. எனக்கும் தெரியும், நீ அதிகம் படிச்சு தெரிஞ்சு வைச்சிருக்கலாம். நான் அதிகம் தேடி தெரிஞ்சு வைச்சிருக்கேன்”
“டெக்னாலஜி உனக்கு மட்டுமில்லை எனக்கும் அத்துப்படி தான்… தி ரியல் கேம் ஸ்டார்ட்ஸ் வித் அஸ், கெட் ரெடி” என்றான்.
“யா ஐ யம் ரெடி. நீ திரும்ப மண்ணை கவ்வுறதை பார்க்க நான் ரெடி. சாரி சாரி நீ தான் ரெண்டாவது தடவையாவும் மண்ணைக் கவ்விட்டியே…”
“என்ன இப்போ அதை என்னால நேர்லப் பார்க்க தான் முடியலை”
“உனக்கு என்னை நேர்ல பார்க்கணுமா, வாட்ஸ் அப் ஆன் பண்ணு… வீடியோ காலே போடுறேன்” என்றான் அவன்.
“உன் மூஞ்சியை எவன் பார்ப்பான்…” என்று அவள் சொல்லிய விதத்தில் அவன் தன்மானம் சீண்டப்பட தன் கோபத்தை கட்டுப்படுத்தினான்.
“தோத்து போனவங்களை பார்க்க எனக்கு விருப்பமில்லை” என்று அவனை மேலும் மேலும் காயப்படுத்தினாள்.
“வேண்டாம் என்னை ரொம்பவே உசுப்பேத்துற அது இனி உனக்கு நல்லதில்லை. ரெண்டு வருஷமா நான் அமைதியா இருந்தது ஒண்ணுமே பண்ண முடியாம இல்லை”
“காத்திட்டு இருந்தேன், இந்த நேரத்துக்காக தான் காத்திட்டு இருந்தேன்”
“மறுபடியும் ஏமாந்து போக தான் நீ காத்திட்டு இருந்தியா… இரண்டு வருஷமா உன்னை அசைக்க நான் பண்ண முயற்சியில மறுபடியும் நான் தான் ஜெயிச்சு இருக்கேன்…”
“அவங்களும் என்னோட ஆளு தான்…”
“சோ வாட், அவங்க நீ சொல்லி வந்திருந்தாலும் அவங்க பேச்சுல ஒரு உண்மை இருந்துச்சு அதுக்காக தான் ஆரம்பிச்சேன். பொய்யாய் வந்த யாரையும் நம்பி நான் எதையும் செய்ய விரும்பலை…”
“ஜகன்னாதன் சொல்லலையா என்ன நடந்திச்சுன்னு…”
“சோ ஜகன்னாதனையும் நான் தான் அனுப்பினேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு…”
“ஒண்ணு சொல்லவா காஞ்ச்சு” என்று அவன் எப்போதும் அவளை அழைக்கும் தொனியில் தன்னையறியாமலேயே அழைத்துவிட காஞ்சனா அமைதியானாள்.
“என்ன அமைதியாகிட்ட, என்னன்னு கேட்க மாட்டியா??”
அவன் பேச்சில் சுயவுணர்வுக்கு வந்தவள் “என்ன??” என்று வெடித்தாள்.
“நீ எப்படி என்னோட டிசைன்ஸ் திருடினேன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு…”
“வில் மீட் யூ சூன். துரோகத்துக்கான பரிசை வாங்கிக்க ரெடியா இரு…”
“துரோகம்ன்னா என்னான்னு இப்போ தானே உனக்கு தெரிஞ்சிருக்கு. நல்லா சுத்திப்பார்த்து இன்னும் அதிகமா தெரிஞ்சுக்கோ”
“அப்புறம் என்ன சொன்னே பரிசு கொடுக்கப் போறியா… காத்திட்டு இருக்கேன் உன்னோட பரிசை வாங்கிக்க, ஏன்னா அது சன்மானமாச்சே. பதிலுக்கு உனக்கும் நான் ஒரு பரிசு வைச்சிருக்கேன் வாங்கிக்க ரெடியா இரு…”
“பை விஷ்வா”
அவளின் விஷ்வா என்ற அழைப்பு அவனுக்கு பழைய விஷயங்களை ஞாபகப்படுத்த எப்போதும் போனில் அவள் கடைசியாய் பை சொல்லும் போது இவன் “லவ் யூ காஞ்ச்சு” என்று சொல்வதை வழக்கமாய் வைத்திருக்க அது இப்போதும் நினைவுக்கு வந்தது.
அவனறியாமல் “லவ் யூ காஞ்ச்சு” என்று சொல்லிவிட்டிருந்தான்.
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு

Advertisement