Advertisement

இவர்கள் இருவரும் நடந்து வருவதை பார்த்த விஜயின் கை அனிச்சை செயலாய் சங்கவியை தள்ளி நிறுத்தியது.
“விஜய்…” என்று அவள் மீண்டும் நெருங்க “அவங்க வர்றாங்க” என்றான் அவன்.
“வந்தா வரட்டும்…”
“பார்றா…” என்றவன் இவர்களை பார்த்து “வாக்கிங் முடிஞ்சுதா??” என்றான்.
“வீட்டுக்கு போகலாமா இல்லை லேட் ஆகுமா” என்றாள் காஞ்சனா இருவரையும் பார்த்து.
“எஸ் எஸ் போகலாம் நேரமாச்சு” என்றான் விஜய்.
இப்போது காஞ்சனாவை நோக்கி வந்த சங்கவி “சாரி அப்புறம் தேங்க்ஸ்” என்றாள்.
அவள் அப்படி சொல்லவும் மற்ற மூவருமே இதென்னடா என்று தான் பார்த்தனர்.
சங்கவி யாரிடமும் மன்னிப்பு எல்லாம் கேட்கும் ரகமில்லையே என்று அவளை அறிந்த மற்ற இருவரும் பார்க்க காஞ்சனா அவளை எதற்கு என்பது போல் பார்த்தாள்.
“சாரி உங்களை தப்பா நினைச்சதுக்கு. ரொம்ப அழகா வேற இருந்தீங்க, விஜய் கூட பேசிட்டு இருந்தீங்க. அதெல்லாம் தான் எனக்கு ரொம்ப பொறாமையா ஆகிப்போச்சு…”
“ஏங்க நீங்க…”
“நான் மேரீட்” என்று இடையிட்டாள் காஞ்சனா.
“அது இப்போ பார்க்கும் போதே தெரிஞ்சுட்டு, அதான் வகிட்டுல குங்குமம் வைச்சு இருக்கீங்களே” என்று அவள் சொல்ல மித்ரன் அருகிருந்தவளை இப்போது திரும்பி பார்த்தான் முழுதாய்.
‘ஆமா குங்குமம் எல்லாம் வைச்சிருக்கா, அழகாவும் இருக்கா…’ என்று தான் பார்த்திருந்தான்.
“தேங்க்ஸ் சொன்னது உங்க ரெண்டு பேரையும் சேர்ந்து பார்த்த பிறகு தான் என் மனசே எனக்கு புரிஞ்சது அதுக்காக தான்…” என்றாள் அவளின் கைப்பிடித்து.
“என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள்.
“இட்ஸ் ஓகே விடுங்க… அப்புறம் வாழ்த்துகள் உங்க ரெண்டு பேருக்கும். நீங்க ரெண்டு பேருமாச்சும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுட்டு சந்தோசமா இருக்கணும்” என்று மனதில் தோன்றியதை சொல்லிவிட்டு “நான் முன்னாடி நடந்து போயிட்டு இருக்கேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
என்ன முயன்றும் அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அது அவர்களின் முன் வழிந்துவிடுமோ என்று கட்டுப்படுத்தி இதோ தள்ளிச்சென்று வழிந்த நீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.
விஜய் மித்ரனை முறைக்க அவன் பதில் பேசாமல் சற்று தள்ளி நின்றிந்தவளை தான் பார்த்திருந்தான். “சரி வாங்க போவோம்…” என்றுவிட்டு அவளருகில் வந்திருந்தனர் மற்ற மூவரும்.
“நீ என்ன பண்ணப் போறே சங்கவி. எங்களோட வர்றீயா நைட் டின்னர் முடிச்சுட்டு போயேன்” என்று அழைப்பு விடுத்தான் அவளுக்கு.
“இல்லையில்லை நான் வரலை. அம்மாகிட்ட நான் வெளிய போறேன் இப்போ வந்திடுவேன்னு சொல்லிட்டு ஓடி வந்திருக்கேன். சோ நான் கிளம்பறேன்…” என்றாள் அவள்.
மித்ரன் இப்போது அவளிடம் “நானும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் கவி…”
“சாரி சொல்லணும் ஆனா நீங்க இல்லை நான் தான் உங்களுக்கு சாரி சொல்லணும்…” என்றவள் “உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன் சாரி…” என்றாள் அவனிடம்.
“நான் உனக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும்…”
“எதுக்கு??”
“இன்னொரு நாள் சொல்றேன்…”
“சரி நான் கிளம்பறேன், பை” என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு அவள் நகர இவர்கள் வீட்டுக்கு செல்லும் பாதையில் நடந்தனர். 
யாருமே பேசவில்லை அமைதியாகவே நடை போட்டனர். அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து காஞ்சனா அவள் அறைப்பக்கம் செல்ல “இன்னைக்கு எங்களோட சாப்பிடுங்களேன் காஞ்சனா…”
“லக்ஷ்மி அக்காவும் இங்கயும் அங்கயும் ஹோட்பாக்ஸோட நடக்க வேண்டாம்ல. ஆமா நீங்க ரிடர்ன் டிக்கெட் போட்டாச்சா… என்னைக்கு போட்டிருக்கீங்க??” என்றான் விஜய்.
“நீங்க ரெண்டு நாள்ன்னு சொன்னீங்க, சோ நாளைக்கு கிளம்புற மாதிரி போட்டிருக்கேன். நாளைக்கு முடிஞ்சிடும் தானே”
“அப்படித்தான் நினைக்கிறேன், ஆனா நீங்க இன்னும் இரண்டு நாள் இருக்க மாதிரியே டிக்கெட் போட்டிருக்கலாம்” என்று விஜய் சொல்ல மித்ரன் இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. 
“சரி விடுங்க நாளைக்கு நீங்க ஊருக்கு கிளம்பிருவீங்கன்னு சொல்றீங்க சோ ப்ளீஸ் இன்னைக்கு எங்களோட டின்னர் பண்ணலாமே…” என்று அவன் சொல்ல அவள் மித்ரனை தான் பார்த்திருந்தாள்.
“என்னை எதுக்கு பார்க்கறீங்க??” என்றான் அவன்.
டேய் அவங்க வர்றேன்னு சொன்னாலும் இவன் பேசி கெடுத்திருவான் போலயே என்று நண்பனை முறைத்திருந்தான் விஜய்.
“நான் வர்றதா இருந்தா போன் பண்றேன்” என்றுவிட்டு அவள் அறைக்குள் நுழைய போக “மணி இப்போவே ஒன்பது ஆகுது” என்றான் மித்ரன் எங்கோ பார்த்து.
“நான் அரைமணி நேரத்துல போன் பண்றேன், பண்ணலைன்னா நீங்க சாப்பிட்டிடுங்க. எனக்கு டின்னர் தேவைப்படாது…” என்றுவிட்டு மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் மித்ரனை இழுத்துக்கொண்டு தங்கள் பிளாட்டிற்குள் நுழைந்த விஜய் “ஏன்டா இப்படி பண்றே, அவங்க வர்றேன்னு சொன்னாலும் நீ வரவிடாம பண்ணிருவ போல…” என்று கடிந்தான்.
“நான் பேசுறதெல்லாம் ஒண்ணுமேயில்லை…” என்று அலட்சியமாய் சொன்னவன் “என்ன பண்ணுறான்னு பார்ப்போம்…” என்றுவிட்டு உடைமாற்ற சென்றுவிட்டான்.
இவன் என்ன சொல்லிட்டு போறான் என்று புரியாமல் விஜய் தன்னறைக்குள் நுழைந்தான். லக்ஷ்மி அக்காவிடம் இரவு உணவு தயாராக இருக்கிறதா என்று கேட்டான்.
காஞ்சனாவிற்காக தான் அவரை உணவும் சேர்த்து சமைத்து தர அமர்ந்தியிருந்தனர். மற்றபடி அவர்கள் வீட்டை கூட்டி துடைக்க பாத்திரம் கழுவ இவர்கள் மெஷினில் போட்டுச் செல்லும் துணிகளை எடுத்து உலர்த்தி மடித்து வைப்பது போன்ற வேலை மட்டுமே அப்பெண்மணி செய்வார்.
சமையல் எப்போதும் நண்பர்கள் இருவரும் தான் செய்துக் கொண்டனர். விஜய் அவனறைக்கு சென்று உடைமாற்றி வந்தான். காஞ்சனா பால்கனியில் நின்றிருந்தாள். லேசாய் வீசிய காற்றில் ஈரபதத்தை உணர்ந்தாள். தூரத்தே அலைகளின் ஓசை கேட்டது,
விஜய் சொன்னது போல நாளைக்கு இந்நேரம் நாம இங்க இருக்க மாட்டோம் தானே. அவர் ஏதோ பேசிட்டு போறாரு அதனாலென்ன அவரை பார்க்கற சாக்குல இப்போ அங்க போனா தான் என்ன என்று வாதாடியது அவள் மனம்.
மறு மனமோ அவன் அவ்வளவு குத்தி பேசியும் உனக்கு சொரணை இல்லையா என்று தான் சொன்னது. தன் மனதுடன் பெரும் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்தாள் அவள்.
இறுதியில் அவன் மீதிருந்த அன்பே ஜெயிக்க… அன்பு அவமானம், கவுரவம், சுயநலம் எல்லாம் பார்க்காது என்றுணர்ந்து விஜய்க்கு போன் போடலாம் என்று மொபைலை கையில் எடுத்தாள்.
எதுக்கு போன் பண்ணிட்டு நேராவே போய் சர்ப்ரைஸ் கொடுப்போம் என்று எண்ணிக்கொண்டு அறையை பூட்டி வெளியில் வந்தவள் அவர்கள் அறை முன்னே நின்றாள். அழைப்பு மணி அழுத்திவிட்டு காத்திருந்தாள் இவள்.
கதவை திறந்தது மித்ரனே இவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க இவளை கண்டதும் அவன் உள்ளே திரும்பி “உன் பிரண்டு வந்திட்டாங்கடா…” என்றான் சத்தமாய்.
‘உங்களுக்கு நான் யாரு விஷ்வா, எதுக்கு இப்படிலாம் பேசறீங்க… என்னை யாரோ மாதிரி பார்க்கறீங்க, பேசறீங்க…’ என்று அவள் நெஞ்சம் தவிக்க ஆரம்பித்தது வலியுடன்.
“வாங்க காஞ்சனா” என்று வாயிலுக்கு வந்தான் விஜய். “தேங்க்ஸ்” என்றவாறே உள்ளே நுழைந்தவள் அறையை சுற்றுமுற்றும் பார்த்தாள்.
மித்ரன் அங்கு இல்லை அவள் வந்ததுமே அவன் அங்கிருந்து நகர்ந்திருந்தான். யாரை பார்க்கவென்று அவள் வந்திருந்தாலோ அவன் அவளை சோதித்துக் கொண்டிருந்தான்.
விஜய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இவன் பண்ணுற அலம்பல் தாங்கலையே, என்னை தனியாவிட்டு எங்க போனான் என்று சபித்துக் கொண்டிருந்தான் நண்பனை.
“வீட்டை சுத்தி பார்க்கறீங்களா??” என்று அவள் சுத்திசுத்தி பார்ப்பதை கண்டுவிட்டு கேட்டான்.
“ஹ்ம்ம் பார்க்கலாமா??”
“கண்டிப்பா…” என்றவன் ஒவ்வொரு அறையாக காட்டினான். மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு அது. பெரிய ஹால், அதிலிருந்து வலது புறம் ஒரு படுக்கையறை மற்றும் சமையலறை, இடது புறம் இரண்டு படுக்கையறைகள் இருந்தது. ஹாலில் இருந்து பால்கனி கதவிருந்தது, அதில் இரண்டு இருக்கைகள் எதிரெதிரே போடப்பட்டு நடுவில் ஒரு சின்ன டீப்பாய் இருந்தது. 
அழகாக அலங்கரித்திருந்தனர் அறையை. அறைக்குள் ரம்மியமான விளக்கொளியே உமிழ்ந்துக் கொண்டிருந்தது. பின்னால் தமிழ் பாடலொன்று வயலினில் இசைத்துக் கொண்டிருக்க அந்த சூழல் ரசிக்கும்படியாய் இருந்தது அவளுக்கு.
“இது என்னோட பெட் ரூம், ஆப்போசிட்ல அவன் இருக்கான்…” என்றான் விஜய்.
“அவன்னா அவர்க்கு பேரு இல்லையா…” என்றாள் அவள்.
“வி…” என்று ஆரம்பித்தவன் “விடுங்க அவனைப் பத்தி எதுக்கு பேசிட்டு” என்று முடித்தான்.
‘டேய் விஸ்வா மரியாதையா வந்திடு இங்க, எனக்கு பயங்கரமா ரோலிங் ஆகுதுடா, நான் பாட்டுக்கு உளறிடுவேன்…’ என்று நண்பனுக்கு அவசரமாய் ஒரு மெசேஜ் அனுப்பி வைக்க அது வேலை செய்தது.
அவன் அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியில் வர பர்மியூமின் நறுமணம் மெலிதாய் வந்தது. இவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனும் இவளை பார்த்தவாறே இவளுக்கு எதிரே வந்து அமர்ந்தான்.

Advertisement