Advertisement

29
“நேத்து ஆடிட்டர் போன் பண்ணியிருந்தார்…” என்றார் கனகவேல்.
காலை சாப்பாட்டிற்கு வந்து அமர்ந்திருந்தனர் அனைவரும். ஆண்கள் மட்டுமே அங்கு உணவு உண்ண அமர்ந்திருக்க பெண்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
தன் இரு பேரன்களையும் பார்த்து தான் சொன்னார் அவர். அவர்கள் இருவருமோ இவர் யாருக்கோ சொல்கிறார் என்ற ரீதியில் உணவை சாப்பிடுவதிலேயே கவனமாய் இருந்தனர்.
“ரம்யா தோசை” என்று இங்கிருந்தே குரல் கொடுத்தான் கார்த்திக். அவள் தோசையுடன் வந்தாள், இவன் அடுத்ததை சாப்பிட ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
தன் மகன்களை பார்த்த ரத்தினம் அவர்களை முறைத்துவிட்டு தன் தந்தையிடம் பேச ஆரம்பித்தார். “என்னப்பா சொன்னார் ஆடிட்டர்” என்று.
“நெறைய திருதாளங்கள் நடந்திருக்காம் நம்ம நகைக்கடையில அதைப்பத்தி தான் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார்” என்றார் அவர்.
“என்ன சொல்றீங்கப்பா புரியலை??” என்றார் ரத்தினம்.
செந்தில்வேலும் அங்கு தான் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். ஆனால் இவர்களின் விஷயத்தில் அவர் கலந்துக் கொள்ளவில்லை. அன்றொருநாள் கார்த்திக்கும், சரவணனும் பேசியதிலேயே அவர் அடிவாங்கிப் போயிருந்தார்.
அதனால் ஒதுங்கியே போனார் அவர். முன்பு போல் அவர் கடைக்கும் செல்லாததால் வீட்டில் இருப்பவர்களின் மனநிலையை அவரால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அவரின் அன்னை தெய்வானை ஒரு நாள் மகனிடம் பேசினார். அதில் இருந்து அவரிடம் பெரும் மாற்றமே. விஸ்வா வீட்டை விட்டு சென்றதில் இருந்தே கொஞ்சம் கலக்கத்துடன் தானிருந்தார் அவர்.
விஸ்வாவும் குகனும் இருந்த போது இருவரையும் ஒன்றாகவே தான் பார்த்திருந்தார். குகனின் மறைவுக்கு பின் விஸ்வாவிடம் ஒரு சிறு ஒதுக்கம் கொண்டார்.
ஆனால் அவருக்கு அவன் மேல் பாசம் எல்லாம் இல்லாமலில்லை. அதை அவரே உணர்ந்த தருணம் அவன் வீட்டைவிட்டு சென்ற அன்று தான்.
மகனின் கண்கள் லேசாய் கலங்குவதை பார்த்திருந்த தெய்வானை பாட்டி தான் மகனிடம் தன் கணவரின் எண்ணப்போக்கை பற்றியெல்லாம் முழுதாய் எடுத்துரைத்திருந்தார்.
அதெல்லாம் செந்தில்வேல் முன்பே அறிந்திருந்தது தான் என்ற போதும் அன்னையின் பார்வையில் அதை கேட்கும் போது தானும் இத்தனை நாள் எவ்வளவு பெரிய தவறிழைத்திருக்கிறோம் என்ற குற்றவுணர்வு வந்து ஒட்டிக்கொண்டது அவரிடத்தில்.
அவர் தன் யோசனையில் இருந்து மீண்டு அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். கனகவேலும் இவரைத் தான் பார்த்திருந்தார்.
“என்ன செந்தில் நீ எதுவும் கேட்க மாட்டேங்கறே??” என்று கேட்கவும் வேறு செய்தார்.
“இந்த வீட்டில எனக்குன்னு என்ன உரிமையிருக்கு??” என்று தன் மனதில் நினைத்ததை சொல்லிவிட்டார் செந்தில்வேல்.
“ஏன் உனக்கு என்ன உரிமை இல்லை இந்த வீட்டில, ரத்தினம் எனக்கு எப்படியோ நீயும் அப்படித்தானே”
“ஓ!! அப்படியா!!” என்றார் அவர் விட்டேத்தியான குரலில்.
இதுவரை தன் மகனிடம் காணாத விலகல் தன்மை அது என்பதை உணர்ந்து கொண்டார்.
“தெய்வானை” என்று கத்தினார் கனகவேல்.
அவர் சமையலறையில் இருந்து வேகமாய் ஓடிவந்தார்.
“என்னங்க” என்றவாறே.
“என்னாச்சு உன் பிள்ளைக்கு??” என்றார்.
“ஏன் என்னாச்சு??” என்று இவர் பதில் கேள்வி கேட்டார்.
“பாட்டி உங்க சின்ன புள்ளை அவரோட அப்பாவை மதிக்காம பேசுறாராம் அதை தான் தாத்தா அப்படி கேக்குறார்” என்றான் சரவணன் இடையில்.
அவனை முறைத்தார் ரத்தினவேல் “நீ கொஞ்சம் பேசாம இரு சரவணா…” என்று கடிந்துவிட்டு “அப்பா செந்தில்கிட்ட நான் பேசிக்கறேன், நீங்க ஆடிட்டர் விஷயம் என்னன்னு சொல்லுங்க” என்றார் அவர் தன் வேலையில் கவனமாக.
தன் மூத்த மகனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தெய்வானையிடம் “அவன் ஏன் அப்படி பேசறான்?? இந்த வீட்டில அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு. எல்லாமே என்னோட ரெண்டு பசங்களுக்காக மட்டும் தான்… அவன்கிட்ட சொல்லி வை…” என்று அழுத்திச் சொன்னார் அவர்.
“ரத்தினம் உன் பசங்க பேசுறது செய்யறது எதுவும் சரியில்லை. கடையை ஒழுங்கா பார்த்துக்கறது இல்லை, ரொம்பவும் அலட்சியமா இருக்காங்க அவங்க…”
“உனக்கும் செந்திலுக்கும் இருக்க ஒற்றுமை ஏன் இவங்களுக்கு இல்லை. இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்க்காம உன் பொண்டாட்டி எப்படி வளர்த்து வைச்சிருக்கா பாரு…” என்று மருமகளையும் சாடினார் அவர்.
“தாத்தா போதும் கொஞ்சம் நிறுத்துங்க… நாங்க என்ன ஒற்றுமை இல்லாம இருக்கோம் இப்போ. சரவணனும் நானும் எப்பவும் ஒற்றுமையா தான் இருக்கோம், இருப்போம்…” என்றான் கார்த்திக்.
“ஆமாடா ஒத்துமையா தான் இருக்கீங்க… ஒண்ணா தான் எல்லாத்தையும் கோட்டை விட்டுக்கிட்டு இருக்கீங்க ஒத்துமையா…” என்றார் கனகவேல் கோபத்துடன்.
“என்னத்த கோட்டை விட்டுடோமாம்??”
“இதுவரையும் நீங்க ரெண்டு பேரும் செலவு பண்ண பணத்துக்கு எந்த கணக்கும் வரலை. அதுக்கு பதில் நீங்க பொய் கணக்கு கொடுத்து இருக்கீங்க…”
“போன மாசம் ஒரு ஐஞ்சு பவுன் பழைய நகையை கொடுத்து புதுசு வாங்கிட்டு போனாங்க ஒரு கஸ்டமர். அந்த பழைய நகையை நீங்க ரெண்டு பேரும் தான் வாங்கிட்டு போனீங்கன்னு தெரியும்…”
“அதுக்கெல்லாம் என்ன கணக்கு??” என்றார் அவர்.
“இந்த சொத்து எல்லாம் யாருக்காக சேர்க்கறீங்க??” என்றான் சரவணன் அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல்.
“என்ன கேள்வி இது??”
“பதில் சொல்லுங்க தாத்தா யாருக்கு இதெல்லாம்??”
“நாளைக்கு நீங்களும் உங்க குடும்பமும் அனுபவிக்கத்தான்”
“நாளைக்கு வரைக்கும் நாங்க ஏன் காத்துட்டு இருக்கணும். அதை இன்னைக்கே நாங்க அனுபவிக்கறோம்…” என்றான் சரவணன்.
“எப்படி குடிக்கறது, கேரளாக்கு போய் லாட்டரி வாங்குறதுன்னு காசை செலவு பண்றீங்க??” என்றார்.
ரம்யாவும், சௌம்யாவும் உள்ளிருந்து எட்டிப் பார்த்தனர் தங்கள் கணவன்மார்களை.
“இப்போ என்னங்கறீங்க??” என்றனர் இருவருமே முறைத்து.
“நாளையில இருந்து நீங்க ரெண்டு பேரும் கடைக்கு வரவேண்டாம்…” என்றார் அவர்.
ரத்தினவேலுக்கும் இது அதிர்ச்சியே. செந்தில்வேல் தன் உணவை முடித்து அங்கிருந்து எழுந்து சென்றார், எந்த கருத்தும் சொல்லாமல்.
விஸ்வா இருந்தவரை அந்த வீடு அப்படியொரு தெய்வீகமாய் இருந்தது. கணக்கு வழக்கில் சரியாக இருந்தான், அவன் உருவாக்கும் புது மாதிரிகளை வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் வரும்.
மொத்தத்தில் அவன் இல்லாது போனதில் கடையின் வருமானம் அப்படியொன்றும் சொல்லும்படியாய் இல்லை. வியாபாரமே இல்லாமல் போகவில்லை, தங்கத்திற்கு என்றுமே மவுசு தானே.
ஆனால் முன் போல் அவர்களின் கடையில் கூட்டமிருக்கவில்லை. விஸ்வாவை கேட்டு அவ்வப்போது ஆட்கள் வந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
“அப்புறம் நீங்க என்ன பண்ணுறதா உத்தேசம்??” என்றனர் இருவருமே கோரசாக.
“அதை நான் பார்த்துக்கறேன்…” என்றார் கனகவேல்.
“அப்போ சரி சொத்தை பிரிச்சிடுங்க, எங்க பொழைப்பை நாங்க பார்த்துக்கறோம்…” என்று எழுந்திருந்தனர் அண்ணனும் தம்பியும்.
“டேய் ரத்தினம் என்ன இது உன் புள்ளைங்க இப்படி பேசிட்டு இருக்காங்க” என்றார் அவர்.
“அவங்ககிட்ட நீங்க இப்படி பேசினா அவங்களும் அப்படித்தானே பேசுவாங்க. சின்ன பசங்க புத்தி சொல்லுறதுவிட்டு நீங்க பேசுறது கொஞ்சம் கூட சரியில்லைப்பா” என்ற மகனை முறைத்திருந்தார் அவர்.
பேசுவது நீ தானா என்ற பார்வையை வீசினார். அப்போது அங்கு வந்த அங்கயற்கண்ணி “ஆமாப்பா நீங்க பண்ணுறது சரியில்லை. அண்ணன் சொன்ன மாதிரி அவங்க சின்ன பசங்க தானே. சொல்ற விதமா சொன்னா புரிஞ்சுக்க போறாங்க”
“அதைவிட்டு அவங்களை கடைக்கு வர வேணாம்ன்னு சொன்னா, இப்படித்தான் சொத்தை பிரிச்சுக் கொடுக்க சொல்லி கேட்பாங்க…” என்று தன் அண்ணனுக்கும் மருமகன்களுக்கு ஒத்து ஊதினார் அவர்.
கனகவேல் எதுவும் பேசவில்லை. இன்னமும் அவர் உணவை முழுதாய் உண்டு முடித்திருக்கவில்லை. எழுந்து சென்றுவிட்டார்.
கை கழுவிட்டு ஹாலுக்கு அவர் வந்திருக்க அனைவரும் அவர் முன் நின்றிருந்தனர்.
“தாத்தா என்ன முடிவு பண்ணியிருக்கீங்க??” என்று நின்றான் சரவணன்.
“இனிமே பொறுப்போட நடந்துக்கோங்க அதுக்கு மேல சொல்ல எதுவுமில்லை” என்று எழுந்துவிட்டார் அவர்.
“சொத்துன்னு பேச்சு வந்தாச்சு. பேசாம நீங்க அதை பிரிச்சு கொடுத்திடுங்க. சும்மா ஒவ்வொண்ணுக்கும் உங்க கையை எதிர்பார்த்திட்டு நிக்க முடியாது எங்களால” என்று கார்த்திக் சொல்ல கனகவேல் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தார்.
ஒன்றுமே பேச முடியவில்லை அவரால். எப்போதும் தந்தைக்காக பேசும் ரத்தினவேலும் எதுவும் சொல்லாமலிருக்க உள்ளே கொஞ்சம் ஆட்டம் கண்டது அவருக்கு. 
செந்தில்வேல் விஸ்வா போனதில் இருந்தே சரியாக இல்லை, கார்த்திக், சரவணன் பேசிய பின்னே வீட்டில் அவர் வாயை திறப்பதேயில்லை. தான் தனித்து நின்று தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்து கொண்டிருந்தது போல இனி இருக்க முடியாது என்று மட்டும் புரிந்தது.
எல்லாம் விஸ்வாவால் வந்தது. அவன் மட்டும் பேசாமல் இந்த வீட்டிலே இருந்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. 
இந்த சரவணனும், கார்த்திக்கும் தான் அவன் வெளியே சென்றதற்கு காரணம் என்று ஒவ்வொருவாராய் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாரே தவிர தன் மீதான குற்றத்தை அவர் மனமே ஒப்புக்கொள்ளவேயில்லை.
“என்ன தாத்தா??” என்று கழுத்தை பிடிக்காத குறையாக இப்போது கார்த்திக் கேட்டான்.
“நான் முடிவு பண்ணிட்டு சொல்றேன், எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றார்.
“எவ்வளவு நாள்ன்னு அதையும் சொல்லிடுங்க, இல்லைன்னா டெய்லி நாங்க கேட்டுட்டு இருப்போம். அது உங்களுக்கு சங்கடம் தானே” என்றார்கள் அவரின் பேரன்கள்.
தெய்வானை, ரத்தினவேலின் மனைவி செண்பகவள்ளி இருவரும் எப்போதுமே வாயை திறப்பத்தில்லை என்பதால் இப்போதும் அமைதியாகவே வேடிக்கை பார்த்தனர்.
சகுந்தலா மட்டுமே அங்கு நடப்பத்தை கண்டு மனதில் சந்தோசப்பட்டுக் கொண்டார். ‘என் புள்ளையை வெளிய அனுப்புனீங்கல்ல அவனை நிம்மதியாக இருக்கவிடாம செஞ்சீங்கல்ல அதுக்கான தண்டனை தான் இது…’ என்று தான் நினைத்தார்.
‘இது இவர்களுக்கு பத்தாது, இவர்கள் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது…’ என்று தான் எண்ணினார்.
‘விஸ்வா அம்மாவை பார்க்க சீக்கிரம் வா விஸ்வா…’ என்று மகனிடம் மனதார உரையாடினார் அவர்.
கனகவேல் இன்னும் ஒரு மாதத்தில் சொல்வதாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். அங்கயற்கண்ணியோ தன் மகள்களை பிடித்துக் கொண்டார் “உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை…”
“உங்க புருஷங்களுக்கு சப்போர்ட் பண்ணாம வேடிக்கை பார்க்கறீங்க. உங்களை எதுக்கு அவங்களுக்கு கட்டி வைச்சேன். சொத்து எல்லாம் நீங்க அனுபவிக்கணும்ன்னு தானே…” என்றார் அவர்.
“எங்களுக்கு நீங்க என்ன சொல்லி கொடுத்திருக்கீங்க. ஆம்பிளைகளை எதிர்த்து பேசக் கூடாதுன்னு தானே… அதை தானே நாங்க செஞ்சிருக்கோம் இப்போ. நீங்க சொல்ற மாதிரி எங்களால ஒரு நாளைக்கு ஒரு மாதிரி எல்லாம் நடந்துக்க முடியாது” என்றனர் அவரின் மக்கள்.
அவர்களுக்கு தங்கள் கணவன்மார்களின் போக்கில் சுத்தமாய் பிடித்தமில்லை. 
———————–

Advertisement