Advertisement

“அப்போவே அவருக்கு மெயில் பண்ணிட்டேன். நைட் பேசறேன்னு சொல்லியிருக்கார், அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்…”
“உங்கம்மா எங்க இருக்காங்க??”
“அவங்க வீட்டில இருக்காங்க…”
“போகும் போது வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, அவங்களை பார்த்துட்டு போறேன்…” என்றாள்.
“அவங்க அவங்களோட வீட்டில இருக்காங்க காஞ்சனா. இங்க நான் தனியா தான் என் பிரண்ட் கூட தங்கியிருக்கேன்…”
“ஆபீஸ் இங்க இருந்து கொஞ்சம் பக்கம் அதான் இப்படி. வீக்லி ஒன்ஸ் அங்க போயிட்டு வருவேன்… இல்லைன்னா அம்மா என்னைப் பார்க்க நேரா இங்க கிளம்பி வந்திடுவாங்க…”
“உங்க கூட தங்கி இருக்க பிரண்டை பார்க்க யாரும் வரமாட்டாங்களா??” என்றாள் பேச்சு வாக்கிலேயே.
‘ஆஹா!! விஜய் உஷாரா இருடா, இவங்க ரொம்ப விபரமா என்கிட்டவே எல்லாம் தெரிஞ்சுக்க பார்க்கறாங்க…’ என்று சுதாரித்தவன் “அவனுக்கு என்னங்க ராஜாவீட்டு கண்ணுக்குட்டி”
“அரண்மனை மாதிரி வீடுன்னு சொல்வாங்க. இவனோட வீடு நிஜமாவே அப்படி தான் இருக்கும், இவனோட அம்மா மும்பைல செட்டில் ஆனா தமிழ் பொண்ணு அவங்கப்பா அவங்களை பிடிச்சு மேரேஜ் பண்ணிக்கிட்டார்”
“ரெண்டு பேருக்குமே கோடிக்கணக்கான சொத்து இருக்கு. இவனும் என்னை மாதிரி தான் தனியா எதாச்சும் பண்ணனும்ன்னு என்னோட வந்து இருக்கான்…”
“ஓ!!” என்று மட்டும் சொல்லிக்கொண்டாள்.
“உங்க கூட தங்கியிருக்க அந்த பிரண்டு காலையில பார்த்தோமே அவர் தானா!!” என்று அவள் கேட்க ‘அட முட்டாளே!!’ என்று விஜய் தன்னையே திட்டிக் கொண்டான்.
பின்னே அவன் யாருடன் தங்கியிருக்கிறான் என்று அவளும் கேட்கவில்லை தானும் சொல்லியிருக்கவில்லை. அவள் மித்ரனை பற்றித்தான் கேட்கிறாள் என்று இவனே எல்லாம் கொட்டியிருந்தான்.
‘வெரி டேஞ்சரஸ் லேடி, ஷப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே, டேய் விஸ்வா எப்படிடா இவங்களை சமாளிக்கறே’ என்று நண்பனிடம் மனதோடு பேசிக் கொண்டான்.
இவர்கள் பேசிக்கொண்டே பீச்சுக்கு வந்துவிட்டிருந்தனர். “நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவேயில்லையே” என்று நினைவுப்படுத்தினாள் காஞ்சனா.
“அதான் நீங்களே கண்டுப்பிடிச்சிட்டீங்களே அப்புறம் நான் வேற எதுக்கு சொல்லிட்டு” என்றான் அவன்.
“அவர் வரலையா??” என்று வாய்விட்டு கேட்டே விட்டாள்.
“வடாபாவ் சாப்பிட்டே பேசலாம்” என்று சொல்லி அருகில் இருந்த கடைக்கு அழைத்து சென்றவன் இருவருக்கும் வடாபாவ் சொல்லி கையோடு பிளேட்டை வாங்கி வந்தான்.
“சாப்பிடுங்க நல்லாயிருக்கும்” என்று சொல்லி ஒன்றை அவளிடம் நீட்டினான். அவள் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே பார்வையை சுழலவிட எதிரில் மித்ரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
இவள் சாப்பிடுவதைவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவள் பார்வை உணர்ந்து வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.
அதில் கொஞ்சம் அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போக இவளும் வேறு பக்கம் திரும்பி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“டேய் நீ எப்போடா வந்தே??” என்றான் விஜய் அவனை பார்த்துவிட்டு
“நீ என்னை கழட்டிவிட்டு இவங்களை கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடியே நான் வந்திட்டேன்…” என்றான் அவன் சாப்பிட்டுக் கொண்டே
“எத்தனை பிளேட் ஓடிச்சு??”
“அது ஒரு ஏழு முடிஞ்சு இருக்கு…” என்றான் அவன் அசராமல்.
‘என்னது ஏழா?? விஷ்வாவா?? அவனுக்கு சாப்பாடே அளவாக தான் இருக்க வேண்டும் என்பான். இட்லி என்றால் மூன்று, தோசை என்றால் இரண்டு. மதிய உணவும் அளவு சாப்பாடே’
‘இரவு சப்பாத்தி அதுவும் மூன்று தான் என்றாவது தான் நாலு சாப்பிடுவான்… இது விஷ்வா தானா!!’ என்று அவளுக்கே சந்தேகம் வந்துவிடும் போல இருந்தது. பஜ்ஜி, போண்டா என்றாலும் கூட அதிலும் ஒன்றோ இரண்டோ தான் நன்றாக இருக்கிறது என்று மற்றவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் இவனுக்கு இறங்கவே இறங்காது.
இப்போது ஏழு சாப்பிட்டேன் என்று சொல்கிறானே என்று இவள் வாயை பிளந்துக் கொண்டிருக்க அவன் அடுத்த பிளேட் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான்.
“உங்களுக்கு இன்னொரு பிளேட் சொல்லவா” என்று விஜய் கேட்க, வேண்டும் போல தோன்றினாலும் இவளோ “என் ஹஸ்பன்ட் எல்லாமே அளவா தான் சாப்பிடுவாரு, அவர் கூட பழகி எனக்கும் அதுவே வந்திடுச்சு… இது போதும் எனக்கு” என்றாள்.
இவள் அவனை பார்த்துக் கொண்டே தான் சொல்லியிருந்தாள். அடுத்த பிளேட்டை வாங்கும் சாக்கில் எழுந்து சென்றவனுக்கு சிரிப்பாக வந்தது அவள் சொன்னதை பார்த்து.
இவர்கள் சாப்பிட்டு முடித்து மெதுவாய் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். “அப்புறம் காஞ்சனா உங்ககூட யாரெல்லாம் இருக்காங்க??” என்று ஆரம்பித்தான் விஜய்.
“அதையெல்லாம் தெரிஞ்சுட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க??” என்றாள் வெடுக்கென்று.
“சும்மா தான் கேட்டேன், அதெல்லாம் தெரிஞ்சு எனக்கு என்ன ஆகப் போகுது” என்று அவனும் அந்த பேச்சை அப்படியே விட்டுவிட்டான். “இப்படி உட்காரலாமா??” என்று கேட்டாள்.
“அதுக்காக தான் இதெல்லாம் போட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஏன் விஜய் நீ என்ன நினைக்கிறே??” என்றான் மித்ரன் கிண்டலாய். 
“நானும் அதே தான் நினைக்கிறேன்” என்றான் அவன்.
இவர்கள் அமர்ந்திருக்க காஞ்சனா எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் நண்பர்கள் இருவரும் பார்த்தார்கள் அவள் பேசுவாள் என்று தோன்றாததால் அவர்கள் இருவரும் அலுவலகம் தொடர்பாக ஏதோ பேச ஆரம்பித்தார்கள்.
இவள் எழுந்து நின்று கடலை வெறித்து பார்த்திருந்தாள். கண்கள் கலங்கி கண்ணீர் ஒரு விழியில் வழிந்ததை அமர்ந்திருந்த வாக்கிலே கண்டுக்கொண்டான் மித்ரன்.
விஜயின் தோளை இடிக்க “என்னடா” என்றான் அவன்.
அவன் சைகை காட்ட விஜய் திரும்பி பார்த்தான்.
“என்னாச்சு காஞ்சனா அழறீங்களா??”
“இல்லை…” என்றவள் கண்ணை துடைத்தாள்.
“பொய் சொன்னா சாப்பாடு கிடைக்காதாம்…” என்றான் மித்ரன்.
“பரவாயில்லை”
“இங்க என்ன பண்றீங்க??” என்று அவர்கள் முன் திடுமென்று வந்து நின்றாள் சங்கவி.
“சொல்லிட்டு வரமாட்டியா” என்று சிடுசிடுத்தான் விஜய்.
“நீ மாறிட்டே விஜய்” என்றாள் அவள்.
“இப்போ என்ன வேணும் உனக்கு??” என்றான் அவன்.
“இங்க என்ன பண்றீங்க??” என்றவள் காஞ்சனாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாக்கிங் வந்தோம்…”
“அதுக்கு இப்போ என்ன அவசியம்??”
“அதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ணப்போறே சங்கவி” என்றான் மித்ரன் இப்போது.
“நீ பேசாத” என்று இப்போது அவனை முறைத்தாள்.
“நான் ஏன் பேசக் கூடாது, நான் தான் உனக்கு எல்லாம்ன்னு எத்தனை தடவை நீ சொல்லியிருக்க” என்று மித்ரன் சொல்ல காஞ்சனா இப்போது சங்கவியை முறைத்துக் கொண்டு நின்றாள்.
‘நான் தான் முறைக்கணும் இவ ஏன் என்னை முறைக்கறா’ என்று பார்த்தாள் சங்கவி.
“அதெல்லாம் நான் எப்போ சொன்னேன்??”
“போன வாரம்…”
“அது போன வாரம்ன்னு நீ தான் சொல்லிட்டியே”
“அப்போ இந்த வாரம் எல்லாம் மாறிடுச்சா என்ன, நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன் கவி…”
“என்ன??”
“உனக்கு ஓகே சொல்லிடலாம்ன்னு” என்று அவன் சொல்ல காஞ்சனா எதை தூக்கி போடலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.
“சீய் போடா உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு…” என்றாள் சங்கவி.
“அவனுக்கு ஒண்ணும் பைத்தியம் பிடிக்கலை, உனக்கு தான் பிடிச்சிருக்கு. அதான் அவன் ஓகே சொல்லிட்டான்ல அப்புறம் என்ன. எத்தனை நாள் அவன் ஓகே சொல்லலைன்னு என்கிட்ட பீல் பண்ணே??” என்றான் விஜய் ஒரு மாதிரிக் குரலில்.
“எனக்கு உன்கிட்ட பேசணும் தனியா… அதுக்காக தான் இப்போ வந்தேன்…” என்று அவன் முகம் பார்த்தாள் சங்கவி.
விஜய் அவளை பார்க்கவில்லை, பதிலும் சொல்லவில்லை. காஞ்சனாவை பார்த்து “கிளம்பலாமா??” என்றான்.
“நீங்க பேசிட்டு வாங்க, நான் உங்க பிரண்டு கூட வீட்டுக்கு போறேன்” என்று அவள் சங்கவியின் முகம் பார்த்துக் கொண்டே விஜயிடம் சொல்லியிருந்தாள். சங்கவியின் முகம் பிரகாசமாகியது.
“எனக்கு உங்க கூட வர இஷ்டமில்லை” என்றான் மித்ரன்.
“எனக்கும் தான்…” என்றாள் இவளும்.
“விஜய் நீங்க பேசிட்டு இருங்க நான் அகைன் இன்னொரு வாக் போயிட்டு வர்றேன். அப்புறம் சேர்ந்தே போகலாம்” என்று சொல்லி இவள் நடக்க ஆரம்பிக்க மித்ரன் தான் கடுப்பானான்.
“ஹலோ தனியா போக வேணாம் நானும் வர்றேன்” என்றவன் அவளுடன் இணைந்து நடந்தான்.
இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை ஆனால் அந்த தனிமை பிடித்திருந்தது இருவருக்குமே. அருகருகே நடந்த போதும் இருவரின் மனங்களும் இன்னும் தொலைவிலேயே இருந்த உணர்வு அவளுக்கு.
மீண்டும் இவர்கள் விஜயை நோக்கி மெதுவாய் நடந்து வந்துக் கொண்டிருக்க சங்கவி விஜயின் தோளில் சாய்ந்திருந்தாள். அதை கண்டும் காணாமல் பார்த்த காஞ்சனா திரும்பி அருகே இருந்தவனை பார்க்க அவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை. பெருத்த ஏமாற்றமாகவே இருந்தது. மீண்டும் ஊருக்கு செல்லும் வரை அவன் அவளை தவிக்கவே விட்டான்.

Advertisement