Advertisement

28
“என்ன… என்ன கேட்கறீங்க??”
“இல்லை ஹிஸ் மை மேன்னு சொன்னீங்களே, யாரை சொல்றீங்கன்னு கேட்டேன்” என்றான் மித்ரன்.
‘நான் மனசுக்குள்ள தானே சொல்லிக்கிட்டேன், ஒரு வேளை வெளிய சொல்லிட்டனா…’ என்று புரியாமல் அவனை ஏறிட்டாள்.
“என்னையா சொன்னீங்க??”
“இல்லை நா… நான் ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்” என்று இவள் கடுப்பாய் மொழிந்தாள்.
விஷ்வா காரை எடுத்துக்கொண்டு வர அதில் ஏறிக்கொண்டாள் அவள். சற்று முன் பார்த்த அந்த பெண் ஷிவானி என்பவள் மீண்டும் அவர்களை கிராஸ் செய்தாள் இப்போது.
“பை மித்ரன்…” என்றுவிட்டு அவள் மீண்டும் அவனிடம் வேறு மொழியில் பேச இவள் அவர்களை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
பேசி முடித்தவனின் முகத்தில் குறும்பு கூத்தாடியது. ‘அவ என்ன சொல்லிட்டான்னு இவரு ஓவரா வழியறாரு’ என்று அவனையே பார்த்தாள் அவள்.
இவன் சும்மாயில்லாமல் “காஜல் இன்னைக்கு என்னை மீட் பண்ண வரச் சொன்னாளாம்… நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்…” என்று சொன்னவன் வெளியே எட்டிப்பார்த்து “தேங்க்ஸ் ஷிவானி” என்று சொல்ல காஞ்சனாவின் கண்களில் கனல் மட்டுமல்ல கண்ணீரும் நிரம்பிப் போனது.
அதன் பின் இருவருக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. வீட்டிற்கு கொண்டு வந்து அவளை விட்டு சென்றவன் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட தொண்டை வரை அழுகை அடைத்துக் கொண்டு நின்றது அவளுக்கு.
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் அதை சாற்றிவிட்டு படுக்கையறையில் வந்து விழுந்தவள் தான். அவள் கையோடு கொண்டு சென்றிருந்த கைப்பை, போன் எல்லாம் மூலைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்தது.
குப்புறப்படுத்து அழுக ஆரம்பித்தவள் தான். எவ்வளவு நேரமாக அழுதுக் கொண்டிருந்தாள் என்பதை அவளே அறியாள்.
சாப்பிட வேண்டும் என்ற உணர்வெல்லாம் எங்கோ தூர சென்றிருந்தது. அறைக்குள் அவள் வந்த போது போட்ட மின்விசிறி மட்டுமே சுழன்றுக் கொண்டிருந்தது.
அழுது அழுது சோர்ந்திருந்தவள் அப்படியே உறங்கிப் போயிருந்தாள். வெகு நேரமாய் அவள் கைபேசி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. அதன் சத்தத்தில் தான் அவள் விழித்ததே.
கண் திறந்து பார்க்க அறை முழுதும் இருளில் முழ்கியிருந்தது. கைபேசியில் இருந்து ஒரு மூலையில் வெளிச்சம் வந்துக் கொண்டிருந்தது. அந்த அழைப்பும் அடித்து நின்றிருக்க அறை மீண்டும் இருண்டது.
மெதுவாய் கட்டிலை விட்டு இறங்கினாள். மொபைல் தோராயமாய் எங்கே வெளிச்சத்தை காட்டியது என்பதை பார்த்துக்கொண்டு அந்த பக்கமாக  சென்றவள் கீழே குனிந்து துழாவினாள்.
சில நொடிக்கு பின் அது கையில் அகப்பட நல்ல வேலையாய் அது கீழே விழுந்ததில் எதுவும் ஆகியிருக்கவில்லை. தரையில் கார்பெட் இருந்ததால் சேதாரமில்லாமல் தப்பித்திருந்தது.
ப்ளாஷ் லைட்டை ஆன் செய்தவள் சுவிட்ச் போர்டை தேடி ஒளியை உமிழவிட்டாள். நேரம் பார்க்க அது ஏழு மணியாகிருந்தது. யார் அழைத்தது என்று அவள் பார்க்கும் முன்னமே மீண்டும் அழைப்பு வந்தது அமுதனிடத்தில் இருந்து.
“ஹலோ”
“ஹலோ அக்கா… அக்கா நல்லா இருக்கல்ல… ஏன் இவ்வளவு நேரமா நீ எடுக்கலை??”
“தூங்கிட்டேன்டா…”
“ஒண்ணும் பிரச்சனையில்லையே, நீ…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “ஒண்ணுமில்லை நான் நல்லாயிருக்கேன்…”
“அப்போ சரி…” என்றவன் “அப்புறம்…” என்று கேட்க அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“அக்கா மீட்டிங் என்னாச்சு??” என்றான் அவனே தொடர்ந்து.
“ஹ்ம்ம் முத ரவுண்டு முடிஞ்சது நாளைக்கு அடுத்த மீட்டிங் இருக்கு…” என்றாள்.
“என்னக்கா சொல்றே உனக்கு என்ன அங்க இன்டர்வியூவா நடக்குது. முத ரவுண்டு ரெண்டாவது ரவுண்டுன்னு சொல்லிட்டு இருக்க”
“இன்னைக்கு பையன் ஓகே சொல்லியிருக்காரு, நாளைக்கு அவரோட அப்பா டிசைன்ஸ் எல்லாம் பார்த்திட்டு ஓகே சொல்லணுமாம்…” என்றாள்.
“ஓ!!” என்றான் அவன்.
“அமுதா!!” என்று கூப்பிட்டு நிறுத்திவிட்டாள்.
“சொல்லுக்கா…”
“ஒண்ணுமில்லைடா, ரேகா நல்லாயிருக்கால்ல, ஸ்கேன் பார்த்தாச்சா, பேபி எப்படி இருக்காம்?? பாட்டி எப்படி இருக்காங்க?? அத்தை வந்தாங்களா??” என்று கேள்விகளாய் அடுக்கினாள்.
அவன் அனைத்திற்கும் நிதானமாய் பதிலளித்துவிட்டு “உனக்கென்ன ஆச்சுக்கா??”
“ஏன் இப்படி கேட்கறே??”
“ஏதோ வித்தியாசம் தெரியுது?? என்ன நடக்குது?? என்கிட்ட எதையும் மறைக்கறியா??” என்றான்.
அவளுக்கு வீட்டில் உள்ளவர்களிடம் விஷ்வாவை பார்த்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற ஆசை அதிகமிருந்தது. 
ஆனால் அவள் சொல்லப் போய் விஷ்வா அதற்கு எப்படி ரியாக்ட் செய்வானோ என்ற பயமும் அவளுக்கு எழுந்தது.
அத்தையை கூட்டி வந்தாலே போதும் அவனாகவே வந்துவிடுவான் தான். ஆனால் அதற்கு தன்னை அவன் கோபித்துக் கொள்வானோ என்றிருந்தது அவளுக்கு.
அவனுக்கு பிடித்ததாய் இதுவரை எதையுமே அவள் செய்ததில்லை. அவன் எதற்காய் அப்படி நடிக்கிறான் என்றும் தெரியவில்லை. பேசாமல் அவனை அவன் போக்கிலேயே விட்டுப்பிடிப்போமே என்று தோன்றியது. தன் தவறுக்கு தண்டனையாய் அதை எடுத்துக் கொள்ள வேண்டியது தான் என்று எண்ணினாள்.
அமுதனிடம் ஒன்றும் சொல்லவில்லை அவனிடம் வேறு ஏதேதோ பேசி போனை வைத்துவிட்டாள். குளியலறை சென்று முகத்தை அடித்து கழுவினாள்.
கொஞ்சம் காபி குடித்தால் தேவலாம் என்று தோன்றியது. பசி வேறு வயிற்றை கிள்ளியது. மொபைலில் நெட்டை ஆன் செய்து உணவை வரவழைக்க எண்ணி பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீராப்பா சாப்பாடு வேணாம்ன்னு சொல்லிட்டோம் என்று திட்டிக் கொண்டாள். இங்க சப்பாத்தி தான் மெயின் டிஷ்ஷே நமக்கு அது என்னைக்காச்சும் சாப்பிடனா ஓகே…
இப்போ இருக்க பசிக்கு அதெல்லாம் சரியா வராது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அழைப்பு மணியின் ஓசை கேட்டது.
விஷ்வா வந்திருப்பானோ என்று தோன்றிய நொடி வேகமாய் கண்ணாடி முன்னே நின்றவள் எல்லாம் சரியாயிருக்கிறதா என்று தான் பார்த்தாள்.
பொட்டு எங்கோ கீழே விழுந்திருக்க வேறு பொட்டை எடுத்து வைத்துக் கொண்டாள். காளிகாம்பாள் கோவில் குங்குமம் எப்போதும் அவள் கைப்பையில் இருக்கும் அதை தேடி எடுத்து வகிட்டில் இட்டுக் கொண்டாள்.
புடவையை சரி செய்து கொண்டாள். வேற கட்டிக்கலாமா என்று கூட தோன்றியது, பின் நாம ரொம்ப கோவமா தானே வந்தோம், இதெல்லாம் செஞ்சா கொஞ்சம் ஓவரா இருக்கும் என்று எண்ணி அமைதியானாள்.
அழைப்பு மணி அடிப்பதை விட்டு கதவை தட்ட ஆரம்பிக்க வேகமாய் ஓடிச்சென்று கதவை திறக்க அங்கு நின்றதோ விஜய்.
அவள் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம் தெரிந்தது. அதை காணாமல் கண்டுக்கொண்டான் விஜய். “என்ன மிசஸ் காஞ்சனா கதவை திறக்க இவ்வளவு நேரம், என்னாச்சு??” என்றான்.
“தூங்கிட்டேன், இப்போ தான் எழுந்து முகம் கழுவிட்டு வந்தேன், கதவு தட்டற சத்தம் கேட்டுச்சு…” என்றாள்.
அவளின் முகம் சோர்ந்திருந்தது தெரிந்தது. சாப்பிட்டாங்களோ இல்லையோ என்று தோன்றியது. “கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாமா” என்றவனை நிமிர்ந்து முறைத்தாள் அவள்.
“மும்பை வந்திருக்கீங்க ஊர் சுத்திக் காட்டலாம்ன்னு நினைச்சேன்…”
அவள் இன்னும் முறைப்பை விடவில்லை. “ஜஸ்ட் ஒரு வாக் போயிட்டு வரலாமே. இப்போ மழை கூட இல்லை…”
“இங்க இருந்து பக்கம் தான் அப்படியே பீச் சைடு போயிட்டு ரோடு கடையில வடாபாவ் சாப்பிட்டு வரலாம்…” என்று அவன் சொல்ல அவள் வயிறும் ஏதாவது சாப்பிடேன் என்று தான் சொல்லியது.
வாக்கிங் தானே சென்றால் என்னவென்றும் தோன்ற “சரி வர்றேன் கொஞ்சம் இருங்க…” என்றுவிட்டு உள்ளே சென்றவள் கையில் மொபைல் மற்றும் ஒரு சின்ன ஹான்ட் பர்சோடு வந்தாள்.
கதவை லாக் செய்துவிட்டு சாவியை பர்ஸில் வைத்துக்கொண்டே சுற்று முற்றும் பார்வையால் துழாவினாள்.
அவள் பார்வை யாரைக் குறித்து என்று தெரிந்தாலும் விஜய் பதில் சொல்ல முயலவில்லை, அவளாய் கேட்டால் பார்க்கலாம் என்று தானிருந்தான்.
“நைட்க்கு லக்ஷ்மி அக்காவை இட்லி, சம்பார், சட்னி செய்ய சொல்லியிருக்கேன். சாப்பிடுவீங்க தானே…” என்றான் மெதுவாய்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம்??” என்றாள்.
“என்னை உங்க பிரதரா நினைச்சுக்கோங்க இதெல்லாம் வித்தியாசமா தெரியாது…”
“பிரதரா எல்லாம் நினைக்க முடியாது??” என்றாள் பட்டென்று.
“ஏன்??”
“எனக்கு ஏற்கனவே ஒருத்தன் பிரதரா இருக்கான்… அவன் ஒருத்தனே போதும் எனக்கு…”
விஜய் உதட்டை பிதுக்கிக் கொண்டான். ரொம்பத்தான் பண்றாங்கப்பா என்ற எண்ணம் தான் அவனுக்குள் ஓடியது.
“எனக்கு பிரண்ட்ஸ் தான் யாருமில்லை. நீங்க பிரண்டா இருங்க” என்றதும் திரும்பி அவளைப் பார்த்தான் விஜய்.
அவள் பேசிக்கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள். இதழின் ஓரம் ஒரு புன்னகை ஓட “தேங்க்ஸ்…” என்றான் உள்ளார்ந்து.
“அந்த டிசைன்ஸ் எல்லாம் உங்கப்பாகிட்ட காமிச்சாச்சா??”

Advertisement