Advertisement

27
விஜய் காஞ்சனாவை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அது கட்டுமானக் கம்பெனி போல அவளுக்கு தோன்றியது.
‘இந்த கம்பெனி வைச்சுட்டு நம்மளை ஏன் இவங்க கூப்பிட்டாங்க’ என்ற யோசனை அவள் சிந்தனையை குடைய அவன் பின்னே சென்றாள்.
“இந்த ரூம்ல வெயிட் பண்ணுங்க. எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு நான் முடிச்சிட்டு வந்திடறேன், என்னோட பிரண்டு வருவான், அவன் உங்க கூட என்ன வேணும்ன்னு பேசுவான்…”
“நான் அவனை உங்களுக்கு இன்ட்ரோ பண்ணிட்டு போறேன். என்னோட வேலை முடிஞ்சதும் நானும் வந்து உங்களோட ஜாயின் பண்ணிக்கறேன்…” என்றான் அவன்.
அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை தலையை ஆட்டி வைத்தாள். “ஒரு நிமிசம்” என்று வெளியேறப் போனவனை அவள் குரல் நிறுத்தியது.
“சொல்லுங்க…”
“இல்லை இது கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி போல இருக்கு. அப்புறம் எதுக்கு என்னை நீங்க வரச்சொன்னீங்க??” என்றாள் கேள்வியாய்.
“பிரில்லியண்ட் கேள்வி தான்… அதுக்கு என்னோட பதில் தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா…” என்றான்.
“கண்டிப்பா” 
“உட்காருங்க என் பிரண்டு வந்திட்டு இருக்கான் அவனை கூட்டிட்டு வந்து விட்டுட்டு நான் சொல்றேன்…” என்றுவிட்டு அவன் வெளியில் செல்ல ஒருவர் காபி கொண்டு வந்து வைத்தார் அவள் முன்.
விஜய் வெளியில் வரவும் மித்ரன் லிப்ட்டில் இருந்து வெளிப்பட்டான். “எவ்வளவு நேரம்டா நீ வர்றதுக்கு??” என்றான்.
“ஏன் என்னாச்சுடா மேடம் கிளம்பறேன்னு சொல்லிட்டாங்களா என்ன??”
“அதெல்லாம் இல்லை ரொம்ப கேள்வி கேட்கறாங்க… இதுக்கு நடுவுல இந்த சங்கவி வேற கடுப்பேத்திட்டா” என்றான் விஜய்.
“சங்கவியா என்னாச்சு??” என்று இவன் கேட்க அவன் நடந்ததை சொன்னான்.
“நான் தான் அப்போவே சொன்னேன்ல”
“என்ன சொன்னே??”
“நீ சீக்கிரம் பேமிலி மேன் ஆகிடுவன்னு….”
“நீ சொல்றதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்??”
“சங்கவிக்கு என் மேல லவ் எல்லாம் இல்லை அது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன் தான்னு சொன்னேன்ல… சின்ன வயசுல இருந்தே உன்னை பார்த்திட்டு இருக்கா, உன் மேல அவளுக்கு பொசசிவ் ரொம்ப அதிகம்”
“என்னை விட்டாலும் விடுவா உன்னை விட்டுத்தர மாட்டாடா”
“நான் தான் அவளைவிட்டு எங்கயும் போகலையே”
“அது எனக்கு தெரியும், அவளைப் பொறுத்த வரை உன்னை ஒரு பொண்ணோட பார்க்கவும் அவ பொங்கிட்டா புரியுதா உனக்கு…”
“அப்போ எனக்கு சீக்கிரமே எஸ் சொல்லிருவான்னு சொல்றியா” என்றவனின் முகத்தில் ஒரு மலர்ச்சி தன்னாலே மலர்ந்தது.
“சொல்லிடுவா ஆனா நீ கொஞ்ச நாளைக்கு அவளை கண்டுக்காத மாதிரி இரு…”
“ஏன்டா உனக்கு கொலைவெறி??”
“அப்படி நீ அவளை கண்டுக்கிட்டேன்னா அவ மறுபடியும் உன்னை கண்டுக்க மாட்டா பரவாயில்லையான்னு சொல்லு…”
“அப்படிங்கற…”
“மும்பையில இருக்கேன்னு அப்பப்போ சொல்லி பீத்திக்குவியே, நீயெல்லாம் ஏன் இன்னும் வளராம இருக்கேன்னு எனக்கு இப்போ தான் புரியுது” என்றான் மித்ரன்.
“போதும் போதும் ரொம்ப ஒட்டாதடா. நீ உள்ள வா காஞ்சனா வைடிங்” என்று சொல்லி மித்ரனை இழுத்துச் சென்றான்.
காஞ்சனாவிற்கு பின்புறம் கதவிருக்க அதை திறந்து கொண்டு உள்ளே அவர்கள் வரவும் சத்தம் கேட்டு இருக்கையை விட்டு எழுந்து நின்ற காஞ்சனா அப்படியே நின்றுவிட்டாள்.
“உட்காருங்க காஞ்சனா, இவன் தான் என்னோட பிரண்ட் மித்ரன்” என்று அவன் அறிமுகப்படுத்த இவளோ “விஷ்வா” என்றாள்.
அவன் “மித்ரன்” என்று அவளுக்கு கைக்கொடுத்தான். அவன் முகத்தில் சலனமேயில்லை. 
“மித்ரன் நீ பார்த்துக்கோ நான் வர்றேன், காஞ்சனா உட்காருங்க…” என்றுவிட்டு பதிலை எதிர்பாராமல் விஜய் சென்றுவிட்டான்.
“மிஸ் காஞ்சனா…” என்று அவன் அழைக்க இவள் கண்களில் கண்ணீர் திரையிட்டு பின் மெதுவாய் வழிந்தது. 
“விஷ்வா” என்றவள் எட்டி வந்து அவனை கட்டிக்கொள்ள பார்க்க “ஹலோ ஹலோ என்ன பண்றீங்க நீங்க, அம் எங்கேஜ்டு??” என்று அவன் பின்னே சென்றான்.
“விஷ்வா விளையாடாதீங்க விஷ்வா… என்னை உங்களுக்கு தெரியலையா விஷ்வா” என்றாள் காஞ்சனா விழிநீர் வழிய.
“மேடம் மிஸ் காஞ்சனா நான் மித்ரன். விஜயோட பிரண்ட் போதுமா” என்றான்.
“இல்லை விஷ்வா நீங்க பொய் சொல்றீங்க, என்னை பழிவாங்கணும்ன்னு நினைக்கறீங்க… அதுக்கு இது தான் நேரமா விஷ்வா…”
“நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் விஷ்வா, ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க…” என்றாள் கெஞ்சும் குரலில்.
“மேடம் என்னாச்சு உங்களுக்கு வந்ததுல இருந்து உளறிட்டே இருக்கீங்க… நான் விஷ்வா இல்லை ஐ யம் மித்ரன்…” என்றான் அவன் பொறுமையாய்.
“இல்லை நீங்க விஷ்வா தான்…” என்றவள் தன் கைபேசியை எடுத்து அதிலிருந்த அவர்களின் திருமண புகைப்படத்தை காட்டினாள். 
“பாருங்க விஷ்வா இது நம்ம கல்யாணத்தப்போ எடுத்த போட்டோ” என்று நீட்டினாள்.
அதை கையில் வாங்கிப் பார்த்தவன் ஆச்சரியத்துடன் “அட யாருங்க இவரு என்னை மாதிரியே இருக்காரு??” என்றான் சற்றும் மாறாத குரலில்.
“விஷ்வா ப்ளீஸ்…” என்றாள் அவள் மீண்டும் கெஞ்சுதலாய்.
“இதென்னடா வம்பா போச்சு நான் விஷ்வா இல்லைங்க…” என்றான் அவனும் விடாது.
அவள் மறுக்க இவன் விஜய்க்கு அழைத்துவிட்டான். “விஜய் கொஞ்சம் இங்க வந்திட்டு போ…” என்று.
“சொல்லுடா” என்று அவன் ஆசுவாசமாய் வந்து சேர்ந்தான்.
“இவங்களை எங்கடா பிடிச்சே, வந்ததுல இருந்து என்னை கடுப்பேத்திட்டு இருக்காங்க… என்னை பார்த்து விஷ்வா விஷ்வான்னு சொல்றாங்க…”
“என்னாச்சு காஞ்சனா??” என்றான் விஜய் அவளை திரும்பி பார்த்து.
இவளோ மித்ரனின் மீதிருந்த பார்வையை விலக்காமலே “இவர் விஷ்வா தான், என்னை பழிவாங்குறாரு…” என்றாள் அவள் உறுதியான குரலில்.
“நீங்க ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன் காஞ்சனா. இவன் மித்ரன் தான் என்னோட பிரண்டு, இவன் பார்ன் அண்ட் பிராட்அப் எல்லாம் இங்க தான்…”
“இவனோட பேரன்ட்ஸ் கூட இங்க தான் இருக்காங்க…” என்று அடித்துவிட்டான் விஜய்.
மித்ரன் ஒரு பார்வை அவனை பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.
“இல்… இல்லை இவர் விஷ்வா…” என்றாள் அவளும் விடாமல்.
“விஷ்வான்னா யாரு??” என்றான் விஜய்.
“என்னோட ஹஸ்பன்ட் விஸ்வகர்மா” என்றாள்.
“அவர் ஏதோ வெளிநாட்டுல இருக்கார்ன்னு தானே நீங்க சொன்னீங்க??” என்று அவன் கேட்க அவள் அமைதியானாள்.
பின் மெதுவாய் “அது… அது எங்களோட பேமிலி மேட்டர் உங்ககிட்ட ஏன் சொல்லணும்??”
“எஸ் அது உங்க பேமிலி மேட்டர் எங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை தான். ஆனா இவரு விஷ்வா இல்லை மித்ரன்…” என்றான் விஜய்.
“ரெண்டு பேருமா சேர்ந்து பொய் சொல்றீங்க??” என்றாள் அவள்.
“நாங்க ஏன் பொய் சொல்லணும்” என்றான் மித்ரன்.
“என்னை இங்க வரவைக்க பொய் சொல்லி இருப்பீங்க”
“உங்களை பொய் சொல்லி இங்க வரவைச்சு எங்களுக்கு என்ன லாபம்??”
“உங்களுக்கு என்னை பழிவாங்கணும்…”
“இவன் ஏன் உங்களை பழிவாங்கணும்??”
“விஷ்வாக்கு என்னை பழிவாங்கணும்”
“ஓ!! அப்போ அவர் வில்லனா?? என்ன தப்பு பண்ணாரு…” என்றான் விஜய் ஆர்வமாய்.
“அவர் எந்த தப்பும் பண்ணலை. நா… நா… நான் தான் தப்பு பண்ணேன்…”
“அய்யோ அப்போ நீங்க தான் ப்ராடா, டேய் மித்ரா இவங்க தான் ப்ராடாம்டா நாம தெரியாம இவங்களை இங்க வரச் சொல்லிட்டோமே” என்றான் விஜய்.
“மச்சான் ஓவர் ஆக்டிங் பண்ணாத, இப்போவே அவ நம்பலை. நம்புற மாதிரி நடிச்சா போதும்” என்றான் மித்ரன் விஜயின் காதில் அவளுக்கு கேட்காதவாறு கிசுகிசுப்பாய்.
“இங்க பாருங்க மிசஸ் காஞ்சனா, நீங்க நினைக்கிற ஆளு நானில்லை, சரியா சும்மா தேவையில்லாம நீங்க என்னை பார்த்து பேசவேணாம். தென் இன்னொரு விஷயம் எனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் ஆகப் போகுது. இந்த நேரத்துல வந்து நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க. அது என்னோட மேரேஜ் லைப்பை பாதிக்கும்…”
அவளுக்கு தலைசுற்றிப் போனது. இவன் அவன் தானா என்ற சந்தேகம் அவளுக்கே வந்துவிடும் போல இருந்தது. ஆனாலும் தளராமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அதில் மித்ரன் கொஞ்சம் அசந்தாலும் வெளிகாட்டிக் கொள்ளவில்லை.
“ஓகே இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க??”
“அதை தான் இவ்வளவு நேரமும் சொல்லிட்டு இருந்தோம்ல”
“நீங்க விஷ்வா இல்லை அப்படித்தானே…”
“ஆமா…” என்றான் அவன் உறுதியாய்.
“ஓகே நான் கிளம்பறேன்…” என்று அவள் எழ “மிசஸ் காஞ்சனா…” என்று நிறுத்தினான் விஜய்.
“சொல்லுங்க…”
“எங்க கிளம்பறீங்க நீங்க?? வந்த வேலையை முடிச்சுட்டு போங்க மேடம்…” என்றான் மித்ரன் நக்கலாய் அதிகாரமாய். ‘இது நிச்சயம் விஷ்வா அல்ல. அவன் குரலில் எப்போதும் ஆணவம் இருக்கவே இருக்காது. இவன் குரலிலேயே ஒரு மிடுக்கு தெரிகிறது’ என்று தான் பார்த்தாள் அவள்.
விஷ்வா வேணும்ன்னே என்னை ஹர்ட் பண்ண இப்படியெல்லாம் செய்யறீங்கன்னு எனக்கு தெரியுது, எவ்வளவு தூரம் போறீங்கன்னு பார்க்கறேன் என்று எண்ணிக் கொண்டாள்.
“எனக்கு இந்த வேலை செய்ய பிடிக்கலை…” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தாள்.
“சோ வாட், உங்களுக்கு பிடிக்கலைங்கறதுக்காக எங்களுக்கு பிடிச்சதை நாங்க செய்யாம இருக்க முடியாது. இவனோட அப்பா சிட்டில ஒரு மால் கட்டி முடிச்சிருக்காரு…”

Advertisement