Advertisement

‘காபி குடிக்கலாம்ன்னு நினைச்சா டீ வந்திருக்கு…’ என்று யோசித்துக் கொண்டே அதை கிச்சனில் இருந்து எடுத்து வந்திருந்த கப்பில் ஊற்றினாள்.
டீ அத்தனை வாசமாய் இருந்தது. அதை அருகே எடுத்து அதன் மணத்தை நுகர்ந்தாள், மசாலா டீ போல. அந்த மழைக்கு இதமாய் அது தொண்டையில் இறங்கியது.
காபியை விட இப்போது டீயே புத்துணர்ச்சியாய் தோன்றியது அவளுக்கு. டீ இன்னமும் மீதமிருந்தது, மீண்டும் கொஞ்சம் தன் கப்பில் ஊற்றிக் கொண்டாள்.
சற்று நேரம் அமர்ந்து மொபைலை நோண்டிவிட்டு வீட்டிற்கு அழைத்து பேசிவிட்டு குளிக்கச் சென்றாள். வெளிர் பச்சையில் மெரூன் நிறத்தில் பூக்கள் ஆங்காங்கே சிதறியிருந்த அந்த ஜுட் சேலையை எடுத்து கட்டிக்கொண்டாள்.
அழைப்பு மணி ஒலிக்கும் முன்னேயே கதவை திறந்து வைத்து ஹாலில் அமர்ந்திருந்தாள். அதே பெண்மணி இப்போதும் வந்து அவளிடம் ஹாட்பாக்ஸை நீட்ட நன்றி சொல்லி பெற்றுக் கொண்டு கதவை அடைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.
சாப்பிட்டு முடித்து பிளாஸ்கில் மீதமிருந்த டீயை கப்பில் ஊற்றி குடித்து முடித்திருந்தாள். அதையெல்லாம் கழுவி வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.
போனை எடுத்து அவளே விஜய்க்கு அழைத்தாள். எதிர்முனை எடுக்கப்படாமலே ஓய்ந்தது. மீண்டும் அழைப்பு விடுக்க இரண்டு ரிங் சென்ற பின்னே அழைப்பு எடுக்கப்பட்டது.
“ஹலோ…” என்று இவள் சொல்லியிருக்க எதிர்முனையில் அமைதி நிலவியது.
“ஹலோ விஜய்… நான் காஞ்சனா…” என்றாள்.
இப்போதும் அமைதியே “ஹலோ லைன்ல இருக்கீங்களா விஜய்…” என்று இவள் கேட்கும் போதே “சாரி மிசஸ் காஞ்சனா இங்க சிக்னல் சரியில்லை அதான் சரியா கேட்கலை. இப்போ கேட்குது சொல்லுங்க” என்றான் அவன்.
“நாம எப்போ கிளம்பணும்ன்னு கேட்கலாம்ன்னு தான் போன் பண்ணேன்…”
“நான் இன்னும் பிரேக்பாஸ்ட் முடிக்கலை. முடிச்சுட்டு கிளம்ப வேண்டியது தான். ஒரு ஒன் ஹவர் கொடுக்கறீங்களா எனக்கு… பிரேக்பாஸ்ட் சாப்பிடுறதுக்கு இவ்வளவு நேரமான்னு நினைக்காதீங்க… அதுக்கு முன்னாடி குளிக்கணும் அதான்…” என்று அவன் சொல்ல அவள் லேசாய் சிரித்துக் கொண்டாள்.
“ஒகே நான் வெயிட் பண்றேன்…” என்றுவிட்டு போனை வைத்து விட்டாள்.
நேரமே செல்லவில்லை ஒரு மணி நேரம் ஒரு யுகம் போலவே கழிந்தது அவளுக்கு.
——————–
மித்ரன் அன்று சீக்கிரமே அலுவலகத்திற்கு வந்துவிட்டான். அவனறைக்கு வந்து அமர்ந்தான். அன்றைய மெயில் எல்லாம் பார்வையிட்டு பதில் அனுப்பிக் கொண்டிருந்தான்.
புதிதாய் இன்டீரியர் முடித்திருந்த கல்பாதேவி அடுக்குமாடி குடியிருப்பில் எடுத்து வந்திருந்த போட்டோ அனைத்தும் தங்களின் வெப்சைட்டில் பதிவேற்றிக் கொண்டிருந்தான் மித்ரன். ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்துக் கொண்டிருந்தனர். கரிகாலன் வந்ததும் நேரே இவனைத் தேடித்தான் வந்தான்.
“சார்… சார்…”
“சொல்லுங்க கிரிகாலன்…” என்றான் இவன் அவனை பார்க்காமலே.
“சார் கரிகாலன் சார்…”
“சரி சொல்லுங்க கரிகாலன்…” என்றான் இவன் அழுத்தி.
“அன்னைக்கு உங்களுக்கு ஒரு டீடைல்ஸ் அனுப்பினேன்ல…”
“ஆமா நான் இப்போ தான் அவங்களை பார்த்தேன் சார்… கீழே தான் இருக்காங்க…”
“ஓ!!” என்றுவிட்டு இவன் தன் வேலையை பார்த்தான்.
“என்ன சார் இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க??”
“விஜய்க்காக ஒரு வேலை பார்க்க அவங்க வந்திருக்காங்க… அன்னைக்கு நீங்க அனுப்பின டீடைல்ஸ் அதுக்கு தான், போதுமா போய் உங்க வேலையை பாருங்க…” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்பதை அவனால் உணரமுடியவில்லை.
சில நிமிடங்களில் விஜயிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. “ஹ்ம்ம் தெரியும் விஜய், நம்ம கிரிகாலன் வந்து இப்போ தான் அப்டேட் கொடுத்திட்டு போறாரு… வர்றேன் ஒரு பத்து நிமிஷத்துல” என்றுவிட்டு இவன் போனை வைக்க கடுகடுவென்ற முகத்துடன் சங்கவி உள்ளே நுழைந்தாள்.
இவன் “குட் மார்னிங்” என்க அவளோ இவனை கண்டுக்கொள்ளாமல் தாண்டிச் சென்றாள்.
“சங்கவி…” என்ற இவன் அழைப்பை கேட்டு அப்போது தான் திரும்பி பார்த்தாள்.
“சொல்லுங்க மித்ரன்”
“என்னாச்சு ஏன் உர்ருன்னு இருக்கே??”
“ஒண்ணுமில்லை…” என்றுவிட்டு அவள் திரும்பி சென்றுவிட்டாள்.
இவன் தோளைக் குலுக்கிக் கொண்டு வெளியில் சென்றவன் லிப்ட்டில் ஏறினான்.
——————–
அவளுக்கு ஒரு குட்டித்தூக்கமே வந்துவிட்டது அந்த ஒரு மணி நேரத்தில் விஜயிடமிருந்து அழைப்பு வர போனை ஆன் செய்தாள்.
“சொல்லுங்க விஜய்”
“நான் கிளம்பிட்டேன் போகலாமா” என்று கேட்க “டூ மினிட்ஸ் நான் வந்திடுவேன். இந்த ஹாட்பாக்ஸ், பிளாஸ்க் எல்லாம் எப்போ கொடுக்க??”
“ரூம் சாவியை சர்வன்ட்கிட்ட கொடுத்திடலாம் அவங்க வந்து எல்லாம் கிளீன் பண்ணிக்குவாங்க…”
“நான் ஏற்கனவே கிளீன் பண்ணிட்டேன்…”
“நீங்க எதுக்கு அதெல்லாம் செய்யறீங்க… சரி நீங்க வெளிய வாங்க நான் வெயிட் பண்றேன்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
அவள் தன் கைப்பை சகிதம் வெளியில் வர விஜய் நின்றிருந்தான். அவளிடம் சாவியை வாங்கி அறையை சுத்தம் செய்யச்சொல்லி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
அவன் அவளை நிற்கச் சொல்லிவிட்டு பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்து வர கதவை திறந்து இருக்கையில் அமர்ந்தாள்.
“இங்க இருந்து ஆபீஸ் ரொம்ப தூரமா??”
“ரொம்ப தூரமெல்லாம் இல்லை ஓரளவுக்கு பக்கம் தான்… டிராபிக் இருந்தா தான் கொஞ்சம் லேட் ஆகிரும்…”
அவன் கேள்வி கேட்க அவள் பதில் சொல்ல பின் அவள் கேட்க அவன் பதில் சொல்ல என்றிருக்க பயணமும் நிறைவுற்றது.
“இங்க தான் ஆபீஸ். நீங்க இங்க வெயிட் பண்ணுங்க, நான் போய் பார்க் பண்ணிட்டு வர்றேன்…” என்று சென்றவன் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தான்.
“வாங்க போகலாம்…” என்று இருவரும் லிப்ட்டை நோக்கிச் செல்ல அவசரமாய் ஓடிவந்தாள் சங்கவி மூச்சிரைக்க. “நீ என்ன இன்னைக்கு ஆபீஸ்க்கு சீக்கிரம் வந்திட்டே” என்றவளின் கேள்வி தான் அவனிடமிருந்தது.
பார்வை முழுதும் காஞ்சனாவின் மீதே. “அதைப்பத்தி உனக்கென்ன??” என்ற அவனின் பதிலில் வெகுண்டாள் அவள்.
“நீ என்ன அந்த மித்ரனை மாதிரியே பேசி வைக்குறே, அவன் கூட சேர்ந்து உனக்கும் அதே புத்தி தான் வருது போல…” என்றாள் சத்தமாய்.
“ஓகே உன்னோட பேசுறது வேஸ்ட்” என்றுவிட்டு அவன் லிப்டினுள் சென்றான்.
“நீங்க வாங்க காஞ்சனா” என்று சொல்ல அவளும் பின்னே சென்றாள்.
“நானும் வர்றேன்…” என்று சொன்ன சங்கவி வேகமாய் உள்ளே நுழைந்தாள்.
அவனாக காஞ்சனாவை பற்றி சொல்லுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க விஜய் வாயை திறப்பேனா என்றிருந்தது அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது. பொறுமை எல்லை மீறியது அவளுக்கு. “இவங்க யாரு??” என்று கேட்டே விட்டாள்.
“காஞ்சனா” என்று மட்டும் சொன்னான். காஞ்சனாவிடம் இவளைப்பற்றி அவன் சொல்லவே இல்லை.
அது சங்கவிக்கு பெரும் அவமானமாக இருந்தது. அவன் இறங்க வேண்டிய தளம் வரவும் “வாங்க காஞ்சனா…” என்று சொல்லி அவன் வெளியேற பின்னேயே அவளும் வெளியேறினாள்.
சங்கவியும் கடுகடுவென்ற முகத்துடன் அவர்களுடனே வந்தாள். “எனக்கு உன்கிட்ட தனியா பேசணும்” என்றாள்.
“ஈவினிங் பேசலாம்…”
“இப்போவே பேசணும்…” என்று அவள் பிடிவாதமாய் நிற்க “எனக்கு வேலையிருக்கு…” என்று இவனும் பிடிவாதம் பிடித்தான்.
“விஜய் நீங்க பேசிட்டு வாங்க நான் இங்க நின்னுட்டு வியூ பார்க்கறேன்…” என்றுவிட்டு சற்று தள்ளிச் சென்றாள் காஞ்சனா.
அவளிடம் வந்தவன் “உனக்கு மேனர்ஸ் இல்லை, நான் முக்கியமான மீட்டிங் போக வேண்டி இருக்கு. நீ என்னடான்னு இப்படி கடுப்பேத்திட்டு இருக்க…” என்றவன் சரியான கோபத்தில் இருந்தான்.
எப்போதும் அவளிடத்தில் கோப முகம் காட்டாதவன் அதைக் காட்டவும் கண்களில் தன்னை மீறி நீர் கோர்த்துக்கொண்டது அவளுக்கு.
“அவ யாரு??” என்றாள்.
“சொன்னேன்ல”
“நான் அவ பேரா உன்கிட்ட கேட்டேன்…”
“வேற என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு??”
“யாரு அவ??”
“ஒரு டிசைன் பிடிச்சிருந்தது அதுக்காக அவங்களை வரச்சொல்லி இருந்தேன்”
“உனக்கு டிசைன் பத்தி என்ன தெரியும்”
“இட்ஸ் நன் ஆப் யூவர் பிசினஸ்” என்று கடுப்பாய் மொழிந்தான் அவன்.
“அவங்க காட்ட வந்த டிசைன்ஸ் எல்லாம் நகை மாடல்ஸ் போதுமா”
“நீ அதெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ணப் போறே??”
“அதே தான் கேட்கறேன் என் வேலையை பத்தி தெரிஞ்சுட்டு நீ என்ன பண்ணப் போறே??”
“தெரியலை எனக்கு அவளை பிடிக்கலை. ரொம்ப அழகா இருக்கா, ஆண்டவன் அவளுக்கு அழகை தூக்கிக் கொடுத்திட்டு அது அதிகமாகிடுச்சேன்னு சின்னதா குறையையும் சேர்த்தே கொடுத்திட்டான் போல” என்றாள் காஞ்சனாவை பார்த்துக் கொண்டே
‘இவ என்ன சொல்றா, காஞ்சனாவை பாராட்டுறாளா இல்லை திட்டுறாளா… இதுக்கு பேரு தான் வஞ்ச புகழ்ச்சி அணியோ’ என்ற தலையாய சந்தேகம் வந்தது அவனுக்கு.
அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பதை அவளின் பார்வையை கண்டு புரிந்துக் கொண்டவன் “அறிவில்லை உனக்கு என்ன பேசறே நீ?? ஒருத்தரோட குறையை பத்தி பேசறது அழகா”
“நான் ஒண்ணும் தப்பா பேசலை, எனக்கு அவளை பிடிக்கலை” என்றாள் மீண்டும்.
“உனக்கு அவங்களை பிடிக்கணும்ன்னு என்ன இருக்கு, எனக்கு பிடிச்சிருக்கு வரச்சொல்லி இருக்கேன்…” என்றான் இவன் மொட்டையாய்.
“உனக்கு என்னைத் தானே பிடிக்கும்ன்னு சொல்லுவே” என்றவளின் பார்வை இன்னமுமே காஞ்சனாவிடத்தில் தான் இருந்தது.
‘அடடா இவ ஏதோ பொறாமையில பொசுங்கற மாதிரி இருக்கே… ஆனா ஏன்??’ என்று யோசித்துவிட்டு “அதெல்லாம் அப்போ…” என்று வேண்டுமென்று அவளை வெறுப்பேற்றச் சொல்ல அதில் காண்டாகிப் போனாள் அவள்.
அதன் பின் தான் கடுப்புடன் அவள் அலுவலகம் வந்ததும் மித்ரனை கண்டுக்கொள்ளாமல் சென்றதும்…

Advertisement