Advertisement

26
“என்னங்க இன்னைக்கு ஸ்கேன்க்கு போகணும்??” என்றாள் ரேகா.
“ஹ்ம்ம் ஞாபகம் இருக்கு ரேகா… அத்தையை வரச்சொல்லி இருக்கேன்…” என்றான்.
“ஏன் நீங்க கூட்டிட்டு போக மாட்டீங்களா??” என்று அவனை முறைத்தாள்.
“நானும் தான் வர்றேன். இந்த ஊர்ல எனக்கு எந்த டாக்டரும் அவ்வளவு பரிட்சயம் கிடையாதும்மா. அதுக்காக தான் அத்தையை வரச்சொன்னேன்… இனிமே நாம இங்க தானே பார்க்கப் போறோம்…”
“ஓ!! சாரி” என்றாள்.
“உனக்கு எப்பவும் என்னைய தப்பா நினைக்கறதே வேலையா போச்சு போ…” என்றான்.
“இல்லை அதெல்லாம் இல்லைங்க… ஏதோ ஒரு மாதிரி இருந்துச்சு மனசுக்கு, அதான்…”
கணினியில் அமர்ந்திருந்த அமுதன் செய்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவளருகே வந்து அமர்ந்தான். அவள் கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டான்.
“என்னாச்சு ரேகா??” என்றான் கனிவாய்.
“அண்ணனை நினைச்சு தான் கவலையா இருக்கு??” என்றவளின் விழிகள் நிரம்பி இருந்தது.
“அதெல்லாம் நீ எதுக்கும்மா யோசிக்கறே?? நீ சந்தோசமா இருக்கணும் இப்போ…”
“எப்படி யோசிக்காம இருக்க முடியும். எனக்கு ஆரம்பத்துல இருந்தே அவங்களை பிடிக்கவே பிடிக்காது. சின்ன வயசுல அவங்களோட சேர்ந்து விளையாடி இருக்கேன்…”
“அப்புறம் வீட்டில எல்லாரும் விஸ்வா இப்படி விஸ்வா அப்படி அவனை மாதிரி இருக்கணும்ன்னு எப்போ பார்த்தாலும் ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பாங்க… எனக்கு அதெல்லாம் அப்போ அவ்வளவு எரிச்சலா இருக்கும்…”
“அதுக்கு பிறகு நான் அவங்களோட பேசுறதே இல்லை. எனக்கு பேசவும் பிடிக்காது. எப்பவும் அவங்களோட கம்பேர் பண்ணி எங்களை குற்றம் சொல்லிட்டே இருப்பாரு தாத்தா…”
“எங்க வீட்டு ஆளுங்க பத்தி எனக்கு முன்னாடியே கொஞ்சம் தெரிஞ்சுது. அம்மா சொன்னதுக்கு நான் மறுப்பு சொல்லாததுக்கு அதுவும் ஒரு காரணம்”
“என்ன சொல்றே ரேகா??”
“ஒரு நாள் தாத்தாவும் பெரியப்பாவும் பேசிட்டு இருந்தாங்க. அண்ணாக்கு பொண்ணெல்லாம் பார்க்க வேணாம்ன்னு அவன் இப்படியே இங்க இருந்தா தான் காலத்துக்கும் அவன் நம்ம பிடியில இருப்பான்னு சொல்லிட்டு இருந்தாங்க…”
“அப்போ எனக்கு அதுக்கு அர்த்தம் புரியலை. ஆனா அதை கேட்கும் போது அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. அம்மாகிட்ட அவங்க பேசினதைபத்தி சொன்னேன் அவங்க ரொம்ப அழுதாங்க… அப்போ தான் அவங்க சொன்னாங்க அண்ணாபத்தி உங்களைப்பத்தி எல்லாம்…”
“நம்ம கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னாடி தான் அது நடந்தது. அப்போ தான் அம்மா அரைகுறையா சில விஷயம் சொன்னாங்க…”
“நீங்க அவங்களோட அண்ணன் பையன்னு உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும் அது அவங்களோட ஆசைன்னு…”
“அப்பவும் நான் வேணாம்ன்னு தான் சொன்னேன். ஆனா அவங்க ரொம்ப பிடிவாதமா இருந்தாங்க. அவங்களை பத்தியும் சொன்னாங்க. விஸ்வா அண்ணா யாரு அம்மா எப்படி இங்க வந்தாங்கன்னு மட்டும் சொன்னாங்க அப்போ…”
“அதுக்கு பின்னாடி நடந்த முழு கதையும் அம்மா இப்போ கொஞ்ச நாள் முன்னாடி சொல்லவும் தான் எனக்கு தெரியும்…”
“அண்ணா நிஜமாவே ரொம்ப பாவம்ல… ஏதோ கோவிலுக்கு பலி கொடுக்கற ஆட்டை சோறு போட்டு வளர்க்கற மாதிரி அண்ணாவை வைச்சிருந்தாங்கன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.
“நம்ம கல்யாணத்துக்காக அண்ணாகிட்ட பொய் சொன்னதை நினைச்சா எனக்கு ஒரு மாதிரி கில்டியா இருக்கு” என்றாள்
“அது நம்ம கல்யாணம் நடக்கணும் அப்படிங்கறதுக்காக சொன்ன பொய்யில்லை ரேகா. மாமாவும் அக்காவும் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொன்ன பொய்…” 
“அதுக்கு நீ ஏன் பீல் பண்ணுறே… நாம நல்லதுக்கு தான் பொய் சொல்லியிருக்கோம் அதுல தப்பில்லைம்மா…”
“ஆனாலும் இப்படி சொல்லியிருக்க வேணாம். அண்ணா எவ்வளவு மனசு நொந்து போயிருப்பாங்கன்னு சொல்லுங்க. அண்ணிக்கு கூட தெரிய வேணாம்ன்னு சொன்னீங்க…”
“அன்னைக்கு அவங்ககிட்ட பொய் சொல்றோமேன்னு நினைச்சு தான் நான் அழுதேன். ஆனா அண்ணா நான் உங்களுக்காக பீல் பண்ணி அழறேன்னு நினைச்சுக்கிட்டாங்க…”
“அதுவும் நல்லதுக்கு தானே விடு ரேகா…”
அவளோ சமாதானம் ஆகாமலே இருந்தாள். ஏதேதோ பேசி அவள் எண்ணப்போக்கை மாற்றினான் அமுதன்.
“ஏன் ரேகா உனக்கு என்னை பிடிக்கலையா??”
“தெரியாது அம்மா சொன்னாங்க அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… நீங்க??”
“அத்தை சொன்னாலும் எனக்கு பிடிக்காம எல்லாம் நான் உன்னை கல்யாணம் பண்ணலைன்னு நான் தான் அன்னைக்கே உன்கிட்ட சொல்லிட்டனே, அப்புறம் என்ன கேள்வி…” என்றான் அவன்.
“அதை உங்க வாயால கேட்க எனக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம்…” என்று விளக்கம் கொடுத்தாள் அவள்.
“சரி நீ கிளம்பி ரெடியா இரு. சென்னையில செக்கப் பண்ண ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வைச்சுக்கோ இங்க எப்படியும் அதெல்லாம் ஒன்ஸ் காட்ட வேண்டியிருக்கும்…” என்று அவளுக்கு நினைவு படுத்தினான்.
————————-
“கார்த்திக் இன்னைக்கு நீ தக்கலைக்கு போய்டு, நானும் ரத்தினமும் கன்னியாகுமரிக்கு போறோம். சரவணன் தோவாளைக்கு போகட்டும்…”
“சித்தப்பா வீட்டுல உட்கார்ந்து சும்மா சாப்பிடட்டுமா” என்று நக்கலாக கேட்டான் சரவணன்.
“டேய் அவனுக்கு உடம்பு சரியில்லைடா அவன் ரெஸ்ட் எடுக்கணும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்ல…”
“லேசா நெஞ்சை பிடிச்சுட்டு உட்கார்ந்தாரு அதுக்குன்னு வேலை வெட்டியே பார்க்க வேணாம்ன்னா சொன்னாங்க. நாங்க கஷ்டப்பட்டு உழைப்போமாம் இவரு நோகாம உட்கார்ந்து சாப்பிடுவாராம்…” என்றான் கார்த்திக்கும் உடன் சேர்ந்துக் கொண்டு
ரத்தினவேலுக்கு அப்படியொரு கோபம் வந்தது. “மரியாதையா நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்து போகலை என்ன நடக்கும்ன்னே எனக்கு தெரியாது…”

“அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு அவனை இப்படி பேசறீங்க நீங்க… நீங்கலாம் மனுஷங்களாடா” என்றார் அவர்.
“அதை நீங்க போய் கேட்கறீங்க பாருங்க அதை நினைச்சா தான் எங்களுக்கு கடுப்பா வருது. ஊரையே ஏமாத்தி உலையில போடுறவங்க நீங்களும் உங்கப்பாவும்…”
“இதுல நீங்க எங்களை மனுஷனான்னு கேட்கறீங்க…” என்று சூடாகவே கேட்டான் சரவணன்.
“சரவணா…” என்று கத்திய ரத்தினவேல் மகனை ஓங்கி அடித்திருந்தார். அவன் பதிலுக்கு அவரை அடிக்க கையை ஓங்கிவிட ஷனநேரத்தில் வீடே ரணகளப்பட்டது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச்சுவார்த்தை நடக்க அது முற்றி இறுதியாக அண்ணன் தம்பி இருவரும் சொத்தை பிரித்து கேட்டனர்.
இப்போது கனகவேல் பேசினார். “சொத்து யார் பேர்லயும் எழுதறதா இல்லை. என் காலத்துக்கு பிறகு தான் அது வரும். யாருக்கு என்னன்னு நான் செத்த பிறகு வக்கீல் சொல்வாரு கேட்டு தெரிஞ்சுக்கோங்க…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
சகுந்தலா தன் கணவரை பார்த்தார் இது உங்களுக்கு தேவை தான்’ என்பது போல். ஆறுதலாக ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை கணவரிடம்.
கோழையாய் மற்றவரின் பின்னே ஒளிந்துக் கொள்பவன் ஆண்மகன் அல்ல. இதோ அண்ணன் மகன்களே பேச ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் நிறைய இருக்கிறது இவர்கள் அனுபவிக்க என்று தான் பார்த்திருந்தார் சகுந்தலா.
———————
காஞ்சனா வீட்டிற்கு அழைத்து பேசினாள், அமுதனிடம் அவள் பத்திரமாக வந்து சேர்ந்ததாக கூறி போனை வைத்தவள் குளித்து வந்து இரவு உணவை உண்டு முடித்தாள்.
உணவு கூட தென்னிந்திய சமையலாகவே இருந்தது. நன்றாகவே இருந்தது. சாப்பிட்டு கடலை நோக்கி இருந்த அந்த பால்கனியின் கதவை திறந்து நின்றாள்.
லேசான ஊதல் காற்று வந்து முகத்தில் மோதியது இப்போது. தூரத்தே தெரிந்த கடலை கண்கள் வெறித்தது, இரவு நேரமாகிய போதும் அன்றொரு நாள் விஸ்வாவும் அவளும் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. “நீ என்னை விரும்பறியா காஞ்ச்சு??” என்ற அவனின் கேள்விக்கு அன்று அவள் பதில் சொல்லியிருக்கவில்லை.
அவனை பிரிந்த இத்தனை நாளில் அதற்கு லட்சம் முறை பதில் சொல்லியிருக்கிறாள் அவள். “எனக்கு உங்களை மட்டும் தான் புடிக்கும் விஷ்வா…” என்று வாய்விட்டு சொன்னவளின் இமைகள் நனைந்தது.
அங்கேயே தரையில் மடிந்து அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள் அவனை நினைத்து.
காலை வேலை குளிர் உடலை தாக்க கண் விழித்து பார்த்தாள் காஞ்சனா. இரவு ஏதேதோ யோசித்துக் கொண்டே ஹால் சோபாவின் கீழே அமர்ந்திருந்தவள் அப்படியே கீழே படுத்து உறங்கியிருந்தாள்.
கார்பெட் இருந்ததினால் தப்பித்தாள். இல்லையென்றால் இந்நேரம் குளிரில் உடல் வெடவெடத்து போயிருக்கும். மழை பெய்துக் கொண்டிருந்தது போலும்.
எழுந்து வந்து பால்கனியில் நின்று பார்த்தாள். கடல் சீற்றம் கொண்டு முன்னே வந்து வந்து சென்றது. லேசான சாரல் மழையே அப்போது.
சில மணி நேரத்திற்கு முன் பெரு மழை அடித்து ஓய்ந்ததற்கு அடையாளமாய் தெருவெங்கும் அலசிவிடப்பட்டிருந்தது மழை நீரினால். பச்சை பசேலென்று மரங்கள் குளித்து முடித்து ஈரம் சொட்ட நின்றது பார்க்க அப்படியொரு அழகு.
தன் கைபேசியை எடுத்து நேரம் பார்த்தாள். சீக்கிரமே எழுந்துவிட்டிருந்தது புரிந்தது. மணி இப்போது தான் ஆறை தாண்டியிருந்தது.
காலையில் காபி குடிக்கும் பழக்கமுண்டு அவளுக்கு. என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டே அங்கிருந்த கிச்சனுக்குள் நுழைந்தாள்.
அங்கே பிரிட்ஜ் கூட இருந்தது. திறந்து பார்க்க குளிர்பானங்கள் இருந்தது. பால் பவுடர் இருந்தது.
காபி தூள் இல்லை போலருக்கே, பேசாம பாலை கலந்து குடிக்க வேண்டியது தான், சுகர்… இதுல போட்டிருப்பான் தானே என்று எண்ணிக்கொண்டே பால் பவுடரை திறந்து தன் வாயில் கொஞ்சம் போட்டுப் பார்த்தாள்.
லேசாய் கொஞ்சம் இனிப்பு இருந்தது. இந்த இனிப்பு பத்துமான்னு தெரியலையே என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அழைப்பு மணி ஒலித்தது.
வெளியில் சென்று பார்க்க வடநாட்டு பெண் ஒருத்தி நின்றிருந்தாள். “நமஸ்தே” என்றாள் அழகாக. பதிலுக்கு இவளும் கைப்கூப்ப அவள் கையில் இருந்த பிளாஸ்க்கை இவளிடம் நீட்டினாள். “சாய்…” என்றாள்.
“சுக்ரியா” என்று இவள் தனக்கு தெரிந்த ஹிந்தியில் நன்றி கூற அப்பெண் சென்றுவிட்டாள். உடன் இவள் கைபேசி அழைக்க எடுத்தால் விஜய் தான் அழைத்திருந்தான்.
“குட் மார்னிங் மிசஸ் காஞ்சனா…”
“வெரி குட் மார்னிங் விஜய்”
“டீ கொடுத்து விட்டிருந்தேன் கிடைச்சுதா…”
“இப்போ தான் கொடுத்திட்டு போனாங்க. தேங்க்ஸ்…”
“ஓகே நீங்க குடிச்சுட்டு குளிச்சுட்டு ரெடியாகுங்க. ஒரு மணி நேரத்துல பிரேக் பாஸ்ட் வந்திடும்” என்றுவிட்டு அவன் போனை வைத்தான்.

Advertisement