Advertisement

25
“விஜய்”
“சொல்லுடா”
“இன்னைக்கு உனக்கு ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு தெரியும்ல…”
“ஹ்ம்ம் அதெப்படி மறப்பேன்… நான் பார்த்துக்கறேன், யூ டோன்ட் வொரி மேன்…”
“தேங்க்ஸ்டா…”
“போடா…”
“சரி நேத்து சங்கவியை ரொம்ப திட்டிட்ட போல…”
“பின்னே கோபம் வராதாடா… நானும் பொறுமையா தான் இருக்கேன், என்னை ரொம்ப கடுப்பேத்துறா?? ஒரு இடத்துக்கு போகணும்ன்னா சரியான நேரத்துல போக வேண்டாமா இப்படி இருந்தா எப்படிடா??”
“அவ எப்போமே இப்படித்தான்டா…”
“நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாதேடா”
“சப்போர்ட் எல்லாம் பண்ணலைடா, அவளைப்பத்தி எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்…”
“இதெல்லாம் நீங்க யாரும் சொல்ல மாட்டீங்களா அவளுக்கு??”
“சரி விடு மேன்… இப்போ ஏன் டென்ஷன் ஆகறே??”
“நேத்து அவளுக்காக பீச்ல அவ்வளோ நேரம் காத்திட்டு இருந்தது நான் தானே… நீ இல்லையே…”
“எனக்கும் அவளுக்காக காத்திட்டு இருக்கத்தான் ஆசை…” என்றான் விஜய் ஒரு மாதிரி குரலில். அது மித்ரனுக்கு வருத்தத்தை கொடுக்க “சாரி விஜய்…”
“இட்ஸ் ஓகேடா… லைட்டா பீல் ஆகிட்டேன், விடு…”
“நான் ஆபீஸ் போயிட்டு அவங்ககிட்ட பேசிட்டு உனக்கு அப்டேட் பண்றேன் ஓகேவா…”
“ஹ்ம்ம் ஓகேடா…”
“சரி கிளம்பலாம்…” என்று விஜய் சொல்ல இருவரும் ஒன்றாகவே அலுவலகம் கிளம்பினர்.
இருவரும் லிப்ட்டை நோக்கிச் செல்ல அங்கு இவர்களுக்கு முன்னமே சங்கவி நின்றிருந்தாள். 
“குட் மார்னிங் சங்கவி…” என்றான் புன்னகை முகமாய் விஜய்.
“ஹ்ம்ம் மார்னிங்…” என்றாள் அவனை திரும்பிப் பார்க்காமலே.
அதில் அவன் மனம் வாடிய போதும் விஜய் சங்கவியை தன் பார்வையால் வருட சங்கவி கண்ணாடியில் மித்ரனை பார்த்தாள்.
விஜய் அவன் இறங்க வேண்டிய தளத்தில் இறங்கியவன் “பாய்டா, பாய் சங்கவி” என்றான்.
“கால் மீ லேட்டர் விஜய்” என்று மித்ரன் குரல் கொடுக்க அவன் தலையசைத்து சென்றான்.
“எதுக்கு அவனை கால் பண்ண சொல்றீங்க??” என்றாள் முதல் நாள் அவன் கோபத்தை மறந்து. அவனிடம் பேசக்கூடாது என்று முடிவெடுத்ததை மறந்து.
“தட்ஸ் அவர் பெர்சனல்”
“இடியட் காலையிலேயே என்னை வம்பிழுக்கணும்ன்னு வருவியா நீ?? என்ன கேட்டாலும் இடக்கு மடக்கா பதில் சொல்றே??” என்று கத்தினாள்.
“நானா உன்கிட்ட பேசினேன். நீ தான் என்கிட்ட பேசினே நான் பதில் சொன்னேன், தட்ஸ் ஆல்” என்று சொல்ல அவள் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஐ ஹேட் யூ…”
“தேங்க்ஸ்…” என்று அவன் சொல்லி முடிக்கவும் அவர்களின் தளம் வரவும் சரியாக இருக்க வெளியில் வந்தனர் இருவரும்.
தங்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்க மித்ரனின் கைபேசி ஒலியெழுப்பியது.
அழைப்பை கண்டுவிட்டு அவசரமாய் ஆன் செய்தவன் “சொல்லு விஜய்…”
“எப்போ??”
“ஓ!! சரி… தேங்க்ஸ்டா. எல்லாம் நல்லபடியா முடியட்டும் ட்ரீட் வைக்கறேன். கோவா தானே போய்டுவோம் விடு…” என்று சொல்லி போனை வைத்த மித்ரன் முகம் மகிழ்ச்சியாய் இருந்தது.
அவன் அறைக்கதவை தட்டிவிட்டு வந்த சங்கவி அவன் முகம் கண்டு ‘நல்ல மூட்ல இருக்கான் போல…’ என்று எண்ணிக் கொண்டாள்.
“நாளைக்கு மறுபடியும் ஜுஹு போகணும், எனக்கு இன்னும் கொஞ்சம் டீடைல்ஸ் வேணும். அகைன் ஒரு டைம் பார்க்கணும்”
“போயிட்டு வா அதை ஏன் என்கிட்ட சொல்றே??” என்றவனின் முகம் மீண்டும் கடுகடுவென்றாகியது.
‘என்கிட்ட மட்டும் தான் இப்படி செய்யறான், வேணுமின்னே செய்யறான்’ என்று புகைந்தவள் “நான் மட்டும் போறதுக்கு தான் உன்கிட்ட சொன்னனா”
“உன்னோட வர்றதுக்கு எனக்கு இஷ்டமில்லை…”
அவளுக்கும் கோபம் வந்தது, கெஞ்சினால் இவன் மிஞ்சுகிறான் என்று. “நீ ஒண்ணும் வரத் தேவையில்லை போ, நான் விஜயை கூட்டிட்டு போறேன்” என்று எழுந்தவள் அவன் அறைககதவை வேகமாய் அறைந்து சாற்றி சென்றாள்.
புன்னகையை மெதுவாய் விழுங்கியவன் விஜய்க்கு போன் செய்தான். 
“சொல்லுடா”
“சங்கவி அங்க தான் வந்திட்டு இருக்கா…”
“என்னாச்சு சண்டையா உனக்கும் அவளுக்கும்??”
“என்னை சண்டைக்காரன்னே முடிவு பண்ணிட்டியா நீ??”
“சரி சரி என்னாச்சுன்னு சொல்லு”
“நீ ப்ரீயா இருக்கியா, அவளை ஜுஹு வரைக்கும் கூட்டிட்டு போகணும்…”
“கண்டிப்பா கூட்டிட்டு போறேன், அதைவிட வேறென்ன வேலைன்னு சொல்லு… இன்னும் நீ என்னாச்சுன்னு சொல்லவேயில்லை??”
மித்ரன் நடந்ததை சொல்ல “சரி நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு வைத்து விட்டான் விஜய்.
மித்ரனுக்கு விஜயிடமிருந்து சில தகவல்கள் வாட்ஸ்அப்பில் வந்திருந்தது. அதை பார்த்துக் கொண்டு வந்தவன் முகம் பளிச்சென்றானது.
————————–
“அக்கா நீ என்ன சொல்றே, மாமா டிசைன்ஸ் ஓகே பண்ணியிருக்காங்களா??”
“நான் என்ன கன்னடத்துலயாடா சொன்னேன். நான் சொன்னதே எனக்கு சொல்றே??”
“ஜோக்கடிக்கற நேரமாக்கா இது??” என்றான் அவன் இப்போது.
“நான் ஜோக்கடிக்கற நிலைமையிலையா இருக்கேன்…” என்றவள் “என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியலை…”
“ஒரு பக்கம் எனக்கு போகலாம்ன்னு தோணுது”
“ஏன்க்கா??”
“இன்னைக்கு உங்க மாமா பிறந்தநாள். சரியா இன்னைக்கு தான் இந்த மெயில் வந்திருக்கு, அதும் அதுல அவ்வளவு டிசைன்ஸ் இருக்கும் போது அவரோடதுக்கு மட்டும் கேட்கறாங்கன்னா…”
“கேட்கறாங்கன்னா??”
“அது ஏதோ கடவுள் செயல்ன்னு தோணுது. போய் பார்த்தா தான் என்னன்னு தோணுது… பிடிச்சா செய்வோம், இல்லைன்னா விட்டிருவோம்… நீ என்ன சொல்றே??”
“உன்னிஷ்டம் தான் அக்கா…”
“நீயும் வர்றியா??” என்றவள் பின் என்ன நினைத்தாளோ “வேணாம் நீ ரேகா கூட இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இங்க வந்திடுங்க, பாட்டிக்கும் துணையாச்சு. அத்தையும் ரேகாவை பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருக்காங்க…” என்றாள்.
“இருந்தாலும் நீ தனியா மேனேஜ் பண்ணிப்பியாக்கா??”
“ஹ்ம்ம் பண்ணிக்கறேன்…”
“அங்க எல்லாரும் பெரும்பாலும் ஹிந்தி தான் அக்கா பேசுவாங்க…”
“நாம தான் கொஞ்சம் ஓட்டை ஹிந்தி கத்து வைச்சிருக்கோமே அதை வைச்சு ஓட்டிக்கலாம்…”
“அக்கா பெட்டெர் நீ அவங்களையே அகமடேஷன் செஞ்சு தரச் சொல்லேன். நாம பே பண்ணிக்கலாம், அவங்களை நல்லா இடமா பார்த்து அரேன்ஜ் பண்ணித் தரச்சொல்லு”
“அவங்களை போய் எப்படிடா அரேன்ஜ் பண்ணச் சொல்றது??”
“வேணாம் விடு நான் நம்ம அகர்வால் சேட்கிட்ட கேக்குறேன். அவரோட பொண்ணு வீடு அங்க தான் இருக்கு. அவங்ககிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன்” என்றவன் போனை வைத்துவிட்டான்.
இன்னும் ஒரு வாரத்தில் அவள் மும்பைக்கு கிளம்ப வேண்டும். அடுத்த இரண்டு நாளில் அமுதனும் ரேகாவும் அங்கு வந்திருந்தனர்.
“அமுதா அவங்களே அகமடேஷன் ஆபர் பண்ணியிருக்காங்கடா” என்றாள் காஞ்சனா.
“அவங்களே பண்ணிட்டாங்களா, நான் நம்ம சேட்கிட்ட வேற சொல்லி இருக்கனே… ஆமா அவங்க ஏன் பண்ணாங்க??”
“நேத்து ஒருத்தர் வீடியோ கால் வந்தார்டா அவர் தான் கேட்டாரு, எத்தனை பேரு வர்றீங்கன்னு?? நான் மட்டும் தான்னு சொன்னேன்…”
“நீங்க மும்பைக்கு புதுசான்னு கேட்டாரு, ஆமான்னு சொன்னேன். உங்க அகமடேஷன் நாங்களே அரேன்ஜ் பண்றோம்ன்னு சொல்லிட்டார்டா…”
“அக்கா நீ ஏன் சரின்னு சொன்னே?? அவங்க யாரோ எப்படியோ நமக்கு எப்படி தெரியும்?? நானே உன்கூட வரலாம்ன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்…”
“வேணாம் அமுதா. நீ இவங்களோட இரு, ரேகாவும் இனி இங்கவே இருக்கட்டும்டா அவளை அங்க இங்க அலைய வைக்காதே. பாட்டியும் அத்தையும் அவளைப் பார்த்துக்குவாங்க…”
“நீ உன்னோட வேலையை சீக்கிரமே விட்டுட்டு இங்க வந்திடு. கொஞ்ச நாள் தான்டா எல்லாம் மாறிடும்” என்றாள் எதையோ எண்ணி.
“அப்புறம் அமுதா நேத்து நான் பேசினேன்ல அவர் பார்க்க ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரியறார். எனக்கொண்ணும் தப்பா தெரியலை, தமிழ் ஆளுங்க தான் அவங்க…”
“நீ ஒண்ணும் கவலைப்படாதே, எதுக்கும் நம்ம சேட்கிட்ட கேட்டு அவங்க பொண்ணு அட்ரஸ் போன் நம்பர் மட்டும் வாங்கிக் கொடு. நான் எதுவும் உதவி தேவைப்பட்டா அவங்ககிட்ட கேட்டுக்கறேன்…” என்றாள்.
“என்னவோ சொல்றே?? பத்திரமா போயிட்டு வா, கவனமா இரு…”
ரேகா கருவுற்றிருந்தாள். அவளுக்கு இது ஐந்தாம் மாதம் இனி அவளை அங்குமிங்கும் அலைய வைக்க வேண்டாம் என்று அதனால் தான் காஞ்சனா தன் தம்பியிடம் சொல்லியிருந்தாள்.
அவளின் பாட்டிக்கும், அத்தைக்கும் தங்களின் பேரப்பிள்ளைகளை பார்க்க வேண்டுமென்ற ஆசை. அதிலும் பாட்டிக்கு கொள்ளை ஆசையாய் இருந்தது. 
காஞ்சனாவிற்கு, தான் இருந்து எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. விஸ்வாவும் அவளும் சேர்ந்து தங்கள் வாழ்வை தொடங்கிடாத நிலையில் என்ன செய்வது.
பேரன் வீட்டை விட்டு சென்றுவிட்டான் என்று அறிந்ததில் இருந்தே அவருக்கு மனம் கேட்கவில்லை. அவ்வப்போது வரும் உடல் உபாதைகள் இப்போது அதிகம் அவரை தொந்திரவு செய்தது.
அவருக்கும் வாழும் ஆசை கொஞ்சம் கொஞ்சமாய் சென்றிருந்தது. பேத்தி வாழ்வு தான் இப்படி இருக்கிறது, பேரனின் வாழ்வையாவது பார்த்துவிட வேண்டும் என்ற அவரின் ஆசை தான் தற்போது நிறைவேறி இருந்தது.
அமுதன் முதலில் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, காஞ்சனா தான் அவனிடம் பேசி புரிய வைத்தாள்.
“இங்க பாரு அமுதா, என் லைப் வேற உன் லைப் வேற, நமக்கு எப்போ கல்யாணம் ஆச்சோ அப்போவே நமக்குன்னு ஒரு வாழ்க்கை ஆகிப்போச்சுன்னு புரிஞ்சுக்கோ”
“என்னோட வாழ்க்கையை உன்னோட வாழ்க்கையோட சம்மந்தப்படுத்தி நீ எடுத்த முடிவெல்லாம் போதும். இனிமே அந்த மாதிரி ஒரு முட்டாள்த்தனத்தை எப்பவும் செய்யாத…”

Advertisement