Advertisement

காஞ்சனா கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தாள். இரு கரம் கூப்பி அந்த அம்மனை பார்த்து மனதார வேண்டிக் கொண்டிருந்தாள்.
‘ஏன்மா உனக்கு என் மேல கோபம். நான் செஞ்சது தப்பு தான் அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திட்டியேம்மா… நானும் உன்னை மாதிரி தனியாவே இருந்திடுவேனாம்மா…’ என்று சொல்லும் போது கண்களில் மாலை மாலையாய் கண்ணீர் வழிந்தது.
‘எனக்கு அவர் வேணும்மா நீ தான் அவரை என்னோட சேர்த்து வைக்கணும். அவர் எங்க இருந்தாலும் சீக்கிரமே என்னைத் தேடி வரணும்மா…’
‘அவரை தேடி போகணும்ன்னு தான் நினைக்கிறேன். ஆனா அவர் அன்னைக்கு சொன்னது… அதுக்காக தான்மா நான் எந்த முயற்சியும் எடுக்கலை…’
‘அவர் போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. எப்போ வருவார்ன்னு தினமும் நான் காத்திட்டு இருக்கேன். நாளைக்கு அவரோட பிறந்தநாள் அவர்கிட்ட இருந்து ஒரு நல்ல சேதி வராதான்னு இருக்கும்மா…’ என்று இன்னும் என்னென்னவோ சொல்லி தன் மனக்குறைகளை கொட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
ஒருவாறு வெளியில் வந்திருந்தவள் வீட்டை நோக்கி நடைப்போட்டாள். வாயிலில் மணிமேகலையும் சகுந்தலாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவருக்கு இப்போதெல்லாம் உடம்பு சரியாக இல்லை. சென்ற வாரம் பாத்ரூமில் வழுக்கி விழுந்திருந்தார். பெரிய அடி இல்லை தான், ஆனாலும் அவரால் வெகு நேரம் நிற்கவெல்லாம் முடிவதில்லை இப்போது.
சில நேரங்கள் தெளிவாய் பேசும் அவர், பல நேரங்களில் ஏதோ தனியே புலம்பிக் கொண்டிருப்பார். அதனாலேயே காஞ்சனா வீட்டில் இருந்து வேலை செய்கிறாள். அவள் வெளியே செல்ல நேரும் போது சகுந்தலா வந்து துணைக்கிருப்பார் அப்போது.
இன்று கோவிலுக்கு தானே உடனே வந்துவிடலாம் என்று பாட்டியை தனியே விட்டுச் சென்றிருந்தாள். சகுந்தலா அவர்களை பார்ப்பதெற்கென்று வந்திருந்தார்.
“வாங்க அத்தை எப்போ வந்தீங்க??” என்றாள் சகுந்தலாவை பார்த்து.
“இப்போ தான் வந்தேன் காஞ்சனா… நீ எந்த கோவிலுக்கு போயிருந்தே??”
“கன்னியாகுமரி அம்மனை தான் பார்க்க போயிருந்தேன்…”
“உன் வேண்டுதலை அந்த அம்மா தான் நிறைவேத்தணும்…” என்றவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
“அத்தை விடுங்க, அவர் வந்திடுவார்…”
“அப்புறம்…”
“வேறென்னம்மா சொல்ல எனக்கு என் புள்ள வந்தா போதும்…”
“ஹ்ம்ம்… அத்தை அந்த வீட்டில என்ன நடக்குது??”
“காஞ்சனாம்மா…” என்றார் பாட்டி.
“பாட்டி நீங்க கொஞ்சம் பேசாம இருங்க…”
“வேணாம் காஞ்சனா அவங்க எப்படியும் போகட்டும் உனக்கு இனி அது தேவையில்லை. என் பேரன் மட்டும் தான் இனி உனக்கு முக்கியமா இருக்கணும்…” என்று மேல் மூச்சு வாங்க சொல்லி முடித்தார்.
“பாட்டி ப்ளீஸ் நீங்க எதும் பேசாதீங்க உங்களால தான் முடியலைல…” என்று அவரை பார்வையால் அடக்கினாள்.
“நீங்க சொல்லுங்க அத்தை” என்றாள்.
“என்னத்தைம்மா சொல்றது. விஸ்வா போனதில இருந்து புது டிசைன்ஸ் செய்யலை. வெளிய இருந்து காசு கொடுத்து புது மாடல்ஸ் வாங்கிட்டு வர்றாங்க…”
“அவரோட அண்ணன் பசங்க பெரிசா தொழிலை எடுத்து நடத்துற மாதிரி தெரியலை. ரொம்பவும் மெத்தனமா இருக்காங்க”
“பெரியவர் ஓயாம திட்டிட்டே இருக்கார் எல்லாரையும். மார்த்தாண்டத்துல புதுசா ஆரம்பிச்சு இருந்த கடையை மூடச்சொல்லிட்டார்…” என்று முடித்தார் அவர்.
“ஹ்ம்ம் நடக்கட்டும், இதெல்லாம் அவங்களுக்கு தேவை தான்…” என்றாள் அவள் மனதில் எதையோ நினைத்துக் கொண்டு. இந்த ஒராடாண்டாக அவள் செய்த வேலை கொஞ்ச நஞ்சமல்ல. மார்த்தாண்டம் கடையை அவர்கள் இனி திறக்கவே முடியாது செய்துவிட்டாள்.
காஞ்சனாவிற்கு மனதே ஆறவில்லை. அந்த வீட்டில் இருந்த ஒருவர் கூட விஸ்வாவை தடுக்கவில்லை என்பது அவளுக்கு பெரிதும் உறுத்தியது. 
விஸ்வாவின் உழைப்பிலும் சொத்திலும் சுகமாய் அனுபவித்துவிட்டு அவனையே வெளியே போக சொன்னதை அவளால் ஜீரணிக்க இயலவில்லை.
அவர்களை அவள் சும்மாவிடுவதாகவும் இல்லை. அதனால் நேரிடையாய் மோதாமல் மறைமுக எதிர்ப்பை கொடுத்தாள். ஏற்கனவே அவனின் சில டிசைன்ஸ் அவள் வசம் தான் என்பதால் விஸ்வா இருக்கும் போதே அவர்கள் செய்து வைத்திருந்த நகைகளை இனி அவர்கள் விற்கக்கூடாது என்று தடை செய்திருந்தாள்.
கனகவேல் வேறு வழியில்லாது இடையில் சிலரை வைத்துக்கொண்டு அவளிடம் இருந்து டிசைன்ஸ் அதிகப் பணத்திற்கு ஏற்கனவே செய்து வைத்திருந்ததை ஒரு வழியாய் விற்றிருந்தனர்.
“இன்னும் முடியலை நெறைய இருக்கு, நாம பார்க்கத்தானே போறோம்…” என்றார் சகுந்தலா.
“அத்தை அவங்க உங்களை ஒண்ணும் சொல்லலையே…”
“பெரியவர் சமயத்துல என்னால தான்னு கத்துவார். பதிலுக்கு நான் ஒரு முறை முறைச்சதும் வாயை மூடிட்டு போய்டறார் இப்போலாம்…”
“எல்லா நேரமும் பேசாம போக முடியாதுல, போன முறை நான் நல்லா கேட்டுவிட்டுடேன்ல அதுல இருந்து கொஞ்சம் அமைதியா தான் போறார்…” என்றார் சகுந்தலா.
“அமுதன் போன் பண்ணானா??”
“காலையில பேசினேன் அத்தை…”
“எப்போ இங்க வர்றாங்களாம்??”
“அவர் வரட்டும் அத்தை அப்புறம் அவனை வரச் சொல்லலாம் இங்க… உங்களுக்கு ரேகாவை பார்க்கணும் போல இருக்கா அத்தை…” 
“ஆமா விஸ்வா போனதுக்கு அப்புறம் ஒரு முறை தான் அவ இங்க வந்தா…”
“நாளைக்கே கிளம்பி வரச்சொல்றேன் அத்தை…”
“ஆனாலும் அத்தை நீங்க அப்படியொரு பொய் சொல்லியிருக்க வேணாம்” என்றாள்.
“நீ எதை சொல்றே??”
“ரேகா பத்தி தான்…”
“அவங்க கல்யாணமா??”
“ஆமா அத்தை…” என்றவள் ரேகா திருமணம் பற்றி அவர் அவளிடம் பகிர்ந்ததை நினைத்து பார்த்தாள். அவருமே அதையே தான் எண்ணினார்.
விஸ்வா வீட்டை விட்டு சென்ற சில மாதங்களுக்கு பின் ஓர் நாள் அமுதனும் ரேகாவும் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.
அப்போது தான் காஞ்சனாவிற்கு அந்த சந்தேகம் வந்தது. ரேகா கர்ப்பம் என்று தானே சொல்லி திருமணம் முடித்தோம், அதற்கான எந்த அறிகுறியும் இல்லையே என்று.
அது நாள் வரை அவள் ஏதோ மன உளைச்சலில் உழன்றிருந்ததால் அதை எண்ணியிருக்கவில்லை. அப்போது அவளை கண்டதும் அது தான் நினைவுக்கு வந்தது அவளுக்கு. அந்நேரம் சகுந்தலாவும் அங்கு தானிருந்தார். 
மகளைப் பார்க்கவென வந்திருந்தார் அவர். அவர் தான் நடந்ததை சொன்னார். “நீங்க ரெண்டு பேருமே முட்டிட்டு நின்னீங்க அப்போ. விஸ்வா கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டான்னு தெரியும்…”
“தவிர எனக்கு அவன் மனசும் புரிஞ்சுது. ரேகாகிட்ட பேசினேன், அமுதன் உன்னோட மாமா பையன் தான், அம்மாவுக்காக நீ இதை செய்ன்னு சொன்னேன்…”
“அவ எந்த மறுப்பும் சொல்லலை. அவளுக்கு விஸ்வா யாருன்னு அப்போ தான் சொன்னேன். அவ புரிஞ்சுகிட்டா…”
“அமுதன் லவ் பண்றேன்னு மட்டும் சொல்லலாம்ன்னு சொன்னான். நான் தான் இப்படி செஞ்சா தான் வேலைக்கு ஆகும் இல்லைன்னா எதுவும் நடக்காதுன்னு சொல்லி அவங்க ரெண்டு பேரையும் சம்மதிக்க வைச்சேன்…”
“எங்க அம்மாவும் கூட இதெல்லாம் வேணாம்ன்னு தான் சொன்னாங்க…” என்றவர் மணிமேகலையை பார்த்தார்.
“நான் தான் பேசி சம்மதிக்க வைச்சேன்… நீ இங்க வேலைக்கு வந்திருக்கேன்னு உன்னை சேர்த்துவிட்ட அண்ணன் என்னை கோவில்ல ஒரு நாள் பார்த்து சொன்னாரு…”
“அப்போ தான் எனக்கே தெரியும். அதுக்குள்ள என்னென்னவோ நடந்து நீ ஊருக்கு போய்ட்ட, திரும்பவும் அந்த அண்ணனை பார்த்து உங்க போன் நம்பர் வாங்கினேன்”
“எப்படியோ உங்களை திரும்ப பார்த்திட்டேன்…” என்றார் ஒரு பெருமூச்சுடன்.
“எனக்கு அப்போவே சந்தேகம் இருந்துச்சு அமுதன் லவ்வுன்னு மட்டும் சொல்லியிருந்தா கூட தெரிஞ்சி இருக்காது. இப்படி சொல்லவும் ரொம்பவும் கோபம் வந்திட்டு எனக்கு… அவனோட பேசாமலே இருந்தேன்… அவன் ஒரு வார்த்தை கூட என்கிட்ட இதை பத்தி சொல்லலை…”
“நான் தான் சொல்ல வேணாம்ன்னு சொல்லியிருந்தேன். குறைஞ்ச பட்சம் உங்க கல்யாணம் நடக்கற வரைக்குமாச்சும் சொல்ல வேணாம்ன்னு சொன்னேன்…”
“எங்க கல்யாணம் தான் உங்க விருப்பம்ன்னா ரேகா விஷயத்தை அப்படியே விட்டிருக்கலாமே…”
“அது என்னோட விருப்பம், என் அண்ணன் புள்ளைக்கு என் பொண்ணை கொடுக்கணும்ன்னு எனக்கும் ஆசை…” என்றார்.
“நீங்க சொல்றது பார்த்தா வேற யாருக்கும் கூட ஆசை இருக்கும் போலவே” என்றவள் மணிமேகலையை பார்த்தார்.
“உன் தம்பிக்கும் ரேகா மேல விருப்பம் இருந்துச்சு… இல்லைன்னா அவன் ஏன் நான் சொன்னதுக்கு சரின்னு சொல்லப் போறான்… அவன் உன் தம்பியாச்சே, பிடிவாதத்துல உன்னைக் கொண்டு தானே இருப்பான்…” என்றார் சகுந்தலா.
நிகழ்வுக்கு வந்தாள் காஞ்சனா. சகுந்தலா மேலும் சில நிமிடங்கள் அங்கிருந்துவிட்டு கிளம்பினார்.
மறுநாள் விஸ்வாவின் பிறந்தநாள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தாள். சாப்பிட்டு மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அமர அவளுக்கு புதிதாய் ஒரு மெயில் வந்திருந்தது.
அதை ஓபன் செய்து பார்த்தவள் அடுத்து தன் தம்பிக்கு அழைத்தாள். முதல் அழைப்பிலேயே எடுத்துவிட்டவன் “சொல்லுக்கா” என்றான்.
“அமுதா இன்னைக்கு ஒரு மெயில் வந்திச்சுடா. கொஞ்ச நாள் முன்னாடி சில புது மாடல்ஸ் எல்லாம் நம்ம சைட்ல அப்லோட் பண்ணியிருந்தேன்…”
“புது கஸ்டமர் ஒருத்தர் ஆர்டர்ஸ் எடுக்கப் போறாங்களாம். நேர்ல வரச் சொல்றாங்க…”
“போயிட்டு வர்றது தானேக்கா…”
“இல்லை அது நான் எப்படி அந்த ஊருக்கு…”
“எந்த ஊர்??”
“மும்பை…”
“என்னது மும்பையா??” என்றான் அவன்.
“ஆமாடா… புது கஸ்டமர் வேற யோசனையா இருக்கு. அவங்க எப்படி என்னன்னு தெரியாது, அவ்வளவு தூரம் நம்பி போகணுமான்னு…”
“போனா தானே தெரியும்…”
“நீ போயிட்டு வர்றியா??”
“அவங்க உன்னைத் தானே வரச்சொல்லி இருக்காங்க…”
“ஆமாடா அப்போ நீ தான் போகணும்…”
“இதுல இன்னொரு சிக்கல் இருக்குடா??”
“என்ன??”
“அவங்க கேட்ட டிசைன்ஸ் எல்லாம் அவர் வரைஞ்சதுடா…”
“என்னாது??” என்று அதிர்ந்தான் அவன்.

Advertisement