Advertisement

24
சங்கவி அழகான மும்பை தமிழ் பெண். ஜீன்ஸ் குர்த்தா தான் எப்போதும் அவள் அணியும் உடை. மித்ரன் அவளுக்கு விஜயின் மூலமாக அறிமுகம்.
விஜய் அவளின் அத்தை மகன். அவள் தந்தை தமிழ்நாடு, தாய் மும்பை தமிழர். அவர்களின் அலுவலகம் இருந்த அந்த கட்டிடம் அவளின் தந்தைக்கும் விஜயின் தந்தைக்கும் சொந்தமானது ஆகும்.
விஜயின் தந்தை சங்கவியின் தந்தைக்கு நண்பர். நண்பருக்கே தன் தங்கையை கொடுத்து உறவாக்கி கொண்டார் அவர்.
அந்த கட்டிடத்தில் தான் விஜயின் அலுவலகம் உள்ளது. இவளும் அதில் தான் அலுவலகம் அமைத்திருந்தாள். விஜயின் நண்பன் தான் மித்ரன்.
மித்ரனை அவளுக்கு சில மாதங்களாகத் தான் தெரியும். ஆனாலும் அவன் திறமை அசாத்தியமானது என்பதை அவனுடன் பணிபுரிந்த போது கண்டுகொண்டாள்.
முதலில் அவனுடன் சேர்ந்து தொழில் செய்ய ஒப்புக் கொண்டிராதவள் அவளின் தந்தை சொல்லிய பின்னே தான் ஒப்புக்கொண்டாள்.
உண்மையில் அவர்களின் கம்பனிக்கு அவளும் விஜயும் தான் முதலாளிகள்.
விஜய் தன் நண்பனை அதற்கு முதலாளியாய் நிறுத்தியிருந்தான் தனக்கு பதிலாய். அவன் சொல்லித்தான் அவளின் தந்தையும் மகளை எப்படியோ சம்மதிக்க வைத்திருந்தார்.
இதோ அவர்கள் ஆரம்பித்த அந்த கம்பெனி இப்போது நல்ல முறையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு அவளின் உழைப்பு மட்டுமல்ல மித்ரனின் உழைப்பும் திறமையுமே காரணம்.
மாலையானது மித்ரன் வீட்டிற்கு கிளம்புவதற்காய் வெளியில் வந்தான். எதிரில் சங்கவி வந்தாள், “கிளம்பியாச்சா??”
“எஸ்…”
“உனக்கு என்ன அவசரம்ன்னு நீ இப்போவே வீட்டுக்கு கிளம்பறே??”
“என்னோட அவசரம் என்னன்னு தெரிஞ்சுக்க உனக்கு எந்த அவசியமுமில்லை கவி”
“இடியட்”
“தேங்க்ஸ் பை…” என்றுவிட்டு அவளை தாண்டி சென்றுக் கொண்டிருந்தவன் முன்னே மூச்சு வாங்க ஓடி வந்தாள்.
“நான் தான் வர்றேன்ல என்னைவிட்டு போகறே??”
“நீ உங்க வீட்டுக்கு போகப் போறே… நான் என் வீட்டுக்கு போகப் போறேன். அதுக்கு எதுக்கு ஒண்ணா போகணும்…”
“ரெண்டு பேரும் லிப்ட்ல ஒண்ணா போகத்தான்”
அவன் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. ‘எப்படி தான் இருக்கானோ இவன். நானே வந்து லவ் பண்றேன் சொல்றேன் ஓவரா பண்றான்…’
‘நான் இவன் கண்ணுக்கு தெரியவேயில்லையா. எவ்வளோ பேர் என்னை எப்படி பார்க்கறாணுங்க. நான் நல்லா இல்லையா…’ என்று நினைத்தவள் தன் உருவத்தை லிப்டில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள்.
மித்ரன் அவளின் எண்ணப்போக்கை அறிந்தவனாய் லேசாய் சிரித்தான். அதை கண்டுக்கொண்டவள் அவன் தன்னை தெரிந்து கொண்டான் என்று சீற்றமாய் பார்த்தாள் அவனை.
“இப்போ எதுக்கு சிரிக்கறே??”
“நீ அழகா தான் இருக்கே!!” என்றான் ஒரு மாதிரி குரலில்.
அதில் மலர்ந்து போனது அவள் முகம். “நிஜமாவா…”
“உண்மையாவே நீ அழகு தான், யாரும் அதை மறுக்க முடியாது கவி…”
“அப்போ நீ என்னை…”
“எப்பவும் நான் உன்னை என்னோட பிரண்டா தான் பார்ப்பேன். ஐ ரியலி லைக் யூ வெரி மச்… கண்டதும் யோசிக்காம வீட்டுக்கு போ…” என்று அவன் சொல்லி முடிக்கவும் லிப்ட் தரையிறங்கி இருந்தது.
வெளியில் வந்த பின்னும் அவன் தொடர்ந்தான். “மத்த விஷயத்துல நீ எப்படியோ இந்த விஷயத்துல நீ இன்னும் சின்ன குழந்தையா தான் இருக்கே…”
“படிச்சு முடிச்சதும் எங்கயாச்சும் வேலைக்கு போயிருந்தா உனக்கு நிறைய அனுபவம் கிடைச்சிருக்கும். நீ நேரடியா முதலாளி ஆகிட்டல, உனக்கு திறமை இருக்கு நான் அதை மறுக்கலை…”
“எப்பவும் உனக்கு அதிகாரம் செஞ்சே பழக்கம், அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு பழக்கமில்லை. இனிமே வாழ்க்கை உனக்கு நிறைய அனுபவத்தை கத்துக் கொடுக்கும். சில மறுப்புகள் வரத்தான் செய்யும், இதெல்லாம் அதுல ஒரு பார்ட் தான், கடந்து போக பழகு…” என்று நீளமாய் அறிவுரை செய்தான்.
‘பெரிய இவன் அட்வைஸ் பண்ண வந்துட்டான்’ என்று கோபம் வந்தது அவளுக்கு.
“உனக்கெல்லாம் அறிவுரை சொன்னா பிடிக்காது. நீயே அடிப்பட்டு கத்துக்கோ… பை…” என்றுவிட்டு நகர்ந்துவிட்டான்.
மித்ரன் வெளியில் வரவும் விஜய் தன் காருடன் அங்கு காத்திருந்தான். “ஷால் வி கோ”
“எஸ் விஜய்”
“உன் ஆளை பார்க்கலையா??”
“பாத்திட்டு தான் வந்தேன், நீயும் அவளும் பேசிட்டு இருந்தீங்களே…” என்றான் அவன்.
“கேட்டியா??”
“ஹ்ம்ம் ஆமா…”
“பீல் பண்ணாத விஜய்…”
“நான் ஏன்டா பீல் பண்ணப் போறேன்…” என்ற விஜய் காரை மெயின் ரோடில் விட்டான்.
வண்டி வேகமாய் நகர்ந்தது. வொர்லியில் விஜய் தனியாய் குடியிருக்கிறான், அவனுடன் தான் மித்ரன் தங்கியிருக்கிறான்.
வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும். இருவருமாய் சேர்ந்து சமைத்து உண்பார்கள்.
இருவரும் வீட்டிற்கு வந்ததும் தங்கள் அறைக்கு சென்று குளித்து வேறு உடைக்கு மாறி வந்தார்கள். மித்ரன் இருவருக்குமாய் காபி கலந்து வந்திருக்க கடலை பார்த்தவாறே அமைந்திருந்த அந்த பால்கனிக்கு சென்றனர் இருவரும். அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். 
“விஜய்”
விஜயோ கடலை வெறித்தவாறே காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.
“சொல்லுடா”
“நான் ஒண்ணு கேட்பேன்…”
“என்னன்னு சொல்லவா??”
“சொல்லு…”
“எனக்கு கோபம் வரலையான்னு கேட்க போறே??”
“அப்படியில்லை ஆனா கிட்டத்தட்ட அப்படி தான்” என்றான் மித்ரன்.
“சரி நீயே சொல்லு என்ன கேட்க வந்தே??”
“சங்கவியும் நானும் பேசினது…”
“நீ அவளை விரும்பினாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன்…”
“உனக்கு ஏன்டா இந்த கொலைவெறி என்னை எதுக்கு அவகிட்ட மாட்டிவிட பாக்குறே??”
“அதெல்லாம் விடு, நீ அவகிட்ட பேசி பாரேன்டா…”
“நெறைய தடவை பேசிட்டேன்டா. அவ அதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணதேயில்லை”

“எஸ் அவ கண்டிப்பா இதெல்லாம் நின்னு கேட்க கூடிய ஆளில்லை தான். அட்வைஸ் எல்லாம் பிடிக்காது”
“அட்வைஸ் மட்டுமில்லை, என்னையும் அவளுக்கு பிடிக்காது…”
“இதை நான் ஒத்துக்க மாட்டேன்”

“எதை??”
“உன்னை அவளுக்கு பிடிக்காதுங்கறதை”
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றே??”
“சம் கெஸ்ஸிங் தான்… சீக்கிரமே நீ பேமிலி மேன் ஆகிடுவே பாரேன்…”
“நீ எப்போ பேமிலி மேன் ஆகப்போறே??”
“நான் உன்னை சொன்னா நீ என்னை சொல்றியா??”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…”
“ஹ்ம்ம் ஆகலாம் நானும் அதை தான் யோசிச்சுட்டு இருக்கேன்…”
“கரிகாலன்கிட்ட நீ கேட்ட டீடைல்ஸ் எல்லாம் கொடுத்திருந்தேனே??”
“ஹ்ம்ம் கிடைச்சதுடா நாளைக்கே நான் அதை வைச்சு ப்ரோசீட் பண்ணலாம்ன்னு இருக்கேன்…”
“கண்டிப்பா செய், எல்லாம் நல்லதா தான் நடக்கும்…”
“தேங்க்ஸ்டா…”
“கூல் டியூட்”
இரவு உணவை வெளியில் ஆர்டர் செய்துக் கொண்டனர் இருவரும். சாப்பிட்டு அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.
ஜுஹு பீச்சில் நின்றிருந்தான் மித்ரன். சங்கவி வருவதாக சொல்லியிருந்தாள் அவளுக்காக தான் காத்திருக்கிறான். இன்னமும் அவள் வந்தபாடில்லை.
அருகே இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள் இன்டீரியர் டிசைனிங் செய்து கொடுக்க ஒப்பந்தமாயிருந்தனர்.
அந்த குடியிருப்பை இருவருமாய் சென்று பார்வையிடத்தான் வந்திருந்தனர். அருகேயே இன்னொரு மற்றொரு குடியிருப்புக்கும் அவர்கள் தான் தற்போது டிசைனிங் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
அதை மேற்பார்வையிட்டு முடித்து வந்த மித்ரன் கடற்கரையில் தான் நின்றிருந்தான். தூரத்தே இருந்து வரும் அலையின் மீதே அவன் பார்வையிருந்தது.
“ஹலோ மித்ரன்…” என்று அருகே கேட்ட குரல் கூட அவனை பாதிக்கவில்லை.
அவன் இன்னமும் அலைகடலின் மீதிருந்த பார்வையை நகர்த்தவில்லை.
“என்ன மித்ரன் எங்க பார்த்திட்டு இருக்கே??” என்று அவன் தோள் தொட்டு உலுக்கினாள் சங்கவி.
அப்போது திரும்பி அவளை பார்த்தான். முகம் கோபத்தை சுமந்திருந்தது.
“என்ன ரெட்டிஷா இருக்கே?? ரெட் சில்லி சட்னி சாப்பிட்டியா??” என்றாள்.
“அறிவில்லை உனக்கு, ஒரு இடத்துக்கு போகணும்ன்னா நேரத்தோட வரணும்ன்னு தெரியாது உனக்கு. இந்த கேர்லெஸ் நல்லதில்லை. அதனால வாழ்க்கையில எதையாவது இழந்திராதே” என்றவனின் வார்த்தைகளில் கடுமை இருந்தது.
அது அவளுக்கு புதிது. எப்போதும் அவள் மனம் காயப்படும் படியாய் அவன் எதையும் சொல்லியதேயில்லை.
“மித்ரன்” என்றாள் அழுத்தி.
“என்ன??” என்றான் சிடுசிடுப்பாய்.
“உனக்கு எதுவும் பிரச்சனையா??”
“ஆமா…”
“என்ன பிரச்சனை மித்ரன் என்கிட்ட சொல்லமாட்டியா??”
“நீ தான் எனக்கு இப்போ பிரச்சனை?? ஷட் அப் அன் கம் வித் மீ” என்று கத்திவிட்டு எழுந்துவிட்டான்.
அவர்கள் சென்று பார்க்க வேண்டிய இடத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி அலுவலகம் சென்றனர்.
சங்கவி அவனிடம் எதுவுமே பேசவில்லை. அவன் ஏதோ கோபமாயிருக்கிறான் என்று புரிந்து அமைதியாக இருந்தாள்.
————————–

Advertisement