Advertisement

“தெரியும்ப்பா… நீங்களும் பாட்டியும் சின்ன வயசுல இருந்து சொல்லிட்டே இருப்பீங்களே, அத்தையோட பையன் தானேப்பா…” என்று சொன்ன போது லேசாய் ஒரு வெட்கம் வந்தது அவளுக்கு.
அதை கண்டுகொண்டார் பெற்றவர். “உங்க தாத்தாவுக்கு உன்னை விஸ்வாவுக்கு கட்டிக் கொடுக்கணும்ன்னு ஆசை…”
“என்னப்பா சொல்றீங்க?? நான் பிறக்கும் போதே தாத்தா உயிரோட இல்லை, அப்புறம் எப்படி தாத்தாக்கு அந்த ஆசை இருக்கும்…”
“நீ சொல்றது சரிதான்டா… எங்கப்பா எனக்கு பொண்ணு பிறந்தா தன் பேரனுக்கு கட்டணும்ன்னு சொல்லிட்டு இருப்பாங்க… உங்கம்மா வயித்துல அப்போ நீ இருந்த”
“தாத்தா சொல்லிட்டே இருப்பாங்க, நம்ம குடும்பத்துக்கு மகாலட்சுமி தான் பிறப்பான்னு. அதனால தான் அப்படி சொன்னாங்க. தவிர உன்னோட பேரு கூட தாத்தா செலக்ட் பண்ணது தான்…”
“எப்படிப்பா இதெல்லாம்??”
“எனக்கும் தெரியாதுடா… எங்கப்பாவோட தாத்தா நம்ம விஸ்வாவோட அதே அம்சத்துல பிறந்தவரு தானாம். அவரு பிறந்த பிறகு தான் நம்ம குடும்பத்துக்கு சொத்து சேர்ந்திச்சாம்…”
“அப்பாவோட தாத்தா பேரு கூட விஸ்வகர்மா தான் அந்த பாட்டியோட பேரு காஞ்சனமாலா. அதனால விஸ்வாவுக்கு அவரோட தாத்தா பேரை வைச்சாங்க…”
“விஸ்வாவும் அந்த விஸ்வகர்மா பிறந்த அதே நாள்ல வேற பிறந்திருந்தான். எல்லாம் சேர்ந்து தான் அந்த பேரை அவனுக்கு வைச்சாங்க… உன்னோட பேரும் எங்கப்பா சொன்னது தான்”
அவளுக்கு அவளின் அப்பா சொல்ல வரும் செய்தி கொஞ்சம் புரிந்தது. 
“இந்த பேச்சு இப்போ எதுக்குப்பா??”
“எதுக்குன்னா நீ விஸ்வாவை கல்யாணம் பண்ணிக்கணும்…”
“இப்போ இதெல்லாம் தேவையாப்பா…”
“நீ சரின்னு சொல்லுவியா மாட்டியா??”
“அப்பா அவரை போய் நான் எப்படிப்பா?? என்னை யாருன்னே அவருக்கு தெரியாது…”
“தெரிஞ்சு கட்டிகிட்டாலும் சரி இல்லை தெரியாம கட்டிகிட்டாலும் சரி அது உங்க முடிவு. இப்போ சொல்லுமா அப்பாவோட ஆசையை நிறைவேத்துவியா??”
“அப்பா உங்கப்பாவோட ஆசையை தான் நீங்க சொன்னீங்க, அதை நீங்க நிறைவேத்தணும்ன்னு நினைக்கறீங்க… எங்கப்பாவோட ஆசையை தான் நான் நிறைவேத்துவேன். அது அவரோட ஆசையா மட்டுமே இருக்கணும்…” என்றாள் அழுத்தி.
மகளின் பேச்சில் வியந்து லேசாய் சிரித்தவர் “உங்கப்பாவுக்கும் அது தான் கடைசி ஆசை…” என்று அவர் சொல்லிவிட அவர் கையை பிடித்துக் கொண்டாள்.
அவளின் கண்ணீர் அவரின் கையை நனைத்தது. “நீ அழவே கூடாதுன்னு நினைச்சேன்டா… உன்னை நானே அழ வைக்கறேன், உனக்கு நான் ஒண்ணுமே செஞ்சதில்லைடா ராஜாத்தி…” என்றவரின் குரல் தழுதழுத்தது.
“தம்பியை நீ தான் பார்த்துக்கணும், அம்மாவையும் பார்த்துக்கோ. எங்கம்மா பாவம் நான் இழுத்த இழுப்புக்கு எல்லாம் வந்திட்டாங்க…”
“அப்பா… அப்பா இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா எனக்கு என்னவோ செய்யுது… அப்பா நான் டாக்டரை பார்த்திட்டு வர்றேன்ப்பா…” என்று எழுந்தாள்.
“எதுக்குடா??”
“இல்லை உங்களை எங்க கூட்டிட்டு போனா நல்லா ட்ரீட்மெண்ட் பண்ணலாம்ன்னு கேட்க போறேன்…”
“கேட்டு??”
“என்னப்பா இப்படி கேட்கறீங்க?? அவரை கேட்டு உங்களை அங்க கூட்டிட்டு போகப் போறேன்ப்பா…”
“அதுக்கெல்லாம் நிறைய செலவாகும் நமக்கு வசதியில்லை இப்போ”
“ஏன்பா நமக்கு சொத்து இல்லை, ஊரைவிட்டு ஏன் வந்தோம்??”
“இதுக்கு அப்புறம் இவ்வளவு எல்லாம் என்னால பேச முடியுமான்னு தெரியாதுடா…” என்றவர் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மகளிடம் சொல்லியிருந்தார் இப்போது.
அவளுக்கு விபரம் தெரிய ஆரம்பித்த பின் விஸ்வா யார் எங்கு இருக்கிறான், தேவி அத்தை எல்லாரையும் பற்றி கேட்டிருக்கிறாள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பாட்டி பேத்திக்கு முன்னமே சொல்லியிருக்கிறார்.
“ஏன்பா நம்ம தாத்தா இப்படி செஞ்சாங்க??”
“அவங்க பொண்ணு நல்லாயிருக்கணும்ன்னு தானேடா செஞ்சாங்க…”
“அப்போ நீங்க??”
“எனக்கும் செஞ்சாங்க தானே… என்ன இருந்தாலும் நான் ஆம்பிளை பிள்ளை எங்க போனாலும் பிழைச்சுப்பேன்னு எங்கப்பாவுக்கு நம்பிக்கை. ஆனா பாவம் அவருக்கு தெரியலை நான் பெத்த பொண்ணுக்கே வைத்தியம் பார்க்க வக்கில்லாம போவேன்னு…” என்று சொல்லும் போது அவர் குரல் உடைந்தது.
“எனக்கென்னப்பா நான் நல்லா தானேப்பா இருக்கேன்…”
“ரொம்ப அழகா இருக்கேடா, அதான் ஆண்டவன் திருஷ்டியா இப்படி ஆக்கிட்டான். எல்லாம் என்னால தான்…”
“அப்பா ப்ளீஸ் இனிமே நீங்க இப்படி பேசக் கூடாது…”
“காஞ்சனா நீ உங்க அத்தை வீட்டில இருக்கவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். முக்கியமா அந்த பெரியவர்கிட்ட, அவர் சரியில்லைம்மா…” கனகுவை பற்றி இன்னமும் விளக்கமாக அவர் அறிந்தவரையில் சொல்லி வைத்தார் தன் மகளிடம்.
“ரொம்பவும் பணப்பைத்தியம் அவரு… அவரு என்னெல்லாம் பண்ணியிருக்காருன்னு அவர் வாயாலேயே சொன்னாரு ஒரு முறை…”
“அந்தாளை நீங்க சும்மாவாப்பா விட்டீங்க…”
“வேறேன்னம்மா பண்ண, என் தங்கச்சி அந்த வீட்டில தானேம்மா வாழறா…”
“அதுக்காக…”
“அதுக்காக தான்மா சும்மா விட்டு வைச்சேன். நம்ம குடும்ப ராசிடா சொத்து எல்லாம் பொண்ணுங்களுக்கு தான் போய் சேரணும்ன்னு இருக்கு…”
“என் தாய்மாமாவோட சொத்து அவருக்கு வாரிசில்லாம அப்பா பேருல எழுதி வைச்சார் நாங்க சின்ன பசங்களா இருக்கோமேன்னு. அப்புறம் உங்க தாத்தா அதை அத்தைக்கு எழுதிட்டாங்க அவ்வளவு தான்…”
“எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா, எனக்கு புரிஞ்சது எல்லாம் ஒண்ணு தான். அந்த கனகு தாத்தா நல்லவர் இல்லை”
“உங்க மாமாவுல இருந்து கடைசியா விஸ்வா மாமா வரைக்கும் அவர் எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்திருக்காரு, இப்பவும் இருக்காரு…”
“ஹ்ம்ம் ஆமாடா…”
“உங்களுக்கு வைத்தியம் பார்க்க கூட இப்போ காசில்லாத ஒரே காரணம் அவங்க தான்…”
“அது அப்படியில்லைடா”
“அப்படி தான்பா… நாம மட்டும் ஏன் இப்படியிருக்கோம்ன்னு சின்ன வயசுல இருந்து நான் நினைச்சிருக்கேன்”
“அம்மாக்கு வைத்தியம் பார்க்க முடியலை, எனக்கு ஒண்ணும் செய்ய முடியலை, இப்போ உங்களுக்கும் வைத்தியம் பார்க்க நமக்கு வழியில்லை. இது எல்லாத்துக்கும் ஒரே காரணம் என்னப்பா…”
“எல்லாத்துக்கும் காரணம் அவங்க தானேப்பா…”
“அப்படியெல்லாம் நீ யோசிக்கக்கூடாதுடா”
அவள் தந்தையின் முகம் வாடுவது கண்டு முகத்தை சாதாரணமாய் மாற்றிக் கொண்டு அவரை சமாதானம் செய்தாள். வீட்டிற்கு சென்று பாட்டியிடம் அவள் தந்தை சொல்லாத விஷயம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டு அறிந்துக் கொண்டிருந்தாள்.
தந்தையின் மறைவு அவளுக்கு பெருந்துயராய் இருந்தது. அதில் இருந்து மீளவே முடியவில்லை அவளால். 
அவள் தந்தையிடம் பேசிய அன்று மருத்துவரை பார்த்து அவரின் நோய்க்கு தீர்விருக்கிறதா என்று, முன்னமே பார்த்திருந்தால் சரி செய்திருக்கலாம் என்று அவர் சொன்னார்.
“உங்கப்பா சில மாசத்துக்கு முன்னாடி வந்தப்பவோ நான் சொன்னேன். வைத்தியம் பார்க்கணும்ன்னு அவர் கொஞ்ச நாள் வருவாரு அப்புறம் வர மாட்டாரு…”
“மருந்தும் ஒழுங்கா எடுத்துக்காம விட்டுட்டாரு…”
“என்ன டாக்டர் சொல்றீங்க??”
“ஆமா அவருக்கு கேன்சர்ன்னு எப்பவோ தெரியும். நோயை முத்தவிட்டது அவரோட தப்பும்மா… நான் கேட்டதுக்கு செலவு பண்ண முடியாது என்னாலன்னு சொல்லிடாரு…”
“அப்பவும் அவருக்கு மருந்து மாத்திரை நான் வாங்கி தரேன் உங்களால முடிஞ்சதை நீங்க ட்ரை பண்ணுங்கன்னு நான் சொல்லி தான் அனுப்பினேன்…”
“அவர் பசங்க எல்லாம் சின்ன பசங்க… அவங்க எல்லாம் கஷ்டப்படுவாங்க, என் பொண்ணு படிச்சு முடிக்கற வரைக்கும் நான் இருந்தா கூட போதும்ன்னு சொன்னாரு…”
“எனக்கும் கஷ்டமா தான்மா இருக்கு. நானும் ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுதான்னு தான் பார்த்தேன். என்னாலையும் முடியலை. என்னால முடிஞ்சதா அவரு கஷ்டப்படாம இருக்க மருந்து மாத்திரை கொடுத்தேன் அவ்வளவு தான்…” என்று அவர் முடித்திருக்க அவள் அங்கேயே அமர்ந்து கேவி கேவி அழுதிருந்தாள்.
அந்த எண்ணமெல்லாம் தான் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்தாள். அவள் நினைத்து வந்தது ஒன்று, ஆனால் அதில் அவளிடம் மாட்டியது விஸ்வா தான்.
யாரை மணந்து கொள்வேன் என்று அவள் தந்தையிடம் வாக்கு கொடுத்தாளோ அவனையே காயப்படுத்தி கஷ்டப்படுத்தியிருந்தாள்.
சகுந்தலா மகனின் கையை பிடித்துக் கொண்டார் “விஸ்வா என்னை இங்க இருந்து கூட்டிட்டு போய்டு…”
அவன் இப்போது பேசாமலே நின்றான். யாரிடமும் பேச ஏன் பார்க்கக் கூட பிடிக்கவில்லை என்றவன் தன் உடைமைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டான். அவனுக்கு யாருமே வேண்டாம் என்று சென்றுவிட்டான்.
“வர்றேன்ம்மா, வர்றேன்…” என்று அந்த இருவரிடம் மட்டும் சொன்னவன் மற்ற எவரையும் திரும்பிக் கூட பார்க்கவில்லை அங்கிருந்து சென்றுவிட்டான்.
இனி விஸ்வாவை புது ஊரில் புது இடத்தில் புது மனிதனாய் சந்திப்போம்…

Advertisement