Advertisement

22
அப்போதும் கூட கனகுவும் ரத்தினவேலும் சும்மாயிருக்கவில்லை ஏதாவதொரு விதத்தில் தொந்திரவு செய்துக் கொண்டு தானிருந்தனர். பொறுத்து பார்த்தவர் வேறு கடைக்கு மாறிவிட்டார்.
அவர் மனைவி மனோரஞ்சிதமும் உடல் நலக்குறைவால் இறந்துவிட அதன் பின் பிள்ளைக்களுக்கென வாழ ஆரம்பித்தார் அவர்.
தேவி மூன்று குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் பார்த்துக் கொண்டார். அவருக்கு, விஸ்வா வேறு, ராதிகா வேறு, குகன் வேறு என்று நினைக்கவில்லை.
ஆனால் அங்கயற்கண்ணி தன் தந்தைக்கு சற்றும் குறையாத பெண்ணாய் தான் பிறந்திருந்தார். ராதிகாவிடம் அவ்வப்போது ஏதாவதொன்றை சொல்லி குழந்தைகளிடம் வேற்றுமை பாராட்ட தெய்வானை மகளை கண்டித்தார்.
இந்நிலையில் தான் ஒரு நாள் குகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவனுக்கு சிறு வயதிலேயே மூச்சுத்திணறல் பிரச்சனை அவ்வப்போது வருவதுண்டு.
அன்று அவன் மிகவும் திணறிப் போக தேவி கடைக்கு சென்றிருந்த செந்திலுக்கு அழைத்துவிட்டார். தெய்வானையை கூட்டிக் கொண்டு குகனை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
செந்தில் நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அங்கு அவனுக்கு சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. இரு முழு நாட்கள் அவன் கண் விழிக்காமலே இருக்க தேவி மருத்துவமனையிலேயே பழியாய் கிடந்தார்.
அம்மா வேண்டும் என்று தேடிய விஸ்வாவை கூட அவர் பார்க்கவில்லை அந்த இரு நாட்களும். மூன்றாம் நாள் அதிகாலையில் குகன் கண் விழிக்காமலே அவளை விட்டு பிரிந்திருந்தான்.
தேவியால் அந்த பிரிவை தாங்கவே முடியவில்லை. தனக்கு பிரியமானவர்கள் ஒவ்வொருவராய் தன்னை விட்டு பிரிவது அவருக்கு அப்படியொரு துயரத்தை கொடுத்தது.
இனி யார் மீதும் அதிக பற்று வைக்கக்கூடாது என்று எண்ணுமளவுக்கு மனம் வெறுத்து போனது. தேவியை போலவே செந்திலுக்கும் குகனின் பிரிவு ஈடு செய்ய முடியாததாய் இருந்தது.
முதலில் மனைவி இப்போது மகன் அவரால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தேவிக்கும் அவருக்கும் அதுவரையில் இருந்த உறவு பிள்ளைகளுக்கு தகப்பன், தாயாக இருந்தது மட்டுமே.
குகனின் மீளாத்துயில் அவர்கள் இருவருக்கும் இடையில் ஓர் பிணைப்பை ஏற்படுத்தியது. ஒருவருக்கு மற்றவர் ஆறுதலாக இருக்க முனைந்தனர். அதுவே அவர்களுக்கு ஒருவர் மேல் மற்றவருக்கு பிரியம் வரவைத்தது. அவர்களின் அன்பினால் இரண்டு வருடத்திற்கு பின் ரேகா பிறந்தாள்.
செந்தில் தன் தந்தை தமையனை போலில்லை. அவருக்கு மனைவி, குழந்தைகள் எப்போதும் முதலில். 
குகன் இல்லாமல் போனதில் இருந்து விஸ்வாவின் மீதான அவரின் அன்பு கூடிப்போனது. என்ன இருந்தாலும் தாய் போல தன்னலம் இல்லா அன்பை கொடுக்க முடியாது தானே.
அவரே பாசம் காட்ட நினைத்தாலும் உடன் பிறந்தவர்கள் அதை கொஞ்சம் மட்டுப்படுத்தியே வைத்திருந்தனர்.
கனகவேலின் வீட்டில் தேவியை சகுந்தலா என்றே அழைத்தனர் இப்போது. அவரின் முழுப்பெயர் சகுந்தலா தேவி.
செந்தில் தான் தேவி என்று அழைத்தால் அவருக்கு சங்கடமாய் இருக்குமோ என்று எண்ணி சகுந்தலா என்று அழைக்க ஆரம்பித்தார், வீட்டில் இருந்த மற்றோரும் அப்படியே தான் அழைத்தர்.
விஸ்வாவிற்கும் குகனிற்கும் ஒன்றாய் தான் ஜாதகம் பார்த்தனர் வீட்டில். அப்போது அவர்களுக்கு இரண்டு வயது ஆகியிருக்கும்.
இருவரும் ஒரே நாளில் பிறந்திருந்தாலும் நேரம் வேறாக நட்சத்திரம் வேறாக இருந்தது.
விஸ்வா அந்த தேவசிற்பி விஸ்வகர்மாவின் அம்சமாக பிறந்திருந்தான். குகனின் ஜாதகத்தில் அப்போதே அவனுக்கு ஒரு கண்டம் இருப்பதாக சொல்லியிருந்தனர்.
அவன் ஜாதகம் தெரிந்த பின் முதலில் நம்பாது இருந்த கனகு கூட அவன் வீட்டிற்கு வந்தபிறகு நடந்த மாற்றங்களை நினைத்து பார்த்தார்.
அவன் வந்த பிறகு தான் அவனின் சொத்து வந்தது. பின் அவர்களின் வியாபாரம் சூடு பிடித்தது. ஒரு கடை இரு கடையானது. அவன் வளர வளர அசாத்திய வளர்ச்சி பெற்றது அவர்களின் தொழில்.
அதனால் வீட்டில் எப்போதும் அவன் பேச்சுக்கு ஒரு மதிப்பு இருந்தது. அவன் விரும்பியதை படிக்க வைத்தனர், அவனின் வரையும் திறன் கண்டு கனகவேல் பிரமித்து தான் போனார்.
அவன் படிப்பு முடிந்து திரும்பி வந்த பின் கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் அவர்கள் கடைக்கென்று தனி மவுசு வந்துவிட்டது.
அவன் மனம் கோணாமல் வீட்டினர் நடக்க வேண்டும் என்பது கனகவேலின் கட்டளை. அவ்வப்போது வெடுக்கென்று பேசும் அங்கயற்கண்ணி கூட அவனிடத்தில் மரியாதையாக தான் நடந்துக் கொள்வார்.
சங்கரன் தேவியிடத்தில் கூட சொல்லாமல் ஊரைவிட்டு சென்றிருந்தார். அதில் தேவிக்கு மிகுந்த மன வருத்தம். தன் உடன் பிறந்தவனை கனகு அவமதித்த விஷயம் அவருக்கு தெரியாது, தந்தை விஸ்வாவின் பேரில் சொத்தை எழுதி வைத்த விபரமும் அப்போது அவருக்கு தெரியாது.
சங்கரன் போனதில் இருந்து அவர் முற்றிலும் ஓய்ந்து போனார். செந்தில் தான் அவர்கள் சென்னையில் இருப்பதை சொல்லியிருந்தார்.
கனகுவும், ரத்தினவேலும் சென்னையில் அவர்களை பார்த்த விபரமுரைத்திருக்க அதை மனைவியிடம் கூறியிருந்தார் அவர்.
“எனக்கு உடனே அவங்களை பார்க்கணும், என்னை ஊருக்கு கூட்டிட்டு போங்க…”
“இங்க பாரு சகு, அது ரொம்ப கஷ்டம்…”
“ஏன்?? ஏன் கஷ்டம்??”
“உனக்கு சில விஷயம் எல்லாம் தெரியாதும்மா…”
“என்ன அது??”
“வேண்டாம் விடேன்…”
“என்னன்னு சொல்லுங்க??”
“உங்கப்பா அவரோட கடையை நம்ம விஸ்வா பேருக்கு மாத்தி எழுதியிருக்கார். அவன் இப்போ மைனர் அப்படிங்கறதால கார்டியனா உன்னை போட்டிருக்கார். உங்க அண்ணா பொண்ணுக்கு போலியோ அட்டாக் ஆகிடுச்சு”
“என்னங்க குண்டு மேல குண்டா போடுறீங்க?? என்னாச்சு யாரை கேட்டு அப்பா இப்படி செஞ்சார் எனக்கு ஏன் இதை சொல்லலை. சொல்லியிருந்தா நான் வேணாம்ன்னு சொல்லியிருப்பேனே…”
“உனக்கு இன்னைக்கு சொல்றது தான் இனிமே நான் இதை பேசுவேனான்னு எனக்கு தெரியாது. அப்பாவும் அண்ணாவும் இப்போ ஊர்ல இல்லை. இருந்தா இதை நான் இப்போ உன்கிட்ட பேசியிருக்கவே மாட்டேன்…”
தேவி அவரை நன்றாய் நிமிர்ந்து பார்த்தாள். “என்னை அப்படி பார்க்காத சகு. நான் அப்பா பேச்சை கேட்டே வளர்ந்திட்டேன்”
“சொத்து உங்கப்பா உயிரோட இருக்கும் போதே எல்லாம் எழுதி வைச்சிட்டார். அது உங்க அண்ணனுக்கும் தெரியும்ன்னு தான் நினைக்கிறேன். அவருக்கு வீட்டை எழுதி வைச்சிட்டார்…”
“என்ன அநியாயம் கடையோட மதிப்புல கால் பங்கு கூட வீடு பெறாதே”
“ஹ்ம்ம் உண்மை தான். ஏன் அப்படி எழுதினார்ன்னு எனக்கும் தெரியாது. ஆனா இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கறது அப்பாக்கு தெரிஞ்சிருக்கு, அநேகமா அந்த வக்கீல் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன்…”
“உங்கப்பா இறந்த பிறகு இந்த விஷயம் தெரிய வந்திருக்கும்ன்னு என்னோட அனுமானம்… என்னை அப்படி பார்க்காத சகு எனக்கும் இந்த விஷயம் இப்போ தான் தெரியும்…”
“உங்க அண்ணா பொண்ணுக்கு போலியோ அட்டாக் ஆகியிருக்கும் போல, டாக்டர் ட்ரீட்மெண்ட் பண்ணச் சொல்லி சொல்லியிருப்பாங்க போல, அவர் அப்பாகிட்ட கடனா காசு கேட்டு வந்தார்…”
“அப்பா ஏதேதோ சொல்லி தட்டிக் கழிச்சிட்டார். அந்த கோபத்துல தான் உங்க அண்ணன் சென்னைக்கு போய்ட்டார் போல… அங்க தான் அவரை பார்த்ததா அப்பா சொன்னாங்க…”
“இவ்வளவு நடந்திருக்கு எனக்கு எப்படி தெரியாம போச்சு… நான் தான் சொன்னேன்ல எனக்குமே உங்க அண்ணா எங்க இருக்கார்ன்னு தெரியாது. இப்போ தான் ரெண்டு நாள் முன்னாடி அப்பாவும் அண்ணாவும் பேசிட்டு இருந்தாங்க. அப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன்”
“உங்க அண்ணா அங்க ஒரு சின்ன கடையில வேலை பார்க்காங்க போல இவ்வளவு தான் இப்போதைக்கு எனக்கு தெரிஞ்சது…”
“அடுத்து நீ கேட்ட விஷயத்துக்கு வருவோம். நீ உங்க அண்ணாவை தேடி போறது எல்லாம் நடக்காது. அப்பா அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க…”
“என்னால அப்பா பேச்சை மீற முடியாது சகு. உங்களையும் என்னால விட முடியாது. ப்ளீஸ் நீ தான் புரிஞ்சுக்கணும்…” என்று செந்தில் சொல்ல சகுந்தலாதேவி அப்படியே அமர்ந்துவிட்டார்.
அழக்கூட தோன்றவில்லை அவருக்கு. அது முதல் அந்த வீட்டில் அவர் நடமாட்டம் இருந்தாலும் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை அவர். செந்திலை கூட கொஞ்சம் தள்ளித்தான் வைத்திருந்தார்.
முதுகெலும்பில்லாத கோழையாக செந்தில் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. ராதிகா முன்பு போல் அவரிடம் ஒட்டுவதில்லை காரணம் அங்கயற்கண்ணி.
ரேகாவும் விஸ்வாவும் மட்டுமே அவரின் உலகம் ஆகிப் போனர். அவர்களிடம் இவர் ஒட்டுதலாய் இருந்தால் ராதிகாவுக்கு பிடிக்காது. முதல் ஆளாய் வந்து இருவருக்கும் குறுக்கே நிற்பாள் அவள்.
வீட்டில் விஸ்வா பற்றிய பேச்சை யாரையும் பேசுவதில்லை. அதனால் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் எப்போதும் பேதமில்லை.
அங்கயற்கண்ணி கூட ராதிகாவிடம் தேவி அவர்கள் இருவரையும் மட்டுமே கவனிக்கிறார் என்று சொல்லித் தான் ஏத்திவிடுவார். அவர் வேறு என்று சொல்லியதில்லை அதை கனகு அனுமதிக்கவில்லை.
மொத்தத்தில் கனகுவின் இஷ்டப்படி தான் அந்த குடும்பம் நடந்தது, நடந்துக் கொண்டிருந்தது. தெய்வானை தான் தேவிக்கு ஆறுதலாய் இருப்பார் எப்போதும்.
செந்தில் விஸ்வாவிடத்தில் வேறுபாடு காட்டியதில்லை என்றாலும் தேவிக்கு ஏனோ அவர்களின் உறவில் ஒரு ஒட்டுதலின்மை தான் தெரியும்.
அவருக்கு மிகுந்த மன உளைச்சல் ஆனது தன் தாயையும் தமையனையும் பிரிந்தது. அதிலும் அவர்கள் வேதனையோடு ஊரைவிட்டு போனது ஓயாமல் அவர் உள்ளத்தை அறுத்துக் கொண்டிருந்தது.
சங்கரன் தன் பிள்ளைகளை ஓரளவிற்கு படிக்க வைத்திருக்க ஓர் நாள் அவருக்கு உடம்புக்கு முடியாமல் போக காஞ்சனா தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கு அவருக்கு சில பல டெஸ்ட் எல்லாம் எடுத்திருக்க மறுவாரம் அவருடன் சென்று அதை வாங்கிக்கொண்டு மருத்துவரை பார்க்க போன போது தான் அவளுக்கு தெரியும் அவருக்கு கல்லிரலில் புற்று நோய் என்று.
அவர் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று. நோய் முற்றிய நிலையில் தான் அங்கு வந்திருந்தனர். சிறு பெண் தானே அவளும் எவ்வளவு தான் தாங்குவாள். அவளின் தந்தை கடைசியாய் அவளிடம் கேட்டது ஒன்று தான்.
“காஞ்சனா…”
“சொல்லுங்கப்பா…”
“அப்பாவுக்காக உங்க தாத்தாவுக்காக நீ ஒண்ணு செய்யணும் செய்வியா??”
“செய்ன்னு சொல்லுங்கப்பா, நான் உங்க பொண்ணு நீங்க சொன்னா நான் செய்வேன்ப்பா…”
“நீ என்னை மாதிரியே சொல்றடா… நான் எங்கப்பாகிட்ட எப்படி பேசினேனோ அப்படியே நீ பேசறே…” என்றார்.
“உனக்கு விஸ்வாபத்தி தெரியும்ல”

Advertisement