Advertisement

“உனக்கும் வாழ்க்கையில என்ன பிடிப்பு இருக்கு. உன்னோட மாமனாரும் உடம்பு சரியில்லாம இருக்காரு. நாளைக்கு உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகிப்போச்சுன்னா அவன்கிட்ட போய் நிக்க முடியுமா சொல்லு…”
“நீ வெளிய போய் வேலை பாக்குற அளவுக்கு உன்னைய நான் படிக்க வைக்காம விட்டுட்டேனேடா… உனக்குன்னு என்ன இருக்கு…”
“இந்த கடை இருக்குலப்பா அதை நான் பார்த்துக்க மாட்டேனா??”
“உனக்கு அங்க என்ன நடக்குதுன்னு தெரியுமாடா… அந்த கணக்கு வழக்கெல்லாம் உனக்கு எப்படிடா பிடிபடும். அம்மா அப்பா உன் நல்லதுக்கு தான்டா சொல்றோம்…” என்று பலவாறு பேசி கிட்டத்தட்ட ஐந்து மாதத்திற்கு பிறகு தான் அவள் மனதேயில்லாமல் தலையாட்டினாள்.
பெரிதாய் எல்லாம் யாரையும் கூப்பிட்டு நடத்தவில்லை திருமணத்தை. சின்னதாய் கோவிலில் முடித்து வீட்டிற்கு வந்துவிட்டனர். தேவிக்கு இதுவரை விஸ்வா, குகன் என்றது போக இப்போது அதில் ராதிகாவும் சேர்ந்துக் கொண்டாள். மூவரிடத்தில் அவள் தன் கவனத்தை செலுத்தினாள். 
அவளுக்கு அப்போது தெரியாத விஷயம் ஒன்று நடந்தது. அது குமரன் அவரின் கடையை தன் பேரனுக்கு மாற்றி எழுதிவிட்டிருந்தது.
அன்று தன் மகன் சங்கரனை அழைத்தார் அவர். “சங்கரா…”
“சொல்லுங்கப்பா…”
“உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்ப்பா…”
“என்னப்பா??”
“உனக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னு இருக்கேன்… அதுக்கு முன்னாடி…”
“சொல்லுங்கப்பா…”
“தேவிக்கு கல்யாணம் முடிச்சு வைச்சாச்சு”
“சந்தோசம் தானேப்பா… அவளுக்கு இப்படி ஒரு மறுவாழ்வு கிடைக்கும்ன்னு நாமே எதிர்ப்பார்க்கலை, அவ இப்போ சந்தோசமா தானேப்பா இருக்கா…”
“இருக்கா…” என்று இழுத்தார் அவர்.
“என்னாச்சுப்பா அங்க எதுவும் பிரச்சனையா??”
“இல்லைப்பா எனக்கு தான் ஒரே யோசனையா இருக்கு…”
“என்னன்னு தான் சொல்லுங்களேன்ப்பா??”
“நேத்து கனகுவை பார்த்தேன்…”
“என்னவாம் அவருக்கு??”
சங்கரனுக்கு கனகுவை எப்போதும் பிடிப்பதில்லை. என்னவோ அவரின் பேச்சில் ஏதோ நயவஞ்சகம் இருப்பது போலவே தோன்றும் அவனுக்கு.
தெய்வானை மட்டும் அவருடன் வராமல் இருந்திருந்தால் அவன் நிச்சயம் அந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்கவே மாட்டான்.
தெய்வானை நல்ல மாதிரி என்பதை அவனறிவான். அவர்களின் பிள்ளைங்கள் பற்றி அவ்வளவு அவனுக்கு பரிட்சயம் இல்லை. வேலு சொல்ல தான் கேள்வி.
தவறாய் எதுவும் கேள்விப்பட்டிருக்காததால் தான் முழுமனதாய் இல்லையென்றாலும் தங்கைக்காக அவளின் நல்வாழ்வுக்காக என்று அதற்கு சங்கரனும் சம்மதம் சொன்னார்.
“அவன் ஏதோ பேசிட்டு இருந்தான். அவன் நல்லா இருக்கும் போதே பசங்களுக்கு சொத்தை எழுதி வைச்சிடணும் அப்படி இப்படின்னு, கதிர் வேற உடம்பு சரியில்லாம போய்ட்டான்ல அதுனால அப்படி பேசிட்டு இருந்தான்…”
“எனக்கு சொத்தை எழுதி வைச்சிடணும்ன்னு தோணுது…”
“அதுக்கு இப்போ என்னப்பா அவசரம்??”
“சங்கரா உன்கிட்ட நான் கேக்குறதுக்கு மறுக்காம சம்மதம் சொல்லுவியா??” என்றவர் தன் மனைவியையும் இப்போது அழைத்தார் அங்கு.
“நம்ம கடையை நான் விஸ்வா பேர்ல எழுதிடலாம்ன்னு இருக்கேன். வீட்டை உன் பேருக்கு எழுதிடறேன்…”
“என்னங்க என்ன சொல்றீங்க நீங்க??” என்று மறுத்தார் மணிமேகலை.
“இல்லை மணி. நம்ம பொண்ணுக்கு நாம செய்யப் போறோம் தான், ஆனா அவளுக்கு இது ரெண்டாவது வாழ்க்கை தானேன்னு தோணிட கூடாது, அவங்களும் அவளை எதுவும் சொல்லிடக்கூடாது…”
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு தானே நம்ம புள்ளைய உங்க நண்பரோட பையனுக்கே கொடுத்தோம்…”
“இன்னைக்கு யாரும் எதுவும் சொல்லலை, எப்போமே அப்படி எல்லாரும் இருப்பாங்கன்னு நாம சொல்ல முடியாதுல… அதனால தான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்…”
“எனக்கு தெரியும் சங்கரனுக்கு நான் நியாயம் செய்யலைன்னு… கடையோட மதிப்பை விட வீட்டோட மதிப்பு கம்மின்னு எனக்கு தெரியும்…”
“அப்புறம் ஏன்??”
“அதான் காரணம் சொன்னேனே” என்றவர் கனகு சொன்னதை முழுதாய் சொல்லவில்லை வீட்டில்.
முதல் நாள் அவரை கடையில் பார்த்த கனகு தன் மூத்த மருமகள் தேவியை இளக்காரமாய் பார்ப்பதாகவும் ரெண்டாவது கல்யாணம் தானேன்னு குத்தி பேசுவதாகவும் சொல்லியவர் ஒண்ணுமில்லாம வந்திட்டா என்று பேசியதாகவும் சொல்லியிருந்தார்.
குமரனுக்கு தெரியும் ரத்தினவேலின் மனைவி வாயில்லா பூச்சி என்று. கனகுவின் பேச்சு தான் அன்று புதிதாய் தெரிந்தது அவருக்கு.
அவர் மனதில் உள்ளதை தான் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தது. காலம் தாழ்ந்துவிட்டதே மகளை கொடுத்துவிட்டோமே என்றிருந்தது அவருக்கு.
அதை மனதில் வைத்து தான் அவர் சொத்தை எழுத முடிவு செய்தார். ஆனால் அவர் செய்ததில் மிக சரியான செயல் அதை விஸ்வாவின் பெயரில் எழுதியது.
“அப்பா உங்க இஷ்டம் நான் எப்பவும் உங்க பேச்சுக்கு மறுப்பேச்சு பேச மாட்டேன்…” என்றிருந்தான் சங்கரன்.
அவர் சொன்னது போலவே எல்லாம் செய்து முடித்திருந்தார். மகனுக்கு அவர் நியாயம் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு  அவரை கொன்றது.
சங்கரன் மனோரஞ்சிதம் என்ற பெண்ணை விரும்பியிருக்க அவரையே அவருக்கு மணமுடித்தனர்.
சங்கரன் எப்போதும் போல் அவர்களின் கடையில் தான் வேலை பார்த்தான். ஆனால் அங்கு இப்போது கனகுவும், ரத்தினவேலும் தான் அதிகாரம் செய்துக் கொண்டிருந்தனர்.
என்ன இருந்தாலும் அது தங்கள் கடை என்ற எண்ணத்தில் அவன் பேசாமல் இருந்தான். ஒரு முதலாளியாய் இருக்க வேண்டியவன் ஊழியனாய் ஊதியம் வாங்கினான் அங்கு.
இந்த நிலையில் தான் கதிர்வேல் இறந்து போனார். குமரனும் நோய்வாய்பட்டார். அவருக்கு பக்கவாதம் வந்திருந்தது. அவருக்கு மருத்துவ செலவிற்காய் வீட்டை அடமானம் வைத்தான் சங்கரன்.
குமரன் ஒரு நாள் தூக்கத்திலே போய் சேர்ந்துவிட்டார். சங்கரனுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு போலியோ அட்டாக் என்றிருக்க மருத்துவம் பார்க்க காசில்லாமல் கனகுவிடம் போய் நின்றார் அவர்.
“என்ன சங்கரா காலையிலேயே வந்து நிக்கறே?? என்ன விஷயம்??”
“இல்லை மாமா பாப்பாக்கு செக்கப் பண்ண ஆஸ்பிட்டல் போகணும், அவசரமா பணம் தேவைப்படுது. அதான் உங்ககிட்ட கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்…”
“பணமா அதெல்லாம் கேக்காதப்பா… அவ்வளவு பணத்துக்கு எல்லாம் எங்க போக… நீயே பார்க்கறல்ல தங்கம் விலை ஏறிப் போச்சுன்னு எவனும் தங்கம் வாங்க மாட்டேங்குறான்…” என்று வாய் கூசாமல் புழுகினார் அவர்.
இன்னும் ஏதேதோ சொல்லி அவனுக்கு பெரிதாய் அட்வைஸ் செய்ய பணம் வராது என்று புரிந்து போனது அவனுக்கு.
அவர் பேச்சில் மனம் புழுங்கிய சங்கரன் நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
அடமானம் வைத்திருந்த வீட்டை விற்க முற்பட வாங்கிய காசிற்கு வட்டிக் கட்டாமல் அசலும் கட்டாமல் அதுவே ஒரு பெரும் தொகை சேர்ந்திருக்க வீடே முழ்கி போயிருந்தது கிட்டத்தட்ட.
சொச்சம் பணம் மட்டுமே கையில் கிடைத்திருக்க அதில் மகளுக்கு வைத்தியம் பார்க்க முடியாமல் அழுதவர் அதை வைத்துக்கொண்டு ஊரைவிட்டே கிளம்பினார்.
சென்னைக்கு வந்து ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டு தன் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருந்தார். அப்படி சென்றுக் கொண்டிருந்த ஓர் நாளில் தான் அவர் கனகுவையும் ரத்தினவேலுவையும் மீண்டும் பார்க்க நேர்ந்தது.
அவன் வேலை பார்த்த கடை இருக்கும் தெருவில் வேறு ஒரு கடைக்கு வந்திருந்தவர்கள் தற்செயலாய் அவனை பார்த்தனர்.
“என்ன சங்கரா இங்க தான் இருக்கியா… செத்து போயிட்டேன்னு ஊர்ல பேசிக்கிட்டாங்க…” என்றார் ரத்தினவேல் நக்கல் குரலில்.
“ஆமா செத்து போயிட்டேன், ஆவியா நடமாடிட்டு இருக்கேன்…” என்றார் அவரும் அதைவிட நக்கல் குரலில்.
“பார்த்துப்பா நல்லா பொழைக்கற வழியை பாரு…” என்று சொல்லி சென்றவர்கள் சும்மா சென்றிருக்கவில்லை அவன் வேலை பார்த்த கடையில் சென்று அவனை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி சென்றனர்.
கனகுவிற்கு சங்கரனை தெரியும், அவன் தொழில் நேர்த்தி உள்ளவன் என்பதை அறிவார். அவன் இப்படி பாதியில் வேலையை விட்டு போவான் என்று நினைத்திருக்கவில்லை அவர்.
அவன் மீண்டும் தங்கள் தேடி வரவேண்டும் என்று தான் கொஞ்சம் பிகு செய்து பின்னர் பணத்தை கொடுக்க எண்ணியிருக்க அவன் ஊரைவிட்டே வந்திருந்தான்.
பார்த்தால் இங்கு ஒரு கடையில் வேலை வேறு பார்த்துக் கொண்டிருக்கிறான். இது சரியில்லை என்று நினைத்து அப்பாவும் பிள்ளையுமாக அவனை பற்றி வத்தி வைத்தனர் கடையில்.
ஊரில் அவர்கள் கடையில் திருடிவிட்டு இங்கு வந்து ஓடி ஒளிந்திருக்கிறான் என்று சொல்ல முதலாளி அவனை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.
சங்கரனின் நண்பன் வந்து உண்மையை சொன்ன பின்னே தான் வேலையில் மீண்டும் சேர்த்துக் கொண்டார்.

Advertisement