Advertisement

21
மாலை தேவி விளக்கேற்றி சாமி கும்பிட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தேவியின் அன்னை குழந்தைக்கு ஐந்து மாதம் முடிந்ததுமே தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தேவி வீட்டிற்கு வந்ததும் கதிர்வேலும் வழமை போல் தங்கள் கடைக்கு செல்லவாரம்பித்தார்.
தேவி குழந்தைக்கு பாலைக் கொடுத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க விஸ்வா உறங்கியிருந்தான். குழந்தையை படுக்க வைத்துவிட்டு வாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் தேவி.
கதிரும் வீட்டிற்கு வந்திருக்கவில்ல, வேலுவும் வரவில்லை. இந்நேரமெல்லாம் வந்திருக்க வேண்டுமே என்று வாயிலுக்கும் வீட்டிற்குமாய் நடையை போட்டாள் அவள்.
அப்போது தெய்வானை பதட்டமாய் உள்ள வந்தவர் அவளை மேலும் கீழும் பார்த்தார் ஒன்றும் சொல்லவில்லை.
“என்ன அத்தை நீங்க மட்டும் வந்திருக்கீங்க, குகனை தூக்கிட்டு வரலையா…” 
“இல்லை தேவி, குழந்தையை இப்போ தான் தூங்க வைச்சேன்…” என்றவர் “இன்னும் யாரும் வரலையா??” என்றார்.
“இல்லை அத்தை அதான் பார்த்திட்டு இருக்கேன். மாமா கூட இன்னும் வீட்டுக்கு வரலை. அப்பா கடைக்கு போன் போட்டு இவர் கிளம்பிட்டாரான்னு கேட்கணும்…” என்றாள் அவரிடம்.
“உனக்கு யாரும் போன் பண்ணலையாம்மா??” என்றவரின் கண்கள் கலங்கியிருந்ததை அப்போது தான் கவனித்தாள்.
“என்னாச்சு அத்தை??” என்று இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே இவளின் அன்னை ஓவென்ற ஒப்பாரியுடன் உள்ளே வந்துக் கொண்டிருந்தார், உடன் குமரனும் வர அவளுக்கு உள்ளே பதறியது.
“அம்மா… என்னம்மா…” என்றவளின் விழிகளும் கலங்க ஆரம்பித்திருக்க குமரன் விபத்து விஷயத்தை மெதுவாய் சொல்ல அவளோ “அவருக்கு என்னாச்சு, நான் அவரை பார்க்கணும்…” என்று அழ “அண்ணன் கொஞ்சம் முன்னாடி தான்மா போன் பண்ணான்…”
“எல்லாம் முடிஞ்சு இன்னும் கொஞ்ச நேரத்துல கொடுத்திருவாங்கலாம், அவங்களே கூட்டிட்டு வந்திடுவாங்கம்மா…” என்றவரின் முகம் இறுகிப் போயிருந்தது.
“அப்பா என்னப்பா சொல்றீங்க??”
“அவர் நல்லாயிருக்காராப்பா??” என்று விழி நீர் வழிய அவள் கேட்க “இல்லைம்மா அவரு உன்னைய தனியா தவிக்கவிட்டு போயிட்டாரும்மா…” என்று அவளின் அன்னை சொல்லி அழ அப்படியே அமர்ந்துவிட்டாள் அவள்.
வேலுவின் உடல் வீட்டிற்கு எடுத்து வர நள்ளிரவாகிப்போனது. அவர் உடல் கூழாகிப் போயிருக்க முகத்தை கூட பார்க்க முடியவில்லை.
அருகில் இருந்ததாக சொல்லி அந்த புடவையை எடுத்து வந்திருக்க அதை பார்த்தவள் பொங்கி பொங்கி அழுதாள்.
அன்று அவர்களின் திருமணநாள் அதற்காக தான் புடவையை எடுத்திருப்பார் என்று புரிந்தது அவளுக்கு. அவரை நினைத்து நினைத்து அவள் அழ பெற்றவர்களுக்கு காண சகிக்கவில்லை அவளின் துன்பத்தை.
“குழந்தைக்காக உன்னைய தேத்திக்கோடா” என்று ஏதேதோ சொல்லித்தான் மகளை தேற்றி வைத்திருந்தார் அவளின் அன்னை.
தெய்வானையும் உடன் இருக்க இருவரும் மாற்றி மாற்றி அவளை சமாதானம் செய்தனர். 
மகன் பாதியிலேயே விட்டுப் போனதில் கதிரின் உடல்நிலையும் மோசமாகியது. இன்றோ நாளையோ என்றிருப்பவரை இப்போது தேவி தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
தெய்வானை வரும் போது குகனையும் தூக்கி வருவார் சில நேரங்களில். இரு குழந்தைகளுடன் அவள் தன்னை முழ்கடித்துக் கொண்டிருந்தாள். குகன் இப்போது பெரும்பாலான நேரம் அவளிடத்திலேயே இருக்கிறான்.
இரு குழந்தைகளையுமே அவளே வளர்த்தாள். அவ்வப்போது உடல் நலம் குன்றும் குழந்தை குகனை பார்த்து பார்த்து அவள் கவனிப்பாள்.
விஸ்வாவும் குகனும் ஒன்றாகவே வளர்ந்தனர். அவர்கள் இருவரின் முதல் பிறந்தநாளும் அவர்கள் வரையில் சிறப்பாகவே கொண்டாடினர். இப்படியே நாட்கள் சென்றுக் கொண்டிருக்க குழந்தைகள் இருவருக்கும் ஒன்றரை வயதாகியது. செந்திலுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தனர்.
அவனின் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடக் கூடாது என்று எண்ணினர் பெற்றோர். ராதிகாவும் சிறு குழந்தை தானே, குகனையும் ராதிகாவையும் ஒரே சேர பார்த்துக்கொள்ளவும் மகனுக்காகவும் என்று சேர்த்தே பெண் தேடினர்.
செந்தில்வேல் முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை. குகன் பெரும்பாலும் தேவியிடத்திலேயே இருப்பதால் குழந்தைக்கு பாசம் விட்டுப்போகும் என்று கனகு சொல்ல அதன்பின் தான் சம்மதித்தார் அவர். 
தெய்வானை மகனுக்காக வெளியில் பெண் தேடினாலும் அவருக்கு உள்ளுக்குள் ஒரு எண்ணமிருந்தது. பாவம் அவர் அதை நல்லதிற்காக தான் எண்ணி தன் கணவரிடம் சொல்ல கனகுவோ அதை வைத்து பெரிய திட்டமே போடுவார் என்று அறிந்திருந்தால் அப்படியொரு தவறை அவர் செய்திருக்கவே மாட்டார்.
“என்னங்க??”
“என்ன??” என்றார் கனகவேல் சிடுசிடுப்பாய். அவர் எப்போதும் அப்படி தான் மனைவியிடத்தில் இருப்பார். எப்போதாவது தான் சாதாரணமாய் பேசுவதென்பது.
“வேலையா இருக்கீங்களா??” என்றார் தெய்வானை அவரின் சிடுசிடுப்பை பார்த்து.
“அதான் ஏதோ சொல்ல வந்திட்டேல்ல சொல்லி முடி…”
“செந்திலுக்கு பொண்ணு பார்க்கறோம்ல…”
“அதுக்கென்ன இப்போ??”
“எனக்கு ஒரு யோசனை??” என்று அவர் சொல்லவும் மனைவியை நன்றாய் பார்த்தார் கனகவேல்.
“சொல்லு”
“நாம ஏன் வேற பொண்ணை பார்த்திட்டு??”
“அப்போ நீ பார்த்து வைச்சிருக்கியா பொண்ணை நம்ம சொந்தக்காரப் பொண்ணா, யாரு பொண்ணு…” என்று அவர் வரிசையாக கேள்விகளை அடுக்கினார்.
“நீங்க இதை எப்படி எடுத்துப்பீங்கன்னு எனக்கு தெரியலை…”
“என்ன சொல்லணுமோ சொல்லித்தொலை…” என்றார் அவர்.
“நம்ம தேவியை ஏன் செந்திலுக்கு கட்டக்கூடாது…” என்று மனதில் இருந்ததை சொல்லியேவிட்டார் அவர்.
அதை கேட்டு முதலில் அதிர்ந்த கனகுவின் பார்வை பின் கூர்மையுடன் தன் மனைவியின் மீது படிந்தது.
அவர் கண்களில் ஒரு புது ஒளி தெரிய தெய்வானைக்கு அவரின் பார்வை சற்று நிம்மதியை கொடுத்தது, இருந்தாலும் வாய்விட்டு அவர் சரி என்று சொன்னால் மேற்கொண்டு பேசலாம் என்பது போல் அமர்ந்திருந்தார் அவர்.
“நல்ல யோசனை தான் தெய்வானை. எனக்கு இது தோணாம போச்சே” என்றவர் “சரி நான் முதல்ல கதிர்கிட்ட பேசறேன்…” என்றார்.
“உங்க தம்பி இப்போ பேசற நிலைமையிலையா இருக்காரு. அவர்க்கு தான் நாம பேசறே எதுவுமே கேட்காதே, படுத்த படுக்கையா இருக்காரு… நீங்க எது பேசுறதா இருந்தாலும் குமரன் அண்ணாகிட்ட பேசுங்களேன்…” என்றார் தெய்வானை.
“தெய்வானை… தெய்வானை… இன்னைக்கு நீ பேசுற எல்லாமே ரொம்ப ரொம்ப சரியா இருக்கு…”
“சரி நீயும் கிளம்பு நாம முதல்ல குமரனை பார்த்து பேசிட்டு வந்திடுவோம்…” என்று சொல்ல இருவருமாக குமரனை பார்க்கச் சென்றனர்.
“வாப்பா கனகு, வாம்மா…” என்று வரவேற்றார் அவர்.
“உன்கிட்ட ஒண்ணு கேக்கலாம்ன்னு வந்திருக்கோம் குமரா…”

“சொல்லுப்பா என்ன விஷயம்??”
“நீ தப்பா எடுத்துக்க மாட்டியே??”
“என்னைப்பத்தி உனக்கு தெரியாதா… என்னன்னு சொல்லுப்பா…”
“செந்திலுக்கு பொண்ணு பார்க்கறோம்…”
“நல்ல விஷயம் தானே…”
“எனக்கு ஒரு யோசனை…”
“என்ன??”
“தேவியை செந்திலுக்கு கட்டலாமான்னு…” என்று சொல்லிவிட்டு நண்பரின் முகத்தை பார்க்க அவர்கள் பேசுவதை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த தேவியின் அன்னையின் முகம் சுருங்கியது.
“மணி…” என்றழைத்தார் குமரன்.
“சொல்லுங்க…” என்றவாறே வந்து நின்றார் குமரனின் மனைவி மணி என்ற மணிமேகலை.
“அவங்க நம்ம தேவியை…”
“கேட்டுச்சுங்க…”
“நீ என்ன நினைக்கிறே??”
“யோசிச்சு முடிவு பண்ணலாம்…”
“அதுக்கென்னம்மா நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க… உங்க காதுல விஷயத்தை போட்டிடலாமேன்னு தான் வந்தேன்…” என்றவர் தெய்வானையை அர்த்தத்துடன் பார்த்தார்.
“ஆமாம் மணி உங்க இஷ்டம் தான். நீங்க யோசிச்சு சொல்லுங்க. ஆனா நல்ல முடிவா சொன்னா ரொம்ப சந்தோசப்படுவோம்…” என்றவர் பேசிக்கொண்டே மணிமேகலையுடன் தனியே வெளியில் வந்தார்.
“என்னாச்சு மணி?? நாங்க இப்படி கேட்டது பிடிக்கலையா??”
“தெரியலை தெய்வானை, மனசுக்கு என்னமோ சரியாப்படலை…”
“ஏன் மணி?? என் பையனுக்கு ரெண்டாம் தாராமா…”
“என்ன தெய்வானை நான் அதெல்லாம் நினைக்கலை. அப்படி பார்த்தா தேவிக்கும் நீ சொல்ற மாதிரி தானே. பொண்ணு வாழ்க்கை இப்படி பாதியிலேயே பட்டுப்போச்சேன்னு மனசுக்கு கவலையா தான் இருக்குது…”
“இது நிலைக்கணுமேன்னு தான் எனக்கு கவலை தெய்வானை…”
“கண்டிப்பா நிலைக்கும் மணி, நீ சரின்னு சொல்லு. நம்ம புள்ளைங்ககிட்ட பேசிப்பார்ப்போம்…”
மணிமேகலையும் ஒருவாறு தன் சம்மதத்தை சொல்லியிருக்க பெரியவர்கள் இப்போது தங்கள் மக்களை சம்மதிக்க வைக்க பெரும்பாடுப்பட்டனர்.
செந்திலிடம் குகனிற்கு தேவி நல்ல தாயாக இருப்பாள் என்று மூளை சலவை செய்தனர்.
தேவியை சம்மதிக்க வைப்பது தான் மிகச்சவாலாக இருந்தது அவர்களுக்கு. தேவி முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார்.
குமரனும், மணிமேகலையும் நடையாய் நடந்தனர், மகளிடம் கெஞ்சி கூத்தாடினர். தங்கள் காலத்திற்கு பின் அவளுக்கென்று ஒரு உறவு வேண்டும் என்று சொல்ல அவளோ தனக்கு தன் மகன் போதும் என்றாள்.
“அவன் நல்லபடியா வளரணும்டா, அவனுக்கு அவனோட அப்பா இறந்திட்டார்ன்னு தெரியாது. வளர்ந்து பெரிசாகும் போது அவன் அப்பாவை நினைச்சு ஏங்கலாம், அவனுக்கு அப்பா பாசம்ன்னு ஒண்ணு வேணாமா…”

Advertisement