Advertisement

குமரனின் மனைவி குழந்தையை தூக்கி வைத்திருக்க வேலு அவர் அருகில் சென்று தன் குழந்தையை பார்த்தான். தன்னை கொண்டு தன் மகன் பிறந்திருக்கிறான் என்பதில் அவ்வளவு ஆனந்தம் அவருக்கு.
விஷயம் கேள்விப்பட்டு கதிர்வேலும் அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தார். தன் பேரக்குழந்தையை கண்டவருக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை.
அவர்கள் இப்படி நின்றிருந்த வேளையில் தான் கனகவேல் அவசர அவசரமாய் உள்ள வந்தார். கதிர்வேல் அவரைக் கண்டதும் “என்ன அண்ணா குழந்தையை பார்க்க வந்தீங்களா?? நானே சொல்லலாம்ன்னு இருந்தேன்…” என்று சொல்ல கனகவேலோ “குழந்தையா யாருக்கு??” என்றவர் அப்போது தான் வேலுவை அங்கு பார்த்தார்.
“வேலுக்கு குழந்தை பிறந்தாச்சா?? என்ன குழந்தை??”
“பேரன் பிறந்திருக்கான்…” என்றார் அவர்.
“நல்லது…” என்றவர் வந்து குழந்தையை பார்க்கக்கூட இல்லை. “சரி நான் கிளம்பறேன்…”
“அண்ணே குழந்தையை பார்க்காம போறீங்க??”
“இல்லை கதிரு நான் இங்க வந்தது நம்ம செந்தில் பொண்டாட்டியை பார்க்க, இன்னைக்கு அவ பாத்ரூம்ல வழுக்கி விழுந்து ஆஸ்பத்திரியில கொண்டு வந்து சேர்ந்தாங்க…”
“கடைக்கு போன் வந்துச்சு, அதான் பார்க்கலாம்ன்னு வந்தேன்…” என்று அவர் சொல்ல வேலுவும் அருகே வந்துவிட்டான் அப்போது.
“என்ன பெரியப்பா சொல்றீங்க?? இருங்க நான் ரிஷப்சன்ல விசாரிக்கறேன்…” என்று சொல்லி விசாரிக்க சென்றவர் திரும்பி வந்தார். 
“அவங்க ஆபரேஷன் தியேட்டர்ல இருக்காங்க போல வாங்க பெரியப்பா போவோம்” என்றவன் தன் மாமனார் மாமியாரிடம் சொல்லி கிளம்பப் போக குமரன் தானும் வருவதாக கூறி வந்தார்.
“ஒண்ணும் இருக்காது கனகு…” என்று நண்பருக்கு ஆறுதல் சொன்னார் குமரன்.
அவர்கள் ஆபரேஷன் தியேட்டர் வரவும் அவர்கள் குழந்தையுடன் வெளியில் வரவும் சரியாக இருந்தது. செந்திலுக்கு இரண்டாவதாய் ஆண் குழந்தை பிறந்திருந்தது.
ஏழு மாதத்திலேயே குழந்தை பிறந்திருக்க குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருந்தனர். செந்திலின் மனைவியை இன்னமும் வெளியில் கொண்டு வந்திருக்கவில்லை.
உள்ளே ஆட்கள் செல்வதும் வருவதுமாக இருக்க செந்திலின் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. பெண் துணையாக தெய்வானை மட்டுமே அங்கிருந்தார்.
“அண்ணா அண்ணிக்கு ஒண்ணும் ஆகாது…” என்று ஆறுதல் சொன்னான் வேலு.
“ஒண்ணும் ஆகாதுல்ல…” என்று அவ்வளவு வருத்தத்தோடு கேட்டார் செந்தில். “பாருங்க அண்ணா உங்களுக்கும் பையன் பிறந்திருக்கான். அண்ணியை இப்போ கூட்டிட்டு வந்திடுவாங்க பாருங்களேன்…” என்றார் அவர்.
ஒவ்வொருவரும் வேண்டுதல் வைத்து காத்திருக்க மருத்துவர் வெளியில் வந்தார். “அவங்களுக்கு ரொம்ப ப்ளீடிங் ஆகுது. உடம்பு வேற ஜன்னி கண்டு தூக்கி தூக்கி போடுது…”
“எங்களால முடிஞ்சதை செஞ்சிட்டோம்… கஷ்டம் தான்…” என்று சொல்ல செந்தில் அப்படியே அமர்ந்துவிட்டார். வேலு ஆறுதலாய் பற்றிக்கொண்டான் செந்திலை.
தெய்வானை கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது. கனகு, கதிர், குமரன் மூவரும் ஒன்றும் செய்ய இயலாமல் அப்படியே இருந்தனர் அங்கு.
சிறிது நேரத்தில் செந்தில் மட்டும் உள்ளே அழைக்கப்பட அதே நேரம் அவர் மனைவியின் உயிரும் பிரிந்தது. அடுத்தடுத்து நடக்க வேண்டிய அனைத்தும் நடக்கவென்று அவர்கள் நகர குழந்தையை மறந்தனர் அந்நொடி.
கிளம்பும் தருவாயில் தெய்வானை மட்டும் வேலுவிடம் வந்தார். “சொல்லுங்க பெரியம்மா…”
“குழந்தை…”
“ஆமா இன்குபேட்டர்ல இருக்கு…”
“எப்போ கொடுப்பாங்கன்னு கேளுய்யா, அவங்க அம்மாக்கு அவன் தானே செய்யணும்…” என்றார் அவர் கண்ணீருடன்.
“டாக்டர் ஒரு வாரம் இன்குபேட்டர்ல இருக்கணும்ன்னு சொன்னாங்களே பெரியம்மா…”
“எதுக்கும் கேட்டுப்பாருய்யா??” என்று கேட்க அவன் மறுக்க முடியாமல் டாக்டரை பார்க்கச் சென்றான்.
அவன் சொன்னது போலவே அவரும் மறுத்திருக்க அதை தன் பெரியம்மாவிடம் சொல்லி அவர்களை வீட்டிற்கு கிளம்பச் செய்து தன் மாமியாரை பார்த்து நடந்த விபரத்தை சொல்லி அவனுமே அங்கிருந்து கிளம்பினான்.
எல்லாம் நடந்து முடிந்திருக்க செந்திலின் மூத்த மகள் ராதிகா அம்மா எங்க?? அம்மா… அம்மா… என்று சொல்ல பார்ப்பவர்களுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது.
அவளுமே இரண்டு வயது குழந்தை தானே. தன் தாயின் அருகாமையை குழந்தை தேடியது. அவளை சமாதானம் செய்ய முயல முடியாமல் குழந்தை அழ வீடே சோகமாக இருந்தது.
வேலு தன் மனைவியுடன் மூன்றே நாளில் வீட்டிற்கு வந்துவிட்டான். மருத்துவமனையில் இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு மறுநாள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று புதிதாய் டியூட்டிக்கு வந்த நர்ஸ் சொல்லிச் செல்ல தெய்வானை நேராய் வேலுவிடம் ஓடிவந்தார்.
“வேலு…”
“பெரியம்மாக்கு ஒரு உதவி செய்வியாப்பா??”
“செய்ன்னு சொல்லுங்க பெரியம்மா செய்வியான்னு ஏன் கேட்கறீங்க??”
“இல்லைப்பா இதுக்கு நீ மட்டும் சம்மதிச்சா போதாது. தேவிகிட்டையும் கேட்டு சொல்லுப்பா…”
“என்ன பெரியம்மா??”

“செந்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சொல்லி இப்போ தான் ஒரு நர்ஸ் வந்து சொல்லிட்டு போறாங்கப்பா…”
“பெரியம்மா” என்ற வேலு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்தவனாய் தன் மனைவியை நாடிச் சென்றான்.
அவள் எழுந்து வெளியே வந்துவிட்டாள். “அத்தை குழந்தை எங்க இருக்கு??” என்று கேட்டவாறே.
அதில் அப்படியே நெகிழ்ந்து தான் போனார் தெய்வானை. தன் அம்மாவிடம் தங்கள் குழந்தையை விட்டுவிட்டு அவள் குழந்தை இருக்குமிடம் சென்றாள்.
தெய்வானை கண்ணில் விடாது கண்ணீர் வழிந்தது. ‘இதுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போறோமோ’ என்று தான் எண்ணினார்.
குழந்தையும் அவளை வேறாய் நினைக்காமல் பசியாறியது அவளிடம். அவள் மருத்துவமனையில் இருந்த மற்ற இரண்டு நாட்களும் கூட அவளாகவே சென்று குழந்தைக்கு பசியாற்றினாள்.
வீட்டிற்கு வந்த பிறகு அவளுக்கு அந்த குழந்தை ஞாபகமே. “என்னங்க அந்த குழந்தை என்னங்க பண்ணியிருப்பாங்க… நாம ஆஸ்பிட்டல் போயிட்டு வருவோமா…” என்றவளை அழைத்துக் கொண்டு வேலுவும் கிளம்பிவிட்டார்.
தேவியின் அன்னை பிள்ளை பெத்த உடம்பு இப்படி போட்டு அலையாத என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை. தாயில்லா அந்த குழந்தைக்கு தன்னால் முடிந்ததை கொடுக்க எண்ணினாள்.
அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்த அத்தனை நாட்களும் அவரே சென்று குழந்தைக்கு பசியாற்றினார்.
அவர்கள் குழந்தையை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். “என்னங்க குழந்தைக்கு பசும்பால் கொடுத்திருப்பாங்க. பாவம் குழந்தை அந்த பாலை குடிச்சிருப்பானோ இல்லியோ…” என்றார் தேவி தன் கணவனிடம்.
“விடு தேவி, அவங்க இனிமே பார்த்துப்பாங்க…” என்று தன் மனைவியை சமாதானம் செய்தார் வேலு.
அன்று மாலையே தெய்வானை குழந்தையோடு வீட்டிற்கு வந்துவிட்டார்.
“அத்தை…” என்றவள் அப்போது தான் பசியாறிய தன் குழந்தையை கீழே படுக்க வைத்துவிட்டு செந்திலின் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
“என்ன அத்தை?? என்னாச்சு??” என்று கேட்க தெய்வானை அவ்வளவு தூரம் குழந்தையை தூக்கி கொண்டு வந்துவிட்டவர் கேட்கவே தயங்கி நின்றார்.
“குழந்தை…”
“சொல்லுங்க அத்தை…”
“குழந்தை வேற எந்த பாலையும் குடிக்கவே மாட்டேங்குறான்ம்மா…”
“அவ்வளவு தானா…” என்ற தேவி அக்குழந்தைக்கு பசியாற்றும் பொருட்டு உள்ளே தூக்கி சென்றவள் சிறிது நேரத்தில் குழந்தையுடன் வந்தாள்.
“குடிச்சிட்டான் அத்தை, அப்படியே தூங்கி போய்ட்டான்…” என்று அவரிடம் கொடுத்தாள்.
“உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியலைம்மா” என்றார் நா தழுதழுக்க.
“அத்தை இதுக்கெல்லாம் நன்றி சொல்வாங்களா…”
“ஆனா அத்தை குழந்தை வேணா நானே இங்க வைச்சுக்கட்டும்மா…”
“இல்லைம்மா செந்தில்… செந்தில் அவன் ரொம்ப உடைஞ்சு போய்ட்டான், இந்த குழந்தையை பார்த்து தான் அவன் பொண்டாட்டியை மறக்க முயற்சி பண்றான்…”
“குழந்தை அவன் பொண்டாட்டி ஜாடையில இருக்கான்னு குழந்தையைவிட்டு இம்மியும் நகராம இருக்கான்…”
“நீங்க தினமும் இப்படி தூக்கிட்டு வர முடியாதே…”
“எனக்கு புரியுதும்மா… இவன் ரொம்ப அழுகவும் தான் வேற வழியில்லாம தூக்கிட்டு வந்தேன்…”
அன்று இரவு அவளைப் பார்க்க வந்த வேலுவிடம் தங்கள் வீட்டிற்கு போகலாம் என்று சொன்னாள்.
“இப்போ எதுக்கு தேவி அவசரம், நீ இருந்து ஐஞ்சு மாசம் கழிச்சு வாயேன்…”
“இல்லைங்க செந்தில் மாமா குழந்தை பாவம் அழுதிட்டே இருக்கானாம். தெய்வானை அத்தை இப்போ தான் குழந்தையை கூட்டிட்டு வந்து பசியாத்திட்டு போனாங்க…” என்றாள்.
வேலுவிற்கு இது என்ன புது தலைவலி என்று தான் இருந்தது. அவன் ஒன்றும் இதெல்லாம் செய்ய வேண்டாம் என்று நினைக்கவில்லை தான். ஆனால் இதுவே தொடர்கதை என்றால் அதை அவனால் ஏற்றுக்கொள்ள தான் முடியவில்லை.
தன் ஆசை மனைவியின் பேச்சை அவர் என்றுமே நிராகரித்ததில்லை. அதனால் தன் மாமியார் மாமனாரிடம் பேசி அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டான்.
உடன் மாமியாரையும் அழைத்து வந்திருந்தான் மனைவியை பார்த்துக்கொள்ளவென்று. விஷயம் கேள்விப்பட்ட தெய்வானைக்கு அவ்வளவு சந்தோசம்.
அடுத்த வீட்டிலேயே இருக்கும் அவளிடம் அவ்வப்போது குழந்தையை தூக்கி வருவார். குழந்தை பசியாறியதும் சிறிது நேரம் விளையாடவிட்டு குழந்தையை கூட்டிச்செல்வார்.
வேலு, தேவி குழந்தைக்கு விஸ்வகர்மா என்று பெயரிட்டனர். செந்திலின் குழந்தைக்கு குகன் என்று பெயரிட்டனர்.
குகனிற்கு அடிக்கடி உடல்நலம் சீரில்லாமல் போனது. வாரத்தில் இரண்டு நாட்களாவது குழந்தையை மருத்துவமனை அழைத்து செல்லாமல் இருந்ததில்லை அவர்கள்.
குழந்தைக்கு நாலு மாதம் ஆகியிருந்தது. வேலு கடைக்கு சென்றிருந்தான். ஒரு வேலை விஷயமாய் நாகர்கோவில் வரை வந்திருந்தவன் மறுநாள் அவர்களின் திருமண நாள் என்பதால் அருகில் உள்ள கடையில் புடவை எடுக்கலாம் என்று சென்றான். பார்த்து பார்த்து அழகிய பட்டுப்புடவை ஒன்றை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தன் வண்டியில் கிளம்பினான்.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்துக் கொண்டிருக்கும் வழியில் லாரி ஒன்று சரியாய் பிரேக் பிடிக்காமல் தறிக்கெட்டு ஓட முன்னால் சென்றுக் கொண்டிருந்த வேலுவின் வண்டியில் மோத அவர் தூக்கியெறிப்பட்டான்.

Advertisement