Advertisement

20
“காஞ்சனா” அதட்டினான் விஸ்வா.
“நீங்க பேசாம இருங்க, நீங்க இப்படி இருக்க போய் தான் இவங்க ஏய்ச்சுட்டு திரியறாங்க. ஒரு குமரனும், சங்கரனும், வேலுவும் போதும் நீங்களும் ஏமாந்திட்டு நிக்காதீங்க…” என்றாள் படபடவென்று.
அவள் சொல்லிய பெயர்களை கேட்ட பெரியவரும் அவர்களின் பிள்ளைகளும் அவளையே வெறித்திருக்க விஸ்வாவிற்கு வேலுவை தவிர யாருமே தெரியவில்லை. அதுவும் கூட வேலு உன் அப்பா என்று அவள் சொல்லித்தான் தெரியும்.
யாருக்குமே இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்றே தோன்றியது அவனுக்கு. தன்னை வைத்து தன்னை சுற்றி இவ்வளவு நடந்தும் நடந்துக் கொண்டிருந்தும் எதுவுமே அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
எல்லோருமே தன்னிடம் நடித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறனர் என்பதே அவன் நெஞ்சை அறுத்தது.
சங்கரன்னு இவ சொன்னது இவளோட அப்பா சங்கரலிங்கமா இருக்குமோ என்று யோசித்தான். அப்படித்தான் இருக்க வேண்டும்.
அமுதன் ரேகா திருமணத்திற்கு பத்திரிகை அடிக்க வேண்டும் என்று அதில் பெரியவர்கள் பெயரை போடவேண்டும் என்று கேட்டிருக்க அவள் சட்டென்று பதில் சொல்லிடவில்லை யாருக்கும். சில நொடி கழித்து தான் அவள் அப்பாவின் பெயர் சங்கரலிங்கம் என்றும் அம்மா மனோரஞ்சிதம் என்றும் சொன்னாள்.
அவர்கள் பெயரை மட்டுமா பத்திரிக்கையில் போட முடியும் அதற்கு முந்திய தலைமுறையின் பெயரும் தானே போட வேண்டும் என்று தாத்தா, பாட்டி பெயரை கேட்க அதற்கும் அவள் யோசித்துக் கொண்டே தான் இருந்தாள் உடனே சொல்லவில்லை. மெதுவாய் தாத்தாவின் பெயர் முத்துக்குமாரசாமி என்றும் பாட்டி மணிமேகலை என்றும் சொன்னாள்.
அப்போ குமரன் யாரா இருக்கும், ஒரு வேளை அவளோட தாத்தா தான் குமரனா இல்லையே முத்துக்குமாரசாமின்னு தானே சொன்னதா ஞாபகம் என்று ஓட்டிப் பார்த்தான்.
இப்போது முன்னே வந்திருந்தார் கனகவேல் “யார் நீ??” என்று அவளை விரல் நீட்டிக் கேட்டார்.
அவள் அவரை மேலிருந்து கீழாக பார்த்தாள் பதில் சொல்லவில்லை. நீங்க கேட்டா நான் சொல்லிடணுமா என்ற பார்வை தான் அதில் தொக்கி நின்றது.
“காஞ்சனா… நீ என்ன சொல்றேன்னு…”
“உங்களுக்கு நான் அப்புறம் சொல்றேன்…” என்று முடித்துவிட்டாள் விஸ்வாவிடம்.
விஸ்வாவிற்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. தன்னை ஒரு பொருட்டாய் கூட யாரும் நினைக்கவில்லை என்பதே அவனை பலமிழக்கச் செய்து கொண்டிருந்தது.
“அதென்ன அப்புறம் சொல்றது. சொல்லேன் இப்போவே இங்கவே எல்லார் முன்னாடியும்” என்றார் பெரியவர்.
“சொல்லிடுவேன் உங்களுக்கு தான் அசிங்கம் பரவாயில்லையா…” என்றாள் ரகசியமாய்.
அதில் பல்லைக் கடித்தவர் “நான் எந்த தப்பும் பண்ணலை. எதுவா இருந்தாலும் சொல்லு…”
“தாத்தா நீங்க பேசாம இருங்க, இவ ஏதோ உளறிட்டு இருக்கா. நீங்க டென்ஷன் ஆகாதீங்க…” என்றான் விஸ்வா முன்னே வந்து. என்ன இருந்தாலும் அவர் அவனின் தாத்தா அவரை தன் மனைவி பேசுவது தவறு தானே.
அவர் தப்பே செய்திருந்தாலும் இப்படி நிற்க வைத்து கேள்வி கேட்பது அவனுக்கு சரியாகப்படவில்லை. வயதில் பெரியவர் என்ற மரியாதை கூட அவளிடத்தில் இல்லை அதன் பொருட்டு தான் அப்படி பேசியிருந்தான்.
“நீ பேசாம அங்கிட்டு போடா…” என்றவர் அதுநாள் வரை அவனிடம் இப்படி பேசியதில்லை.
அப்படியொரு அடக்கப்பட்ட கோபம் இருந்தது அவர் வார்த்தையில்.
அதிர்ச்சியில் அவன் தாத்தா என்றிட “பேசாம போய்டு… உன்னை இதுக்கா நாங்க வளர்த்தோம். அவ இவ்வளவு பேசுறா அவளை அடிச்சு வெளிய துரத்தாம அவகிட்ட பேசிட்டு இருக்க நீ…”
“அவ நம்மை குடும்பத்தை கெடுக்க வந்திருக்கா அது கூட புரியாம அவளை நீ கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க…”
“உனக்கு கல்யாணமே பண்ண வேணாம்ன்னு தானே இருந்தோம். நீ எதுக்குடா அவளை கல்யாணம் பண்ணே… இவ வந்ததில இருந்து தான் இந்த குடும்ப நிம்மதி கொஞ்சம் கொஞ்சமா தொலைஞ்சு போச்சு…”
“நிதமும் ஒரு சண்டையை அண்ணன் தம்பிகளுக்குள்ள மூட்டிவிட்டு இவ வேடிக்கை பார்த்தா நீயும் இவ கூட சேர்ந்து ஆடுறே…” என்று அவர் மனதில் இருந்த கழிவுகளை கொஞ்சம் கொஞ்சமாய் வெளியில் கொட்ட ஆரம்பித்திருந்தார் அவர்.
ஏற்கனவே ஒருவர் மூலமாய் திருமண தடை பற்றி அவன் அறிந்திருந்தாலும் அதை தன் தாத்தாவின் வாய்மொழியாக கேட்கும் போது அவன் மொத்தமாய் நொறுங்கித் தான் போனான்.
சகுந்தலாவிற்கு அவன் முகத்தை பார்க்கவே முடியவில்லை. அவர் ஓவென்று கதறியழ இப்போது அனைவரும் அவரைத் தான் பார்த்தனர். “நீங்க எதுக்கு இப்போ அழறீங்க?? இதெல்லாம் உங்களுக்கு தேவை தான்” என்றாள் காஞ்சனா கொஞ்சமும் இரக்கமேயில்லாத குரலில்.
“தேவை தான் எனக்கு இது தேவை தான்…” என்று அவர் தலையில் அடித்து கொண்டு அழ விஸ்வா அவரை நோக்கிச் சென்றான்.
“அம்மா ப்ளீஸ்ம்மா அழாதீங்கம்மா… ப்ளீஸ்…”
“விஸ்வா நான் தப்பு பண்ணிட்டேன் விஸ்வா… என்னை மன்னிச்சிரு விஸ்வா…” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.
“நீ என்னம்மா தப்பு பண்ணே?? நாங்க தான் தப்பு பண்ணிட்டோம், உன்னை என் புள்ளைக்கு இரண்டாம் தாரமா கட்டி வைச்சது தான் நான் பண்ண தப்பு…”
“உன்னை கட்டினா சொத்து மொத்தமும் வருமேன்னு கட்டி வைச்சா… உங்கப்பன் அந்த குமரன் நாயி…”
“யோவ் இதுக்கு மேல பேசினே அசிங்கமா போய்டும் பார்த்துக்க, பெரிய மனுஷன்னு மனசுல ஒரு ஓரமா மரியாதையா இருக்கேன். என்னை கெட்ட வார்த்தை பேச வைச்சிடாதே…” என்று எகிறினாள் காஞ்சனா .
விஸ்வா என்று ஒரு மனிதன் அங்கு மற்றவர்களின் பேச்சால் கூனிக்குறுகிக் கொண்டிருந்தான். ஏற்கனவே அவன் அதிர்ந்து போயிருக்கிறான் இதில் தன் தாய் இரண்டாம் தாரமா என்ற அதிர்ச்சி வேறு சேர்ந்துக் கொண்டது.
“நீங்க ரெண்டு பேரும் முதல்ல வெளிய போங்க…” என்று கத்தினார் அவர் வெறிப்பிடித்தவர் போல்.
“தாத்தா நீங்க டென்ஷன் ஆகாதீங்க…” என்று கார்த்திக்கும், சரவணனும் அவர் உடன் நின்றனர்.
“செந்தில் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லி அவங்களை வெளிய போகச் சொல்லு…”
“அப்பா…” என்று அவர் ஏதோ சொல்ல வர “அதான் அப்பா சொல்றாருல” என்று ரத்தினம் தன் தம்பியை பேச விடாமல் தடுத்தார்.
கனகவேலும் “சொன்னதை செய் செந்தில்…” என்றார்.
அவர் திரும்பி சகுந்தலாவை பார்க்க அவர் தன் மகனைப் பார்த்தார். அதை புரிந்தவன் போல் அவன் எழுந்து நிற்க அவன் கரத்தில் அவர் கைக்கொடுத்தார் தூக்கிவிடச் சொல்லி.
அவர் எழ கைக்கொடுத்தவன் அங்கிருந்தோரை பார்வையால் அளந்தான், ஒன்றுமே பேசவில்லை, காஞ்சனாவை பார்க்க அவள் அழிச்சாட்டியமாக வரமாட்டேன் என்ற பிடிவாதத்துடன் அங்கே நின்றிருந்தாள் ஆங்காரமாய்.
“காஞ்சனா வா…” என்றான்
“நான் வரமாட்டேன்…”
“உனக்கு நான் வேணுமா, இல்லை இந்த சொத்து தானா…”
“விஷ்வா அவங்க…”
“வா…” என்றான் ஒற்றைச்சொல்லாய்.
அதற்கு மேல் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் வெளியேறப் போக “விஸ்வா…” என்ற குரல் தடுத்து நிறுத்தியது.
அழைத்தது சகுந்தலா, அவரை திரும்பி பார்த்தான். “என்னைவிட்டு எங்க போறே விஸ்வா??” என்றார் அவர் கண்களில் நீர்மல்க.
ஓடிவந்து அவரை தாங்கிக் கொண்டவன் “என்னம்மா பேசறீங்க நீங்க?? இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு முழுசா புரியலை. ஆனா பிரச்சனை என்னை வைச்சுன்னு மட்டும் புரியுது…”
“அதனால நான் வெளிய போறது தானே சரி. நீங்க எதுக்கும்மா வரணும், நீங்க இங்க தான் இருக்கணும்…” என்றான்.
“என்னை உன்னோட கூட்டிட்டு போய்டு விஸ்வா… இங்க வேணாம் இவங்க யாரும் எனக்கு வேணாம்… இது பணப்பேய்ங்க குடியிருக்க வீடு…”
“இவ்வளவு நாள் இங்க பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்திட்டேன், இனியும் இருக்க மாட்டேன் விஸ்வா, நான் உன்னோட வர்றேன்…” என்று அவர் அழ “நீங்க வேற எதுக்கு எங்க கூட வர்றீங்க??”
“நீங்க வந்தா மிச்சம் மீதி இருக்கற உயிரை கூட இவங்க வாங்கிடுவாங்க. அது தான் உங்களுக்கு வேணுமா… பேசாம போய்டுங்க…” என்று கத்தினாள் காஞ்சனா.
“நீ என்னடி சொல்றது என்னை வர வேணாம்ன்னு என் புள்ளை நான் கேக்கறேன், உனக்கென்ன…”
“உங்க புள்ளை இப்போ என் புருஷன்… நான் தான் கேக்கணும் வேற யார் அவருக்காக பேசுவாங்க… நீங்க பேசின லட்சணம் தான் தெரியுதே…”
“உங்க புள்ளைக்கு கல்யாணமே பண்ண வேணாம்ன்னு இவங்க நினைப்பாங்கலாம். அதைக்கேட்டு நீங்க ரசிப்பீங்கலாம், எப்படி உங்களால அப்படி கல்மனசா இருக்க முடிஞ்சுது…”
“இவர் என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னா நீங்க அப்படியே விட்டிருப்பீங்க அப்படி தானே…” என்று அவள் பேசிக் கொண்டே போக “வாயை மூடுடி…” என்று பெரிதாய் கத்தினார் அவர்.
சண்டை அத்தனையும் அவர்கள் காம்பவுண்ட் சுவருக்குள் தான் நடந்துக் கொண்டிருந்தது. பெரிய மதில் சுவர் என்பதால் வெளியில் யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இப்படி குடும்ப மானம் காற்றில் போகிறேதே என்று பதறிய ஒரு ஜீவன் தெய்வானை.
அவருக்கு தன் கணவர் பணம் ஒன்றே குறியாய் இருப்பவர் என்று தெரியும் தான். ஆனால் அது எந்த அளவிற்கு என்பது விஸ்வாவிற்கு திருமணம் செய்ய வேண்டாம் என்ற சொன்ன அன்று தான் அவர் உணர்ந்திருந்தார்.
அவரை எப்போதுமே எதிர்த்து பேசியிராத பெண்மணி என்பதால் அவரால் எதையும் வாய்விட்டு கேட்கவும் முடியவில்லை.
விஸ்வா அவர்களின் சொந்த பேரனாக இல்லாத போதும் அவனும் தங்களின் பேரனே என்று தான் அவர் எப்போதும் பாசம் காட்டியிருக்கிறார். அவன் திருமணம் முடிந்த போது அவர் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்.
“என்ன ரொம்ப பெரிசா சவுண்டு எல்லாம் விடறீங்க??” என்றாள் காஞ்சனாவும் விடாமல்.
விஸ்வாவோ அவளின் பேச்சில் கொதிப்படைந்தான். பெரியவர்கள் என்று மட்டுமரியாதை இல்லாமல் பேசும் அவளை அடித்துவிடும் ஆத்திரத்தோடு தான் அவளை நெருங்கினான்.
அதற்குள் சகுந்தலா “நீ யாருடி என்னை கேள்வி கேக்க??”
“ஹ்ம்ம் உங்க மருமக…” என்றாள் நக்கலாக.
“இவன் என் புள்ளை அதை யாராலும் மாத்த முடியாது…”
“இவர் உங்க பிள்ளைன்னு நானும் ஒத்துக்கறேன், அதை யாராலும் மாத்த முடியாது தான். ஆனா நீங்க எல்லாரும் சேர்ந்து அப்பாவை மாத்தி வைச்சிருக்கீங்களே…” 
சகுந்தலா பொறுத்தது போதும் என்று பொங்கியெழ ஆரம்பித்தார். “யார் சொன்னா உனக்கு அப்பாவை மாத்தினதா சொல்லுடி யாருடி சொன்னா??”
“அவனோட பர்த் சர்டிபிகேட்ல இருந்து எல்லாத்துலையும் என் புருஷன் வேலுவோட பேரு தான் இருக்கு…”. விஸ்வாவிற்கு தலை சுற்றியது அவன் அன்னையின் பேச்சை கேட்டு.
“சொல்லிட்டீங்களா அத்தை உங்க வாயால சொல்லிட்டீங்களா, இதை உங்க வாயால சொல்ல வைக்க இவ்வளவு போராட்டம் எனக்கு…” என்றாள் காஞ்சனா.
விஸ்வாவோ நீங்க எல்லாரும் விளையாட நான் தான் உங்களுக்கு கிடைச்சேனா என்ற பார்வை தான் பார்த்தான். அவனுக்குள் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த பாசம் எல்லாம் கூட மரித்து போயிருந்தது.
உயிர் கொண்ட பிணமாக தான் இருந்தான் அவன் இப்போது. இனி என்ன நடந்தால் என்ன என்ற நிலையில் தான் இருந்தான்.
—————————

Advertisement