Advertisement

2
தலையை மெல்ல உலுக்கிக் கொண்டு நிகழ்வுக்கு வந்தான் விஸ்வா. மதிய உணவு வேளை நெருங்கியிருக்க டேவிட் அவன் அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான்.
“மச்சான் பசிக்குதுடா… எவ்வளோ நேரமா நீ கூப்பிடுவ கூப்பிடுவன்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கறது… கொலைப்பசிடா…”
“சாரி டேவிட் கொஞ்சம் யோசனையா இருந்திட்டேன்”
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!! நண்பனே!!” என்று டேவிட் பாட “இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே!!” என்று சொல்லும் போது கொஞ்சம் விரக்தியாய் சொன்னான்.
“போதும் போகலாம் பசிக்குது…” என்று நண்பனை நடப்புக்கு கொண்டு வந்தான் டேவிட்.
இருவரும் அருகில் இருந்த ஒரு உணவகத்திற்கு சென்றனர். டேவிட்க்கு அசைவம் சொல்லிவிட்டு தனக்கு சைவம் ஆர்டர் செய்துக் கொண்டான் விஸ்வா.
“இன்னைக்கு நான்வெஜ் சாப்பிட மாட்டேன்னா என்னை எதுக்கு நீ இன்வைட் பண்ணே” என்றான் நண்பன்.
“உனக்கு பிடிக்கும்ல…”
“உன்னைய பார்க்க வைச்சு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்காதா…”
“நானும் சாப்பிட தானே போறேன். எனக்கும் ஆர்டர் பண்ணதுலாம் இப்போ வந்திடும்”
“ஆனா அது நான்வெஜ் இல்லையே”
“சரிடா இன்னொரு நாள் நாம சேர்ந்து வருவோம் திரும்பவும், ஓகே தானே… என்னமோ இன்னைக்கு தான் எல்லாம் புதுசு போல கேட்பான், பேசாம சாப்பிடுடா” என்று நண்பனை விரட்டினான் விஸ்வா.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு பதார்த்தங்கள் வந்துவிட இருவரும் தங்களுக்கு தேவையானதை பரிமாறிக் கொண்டு சாப்பிட்டனர்.
“விஸ்வா…”
“சொல்லுடா….”
“கேட்கறேன்னு தப்பா நினைக்காதே”
“நினைக்க மாட்டேன் சொல்லுடா…”
“நீ திரும்பவும் டிசைன்ஸ் பக்கம் வரணும்டா… இதை உன்னை நல்லா தெரிஞ்ச நண்பனா மட்டும் சொல்லலை. உன்னோட கலெக்ஷன்ஸ்க்கே தனி மதிப்பு உண்டுடா”
“அதை கண்கூட கண்டவன் அப்படிங்கற முறையில தான் சொல்றேன்… உன்னோட திறமையை ஏன் நீ பாதியில நிறுத்திக்கணும்”
“பழைய மாதிரி என்னை அவமானப்பட சொல்றியா??”
“அப்போ என்ன ஆச்சுன்னு மத்தவங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். கூடவே இருந்த எனக்கு தெரியும் தானே. அதையும் மனசுல வைச்சு தான் சொல்றேன்”
“உன்னோட வளர்ச்சியை யாராலையும் முடக்கிப் போட முடியாதுன்னு அவங்களுக்கு நீ நிரூபிக்க வேண்டாமா…”
“வேண்டாம்…” என்று ஒற்றை வார்த்தையில் முடித்தான்.
“கொஞ்சம் யோசிடா”
“ஹ்ம்ம்… பார்க்கலாம்…”
“இந்த முறை நாமே முன்னாடியே எல்லாத்துக்கும் பேடன்ட் எல்லாம் வாங்கிடலாம்…” என்று டேவிட் சொல்ல விஸ்வா சிரித்தான்.
“எதுக்குடா சிரிக்கறே??”
“நத்திங்…” என்றவன் “சாப்பிடு இந்த பேச்சு இப்போ பேச வேணாம்…” என்று முற்றுப்புள்ளி வைத்தான். டேவிட்டும் மேற்கொண்டு பேச்சை வளர்க்கவில்லை. இருவரும் சாப்பிட்டு மீண்டும் கடைக்கு திரும்பினர்.
அவன் ஒன்று நினைக்க கடவுள் வேறொன்று நினைத்து வைத்திருக்கிறார் போலும். அவன் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவனுக்கொரு அவகாசத்தை கொடுத்தார்.
மாலை நான்கு மணியாக விஸ்வா கடையில் இருந்து கிளம்ப ஆயத்தமானான். சகுந்தலா நேரமாக அவனை வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தார், கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று.
அறைக்கதவு தட்டப்பட டேவிட் உள்நுழைந்தான். “சொல்லுடா…”
“கிளம்பிட்டியா??”
“ஹ்ம்ம் ஆமா… அம்மா கோவில் போகணும்ன்னு வரச்சொன்னாங்க அதான்… எனிதிங் இம்பார்டன்ட்”
“இல்லை வந்து…”
“சொல்லு…”
“ஒரு கஸ்டமர் உன்னை கண்டிப்பா பார்க்கணும்ன்னு சொல்றார். பார்க்க கொஞ்சம் வசதியில்லாதவரா தெரியறார்”
“என்ன வேணுமாம் அவருக்கு??”
“நகை வாங்கத்தான் வந்திருக்கார்…”
“சரி காட்ட வேண்டியது தானே…”
“அதுக்கு முன்ன உன்கிட்ட பேசணுமாம். உன் பேரை தெளிவா சொல்லி பேசணும்ன்னு சொல்றார்…”
“எதுக்குன்னு சொல்லலையா??”
“இல்லை…”
“இதெல்லாம் நீ கேட்க மாட்டியா?? அப்புறம் நீ எதுக்கு இங்க இருக்கே??” என்று கொஞ்சம் எரிச்சலாகவே சொன்னான். கிளம்பும் நேரம் இப்படி ஒரு இடைஞ்சல் என்று தான் தோன்றியது.
“சாரி நான் அவர்கிட்ட நீ கிளம்பிட்டன்னு சொல்லிடறேன்” என்று அவன் வெளியே செல்லப் போக “வேணாம்… வேணாம் அவரை வரச்சொல்லு…” என்றான்.
வெளியே சென்ற டேவிட் மீண்டும் உள்ளே வந்த போது உடன் ஒருவரும் வந்தார். “வாங்க…” என்று எழுந்து நின்றான் விஸ்வா. “உட்காருங்க” என்று சொல்லி இருக்கையை காட்டினான்.
“வணக்கங்க… யான் தேங்காய் பட்டினத்துல இருந்து வருன்னு, நிங்களை பார்க்க வேண்டி…” என்று தமிழும் மலையாளமும் கலந்து பேசினார் வந்தவர்.
“சொல்லுங்க…”
“எனக்கு ஜோலி மீன் பிடிக்கறது… எண்ட மோளுக்கு உங்க கடையில நகை வாங்க வேண்டி வந்தது… இது காசு… எனக்கு ஒரு ரெண்டு பவுனில நகை எடுக்கணும்…”
“நான் டேவிட்டை உங்கக்கூட அனுப்பறேன். அவன் நல்ல டிசைன்ஸ் எல்லாம் காட்டுவான் உங்களுக்கு…”
“அவசரம் வேண்டாம் சேட்டா… யான் சொல்ல வந்தது எந்தா, எண்ட மோளுக்கு நீங்க ஸ்பெஷலாய்ட்டு டிசைன் செய்து தருமோ என்று விளிக்கான் வேண்டி வந்தது…”
“எண்ட மோள் இரண்டு திவசமாய் சொல்லிட்டுண்டு உங்க கடையில தான் நகை வாங்கணும் எண்டு…”
‘இதென்னடா புதுக்கூத்தாக இருக்கிறது’ என்ற ரீதியில் நடப்பதை வேடிக்கை பார்த்தான் டேவிட்.
அவனுக்கு தன் நண்பன் மீண்டும் மீண்டு வருவானாவென்ற அவா. இதற்கு விஸ்வா என்ன சொல்லப் போகிறான் என்று தான் பார்த்தான்.
“மோள் சொல்லியது நீங்க இப்போ புதுசா ஏதும் டிசைன்ஸ் செய்திட்டில்லா. பட்சே எனக்கொரு ஆசை எண்ட அம்மை கயல்விழியோட விருப்பம் நிறைவேத்தான் வேண்டி தான் நான் நிங்கள்ட்ட சோதிச்சது”
“நீங்களுக்கு இஷ்டமில்லாட்டி வேண்டாம் சேட்டா. என்ன இருக்கோ அது காட்டு… மோளுக்கு இங்க நகை வாங்கணும் அதான் ஆசை…” என்று முடித்தார் அவர்.
இருகைகளால் தலையை பிடித்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தான் விஸ்வா. தன்னை நம்பி இவ்வளவு தூரம் வந்திருக்கும் மனிதரை ஏமாற்ற அவன் மனம் விரும்பவில்லை. அதே சமயம் அவனால் மீண்டும் பழைய மாதிரி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
பலத்த யோசனையோடே அவனிருக்கும் வேளை எதிரிலிருந்தவருக்கு போன் வந்தது. அதை மகிழ்ச்சியுடன் எடுத்து அட்டென்ட் செய்தவர் பேசிவிட்டு இவனை அழைத்தார்.
“சேட்டா…”
“சொல்லுங்க…”
“எண்ட மோள் லைன்ல உண்டு. உங்கட்ட கொடுக்கணுமாம்” என்று நீட்ட ‘இதென்னடா புது தலைவலி’ என்று எண்ணியவாறே போனை வாங்கினான்.
“ஹலோ…”
“ஹலோ அண்ணா… நீங்க தான் பேசறீங்களா… ரொம்ப சந்தோசம் அண்ணா… உங்ககிட்ட பேசுவேன்னு நினைக்கலை…”
“அப்பா ரொம்ப நாளா காசு சேர்த்து எனக்கு இப்போ தான் நகை வாங்கி தரணும்ன்னு ஆசைப்பட்டார். நான் அவர்கிட்ட எப்பவோ சொல்லிட்டேன், எனக்கு எப்போ நகை வாங்கினாலும் அது உங்க கடையில தான் வாங்கணும்ன்னு”
“நான் எஸ்ஏ ராஜா என்ஜினியரிங் காலேஜ்ல படிக்கறேன் அண்ணா. ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கேன். அங்க என்னோட கன்னியாகுமரி நாகர்கோவில் பிள்ளைக எல்லாம் தங்கி இருக்காங்க…”
“அவங்க எல்லாம் ரொம்ப வசதியானவங்க. அடிக்கடி புதுசு புதுசா நகை போட்டு வருவாங்க. கேட்டா உங்க கடையில வாங்கினதுன்னு சொல்வாங்க. ரொம்பவும் யூனிக் டிசைன்ஸ்ன்னு சொல்வாங்க…”
அப்பெண்ணின் பேச்சில் சுத்தமான தமிழ் வாசம், எங்கோ சில இடத்தில் தான் மலையாளம் கலந்திருந்தது. படிப்பு முழுக்க ஹாஸ்டல் வாசமாகவே இருந்திருக்கும் போலும் என்று எண்ணிக்கொண்டான்.
“அவங்க சொல்றதை கேட்டு கேட்டு எனக்கும் ஒரு ஆசை, நகை வாங்கிப்போட்டா உங்க கடையில தான் வாங்கணும்ன்னு…”
“நீங்க இப்போ புது டிசைன்ஸ் எல்லாம் பண்றது இல்லைன்னு என் பிரண்டு சொன்னா. அதனாலென்ன அண்ணா உங்க கடையில வாங்கினேன்னு என் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லுவேன்…” என்று ஏதோ அவார்ட் வாங்கிய மகிழ்ச்சியில் பேசிகொண்டிருக்கும் அப்பெண்ணின் வெள்ளந்தியான மனதை எண்ணினான் அவன்.
எதிர்முனையில் இருப்பவன் அவள் பேசுவதை கேட்கிறானா இல்லையா என்பதை கூட உணராமல் அப்பெண் படபடவென்று பேசியிருந்தாள். வந்திருந்தவரின் முகத்தில் எந்தவித கல்மிஷமும் இல்லை.
உண்மையான மனிதராகவும் உழைப்பாளராகவும் தோன்றியது. போனில் பேசிய பெண்ணின் பேச்சும் அவனுக்கு பிடித்திருந்தது.
“நீ கவலைப்படாதேம்மா உனக்கு நான் ரொம்பவும் ஸ்பெஷலா டிசைன் பண்ணிக் கொடுக்கறேன், சந்தோசமா” என்று சொல்லி அப்பா பெண் இருவர் மனதை மட்டுமல்லாமல் டேவிட்டின் மனதை கூட குளிர்வித்திருந்தான் அவன்.
“சேட்டா காசு…” என்று எதிலோ அதை மொத்தமாய் அவர் கட்டி வைத்திருந்ததை கொடுத்தார்.
“இப்போ வேணாம்… எல்லாம் ரெடி ஆனதும் சொல்றேன் அப்போ வந்து வாங்கிக்கோங்க…”
“இல்லை சேட்டா இது சீட்டு கட்டி சேத்த காசு. வேற ஜோலிக்கு வேண்டி நானோ எண்ட மனைவியோ எடுத்திட்டா, வாங்கிக்கோ சேட்டா…”
“இதை அட்வான்ஸ் கணக்கில் சேர்த்தோ…” என்று அவர் சொல்ல அவன் டேவிட்டை திரும்பி பார்த்தான்.
“இதெல்லாம் பழக்கமில்லையே”
“சம்டைம்ஸ் நாம அட்வான்ஸ் வாங்குறது வழக்கம் தானே. அப்படியே இதை வாங்கிக்கோ, ஆனா கணக்குல வைக்காதே, உன் சொந்த பொறுப்புல இருக்கட்டும். உனக்கு இங்க ஒரு லாக்கர் இருக்குல அதுல வை…”
“ஹ்ம்ம் சரி…” என்றவன் அவர் கொடுத்த காசை வாங்கிக்கொண்டான்.
அந்த மனிதருக்கு அவ்வளவு சந்தோசம் அவன் கைப்பிடித்து நன்றி தெரிவித்தார். டேவிட்டுக்கும் நன்றி சொல்லி அவர் கிளம்பிவிட்டார்.
“என்ன அக்கறையோ??” என்றான் டேவிட்
“அக்கறை எல்லாம் ஒண்ணுமில்லை”
“அப்போ அந்த ஜகன்னாதன்க்கு என்ன பதில்”
“அதான் காலையிலேயே அவர்கிட்ட சொல்லிட்டனே”
“புல்லுக்கு பாயும் போது கொஞ்சம் நெல்லுக்கும் பாயட்டுமேடா” என்று பழமொழியை மாற்றி சொன்னான் அவன்.
“நெல் ஜகன்னாதன் இல்லை இப்போ வந்திட்டு போன மனுஷன் தான். அவருக்கு மட்டும் பாஞ்சா போதும்”
“இது தெரிஞ்சா அந்த மனுஷன் குதிக்க மாட்டாராடா”
“அதுக்கெல்லாம் நான் ஒண்ணும் பண்ண முடியாது. அவர் கொஞ்சம் மரியாதையா பேசியிருந்தா கூட இப்போ நான் கொஞ்சம் யோசிச்சாலும் யோசிச்சிருப்பேன்”
“அவர் எப்போ அப்பா, தாத்தான்னு இழுத்தாரோ அதுக்கு மேல அவருக்கு நான் எதுவும் செய்யறதா இல்லை” என்று முடித்தவன் அவன் அன்னைக்கு அழைத்தான்.
“என்னப்பா விச்சு கிளம்பிட்டியா, எங்கே இருக்கே??”
“இல்லைம்மா நான் இன்னைக்கு தக்கலைல தான் ஸ்டே பண்ணப் போறேன். கொஞ்சம் புது டிசைன்ஸ் வரையலாம்ன்னு இருக்கேன்…”
அதை கேட்ட சகுந்தலாவிற்கு சந்தோசம் தோன்றினாலும் கோவிலுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம்.
“அப்போ இன்னைக்கு நீ கோவில்க்கு வர மாட்டியாப்பா??” என்றார் அவர் கவலையாய்.
“வேணும்ன்னா இங்கவே பக்கத்துல இருக்க எதாச்சும் ஒரு கோவிலுக்கு வேணா போயிட்டு வர்றேன்ம்மா…” என்று முடித்துவிட்டு அவன் தாத்தாவிற்கும் அழைத்து மற்றவர்களுக்கும் தகவல் சொல்லிவிடச் சொன்னான்.
அவர்களும் இந்த நாளைத்தானே எதிர்பார்த்திருந்தனர். சந்தோசமாய் தலையாட்டி போனை வைத்தார் கனகவேல்.
முழுதாய் இரண்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் அந்த அறைக்கு செல்கிறான் அவன். கடையில் அவனுக்கென்று இருந்த பிரத்யேக அறைக்கு அடுத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.
அங்கு அவனுக்கு தேவையான அனைத்தும் இருந்தது. அவன் உபயோகப்படுத்தாமல் இருந்தாலும் அறை துடைக்கப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது.
டேவிட்டுக்கு அழைத்து அன்று அவனுடன் இருக்குமாறு சொல்லிவிட்டு அவனுக்கு டீயை வரவழைத்து தருமாறு கேட்டிருந்தான்.
அங்கிருந்த சேரில் சென்று அமர்ந்தவன் கண்களை மூடினான். மூடிய விழியில் மீண்டும் அவள், யாரால் அவன் இந்த அறைக்கே வராமல் போனானோ அவளின் முகம் அவனைப் பார்த்து சிரித்தது.
‘எத்தனை நாளைக்கு ஓடி ஒளிவ’ என்று சொல்வது போலிருந்தது அம்முகம். 
“ஐ யம் பேக் பார் யூ” என்று வாய்விட்டு சொன்னான்.
அந்த அறையில் அவனைத் தவிர யாருமில்லை. அதனால் அவன் மனக்குரலை உரக்கவே ஒலிக்கவிட்டான்.
“அட்லாஸ்ட் நீ நினைச்சதை சாதிச்சிட்ட பார்ப்போம் இந்த முறை ஜெயிக்க போறது நீயா நானான்னு…” என்றவனின் இதழ் கடையோரம் குறுஞ்சிரிப்பொன்று தவழ்ந்தது.
டேவிட் கதவைத்தட்டி டீ பிளாஸ்க்கை கொடுத்தான். விஸ்வாவிற்கு என்ன தேவை என்றாலும் அதை டேவிட் மட்டுமே செய்வான். கடையில் சின்ன சின்ன வேலைகளை செய்வதற்கு ஆளிருந்தாலும் அதை டேவிட் அனுமதிக்க மாட்டான்.
விஸ்வாவும் நண்பனை மட்டுமே எதிர்பார்ப்பான். “நான் ஒரு அரைமணி நேரம் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்”
“எதுக்குடா??”
“அம்மாவை சமைக்க சொன்னேன் நைட்டுக்கு…”
“நான் தான் வேலைன்னு வந்திட்டா சாப்பிட மாட்டேன்னு தெரியும்ல”
“எள்ளு காயலாம் எலிப்புழுக்கை எதுக்கு காயணும்” என்று அவன் சொல்ல சத்தமாய் சிரித்தான் விஸ்வா.
“சரி போயிட்டு வா… இப்போ இங்க யாரும் வரமாட்டாங்கல…”
“என்னைத்தவிர யாரும் வரவே மாட்டாங்க…”
“யார் கிளீன் பண்ணுவாங்க இந்த ரூமை… இவ்வளவு நீட்டா இருக்கு…”
“அன்னைக்கு பிறகு நான் மட்டும் தான் வந்து கிளீன் பண்ணுறேன் போதுமா…”
“தேங்க்ஸ்டா”
“நீயே வைச்சுக்கோ…” என்றுவிட்டு நகர்ந்தான் அவன்.
விஸ்வா ஜூவல் மேக்கிங்கில் ஆர்வம் கொண்டு அதை கற்று தேர்ந்தவன், சிறு வயதில் இருந்தே எதையும் வரைந்து பார்க்கும் ஆர்வமும் இருக்க முதலில் அவன் பார்த்ததை வரைந்தான்.
பின் கற்பனையாய் வரைய ஆரம்பித்தான். விடுமுறை தினங்களில் மற்ற பிள்ளைகள் ஒருவருக்கொருவர் விளையாட இவன் தாத்தாவுடனும், அப்பாவுடனும் நகைப்பட்டறையில் கழித்தான்.
முதலில் அவர்கள் செய்யும் நுணுக்கமான நகைகளின் வடிவத்தை வரைந்து பார்த்தவன், அவனாய் புதிது புதிதாய் வரையவாரம்பித்தான். 
அவன் கல்லூரி முடிக்கும் தருவாயில் அவன் வரைந்து வைத்திருந்ததை பார்த்த வீட்டு பெரியவர்கள் அவனின் விருப்பத்தை உணர்ந்து அவன் மேற்கொண்டு படிக்க அனுப்பி வைத்திருந்தனர்.
ஆரம்பத்தில் வெறும் விகே நகைக்கடையாக இருந்த அவர்களின் கடை இவன் ஒரு வருட படிப்பை முடித்து வரும் தருவாயில் சற்று பெரிதாய் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே அவர்களின் கடைக்கு நாகர்கோவிலிலும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே சிறிய அளவிலான கிளை இருந்தது.
இவன் திரும்பி வந்து இன்னும் புதிதாய் மாதிரிகளை வரைய ஆரம்பிக்க அதை வைத்து இவர்களின் கடை விகே தங்க மாளிகையாக உருவெடுத்தது.
அவன் மாதிரிகளை மட்டும் வரைந்து கொடுக்காமல் சில புது மாதிரிகளை அவனே உருவாக்கியுமிருக்கிறான்.
கணினியில் மாதிரிகளை அவன் எப்போதும் உருவாக்கியதில்லை. கையில் வரைந்து பின் கணினிக்கு மாற்றி தேவையான மாற்றங்களை மட்டும் செய்துக் கொள்வான் அவ்வளவே.
எதிரில் இருந்த போர்டில் வரைய ஆரம்பித்திருந்தான். ஆர்ப்பரிக்கும் கடலலை எழும்பிக் கொண்டிருக்க மீனவனொருவன் வலையை வீசுவது போல் வரைந்து முடித்திருந்தான்.
அவன் கணிப்புப்படி இதற்கு மூன்றில் இருந்து மூன்றரை பவுன் வரை ஆகும் என்று தோன்றியது. டேவிட் வந்ததும் அந்த மனிதர் கொடுத்த பணத்திற்கு மேற்கொண்டு ஆகும் செலவை தான் கொடுத்து விடுவதாக சொல்ல அவன் நண்பனை விசித்திரமாய் பார்த்தான்.
“அண்ணான்னு எவ்வளவு அன்போட கூப்பிட்டா தெரியுமா அந்த பொண்ணு…” என்றான் நண்பன் கேட்காமலே பதிலாய்.
“உனக்கு வீட்டில தங்கச்சி இருக்கு தானே அண்ணான்னு கூப்பிட அப்புறம் எதுக்கு உனக்கு வாடகை தங்கச்சி எல்லாம்…” என்று ஒரு திரைப்படத்தில் வருவது போல கூறினான் மற்றவன்.
“அவ என்னை அப்படி கூப்பிட்டதில்லை…” என்றான் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு.
“ஓகே லீவ் இட்… ஒண்ணு தான் வரைஞ்சியா… அதுக்கா விடிய விடிய உறங்காம இருந்தே”
விஸ்வா பதிலொன்றும் சொல்லாமல் லேசாய் சிரித்தான். ‘அப்போ வேறவும் வரைஞ்சு இருக்கான்’ என்று எண்ணிக்கொண்டான் டேவிட்.
அடுத்த ஒரு வாரத்தில் செய்தித்தாளின் முதல் பக்கத்தை அலங்கரித்திருந்தது அவன் வரைந்த மாதிரிகள். அனைத்தும் தங்க நகைகளாக உருப்பெற்று புகைப்படமாய் வெளி வந்திருந்தது…
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி

Advertisement