Advertisement

“நீ எங்கிருந்து வந்தே??”
அவர் கேள்வியே சொன்னது அவர் இவளைப் பற்றி தெரிந்தே தான் கேட்கிறார் என்று. 
அமுதன் ரேகா திருமணத்தின் போதே யாரேனும் கேட்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தாள். 
“உங்களுக்கு தான் தெரிஞ்சிருக்கே பாட்டி” என்றாள்.
“எதுக்காக??”
“அதுவும் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே??”
“வேணாமே…”
“வேணாம்ன்னு தானே போனோம். தேடி வந்து அடிச்சா தப்பில்லையா…”
பாட்டியிடம் பதிலில்லை பின் மெதுவாய் “சகுந்தலாக்கு தெரியுமா??” என்றார்.
“அதை நீங்க அவங்ககிட்ட தான் கேட்கணும்??”
“உனக்கு எதுக்கும்மா இதெல்லாம் நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழ வேண்டியவங்க. இந்த பழிவாங்குறது எல்லாம் வேணாம்மா…”
காஞ்சனா சிரித்தாள், பதில் பேசவில்லை.
“சரின்னு சொல்ல மாட்டியா…”
“உங்க வீட்டில பெண்களோட பேச்சுக்கு முக்கியமா மனைவியோட பேச்சுக்கு யாருமே மதிப்பு கொடுக்க மாட்டாங்கல்ல” என்றாள் அவள் சம்மந்தமேயில்லாமல்.
“எனக்கு உங்களை பிடிக்கும் பாட்டி… அதுக்காக நான் சரின்னு சொல்ல முடியாது…”
“அப்போ விஸ்வாவை கூட நீ…” என்று முடிக்கவில்லை அவர்.
அவர் சொல்ல வருவது புரிந்தவளாய் “அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்காகவும் நான் என்னோட எண்ணத்தை மாத்திக்க மாட்டேன்…” என்றாள்.
மாடியில் யாரோ வரும் அரவம் கேட்கவும் பாட்டி அப்புறம் நகர்ந்தார். இருவருமே மெது குரலில் தான் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர் செல்லும் முன் இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தார். ‘போயிட்டு வாங்க’ என்னும் பார்வை கொடுத்தாள் இவள்.
வீட்டின் ஆண் மக்கள் யாருமே விஸ்வா வீட்டிற்கு செல்வதில்லை கனகவேலை தவிர. பெண்கள் அங்கு சென்று வர யாரும் தடைவிதிக்கவில்லை. அதற்கு காரணம் கனகவேல் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
விஸ்வா பயந்தது போல் காஞ்சனா சமைக்க சிரமம் கொண்டிருக்கவில்லை. மிக நன்றாகவே சமைத்தாள்.
இரவு உணவு செய்து முடித்துவிட்டு காஞ்சனா விஸ்வாவை தேட அவன் வீட்டில் இல்லை. வெளி வராந்தாவிற்கு வந்து அவள் மாடியை பார்க்க அந்த கதவு திறந்திருந்தது.
ஒரு பெரு மூச்சுடன் உள்ளே சென்றவள் இருவருக்கும் தேவையானதை ஒரு கூடையில் எடுத்து வைத்துக் கொண்டு படியேறி வந்தாள்.
“இங்கயே வந்திட்டியா??”
“ஹ்ம்ம்…”
“கையில என்ன கூடை??”
“நைட் சாப்பிடலாம்ன்னு இங்கவே கொண்டு வந்திட்டேன்…” என்றாள்.
முழுநிலவு முடிந்து சில நாட்கள் கடந்திருந்தது. பிறை நிலவின் ஒளி கூட நல்ல வெளிச்சமாகவே இருந்தது.
“இங்கவே சாப்பிடவா!!” என்று ஆச்சரியப்பட்டவன் “நல்லா தான் இருக்கும்…” என்றான்.
“சாப்பிடறீங்களா கொஞ்ச நேரம் ஆகுமா…”
“சாப்பிடலாம்” என்று அவன் சொல்லிட இருவருமே ஒன்றாய் அமர்ந்து பரிமாறிக் கொண்டனர்.
கடற்காற்றின் ஓசை காதுகளை குளிர்விக்க தென்றல் உடலை தழுவ வயிறும் நிறைந்தது இருவருக்கும்.
“நான் இதை வைச்சுட்டு வர்றேன்” என்று அவள் எழ “நீ இரு நான் போறேன்…” என்றவன் அதை எடுத்துக் கொண்டு கீழே சென்றான்.
அவள் கைப்பிடி சுவரை பிடித்துக் கொண்டு தூரத்தே தெரிந்த சமுத்திரத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
விஸ்வா வந்திருந்தான் போலும், அவனின் இருப்பை உணர முடிந்தது அவளால். அவள் பின்னே வந்து நின்றிருந்தான் இப்போது.
“ரொம்ப அழகா இருக்குல்ல…”
“ஹ்ம்ம்…”
“எனக்கு எப்பவும் மொட்டை மாடிக்கு வந்து இப்படி கடலை பார்க்கறது ரொம்ப பிடிக்கும். பெரும்பாலும் நைட் தான் ரொம்ப பிடிக்கும் எனக்கு”
“மனசுக்கு ஏதோவொரு இதம் கொடுக்கற பீல் எப்பவும் எனக்கு”
“ஆர்ப்பாட்டம் நிறைஞ்ச கடல் அமைதியை கொடுக்குதுன்னு சொல்றீங்க…” என்றவள் அவனை நோக்கி திரும்பியிருக்க இருவரும் இன்னும் நெருக்கத்தில்.
“எனக்கு அப்படி தான். இந்த சத்தம் கேட்டே வளர்ந்ததாலயோ என்னவோ எனக்கு எப்பவும் இது தான் மனநிம்மதியை கொடுக்கும்…”
“ஆமா 2004ல சுனாமி வந்துச்சே அப்போ என்ன செஞ்சீங்க நீங்க எல்லாம்…”
“நெறைய சேதம் தான் இங்கல்லாம். நாங்க எல்லாம் அப்போ பெரிய வீட்டில தான் இருந்தோம். மாடிக்கு போய்ட்டோம் எல்லாரும். வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணி வந்திடுச்சு…”
“எல்லாம் சரி பண்ணவே ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு. எங்களைப் பத்தி எல்லாம் பிரச்சனையில்லை. பாவம் இங்க எவ்வளவோ பேருக்கு பொழைப்பு போச்சு. கஷ்டப்பட்டு தனக்குன்னு படகு வாங்கி வைச்சிருந்த எத்தனையோ மீனவர்களோட படகை இந்த ஆழி தனக்குள்ள எடுத்துக்கிட்டு போயிடுச்சு…”
“அதை பார்க்க பார்க்க மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. எனக்கு அப்போ வயசு கம்மி தானே. அதனால என்னால பெரிசா எதுவும் செய்ய முடியலை…”
“வீட்டில சொன்னேன். தாத்தா நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாங்க…”
“நீங்க அப்போ சென்னையில தானே இருந்தீங்க உங்களுக்கு எப்படி இருந்துச்சு??”
“ஹ்ம்ம் அங்க தான் இருந்தோம். ஆனா விவரம் ரொம்ப தெரியாத வயசு தானே. அப்பா தான் பாட்டி கிட்ட வீட்டில சமைக்க சொல்லி கொஞ்ச பேருக்கு சாப்பாடுலாம் எடுத்திட்டு போய் கொடுத்தாங்க… அவ்வளோ தான் எனக்கு ஞாபகம் இருக்கு…”
“என்னங்க பாய் எல்லாம் கொண்டு வந்திருக்கீங்க??”
“இன்னைக்கு இங்க படுக்கலாமா??” என்றான்.
“எனக்கும் இப்படி படுத்திட்டு வானத்தை பார்க்கறது அவ்வளவு பிடிக்கும். கடல் எப்படி பரந்து விரிஞ்சிருக்கோ அதே போல இந்த வானமும் பரந்து விரிஞ்சிருக்குல…”
“எண்ண முடியாத அளவுக்கு நட்சத்திரம் அதை முடிஞ்ச வரை படித்திட்டே எண்ணிட்டு இருப்பேன் நான். சென்னையில இவ்வளவு தெளிவா எல்லாம் தெரியாது”
இருவரும் பாயை விரித்து அருகருகே படுத்துக் கொண்டனர். மல்லாக்க படுத்திருந்தவன் இப்போது அவளைப் பார்த்தவாறே திரும்பிப் படுத்தான்.
“என்னங்க??” என்றாள் அவனைப் பார்க்காமலே.
“நீ என்னை விரும்பறியா காஞ்ச்சு??”
அவள் இப்போது அவனை திரும்பி பார்த்தாள், வழக்கம் போலத்தான் பதில் சொல்லவில்லை. ஒரு பெருமூச்சுடன் அவன் திரும்பி படுத்துக் கொண்டான்.
மறுநாள் விடிந்த பொழுது நல்ல பொழுதாய் இருக்கவில்லை. விஸ்வா அன்று தாமதமாகத் தான் கடைக்கு கிளம்பிக் கொன்டிருந்தான்.
முதல் நாள் வெகு நேரமாக தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தவன் விடியும் தருவாயில் தான் உறங்கிப் போயிருந்தான்.
அதனால் காலையில் நேரமாகி போயிருந்தது. காலை உணவை முடித்து அவன்  கடைக்கு தயாராகி வெளியில் வர கார்த்திக் வேகமாய் வந்து அவன் சட்டையை பிடித்தான்.
“பொய் சொல்றியாடா??” என்று.
கார்த்திக்கின் சத்தம் கேட்டு காஞ்சனா வெளியில் ஓடிவர பெரிய வீட்டில் இருந்தும் அனைவரும் வந்துவிட்டனர் அங்கு.
“என்னாச்சு கார்த்தி எதுக்கு இப்போ அவன் சட்டையை பிடிக்கறே?? அவனை விடு…” என்றார் கனகவேல்.
“எதுவா இருந்தாலும் பேசிக்கலாம், விடு கார்த்தி…” என்றார் செந்தில்வேல்.
சொன்னதோடு நில்லாமல் கார்த்திக்கின் கரத்தை விஸ்வாவிடமிருந்து விடுவிக்க அவர் முயற்சி செய்ய கார்த்திக் வலுவாய் பிடித்திருந்தான்.
“நீங்க தள்ளி நில்லுங்கப்பா…” என்று செந்திலை பார்த்து சொன்னவன் “கை எடுங்கண்ணா…”
“முடியாதுடா…” என்றான் அவன்.
“எடுக்கலைன்னா அசிங்கமாகிப் போகும்…” 
“யாருக்கு??”

“உங்களுக்கு தான்…”
“நீ தான் ஏற்கனவே இந்த குடும்பத்தையே அசிங்கப் படுத்திட்டியேடா…”
“கையை எடுடா” என்று சொல்லிய விஸ்வா என்றவன் கார்த்திக்கை பிடித்து கீழே தள்ளினான்.
அதில் இன்னும் வெகுண்டவன் எழுந்து வந்து அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தான். காஞ்சனா இப்போது முன்னே வந்தாள். “கையை எடுடா??”
“வாடி உன்னைத் தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன். எப்படி எப்படி அந்த கடையை நாங்க கேட்டா இவங்க கொடுக்க மாட்டேன்னு சீன் போடுவாங்களாம்”
“அதெப்படிடி அந்த கடையே உங்களது இல்லை, இதுல தர மாட்டேன்னு வேற சீன் போட்டே?? கூடவே இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருக்கான் பாரு. இவனும் என்னமா பேசுனான்…”
“இதுல தனிக்குடித்தனம் அப்படி இப்படின்னு சீனு வேற…”
“என்னடா சொல்றே?? அப்போ அந்த கடை இவங்களோடது இல்லையா??” என்றார் ரத்தினவேல் ஆங்காரமாய்.
“இல்லைப்பா எல்லாம் பொய்… இதுங்க ப்ராடுங்கப்பா… என் பிரண்டு இன்னைக்கு நேத்து கடைக்கு போயிருக்கான் நகை எடுக்கலாம்ன்னு. நான் தான் இந்த கடைக்கு போகச் சொல்லி அவனுக்கு சஜஸ்ட் பண்ணேன்…”
“அவன் இப்போ தான் எனக்கு போன் பண்ணான். அந்த கடை இவங்கது இல்லைன்னு. அந்த பிராடு அமுதன் கடையில வேலை பார்க்குறானாம்… நம்மளை நல்லா ஏமாத்தியிருக்காங்கப்பா…”
“அவன் நேத்து பண்ணும் போது ஏதோ டவுட்டா சொன்னான். நான் தான் நல்லா உறுதியா தெரிஞ்சுட்டு சொல்லுடான்னு சொன்னேன். அவன் விசாரிச்சு சொல்லிட்டாப்பா…”
“டேய் கார்த்தி, நீ என்னடா அவன் சட்டையை பிடிச்சுட்டு கொஞ்சிட்டு இருக்க… ரெண்டு பேரும் வீட்டை விட்டு அடிச்சு துரத்துடா… இதுக நம்ம கண்ணு முன்னாடியே இருக்கக்கூடாது…” என்றான் சரவணன்.
“நீங்க பேசாம இருங்க, நான் என்னன்னு கேட்கறேன், பொறுமையா பேசுவோம்…” என்றார் செந்தில்வேல். 
“சித்தப்பா இனிமே எல்லாம் பொறுமையா இருக்க முடியாது. இவங்க இங்க இருக்கவே கூடாது. இவன் அந்த டிசைனை இவ மேல உள்ள மோகத்துனால இவளுக்கு தூக்கி கொடுத்திட்டு நம்மகிட்ட டிசைன் டிசைனா பொய் சொல்லி இருக்கான்…”
“அப்பா நீங்க பேசுங்க…” என்று செந்தில்வேல் கனகவேலை பார்க்க அவரும் அதீத கோபத்தில் இருப்பது அவரின் முக இருக்கத்திலேயே தெரிந்தது.
“சித்தப்பா உங்க புள்ளைக்கு நீங்க ஒண்ணும் சப்போர்ட் பண்ண வேணாம்…”
“கையை எடு கார்த்தி??” என்று அழுகையோடு சொன்னார் சகுந்தலா.
“முடியாது சித்தி…”
இப்பொது சரவணனும் வந்திட இருவருமாய் அவனை வெளியே தள்ளப் போக “யாரைடா வெளிய போக சொல்றீங்க பிச்சைக்கார பயலுகளா…” என்று காளியாய் நின்றிருந்தாள் காஞ்சனா.
“உன் புருஷனை தான். வேற யாரைடி சொல்வாங்க. அவனோட சேர்ந்து நீயும் போடி… அப்புறம் என்ன சொன்ன பிச்சைக்காரப் பயலுகளா… யாரு நாங்களா நீங்க வெளிய போய் பிச்சை எடுங்க…” என்றான் சரவணன்.
“நீ போய் எடுடா நாங்க ஏன் பிச்சை எடுக்கணும்??”
“இது யாரோட சொத்துன்னு  நினைச்சுட்டு பேசறீங்க??”
“என்னடி சொத்தை பத்தியெல்லாம் பேசறே?? இது எங்க சொத்துடி…”
“த்தூ… சொத்தாம்லா சொத்து… உன் சொத்து இது… உனக்கு தெரியுமா இது யாரோட சொத்துன்னு இந்த சொத்து முழுக்க அவரோடதுடா”
“அவருக்கு மட்டும் தான் சொந்தம், அவரு பார்த்து உங்களுக்கு பிச்சை போட்டாதான் உண்டு… உனக்கு சந்தேகமா இருந்தா இந்தா நிக்கறாரே பெரிய்ய்ய மனுஷன் இவர்கிட்ட கேளு” என்று காஞ்சனா சொல்ல விஸ்வா மட்டுமல்லாமல் அங்கிருந்த ஒரு சிலரும் அப்படியே சிலையாய் நின்றனர்.

Advertisement