Advertisement

19
முதல் நாள் சண்டைக்கு பிறகு மறுநாள் இருவருக்குமே ஒரு சவாலான பொழுதாகவே விடிந்திருந்தது. தனித்து சமைக்க போகிறோம் என்று சொல்லியாயிற்று. அதற்கு தேவையானது எதுவுமே அந்த வீட்டில் இல்லை.
“காஞ்ச்சு…”
“சொல்லுங்க…”
“இல்லை வீட்டில எந்த திங்க்ஸ் இல்லை, இன்னைக்கு காலையில டிபன் நான் கடையில வாங்கிட்டு வந்திடறேன், ஈவினிங் சீக்கிரம் வந்து நமக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வர்றேன். நாளையில இருந்து நாம இங்கவே சமைச்சுக்கலாம்…” என்றான்.
“இங்க அடுப்புல இருந்து எல்லாமே இருக்கு… நமக்கு இப்போ தேவை ப்ரொவிஷன்ஸ் தான். நாம ரெண்டு பேருமே இன்னைக்கு வெளிய போய் டிபன் சாப்பிட்டு வருவோம்…”
“வரும் போது இப்போதைக்கு அவசரமா தேவைக்கு என்ன வேணுமோ அதை மட்டும் வாங்கிட்டு வந்திடலாம். நீங்க அப்படியே கடைக்கு கிளம்பறதுன்னா கிளம்பிடுங்க. நான் ஆட்டோல வீட்டுக்கு வந்திடுவேன்…”
“தம்பி வாங்கி கொடுத்ததுல கரன்ட் அடுப்பு இருக்கு. அதுல நான் சமைச்சுக்குவேன். வீட்டில பிரிட்ஜ் இருக்கு, காய்கறி எல்லாம் வாங்கி அதுல வைச்சிடலாம்…”
“முடியுமா உன்னால…”
“ஏன் முடியாது??”
“நீ… நீ சமைப்பியா??” என்றான்.
“கிரேட் இன்சல்ட் விஷ்வா…”
“நிஜமா எனக்கு தெரியாம தான் கேட்டேன்…”
“இன்னைக்கு என் கையாள நான் உங்களுக்கு சமைச்சு கொடுக்கப் போறேன். நீங்க சாப்பிட்டு சொல்லுங்க ஓகே வா…” என்றாள் அவள்.
அவனுக்கு அவள் எப்படி செய்வாளோ என்ற கவலை இன்னமும் இருந்தது. அவள் எப்படி காய்கறி நறுக்குவாள், சாதம் வடிப்பாள் ஒரு கையால் அவளால் செய்ய முடியுமா என்று தோன்றினாலும் எதுவும் சொல்லி அவளை காயப்படுத்திவிடுவோமோ என்று அமைதியாய் இருந்தான்.
அவன் அமைதி அவளுக்கு புரிந்தது. “விஷ்வா என்னால முடியும்… நான் செஞ்சிருக்கேன். கண்ணில்லாதவன் கண்ணில்லையேன்னு ரோட்ல நடக்காமலா இருக்காங்க”
“அப்படித்தான் எல்லாமே எனக்கு கையே இல்லாம போகலை, கொஞ்சம் விளங்காம போயிருக்கு அவ்வளவு தான். அதை வைச்சு நான் ஊருக்கே சமைச்சு போடுவேன். உங்களுக்கு போட மாட்டேனா…” என்றாள் அவள்.
அவள் விளங்காம போயிருக்கு என்று சொன்னது அவனுக்கு அவ்வளவு வலித்தது. மெதுவாய் அவளிடம் கேட்டான், “உனக்கு எப்போ இப்படி ஆச்சு, பிறந்ததுல இருந்தேவா??”
“ஹ்ம்ம் ஆமா, போலியோ அட்டாக்…”
“ட்ரீட்மென்ட் செய்யலையா??”
“பணமில்லை விஷ்வா…” என்று அவள் சாதாரணமாய் சொல்லிவிட்டாள் அவனுக்கு தான் ரணமாகிப் போனது அந்த வார்த்தையில்.
“யார்கிட்டயாச்சும் கேட்டிருக்கலாம்ல…”
“செய்நன்றி மறந்தவங்க விஷ்வா அவங்க எல்லாம். மனிதாபிமானம் கூட இல்லாதவங்க, எங்கப்பாவை காசில்லைன்னு விரட்டிட்டாங்க…”
“அப்பா ரொம்ப மான ரோஷம் பார்ப்பாரு. மருந்துக்கு கூட உதவிக்கு யாருமில்லாத இந்த ஊரு வேணாம்ன்னு ஊரைவிட்டு போயாச்சு…” என்றாள் எங்கோ பார்த்து.
“என்ன சொன்னே காஞ்ச்சு?? அப்போ நீங்களும் இதே ஊர் தானா??”
அவன் கேட்டதும் ஏதோவொரு எண்ணத்தில் கடகடவென பதில் சொல்லியவள் பிறகு தான் யோசித்தாள் தான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று.
“ஹ்ம்ம் ஆமா இதே ஊரு தான்…”
“எங்கே??”
“வேணாம் விஷ்வா அதெல்லாம் நான் நினைச்சு பார்க்க விரும்பலை. நாம இதைப்பத்தி இப்போ பேச வேணாம்…” என்று முடித்துவிட்டாள் அவள்.
அதன்பின் இருவருமாய் சென்று அவள் சொன்னது போல சாப்பிட்டு வீட்டிற்கு தேவையானதை வாங்கிக்கொண்டு வந்தனர். அவனே வீடு வரை கொண்டு வந்து அவளை விட்டுவிட்டு தான் கடைக்கு சென்றான்.
வீட்டு ஆண்கள் எல்லாரும் கடைக்கு கிளம்பிச் சென்றிருக்க பெண்கள் மட்டுமே இருந்தனர் பெரிய வீட்டில். போன் பேசிக்கொண்டே வெளியே வந்திருந்த ரம்யா இவர்கள் வருவதை கண்டுவிட்டு அருகே வந்தாள்.
“அதை இப்படி கொடு காஞ்சனா…” என்றாள் அவள்.
“இல்லை நானே…” என்றவள் நிமிர்ந்து தன் கணவன் முகம் பார்த்தாள்.
“விஸ்வா எதுவும் சொல்ல மாட்டார் நீ கொடு…” என்றவள் உரிமையாய் அவளிடமிருந்த பொருட்களை வாங்கிக் கொண்டாள்.
“உங்களுக்கு சண்டைன்னா அது அவங்களோட நமக்குள்ள அதெல்லாம் எப்பவும் வேண்டாம்…” என்று சொல்லிக்கொண்டே அவர்களுடன் நடந்த ரம்யா, பெரிய வீட்டை தாண்டும் போது “சௌம்யா” என்று குரல் கொடுத்தாள்.
“காலையில இருந்து நீ வரலையா எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப போர் காஞ்சனா…” என்று அவள் பாட்டுக்கு பேச சௌம்யாவும் வந்தாள் இப்போது.
விஸ்வா அவர்களை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ரம்யாவும் சௌம்யாவும் அவனிடமே எப்போதுமே அதிகம் பேசியதில்லை.
அவர்களுமே அவனிடத்தில் நின்று பேசியதில்லை எனலாம். ஒரே ஒரு முறை அவன் எதற்கோ நின்று பேசி கொண்டிருக்க அப்போது அங்கயற்கண்ணி அதை பார்த்துவிட்டு பேயாட்டம் ஆடித்தீர்த்தார்.
உங்க மாமா இதெல்லாம் பார்த்தா தப்பா எடுத்துக்குவாரு. மாமன் பையன் அத்தை பொண்ணா இருந்தாலும் பேசக் கூடாது அது இதென்று சொல்லிவிட சகுந்தலா அவனிடம் சொல்லிவிட்டார் இனி அவர்களிடம் எப்போதுமே பேசக்கூடாது என்று.
ரம்யாவும் சௌம்யாவும் அவனின் அண்ணன்களை திருமணம் செய்த பிறகும் கூட அவன் அவர்களிடத்தில் பேசியதில்லை.
“காஞ்ச்சு இன்னைக்கு உன்னைய பார்க்காம ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு தெரியுமா. நீ வரலைன்னா என்ன நாங்க இனிமே அங்க வந்து உன்னை பார்த்திட்டு போறோம். யாருக்கும் தெரியாம…” என்று ரகசிய குரலில் சொன்னாள்.
“ஏன் தெரியாம வரணும், தெரிஞ்சே வாங்க… யாராச்சும் கேள்வி கேட்டுடுவாங்களை என்னை…” என்றாள் இவள்.
விஸ்வா அவளின் பதிலில் சிரித்துக் கொண்டான். இவளை யாராச்சும் கேள்வி கேட்டிட முடியுமா என்ன என்று.
அன்றே சகுந்தலாவும் அவளைப் பார்க்க வீட்டிற்கு வந்துவிட்டார். ரம்யாவும் சௌம்யாவும் அவளுக்கு ஒத்தாசை செய்துக் கொண்டிருக்க அதை பார்த்த சகுந்தலா “உங்களை அக்கா கூப்பிடுறாங்க நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
காஞ்சனா அவர் வந்ததை பார்த்தே தானிருந்தாள். ஆனாலும் ஒன்றும் கேட்கவில்லை, பேசவுமில்லை அவள்.
“உன்கிட்ட பேசணும்…”
அவள் இப்போதும் திரும்பிக் கூட பார்க்கவில்லை அவரை. தன் போக்கில் அவள் கைகள் வேலை செய்துக் கொண்டிருந்தது. “காஞ்சனா…” என்றார் அழுத்தமான குரலில்.
மெதுவாய் திரும்பி அவரை பார்த்தாள். “உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்கே??”
“உங்களை நான் நினைக்கவேயில்லையே” என்றாள் நக்கல் குரலில்.
“எனக்கு தெரியும் நீ யாருன்னு??”
“அய்யோ கண்டுப்பிடிச்சிட்டீங்களா…” என்றவள் லேசாய் கை தட்டினாள்.
“நீ யாருன்னு எனக்கு தெரியாம இருக்குமா??”
“உங்களுக்கு எங்களை தெரிஞ்சு இருக்கறதே அதிசயமான விஷயம் தான்…”
“போதும் காஞ்சனா குத்திக்காட்ட இது நேரமில்லை…”
“நான் யாரு உங்களை குத்திக்காட்ட”
“நான் உன்னோட அத்தை…”
“விஸ்வாவோட அம்மா தானே…”
“ஆமா விஸ்வாவோட அம்மா தான்”
“உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு காஞ்சனா…”
“நான் கேட்கிறதை உங்களால கொடுக்க முடியாது. தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க, எனக்கு உங்களை பார்க்க பார்க்க ரொம்ப கோபம் வருது…”
“விஸ்வாவோட அம்மாவாச்சேன்னு பார்க்கறேன். இல்லைன்னா ஏதாச்சும் சொல்லிடுவேன் உங்களை… போங்க இங்க இருந்து…” என்று அவள் கத்திய கத்தலில் அவர் அமைதியானார்.
“நான் பேசலை வேற ஏதும் நான் பேசலை. நான் உனக்கு ஹெல்ப் பண்ணிட்டு போய்டறேன்…” என்று சொல்லி அவர் உதவப்போக “நீங்க போகலைன்னா இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது…” என்று அவள் போட்ட கூச்சலில் ரம்யாவும் சௌம்யாவும் வந்திருந்தனர் அங்கு.
“என்னாச்சு காஞ்சனா??”
“இல்லை அத்தையை வேலை பார்க்க வேணாம் ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னேன், கேக்கலை. அதான் கொஞ்சம் சத்தமா சொல்லிட்டேன்…” என்றாள் அவள்.
“அவ்வளோ தானா நான் என்னவோ ஏதோன்னு பயந்திட்டேன்” என்றாள் சௌம்யா. சகுந்தலா அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
கடைக்கு சென்றிருந்தான் விஸ்வா. போகலாமா வேண்டாமா என்று தானிருந்தான். ஒரேடியாய் வீட்டினரை கஷ்டப்படுத்த அவன் விரும்பவில்லை.
காலையிலேயே கனகவேல் இவனை தேடிக் கொண்டு வந்தார். முதல் நாள் நடந்ததிற்கு மன்னிப்பு கேட்கவென்று.
வீட்டின் பெரிய மனிதரே தன்னை தேடி வந்து மன்னிப்பு கோரும் போது அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை.
கடைக்கு அவன் கண்டிப்பாய் செல்ல வேண்டும் என்று பெரிய வீட்டிற்கு வந்து போக வேண்டும் என்று அவர் சொல்ல “கடைக்கு வேணா போறேன் தாத்தா… ஆனா அந்த வீட்டுக்கு நான் வரலை…” என்று மறுத்தான் அவன்.
“அப்போ நீ என்னை மன்னிக்கலை…”
“அப்படியில்லை தாத்தா என்னை பார்க்க பார்க்க அவங்களுக்கு கோபம் வரும் வேண்டாம். நான் இப்படியே இருக்கேன், கொஞ்ச நாளைக்காச்சும்…” என்று சொல்லி முடித்துவிட்டான்.
எப்போதும் வீட்டினர் யாருமே அவனை எதிர்த்து பேசியதே கிடையாது. அவனுமே யாரையுமே எதிர்த்து பேசியதில்லை. அவனின் முடிவுக்கு எப்போதும் எல்லாருமே சரியென்று தான் சொல்வர்.
அவன் முடிவுகள் சரியாய் இருக்கும் என்று கனகவேல் முதல் அனைவருக்குமே அவன் மீது நம்பிக்கை எப்போதும்.
அன்றைய பேச்சில் ரத்தினவேல், செந்தில்வேலும் கூட தங்களை விஸ்வா மதிக்கவில்லை என்று கோபத்தில் தான் இருந்தனர், அதனாலேயே அவர்கள் கனகவேலுடன் வந்திருக்கவில்லை.
எப்போதும் போல் அவன் கடைக்கு மட்டும் சென்று வந்துக் கொண்டிருந்தான். காஞ்சனா அன்று அவன் தந்தை வேலு என்று சொன்னதில் இருந்து மனதில் ஏதோ ஒரு பாரம் அவனை அழுத்தியது. அவள் அந்த வார்த்தைக்கு பின் மேற்கொண்டு எதையுமே சொல்லவில்லை.
அவனுமே கேட்கும் மனநிலையில் அன்றில்லை. செந்தில்வேலை தான் வேலு என்று சொல்கிறாள் என்று கூட தோன்றியது.
பிறகு அவள் தான் தெளிவாய் சொன்னாளே செந்தில்வேல் உங்க அப்பா பேரு இல்லை என்றது ஞாபகம் வர அவனுக்குள் பெரும் குழப்பமும் மனப்போராட்டமும் ஆரம்பமாகியது.
தன்னை இவர்கள் எடுத்து வளர்க்கிறார்களோ என்ற ரீதியில் தான் அவன் எண்ணம் போனது. அவனுக்கு எங்கே தெரியப் போகிறது இவன் கனகவேலின் தம்பி கதிர்வேலின் பேரன் என்று.
காஞ்சனா மொட்டை மாடியில் துணியை உலர்த்திக் கொண்டிருந்தாள். எதிர் மாடியில் பாட்டி நின்றிருந்தார் இவளையே பார்த்துக் கொண்டு.
“காஞ்சனா…” என்று இவளை அழைத்தார்.
அவரின் குரலில் திரும்பி பார்த்தவளுக்கு பாட்டியின் இந்த அவதாரம் புதிதாய் தெரிந்தது. எப்போதும் அவளிடம் கலகலப்பாக பேசிய அவரை தான் பார்த்திருக்கிறாள்.
சில நாட்களாகத் தான அவரிடம் ஏதோ மாற்றம். அது இப்போதும் தொடர்ந்தது.
“சொல்லுங்க பாட்டி”
“உன்கிட்ட பேசணும்…”
“பேசுங்க…”

Advertisement