Advertisement

18
“தம்பி… தம்பி…” என்ற குரல் தடுக்க கடைக்குள் நுழையச் சென்றவன் திரும்பி பார்த்தான். அங்கிருந்தவரை எங்கோ பார்த்தது போல இருந்தது.
“என்ன தம்பி என்னை அடையாளம் தெரியலையா??”
“பார்த்தா மாதிரி இருக்கு, சாரிங்க ஞாபகமில்லை…”
“நான் உங்களுக்கு தூரத்து சொந்தம் தான் தம்பி, மாமா முறையாகணும். உங்க பெரியம்மா எனக்கு அக்கா முறையாவுதுங்க…”
“ஓ!!”
“என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க??”
“என்ன பண்ணேன்??”
“திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னுட்டீங்க??”
“அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்??” என்றான்.
“எனக்கொண்ணும் கஷ்டமில்லை தம்பி, உங்களை எங்க வீட்டு மாப்பிள்ளையாக்கிகணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேங்க… உங்க வீட்டில கூட வந்து பேசினேன்…”
“இதை எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க??”
“அதுக்கில்லை தம்பி, அப்போ நீங்க கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னு சொல்லிட்டீங்கன்னு சொன்னாங்க. அதனால உங்களுக்கு கல்யாணமே பண்ணுற ஐடியால இல்லைன்னும் வீட்டில சொன்னாங்க…”
“அதான் தம்பி கஷ்டமா போச்சு. அதுக்கு பொறவு நானும் ஒண்ணும் கேட்டுக்கிடலைங்க…” என்றார்.
‘என்ன நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னு சொன்னேனா?? அப்படி நான் வீட்டில என்னைக்குமே பேசலையே??’
‘அம்மா என் கல்யாண விஷயம் பேசினப்போ கூட சரின்னு தானே சொன்னேன். வீட்டில ஏன் அப்படி சொன்னாங்க…’ அவனுக்குள் பெரும் குழப்பம் வியாபித்தது.
“என்ன தம்பி அமைதியாகிட்டீங்க?? நீங்க காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா தம்பி. அதான் அப்போ கல்யாணம் வேணாம்ன்னு சொல்லியிருப்பீங்க போல…” என்று அவரே பதிலும் சொல்லிக்கொண்டார்.
“சரிங்க தம்பி நான் கிளம்புறேன். வீட்டில எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க…”
“சரிங்க மாமா…” என்றவன் “ஒரு நிமிஷம் மாமா…”
“சொல்லுங்க தம்பி…”
“கடைக்கு வாங்க அப்படியே வெளியவே பேசி அனுப்பின மாதிரி இருக்கு…”
“பரவாயில்லைங்க தம்பி. உங்களை பார்க்கவும் ஒரு ஆதங்கத்துல கேட்டுட்டேன். நீங்க வேலையா இருப்பீங்க, அதை நான் கெடுக்க விரும்பலைங்க… நீங்க போங்க, இன்னொரு நாள் பார்ப்போம் தம்பி…”
“சரிங்க மாமா போயிட்டு வாங்க… இன்னொரு நாள் நீங்க கண்டிப்பா வரணும்…” என்றான்.
“கண்டிப்பா வர்றேங்க தம்பி…” என்றுவிட்டு அவர் கிளம்பினார்.
‘என்னை சுத்தி என்ன தான் நடக்குது, யார் யாரோ என்னை வைச்சு விளையாடுறாங்க… யாரு தான் எனக்கு உண்மையானவங்க, கட்டின பொண்டாட்டில இருந்து யாருமே உண்மையானவங்க இல்லை. கடவுளே கண்ணை கட்டி காட்டில விட்ட மாதிரி இருக்கு இப்போ’
‘வீட்டில எல்லாரும் பணத்தாசை பிடிச்சவங்கன்னு தெரியும். ஆனா எவ்வளவு மோசமா யோசிக்கறாங்க, நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு அவங்க பணப்பைத்தியம்”
ஒரு மாதிரி சோர்ந்த மனநிலையோடு இருந்தான் அவன்.
“ஹலோ ரேகா…”
“அம்மா எப்படிம்மா இருக்கீங்க??”
“நல்லா இருக்கேன்டா, பாட்டி நல்லாயிருக்காங்களா?? மாப்பிள்ளை எப்படி இருக்காங்க??”
“எல்லாரும் நல்லாயிருக்காங்கம்மா…”
“கேளு… அவகிட்ட சொல்லு…” என்று பின்னால் இருந்து செந்தில்வேலின் குரல் கேட்பது மறுமுனையில் இருந்த ரேகாவிற்கு தெளிவாய் கேட்டது.
“என்னாச்சும்மா அப்பா என்கிட்ட என்ன கேட்க சொல்றாங்க??”
“அது ஒண்ணுமில்லைம்மா, உங்க கடை பத்தி தான்…”
“அதுக்கென்ன இப்போ??”
“இல்லை மாமா உங்க கடையை நம்ம கடையோட சேர்த்திடலாம்ன்னு பிரியப்படுறாங்க… தவிர இங்க நம்ம கடைக்குன்னு ஒரு மரியாதை இருக்கு இல்லையா… சென்னையில நமக்கும் ஒரு கடை இருந்தா நல்லது தானே…”
“அப்போ சென்னையில கடை ஆரம்பிக்க போறீங்களா??”
“அதில்லைடா… புதுசா ஆரம்பிக்கறதை விட உங்க கடையை நம்ம கடையோட இணைக்கலாம்ன்னு…”
“யாருக்கு வந்த ஐடியா இது??”
“அதான் சொன்னேனே தாத்தா…”
“அதெல்லாம் ஏன் நீ சொல்றே?? நீ கேக்குற மாதிரியே கேட்க வேண்டியது தானே…” என்று செந்தில்வேல் பேசுவது கேட்டது இவளுக்கு.
“அம்மா போனை ஸ்பீக்கர்ல போடுங்க” என்றாள்.
“ஹ்ம்ம்…” என்றவர் மகள் சொன்னதை செய்தார்.
“வீட்டில வேற யாரும் இருந்தா எல்லார் முன்னாடியும் போன் எடுத்திட்டு போங்க. நான் தனித்தனியா யாருக்கும் சொல்ல விரும்பலை, எல்லாருக்கும் சேர்த்தே சொல்லிடறேன்…” என்றாள்.
“ரேகா என்ன இதெல்லாம், எதுவா இருந்தாலும் எங்கிட்டவே சொல்லுமா…” என்றார் செந்தில்வேல் இப்போது.
“அப்பா சொன்னதை செய்ங்க…” என்றாள் அவள் கட்டளையாக.
அது இரவு உணவருந்தும் வேளை என்பதால் கனகவேல், ரத்தினவேல் உட்பட வீட்டினர் அனைவருமே அங்கிருந்தனர்.
“எல்லாரும் இருக்காங்களா…” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.
விஸ்வாவும் கூட அங்கு தானிருந்தான். அவனுக்கு என்ன ஏதென்று புரியவில்லை. ஆனாலும் ஏதோ நடக்கிறது என்று அமைதியாயிருந்தான்.
“எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க… இவரோட கடையை உங்க கடையோட சேர்க்கறது எல்லாம் நடக்காது…”
“ஏன்?? ஏன் நடக்காது??” என்றது கார்த்திக்.
‘ஓ!! இது தான் சங்கதியா!! நான் அவ்வளவு தூரம் அன்னைக்கு சொல்லியிருக்கேன், அப்புறமும் அவகிட்ட கேட்டா என்ன அர்த்தம்…’ என்று கனன்றுக் கொண்டிருந்தான் விஸ்வா.
இறுகிய அவன் முகமே சொன்னது அவன் கடுங்கோபத்தில் இருக்கிறான் என்று.
“ஏன் நடக்கணும்??” என்றாள் அவள் பதில் கேள்வியாக.
“அப்படி நடந்தா உங்களுக்கும் நல்லது தானே. நம்ம கடைக்குன்னு ஒரு தனி மவுசு இருக்கு, அது உங்களுக்கும் கிடைக்கும் தானே… அதுக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்க வேண்டியது தானே…” என்று சரவணன் பதில் கொடுத்தான் இப்போது.
“நான் ஒண்ணு சொல்லவா, உங்க கடையோட பேரை எடுத்திட்டு இனி கேஎம் ஜுவல்லர்ஸ்ன்னு வைச்சிடுவோம். அதுக்கு என்ன காசு வேணுமோ அதை நீங்க வாங்கிக்கோங்க சரியா…” என்றாள் அவளும் பதிலுக்கு.
“என்னது உங்க கடையா இந்த பேச்செல்லாம் எப்போல இருந்து நீ பேச ஆரம்பிச்சே ரேகா??” என்று செந்தில்வேல் மகளை கண்டித்தார்.
“அப்பா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இது என்னோட புகுந்த வீடு இனி இது தான் என் வீடு. சோ உங்க கடைன்னு தான் இனிமே நான் சொல்லணும், நீங்க என்ன எனக்கு அந்த கடையில பங்கா கொடுக்க போறீங்க…” என்றாள் அவள்.
“ஏன் வாங்காமயா போய்ட போறே நீ??” என்றார் செந்தில்வேல்.
“அதெப்படி அவளுக்கு கடையில பங்கு கொடுக்க முடியும்” என்றான் கார்த்திக்.
“நல்லா கேட்டுச்சாப்பா உங்க அண்ணன் புள்ளை சொன்னதை. ஓகே அந்த கதை எல்லாம் எனக்கு வேணாம், இந்த கடையை அந்த கடையோட சேர்க்கற எண்ணம் எல்லாம் வேணாம்… இது மாதிரி நீங்க என்கிட்ட கேட்கிறது இதுவே கடைசியா இருக்கட்டும்…” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள் அவள்.
“ஏன் விஸ்வா நீ ஒரு வார்த்தை அவகிட்ட பேசியிருக்கலாம்ல, உன் பொண்டாட்டியாச்சும் பேசலாம்ல அவ தம்பிகிட்ட” என்றார் ரத்தினவேல் சற்றே கோபத்தோடு.
அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் அமர்ந்திருந்த இருக்கையை பின்னே தள்ளிவிட்டு அவன் எழ அந்த இருக்கை சற்று தள்ளிப் போய் விழுந்தது.
“என்னை எதுக்கு பேசச் சொல்றீங்க?? சொல்லுங்க என்னை எதுக்கு பேசச் சொல்றீங்க??” என்று அந்த வீடே அதிர கத்தினான்.
“இதென்ன கேள்வி உன் தங்கச்சி, உன் மச்சினன் நீங்க ரெண்டு பேரும் பேசினா தானே எடுபடும்”

“உங்களுக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?? அவங்க கடை நமக்கு எதுக்கு?? நமக்கு வேணும்ன்னா இன்னொரு கடையை அங்க திறக்க நம்மாள முடியாதா…”
“அதுக்கெல்லாம் யாரு இன்வெஸ்ட் பண்ணுவா, இதுன்னா நாம வெறும் நேம் போர்ட் மட்டும் மாத்தினா போதும்…” என்று சொன்ன சரவணனை அடித்துவிடும் ஆத்திரம் தான் வந்தது விஸ்வாவிற்கு.
“நம்ம வசதிக்கு என்ன குறைச்சல். இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் பெரிய விஷயமா நமக்கு. சொல்லுங்க பெரிய விஷயமா நமக்கு…”
விஸ்வா என்றும் இல்லாமல் இன்று இவ்வளவு குரல் உயர்த்தி பேசுவது அனைவருக்குமே புதிது. யார் மனதும் புண்படாது பேசுபவன் அவன். அவ்வளவு பேச்சு நடந்துக் கொண்டிருந்த போதிலும் கனகவேல் எதுவுமே பேசவில்லை.
தன் பேரனையே தான் பார்த்திருந்தார். அவன் பிறந்த போது கணித்த சில விஷயங்கள் இப்போது உண்மையாவது போல் தோன்றியது அவருக்கு. அவன் திருமணம் செய்வான் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அவனுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணமே அந்த வீட்டில் எவருக்குமே கிடையாது ஒரு சிலரைத் தவிர.
என்று அவனின் திருமணம் நடந்ததோ அன்றிலிருந்தே வீட்டில் ஒவ்வொரு பிரச்சனையாக முளைக்கிறது என்று கணக்கு போட்டது அவர் மனம்.
இப்போது அவர் தலையீடு முக்கியம் என்று உணர்ந்தார் அவர். அவன் சந்தோசமும் நிம்மதி முக்கியம் அது மட்டுமே சூழலை கொஞ்சம் சாந்தமாக்கும் என்று அவர் பேச ஆரம்பிக்கும் முன்னே அதை கெடுத்தது கார்த்திக்கின் பேச்சு.
“ஆமா பெரிய விஷயம் தான். காசு என்ன மரத்திலையா காய்க்குது. ஒவ்வொரு கடை ஆரம்பிக்கவும் நாம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம். உனக்கென்ன நீ பாட்டுக்கு போய் ஒரு கடையில உட்கார்ந்திக்குவ…”
“நாங்க தானே பேங்க் பேங்க்கா ஏறி இறங்கி லோன் வாங்கினது எல்லாம். நீ கடைசியா வந்து சைன் மட்டும் போட்டுட்டு போவே ஏதோ கடை நல்லா போனதுனால நம்மால கடனை திருப்பி அடைக்க முடிஞ்சது” என்றான் சரவணனும் சேர்ந்து.
காஞ்சனா நடப்பதை ஒரு மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். விஸ்வாவின் கோபத்தை அவளுமே எதிர்பார்த்திருக்கவில்லை.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் தானிருந்தான் அவன். அவனின் முகம் செந்தணலாகத் தானிருந்தது.
“ஓஹோ!! நீங்க பேங்க் பேங்க்கா ஏறி இறங்குனீங்க நான் சும்மாயிருந்தேன் அப்படி தானே… அப்படியே இருக்கட்டும், இனிமே இந்த வீட்டில நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். எதுவும் சொல்லவும் மாட்டேன்…”
“இது தான் கடைசி நான் இங்க வர்றது. நானும் என் பொண்டாட்டியும் இனி தனியாவே இருந்துக்கறோம். ரேகாகிட்டயோ அமுதன்கிட்டயோ இனி கடை விஷயமா யார் பேசினாலும் அவ்வளவு தான் சொல்லிட்டேன்”
“அப்படி நீங்க பேசினது என் காதுக்கு வந்திச்சுன்னா அன்னையோட என்னை தலைமுழுகிடுங்க…” என்று கத்திவிட்டு காஞ்சனாவை அவன் பார்க்க அவள் அவன் பின்னோடே சென்றாள்.
அவன் அறைக்கு வந்தும் சினம் தணியாமல் அங்குமிங்கும் நடை பயின்றான். கதவை திறந்துக்கொண்டு வெளியேறியவன் வராந்தாவில் இருந்து மாடிக்கு செல்லும் படியேறினான்.
காஞ்சனாவிற்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. தன் வீட்டினரின் உண்மை முகம் கொஞ்சமாய் தெரிய ஆரம்பிப்பதற்கே இப்படி இருக்கிறானே, இன்னும் முழுதாய் தெரிந்தால் என்னாவனோ என்று தான் எண்ணினாள்.
பாவம் அவன் இன்னும் சாப்பிடக் கூட இல்லை. அதற்குள் தான் அங்கு பிரச்சனை ஆரம்பமாகிப் போனதே. மாடிக்கு போனாரே என்ன பண்றாரோ என்ற எண்ணத்தில் ப்ரிட்ஜில் இருந்த கொஞ்சம் பழங்களை எடுத்து நறுக்கி கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள்.
கடல்காற்று புஸ்சென்று முகத்தில் வந்து அறைந்தது அவளின் மேல். விஸ்வா வெறும் தரையில் அப்படியே படுத்திருந்தான். மெதுவாய் சென்று அவனருகில் அமர்ந்தாள்.
அவளின் அரவம் உணர்ந்தாலும் அவன் அவளை திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தலைக்குள் கை நுழைத்து மெதுவாய் அவள் கோத ஒரு அலைபுருதலுடன் இருந்தவனின் மனம் சற்று சாந்தம் கொண்டது.
சில நொடிகள் அதை அனுபவித்தவன் மெதுவாய் அவள் மடி மீது ஏறி தலை வைத்தான். காஞ்சனா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவன் தன்னை தேடுகிறான் ஆறுதலுக்காக என்பதே அவளுக்கு பெரும் ஆறுதலாகத் தானிருந்தது. அவள் தலைக்கோதலை இன்னமும் நிறுத்தவில்லை. “என்னங்க??” என்றாள்.
அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. “பேச மாட்டீங்களா??”
“என்ன பேசன்னு எனக்கு தெரியலை?? ஒரு மாதிரி வெறுமையா இருக்கு, எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி இருக்கு…” என்றவன் அவள் மடியில் இருந்து எழுந்து அவள் கண்களை ஆழ நோக்கினான்.
முழு பௌர்ணமி நாள் அன்று. அவளும் அந்த முழுநிலவை போலத் தானிருந்தாள் அப்போது. வெள்ளையில் ஆங்காங்கே சிவப்பு பூக்கள் ஓட அவள் கட்டியிருந்த சேலை அவளை இன்னமும் அழகாக காட்டியது அவனுக்கு.
‘என்ன பார்வை இது’ என்று தான் அவளுக்கு தோன்றியது. அவளின் உயிரை கண்களின் வழியாகவே வெளியே எடுத்துவிடுவானோ என்ற அளவிற்கு அவளை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான் அவன்.
அதில் தோன்றியது காதல் அல்ல. ஏக்கம், எனக்காய் நீயாவது இருப்பாயா சொல் என்பதான ஏக்கம். உன் மனதை எனக்கு கொடுப்பாயா என்ற ஏக்கம் அதில் அப்பட்டமாய் வழிந்தது.
அவள் மேல் அவனுக்கிருந்த கோபம், அவள் ஏமாற்றியது எதுவும் அவனுக்கு அக்கணம் தோன்றவேயில்லை. அவளாவது தனக்கிருப்பாளா தனக்காக இருப்பாளா என்று தான் பார்த்திருந்தான்.
அவளே கேட்டாள் “என் மேல உங்களுக்கு கோபமில்லையா??” என்று பார்வையை தழைத்துக் கொண்டாள் அவள்.
அவளின் தாடை திருப்பி தன்னை பார்க்கச் செய்தவன் “இருக்கு…”

“ஏமாத்திட்டேன்னு என்னை கொல்லணும் போல இல்லையா??”
“இருக்கு…”
“அப்புறம் ஏன்??”
“தெரியலை…” என்றான்.
“வேணாம்”
“எது?? நான் வேணாமா??” என்றவனுக்கு இவளும் தன்னை மறுக்கிறாளோ என்ற எண்ணத்தில் முகம் கசங்கியது.
“நீங்க வேணாம்ன்னு நான் சொல்லலை. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம். அதே கடவுள் கொடுத்த சாபம் தான் நான் உங்களுக்கு…” என்றாள்.
அவன் ஒன்றும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள். “உங்களுக்கு நான் தகுதியானவ இல்லை… நான் தப்பு, உங்களை கஷ்டப்படுத்தவே வந்தேன்…”
“இத்தனை நாளா நான் சொந்தம்ன்னு நினைச்சவங்க எல்லாம் என்னை விதவிதமா காயப்படுத்திட்டாங்க, படுத்தறாங்க. நீ முதல்ல சொல்லலைன்னாலும் அப்புறம் சொல்லிட்டு தானே எல்லாம் செஞ்சே”
“உன்கிட்ட ஒரு நேர்மை இருந்துச்சு…” என்றான் அவன்.
அவள் பார்வை அவனை ஆச்சரியமாய் ஏறிட்டது. “நீ தப்பே பண்ணாலும் என்னால உன்னை மன்னிக்க முடியுது. அது ஏன்னு எனக்கு தெரியலை!!”
“நான் பேசினதுல உனக்கு எதுவும் கோபம் இருக்கா??”
“நான் எப்படி கோபப்பட முடியும். அந்த கடையே எங்களுது இல்லை…”
“நான் அதை கேட்கலை நாம தனியா இருந்துக்கலாம்ன்னு சொன்னது…”
“நிச்சயமா இல்லை…”
“அம்மா பாவம்ல…”
இதற்கு அவளிடத்தில் பதில் இல்லை. “அவங்க முகமே வாடிப்போச்சு…”
“உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா??”
“சொல்லுங்க…”
“இன்னைக்கு காலையில ஒருத்தரை பார்த்தேன்…” என்றவன் அந்நிகழ்வை அவளிடம் சொல்லி முடித்தான்.
“நீ என்ன நினைக்கிறே இதைப்பத்தி??”
“நான் என்ன நினைக்கிறது இருக்கு??”
“எனக்கு புரியவே இல்லை காஞ்ச்சு நான் யாருக்கு என்ன பண்ணேன். என் கல்யாணம் நடக்கக்கூடாதுன்னு ஏன் எல்லாரும் நினைக்கணும்…”
“அப்போ இன்னைக்கு காலையில பார்த்தவர் சொன்னதை நீங்க நம்புறீங்களா…”
“எனக்கு அவர் பொய் சொன்னதா தோணலை. இத்தனை வருஷமா கடையில இருக்கேன், யாரு எப்படி மனநிலையில பேசறாங்கன்னு கூடவா என்னால கணிக்க முடியாது…”
“உன் விஷயத்துல என்னால கணிக்க முடியாம போயிருக்கலாம். எல்லாமே அப்படியே இருக்குமா என்ன, தவிர அவரை நான் நிறைய தரம் பார்த்திருக்கேன்”
“எப்போ என்னை பார்த்தாலும் மரியாதையா தான் பேசுவாரு. எனக்கு அவர் சொன்னது பொய்ன்னு நினைக்க முடியலை. இப்போ வீட்டில நடக்கறதெல்லாம் பார்த்தா எனக்கு… எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை…”
“அவர் இப்போ சொன்னதுனால மட்டுமில்லை அதுக்கும் முன்னாடி சில பேர் என்கிட்ட பேசியிருக்காங்க. எதாச்சும் விசேஷ வீட்டுக்கு போகும் போது என்னை பார்த்து பேசுவாங்க…”
“என்ன நீங்க கல்யாணமே வேணாம்ன்னு இருக்கீங்கலாம்ன்னு. அப்போ எனக்கு அதுக்கு அர்த்தம் புரியலை. வீட்டில நல்ல நேரம் வந்த பிறகு தொடங்கலாம்ன்னு நினைச்சு அப்படி சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன்…”
“யார் உண்மையானவங்கன்னு கூட எனக்கு தெரியலை காஞ்ச்சு”
“நானும் உங்களுக்கு உண்மையா இல்லை விஷ்வா”
“நான் தான் சொன்னேன்ல நீ என்னை ஒரு தடவை தான் முதுகில குத்தினே. அதுக்கு பிறகு என் முன்னாடி நின்னு தான் பேசினே, செஞ்சே… இப்போ வரைக்கும் அப்படி தான் இருக்கே”
“நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கிறேன் பதில் சொல்லுவியா?? ப்ளீஸ்…” என்றவனின் கரங்கள் நீண்டு அவள் விரல்களுக்குள் நுழைத்துக் கொண்டது. கூம்பிய அவள் வலக்கரத்தை தன் இடக்கரத்தின் மீது ஆதுரமாய் வைத்துக் கொண்டான்.
அவனின் அந்த செயலே அவளுக்கு அவன் எதைக் கேட்டாலும் சொல்லும் மனநிலையை கொடுத்தது.
“கேளுங்க விஷ்வா…” என்றிருந்தாள் அவள்.
“நிச்சயமா சொல்லுவியா காஞ்ச்சு??”
“உங்க மேல சத்தியமா சொல்றேன் விஷ்வா… நான் பொதுவா யாரையும் பிலீவ் பண்றதில்லை. உங்களை நான் ரொம்ப மதிக்கறேன் விஷ்வா அதனால தான் உங்க மேல சத்தியம்ன்னு சொன்னேன்…”
“நீங்க கேட்கிறதுக்கு நிச்சயமா பொய்யான எந்த பதிலும் என் வாயில இருந்து வராது விஷ்வா…”
“என்னோட அப்பா பேரு செந்தில்வேல் இல்லைன்னு நீ சொன்னே ஞாபகம் இருக்கா?? உனக்கு கண்டிப்பா மறந்திருக்காது எனக்கு தெரியும்…”
“சொல்லு என்னோட அப்பா பேரு என்ன??”
அவள் நிறுத்தி நிதானமாய் சொன்னாள் “வேலு…” என்று.

Advertisement