Advertisement

“நம்ம பேத்தியோட கடையையும் நம்ம கடையோட இணைச்சுட்டா என்ன. நமக்கும் சென்னையில ஒரு கடை இருந்தா நல்லா தானே இருக்கும்”
“அங்க நாம புதுசா ஒரு கடை பார்த்து எல்லாம் ரெடி பண்ணி செய்யறதுக்கு நம்ம நேம் போர்டு அங்கயும் செஞ்சிட்டா என்ன?? ஏம்மா காஞ்சனா உனக்கு அதுல எதுவும் ஆட்சேபனை இருக்காம்மா??” என்று இப்போது காஞ்சனாவையும் பேச்சில் இழுத்தார்.
விஸ்வா அவரின் பேச்சில் சங்கடமாய் நெளிந்தான். ‘என்ன இவங்க எப்போ பார்த்தாலும் காசு காசுன்னு இருக்காங்க… இப்போ அவங்க கடையும் கேட்கறாங்க…’
அது காஞ்சனாவிற்கு சொந்தமாக இல்லை தான். ஆனாலும் அவன் வீட்டினரை பொறுத்தவரையில் அது அவளின் சொத்து தானே.
காஞ்சனா திரும்பி விஸ்வாவை பார்த்தாள் ‘தெரிந்து கொள் இது தான் உன் வீட்டினரின் லட்சணம்’ என்று.
அவனால் தலையெடுத்து கூட அவளை பார்க்க முடியாத வகையில் தன் வீட்டினரின் பேச்சு இருக்க பாவம் அவனும் தான் என்ன செய்வான்.
“அதை நான் எப்படி முடிவு பண்ண முடியும் தாத்தா?? அது முழுக்க என் தம்பிக்கு சொந்தமானது, நான் ஜஸ்ட் பேருக்கு தான் ஓனரா இருந்தேன்…”
“எங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவன்கிட்ட என்னோட ஓனர்ஷிப் முழுக்க அவனுக்கு எழுதி கொடுத்திட்டேன் தாத்தா…” என்று கூசாமல் புழுகினாள் அவள்.
அவளின் இந்த பதில் அங்கிருந்தோரை முகம் கறுக்கச் செய்தது. ‘யாரைக் கேட்டு எழுதிக் கொடுத்தாய்’ என்று தான் ஒவ்வொருவரின் பார்வையும் இருந்தது.
கார்த்திக் அவளை முறைக்க ‘என்னடா முறைக்கிறே??’ என்பது போல் அவள் பதில் பார்வை பார்க்க அவன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
“அண்ணா இவ எப்படி அதை எழுதிக் கொடுக்கலாம்??” என்று அண்ணனின் காதைக் கடித்தான் சரவணன்.
“அதை நீயே அவகிட்ட கேளேன்??” என்று எரிந்து விழுந்தான் கார்த்திக்.
“யம்மாடி இவகிட்டயா நானா… இவ ரவுடி ரங்கம்மாவாச்சே… அன்னைக்கு நம்ம ரெண்டு பேரையும் வைச்சு செஞ்சது எனக்கு இன்னும் மறக்கலை…” என்றான் சரவணன்.
அமுதன் ரேகாவின் திருமண பேச்சு ஆரம்பித்ததிற்கு முன் ஒரு நாள் நடந்த சம்பவம் அது. கார்த்திக் அன்று நேரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டான்.
பெரிய வீட்டிற்கு வந்திருக்க மற்றவர்கள் ஏதோ வேலையாய் உள்ளே இருந்தனர். ஹால் சோபாவில் காஞ்சனா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க அவளை பார்த்ததும் அவனுக்கு ஆத்திரம் வந்தது.
அவனிடம் வேலை பார்க்க வந்த போது ஏதோ தெரியாமல் அவளை சீண்டிவிட்டான். அதை அவனின் தந்தையிடம் சொல்லி அவனை திட்டு வாங்க வைத்தவள் தானே இவள் என்ற கனல் இன்னமும் வீசியது அவனுக்குள்.
“ஹேய்…” என்றான் அதிகாரமாய்.
அவளும் பதிலுக்கு “என்னா??”
“மரியாதைன்னா என்னன்னு உனக்கு தெரியாதா??” என்றான் இன்னமும் அதே அதிகாரக் குரலில்.
“உனக்கும் உன் தொம்பிக்கும் ஏற்கனவே சொல்லியிருக்கேன். மரியாதைங்கறது கொடுத்தா தான் கிடைக்கும்ன்னு உனக்கு புரியாதா…” என்றாள்.
“ஏண்டி நொண்டிக் கழுதை அன்னைக்கு உன்னை தெரியாம தொட்டேன்னு அம்புட்டு கலாட்டா பண்ணியே. என் தம்பி விஸ்வா உன்னை தொடாமலா விட்டான். அவன் தொட்டா மட்டும் உனக்கு சுகமா இருக்கு நாங்க தொட்டது உனக்கு கசக்குதோ…” என்று கண்ட மாதிரி பேச அவள் அருவருப்பாய் அவனைப் பார்த்தாள்.
ஹாலில் அவர்கள் இருவரை தவிர அப்போது வேறு யாருமில்லை. சரவணன் அப்போது தான் உள்ளே நுழைந்தான். கார்த்திக் கடைசியாய் பேசியதை கேட்டுக் கொண்டே தான் உள்ளே வந்தான்.
“என்ன அண்ணா??”
“இந்த பத்தினிகிட்ட தான்டா பேசிட்டு இருக்கேன். நம்ம கடையில இவ கொஞ்ச நாள் வேலை பார்த்தால்ல… அப்போ ஒரு நாள் தெரியாம இவளைத் தொட்டுட்டேன். பெரிய உத்தமி மாதிரி அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திட்டா”

“அவரும் வழக்கம் போல என்னை திட்டிட்டு இவளை வேலை விட்டு போகச் சொன்னாரு… இவ என்ன மாய மந்திரம் பண்ணான்னு தெரியலை அவர்கிட்ட பேசி நம்ம விஸ்வா கடைக்கு மாறிட்டா”
“நான் தொட்டா இவளுக்கு தப்பாம். அதுவே விஸ்வா தொட்டா இவளுக்கு இனிப்பா… அதைத்தான் இவகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்டா…”

“இதுல இவ அவனையே கல்யாணம் வேற பண்ணிட்டு வந்து என் முன்னாடியே கால் மேல கால் போட்டுட்டு உட்கார்ந்திருக்காடா”
“பாரு இப்போ கூட எவ்வளவு திமிரா பார்க்கறா பாரு… இவளுக்கு ரொம்ப அழகுன்னு திமிருடா…” என்றவன் “எழுந்திருடி” என்று சொல்ல “முடியாதுடா”
“அவ்வளவு திமிராடி உனக்கு…” என்றான் இப்போது சரவணனும்.
“ஆமாங்கடா இப்போ என்னங்கறீங்க!!”
“ஹேய்” என்று கத்திக்கொண்டே சரவணன் அவள் கழுத்தை பிடிக்க வர ஓங்கி ஒரு அறைவிட்டாள் அவனை. அடுத்த அடி கார்த்திக்கின் கன்னத்தில் விழுந்தது. அண்ணன் தம்பி இருவருமே ஸ்தம்பித்து நின்றனர். 
“மரியாதையா பேச பழக்கிக்கோங்க… நீங்க யாரு என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்களோட வீடியோ இருக்கு என்கிட்ட பார்க்கறீங்களா…”
“உங்க பொண்டாட்டிங்ககிட்ட அதை காட்டினா என்ன நடக்கும் தெரியுமா…”
“என்னடி பூச்சாண்டி காட்டுறே??”
“நீயெல்லாம் பூச்சாண்டியை பார்த்தா தான்டா பயப்படுவே…” என்றவள் அவள் கைபேசியில் இருந்த அந்த வீடியோ பதிவை இருவருக்கும் தெரியுமாறு எடுத்துக் காட்டினாள்.
“பாருடா உன் தம்பியோட லட்சணம் இது…” என்று சரவணன் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்வதை கார்த்திக்கிடம் பார்க்கச் சொல்லி காண்பித்தாள்.
“நீ உன் அண்ணன் செஞ்சதை பாரு…” என்றவள் அடுத்த வீடியோவை ப்ளே செய்து காட்ட அண்ணன் தம்பி இருவரின் முகத்தில் ஈயாடவில்லை.
எல்லாமே அவர்கள் கடையின் சிசிடிவி பதிவு. எப்போதுமே அதை அவர்கள் தான் பார்ப்பார்கள் இவள் எப்படி அதை பார்த்தாள், இதை எப்படி எடுத்தாள் என்று புரியாமல் பார்த்தனர்.
“இது எப்படி என்கிட்ட வந்துச்சுன்னு பார்க்கறியா. உன் லட்சணம் தெரிய ஆரம்பிச்சப்பவே நான் உஷாராகிட்டேன். சும்மா தான் கம்ப்யூட்டர் ஹேக் பண்ணி பார்த்தேன்… அப்போ மாட்டினது தான் இது…”
“நம்ம சின்ன துரை எப்படி மாட்டினார் தெரியுமா. அதே உன்னோட சிஸ்டம் ஹேக் பண்ணப்போ தான். எல்லா கடையோட சிசிடிவி பதிவோட மெயின் சர்வர் நீ இருந்த கடையில தான் இருந்துச்சு… அதுல இருந்து எடுத்தது தான் இது…”
“இனிமே என்கிட்ட நீங்க வாலாட்டினீங்க… இதை உங்க பொண்டாட்டிக்கு மட்டுமில்லை. ஒட்டுமொத்த சோசியல் மீடியாவுலயும் போட்டுவிட்டிருவேன்…” என்று மிரட்டினாள்.
அந்த சம்பவத்தில் அடங்கிப் போனவர்கள் தான் அவர்கள் இருவரும்.
இப்போது ரத்தினவேல் பேசினார். “ஏம்மா நீ சொன்னா தான் மாப்பிள்ளை கேட்பார்ல. நீ பேசிப் பாரும்மா…”
“சாரி மாமா என்னால பேச முடியாது. எங்களோடது எங்களோடதாவே இருக்கட்டும். அவனுக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு, அது அப்படியே இருக்கட்டும். அவனுக்கு உங்களோட அடையாளத்தை பூச வேண்டாம்…” என்றாள் அவள்.
“ஏன் விச்சு நாங்க இவ்வளவு பேசறோம் நீ எதுவும் பேசாம இருக்கே?? நீ சொல்லக் கூடாதா உன் பொண்டாட்டிகிட்ட…” என்றார் ரத்தினவேல் விஸ்வாவிடம்.
“எனக்கும் இது சரி வரும்ன்னு தோணலை தாத்தா… இந்த பேச்சு வேண்டாம், நமக்கு சென்னையில பிரான்ச் ஆரம்பிக்கணும்ன்னா நாம தனியா செஞ்சுக்கலாம்… இந்த கூட்டணி எல்லாம் வேண்டாம்…”
“கூட்டணி இல்லைப்பா அந்த கடையை நாம எடுத்துக்கலாம்…”

அவன் போதும் என்பது போல் கைக்காட்டி “இந்த பேச்சு இனிமே வேண்டாம் எப்போமே…” என்று முடித்துவிட்டு காஞ்சனாவை ஒரு முறைப்புடன் பார்த்து சென்றுவிட்டான் அவன்.
அவளோ இதெல்லாம் எனக்கு தூசு என்பது போல் பார்த்தவள். அவன் பின்னேயே சென்றாள்.
கனகவேலுக்கு கோபமே விஸ்வா அப்படி பேசிச் சென்றது. அவர் செந்தில்வேலை பார்க்க அவர் தன் மனைவியிடம் சொல்லி அவனிடம் பேசச் சொல்வதாய் சொன்னார்.
“உன் பொண்டாட்டியை விஸ்வாகிட்ட மட்டுமில்லை, உன் பொண்ணுகிட்டயும் பேசச் சொல்லு… அந்த கடை நல்ல மெயின் இடத்தில இருக்கு, நமக்கு அது தான் வேணும்…”
“நாம புதுசா ஒரு கடை ஆரம்பிக்கணும்ன்னா முதல் போடணும் எல்லாம் செய்யணும், அதுவே இந்த கடைன்னா சும்மாவே வந்திடும், நம்ம கடைன்னு விளம்பரம் படுத்திட்டா போதும்…” என்று கண்களில் பேராசை விரிய சொன்னார் அவர்.
இவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்று அறியாதவளா காஞ்சனா அவள் முன்னமே தன் தம்பிக்கு அழைத்து சொல்லிவிட்டாள் எப்படி பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்று. உடன் ரேகாவிற்கும் சேர்த்தே சொன்னாள்…

Advertisement