Advertisement

14
அமுதன் அன்றே ஊருக்கு கிளம்பிவிட்டான். விஸ்வின் குடும்பத்தினர் அவனை அங்கு தங்க சொல்லி சொல்லியிருக்க அவன் அதை மறுத்து கிளம்பியிருந்தான்.
விஸ்வா இரவு அவர்கள் வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் நிறைந்திருந்த பொருட்களை கண்டான். ஒன்றும் பேசும் மனநிலையில் அவன் இல்லை.
அவன் தாத்தா, பெரியப்பாவின் செயல் அவனை யோசிக்க வைத்தது. அமுதனிடம் அவர்கள் இப்படி பேசியிருக்க தேவையில்லை என்பதே அவன் எண்ணம்.
வீட்டில் உள்ளவர்கள் காசு விஷயத்தில் கொஞ்சம் அதிகப்படியே பார்ப்பவர்கள் என்று தெரியும் தான். வீட்டு செலவிற்கு கொடுப்பதற்கு கசக்கும் அவர்களுக்கு வருமானம் மட்டும் எப்படி வந்தாலும் சந்தோசமே என்பதறிவான்.
வீட்டில் உள்ளவர்கள் எது வேண்டுமானாலும் விஸ்வாவிடம் மட்டுமே கேட்டுப் பெறுவர். அவன் மட்டுமே கொஞ்சம் தாராளமாய் செலவு செய்பவன் அங்கு.
தன் வீட்டினரை பற்றிய நல் பிம்பம் மறைவதாய், அவன் இப்படியே தன்னகுள்ளேயே உழன்று கட்டில் படுத்திருந்தான்.
அவனின் யோசனையான முகம் கண்ட காஞ்சனா என்றுமில்லாமல் அவளாகவே அவனிடம் பேசினாள். “என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க??”
“ஒண்ணுமில்லை…”
“அப்போ ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”
“ஒண்ணுமில்லைன்னா விடேன்…”
“அமுதன் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா??”
“அப்படியெல்லாம் எதுவுமில்லை…”
“நான் தான் அவனை இங்க வரச் சொன்னேன்…”
“ஹ்ம்ம் சொன்னான் என்கிட்டே”
“என்ன சொன்னான்??”
“போகும் போது சொல்லிட்டு தான் போனான். நீ தான் வரச்சொன்னேன்னு…”
“ஆனா வீட்டில ஏன் இன்னைக்கு அவனை பத்தி அவ்வளவு விசாரிச்சாங்கன்னு தான் எனக்கு புரியலை…”
“நீங்க புத்திசாலின்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்…”
“காஞ்ச்சு…”
“உங்களுக்கு புரியலைன்னா சொன்னா சின்ன குழந்தை கூட நம்பாதுங்க…”
“எனக்கு இப்படி பேச்செல்லாம் பிடிக்கலை… ரொம்ப ஒரு மாதிரி இருந்துச்சு…” என்றவனின் முகத்தில் அப்பட்டமான பிடித்தமின்மை தெரிந்தது.
“எப்படி நடந்தா என்ன, நாம செய்ய நினைச்ச விஷயத்துக்கு அவங்களே பிள்ளையார் சுழி போட்டுட்டாங்கன்னு நினைச்சுகோங்களேன்”
“ஹ்ம்ம் ஓகே…” என்றவனின் முகம் இன்னமும் தெளியவில்லை.
“எதையும் யோசிக்காம தூங்குங்க…”
அவளின் பேச்சு எப்போதும் அவனைக் காயப்படுத்தும் இப்போது அது அவனுக்கு இதத்தை கொடுத்தது.
அவளுமே இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் அமுதனை அவனின் பெரியப்பா வளைத்து வளைத்து கேள்வி கேட்கும் போதில் இருந்து அவள் கவனித்துக் கொண்டிருக்கிறாள் தானே அவனின் முக பாவத்தை…
மற்றவர்கள் எப்படியிருந்தாலும் இவன் அப்படியில்லை என்பதே அவளுக்கு பெரும் உவப்பாய் இருந்தது.
தன்னைப் போல அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாதம் சென்றிருந்தது. காஞ்சனா வீட்டினருடன் கொஞ்சம் கொஞ்சமாய் பொருந்தி போனாள் என்று சொல்வதை விட அவளுடன் வீட்டின் மற்ற பெண்கள் கூட்டு வைத்துக் கொண்டனர் என்று சொல்வதே பொருத்தம்.
அங்கயற்கண்ணி மற்றும் ராதிகாவை தவிர மற்றவர்கள் அவளுடன் நன்றாகவே பேசினர். காஞ்சனா அந்த வீட்டில் பேசாத பேச விரும்பாத ஒருவர் உண்டென்றால் அது சகுந்தலா தான்.
அவளால் என்ன முயன்றும் அவரிடம் மட்டும் இயல்பாக இருக்க முடியவில்லை அவளால். அவளிடம் பேச வேண்டும் என்று ரம்யா, சௌம்யா, பாட்டி என்று ஒவ்வொருவராய் வந்த தினத்தன்று நடந்த நிகழ்வது.
மற்றவர்கள் போல சகுந்தலாவிற்கும் அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை. அவள் தன் அன்பு மகனின் மனைவி தன் மருமகள் என்ற ஆவலும் போட்டிப்போட அவளிடம் ஆசையாய் பேசச் சென்றார்.
காஞ்சனாவோ அவரிடம் முகத்தை திருப்பினாள். “இது தான் கடைசி நீங்க என்கிட்ட பேச முயற்சி பண்ணுறது… இனிமே இப்படி செஞ்சீங்கன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…”
“உங்களை பார்க்கவும் எனக்கு பிடிக்கலை, பேசவும் எனக்கு பிடிக்கலை. தயவு செஞ்சு என் கண்ணு முன்னால வராதீங்க…”
“காஞ்சும்மா…”
“வேணாம்… இந்த நீலிக்கண்ணீர் தான் ஒரு நல்ல குடும்பத்தை  கொஞ்சம் கொஞ்சமா சிதைச்சிடுச்சு… இதுக்கெல்லாம் ஏமாறுற ஆள் நானில்லை…”
“காஞ்சும்மா…” என்று குமுறி குமுறி அழுதார் அவர்.
அவளோ அவரை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அங்கிருந்து எழுந்துச் சென்றுவிட்டாள்.
அவர் உணவு மேஜையில் இருந்தால் கூட இவள் அப்பக்கம் செல்ல மாட்டாள். யாருமில்லாத நேரத்தில் அவர் இவளுக்காய் பரிமாறினாலும் சரி, அனைவரும் இருக்கும் போது பரிமாறினாலும் சரி. சாப்பிடாமலே எழுந்திடுவாள்.
விஸ்வாவிற்கு பெரும் மனகவலையாய் இருந்தது. ரேகாவின் திருமணத்திற்கு இன்னமும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்பதே அவனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் உறுத்திக் கொண்டேயிருந்தது.
அதற்கு அன்று முற்றுப்புள்ளி வைப்பது போல் ஒரு செயல் நடந்தது. அன்று ஞாயிறு கடை விடுமுறை என்பதால் அனைவருமே வீட்டிலிருந்தனர்.
மாலை சிற்றுண்டி தயாராகிக் கொண்டிருந்தது. பெரிய வீட்டில் தான் இருந்தனர் அனைவரும். காஞ்சனாவின் கைபேசி அழைக்க அவள் அதை ஹாலில் இருந்த சோபாவில் வைத்து வந்திருக்க சத்தம் கேட்டு வந்து எடுத்தாள்.
“ஹலோ…”
“சொல்லு அமுதா…”
“என்னைக்கு…”
“ஜாதகம் எல்லாம் செட் ஆகிடுச்சா…”
“நம்ம ஆளுங்க தானே…”
“நல்ல குடும்பம் தானே… அப்போ சரி நானும் அவரும் கிளம்பி வர்றோம்…” என்றுவிட்டு போனை வைக்க விஸ்வா அவளை முறைத்திருந்தான்.
வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவரின் பார்வையும் அவள் மீதேயிருந்தது. போனை வைத்துவிட்டு அவளாய் எதாவது சொல்வாள் என்று அவர்கள் பார்த்திருக்க அவளோ உள்ள செல்லப் போனாள்.
“யாரும்மா அமுதனா??” ஆரம்பித்தது ரத்தினவேல் தான். அவர் திரும்பி தன் தம்பியின் மீது பார்வையை செலுத்தினார் நீ பேசு என்பது போல்.
“ஆமா…”
“கல்யாணம் எதுவும் முடிவு பண்ணியிருக்கீங்களா??”
“இல்லைங்க இனிமே தான் முடிவு பண்ணணும். ஜாதகம் வந்திருக்காம் பொருத்தமெல்லாம் இருக்காம், என்னை வந்து பார்க்கச் சொல்றான், போய் பார்த்திட்டு எனக்கு பிடிச்சிருந்தா முடிச்சிடலாம்ன்னு சொல்றான்…” என்றாள் அவள்.
‘இவ என்ன லூசா… இப்போ எதுக்கு அவ தம்பிக்கு பொண்ணு பார்க்கற கதை எல்லாம் சொல்லுறா… இவ தம்பி என் தங்கச்சியை கெடுப்பானாம், இவ என் தங்கச்சி வாழ்க்கையை கெடுப்பாளாம்….’
‘என்னடா நடக்குது இங்க… இவளை…’ என்று அவன் பல்லைக் கடித்து கொண்டு அவளை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையை கவனித்தவள் இப்போது அவனைப் பார்த்து கண்ணடித்து வைத்தாள். அதை பார்த்தவன் பே என்று விழித்துக் கொண்டிருந்தான்.
‘இவ கண்ணடிச்சா தானே… இல்லை கண்ணடிக்கலையா, எனக்கு எதுவும் மன பிரம்மையா… என்னடா நடக்குது இங்க ஒண்ணுமே புரியலையே எனக்கு…’
‘கண்ணடிச்சிருந்தா எதுக்கு அடிச்சிருப்பா… ஒரு வேளை…’ என்று இவன் குழம்பிக் கொண்டிருந்ததை பார்த்தவள் அவனிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்தாள்.
“என்னங்க கொஞ்சம் வாங்களேன்…” என்று அழைக்க அவன் மந்திரித்தவன் போலே எழுந்து அவள் பின்னே சென்றான்.
ரத்தினவேல் மீண்டும் ஏதோ பேச ஆரம்பித்தார். கார்த்திக், சரவணன் கூட அங்கு தானிருந்தனர், ஆனால் முன்பு போல் அதிகம் அவர்கள் வாயை திறக்கவில்லை, அடக்கியே வாசிக்கின்றனர் இப்போது.
எல்லாம் காஞ்சனா செய்த மாயம் தான், எப்படியென்று பின்னால் பார்ப்போம். இப்போது ரத்தினவேல் என்ன பேசப் போகிறார் என்று கவனிப்போம்.
“ஏன்மா உன் தம்பிக்கு வெளிய தான் பொண்ணு பார்க்கணும்ன்னு இருக்கீங்களா??”
“எதுக்கு அப்படி கேட்கறீங்க??”
“ஏன்மா எங்களை முறை சொல்லியே நீ கூப்பிடலாமே வாங்க போங்கன்னு மட்டும் தான் பேசறே??” என்று இடையிட்டார் செந்தில்வேல்.
‘கூப்பிடலாம் தான், அவளுக்கு அவர்களை எந்த முறை வைத்தும் கூப்பிட துளிக்கூட இஷ்டமில்லை. அதனாலேயே அந்த பேச்சை அவள் தவிர்த்து வந்திருந்தாள்.
இப்போது பேச்சு என்று வந்துவிடவும் வேறு வழி இல்லாது போனது அவளுக்கு. பிடிக்காவிட்டாலும் சிலதை செய்து தான் ஆகவேண்டும் என்பதில் இதுவும் அடக்கம் என்பதை உணர்ந்தே தானிருந்தாள்.
இருந்தாலும் அவர்கள் சொன்னதும் சரி என்று சொல்லிவிட்டால் என்னாவது. “உங்களுக்கெல்லாம் என்னை பிடிக்காது, நான் உங்களை அப்படிக் கூப்பிடுறது பிடிக்கலைன்னா என்ன செய்யன்னு தான் நான் கூப்பிடலை…” என்று காரணம் சொன்னாள்.
“இங்க பாரும்மா, ஆரம்பத்துல நீங்க திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்ததும் எங்களுக்கு அதிர்ச்சி தான். அதுக்காக உன்னை நாங்க ஒதுக்கி எல்லாம் வைக்கலைம்மா…”
“எப்படி இருந்தாலும் நீயும் இந்த வீட்டு பொண்ணு தான். இந்த வீட்டோட இன்னொரு மருமக நீ… உனக்கு கொடுக்கற மரியாதையை நாங்க கொடுப்போம்…” என்றவர் சுற்றி இருந்தவர்களையும் பார்க்க அவர்களும் ஆமோதிப்பாய் தலையாட்டினர்.
“உனக்கு இங்க மரியாதை குறைவா எதுவும் நடந்திச்சாம்மா…” என்றார் கனகவேல் தாத்தா…
“அப்படியெல்லாம் இல்லை தாத்தா…” என்றாள்.
‘உங்க மரியாதை எல்லாம் எப்போன்னு எனக்கு தெரியாதா. காசைக் கண்டதும் பல்லிளிக்கிற ஆளுங்க தானே நீங்க…’ என்று தான அவளுக்குள் ஓடியது.
“சரிம்மா நான் கேட்க வந்ததை கேட்டிடறேன்… உன் தம்பிக்கு சொந்தத்துல பார்க்கற ஐடியா எதுவும் இருக்காம்மா…”
‘இல்லைன்னு சொல்லி இவனுங்களுக்கு பல்பு கொடுத்தா எப்படியிருக்கும் என்று தான் தோன்றியது அவளுக்கு. அந்த எண்ணத்தை அங்கு வந்து நின்ற ரேகாவும், இவளையே பார்த்துக் கொண்டிருந்த விஸ்வாவையும் கண்டு அழித்தாள்.
“அப்படி யாரும் எங்களுக்கு பெரிசா எந்த சொந்தமும் இல்லை மாமா…”
“ஏன்மா நீ வேலை கேட்டு வந்தப்போ ஒருத்தர் உனக்கு ரெகமண்ட் பண்ணாரே அவர் உனக்கு சொந்தம் தானேம்மா…”
“ஆமா மாமா தூரத்து சொந்தம்…”
“எனக்கு இப்போ தான் ஞாபகம் வருது, நீ அப்போ கஷ்டப்பட்டிருந்தன்னு சொல்லித் தானே வேலைக்கு சேர்ந்தே… எப்படி இப்போ இவ்வளவு வசதியானீங்க…”
‘வாங்க… வாங்க… இந்த கேள்விக்கு நீங்க வரவேயில்லையேன்னு நினைச்சேன், வந்தாச்சு… உங்களை மாதிரி ஏமாத்தி தான் நானும் இங்க வந்தேன்’
‘இப்போ மனசுக்குள்ள சொன்னதை ஒரு நாள் நீங்க ஒண்ணுமேயில்லாம நிப்பீங்கல்ல அப்போ சொல்லுறேன்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் “அதான் இவங்க முன்னாடியே சொன்னாங்கல்ல மாமா எனக்கும் டிசைன்ஸ் வரையத் தெரியும்ன்னு”
“இவங்க அளவுக்கு இல்லைன்னாலும் எனக்கும் கொஞ்சம் வரைய வரும். இவங்ககிட்டையும் கொஞ்சம் கத்துக்கிட்டேன்… அதுக்கெல்லாம் நார்த் சைட் நல்ல வரவேற்பு….”
“நான் நிறைய பாம்பே கட் மாடல்ஸ் டிசைன்ஸ் பண்ணுவேன்… அதுல நான் கொடுத்த வெரைட்டி அவங்களுக்கு பிடிச்சுப் போய் எனக்கு நெறைய அமௌன்ட் கொடுத்தாங்க, என்னோட ஒவ்வொரு டிசைன்ஸ்க்கும்…”
‘உண்மையை சொல்லுடி அதெல்லாம் நீ வரைஞ்சதா…’ என்ற கேள்வி தான் விஸ்வாவிற்குள் ஓடியது.
“இன்னொரு விஷயம் என்னன்னா அப்போ எனக்கும் என் தம்பிக்கும் கொஞ்சம் பிரச்சனை, நாங்க ரொம்ப வசதியா இல்லைன்னாலும் ஓரளவுக்கு நல்லாவே தான் இருந்தோம்…”
“அவனோட சண்டை போட்டுட்டு தான் வீட்டை விட்டு வந்திட்டேன். அப்போ தான் எனக்கு வேலை தேவைப்பட்டுச்சு. அப்படி தான் உங்ககிட்ட வந்து வேலை பார்த்தேன்…”
“அதுவும் நல்லதுக்கு தானே, இவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்… இவரும் எனக்கு கிடைச்சதுக்கு காரணம் நான் இங்க வேலை பார்த்தது தானே…” என்று அவள் சொல்லும் போது அவள் பார்வை முழுதும் அவன் மேலேயே தான் இருந்தது.
‘என்ன பார்வை இது… என்னை எதுக்கு முழுங்குற மாதிரி இவ பார்த்து வைக்குறா… என்னமோ என்னை ரொம்ப ஆசைப்பட்டு கட்டிகிட்டவ மாதிரியே ஆக்ட் கொடுக்கறாளே…’ என்று தான் எண்ணினான்.
அவன் மனசாட்சியே அவள் நடிக்கவில்லை என்று சொன்னது. இருந்தாலும் பட்ட அடி அவனை மாற்றியே யோசிக்க வைத்தது.
“கரெக்ட் தான்மா… நீ இவனை பார்க்கலைன்னா இந்த வீட்டுக்கும் வந்திருக்க மாட்டே” என்றார் செந்தில்வேல்.
‘இவங்க எதுக்கு இப்போ இவளுக்கு இவ்வளவு ஐஸ் வைக்குறாங்கன்னு தெரியலையே…’ என்று தான் பார்த்திருந்தனர் கார்த்திக்கும், சரவணனும்.
“சரிம்மா நம்ம சொந்தத்துல தான் பொண்ணிருக்கே, நாம ஏன் வெளிய தேடணும்…” என்றார் ரத்தினவேல்.
“என்ன அண்ணா சொல்றீங்க?? பொண்ணு இருக்கா, யாரு?? நம்ம ஒண்ணுவிட்ட பங்காளி முருகையன் பொண்ணை சொல்றீங்களா…” என்று உலகமகா நடிப்பு நடித்தார் செந்தில்வேல்.
‘இவனுங்களுக்கு ஆஸ்கர் கொடுத்தே ஆகணும், சிவாஜி சார், கமல் சார் எல்லாம் தூக்கி சாப்பிடுறானுங்க… நம்மளும் வேற நடிக்க வேண்டியதா இருக்கே…’ என்ற எண்ணத்தோடே அடுத்து அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை போல் பார்த்திருந்தாள்.
‘ஒரு ரெண்டு மூணு பிட்டை நாமளும் போட்டு வைப்போம்’. “நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க மாமா, பேசி முடிச்சிறலாம். நீங்க சொன்னா கண்டிப்பா நல்லா பொண்ணா தான் இருக்கும்…” என்றாள் அவள் ஐஸ் மலையையே அவர்கள் மேல் வைத்து.
“பொண்ணெல்லாம் நல்ல பொண்ணு தான்மா… நம்ம வீட்டு பொண்ணு தான்…” என்றவர் இன்னும் பில்டப் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
“பெரியப்பா யாருன்னு சொல்லுங்க…” என்று எரிச்சலானான் விஸ்வா.
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறியாத குழந்தையா அவன். அந்த பேச்சே அவனுக்கு உவக்கவில்லை.
மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணை கேட்டால் பரவாயில்லை. பெண் வீட்டினர் மாப்பிள்ளையை கொடுங்கள் என்று கேட்பது அதிக பிரசங்கித்தனமாகத் தான் அவனுக்கு தோன்றியது.
இப்படி இருந்தால் அங்கு தன் வீட்டினருக்கு மதிப்பிருக்குமா என்ற எண்ணம் தான் அவனுக்கு. சும்மாவே இவள் மதிக்க மாட்டாள், இதில் இவர்களாகவே போய் விழுகிறார்களே என்ற ஆத்திரம் அவனுக்கு.
அங்கேயே நின்றிருந்த ரேகாவை பார்த்து பொறுத்துக் கொண்டான் அவன்.
“செந்தில் நம்ம மருமக சார்பா நானே கேட்கிறேன் உன்கிட்ட உன் பொண்ணு ரேகாவை நம்ம மருமகளோட தம்பிக்கு கட்டித் தருவியாப்பா…” என்றார் அவர்.
விஸ்வாவிற்கு அவ்வளவு அவமானமாக இருந்தது. அவர்களின் ஒவ்வொரு பேச்சும், இது நாள் வரை தன் வீட்டினரை தான் புரிந்துக் கொள்ளவில்லையோ என்று முதன் முறையாக வருந்தினான் அவன்.
செந்தில்வேல் அண்ணனுக்கு பதில் சொல்லாமல் மருமகளைப் பார்த்தார்.
‘ப்பா… செம ஆக்டிங்…’ என்று மனதிற்குள் அவர்களுக்கு கவுண்டர் கொடுத்துக்கொண்டு வெளியில் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டாள் காஞ்சனா.
“மாமா என்ன சொல்றீங்க… நம்ம ரேகாவுக்கு, அய்யோ உங்க அளவுக்கு எல்லாம் நாங்க வரவே மாட்டோம் மாமா… என்ன இப்படி சொல்லிட்டீங்க?? ஏங்க நீங்க சொல்லுங்களேன்…” என்று விஸ்வாவை வேறு இழுத்தாள் அவள்.
‘அவங்க ஆக்டிங்க்கு மேல நீ பயங்கர ஆக்டிங் கொடுக்கறேடி, இந்த நடிப்புக்கு உனக்கு அவார்டா கொடுக்க போறாங்க, இப்படி நடிக்கிறே’ என்று கமல் பாணியில் சொல்லிக்கொண்டான்.
‘இப்போ நான் பேசியே ஆகணும் ரேகாவுக்காகவாச்சும் பேசணும்’ என்று முடிவெடுத்தவன் “ஏன் காஞ்ச்சு ரேகாவுக்கு என்ன குறை?? அவளை ஏன் வேணாம்ன்னு சொல்றே”
“என்னங்க நான் எங்க வேணாம்ன்னு சொன்னேன். எங்க தகுதிக்கு நீங்க ரொம்ப பெரிய இடம்…” என்று இழுத்து சொன்னாள் அவள்.
“என்னம்மா பெரிய இடம் சின்ன இடம்ன்னு நல்ல சம்மந்தம் தான் முக்கியம். ஒரு மாசத்துக்கும் மேல உன்னை இங்க பார்க்கறோம். உன்னை வைச்சே சொல்றோம்மா உன் தம்பி கண்டிப்பா நல்லவன் தான்…”
“உன்னை கட்டிகொடுத்ததொட கடமை முடிஞ்சிடுச்சுன்னு நினைக்காம தேடி வந்து சீர் செய்யற தம்பி எல்லாம் யாருக்கு கிடைக்கும் சொல்லு…” என்றார் ரத்தினவேல்.
“அதான் பெரியப்பா சொல்றாங்கல்ல காஞ்ச்சு, சரின்னு சொல்லலாமே… இல்லை வேணாம்ன்னா சொல்லிடு…” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
“ஒரு வேளை உன் தம்பி வேணாம்ன்னு சொல்லிடுவான்னு பயப்படுறியாம்மா…”
“அதெல்லாம் இல்லை மாமா அவன் நான் சொன்னா ஓகேன்னு தான் சொல்வான்…”
“ஆனா மாமா நீங்க தான் பேசிட்டு இருக்கீங்க. சின்ன மாமா எதுவுமே சொல்லலையே. அவர்க்கு ரேகாவை என் தம்பிக்கு கட்டிக்கொடுக்க இஷ்டமில்லையோ என்னவோ” என்று முடிக்காமல் நிறுத்தினாள்.
“என்னம்மா இப்படி சொல்லிட்டே, எனக்கு இந்த யோசனை தோணவே இல்லைம்மா… அண்ணா சொல்லவும் தான் யோசிச்சேன். எனக்கு மறுக்க எந்த காரணமும் இல்லையேம்மா…”
“இருந்தாலும் அப்பாவை ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்ம்மா…” என்ற செந்தில்வேல் “என்னப்பா நீங்க என்ன சொல்றீங்க??” என்று கனகவேலை பார்த்து கேட்டார்.
“நீங்க எல்லாம் ஒரு முடிவெடுத்தா அது சரியா தான் இருக்கும்ப்பா… நல்ல சம்மந்தம் தானே முடிச்சிருவோம்…” என்று அவரும் சொல்லிவிட அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே ரேகா, அமுதனுக்கு திருமணம் முடிவாகியது.

Advertisement