Advertisement

“உங்க அப்பா தான் என்னை இங்க இருக்கச் சொன்னார். சோ நீங்க என்னை அதிகாரம் பண்ணாதீங்க. அன்பா சொன்னா கேட்டாலும் கேப்பேன், இப்படி என்னை மிரட்டி உருட்டி செய்ய வைக்கணும்ன்னு நினைச்சா, காபியில உப்பு அள்ளி போடுவேனோ, எலி மருந்தை கலக்குவேனோ அது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்…” என்று அவர் அடுத்து அவளிடம் பேசா முடியாத அளவிற்கு அவருக்கு ஆப்படித்து எழுந்து சென்றாள்.
“ஹேய் அவ கூட இனிமே நீங்க சேராதீங்க…” என்றார் அவர் தன் மக்களைப் பார்த்து.
“கண்டிப்பா மாட்டோம்மா…” என்ற அக்கா தங்கை இருவரும் காஞ்சனாவை பார்த்து கண்ணடித்தனர்.
“ஒண்ணுமில்லாம வந்துட்டு என்னா பேச்சு பேசறா…” என்று போகிற போக்கில் அவர் சத்தமாக சொல்லிவிட்டு செல்ல காஞ்சனா தன் அடுத்த ஆட்டத்தை தொடங்கினாள்.
அதன் விளைவு இதோ வாயிலில் வந்து நிற்கிறது. “வீட்டில யாருமில்லையா??” என்ற பரிச்சய குரலில் ரேகா வேகமாய் எழுந்து சென்றாள்.
ஆம் அங்கு வந்திருந்தது அமுதனே தான். “ஹாய் அமுதா எப்படியிருக்கீங்க?? போன் பண்ணா ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டேங்குறீங்க…” என்றாள் ரேகா சுற்று முற்றும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே.
“வேலை…” என்று முடித்தவன் “அக்கா எங்கே??”
“உள்ள இருக்காங்க…”
“வீட்டு பெரியவங்க…”
“எல்லாரும் தான் இருக்காங்க… அண்ணா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா எல்லாம் கடையில இருக்காங்க… இனிமே தான் ஒவ்வொருத்தரா வருவாங்க…”
“சரி நீ மத்த எல்லாரையும் கூட்டிட்டு வெளிய வா…”
“எதுக்கு அமுதா??”

“சொன்னதை செய் போ…” என்று சிடுசிடுத்தான் அவன்.
அவன் சொன்னது போலவே அவள் அனைவரையும் கூட்டி வந்தாள்.
“யாரிவன் எதுக்கு எங்களை பார்க்கணும்ன்னு சொன்னான்…” என்று ஆரம்பித்தது அங்கயற்கண்ணியே தான்.
“அமுதன், காஞ்சனா அக்காவோட தம்பி…”
‘இவன் எதுக்கு இப்போ இங்க வந்திருக்கான்…’ என்று தான் எல்லாரும் பார்த்தனர்.
“நான் இவங்களோட அன்னைக்கு வரமுடியலை. பாட்டி கூட இருக்க வேண்டி இருந்துச்சு… அப்புறம் எங்கக்கா ஒண்ணுமில்லாம வந்திட்டான்னு சொன்னீங்களாமே, அதான் சீர்வரிசை எல்லாம் கொடுத்திட்டு போகலாம்ன்னு வந்தேன்…” என்றான் அவன்.
‘என்னது சீர்வரிசையா’ என்று அலறியது அங்கயற்கண்ணியின் மனம். வாசலில் நின்றிருந்த வண்டியை பார்த்தவருக்கு அய்யோவென்றிருந்தது. வாயைக் கொடுத்து வாங்கிகட்டிக்கிட்டோம் போலவே என்று கண் கெட்ட பிறகு அவருக்கு யோசனை வந்தது.
கனகவேலும் ரத்தினவேலும் உள்ளே வந்தனர் அப்போது. அங்கு நின்றிருந்த அனைவரையும் புதிதாய் வந்திருந்தவனையும் பார்த்தனர்.
“யார் இது?? நீங்க எல்லாம் ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்க??” என்றார் ரத்தினவேல்.
“மாமா இவங்க காஞ்சனாவோட தம்பியாம். அவளுக்கு சீர் கொண்டு வந்திருக்காரு…”
இப்போது அப்பாவும் பிள்ளையும் வெளியில் நின்றிருந்த வண்டியை திரும்பி பார்த்தனர்.
“அவரை உள்ள கூப்பிட்டு பேசாம வாசல்ல நிக்க வைச்சு பேசிட்டு இருக்கீங்க… உங்க யாருக்கும் பொறுப்பே இல்லை…” என்று அதட்டினார் கனகவேல்.
“உள்ள வாப்பா…” என்று அவர் அழைக்கவும் தவறவில்லை.
“நன்றிங்க நான் உள்ள வரலை…”
“ஏன்பா…”
“அக்கா ஒண்ணுமில்லாம வந்தவன்னு பேசுனாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் சீர் செஞ்சுட்டு போகலாம்ன்னு வந்தேன். உடனே வரமுடியாத சூழ்நிலை அதுக்காக எங்க வீட்டு பொண்ணை என்ன வேணும்னாலும் பேசுவாங்களா…” என்றான் அவன்.
“நாங்க யாரும் அப்படி சொல்லவேயில்லையே…” என்றார் தாத்தா.
“சொல்லாம தான் நான் அவசர அவசரமா கிடைச்சதை வாங்கிட்டு வந்திருக்கேன்…”
‘என்னது அவசரமா வாங்கிட்டு வந்ததே இவ்வளவா…’ என்று வாயை பிளந்தார் அங்கயற்கண்ணி.
“எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசலாம்… உள்ள வாப்பா…” என்றார் கனகவேல்.
“வேணாங்க எங்க அக்காக்கு மரியாதை இல்லாத வீட்டுல நான் கால் வைக்க விரும்பலை…” என்றான் அவன் பிடிவாதமாய்.
“காஞ்சனா…”
“சொல்லுங்க…”
“இது உன் வீடும் தாம்மா, உன் தம்பியை உள்ள கூட்டிட்டு வா…” என்றுவிட்டு அவர் சென்றுவிட வீட்டினர் அனைவரும் உள்ளே சென்றனர்.
அவர்கள் செல்வதற்காகவே காத்திருந்தார் போன்று அமுதன் “அக்கா எப்படியிருக்கே??”
“இங்க பாரு அக்கா தம்பி உறவெல்லாம் நமக்குள்ள முடிஞ்சு போச்சு. இப்போ நாம ரெண்டு பேரும் நம்ம அப்பாக்கு பிள்ளைங்களா அவருக்காக நாம செய்ய வேண்டிய கடமையை தான் செய்யறோம்…”
“நான் உனக்கு போன் பண்ணி பேசுனேன்னு நீ என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காத…” என்றாள் அவள் கறாராய்.
“அவங்க சொன்னாங்கல்ல உள்ள வா…”
“அவங்க சொன்னாங்கன்னா நான் வரணுமா…”
“வந்து தான் ஆகணும் உன்னை வைச்சு தான் அடுத்து என்ன பண்ணுறதுன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன்… ரேகாவை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தானே இவ்வளவும் செஞ்சே??”
“அக்கா அது உனக்காக செஞ்சது…”
“அப்படியா ஒரு பொண்ணை கர்ப்பமாக்குறதா… வெக்கமாயில்லை உனக்கு இப்படி பேச…”
“அக்கா நீ புரியாம பேசறே…”
“புரிஞ்சு தான் பேசறேன். அன்னைக்கு பாட்டி மட்டும் என் கால்ல விழாம இருந்திருந்தா நான் இந்த கல்யாணமே செஞ்சு இருந்திருக்க மாட்டேன். இப்படி ஒரு கேவலமான காரியம் பண்ணி என் கல்யாணம் நடந்தது எனக்கு அசிங்கமாயிருக்கு…”
“என்ன வேணா சொல்லிக்கோ… நான் செஞ்சது எனக்கு சரி தான்…”
“உன்கிட்ட பேசிட்டு இருக்க எனக்கு பிடிக்கலை, மரியாதையா உள்ள வா…” என்றுவிட்டு அவள் செல்ல அவன் பின்னேயே சென்றான்.
யாருமே எதுவும் பேசவில்லை அவன் அங்கு சோபாவில் அமர வைக்கப்பட்டான். அவனுக்கு குடிக்க காபியும் சாப்பிட பலகாரமும் பரிமாறினார்கள்.
அமுதன் ஒவ்வொன்றையும் தன் தமக்கையின் கண்ணசைவில் மட்டுமே செய்தான். “மாமா எப்போ வருவாங்க??”
“இப்போ வந்திடுவாங்க…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஸ்வகர்மா உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தான்.
“யார் வண்டி இங்க நிறுத்தி வைச்சிருக்காங்க…” என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தான்.
உள்ளே வந்து அமுதனை பார்த்ததும் அவனுக்கு ஜிவ்வென்று கோபம் வந்தது. இவன் எதுக்கு இப்போ இங்க வந்தான், அதுக்குள்ளே பொண்ணு கேட்டு வந்திட்டானா என்று யோசித்துக் கொண்டே காஞ்சனாவை பார்க்க அவள் இவனைக் கண்டுக்கொள்ளவில்லை. 
அதில் பல்லைக் கடித்தவன் முகம் கடுமையாக இருக்க அமுதனை திரும்பி பார்த்தான்.
“வாங்க மாமா உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தேன்…”
“என்… என்ன விஷயம்??” என்றவன் அங்கிருந்தவர்களை பார்த்தான்.
தாத்தாவும் ரத்தினவேலும் அவனெதிரில் அப்போது தான் வந்து அமர்ந்தனர்.
பின் அவனின் அண்ணிமார்கள், பாட்டி, அத்தை மட்டுமே. அம்மாவும் பெரியம்மாவும் வழக்கம் போல் சமையலறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ரேகாவும் காஞ்சனாவும் ஒன்றாய் நின்றிருந்தனர்.
“அக்காக்கு சீர் கொடுத்திட்டு போகலாம்ன்னு…”
“நான் கேக்கலையே??”
“நாங்க கொடுக்கணும் மாமா, முறைன்னு ஒண்ணு இருக்கே…”
அவன் இப்போது திரும்பி காஞ்சனாவை பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்தாள். சரின்னு சொல்லுங்க என்ற பார்வையை கொடுத்தாள் அவனுக்கு.
“அதுக்காக தான் வந்தியா…”
“உங்களை எல்லாம் பார்த்திட்டு போகலாம்ன்னு தான் வந்தேன் மாமா…”
“ஹம்ம்…”
“மாமா சீரு…”
“அது உங்க இஷ்டம், உங்க அக்காவை கேட்டுக்கோ…”
“அக்கா…”
“நீ என்ன செய்யணுமோ செய்…”
“கொண்டு வந்த பொருள் எல்லாம் எங்க இறக்கட்டும்…”
அவள் இப்போது வீட்டினரை பார்த்தாள். “உங்க வீட்டுல இருக்கச் சொல்லும்மா…” என்றார் பெரியவர்.
“சரிங்க…”
“அக்கா கொஞ்சம் வாயேன்…”
“என்னடா??”
“நகை எல்லாம் எடுத்திட்டு வந்தேன்…”
“ஏன் உங்கக்காவுக்கு அதை கூட நாங்க வாங்கி தரமாட்டோம்ன்னு நினைச்சியா??” என்று சீறினான் விஸ்வா.
“மாமா இதெல்லாம் அக்காவுக்கு செஞ்சது… பாட்டியோடது…”
“அவர்க்கு வேண்டாம்ன்னா எனக்கும் வேண்டாம்டா எடுத்திட்டு போய்டு…”
“விஸ்வா…” என்றார் தாத்தா.
“சொல்லுங்க தாத்தா…”
“அவங்க வீட்டு பொண்ணுக்கு அவங்க செய்யறாங்க அதை நீயேன் தடுக்கறே… அது அவளோட உரிமை, அவங்க செய்யறதை செய்யட்டும்…” என்றார்.
“இல்லை தாத்தா…”
“விஸ்வா…”
“சரி தாத்தா…” என்று எதையோ மனதில் வைத்து சொன்னான்.
“தம்பி நீங்க கேஎம் ஜுவல்லர்ஸ்க்கு இன்னொரு ஓனரா??” என்றார் ரத்தினவேல்.
“ஏன் கேட்கறீங்க??” என்றவனின் பார்வை தன் அக்காவையும் மாமாவையும் தொட்டு நின்றது.
அவர்கள் பார்வை சொன்ன சேதி புரிந்தவனாய் “ஆமா அக்காவும் நானும் தான் அதுக்கு ஓனர்ஸ்…”
“தம்பிக்கு கல்யாணமாகிடுச்சா??” ரத்தினவேலு தான் கேட்டார்.
இதென்னடா பழம் நழுவி பால்ல விழுற மாதிரி இருக்கு என்ற எண்ணம் தான் விஸ்வாவிற்கு.
ஆனாலும் தன் பெரியப்பா இப்படி அமுதனை பார்த்து அப்படி கேட்டது அவனுக்கு உடன்பாடில்லை.

Advertisement