Advertisement

13
ஒரு வாரம் சென்றிருக்கும் வீட்டில் சில மாற்றங்கள் பெரியவர்களுக்கு தெரியாமல் சிறியவர்களிடத்தில்.
விஸ்வாவுக்கும் காஞ்சனாவிற்கும் திருமணம் முடிந்த மறுநாள் நடந்து முடிந்த பேச்சுவார்த்தைக்கு பின்னே ஆண்கள் அனைவருமே வெளியேறி சென்றுவிட்டனர்.
காஞ்சனாவிற்கு உடனே தங்கள் வீட்டிற்கு செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்ற ரீதியில் அங்கிருந்த சோபாவிலேயே அமர்ந்திருந்தாள்.
அங்கயற்கண்ணி அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். ராதிகாவும் ஆண்கள் அனைவருமே கிளம்பிய உடனேயே தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.
ரேகா காஞ்சனாவிற்கு துணையாய் அமர்ந்திருந்தாள் இப்போது. மெதுவாய் ஒரு தலை உள்ளிருந்து எட்டிப் பார்த்தது. 
தலை முழுதும் நரைத்திருந்த நம் தெய்வானை பாட்டி தான் அவர். அங்கு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவளருகே வந்தார்.
“என்ன பாட்டி??” என்றாள் ரேகா.
“உங்கம்மா உன்னை கூப்பிடுறா உள்ள போ…” என்று ரேகாவை விரட்டினார் அவர்.
“சரி வாங்க பாட்டி போவோம்…”
“நீ போ, எனக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு…”
“பாட்டி…”
“போ…”
“அண்ணி…”
“உங்க அண்ணியை நான் ஒண்ணும் முழுங்கிட மாட்டேன்…”
‘என்ன வேணுமாம் இந்த பாட்டிக்கு எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுக்குது… என்ன பேசுறாங்கன்னு பார்ப்போம், ஏதாச்சும் ஏடாகூடமா பேசட்டும் அப்புறம் இருக்கு…’ என்ற எண்ணம் தான் ஓடியது காஞ்சனாவிற்கு.
“வெஞ்சனம் வெஞ்சனம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா… அது நீ தானா, காலையில எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கிட்டியாம், கேள்விப்பட்டேன்” என்றார் அவர்.
‘என்னது?? என்ன சொல்றாங்க இந்த பாட்டி…’ என்று அவள் விழிக்கும் போதே ரம்யாவும் சௌம்யாவும் அங்கே வந்தனர்.
“பாட்டி கொஞ்சம் சினிமா பைத்தியம் காஞ்சனா…”
“காஞ்சனா படத்துல வர்ற பாட்டை பாடுறாங்க… உன் பேரு காஞ்சனால அதான்…”
‘பாட்டி விளையாட்டா பாடினாலும் அந்த பாட்டு நமக்கு கொஞ்சம் ஒத்து தான் போகுது. சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் வெஞ்சனத்தோட தானே வந்திருக்கேன்…’
அவர்கள் தன்னையே பார்க்கிறார்கள் என்று உணர்ந்து “எனக்கு பாட்டெல்லாம் தெரியாது…” என்றாள்.
“பாட்டி எப்பவும் இப்படி தான், ஆனா ரொம்ப நல்லவங்க… வீட்டுல தாத்தா, மாமாலாம் இருந்தா பேச மாட்டாங்க…” என்றாள் சௌம்யா.
“இவங்க எல்லாம் சும்மா பில்டப் கொடுக்கறாங்க என்னைப்பத்தி. சரி நீ சொல்லு உன் பேரு வெறும் காஞ்சனா தானா இல்லை முழு பேரு வேற எதுவும் இருக்கா…”
“காஞ்சனா மாலா…”
“நல்ல பேர் நல்ல பேர்…”

“பாட்டி அப்போ எங்க பேரெல்லாம் நல்ல பேரு இல்லையா…”
“உங்க பேரும் நல்ல பேரு தான், ஆனா காஞ்சனா பேரு எங்க காலத்து பேரு… எவ்வளவு அழகான பேரு தெரியுமா அது…”
“காஞ்சனான்னா தங்கம்ன்னு அர்த்தம்… என் பேரன் தங்கத்தை கட்டி கூட்டிட்டு வந்திருக்கான்…”
“ஆமாமா விஸ்வா மாமா செமத்தியான ஆளை தான் கட்டியிருக்காங்க… உங்க பேரனுங்க எல்லாம் அலறுறாங்க இவங்க பேசுறதுல…”
“உண்மைக்குமே சொல்றேன் காஞ்சனா நீங்க செமைய பேசுறீங்க…” என்றாள் ரம்யா, அவளின் உடன்பிறந்தவளும் அதை ஆமோதித்தாள்.
“தேங்க்ஸ்…”
“அது எதுக்கு நமக்குள்ள?? இனிமே நாம பிரண்ட்ஸ் மகராசி நாங்க பேச முடியாதது எல்லாம் நீ பேசறம்மா…” என்று ரகசிய குரலில் சொன்னாள் சௌம்யா.
‘அடப்பாவிகளா இந்த வீட்டு பொம்பளைங்க எல்லாம் இவ்வளவு அப்பாவியா இருக்காங்க… இந்த வீட்டு ஆண் வாரிசுங்க தான் ரொம்ப ஆடுதுங்க போல’ என்று நினைத்தாள் காஞ்சனா.
“எல்லாரும் உன்னை பேசுறாங்கன்னு எதுவும் நினைக்காதம்மா… போக போக எல்லாம் சரியாகிடும், விஸ்வாக்கு கல்யாணமே ஆகாம போய்டுமோன்னு நினைச்சேன். இப்போ நீ வரவும் தான் நிம்மதியா இருக்கு…” என்று பாட்டி சொல்லவும் காஞ்சனாவிற்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.
“ரொம்ப நேரமா என்னை காணோம்ன்னா என் மருமகளுங்க என்னைய தேடுவாளுங்க நான் போய் அவளுங்களை மிரட்டி வைக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பினார்.
“இங்க பாரு பாட்டி சொல்லிட்டு போறதை, பாட்டி அவங்களை மிரட்டப் போறாங்களாம்…” என்று சொல்லி சிரித்தார்கள் அக்காவும் தங்கையும்.
காஞ்சனா கேட்டாள் “நிஜமாவே உங்களுக்குலாம் எங்க மேல வருத்தமில்லையா…”
“எங்க ரெண்டு பேருக்கும் சுத்தமாவேயில்லை. இன்னைக்கு காலையில எல்லாரையும் எப்படி லெப்ட் அன்ட் ரைட் வாங்குறீங்க… நாங்க கூட வாயே திறந்ததில்லை இப்படிலாம்…”
“ஏன் அப்படி??”
“அப்படியே எங்கம்மா எங்களை வளர்த்திட்டாங்க. சின்ன வயசிலேயே மாமா பசங்களை தான் கட்டிக்கணும்ன்னு சொல்லி சொல்லி வளர்ந்தாங்க…”
“வளர்ந்ததும் பெரியவங்க சொல்றதை தான் கேக்கணும்ன்னு அப்பப்போ சொல்லிட்டே இருப்பாங்க…”
“அப்படி வளர்ந்து நாங்க யாருமே எதிர்த்து பேசுறது அப்படிங்கறதையே மறந்திட்டோம்… என் புருஷன்கிட்ட ஒரு தடவை எதுக்கோ எதிர்த்து பேசிட்டேன், அன்னைக்கு பெரிய சண்டையே நடந்திடுச்சு வீட்டில…”
“எங்க அம்மா இந்த விசயத்துல எங்களுக்கு சப்போர்ட் பண்ணலை. அவங்க அண்ணன் பசங்களுக்கு தான் சப்போர்ட் அதோட வாயை மூடிக்கிட்டோம் நாங்க ரெண்டு பேரும்…”
“நமக்குன்னு யாரும் இருந்தா தைரியமா பேசலாம், யாரும் இல்லாதப்போ என்ன பேச…”
“ஓ!!”
“என்ன காஞ்சனா இப்படி சின்னதா ஓ!! அப்படின்னு சொல்லி முடிச்சிட்டீங்க…”
“இல்லை அப்படியில்லை எனக்கு கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்கு… அவங்க எல்லாம் அப்படி பேசவும், நீங்க எல்லாரும் கூட அதே மாதிரி தான் இருப்பீங்கன்னு நினைச்சேன்…”
“இங்க வீட்டு ஆம்பிளைகளுக்கு அடுத்தபடியா பேசுறது யாருன்னா அம்மாவும் ராதிகாவும் தான். ராதிகா அம்மாவோட வளர்ப்பு அப்படியே அம்மாவுக்கு ஜெராக்ஸ்…”
காஞ்சனா சிரித்தாள். “எதுக்கு சிரிக்கறேன்னு தெரியுது. நாங்களும் அம்மாவோட வளர்ப்பு தான் ஆனா அவங்க அளவுக்கு நாங்க பெரிசா யோசிச்சதில்லை. அப்பாவுக்கு சில விஷயம்லாம் புடிக்காது…”
“அம்மா இல்லாத சமயத்துல அப்பா எங்ககிட்ட பேசுவாங்க… மே பீ அப்பா பேச்சை கேட்டும் வளர்ந்ததுனால நாங்க இப்படி இருக்கமோ என்னவோ…” என்றாள் சௌம்யா.
“பெரியத்தை, சின்னத்தைலாம் எப்படி??”
“பெரியத்தை வாயை திறந்து பேசி நான் பார்த்ததேயில்லை. நாங்க பேசுற அளவு கூட அவங்க பேச மாட்டாங்க… வாங்க, போங்க, சாப்பிடுங்க, நல்லாயிருக்கீங்களா இவ்வளவு தான் அவங்க பேச்சு…”
“அப்புறம்…”
“உன் மாமியாரும் அப்படி தான், ஆனா அவங்க கொஞ்சம் எல்லார்கிட்டயும் நல்லா பேசுவாங்க… அதாவது எல்லா பேச்சும் வீட்டு பொம்பளைக கிட்ட மட்டும் தான்…”
“இங்க நாங்க யாருமே ஆம்பிளைங்க முன்னாடி பேசுறதில்லை…”
“ஹேய் இங்க என்னடி பண்ணிட்டு இருக்கீங்க??” என்று கேட்ட குரலில் அக்காவும் தங்கையும் அதிர்ந்து திரும்பி பார்த்தனர். அங்கே அங்கயற்கண்ணி நின்றிருந்தார்.
“அம்மா… அது வந்து…”
“என்ன வந்துன்னு இழுக்கறே??” என்று அவர் அதட்டினார்.
“இல்லைம்மா இவளை வேலை செய்ய சொல்லிட்டு இருக்கோம்… பாருங்களேன் எப்படி சுகமா சோபாவில உட்கார்ந்திட்டு இருக்கா, நாங்க மட்டும் வேலைப் பார்க்கவா. அதான் ஒழுங்கா வந்து வேலை செய்ன்னு ரம்யா சொல்லிட்டு இருந்தா…”
“நானும் கூட சேர்ந்து அதட்டிட்டு இருந்தே…” என்ற சௌம்யாவை மெச்சுதல் பார்வை பார்த்தார் அங்கயற்கண்ணி.
“இப்போ தான் நீங்க என் பொண்ணுங்க மாதிரி யோசிக்கறீங்க…” என்று பாராட்டினார் அவர்.
“ஹேய் எழுந்து போ, போய் அவங்களுக்கு கூடமாட ஒத்தாசை பண்ணு… சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்கலாம்ன்னு நினைக்காதே…” என்று அவர் காஞ்சனாவை சொன்னார்.
அவருக்கு கொஞ்சம் பயம் இருந்தது இப்போது. தன் பெண்களை அண்ணன் மகன்களுக்கே திருமணம் செய்து கொடுத்ததில் தன் பிள்ளைகள் சொத்தை அனுப்பவிப்பார்கள் என்ற எண்ணம் தான் அவருக்கு.
அங்கயற்கண்ணியின் கணவர் கொஞ்சம் நேர்மை பார்ப்பவர். அவருக்கு குடும்ப தொழிலாய் தச்சு வேலை இருந்த போதிலும் அதைவிடுத்து நன்றாய் படித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர்.
அவர் வசதிக்கு தகுந்தவாறு தன் மக்களுக்கு நகை போட்டு தான் கட்டிக் கொடுத்திருந்தார். சொந்தமாய் தோவாளையில் இருந்த வீட்டைத் தவிர பெரிதாய் அவர்களுக்கு என்று எந்த சொத்துமில்லை.
காலையில் காஞ்சனா நகைக்கடையின் உரிமையாளர் என்று விஸ்வா சொன்னதில் இருந்து அவருக்கு வயிற்றில் கொஞ்சம் புளியை கரைத்தது.
தன் மகளை அண்ணன் வீட்டில் மணமுடித்துக் கொடுத்து தானும் அங்கேயே அதிகாரம் செய்யலாம் என்ற ஆசை அங்கயற்கண்ணிக்கு இருந்தது.
அதனாலேயே அவர் வீட்டு ஆண்களுக்கு சப்போர்ட் செய்து பேசுவார். அந்த வீட்டில் அவர்களின் பங்கு தானே அதிகம் என்று கணக்கிட்டு தான் அவர் அப்படி இருந்தார்.
தன் மக்களுக்கு கூட அவர் அதிகம் கருணை காட்ட மாட்டார். அண்ணனோ, அப்பாவோ, மருமகன்களோ என்ன சொன்னாலும் அதுவே சரி என்று தான் சொல்வார்.
இப்போது தன் மக்கள் காஞ்சனாவை விரட்டுவது அவருக்கு சந்தோசமே. இல்லையென்றால் அவள் தங்களின் தலை மீது ஏறி உட்கார்ந்துவிடுவாளே என்ற பயம் தான் அவருக்கு.
காலையில் தான் பார்த்தாரே தன் மருமகன்களையே அந்த வாங்கு வாங்கினாளே.
“என்ன இன்னும் மசமசன்னு உட்கார்ந்திட்டு இருக்க…”
“கொஞ்சம் நில்லுங்க…” என்றாள் காஞ்சனா.
“என்ன??”
“என்னை அதிகாரம் பண்ண நீங்க யாரு??”
“ஹேய் நான் இந்த வீட்டு பொண்ணு…”
“அவ்வளவு தானே… நான் இந்த வீட்டு மருமக…”
“நீ நேத்து வந்தவடி… நான் பிறந்ததுல இருந்தே இங்க இருக்கேன்…”
“அதான் ஏன் இருக்கீங்கன்னு கேட்கறேன். கல்யாணம் ஆனா புருஷன் வீட்டுக்கு தானே போகணும் இங்க என்ன பண்றீங்க…” என்றாள்.
“அதெல்லாம் நீ சொல்லக் கூடாது. எங்கம்மா அப்பா சொல்லட்டும் நீ பேசாதே…” என்று ஆங்காரமாய் கத்தினார் அவர்.
“இப்படியெல்லாம் கத்தாதீங்க பீபி சுகர் வந்திடப் போகுது… அப்புறம் என்ன சொன்னீங்க உங்கப்பா அம்மா சொல்லட்டும்ன்னா, அதே தான் நான் சொல்றேன் உங்களுக்கு…”

Advertisement