Advertisement

“ஆமாடி இப்போ என்னங்கறே??” சொன்னது சரவணன்.
“அதைச் சொல்ல நீ யாருடா??” என்றவள் அவன் கொடுக்காத மரியாதையை அவளும் அவனுக்கு கொடுக்கவில்லை…
“ஏய் என்ன மரியாதை இல்லாம பேசறே??”
“நீ கொடுத்தியா எனக்கு… உன் தம்பி பொண்டாட்டின்னு மரியாதை இல்லாம நீ பேசினா நானும் பேசுவேன்…”
“காஞ்சனா…” என்று அதட்டினான் விஸ்வா.
அவன் குரலுக்கு தான் அவள் சற்று பணிந்தாள். “என்ன??” என்றாள் மெதுவாய்.
“நீ எதுவும் பேச வேணாம்??”
“அவரை முதல்ல என்கிட்ட பேச வேணாம்ன்னு சொல்லுங்க…”
“நீங்க போய் உங்கம்மாவை பாருங்க…” என்றவள் மற்றவர்களை அழுத்தமாய் பார்த்து “பார்க்கறீங்க…” என்றாள் அழுத்தி.
“வேணாம்…” என்றவன் “நீ நம்ம வீட்டுக்கு போ, நான் கடைக்கு கிளம்பறேன்…”
“நீ கடைக்கு போய் கிழிச்சது எல்லாம் போதும்…” என்று ஆரம்பித்தான் கார்த்திக்.
வீட்டு பெரியவர்கள் ஏதோ பெயரளவில் தான் அங்கே இருந்தார்கள் போல யாருமே பேசவில்லை. அங்கு, சகுந்தலா செந்தில்வேல், பாட்டி தவிர மற்றவர்கள் இருந்தார்கள் ராதிகா உட்பட.
“கார்த்திக் அண்ணா என்ன பிரச்சனை உங்களுக்கு??”
“நீ தான்டா எப்பவும் எங்களுக்கு பிரச்சனை, உன்னால தான் இங்க எப்பவும் பிரச்சனை…” என்றான் சரவணன்.
“சரவணா…” என்று கனகவேலும் ரத்தினவேலும் அதட்டினர் அவனை.
“ஏன்பா விஸ்வா ஊர்ல உனக்கு பொண்ணே கிடைக்கலைன்னா நொண்டியை கட்டிக்கிட்டே” கேட்டது அவனின் அத்தை அங்கயற்கண்ணி.
“அத்தை…” என்று வீடே அதிர அவன் கத்திய கத்தலில் சகுந்தலா, செந்தில்வேலும் கூட அங்கு வந்துவிட்டனர்.
“இனிமே அவளை நீங்க யாராச்சும் நொண்டி அப்படி இப்படின்னு பேசினீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்…”
“உங்க யாருக்கும் பிடிக்கலைன்னா நீங்க யாரும் அவளைப் பத்தியும் பேசத் தேவையில்லை அவளோடவும் பேசத் தேவையில்லை…”
“உங்க எல்லார்க்கும் தான் சொல்றேன்… இன்னொரு முறை இப்படி பேச்சு வந்துச்சு அவ்வளவு தான்…” என்று கைநீட்டியே எச்சரித்தான்.
அவனின் இப்படியொரு கோபத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவன் ஒரு நொடியில் வீட்டை விட்டு போய் விடுவான். ரேகாவின் திருமணம் தான் இங்கிருந்தால் தான் நடைபெறும் என்று தான் அமைதியாயிருக்கிறான்.
“வா போகலாம்…” என்று அவள் கைப்பிடிக்க அவன் கையை எடுத்துவிட்டாள். அவன் என்னவென்பது போல் அவளைப் பார்த்தான்.
“எனக்கு இவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”
“வேணாம் காஞ்ச்சு…”
“பேசணும்…”
“இந்த வீட்டுல பெரிய மனுஷங்கன்னு யாராச்சும் இருக்கீங்களா??” என்றாள் சத்தமாய்.
“ஏய் என்ன நினைச்சுட்டு இருக்கே?? எங்க தாத்தா, பாட்டி, அப்பா, சித்தப்பா, அத்தை, மாமான்னு எல்லாரும் இருக்காங்க உன் கண்ணுக்கு தெரியலையா…” என்று முன்னாடி வந்து பேசினான் சரவணன்.
“அய்யய்யோ அவ்வளவு பேரும் பெரிய மனுஷங்களா இந்த வீட்டுல இது எனக்கு தெரியாம போச்சே” என்றவளின் பேச்சில் அப்பட்டமான நக்கல் இழையோடியது.
“காஞ்சனா என்ன பேச்செல்லாம் வேற மாதிரி போகுது…” என்றான் விஸ்வா.
“ஒரு மாதிரியும் போகலைங்க…” என்றவள் “நான் நினைச்சேன் இந்த வீட்டுக்கே பெரிய மனுஷங்க அண்ணன் தம்பி நீங்க ரெண்டு பேரு தான்னு…”
“இந்த வீட்டில உங்க ரெண்டு பேரோட குரல் தானே அதிகம் கேட்குது அதான் டவுட்டா கேட்டேன்…” என்று கார்த்திக்கையும் சரவணனையும் பார்த்து சொன்னாள்.
தலையிருக்க வாலெல்லாம் வாயாடக் கூடாது என்ற தொனி தான் அவள் குரலில். இப்போது வீட்டு பெரியவர்கள் கார்த்திக்கையும், சரவணனையும் முறைத்தார்கள் எல்லாம் உங்களால் தான் என்பது போல்.
“இப்பவும் நீங்கலாம் வாயைத் திறந்து பேச மாட்டீங்களா… ஹ்ம்ம் சோ இங்க சின்ன பிள்ளைங்க வெள்ளாமை தான் நடக்குது போல…”
“விச்சு உன் பொண்டாட்டி பேசுற விதம் சரியில்லை, நீ பார்த்திட்டு பேசாம இருக்கே… பெரியவங்களை மதிக்கணும்ன்னு கூடவா அவ வீட்டில அவளுக்கு சொல்லித் தரலை…” என்றார் கனகவேல் இப்போது.
“நான் தான் நேத்தே சொன்னேன்ல எல்லாருக்கும் சில விஷயங்கள் ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும்ன்னு. சின்ன பசங்க மனசு கேட்காம பேசறாங்க…”
“அவங்களைப் போல நாங்களும் பேசினா நல்லாயிருக்குமா சொல்லு…”
“சபாஷ்…”
“காஞ்சனா பேசாம இரு…”
“பேசுவேன் நான் இப்போ பேசுவேன்…”
“ஹேய் எங்க தாத்தா பேசும் போது நாங்களே குறுக்க பேச மாட்டோம் நீ பேசுவியே… எல்லாம் இவனை சொல்லணும் தகுதி இல்லாத உன்னைய கல்யாணம் கட்டிக்கிட்டான்ல நீ பேசத்தான் செய்வ…”
“உனக்கென்ன காசு பணம், சொத்துன்னு இவனை வளைச்சு போட்டுட்ட” என்றான் கார்த்திக்.
“அண்ணா அவளைப்பத்தி பேசாதீங்கன்னு நான் சொன்னனா இல்லையா… அவ ஒண்ணும் ஒண்ணுமில்லாதவ இல்லை…”
“கே எம் ஜுவல்லர்ஸ்ல ஒன் ஆப் தி ஓனர் அவ…”
இப்போது அங்கிருந்த மற்ற அனைவருமே வாயை ஆவென்று பிளந்தனர். விஸ்வாவின் டிசைனை தன் டிசைனாய் செய்து அதை செய்தித்தாளில் விளம்பரம் செய்தது இவள் தானா…
“அப்போ நீ தான் அவளுக்கு டிசைனை கொடுத்தியா??” என்று சரவணன் இவனை முறைத்தான்.
மனைவியை விட்டுக் கொடுக்க முடியாதனவனாய் நின்ற விஸ்வா “நான் கொடுக்கலை??”
“அப்போ அவ திருடிட்டாளா…”
காஞ்சனா இதற்கு விஸ்வா என்ன பதில் கொடுக்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பேசவில்லை என்றால் அவளே பேசத்தான் காத்திருந்தாள்.
“அவ திருடலை, இதுக்கு முன்னாடி நம்ம கடையில யார் திருடுனாங்களோ அவங்களே தான் அதை திருடி இவகிட்ட கொடுத்திருக்காங்க… இவளுக்கு தெரியாது அது என்னோட டிசைன்னு…” என்று உண்மை பாதி பொய் மீதியாக சொல்லி முடித்தான்.
“பாரிஸ்ல இருக்க அந்த பெரிய கடை இவங்களுது தானே…”
“ஹ்ம்ம் ஆமா…”
“நீ இதை வீட்டில சொல்லியிருக்கலாமே…”
“எதை??”
“இந்த பொண்ணைப் பத்தி முன்னாடியே சொல்லியிருக்கலாமே…” என்றது ரத்தினவேல்.
காசு என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பதை லைவ்வாக அவர்கள் செய்துக் காட்டிக் கொண்டிருக்க அதை ஒரு அருவருப்புடன் பார்த்திருந்தாள் காஞ்சனமாலா.
“அதான் சொன்னேனே அவ ஊருக்கு போய்ட்டா, நடுவுல எந்த காண்டக்ட்டும் இல்லை… என்னை மறந்திட்டான்னு நினைச்சுட்டு இருக்கும் போது தான் அவளை சென்னையில பார்த்தேன்…”
“இத்தனை வருஷத்துல ஒரு முறை கூட உனக்கு இவளைப்பத்தி எங்ககிட்ட சொல்லணும்ன்னு தோணலையா…”
“உனக்கு பொண்ணு பார்க்கணும்ன்னு எல்லாம் நாங்க கிளம்பினோமே…”
“பெரியப்பா நான் திரும்ப திரும்ப அதே தான் சொல்றேன். இவ எங்கே போனான்னு எனக்கு அப்போ தெரியாது. சென்னைக்கு போன பிறகு தான் கேஎம் ஜுவல்லர்ஸ் இவளோடதுன்னு எனக்கு தெரியும்…”
“அங்க தவிர்க்க முடியாத சூழ்நிலை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அவ்வளவு தான்…” என்று முடித்தான் விஸ்வகர்மா.
சடுதில் அங்கு சில பார்வை மாற்றங்கள் நிகழ்ந்தது விஸ்வா அதை கவனிக்க தவறினான். காஞ்சனா அவர்களை நன்றாகவே கவனித்தாள்.
அந்த வீட்டு பெண்கள் அனைவருமே காஞ்சனாவை ஆவென்று தான் பார்த்தனர். அவர்கள் யாருமே பெரியவர்களை இந்தளவிற்கு எதிர்த்து பேசியதேயில்லை. அங்கயற்கண்ணி, ராதிகா தவிர்த்து மற்ற பெண்கள் அங்கே அதிகம் பேசியதில்லை.
வீட்டின் மருமகள்கள் காஞ்சனாவிற்கு தங்கள் மனதிற்குள் ஓ!! போட்டுக்கொண்டனர். பின்னே அவர்கள் அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்து தாய் மாமன் மகன்களையே மணந்திருந்தார்கள்.
வீட்டு சட்டத்திட்டங்கள் எல்லாம் அவர்களுக்கும் கொஞ்சம் தெரியும் தானே. தங்களின் மாமியார்மார்களே பேசாத பட்சத்தில் அவர்கள் எங்கே பேச.
அவர்களுக்கு எதுவொன்று வேண்டுமென்றாலும் அங்கயற்கண்ணி மூலமாய் தான் பேசி வாங்கிக் கொள்வர். சில சமயத்தில் பெற்ற தாயே அவர்களுக்கு உதவ மாட்டார்.
“விஸ்வா நீ கடைக்கு கிளம்பு, அந்த பொண்ணு இங்க இருக்கட்டும்…” என்றார் கனகவேல்.
“அதுக்குள்ளே என்னை ஏத்துக்கிட்டீங்களா??” என்றாள் அவள்.
“பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் இனி நீ இந்த வீட்டு பொண்ணும்மா… நாளைக்கு இவங்க எல்லாரோடையும் நீ சேர்ந்து தான் இருக்கப் போறே…”
“ஒரேடியா விலகி இருக்க முடியாதுல… நீ தனியா போன யாரும் ஒட்டாமலே போய்டுவாங்க… எல்லார்கூடவும் சேர்ந்து இரும்மா…” என்றார் கனகவேல்.
“காஞ்ச்சு தாத்தா தான் சொல்றார்ல ப்ளீஸ் நீ யாரையும் எதுவும் பேசிடாதே…” என்று அவளை தனியே அழைத்து சொன்னான் விஸ்வா.
“பேசினா??”
“உனக்கு என்ன பேசணும்ன்னாலும் நீ என்னைப் பேசு…”
‘நீங்க எனக்கு வெறும் துருப்புச்சீட்டு தான். என் டார்கெட்டே இவங்க தானே… உங்களை வைச்சே இவங்களை அடிக்கறேன்… இப்போதைக்கு பொறுமையாவே போறேன்…’
‘என்னால இந்த வீட்டில பல நல்ல காரியங்கள் நடக்க வேண்டி இருக்கே…’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டவள் அவனிடம் “நீங்க என்னை அடிக்காம இருந்தா சரி…”
“காஞ்ச்சு ப்ளீஸ் இனிமே அப்படி செய்ய மாட்டேன்னு சொன்னேன்ல… நான் சொன்னா சொன்னது தான் இனி உன் மேல என் கைப்படாது…” என்றான் உறுதியாய்.

Advertisement