Advertisement

12
வெறும் தரையில் அப்படியே படுத்துக் கொண்டிருந்தான் விஸ்வகர்மா. கடல்காற்று தொலைவில் எங்கோ கேட்டுக் கொண்டிருந்தது.
இது போல் சாதாரண நாட்களில் படுத்துக் கொண்டிருப்பவனின் செவிகளுக்கு ஒவ்வொரு விஷயமும் உவப்பானதாய் ரசிக்கும் படியாகவே இருந்திருந்தது.
இன்றோ சுற்றுப்புறம் மறந்து ஏன் தன்னையே மறந்து தான் உழன்றிருந்தான். ஊதக்காற்று கூட அவன் மனதின் வெம்மையை குளுமைப்படுத்தவில்லை.
இலக்கின்றி வான் வெளியை வெறித்தவாறே எவ்வளவு நேரம் இருந்தானோ, லேசாய் ஆரம்பித்த சாரலை பொருட்படுத்தாதவன் அது பெருமழையாய் பொழிய ஆரம்பிக்கவும் எழுந்திருந்தான்.
கிட்டத்தட்ட அவன் முழுதாய் நனைந்திருந்தான். கீழே இறங்கி வர கதவை அவன் எப்படி திறந்து போட்டு சென்றிருந்தானோ அப்படியே திறந்திருந்தது.
வெளிக்கேட்டு கூட அப்படியே திறந்து போட்டிருந்தது. கேட்டை மூடி பூட்டை போட்டுவிட்டு வெளி வராந்தாவில் இருந்து உள் வராந்தாவிற்குள் நுழைந்தான்.
அந்த கதவையும் அடைத்து தாழிட்டு படுக்கையறைக்கு செல்ல காஞ்சனா அப்படியே கீழேயே தான் படுத்திருந்தாள். இங்கயே தூங்கிட்டாளா என்று யோசித்துக் கொண்டே அவளை நோக்கி குனிய அவன் அடித்து கீழே தள்ளிச் சென்றதில் நெற்றியில் நன்றாய் வீக்கம் கண்டிருந்தது.
உள்ளே பதற அவளை எழுப்பினான். “காஞ்ச்சு” அவளிடம் அசைவில்லை, அவனுக்கு பயம் பிடித்துக்கொண்டது அவள் மயங்கி விழுந்திருப்பாளோ என்று. மீண்டும் மீண்டும் உலுக்க “என்ன??” என்றாள்.
“இங்க ஏன் படுத்திருக்க??”
“வேற எங்க படுக்க??”
“கட்டில்ல படுக்க வேண்டியது தானே…”
“மனசு பூரா வலியா கிடக்கு, எந்த மெத்தையும் எனக்கு சுகத்தை கொடுக்கப் போறதில்லை…”
“நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்லிட்டு இருக்கே??”
“அதான் அடிச்சாச்சு இல்லை, மிச்சம் எதுவும் இருக்கா நீங்க அடிக்கறதுக்கு… இருந்தா அடிங்க…”
“சாரிம்மா ப்ளீஸ் எழுந்திரு…” என்று சொல்லி அவளுக்கு கைக்கொடுத்தான்.
எந்தவித பிகுவும் செய்யாமல் அவளும் அவன் கரத்தில் தன் கரத்தை வைத்து பின் எழுந்தாள். “ரொம்ப வீக்கமா இருக்கு, நான் தைலம் தேய்ச்சு விடட்டுமா…”
அவள் பதிலொன்றும் சொல்லவில்லை. அதையே அவன் சம்மதமாய் எடுத்துக்கொண்டு தைலத்தை எடுத்து வந்தான்.
“முதல் ஐஸ் கியூப் வைக்கறேன்…” என்று ஓடினான். அந்த அறையின் ஒரு ஓரத்தில் இருந்த பிரிட்ஜை திறந்து ஐஸ் எடுத்து வந்து அவள் நெற்றில் வைத்து தேய்த்தான்.
அவள் கட்டிலில் படுத்திருந்தாள். ஒரு பத்து நிமிடம் போல் வைத்தவன் கையை கழுவிட்டு வந்து தைலத்தை எடுத்து வீக்கமிருந்த இடத்தில் அரக்கி தேய்க்க அவளிடத்தில் எந்த சலனமும் இல்லை.
“உனக்கு வலிக்கலையா??”
“வலிக்குதுன்னு சொன்னா எல்லாம் சரியா போய்டுமா??” என்றாள் வெடுக்கென்று.
“இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்… என்னை மன்னிச்சுடு…”
அவள் பதில் கொடுக்கவில்லை. இப்போது அவள் நெற்றில் மெதுவாய் தேய்த்துக் கொடுத்தான். “வலிச்சா சொல்லு…” என்று.
“எவ்வளவு வலிச்சாலும் சொல்ல மாட்டேன்…” என்றாள் பிடிவாதக்குரலில்.
“ஏன் இப்படி பண்றே??”
“இதைவிட பெரிய வலி எல்லாம் கடந்து வந்திட்டுட்டேன். இதெல்லாம் எனக்கு வலியேயில்லை”
அவளின் இந்த பதில் அவனுக்கு தான் வலித்தது. தேய்ப்பதை நிறுத்திவிட்டான். கையை அருகில் இருந்த துண்டில் துடைத்துவிட்டு கட்டிலில் படுத்தான். ‘எப்படியெல்லாம் இவளோட சந்தோசமா வாழணும்ன்னு ஆசைப்பட்டேன்.
என் கையாலேயே அடிக்க வைச்சுட்டாளே. இவ்வளவு தூரம் இவ செய்யறான்னா ஏதோ நடந்திருக்கு என்று அவன் மனம் முதன் முறையாக மிகச்சரியாக யோசித்தது.
நம்ம வீட்டு ஆளுங்களால ஏதோ இவளுக்கு கஷ்டமாகியிருக்கு. அவங்க தெரிஞ்சு செஞ்சிருக்க மாட்டாங்க, ஏதோ தப்பு நடந்திருக்கும், இவளும் ஏதோ தப்பா நினைச்சுட்டு இருப்பான்னு நினைக்கிறேன்’ இப்படித்தான் அவனின் யோசனை சென்றது.
அவளிடம் கேட்டால் நிச்சயம் பதில் கொடுக்க மாட்டாள் என்று மட்டும் உறுதி அவனுக்கு.
அவள் புரண்டு படுப்பது தெரிந்தது. “என்னாச்சு??” என்றான்.
“ஒண்ணுமில்லை… எதுக்கு என்ன என்னன்னு கேட்டு இப்படி என் உயிரை வாங்கறீங்க??”
“நான் தான் உயிரை வாங்கறேனா??” என்றான் அவள் கண்ணை நேருக்கு நேராக உற்று நோக்கி.
“ஆமா…”
“நீ சொல்றதே சரின்னு வச்சிக்குவோம். என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட, உனக்கு தான் விருப்பமில்லையே”
“யார் சொன்னா??”
இந்த வார்த்தை அவனுக்குள் லேசாய் இதம் கொடுத்தாலும் அதை விடுத்து “அதுக்கு என்ன அர்த்தம்??”
“உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொன்னதே நான் தான். அது உங்களை விரும்பினதுனால இல்லை…”
இது ஒரு கணவனாய் காதலனாய் என்று அனைத்து விதத்திலும் அவனை காயப்படுத்தியது. மரண வலியை விட அவள் வார்த்தை கொடுக்கும் வலி அவன் நெஞ்சை இன்னும் இன்னும் என்று காயத்தை ஆழப்படுத்தியது.
“பழிவாங்கவா…”
“உங்களை போய் நான் பழி வாங்க முடியுமா??”
“பின்னே ஏன்??”
வழக்கம் போலவே அமைதி அவளிடத்தில். “எனக்கு தூக்கம் வருது…” என்ற அறிவிப்பு மட்டுமே.
அவன் உறக்கம் தான் தூரச் சென்றிருந்தது. இவளால் அவனுக்கு ஒரு புறம் வேதனையென்றால் ரேகாவால் ஒரு புறம்.
அவளின் திருமணம் பற்றிய யோசனை, எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ அவ்வளவு விரைந்து செய்ய வேண்டும். காலம் தாழ்த்த முடியாதே இந்த விஷயத்தில்.
விடிய விடிய உறங்கவேயில்லை அவன். கைபேசியை எடுத்து மணியை பார்க்க ஐந்தரை என்றிருந்தது. எழுந்து காலைக்கடன்களை முடித்து குளித்து வந்தான்.
காஞ்சனாவின் அருகே வந்து பார்க்க அவள் நெற்றியில் வீக்கம் குறைந்திருந்தது. ரத்தம் கட்டியது போல இருந்தது.
கன்னத்தை பார்க்க இவன் அடித்ததின் அடையாளம் அங்கு மிச்சமிருந்தது. மெதுவாய் அவன் வலக்கரம் நீண்டு அதை வருடிக்கொடுத்தது.
அவன் வருடலில் கண் விழித்து அவனை நேருக்கு நேர் பார்த்தவள் ஒன்றும் சொல்லவில்லை.
“உன் தம்பி போன் பண்ணியிருக்கான் நைட்”
“அவன்கிட்ட பேசிடு…” என்றுவிட்டு நகர்ந்தான்.
“துரோகிகிட்ட எல்லாம் நான் பேச விரும்பலை…”
“பாருடா சாத்தான்லாம் வேதம் ஓதுது…” என்றான்.
“சாத்தான் எங்கயாச்சும் வேதம் ஓதுமா, இதுக்கூட தெரியாம இருக்கீங்க…”
“உன் தம்பியை நீ துரோகின்னு சொல்றியே அப்போ நீ யாராம்??”
“உங்க மனசை தொட்டு சொல்லுங்க இப்போ நான் செஞ்சது துரோகமா, உங்களோடது இப்போ என்னோடது இல்லையா…” என்று புது நியாயம் கற்பித்தாள்.
“நல்லா சமாளிக்கறே… என்னை விரும்பலை ஆனா கல்யாணம் பண்ணிக்குவே… நான் உனக்கு வேணாம் ஆனா என்னோடது எல்லாம் உனக்கு வேணும்… என்னைப் பார்த்தா உனக்கு எப்படிடி தெரியுது…” என்றவனின் குரலில் இப்போது சூடேறியிருந்தது.
“காலையிலவே ஆரம்பிக்கணுமா… நைட் அடி வாங்கி டயர் ஆகிட்டேன். போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிட்டு வர்றேன்… தெம்பா சண்டை போடலாம்…”
“இங்க கிட்சன்ல எல்லாம் இருக்கா, இல்லை வாங்கித்தான் செய்யணுமா??”
“சாப்பாடு எப்பவும் பெரிய வீட்டுல தான்…”
“ஏன்??”
“எப்பவும் அப்படித்தான்… நீ குளிச்சுட்டு வா சேர்ந்தே போவோம்…”
“ஓஹோ!!” என்றவள் அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
குளித்துவிட்டு நைட்டியுடன் வந்தவள் அவனை அங்கே தேட அவன் வெளியில் சென்றிருந்தான் போலும். கதவை அடைத்துவிட்டு வந்து புடவைக்கு மாறினாள்.
கதவை திறக்கவும் அவன் வராந்தாவில் இருந்து உள்ளே வந்து கொண்டிருக்கவும் சரியாக இருந்தது.
“போவோமா??”
அவன் அவளைப் பார்த்து இப்போது தயங்கினான். “இல்லை வேணாம் நான் வேணா உனக்கு டிபன் எடுத்திட்டு வந்து தர்றேன்…”
“எதுக்கு??”
அவன் பதில் சொல்லாமல் அவளை சுட்டிக்காட்டினான். அவள் கன்னத்தில் லேசாய் அந்த தடமிருந்தது.
நெற்றியில் கன்னிப்போயிருந்தது. “இதெல்லாம் பெரிய விஷயமில்லை…”
“தப்பா நினைச்சுப்பாங்க…”
“உங்களை தானே நினைச்சுக்கட்டும்…”
அவள் பதிலில் கண்ணை மூடித் திறந்தவன் “சரி வா…” என்றான்.
“ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்றாள். சில நிமிடங்கள் கழித்து வெளிய வந்தவளின் கன்னத்தில் இப்போது அந்த தடம் தெரியவில்லை.
“என்ன செஞ்சே??”
“ரோஸ் பவுடர் அதிகமா போட்டுக்கிட்டேன்…”
“நெத்தியில் என்னன்னு கேட்டா கதவு இருக்கறது கவனிக்காம முட்டிக்கிட்டேன்னு சொல்லிக்குவேன்…”
அவன் அதற்கு மேல் எந்த விளக்கமும் கேட்கவில்லை. இருவருமாய் பெரிய வீட்டிற்குள் நுழைய அங்கு இவனுக்கு முன்னமே ஒரு கூட்டமே ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது.
அவன் உள்ளே செல்லவும் கூட்டம் மூலைக்கொன்றாய் பிரிந்தது. “வாங்கண்ணா சாப்பிடலாம் நான் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கேன்…” சொன்னது ரேகா.
இதுவரை அவள் ஒரு நாள் கூட அவனுக்காய் காத்திருந்து உணவருந்தியதே இல்லை. எல்லாமே புதிதாக இருக்கிறது. அவன் மற்றவர்களை பார்க்க அவன் பார்வையின் பொருள் புரிந்தவளாய் “எல்லாரும் சாப்பிட்டாச்சு…”
ஒரே நாளில் இப்படியொரு மாற்றத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. “வா…” என்று காஞ்சனாவை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளின் முன் அமர்ந்தான்.
ரேகாவே இருவருக்குமாய் தட்டை வைத்து தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். விஸ்வா காஞ்சனாவிற்கும் ரேகாவிற்கும் பரிமாறிவிட்டு தனக்கும் வைத்துக் கொண்டான்.
அவர்கள் மூவருமாகவே பரிமாறிக் கொண்டு சாப்பிட்டு எழுந்தனர்.
“அம்மா எங்கே??”
“உள்ள இருக்காங்க…”
“ஏன் இங்க வரலை??”
அவள் பதில் சொல்லவில்லை. “சரி நானே போய் பாக்குறேன்…”
“இப்போ வேணாம்…” என்று தடுத்தாள்.
அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த காஞ்சனா “ஏன் வேணாம்?? யாராச்சும் எங்க கூட பேச வேண்டாம்ன்னு அவங்களை தடுக்கறாங்களா??” என்று சுற்றியுள்ளவர்களின் மீது பார்வையை வைத்தாள்.

Advertisement