Advertisement

11
திருவனந்தபுரத்தில் இறங்கி இதோ கன்னியாகுமரிக்கும் வந்தாயிற்று. வீட்டில் எப்படிச் சொல்வது என்று இவ்வளவு நேரமும் அதே தான் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அண்ணா…”
“என்ன??” என்று சிடுசிடுப்பாய் சொன்னேன்.
“வீடு வந்திடுச்சு…” என்று ரேகா சொன்னப் பிறகு அவன் வீட்டின் முன் வண்டி நிற்பதை உணர்ந்தான்.
அவன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த போது இல்லாத எண்ணமெல்லாம் இப்போது தோன்றியது. வீட்டில் சொல்லி செய்திருக்கலாமே என்று.
ஆனால் வீட்டில் என்னவென்று சொல்வது. ரேகாவின் அவசரத்திற்காக தான் அவசரமாய் திருமணம் செய்துக் கொள்ள நேர்ந்தது என்றா.
இப்போ மட்டும் என்ன சொல்லப் போறியாம் என்று மனசாட்சி கேள்விக்கேட்டது. ரேகாவின் திருமணம் வேறு அவன் தலை மேல் கத்தியாய் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இதை சொல்வதெற்கே என்ன நடக்கப் போகிறதோ இதில் அவள் திருமணம் என்று நினைத்தவன் மெல்ல வண்டியில் இருந்து இறங்கினான்.
அவனுக்கு இப்போது பிடித்தாலும் பிடிக்கவில்லையென்றாலும் காஞ்சனா அவனின் மனைவி. அவளுக்கு எதுவும் கவுரவ குறைச்சல் இருக்கக்கூடாது என்று எண்ணினான்.
“வா…” என்று சொல்லி அவளுக்கு கைக்கொடுக்க அவளும் எந்த தயக்கமும் காட்டாது அவனுக்கு கைக்கொடுத்தாள்.
அவள் உடைமைகளை அவனே எடுத்துக்கொண்டான். “பரவாயில்லை நானே எடுத்துக்கறேன்” என்றவளை அவன் பார்த்த பார்வையில் அடங்கினாள்.
அவன் நேராக அவன் தங்கியிருந்த வீட்டிற்கு செல்லாது பெரிய வீட்டிற்குள் நுழைந்தான். இந்நேரம் பெண்கள் தவிர ஆண்கள் யாரும் வீட்டிலிருக்க மாட்டார்கள்.
“அம்மா…” என்று குரல் கொடுத்தவாறே உள்ளே நுழைந்தான்.
அதிசயமாய் அவன் அக்கா ராதிகா அங்கிருந்தாள். “என்னடா இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்க, கடைக்கு போகலையா நீ…”
“ஹ்ம்ம் ஊருக்கு போயிருந்தேன் இப்போ தான் வர்றேன். எல்லாரும் எங்கே…” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே காஞ்சனா ரேகா இருவரும் அவன் பின்னேயே வந்தனர்.
“யாருடா இது??” என்று உள்ளூர பதற எழுந்து நின்றாள் ராதிகா.
புதிதாய் ஒரு பெண் தன் வீட்டில், கழுத்தில் புதுத்தாலி வேறு, மஞ்சள் புடவை உடுத்தியிருக்கிறாள். இப்போது தான் திருமணம் முடிந்தது என்று அது பறைசாற்ற உடல் முழுவதும் அதிர்வலைகள் தோன்ற “பாட்டி, அம்மா…” என்று கத்தினாள்.
அவள் கத்திய கத்தலில் எல்லாரும் செய்துக் கொண்டிருந்த வேலையை பாதியில் விட்டு ஓடிவந்தனர் என்னவோ ஏதோவென்று. அனைவருக்குமே அதிர்ச்சி தான். 
“யார் இது??” என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி கேள்வி கேட்க “என்னோட மனைவி” என்றவன் “இவங்க என்னோட அம்மா, பாட்டி, பெரியம்மா, அக்கா, அண்ணிங்க…” என்று அறிமுகம் செய்தான்.
“என்னடா கடைக்கு போய் காய்கறி வாங்கிட்டு வந்தேங்கற மாதிரி சொல்றே??”
“என்ன நினைச்சுட்டு இருக்கே??” என்றாள் ராதிகா.
அவளே வீட்டின் ஆண் மக்கள் அனைவருக்கும் போன் செய்து சொல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லோருமே அங்கே இருந்தனர்.
அவளை யாருமே உட்காரச் சொல்லவில்லை என்பதை கவனித்தவன் “நீ உட்காரு…” என்றான் அவளிடம்.
ரேகாவை கண்ஜாடை காட்ட அவளும் “வாங்கண்ணி…” என்று சொல்லி அவளோடு அமர்ந்துக் கொண்டாள்.
காஞ்சனா அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போ தான் உள்ள வந்திருக்கேன், என் ஆட்டத்தை இன்னைக்கே எல்லாரும் பார்க்க வேண்டாம். 
எல்லாத்துக்கும் கால நேரம் வரும் அப்போ காட்டுறேன் நான் யாருன்னு என்று ஒரு வன்மத்தோடு நினைத்துக் கொண்டாள்.
அவனின் அண்ணன்மார்கள் கன்னாபின்னாவென்று பேச ஆரம்பித்தார்கள். “எப்போ பார்த்தாலும் விஸ்வா விஸ்வான்னு கொஞ்சுவீங்க. அவன் எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும், அவன் சொல்ற படி நடங்கன்னு எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவீங்க…”
“இப்போ அவன் என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கறான்னு பார்த்தீங்களா…” என்று கார்த்திக் ஒரு பக்கம் கத்தினால் சரவணனோ “அண்ணா அதெல்லாம் இவிங்க மன்னிச்சுடுவாங்க அண்ணா…”
“நாம இவங்களுக்கு கிள்ளுக்கீரை தான் எப்பவும்” என்றான்.
“எல்லாரும் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா…” என்று சத்தம் போட்டார் கனகவேல்.
“வழக்கம் போல இவரு ஆரம்பிச்சிட்டாருடா…”
“தீர்ப்பும் வழக்கம் போல அவனுக்கு சாதகமா தான் போக போகுது…” என்றான் சரவணன்.
“இந்த முறை அதுகெல்லாம் நாம விடவே கூடாது சரவணா…” என்றான் கார்த்திக்.
“பாப்போம்…” என்றான் சரவணன் நம்பாத குரலில்.
“விஸ்வா…” என்ற தாத்தாவின் முழு அழைப்பே அவனுக்கு பேதத்தை உணர்த்தியது.
“சொல்லுங்க தாத்தா…”
“என்ன நடந்துச்சுன்னு நீ தான்பா சொல்லணும்… ஏன்னா நான் இப்பவும் உன்னை நம்புறேன்…” என்று அவர் சொன்னாலும் அதில் நம்பாத தன்மையே இருந்தது.
இப்போது ரத்தினவேல் முன்னே வந்தார் “விச்சு இவ அந்த பொண்ணு… நான் இரண்டு மூணு வருஷம் முன்னாடி நம்ம கடையில வேலைக்கு சேர்த்த பொண்ணு தானே…” என்றார்.
அவர் இப்போ தான் காஞ்சனாவை பார்த்தார். வீட்டில் இருந்த மற்றவர்கள் வந்ததினால் அவள் வேறு வழியில்லாமல் எழுந்து நிற்க வேண்டி இருந்தது.
அதுவரை ரேகா அவளை மறைத்திருக்க அவள் சற்று நகர்ந்த வேளை தான் காஞ்சனாவை பார்த்திருந்தார் அவர்.
இப்போது அவர் மகன் கார்த்திக்கை வேறு பார்க்க கார்த்திக்கும் இப்போ தான் அவளைப் பார்த்தான். இனி அவன் எங்கே வாயை திறக்கப் போகிறான்.
“ஆமா பெரியப்பா…”
“இவளை எங்க இருந்துடா பிடிச்சே?? சொல்லாம கொள்ளாம வேலையவிட்டு போனவ தானே இவ…”
“சொல்லாம கொள்ளாம எல்லாம் போகலை. அவ பாட்டிக்கு உடம்பு சரியில்லை இனிமே வரமாட்டேன்னு சொல்லிட்டு தான் போனா…” என்று அவளை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.
“சரி இருந்திட்டு போகட்டும், இவளையா நீ கல்யாணம் பண்ணே… உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா…” என்றவர் அவள் குறையை தான் பார்த்தார்.
நெருங்கிய உறவினர் ஒருவர் பாவம் என்று சொல்லித் தான் அவளை வேலைக்கு சேர்த்துக் கொள்ள சொல்லி கேட்டிருந்தார்.
நம்ம இனம் என்று சொல்லவும் இவரும் சரியென்று சொல்லித்தான் வேலைக்கு சேர்த்தார். கார்த்திக் இருந்த கடையில் தான் ஆரம்பத்தில் இவள் வேலை பார்த்தாள்.
கார்த்திக் சும்மாயில்லாமல் இவளிடம் சில்மிஷம் செய்ய அது தெரிந்த ரத்தினவேல் இவளை வேலையை விட்டு அனுப்பிவிட பார்க்க இவள் தான் அப்போது அவரிடம் தனக்கு வேலை முக்கியம் உங்களோட வேற கடையில என்னை சேர்த்துக்கோங்க என்று சொல்ல தன் மகனின் தப்பிற்கு பிராயச்சித்தம் போல் அவளை தக்கலைக்கு அனுப்பியிருந்தார் அவர்.
“பெரியப்பா அவ என்னோட வைப்… அவளுக்கு மரியாதை கொடுக்காம இருக்கறது என்னை அவமானப்படுத்துறதுக்கு சமம்…”
“எனக்கு தெரியும் உங்க யாருக்கும் இதுல விருப்பம் இருக்காதுன்னு. இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க, நானும் இவளும் விரும்பினோம்…”
“இவ ஊருக்கு திடிர்ன்னு போய்ட்ட, கொஞ்ச நாள் கழிச்சு சுத்தமா எந்த தொடர்பும் இல்லாம போச்சு…”
“அவளோட பாட்டியை கவனிச்சுக்க போவன அங்கேயே இருக்க வேண்டிய சூழல் அவளுக்கு… எனக்கு அப்போ அது தெரியாது. வந்திடுவா வந்திடுவான்னு இருந்தேன்…”
“அவ மேல கோவமா கூட இருந்தேன். இப்போ சென்னை போனப்போ தான் அவளைப் பார்த்தேன், ஒரு தவிர்க்க முடியாத சூழல் அது தான் நான் அவளைக் கல்யாணம் பண்ணி கூட்டி வந்திட்டேன்…”
“அவளோட பாட்டியோட விருப்பமும் அது தான்…” என்று வீட்டினர் நம்பும்படியாய் பட்டும்படாமலும் கூறிவிட்டான்.
வீட்டினர் எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளட்டும் என்று வார்த்தைகளை மாற்றிப் போட்டு சொன்னான். அவள் பாட்டியின் கடைசி ஆசைக்காக இவர்கள் திருமணம் செய்திருப்பார்கள் போல என்று தான் அவர்கள் நினைத்தது.
“அவங்க பாட்டியோட விருப்பம்ன்னா கல்யாணம் பண்ணிக்குவியா… இங்க எங்க யாரோட விருப்பமும் உனக்கு கேட்க தோணலையா…” என்று சரவணன் விடாது கேட்டான்.
“இங்க பாருங்க நான் நடந்ததை சொல்லிட்டேன். உங்க விருப்பம் முக்கியமில்லைன்னு எனக்கு தோணியிருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன்…”
“நீ இங்க வரலைன்னா சொத்து போயிடுமே. அதுக்காக தான் வந்திருப்பே… எல்லாரையும் எப்பவும் போல உன் நடிப்பால உன் வழிக்கு கொண்டு வந்திருப்பே…” என்று இப்போது சொன்னது கார்த்திக்.
காஞ்சனா கார்த்திக்கை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க அவன் உடல் மொத்தமும் ஆடிப்போனது.
“சொத்து… யாருக்கு வேணும் உங்க சொத்து… பிச்…”
“காஞ்சனா…” என்று அவளை முடிக்கவிடாமல் அதட்டினான் விஸ்வகர்மா.
“எனக்கு இந்த சொத்து வேணாம்…”
காஞ்சனா மற்றவர்களை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தாள்.
“உங்களுக்கு எங்க கல்யாணத்தை பத்தி தெரியப்படுத்தணும் உங்க ஆசிர்வாதம் வேணும்ன்னு தான் இங்க வந்தோம்…”
“உங்களுக்கு பிடிக்கலைன்னா நாங்க போயிடறோம்…” என்றான் விஸ்வா.
“நல்லா நடிக்கிறடா நீ…” என்று ஆரம்பித்தான் சரவணன்.
“சரவணா போதும் நிறுத்து… அவன் பண்ணதோ  சரியோ தப்போ அவன் நம்ம வீட்டு பிள்ளை, அவன் வெளிய போனா நல்லாயிருக்காது…” என்றார் அவன் தந்தை செந்தில்வேல்.
“உலகமகா நடிப்புடா சாமி…” என்று முணுமுணுத்தாள் காஞ்சனா.
இப்போது பேசியது கனகவேல் “விச்சு நீ பண்ணது சரியா தப்பான்னு இப்போ பேச வேணாம். எங்களுக்கு இதெல்லாம் ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும்…”
“புரியுது தாத்தா…”
“அதுக்காக எல்லாம் நீ வீட்டை விட்டு போகணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. இது உன்னோட வீடு, நீ இங்க தான் இருக்கணும்… நீன்னு நான் சொன்னதுல உன்னோட மனைவியும் சேர்த்து தான்…”
“ஆஹா என்ன பெரிய மனசு…” மீண்டும் முணுமுணுத்தது அவளே தான்.
“உன்னோட வீட்டுக்கு அவளை கூட்டிட்டு போ…”
“தாத்தா…” என்று மற்ற பேரன்கள் தொடங்க “இனிமே யாரும் இங்க எதுவும் பேசக்கூடாது. அவன் விரும்பின வாழ்க்கையை வாழ அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு…” என்றார் கனகவேல்.
வெளியில் அவர்கள் இப்படிச் சொன்னாலும் பல வருடத்திற்கு முன் ஜோசியர் சொன்ன விஷயமே அவர்கள் மனதை அரிக்க ஆரம்பித்தது இப்போது.
இத்தனை நாட்களாய் அவனுக்கு பேருக்காகத் தான் திருமணத்திற்காய் பெண் பார்த்தார்களே தவிர அவனுக்கு மணமுடிக்கும் எண்ணம் அங்கு ஒருவருக்குமே இல்லை.
மகனின் இந்த திடீர் திருமணம் சகுந்தலாவை தவிர மற்றவர்களுக்கு ஒப்புதலாக இல்லாமல் போனது.
சகுந்தலா மட்டுமே மனமார மகிழ்ந்தார் மகனின் திருமணம் குறித்து. அதை வெளிப்படையாய் அவரால் காண்பிக்க முடியாமல் தடுமாறினார் அவர்.
“காஞ்ச்சு வா போகலாம்…” என்று அவளை கூட்டி கொண்டு அவன் இருந்த வீட்டிற்கு வந்தான்.
எங்கிருந்தோ ஓடி வந்தார் சகுந்தலா. சுற்று முற்றும் பார்த்தவர் ரேகாவை தேட அவள் தட்டோடு வந்தாள்.
வெளியில் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவரே மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுத்தார். மகன் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருக்க மருமகளான காஞ்சனா அவரையே வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ரேகா…” என்றவர் அழைக்க அன்னையிடம் இருந்து அதை வாங்கிச் சென்று யாருக்கும் தெரியாமல் சற்று தள்ளி கொட்டிவிட்டு வந்தாள் அவள்.
“உள்ள வாம்மா…”
ரேகாவின் மூலம் அவர்களுக்கு இரவு உணவு வந்தது. இவர்கள் இங்கு வந்த பின் அனைவரும் ரேகாவை பிடித்துக் கொண்டனர்.
அவள் எப்படி அவர்களோடு வந்தாள், விஸ்வா திருமணம் பற்றி அவளுக்கு முன்பே தெரியுமா அது இதுவென்று அவளை போட்டு நச்சரித்தனர்.
விஸ்வா வரும் போதே அவளிடம் சொல்லித் தான் கூட்டிவந்திருந்தான். வீட்டில் கேட்டால் எப்படி சொல்லி சமாளிக்க வேண்டும் என்று.
“அண்ணன் திடீர்ன்னு போன் போட்டு வரச்சொல்லிச்சு. கல்யாணம்ன்னு எனக்கு தெரியாது. அங்க போகவும் தான் தெரியும்… யாருமே இல்லாம பண்ணுறது கஷ்டமா இருக்கு நீ கூட இருன்னு அண்ணா சொல்ல வேற வழியில்லாம நானும் இருந்திட்டேன்”
“உனக்கு தான் அவனை பிடிக்கவே பிடிக்காதே, அப்புறமா எப்படி நீ அவன் கூப்பிட்டான்னு போனே…” என்று ராதிகா சரியாக அடித்தாள்.
“பிடிக்கலைன்னாலும் அவங்க என் அண்ணன் இல்லைன்னு ஆகிடுமா…” என்று ராதிகாவிற்கு திருப்பிக் கொடுத்தாள் ரேகா.
இரவு அவனறை பால்கனியில் நின்றிருந்தான் விஸ்வா. காஞ்சனா இரவு உடைக்கு மாறி உள்ளே வந்தாள்.
அன்று அவர்கள் இருவருக்கும் முதலிரவு. அதற்குரிய எந்த அலங்காரமும் இல்லாமல் அந்த அறை சூன்யத்தை போல காட்சியளித்தது.
விஸ்வாவும் இலக்கில்லாமல் இருட்டில் எங்கோ வெறித்திருந்தான். கலங்கரை விளக்கத்தில் இருந்து வெளிச்சப்புள்ளி விட்டுவிட்டு வந்துக் கொண்டிருந்தது.
எப்போதும் அவனறையில் இருந்து பார்க்கும் கலங்கரைவிளக்கம் அவனுக்கு அப்படியொரு மனநிம்மதியை கொடுக்கும்.
இன்று எதுவும் அவனுக்கு நிம்மதியை கொடுக்கவில்லை. அவன் மனம் தறிகெட்டு அலைந்துக் கொண்டிருந்தது.
காஞ்சனா அறைக்குள் நுழைந்த அரவம் கேட்டுத் தானிருந்தான். அங்கு செல்ல வேண்டும் என்று அவனுக்கு துளியும் தோன்றவில்லை.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று அங்கு வந்து நின்றாள் காஞ்சனா.
“நான் இப்போ பேசுற மனநிலையில இல்லை…”
“எனக்கு பேசியாகணும்…” என்றாள் பிடிவாதக் குரலில்.
ஒரு சலிப்போடு “சொல்லு” என்றான்.
“உள்ள போலாம்…” என்று சொல்லி அவள் முன்னே செல்ல அவன் பால்கனி கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தான்.
“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னேனே ஞாபகமிருக்கா” என்றாள்.
“என்ன விஷயம்??”
“உன் அப்பா பேரு செந்தில்வேல் இல்லைன்னு சொன்னேனே கண்டுப்பிடிச்சிட்டியா” என்று அவள் ஆங்காரமாய் கேட்க அவன் வெறிக்கொண்டு அவள் கழுத்தை நெரித்தான்.
“நீயெல்லாம் பொண்ணாடி… ராட்சசி என்ன தான்டி வேணும் உனக்கு… என்னோட நிம்மதியை குழித்தோண்டி புதைக்கணுமா உனக்கு…”
“என்னை சித்திரவதை செய்யணும்ன்னு நினைச்சு தான் அக்காவும் தம்பியும் இப்படி நாடகமாடினீங்களா…” என்றவன் அவன் பிடித்திருந்த பிடியை இன்னமும் விடவில்லை. முன்பைவிட அதிகமாய் நெருக்கினான்.
அவளால் முடியாமல் இரும அதை கண்ட பின்னே தான் அவன் பிடியை விட்டான்.
“உனக்கு நான் சாகணுமா சொல்லு நான் சாகணுமா…”
“நீங்க ஏன் சாகணும்??”
“அப்புறம் எதுக்கு அப்படியொரு வார்த்தையை சொன்னே??”
“உனக்கு அப்படிச் சொல்ல வாய் கூசலை…”
“இல்லை…”
“ஹேய்…” என்று கத்தினான்.
“நான் ஏன் அப்படி சொன்னேன்னு உங்களுக்கு தெரியணுமா??”
“அதை தானே கேக்கறேன்…”
“போய் கண்டுப்பிடிங்க… கண்டுப்பிடிக்க முடியலைன்னா உங்க அம்மாகிட்டவே கேளுங்க சொல்வாங்க” என்று அவள் சொல்ல அவளை கன்னாபின்னாவென்று அடித்துவிட்டான்.
கீழே விழுந்ததில் அவள் மண்டை புடைக்க ஆரம்பித்திருந்தது. அதையெல்லாம் அவன் உணரவேயில்லை. கோபத்துடன் வெளியேறியவன் படியேறி மாடிக்கு சென்றுவிட்டான்.
அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் அவளை கொன்று போட்டிருப்பான். ‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்’ என்று அவன் மனது ஆறவேயில்லை.
ஒரு காலத்தில் தான் இவளை உயிராய் விரும்பினோமே என்று தன்னையே நொந்துக் கொண்டான் அவன்.

Advertisement