Advertisement

10
சென்னை வடபழனி முருகன் கோவில் அன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அதிகமிருந்தது கோவிலில். மனிதத்தலைகள் மட்டுமே தெரிந்தது.
எந்த எண் தூணின் அருகில் யாருக்கு திருமணம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. உறவினர்கள் தேடி தேடி சென்றுக் கொண்டிருந்தார்கள்.
அந்த தூணின் அருகே மட்டும் கூட்டம் அதிகமிருக்கவில்லை. விஸ்வா, காஞ்சனா, பாட்டி, அமுதன், விஸ்வாவின் தங்கை ரேகா மற்றும் அமுதனின் இரு நண்பர்கள் அவ்வளவு தான் கூட்டமே.
விஸ்வா எங்கோ வெறித்துக் கொண்டு மணவறையில் அமர்ந்திருக்க காஞ்சனா அவனருகில் வந்து அமர்ந்தாள்.
அவளும் ஒன்றும் மகிழ்வோடு வந்து அமர்ந்திருக்கவில்லை. ஆனாலும் இருவர் மனதிலுமே ஏதோவொரு அமைதி ஏற்படத்தான் செய்தது.
அய்யர் சொல்லும் மந்திரங்களை ஏதோ மந்திரத்துக்குட்டப்பட்டவன்  போலவே செய்தான். இதோ அவன் கையில் திருமாங்கல்யம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதை அருகில் இருந்தவளின் கழுத்தில் கட்டாது அவளை திரும்பிப் பார்த்தான், பார்த்துக் கொண்டேயிருந்தான்.
அந்த கயிற்றை கொண்டே அவள் கழுத்தை இறுக்கிவிட எண்ணியிருப்பானோ என்னவோ அவன் முகத்தில் அப்படியொரு கனல் வீசியது.
அதையெல்லாம் ஊதித் தள்ளும் காற்றாய் இருந்தாள் அவள் இப்போது. நிர்மலமாய் அவன் பார்வையை சலிக்காமல் எதிர்க்கொண்டாள் அவள்.
அமுதன் தான் அவர்களை பார்த்து இப்போது குரல் கொடுத்தான். “மாமா என்ன பார்க்கறீங்க கட்டுங்க…” என்றான்.
அவனை துச்சமாய் பார்த்தவன் அருகிருந்தவளை பார்த்தான். எல்லாம் உன்னால் தான் என்று, அவனின் அந்த பார்வையில் ரேகா தலை குனிந்தாள்.
அதன்பின் நொடியும் தாமதிக்காது மாங்கல்யத்தை காஞ்சனாவின் கழுத்தில் கட்டி முடிந்திருந்தான். 
“கிளம்பு போகலாம்…” என்று அவளைப் பார்த்து சொல்லி எழுந்து நின்றிருந்தான் இப்போது.
“கோவிலுக்கு போய் சாமி தரிசனம் பண்ணிட்டு போகலாம்” என்றாள் அவள்.
பல்லைக்கடித்து நின்றவன் எதுவும் பேசவில்லை. அவர்களுடனே கோவிலுக்கு சென்று கடவுளை தொழுதான்.
‘ஏன் முருகா இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு. நான் என்ன பாவம் பண்ணேன். ஒரு அமைதியான வாழ்க்கையை எனக்கு நீ கொடுத்திருக்க கூடாதா… என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு புரியலை முருகா…’
‘எல்லாத்துக்கு ஒரு நல்ல வழி காட்டுப்பா…’ என்று அவன் வேண்டி முடிக்கும் தருவாயில் மணி அடிக்க மனம் கொஞ்சம் சமன்பட்டது அவனுக்கு.
அங்கிருந்து வெளியில் வந்தனர். காரின் கதவை திறந்து ரேகாவை முறைத்துக் கொண்டே “உள்ளே போ…” என்றான்.
“அண்…” என்று அவள் ஆரம்பிக்க இதுவரை அவளிடம் அதிகம் பேசிக்கூடயிராதவன் அவளை ஓங்கி அடித்திருந்தான் இப்போது.
“மரியாதையா உள்ள போ”
“என் மேல இருக்க கோவத்தை எதுக்கு அவ மேல காட்டறீங்க??” என்று எகிறினான் அமுதன்.
“ஆமாடா உன்னை அடிக்க முடியலை அதான் அவளை அடிச்சேன், இப்போ என்ன??” என்றான்.
“உனக்கு வேற தனியா சொல்லணுமா, உள்ள போ…” என்று இப்போது காஞ்சனாவை பார்த்து சொன்னான்.
அவளோ உள்ளே செல்லாமல் தன் பாட்டியை பார்த்தாள். அவளின் பார்வை சென்ற திக்கை பார்த்தவன் அவரை நோக்கி வந்தான்.
“நீங்க பெரியவங்க தானே… உங்க பேரன் பேத்திகளுக்கு நல்லது சொல்லிக் கொடுத்து நீங்க ஏன் வளர்க்கலை…” என்று சொல்ல “விஷ்வா…” “மாமா…” என்ற குரல் அடுத்தடுத்து கேட்டது.
பாட்டிக்கு கண்ணீர் அருவியாய் பொழிந்தது. என்ன நினைத்தானோ “என்னை மன்னிச்சிடுங்க பாட்டி… நீங்க எனக்கும் பாட்டி மாதிரி தான், உங்களை இப்படி பேசியிருக்கக் கூடாது தான்…”
“ஆனாலும் மனசு கேட்காம பேசிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க…” என்று அவர் காலில் விழுந்தான்.
“எழுந்திருய்யா… எழுந்திரு…. நீ சொன்னதுல எந்த தப்பும் இல்லை, ஆனா ஒண்ணு சொல்றேன். அதை நீ எப்பவும் மனசுல வைச்சுக்கோ…”
“ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க, அவங்களை நான் நல்லாத்தான் வளர்ந்திருக்கேன். அதை நீ ஒரு நாள் புரிஞ்சுக்குவ, அவங்க கெட்டவங்க இல்லை…” என்று யாருக்கும் கேட்காது மெதுவான குரலில் சொன்னவர் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
“நீ விரும்பின வாழ்க்கையை உன் தம்பி அமைச்சு கொடுத்திட்டான். அதை இனியாச்சும் நல்லபடியா வாழப்பாரு… எனக்கு நீ நிம்மதியான சாவை கொடுக்கணும்ன்னு நினைச்சா அதை செய்…” என்றார் அவர்.
“பாட்டி கோவில்ல வைச்சு என்ன பேச்சு இது…” என்று கண்கள் கலங்க சொன்னவள் “இது என் வாழ்க்கை பாட்டி, அதை நான் நல்லபடியா மாத்திக்குவேன்… நீங்க என்னைப்பத்தி கவலைப்பட வேணாம்…”
“உங்க பேரன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கப் போய் தானே நீங்க எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டீங்க… அதே நம்பிக்கை அப்படியே இருக்கட்டும்…” என்றுவிட்டு தன் தம்பியின் அருகில் வந்தாள்.
அவனை கன்னத்தில் ஒரு அறைவிட்டாள். அவன் கன்னத்தை பிடித்துக் கொண்டாலும் அவளை தடுக்கவில்லை.
“த்தூ… உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலை அமுதா… இப்படியொரு காரியத்தை பண்ணுவேன்னு நான் கனவிலையும் நினைக்கலை அமுதா…”
“ஒரு பொண்ணோட வாழ்க்கைன்னா உனக்கு அவ்வளவு லேசா போச்சா… நான் என் வாழ்க்கையை தான் பணயம் வைச்சேன். ஆனா நீ அந்த பொண்ணு வாழ்க்கையை பணயம் வைச்சிருக்கே”
“எனக்கு அதை பத்தி எல்லாம் கவலையில்லை. உன் வாழ்க்கை எனக்கு முக்கியம், நீ கேட்டதை செய்யணும் அதுக்கு என்ன வேணும்னாலும் நான் செய்வேன்…” என்றான் அமுதன்.
“ச்சீய் இதைச் சொல்ல உனக்கு அசிங்கமாயில்லை… இனிமே நீ என் முகத்திலேயே முழிக்காத அமுதா…” என்றவள் விஸ்வாவின் காரில் ஏறினாள்.
விஸ்வா இப்போது அமுதன் அருகில் வந்தான். “நான் உங்க அக்கா பண்ணதை கூட மன்னிச்சிடுவேன்டா. ஆனா நீ பண்ணதை எப்பவும் மன்னிக்கவே மாட்டேன்டா, இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப…”
“நான் அனுபவிச்சா கூடவே உங்க தங்கச்சியும் தான் மாமா கஷ்டப்படுவா…” என்றவனை கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது விஸ்வாவிற்கு.
எதுவும் சொல்லாமல் அவன் காரில் ஏறப்போக “மாமா எங்க கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சா நல்லது. இல்லைன்னா நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை” என்று அவன் மேலும் பேச அமுதன் அருகே வந்தவன் கொத்தாய் அவன் சட்டைக் காலரை பற்றினான்.
பின் “ச்சே…” என்று சொல்லிவிட்டு அவனும் காரில் ஏற கார் கிளம்பியது.
ஏர்போர்ட் வரும்வரை காரில் அமைதி மட்டுமே. ரேகாவும் காஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
ஏர்போர்ட்டுக்குள் நுழைந்து டிக்கெட் வாங்கிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவ விஸ்வா தலையை பின்னே சாய்த்து கண்ணை மூடிக்கொண்டான்.
காஞ்சனாவும் ரேகாவும் அவனுக்கு இருபுறமும் வந்து அமர்ந்துக் கொண்டனர்.
விஸ்வா இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற வாரம் அவனுக்கு என்றும் இல்லா அதிசயமாய் ரேகாவிடமிருந்து அழைப்பு.
சென்னையில் உள்ள பேஷன் டிசைனிங் கல்லூரியில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்து வந்து சேர்ந்திருந்தாள் அவள்.
இது அவளின் கடைசி வருடம். இன்னும் சில தினங்களில் அவளுக்கு தேர்வு முடிந்து விடும். அப்படியிருக்க அவள் அவனுக்கு அழைத்திருக்கிறாள்.
அவனிடம் எப்போதுமே ஒரு ஒதுக்கம் காட்டும் அவள், அவனாய் வலிய சென்று பேசினாலும் அதை கண்டுக்கொள்ளாமல் செல்லும் அவள் இப்போது அவனை எதற்கு அழைத்திருப்பாள் என்ற யோசனை முடிச்சுவிழ அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“அண்ணா…” என்றாள்.
அவள் ஆசையாய் அண்ணாவென்று அழைக்க மாட்டாளா என்று அவன் ஏங்கிய காலம் உண்டு. சிறுவயதில் அப்படி அழைத்தவள் தான் சில வருடங்களாய் தான் காணாமல் போயிருந்தது.
இப்போது தான் அழைக்கிறாள் அப்படி. “சொல்லும்மா ரேகா…” என்றான் அவன்.
“நீ உடனே சென்னை வர்றியா அண்ணா…” என்றாள் பதட்டமான குரலில்.
“என்னாச்சு ரேகா எதுவும் பிரச்சனையா??” என்றேன்.
“ஆமாண்ணா உன்கிட்ட நேர்ல தான் சொல்ல முடியும். வீட்டில யாருக்கும் சொல்லாதேண்ணா ப்ளீஸ், உடனே கிளம்பி வாயேன்…” என்றாள்.
அவளின் இந்த குரல் அவனுக்கு புதிது. உடனே வீட்டிற்கு அழைத்து சென்னையில் ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும் தான் உடனே செல்ல வேண்டும் என்று கூறி அன்னையிடம் கூறினான்.
வீட்டிற்கு வந்து மற்றவர்களிடம் கூட அவர்கள் எதற்கு என்னவென்று வினவ “ஒரு புது டீலிங், போய் பார்த்திட்டு வந்து சொல்றேன்…” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்து சென்னைக்கு பிளைட் பிடித்து சில மணி நேரங்களில் அவன் சென்னையில் இருந்தான்.
தங்கைக்கு போன் செய்து எங்கிருக்கிறாள் என்று விசாரித்து அவளைத் தேடி அவன் போக அங்கு அமுதனும் ரேகாவும் இருந்தனர்.
இருவரையும் ஒரு சேர பார்த்தவன் புருவமத்தியில் முடிச்சொன்று விழுந்தது, சுற்றுப்புறத்தை அலசியவன் தங்கையை மேலிருந்து கீழாக ஆராய்ந்தான்.
அருகில் இருந்த அன்னியனால் அவன் அப்படி தன் தங்கையை பார்வையால் அலசியிருந்தான். “இது யார் வீடு ரேகா??”
“இவரோட பிரண்ட் வீடு…”
“யார் இவன்??”
ரேகா பதில் சொல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டாள். ஏதோ விபரீதம் என்று உணர்ந்தான் விஸ்வா.
தங்கையின் அருகே அவன் செல்ல அமுதன் பேசினான் இப்போது. “சொல்லு ரேகா உன் வயித்துல வளர்ற குழந்தையோட அப்பான்னு சொல்லு…”
விஸ்வா உச்சபட்சமாய் அதிர்ந்தான். ரேகா கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் இப்போது.
“இவன் என்ன சொல்றான் ரேகா… யார் இவன்னு முதல்ல சொல்லு… இல்லை வேணாம் நாம இங்க இருந்து கிளம்புவோம் நம்ம ஊருக்கு போவோம். அங்க வைச்சு பேசிக்குவோம்…” என்று தங்கையின் கையை பிடித்து இழுக்க அவள் வரவேயில்லை.
“அண்ணா அவரு… அவரை நான்… நாங்க ஒருத்தருக்கொருத்தர் விரும்புறோம்… தப்பு பண்ணிட்டோம், நான் இப்படியாகும்ன்னு நினைக்கலை. இப்போ என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியலை…” என்று அவள் அழ வந்த ஆத்திரத்தில் அவளை மாறி மாறி கன்னத்தில் அடித்தான் விஸ்வா.
“அறிவிருக்கா உனக்கு நீ என்ன செஞ்சுட்டு வந்திருக்கேன்னு தெரியுதா உனக்கு. இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா… இவன் நல்லவனா கெட்டவனான்னு கூட தெரியாம எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தே” என்று அண்ணனாய் மாறி கேள்வியாய் கேட்டான் அவன்.
“சார் அதான் அவ சொல்றால நாங்க லவ் பண்றோம்ன்னு…”
“ரேகா இதை கலைச்சுடு…” என்று விஸ்வா சொல்ல ரேகா இப்போது அவனை கண்கள் இடுங்க பார்த்தாள்.
“அது ஒரு உயிர் அண்ணா…”
“அது உனக்கு வேணாம்மா, இவன் நல்லவனா தெரியலை…”
“நீ எப்படி பார்த்ததுமே சொல்வே, எனக்கு அவரை இந்த ஒரு வருஷமா தெரியும். அவர் ரொம்ப நல்லவர்…”
“ஒரு நல்லவன் செய்யற வேலை இல்லை இது…” என்று இருவரையுமே முறைத்தவாறே சொன்னான் விஸ்வா.
“அது தான் சொன்னேன்ல தெரியாம நடந்திடுச்சுன்னு…”
“அப்போ நீ ஏதோ முடிவு பண்ணிட்டே?? சொல்லு நான் இதுல என்ன செய்யணும், என்னை எதுக்கு நீ கூப்பிட்டே??” என்றான் விஸ்வா விட்டேத்தியாய்.
“ஏன் அண்ணா உன் தங்கச்சி ஆசைப்பட்ட வாழ்க்கையை நீ அமைச்சுக் கொடுக்க மாட்டியா??”
“ஓ!! நீங்க தான் என் தங்கச்சியா… திடிர்னு உங்களுக்கு எப்படி என் மேல பாசம் வந்திச்சு…”
“எனக்கு எப்பவும் உன் மேல பாசம் உண்டு, ஆனா அதை நான் வெளிய காமிச்சுகிட்டதில்லை. அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு…”
“அப்புறம்…”
“அண்ணா நீ என்னை நம்பலைன்னா நான் சாகறதை தவிர வேற வழியில்லை…”
“லூசா நீ?? நீ சாகறதை பார்க்கவா நான் அங்கிருந்து வந்தேன்…”
“நாங்களே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு தான் இவர் சொன்னார். எனக்கு வீட்டில யார்கிட்ட சொல்றதுன்னு தெரியலை, அதான் உனக்கு சொன்னேன்”
“கல்யாணம் வரைக்கும் பேசி வைச்சாச்சா…”
“ஆமா ஆனா கல்யாணம் என் அக்காவோட கல்யாணம் முடிஞ்ச பிறகு தான்…”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ள வந்தாள் காஞ்சனமாலா.
அவளைப் பார்த்ததும் இன்னமும் அதிர்ச்சி விஸ்வாவிற்கு. “இதெல்லாம் உன் வேலையா??” என்று கத்தினான்.
“அவங்களுக்கு எதுவும் தெரியாது…” சொன்னது அமுதன்.
காஞ்சனாவிற்கு அமுதனின் நண்பர்கள் மூலம் விஷயம் தெரிவிக்கப்பட அவள் நேராக அங்கே கிளம்பி வந்திருந்தாள்.
“அமுதா என்ன இது??”
“உலகமகா நடிப்பு…” என்றான் விஸ்வா.
அவனைக் கண்டுக்கொள்ளாது அவள் அமுதனைப் பார்த்தாள். “ஐ லவ் ஹர் அக்கா…” என்றான் அவன்.
“உன்னை எனக்கு தெரியும் அமுதா…”
“ரொம்ப நல்லதா போச்சு, நீயே மாமாக்கிட்ட பேசிடுக்கா…”
“அமுதா…” என்று சத்தம் போட்டாள் அவள்.
“ஹேய் என்ன அக்காவும் தம்பியும் சேர்ந்து நாடகம் போடறீங்களா…” என்று இப்போது கத்தியவன் விஸ்வா.
“ரேகா இவங்க சரியில்லை, ஏதோ பிளான் பண்ணித்தான் எல்லாம் பண்றாங்க… நீ என்னோட வா…” என்று அவள் கையை பிடித்து வாயில் வரை இழுத்துச் செல்ல அமுதன் பேசினான்.
“மாமா அவ்வளவு சீக்கிரம் எல்லாம் நீங்க போய்ட முடியாது. எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்…”
“எங்க வாழ்க்கைப்பத்தி…” என்று அழுத்திச் சொன்னான்.
“அமுதா… நானே அண்ணாகிட்ட சொல்லிக்கறேன் அமுதா நீ பேசாம இரேன்…” என்றாள் ரேகா.
“அமுதா உனக்கு அந்தாளுக்கிட்ட என்ன பர்சனலா பேச்சு வேண்டிக்கிடக்கு…” என்றாள் காஞ்சனா.
“ரேகா உங்க அண்ணனுக்கு சில விஷயம் புரியாது. நாங்க ஆம்பிளைங்க பேசிக்கறோம், நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம இருங்க…” என்றவன் விஸ்வாவின் அருகில் வந்தான்.
“அமுதா வேணாம் சொன்னா கேளு அமுதா. எனக்கு இது பிடிக்கலை அமுதா. நீ என்ன நினைச்சு இதை பண்ணியோ அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்…”
“நீ சத்தியம் பண்ணியிருக்க அக்கா…”
“அமுதா உங்கக்கா என்ன சொல்றாங்க…”
“ரேகா கூல் இது வேற விஷயம்… உனக்கு நான் தனியா சொல்லி புரிய வைக்குறேன்…” என்றான் அவன்.
விஸ்வாவை நெருங்கிய அமுதன் அவன் கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.
“என்ன பேசணும் உனக்கு??” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் விஸ்வா.
“இப்போ நாம ப்ரீயா பேசலாம்… உங்க தங்கச்சி இங்க இல்லை…”
“ரேகாக்கு இப்போ மூணு மாசம்… எதுவுமே செய்ய முடியாது…”
“டேய்…” என்று அவன் கழுத்தை பிடித்தான் மற்றவன்.
“விடுங்க மாம்ஸ்…”
“அப்படி கூப்பிடாதேடா…”
“அப்படித்தான் கூப்பிடுவேன்… உங்க தங்கச்சி என்னைத் தவிர யாரையும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டா…”
“அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கணும்…”
“நடக்கலைன்னா…”
“அவ செத்திடுவா…”
“டேய்…” என்று அவன் கழுத்தை இன்னமும் நெருக்கினான் விஸ்வா.
அமுதன் மூச்சுக்கு சிரமப்பட்டான். பட்டென்று அவனை விட்டுவிட்டான் விஸ்வா.
“உனக்கு என்ன வேணும்??” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“எங்கக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்…”
“அந்த திருடியவா??” என்று விஸ்வா சொல்ல அமுதன் அதை கண்ணை மூடி கிரகித்துக் கொண்டான்.
“அதைப்பத்தி பேச உங்க யாருக்குமே தகுதியில்லை மாமா… இனியொரு தடவை அக்காவை திருடின்னு சொன்னீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்…”
“என்னடா செய்வே??”
“என்னவும் செய்வேன், இப்படி செஞ்ச மாதிரி பலமடங்கு செய்வேன்…” என்றான் ஆத்திரத்துடன்.
“டேய் வேணாம்டா அவ சின்னப்பொண்ணு… உங்கக்காவால என் வாழ்க்கை தான் பலியாச்சுன்னா உன்னால என் தங்கை வாழ்க்கையும் போகணுமா…”
“உங்களுக்கு என்ன வேணும் பணமா, அதை நான் தர்றேன். இல்லை என்னோட டிசைன்ஸா அதையும் மொத்தமா உங்களுக்கே கொடுதிர்றேன். ரேகாவை விட்டுடுடா” என்றான் ஒரு தங்கையின் அண்ணனாக.
“மாமா எங்களுக்கு பணம் எல்லாம் வேணாம். நான் கேட்டது மட்டும் தான் எனக்கு வேணும்…”
“முடியாதுன்னா…”
“உங்க தங்கையோட என்னோட கல்யாணமும் நடக்காது. நாளைக்கு ஊர் உலகத்துக்கு நீங்க தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும் உங்க தங்கை வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பா யாருன்னு…”
விஸ்வாவிற்கு அமுதன் பேசப்பேச ஆத்திரம் தலைக்கேறியது. அவனை அடித்து கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போய்விடலாம் என்று கூட தோன்றியது.
அவன் சொன்ன குழந்தை விஷயம் தான் அவனை நிதானம் கொள்ளச் செய்தது.
கண்ணை மூடி நிதானித்தவன் “உனக்கு நாளைக்கு பதில் சொல்றேன்…” என்றான்.
“நல்ல முடிவை மட்டும் தான் நான் கேட்கணும்…”
“அப்புறம் கல்யாணம் நீங்களா விருப்பப்பட்டு பண்ணிகிறதா தான் உங்க தங்கைக்கு சொல்லணும்… இதை இப்போவே எதுக்கு சொல்றேன்னு பார்க்கறீங்களா…”
“எனக்கு தெரியும் நீங்க நல்ல முடிவை மட்டும் தான் சொல்வீங்கன்னு. நான் போய் கல்யாண ஏற்பாடை பார்க்கறேன். எங்க அக்கா கல்யாணம் முடிஞ்சதும் எங்க கல்யாணத்தை நீங்களே செஞ்சு வைங்க…” என்று முடித்தான் அமுதன்.
இதோ அவன் சொன்னது போலவே அனைத்தும் நடத்தி முடித்தும் விட்டான் அவன். 
விஸ்வாவிற்கு அடி மேல் அடி தோல்வியை தாங்க முடியவில்லை அவனால். மீண்டும் மீண்டும் அவன் ஏமாந்துக் கொண்டிருக்கிறான். முன்பு அவளிடம் இப்போது அவளின் தம்பியிடம். 
அமுதனிடம் பேசிவிட்டு அண்ணனும் தங்கையும் அவன் அறை எடுத்திருக்கும் ஹோட்டலுக்கு செல்ல ரேகாவிடம் பலவிதமாக அவன் கெஞ்சி கொஞ்சி மிஞ்சி என்று அனைத்தும் செய்து பார்த்தும் அவள் அமுதனை விடமுடியாதென்றாள்.
விஸ்வா அவளிடமே அப்போதே தன் முடிவை சொன்னான். “உங்க கல்யாணம் நடக்கணும்ன்னா அமுதனோட அக்காவோட கல்யாணம் நடக்கணும்… அப்போ தான் உங்க கல்யாணம் நடக்கும்…”
“அமுதனோட அக்காவை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்…”
“அண்ணா…”
“வேற வழி எனக்கு தெரியலை ரேகா…”
“இல்லைண்ணா வேணாம் நான் அவங்க கல்யாணம் முடியறவரை காத்திட்டு இருக்கேன்…”
“அது வரைக்கும் உன் வயித்துல வளர்ற குழந்தை காத்திட்டு இருக்குமா…”
“அண்ணா…”
“போ போய் தூங்கு…”
விமான நிலையத்தில் அறிவிப்பு ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கேட்டதும் தன்னிலைக்கு வந்த விஸ்வா அப்போது தான் அவர்களை தேடினான்.
அவனின் இருபுறமும் இருவரும் அமர்ந்திருப்பதை அப்போது தான் பார்த்தான். “போலாம்..” என்று எழுந்தான்.

Advertisement