Advertisement

“சார் மார்னிங் சார்…”
“மார்னிங்… என்ன பண்ணிட்டு இருக்கீங்க டேவிட், வெளிய இருக்க சாமிக்கு பூ மாத்தலை, தண்ணி மாத்தி அதுல வேற பூப்போடலை. அப்புறம் என்ன பூஜை பண்ணீங்க நீங்க. இந்த ரூம்ல இருக்க சாமிக்கு மட்டும் பூஜை பண்ணா போதுமா”
“சார் வந்து…”
“எனக்கு தெரியும் டேவிட் இதெல்லாம் உங்களுக்கு பரிட்சயம் இல்லைன்னு. உங்களுக்கு தெரியலைன்னா மத்தவங்ககிட்ட கேட்டு செய்யறதுக்கு என்ன”
“நான் என்ன உங்களையே நேரடியா இந்த வேலை எல்லாம் செய்ய சொன்னேனா என்ன… நீங்க சொன்னா செய்ய போறாங்க. அதை ஒரு மேற்பார்வை பார்க்க முடியாதா…”
“மன்னிச்சுடுங்க சார்… என்னோட தப்பு தான்…” என்று அவன் உடனடியாய் மன்னிப்பு கேட்க விஸ்வா சற்று அமைதியானான்.
“எனி பிராப்ளம் டேவிட், இப்படி இருக்க ஆளில்லையே நீங்க…”
“நத்திங் சார்…”
“டேய் பதில் சொல்லுடா” என்று டேவிட்டை பார்த்து இவன் கேட்க “இப்போ தான் உனக்கு பிரண்ட் ஞாபகம் வருதா” என்றான் அவனும் மரியாதையை கைவிட்டு.
“இது உன் வேலை நீ பார்க்க வேணாமா. அதைத் தானே சொன்னேன்”
“தெரியும்டா ஆனா நான் இன்னைக்கு கடைக்கு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதான் இதை கவனிக்க முடியலை, வந்ததும் அட்டன்டன்ஸ் செக் பண்ண போயிட்டேன்”
“ஏன் லேட்டு??”
“என் பிரண்ட் தடியனுக்கு இன்னைக்கு பிறந்தநாள். அந்த முண்டத்துக்கு வேண்டிகறதுக்காக சர்ச்க்கு போயிருந்தேன். அம்மா கேக் செஞ்சு கொடுத்தாங்க அதையும் எடுத்திட்டு வர்றதுக்கு கொஞ்சம் தாமதம்” என்றவன் தன் நண்பனை அணைத்து வாழ்த்து தெரிவித்தான்.
“தேங்க்ஸ்டா…” என்றவன் நண்பன் ஊட்டிய கேக்கை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டான். அதை அவனுக்கும் கொஞ்சம் ஊட்டிவிட்டான்.
“என்ன தான் எங்க வீட்டில என்னை தலையில தூக்கி வைச்சு கொண்டாடினாலும் என்னவோ எனக்கு தனியா இருக்க பீல் தான் கொடுக்குது டேவிட்”
“எல்லாரும் எனக்கு விஷ் பண்ணாங்க தான். ஆனா அதுல என்னவோ ஒரு உயிர்ப்பு இல்லையோன்னு தோணுதுடா… நீ இப்போ சொன்னியே எனக்கு வாழ்த்து எவ்வளவு சந்தோசம் கொடுக்குது தெரியுமா எனக்கு”
“எங்கம்மா தவிர யார் என்ன சொன்னாலும் எனக்கு அதுல சந்தோஷமோ திருப்தியோ கிடைக்கறதில்லை டேவிட்” என்று சட்டென்று உணர்ச்சிவசப்பட்டான் அவன்.
விஸ்வாவும் டேவிட்டும் நாகர்கோவிலில் ஒரே கல்லூரியில் ஒன்றாக தான் படித்தனர். அதிலிருந்தே இருவரும் நண்பர்கள்.
கல்லூரிக்கும் பின் விஸ்வா மேலும் படிக்கவென்று வெளியூருக்கு சென்றுவிட குடும்பசூழல் காரணமாய் டேவிட் வேலைக்கு செல்லவாரம்பித்தான்.
விஸ்வா கடையின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு டேவிட்டை நேரில் சென்று சந்தித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டான். டேவிட் அந்த கிளையின் ஜெனரல் மேனேஜராக இருந்தான்.
“விஸ்வா எமோஷன் ஆகாதே… எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்டா…”
“அது எனக்கும் தெரியுது டேவிட்”
“வீட்டுக்கு ஒருத்தர் செல்லப்பிள்ளையா இருப்பாங்க… அந்த வீட்டுக்கு நீ தான்டா செல்லப்பிள்ளை”
“தெரியும்…”
“சோ இனிமே இப்படிலாம் பேசாதே… அவங்க உனக்காக தான் எல்லாம் செய்யறாங்க…”
“நானும் அவங்களுக்காக தான் எல்லாம் செய்யறேன்… இனியும் செய்வேன்”
“அப்படியே இரு… சரி விஸ்வா நான் போய் வேலையை பார்க்கறேன். மிச்சம் இருக்க கேக்கை அப்புறம் சாப்பிடு” என்று சொல்லி நகர்ந்தான்.
“ஒரு நிமிஷம் டேவிட்”
கதவருகே சென்றவன் நின்றான். “இன்னைக்கு என்னோட ட்ரீட், லஞ்ச் என்னோட”
“தெரியும்டா நீ ட்ரீட் கொடுப்பேன்னு தெரிஞ்ச்சு தான் இன்னைக்கு நானும் லஞ்ச் எடுத்திட்டு வரலைடா மச்சான்…”
“டெய்லி எல்லாம் என்னால ட்ரீட் கொடுக்க முடியாது”
“நானும் கேட்க மாட்டேன்” 
“அந்த பூ??”
“மாத்திடறேன்டா” என்றுவிட்டு நகர்ந்துவிட்டான் அவன்.
நண்பன் சென்றதும் தன்னிருக்கையில் அமர்ந்த விஸ்வா சிசிடிவி கேமராவின் பதிவுகளில் சற்று நேரம் பார்வையை ஓட்டிவிட்டு பின் தன் மடிகணினியில் கணக்கு வழக்குகளை பார்க்க ஆரம்பித்தான். 
ஒரு மணி நேரம் சென்றிருக்க அவன் மேஜையில் இருந்த போன் ஒலியெழுப்பியது. அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன் “எஸ்” என்று சொல்ல எதிர்முனையில் டேவிட் பேசினான்.
“உன்னை பார்க்க மில் ஓனர் ஜகன்னாதன் வந்திருக்கார்”
“என்னவாம்??”
“அதை உன்கிட்ட தான் சொல்வேன்னு அடம் பிடிக்கறார்…”
“ஹ்ம்ம்…” என்று யோசித்தவன் “சரி வரச்சொல்லு”
சிறிது நேரத்தில் அவன் அறைக்கதவு தட்டப்பட “உள்ளே வாங்க…” என்றவாறே எழுந்து நின்றிருந்தான் அவன்.
“வணக்கம் சார்… பார்த்து ரொம்ப நாளாச்சு, நல்லாயிருக்கீங்களா…” என்று குசலம் விசாரித்தான்.
“நல்லாயிருக்கேன் தம்பி, நீங்க சௌவுரியங்களா”
இவன் தலையாட்டினான். “சொல்லுங்க என்னைத் தேடி வந்து இருக்கீங்க. முக்கியமான விஷயம் இல்லாம வர மாட்டீங்க…” என்று இவன் முடிக்காமல் அவரைப் பார்த்தான்.
“சரியா தான் தம்பி சொன்னீங்க… முக்கியமான விசேஷம் தான். அதான் உங்களை நேர்ல பார்க்கலாம்ன்னு வந்தேன்…”
“விசேஷமா சொல்லுங்க சார், வீட்டில கல்யாண ஏற்பாடா, நகையை எல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து காட்டணுமா… நீங்க இதை போன்லவே சொல்லிருக்கலாமே”
“கல்யாணம் தான் தம்பி, நகை விஷயம் தான்… என் பொண்ணுக்கு நீங்க ஸ்பெஷலா செய்யற டிசைன் தான் வேணுமாம். அவளோடது மாதிரி யார்கிட்டயும் இருக்கக் கூடாதாம், ரொம்ப ஆசைப்படுறா தம்பி… அதான் உங்களை நேர்ல பார்க்க வந்தேன்…” என்று சொல்லி முடித்தார் அவர்.
“மன்னிக்கணும் சார்… நான் இப்போ டிசைன்ஸ் எதுவும் வரையறது இல்லையே… நம்மகிட்ட நெறைய கலெக்ஷன்ஸ் இருக்கு சார்… நெறைய யூனிக் டிசைன்ஸ் தான், மேடம் வந்து பார்க்க சொல்லுங்க, பிடிச்சதை எடுத்துக்க சொல்லுங்க…”
“இல்லை தம்பி உங்களோட…”
“இங்க இப்போ இருக்கறதும் என்னோட மேற்பார்வையில ரீமாடல் செஞ்ச டிசைன்ஸ் தான் சார்…”
“இருந்தாலும் புதுசா…” என்று அவர் பிடியிலேயே நிற்க இவனுக்கு எரிச்சலானது.
“இல்லை சார் நான் பண்ணுறதில்லை…” என்று இப்போது முகத்திலடித்தது போலவே சொல்லிவிட்டான்.
“என்ன தம்பி இப்படி பொசுக்குன்னு பேசறீங்க… உங்க பெரியப்பா, அப்பா வரைக்கும் போகணுமான்னு பார்க்கறேன்” என்று அவர் சிறுபிள்ளையை வீட்டில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டும் பள்ளி வாத்தியார் போல் சொல்ல இவன் வெகுண்டெழுந்தான்.
“யார்கிட்ட வேணா போய் சொல்லுங்க, என்ன வேணா பண்ணிக்கோங்க… என்னால முடியாதுன்னா முடியாது தான்…” என்று உரக்கவே சொன்னான்.
இவன் குரல் வெளியே கேட்டு டேவிட் உள்ளே வந்திருந்தான். “என்னப்பா இவரு இப்படி பேசறாரு??” என்று அவனிடம் முறையிட “நீங்க கிளம்புங்க சார்…” என்றான் விஸ்வா.
“சின்னப்பையன்னு பார்த்தா அசிங்கப்படுத்துறியா என்னை. என் தகுதிக்கு உன்கிட்ட இறங்கிப் பேசினா மரியாதை இல்லாம பேசறே” என்று குதித்தார் அவர்.
“நான் என்ன மரியாதை குறைச்சலா பேசினேன் சார்… இப்பவும் உங்களை மரியாதையா தான் பேசறேன். நான் உங்களை அசிங்கப்படுத்தவும் இல்லை… அப்படி நீங்களா நினைச்சா அதுக்கு நிச்சயம் நான் காரணமில்லை நீங்க தான் அதுக்கு காரணம்…” என்றான் காரமாய்.
அவர் இன்னும் ஏதேதோ கோபமாய் பேசிவிட்டு சென்றுவிட, சில மணி நேரத்திலேயே அவன் வீட்டினர் ஒவ்வொருவராய் அழைத்துவிட்டனர்.
“தாத்தா ப்ளீஸ் என்னால முடியாது… என்னால முடியாது, ஒரு முறை அசிங்கப்பட்டது போதும்… என்னை கட்டாயப்படுத்தாதீங்க…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.
“எதுக்குடா இவ்வளோ டென்ஷன்”
“அந்தாளு பொண்ணு கல்யாணத்துக்கு நான் நகை டிசைன்ஸ் வரைஞ்சு தரணுமாம்…”
“முடியாதுன்னு சொல்லியிருப்பே அதுக்கு தான் கத்திட்டு போறாரா அவரு. சரிவிட்டு தள்ளு…”
“நீ ஏன் எனக்கு அட்வைஸ் பண்ணலை…”
“ஏன்னா எனக்கு காரணம் தெரியும்” என்றுவிட்டு டேவிட் அமைதியாய் வெளியில் சென்றுவிட விஸ்வா கண்மூடி அமர்ந்துவிட்டான்.
அவன் மனக்கண்ணில் ஒரு பெண் சிரித்தவாறே எதிரில் வந்து நின்றாள். அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து வேறு கூறினாள்… சுகமாய் அந்நினைவுகளில் முழ்கினான் அவன்…
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா…

Advertisement